திருத்த முடியாத தவறுகள்

0
கதையாசிரியர்: குரு பிரசாத்
கதைத்தொகுப்பு: காதல்
வெளியான ஆண்டு: 2013
இணைய வெளியீடு: November 20, 2026
பார்வைகள்: 351
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

மாலை ஆறரை மணி. தன் கடமையைச் செவ்வனே செய்து முடித்த சூரியன், நிலவுக்கு வரவேற்புச் சொல்லிவிட்டு, கரைந்து போய்க்கொண்டிருந்தான். அந்தப் பூங்காவில் அன்றைய தினம் கூட்டம் அதிகமில்லை. வழக்கமாக அமரும் “மகிழம்பூ” மரத்தடியில் அமர்ந்திருந்தான் ஆகாஷ். இருபத்து மூன்று வயது இளைஞன். “அபிநயா கார்மெண்ட்ஸ்” நிறுவனத்தின் மேலாளர். இப்போது தனது மனம் கவர்ந்த கவிதாவிற்காகக் காத்துக்கொண்டிருக்கிறான்.

கவிதா… அவளை முதன்முதலில் இரத்த தான முகாம் ஒன்றில்தான் அவன் பார்த்தான். அந்த நொடியே அவனது மனதில் அவள் சிம்மாசனமிட்டு அமர்ந்துகொண்டாள். அதன் பின்னர், அவளைத் தினமும் பின்தொடர்ந்து, சில பல “உருப்படாத” வேலைகளைச் செய்ததன் பலன், இன்று இருவரும் காதலர்கள்.

“ஆகாஷ், வந்து ரொம்ப நேரமாச்சா? டூ சோரி… வரக் கொஞ்சம் லேட்டாயிடுச்சு!”

எதிரில் வந்து அமர்ந்த கவிதாவின் வார்த்தைகளில் வழக்கமான உற்சாகம் சுத்தமாக இல்லை. தலைகுனிந்து அமர்ந்திருந்த அவளின் கண்களில் இருந்து கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்த்தன.

“ஆகாஷ், நம்ம காதல் தோல்வியில் முடிஞ்சிருமோன்னு பயமா இருக்கு. நாம இரண்டு பேரும் சேர்றதும், பிரியறதும் இப்ப உன் கையில்தான் இருக்கு!”

மர்மமான அவளின் வார்த்தைகளில் ஆகாஷ் குழம்பியே போனான்.

“கவி, என்ன சொல்ற? எனக்குப் புரியலை. விவரமா சொல்லு!”

அவனது குரலில் டென்ஷன் இருந்தது.

“ஆகாஷ், நீ டெல்லி போன இந்த ஒரு வாரத்தில் எனக்கு அவசர அவசரமா கல்யாணம் நிச்சயமாயிடுச்சு!”

விசும்பிக்கொண்டே கவிதா சொல்ல, அது அவனது மனதில் இடியாய் இறங்கியது. கவிதாவே தொடர்ந்தாள்.

“என் அப்பாவோட பிரெண்ட் கொண்டு வந்த வரன் அது. மாப்பிள்ளை அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியரா இருக்காரு. சம்பளத்துக்குக் குறைச்சல் இல்ல. எங்க குடும்பத்தில் எல்லாருக்கும் பிடிச்சிருந்தது. ரெண்டு பேருக்கும் பொருத்தம் பார்த்தாங்க. என்னோட துரதிர்ஷ்டம், பொருத்தமும் அமோகமா இருந்தது. அதனால நேத்து எங்க ரெண்டு பேருக்கும் கல்யாண நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு. இன்னும் பத்து நாளில் கல்யாணம். இதைச் சொல்றதுக்கு உனக்குப் பல தடவை போன் பண்ணினேன். ஆனா, லைன் கிடைக்கல!”

கவிதா சொன்னதும் ஆகாஷுக்குத் தலை சுற்றியது.

“என்ன கவி, நீ சொல்றது ஏதோ சினிமா படம் போல இருக்கு! உங்க வீட்டில் ஏன் இவ்வளவு அவசரப்படறாங்க? நம்ம காதல் விஷயத்தை உங்க அப்பாகிட்ட நீ சொல்ல வேண்டியதுதானே?”

ஆகாஷ் அவசரமாகக் கேட்டான். அதைக் கேட்ட கவிதா விரக்தியாகச் சிரித்தாள்.

“வீட்டில் என்னைத் தவிர எல்லாருக்கும் இந்தச் சம்பந்தம் ஓகே. அமெரிக்காவில் இருந்து மாப்பிள்ளை ஒரு மாச லீவில் வந்திருக்காரு. அதனால கல்யாணத்தைச் சீக்கிரமா முடிக்கணும்னு அவங்க வீட்டில் சொல்லிட்டாங்க. இப்ப வீட்டில் எல்லாரும் சந்தோஷமா கல்யாண வேலைகளில் இறங்கிட்டாங்க. இந்தச் சூழ்நிலையில் நம்ம காதலை எப்படி சொல்ல முடியும்? இது எல்லாத்துக்கும் மேல, அப்பாவுக்கு ‘காதல்’ங்கற வார்த்தையே அலர்ஜின்னு உனக்குத் தெரியுமே!”

கவிதா சொல்லவும் ஆகாஷ் சிலையானான்.

“என்ன ஆகாஷ், குழப்பமா இருக்கா? ஒரு வாரமா எனக்கு எப்படி இருந்திருக்கும்? பைத்தியம் பிடிக்கிற மாதிரிதான் இருந்தேன். அப்புறம்தான் மனசை அமைதியாக்கிட்டு, ரொம்பவும் யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். அதுக்கு நீ சரின்னா நாம சேரலாம். இல்லைன்னா ரெண்டு பேரும் பிரிய வேண்டியதுதான்!”

உறுதியான குரலில் கவிதா சொன்னாள்.

“சொல்லு கவி, என்ன முடிவு பண்ணியிருக்கே? நாம ரெண்டு பேரும் வாழ்க்கையில் ஒண்ணா சேரணும். அதுக்கு நீ என்ன முடிவு செஞ்சாலும் எனக்கு ‘டபுள் ஓகே’தான்!”

ஆகாஷ் ஒப்புதல் வழங்கினான்.

“அப்படின்னா, நாம் வீட்டை விட்டு ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதான்!”

தீர்மானமாகக் கவிதா சொல்லவும் ஆகாஷ் அதிர்ந்துபோனான்.

“கவி, நீ என்ன சொல்றே? நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்தியா? அப்பா, அம்மாவைத் தவிக்க விட்டுட்டு, உனக்குப் பின்னாடி இருக்கிற தங்கச்சியோட வாழ்க்கையை அழிச்சுட்டு, நாம வீட்டை விட்டு ஓடிப்போய்த்தான் கல்யாணம் பண்ணிக்கணுமா?”

“வேற வழியில்லை ஆகாஷ். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என் மேல இருக்கிற கோபம் காலப்போக்கில் சரியாயிடும். தங்கச்சியோட வாழ்க்கை இதனால பாதிக்கப்படாது. ஏன்னா, கவிதான்னு ஒரு பொண்ணு இருந்தா, இப்ப அவ செத்துப்போயிட்டான்னு எங்கப்பா சொல்லிடுவாரு!”

பேசப் பேசக் கவிதாவின் குரல் அடைத்தது. மிக நீண்ட யோசனைக்குப் பின்னர் ஆகாஷ் சொன்னான்:

“ஓகே, கவி. நீயே இவ்வளவு தைரியமா இருக்கும்போது நான் என்ன சொல்றது? எனக்குன்னு யாரும் இல்லாததால என்னோட பக்கம் பிரச்சினை ஒண்ணுமில்ல. சரி, எப்ப வீட்டை விட்டு வரப்போற? எப்ப நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்?”

“வர்ற வியாழக்கிழமை முகூர்த்த நாள். அன்னைக்கு காலைல ஆறு மணிக்கு நான் வீட்டை விட்டு வந்துடறேன். நேரா கோயிலுக்குப் போறோம். உன் பிரெண்ட்ஸ், என்னோட பிரெண்ட்ஸ்னு பத்து பேரு மட்டும் போதும். கோயிலில் கல்யாணத்தை முடிச்சுட்டு, நேரா ரிஜிஸ்டர் ஆபீஸ். அங்கே கல்யாணத்தைப் பதிவு செஞ்சுட்டு, அப்புறம் நேரா உங்க வீட்டுக்குப் போயிடறோம்!”

கவிதா தனது திட்டத்தைத் தெளிவாகச் சொல்ல, ஆகாஷ் அரை மனதாகத் தலையாட்டினான்.

ஆகாஷுக்கு இப்படித் திருமணம் செய்வதில் விருப்பமில்லைதான். கவிதாவின் பெற்றோரின் சம்மதத்துடன் முறைப்படி திருமணம் செய்திடத்தான் அவன் நினைத்திருந்தான். ஆனால், சூழ்நிலை அவனை வேறு வழிக்கு இழுக்கிறது.

வியாழக்கிழமை. கவிதா தூங்கிக்கொண்டிருந்த தனது பெற்றோரையும் தங்கைகளையும் விழிகளில் நீர் வழியப் பார்த்து, மனதில் வலியுடன் வீட்டை விட்டு வெளியே வந்தாள். வெளியே காத்திருந்த ஆகாஷ் அவளைக் காரில் ஏற்றிக்கொள்ள, நண்பர்களுடன் கோயிலில் இருவரும் மணமக்களாக மாலைகள் மாற்றிக்கொண்டனர்.

பின்னர், பதிவு அலுவலகத்தில் திருமணப் பதிவை முடித்துக்கொண்டு, மனம் நிறையச் சந்தோஷத்துடனும் லேசான குற்ற உணர்வுடனும் வெளியே வந்த கவிதா, பக்கத்து வீட்டு ராகவனை எதிரே பார்த்ததும் வெலவெலத்துப் போனாள்.

“கவிதா, என்ன இப்படி செஞ்சுட்ட? பெத்தவங்களுக்கு தலைக்குனிவை ஏற்படுத்திட்டு இப்படியொரு வாழ்க்கை உனக்குத் தேவையா? உன்னோட சந்தோஷத்தையே தங்களோட சந்தோஷமா நினைச்சு வாழ்ந்துட்டிருந்த உன்னோட குடும்பத்தை ஒரே ஒரு லெட்டரில் சாகடிச்சிட்டியே! நீ நல்லா இருப்பியா?”

ராகவன் தன் வார்த்தைகளில் கவிதாவின் மீது வெறுப்பை உமிழ்ந்தார். அவருடைய பேச்சில் மின்சார அதிர்ச்சிக்கு உள்ளான கவிதை பதறினாள்.

“சார், நீங்க என்ன சொல்றீங்க? என்னோட குடும்பத்தைச் சாகடிச்சிட்டேனா? கொஞ்சம் புரியும்படியாச் சொல்லுங்க!”

அவளது குரல் உடைந்தது.

“ஆமா! வீட்டை விட்டு ஓடிப்போய்க் கல்யாணம் பண்ணிக்கறதா நீ எழுதி வைச்ச லெட்டரைப் பார்த்ததும், உன்னோட அப்பாவும் அம்மாவும் தங்கச்சிகளும் அவமானம் தாங்காம விஷம் சாப்பிட்டுட்டாங்க. நாலு பேரும் இப்ப இந்த உலகத்தை விட்டே போயாச்சு. உனக்குச் சந்தோஷம்தானே?”

ராகவன் சொல்லி முடிக்கும் முன்னரே, அலறிக்கொண்டு வீட்டை நோக்கிக் கவிதா ஓடினாள். ஆகாஷும் பின்னாலேயே ஓடினான்.

வீட்டின் நடுக்கூடத்தில் அவளது அப்பா, அம்மா, தங்கைகளின் உடல்கள் வரிசையாகக் கிடத்தப்பட்டிருக்க, சுற்றிலும் ஊர் ஜனங்கள் துக்கத்துடன் நின்றுகொண்டிருந்தனர். முகத்தில் அறைந்துகொண்டு அழுத கவிதாவைக் கண்டதும், அவர்கள் வாய்க்கு வந்தபடி திட்டினர்.

“தன்னோட வாழ்க்கைதான் பெரிசுன்னு இந்தப் பொண்ணு ஓடிப்போச்சு. ஆனா, குடும்ப மானம்தான் பெரிசுன்னு அவங்கப்பா காண்பிச்சுட்டாரு. பெத்து வளர்த்த அப்பா, அம்மாவை ஒரு நிமிஷத்தில் தூக்கி எறிஞ்சுட்டு, நேத்து வந்தவனே பெரிசுன்னு ஓடிப்போன இவங்க வாழ்க்கையில் உருப்படவே மாட்டாங்க!”

கூட்டத்தில் நின்றிருந்த பெரியவர் ஒருவர் சாபமிட்டார்.

தனது பெற்றோர்களின் கால்களில் விழுந்து கதறிய கவிதா, அழுதுகொண்டே சொன்னாள்:

“அப்பா, அம்மா, உங்க சாவுக்கும் தங்கச்சிகளோட சாவுக்கும் நானே காரணமாயிட்டேன். என்னோட தப்புக்கு நீங்க தண்டனையை ஏத்துக்கிட்டீங்க. நான் தப்பு பண்ணிட்டேன்… தப்பு பண்ணிட்டேன்!”

கேவிக் கேவி அழுத கவிதாவை ஆகாஷ் சமாதானப்படுத்த முனைந்தான்.

“இப்ப கதறி அழுது என்னம்மா பண்றது? தப்பு செய்யறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சிருக்கணும். ஆனா, அப்ப நீ யோசிக்கிற நிலைமையில் இருக்க மாட்டே. நாம பண்ற சில தப்புகளைத் திருத்தலாம். சில தப்புகளைத் திருத்தவே முடியாது. இப்ப நீ செஞ்சது திருத்த முடியாத தப்பு. உன்னால இந்த நாலு பேரோட உயிர்களைத் திருப்பித் தர முடியுமா? இந்தத் தப்புக்கு நீ காலம் பூரா கண்ணீர் வடிச்சுத்தான் ஆகணும்!”

ராகவனின் வார்த்தைகள் கவிதாவை அறைந்தன.

“நோ!”

கத்திக்கொண்டு எழுந்த கவிதாவின் உடலில் வியர்வை ஆறாக ஓடியது. அவளது அம்மாவும் தங்கைகளும் அருகில் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்த பின்னரே, தான் கண்டது கனவு என்பது கவிதாவுக்குப் புரிந்தது. அவள் கண்களில் இருந்து இப்போது ஆனந்தத்தில் கண்ணீர் வந்தது. ஆனாலும், உடலின் நடுக்கம் சில நிமிடங்களுக்குத் தொடர்ந்தது.

வீட்டை விட்டு ஓடிப்போவதை நினைக்கவே இப்போது பயமாக இருந்தது. எக்காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு ஓடிப்போகக் கூடாது. அதே சமயம், தன் காதலைப் பற்றி எப்படியாவது பெற்றோர்களிடம் பேசி, ஆகாஷைத் திருமணம் செய்யச் சம்மதம் பெற்றுவிட வேண்டும் என்பது கவிதாவின் மனதில் உறுதியானது.

கனவின் மூலம் தனக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த கடவுளுக்கு மனதிற்குள் நன்றி சொல்லியவாறு, ஆகாஷுக்குப் போன் செய்யச் செல்போனை எடுத்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *