பதவிப் பரிதாபங்கள்…
கதையாசிரியர்: காரை ஆடலரசன்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
கிரைம்
கதைப்பதிவு: October 21, 2026
பார்வையிட்டோர்: 122
அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5

சிறிது நேரம் மௌனமாய் இருந்து மூச்சு விட்ட தன்ராஜ்…
“ஆனந்தவள்ளி கொலைன்னு அதிகாரப்பூர்வமாய் செய்தி வெளி வந்த அடுத்த நிமிசமே நான் அங்கே ஆஜர் ஆகாஷ்.
யாரும் என்னை அழைக்கலை. அதிர்ச்சியில் ஒரு சாதாரண பார்வையாளனாய்த்தான் ஓடினேன்.
வீடு முழுக்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் முக்கியப் பிரமுகர்கள்ன்னு அவள் இறந்து கிடக்கும் படுக்கை அறைவரை கூட்டம்.
எவர் முகத்திலும் துக்கம் கிடையாது. யோசனை, சிந்தனை.
கட்டியவன் அம்பிகாபதி கூட இறுக்கமாய் இருந்தானேத் தவிர முகத்தில் துக்கம் இல்லை.
நான் யாரையும் பார்க்காமல் கூட்டத்தை விலக்கிப் பார்த்தேன்.
ஆனந்தவள்ளி கட்டிலில் என்னவோ கண்களை மூடி தூங்குவது போல பிணமாய்க் கிடந்தாள்.
பத்திரிக்கைக்காரர்கள் பளிச்! பளிச்! போட்டோக்கள் எடுத்தார்கள். தொலைகாட்சி மீடியாக்கள் படமாய்ப் பிடித்தார்கள். கை ரேகை நிபுணர்கள் சுவர், கட்டில்களில் ரசாயன பொடிகள் தெளித்து அவர்கள் வேலைகளை பார்த்தார்கள். ஒரு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு அது கட்டிலை மட்டுமே சுற்றி, சுற்றி வந்தது. அடுத்து நகர மனமில்லாமல் ஆட்களைப் பார்த்தது.. அப்போதுதான் எனக்கு பளிச்சுன்னு ஒன்னு நினைவுக்கு வந்தது.
கடவுள் என்ன கடவுள்! ஒரு அரசியல்வாதி கண்ணில் ஒரு அன்றாடங்காய்ச்சிப் பட்டால் அமைச்சர் என்ன குபேரனாவான்! என்பதுதான் அது.
ஆமாம் மாப்ளெ! ஆனந்தவள்ளி அப்பா ஐயப்பன் எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பனை ஓலைகள் வேயப்பட்ட சிறு குடிசை வீடு. அவர் அம்மா, அப்பா விவசாயக் கூலிகள்.
அவர்களுக்கு கந்தன், ஐயப்பன் என்று இரண்டு மகன்கள்.
மூத்த மகன் பதினொன்றாம் வகுப்பு வரை படித்துவிட்டு அப்பாவோடு கூலி வேலை. ஐயப்பன் சேற்றில் உடம்பு வளையாமல் உள்ளூர் மளிகை கடையில் எடுபிடி வேலை.. அண்ணனுக்கு வயசு 24. தம்பிக்கு வயசு 22.
இந்த நேரத்துலதான் தேர்தல் அறிவிப்பு!
ஐயப்பன் ஊருக்கும் அசலூரில் இருந்த முக்கிய அரசியல்வாதிக்கு இந்த தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம். கட்சி கட்டளை! வேட்பாளரைத் தேடோ தேடுன்னு தேடறார். ஒருத்தனும் சரியாய் அமையலை. இவர் மனசுக்குப் பிடிக்கலை.
கடைசியாய் அவர் கண்ணில் ஐயப்பன் பட்டான். மனசுக்குத் திருப்தி.
ஆளை வீட்டுக்கு வரழைத்து….
“இந்த தொகுதிக்கு நீதான் வேட்பாளர்!” சொல்றார்.
“ஐயா..! நான்…” பையன் தயங்கறான்.
“மறு வார்த்தை பேசாமல் கம்முன்னு இரு. என் நல்ல பெயர், அரசியல் செல்வாக்கை வைச்சி உனக்குப் பத்துப் பைசா செலவில்லாமல் கட்சி செலவில் ஜெயிக்க வைக்கிறேன்.” சொல்றார்.
இவனால் மறுத்துப் பேச முடியல.
அன்னைக்குப் பிடிச்சது ஐயப்பனுக்கு நல்ல காலம்.
தேர்தலில் நின்று அவர் தயவால் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி!
அந்த நல்ல மனுசன் கூடவே இருந்து, பழகி, அவரைத் தன் அரசியல் ஆசானாய்த் ஏற்று தனக்கு, வீட்டுக்கு ஏதும் செய்யாமல், ஊருக்கு, மக்களுக்கு நல்லது செய்து, மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து செல்வாக்கு உள்ளவனாய் ஆகிட்டான்.
அப்போ அதெல்லாம் காமராசர் வாழ்ந்த காலகட்டம் விகாஷ். எல்லா அரசியல்வாதிகளும் நாட்டுக்கு மக்களுக்கு நல்லது செய்து வாழ்ந்தார்கள். அப்புறம் அரசியல் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி… இன்னைக்கு சாக்கடை!
யாரும் நாட்டுக்கு, மக்களுக்கு நல்லது செய்யனும் என்கிற எண்ணத்தோடு வரலை. கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கனும், பொறியியல், மருத்துவ கல்லூரிகள் கட்டனும், நாட்டையே வளைத்து பெரிய பணக்காரனாகனும் என்கிற எண்ணத்திலேயே பணத்தை இறைக்கிறான். வெற்றி பெற்று கோடி கோடியாய்க் கொள்ளையடிக்கிறான்.
“ஏன்டா இப்படின்னா?”
“இறைத்த பணத்தை நான் எப்படி எடுக்கிறது..? போட்ட முதலுக்கு வட்டி வேணாமா?” ன்னு கேட்டு நியாயம் பேசறான்!
“நீ பணம், இலவசம் கொடு. நான் ஓட்டு போடுறேன்!” என்று இவர்களிடம் எந்த மக்கள்…சொன்னார்கள், கேட்டார்கள்..?
இவர்கள் சம்பாதிப்பதற்காக இந்தா! இந்தா! என்று வாக்காளர்களிடம் வலிய பணம், இலவசங்களைத் திணித்து விட்டு தவறைச் சுட்டிக் காட்டினால் இப்படி மாறுகிறார்கள். என்ன நியாயம்..?!
அள்ளிக் கொடுத்தாலும் அயோக்கியர்களைத் தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாய் இருக்காங்க. அதனால்தான் ஒன்றிரண்டு நல்லவர்களும் தேர்தலில் வெற்றி பெறுகிறார்கள். ஆனால் தேர்தலில் நிற்கும் ஒரு சிலர்களைத் தவிர அத்தனைப் பேர்களும் அயோக்கியர்களாய் இருக்கும்போது வழி இல்லாமல் அவர்களுக்குப் ஓட்டு பெற்று வெற்றி பெற வைக்கிறாங்க.
அன்னைக்குப் பயிரில் களை இருந்தது. சுலபமா எடுத்து சரி பண்ணிட்டோம்.
இன்னைக்குக் களைகளில் பயிர் இருக்கு. எடுக்க முடியாமல் திணறுகிறோம்.
அந்த களைகளும் பயிர்களின் வளர்ச்சியை தடுக்குது, குறைக்குது., குன்ற வைக்கிறது என்பது பேருண்மை.
இன்று அரசியல் மொத்தமும் அயோக்கியர்கள் கூடாராமாய் ஆகிப் போச்சு. அதனால்தான் எந்த சட்டத்தாலும் இவைகளை சரி செய்ய முடியவில்லை.
விடு மாப்ளெ. விசயத்துக்கு வர்றேன்.
ஐயப்பன் சட்டமன்ற உறுப்பினராகிய முதல் ஐந்து வருடங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து கட்சியிலும் நல்ல செல்வாக்காகி விட்டார்.
முப்பது ஆண்டுகள் அவர் அரசியல் வாழ்வில் முதல் ஐந்தாண்டுகளைத் தவிர மற்ற ஆண்டுகள் எல்லாம் துறைகள் மாறி மாறி அமைச்சர் பதவி.
இந்த அமைச்சர் பதவியின் மத்தியில்தான் இவருக்குத் திருமணம். பெண் புனிதவதி ரொம்ப அழகு, அடக்க ஒடுக்கம்.
ஐயப்பனை விட அதிகம் படித்தவள். பட்டப்படிப்பு. சொந்தம். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டத் திருமணம். ரொம்ப எளிமையாய் நடந்தது. இந்த திருமண வாழ்க்கையில்தான் இவருக்குச் சின்ன கீறல்!”
“என்ன மாமா..?”
“மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்து அவர்களுக்காக அல்லும் பகலும் உழைக்கும்.. டாக்டர், வக்கீல், அரசியல்வாதிகளை எல்லாம் மக்கள் தூங்க விடமாட்டார்கள். அவர்கள் குடும்ப வாழ்க்கை குலைந்து போக இவர்களும் ஒரு காரணம்.”
“விசயத்தைச் சொல்லுங்க மாமா…?”
“ஐயப்பனுக்குத் தன்னாலோ, இல்லை இந்த ஓய்வு ஒழிச்சலில்லாத வாழ்க்கையினாலோ தம்பதிகளுக்கு குழந்தை இல்லே.
இதை ஐயப்பன் நண்பன் ஒருவன் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான். ஐயப்பன் வீடு வரை பழக்கம் வைத்திருந்த அவன் அப்படி இப்படி பேசி அவளை மயக்கி விட்டான். புனிதவதியும் அவன் வலையில் விழுந்து விட்டாள்.
திடீர்ன்னு ஒருநாள் ரெண்டு பேரும் காணாமல் போய்ட்டாங்க.” நிறுத்தினார். அடுத்து விசயத்தைச் சொல்லப் போகிறார், கதையைத் தொடரப் போகிறார் என்று நினைத்து விகாஷ் ஆர்வமாய் தன்ராஜ் முகத்தைப் பார்த்தான்.
“நாளைக்குச் சொல்றேன் மாப்ளே!” அவன் எதிர்பார்ப்பில் மண்ணை போட்டுவிட்டு எழுந்தார் அவர்!
– தொடரும்…
![]() |
என்னைப் பற்றி... இயற்பெயர் : இராம. நடராஜன்தந்தை : கோ. இராமசாமிதாய் : அண்ணத்தம்மாள்.பிறப்பு : 03 - 1955படிப்பு : பி.எஸ்.சி ( கணிதம் )வேலை : புத்தகம் கட்டுநர், அரசு கிளை அச்சகம் காரைக்கால்.( ஓய்வு )மனைவி : செந்தமிழ்ச்செல்விமகன்கள் : நிர்மல், விமல்முகவரி : 7, பிடாரி கோயில் வீதி,கோட்டுச்சேரி 609 609காரைக்கால்.கைபேசி : 9786591245 இலக்கிய மற்றும் எழுத்துப்பணி 1983ல் தொடங்கி 2017.....இன்றுவரை தொடர்கிறது...…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 18, 2026
