பேஜர்
கதையாசிரியர்: ஜெயந்தி சங்கர்
தின/வார இதழ்: அமுதசுரபி
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: May 25, 2026
பார்வையிட்டோர்: 29
“பதினெட்டு வருடமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலுத்ததில் தீபா, ப்ரவீன் ஜோடிக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசை வந்தது. உடனடியாக நிறைவேறாது போகவே டாக்டர் ஃபாத்திமாவிடம் சென்றனர். “எதுக்கு இவ்வளயு அவசரம்? கொழந்தை பெத்துக்கறது என்ன ஃபாஸ்ட் ஃபுட்டா. கிடுகிடுன்னு கருதரித்து கிடுகிடுன்னு பெத்து, அடுத்த பத்தே நிமிஷத்துல யூனிவெர்சிட்டிக்குப் போகிறதெல்லாம் சினிமால வேணா நடக்கும். நாற்பதை கடந்து விட்டதால சின்னச் சின்ன சிக்கலிருக்கலாம். அதுக்குத் தான் நாங்க இருக்கோமே ஆலோசனை சொல்ல. உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை ஒண்ணமில்லை. கொழந்த பொறக்கும்” என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.
ஹார்மோன் மாத்திரைகள் மட்டும் இருவருக்கும் கொடுக்கப் பட்டது. அவ்ளின் மாதாந்திர சுழற்சிக்குப் பிறகு இரண்டு வாரங்களில் வெளியாகும் முட்டை ‘ஃரெஷாக்’ இருக்கும் போது கருவுருவாகக் கூடிய அதிகமான சாத்தியக் கூறுகளை விளக்கிக் கூறி ‘தாயத்து’ போன்ற ஒன்றைப் பாவிக்கக் கொடுத்தார். அதை உடலில் படும்படி முழுங்கைக்கு மேலே கட்டிக் கொண்டு முழுங்கைச் சட்டையணிந்து கொண்டாள் தீபா. அது உடலில் ஏற்படக்கூடிய மாற்றத்தை ‘கிக்கிக்கீ என்று அலறி அறிவிக்கும் என்று கூறினார். அதனால் ஏற்படக் கூடிய கிசுகிசுக்களைப் பற்றி மட்டும் ஏனோ அவர் சொல்லவேயில்லை.
நான்கு மாதங்களுக்கு முன்பு, முதல்முறை ‘கிக்கிக்கீ’ என்று அந்த வஸ்து அலறிய போது மதியம் இரண்டரைக்கு மேல் ஆகியிருந்தது. அதன் வாயை அடைத்துவிட்டு அன்றைய வேலைகள் முழுவதுமே முடிந்திருந்த மகிழ்ச்சியில் ப்ரவீனுக்குப் போன் செய்துவிட்டு தன் தன் கீழே வேலை செய்பவர்களிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினாள். நிறுவனத்தின் உயரதிகாரியான தீபா, “பேஜரா மேடம்?” என்ற காரியதரிசி யூலிங்க்கைப் பொருட்படுத்தாமல், ‘அந்த ஹெண்டர்ஸன் கம்பெனியோட ‘அட்’ கன்ஸெப்ட் ப்ரொபோஸல் ஃபலை சரிபார்த்து வை” என்று சொல்லியபடி நடந்தாள். தீபாவின் செய்கைகளை விநோதமான பார்வையுடன் கவனிப்பதை உணர முடிந்தது.
அடுத்த நாளைக்கே ஆபீஸ் முழுவதும், “நம்ம மேடம் இன்னமும் ‘பேஜர்’ யூஸ் பண்றாங்க தெரியுமா” என்று யூலிங்க் தகவல் பரப்பு வேலையைச் செய்திருந்தாள். கூர்ந்து நோக்கிய பார்வைகள், “தனித்தனியா ஆளுக்கொரு பென்ஸ் கார் வச்சிருக்கீங்க புருஷன் பெண்டாட்டி. தெரிய தரைவீடு வேற. மொபைல் தான் இருக்கே. இன்னுமா நீபேஜர விடல்ல” என்று தீபாவைக் கேட்டன.
ஊரே குழந்தை பெற்றுக் கொள்ளும் மூடில் இருந்தும், தேசிய சமூக வளர்ச்சி அமைச்சும் ‘குழந்தை பெற்றுக் கொள்ள ஒரு வழிகாட்டி/கட்டி’ ஒன்றை உருவாக்கி குடிமக்களை ஊக்குவித்ததும் கேட்டுக் கொண்டதில் சில வருடங்களாகப் ப்ரவீனுக்கு இருந்த குழந்தை தீபாவிற்கும் சென்ற வருடம் தொற்றிக் கொண்டது. பெற்றுக் கொள் உனக்கு இந்தச் சலுகை. அந்தச் சலுகை என்று மக்கள் பெறக் கூடிய குழந்தைகளுக்கு தானே டையபர் மாற்றி விடும் சலுகை வரை கூடச் செய்ய அமைச்சு காத்திருக்கிறது.
உள்ளூர் தொலைக்காட்சி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கூட தொளதொளவென்று உடுத்திக் கொண்டு விருது வாங்கிச் சென்ற இரண்டு கர்ப்பிணி நட்சத்திரங்கள் சிலர் சாதாரணக் குடிமக்களுக்கு முன்னுதாரணமானார்கள். அதுவே பாஷனாகிப் போகும் அளவிற்கு பருத்த வயிறும் தொளதொள கவுனும் மக்களுக்குப் பெற்றுக் கொள்ளும் ஆசை ஊட்டியது என்றால் பாருங்களேன்.
வீட்டிற்குப் போய்ச் சேர்ந்ததும் ப்ரவீனிடமிருந்து போன், “சாரிமா. இன்னிக்கு வர முடியும்னு தோணல்ல. க்ளையன்ட் மீட்டிங்க் முடியவே ராத்திரியாயிடும் போலயிருக்கு” என்று சொன்னதும்தீபாவின் உற்சாகம் முழுவதும் காற்றுப் போன பலூனாய்ச் சுருங்கியது. அடுத்த வார மீட்டிங்கிற்காவது தயார் செய்திருக்கலாம் என்ற அலுப்பே மிஞ்சியது.
போன மாதம் ப்ரவீன் என்னுடைய போன் கிடைத்ததுமே விறுவிறுவென்று தன் ஆபீஸிலிருந்து உற்சாகமாகக் கிளம்பி வீட்டிற்குப் போய்த் தயாராக இருந்தார். தீபாதான் நெடுஞ்சாலைப் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு பிறகு, அங்குல அங்குலமாக முன்னேறி வீட்டை அடையும் போது பயங்கர எரிச்சலிலிருந்தாள். பேசாமல் இருவரும் இருந்ததைத் தின்றுவிட்டுத் தூங்கிப் போனார்கள்.
அதற்கு முந்தைய மாதம் மாதம் உள்ளூரில் உள்ளூரில் வசித்த தீபாவின் அக்கா தன் குடும்பத்தோடு வந்து தங்கி கொடுத்த அன்புத் தொல்லையில் முழுக்கைச் சட்டையினுள்ளே சாதனம் செய்த நினைவூட்டல் முற்றிலும் வீணானது. நான்கு மாதங்களாகவே இந்த விஷயத்தில் இப்படித் தான் இடக்கு மடக்காகவே நடந்து வருகிறது.
ஒரே மாதத்தில் ஆபீஸில்ன் தீபாவின் ‘குட்டு’ வெளிப்பட்டு உணவு இடை வேளையின் போது பலவிதமான வம்புகள் பேசப்பட்டு, நமட்டுச் சிரிப்புகளினூடே அவளுக்கு சங்கேத மொழியில் பட்டப்பெயரான ‘பேஜர்’ ஒரு மனதாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்தியை நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மாமியார் கிடைத்த வாய்ப்பில், “எஸ் எம் எஸ் லயே கொழந்த பெத்துக்கறது தானே? ‘எல்லாங் கெடக்க கிழவியத் தூக்கி மணையில வச்சாப்ல’ கல்யாணமான வருஷத்துலயிருந்து சொல்லிக் கிட்டே இருந்தேன். அப்ப விட்டுட்டாங்களாம். கடையில வித்தா இந்நேரம் பிள்ளைய வாங்கிகிட்டே வந்திருப்பா. உம்… பிறக்கப் போற பிள்ள உங்க ரெண்டு பேரையும் தாத்தா, பாட்டினு கூப்பிடப் போகுது பாத்துக் கிட்டேயிருடா என்று மகனிடம் சொல்வதைப் போல ஆரம்ப நாட்களில் வேலையை விட மாட்டேனென்று பிள்ளை பெற்றுக் கொள்வதை ஒத்திப் போட்ட தீபாவைத் தன் பாணியில் ஏசினார்.
அந்த வாரயிறுதியில் ப்ரவீன் எனக்கு இப்போதைக்கு லீவும் எடுக்க முடியாது. இந்த ஓவ்யுலேஷன் டிடெக்டர் கிட்டுக்கு (ovulation detector kit) ஏதேனும் சினிமாப் பாட்டு ரிங்க் போன் இருந்தா டாக்டர் கிட்ட கேக்கணும். கொறஞ்சுது ஒரு வைப்ரேஷன் மோடாவது இருக்கான்னாவது பாக்கணும். அது வரைக்கும் இந்த விளையாட்டுக்கு நா வரல்லப்பா. ஆபீஸ்ல மானமே போகுது” என்று தீபா சொன்னதுமே ப்ரவீன் குபீரென்று வெடித்துச் சிரித்தார்.
– 24-02-05, அமுதசுரபி.
![]() |
சூழலையும் சமூகத்தையும் துருவி ஆராய்ந்து எளிய நிகழ்வுகளை வாழ்வனுபவமாக சிருஷ்டிக்கும் இவரது ஆற்றலானது உலகளாவிய தமிழிலக்கியப் பெருந்திரையில் இவருக்கென்றொரு நிரந்தர இடத்தைப் பொறித்து வருகிறது. தனது வாழ்விடத்தின் நிகழ்வுகள், நிலப்பரப்பு, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை சிறுகதைகளாகவும் நெடும் புனைவுகளாகவும் எழுதி அவற்றை உலக அனுபவங்களாக்குவதே இவரது எழுத்தின் வெற்றி. சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட எளிய எதார்த்த நடைக்காக நன்கு அறியப் பெறும் இவரது சிறுகதைகள் பல்வேறு தொகுப்புகளிலும் இடம் பெற்றுள்ளன.…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
இன்னும் ஒருமுறை படிங்களேன்…
அபிநந்தினி மோகன்
May 25, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
May 25, 2026
அமெரிக்காவில் கிச்சா
கிரேஸி மோகன்
May 22, 2026
