சூரியத்தாய்
கதையாசிரியர்: மேலாண்மை பொன்னுச்சாமி
தின/வார இதழ்: மங்கையர் மலர்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 274
(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சந்தனத்தாய், கிளிச்சனியன்களைத் துரத்துகிற போராட்டத்தில் மூச்சிரைத்தாள். காலடிச் சீலையைத் தூக்கி இடுப்பில் செருகிக்கொண்டு, கம்பம் பயிரைக் காப்பாற்ற பொழிகளில் ஓடுகிறாள். கல்லெடுத்து எறிகிறாள். “ச்சூசூ… ச்சூச் சூச்சூ… ஏய்ய்யக் ஹோ… ய்ய்க்” என்று காட்டுக்கூப்பாடு போடுகிறாள்.
இவளுக்கு பயப்படுகிறமாதிரி பாவ்லா காட்டுகிற கிளிகள், இங்குட்டு பறந்து அங்குட்டு உட்கார்ந்து கொள்கின்றன. இவள் கல்லெறிகளுக்கும், சொல்லெறிகளான வசவுகளுக்கும் கிளிகள் அஞ்சுவதாக இல்லை.
அகல விரித்த பச்சை ஜமுக்காளம் காற்றில் மிதந்து வருகிற மாதிரியிருக்கிறது, கிளிப்படையின் கூட்டு வருகை. ஆயிரக்கணக்கில் வந்து, கதிரில் முற்றுகை. உட்கார்ந்தவுடன் வளைந்தாடுகிற கம்பம் பயிர்கள். அசராமல், பதறாமல் கதிருக்கொரு கிளி. பாலன்ஸ் செய்துகொண்டு கொத்திக் குதறுகின்றன.
நாய் வாயில் சிக்கிய சர்க்கரைச் சாக்காக குதறப்பட்டு உதிர்கின்றன கதிர்கள். சந்தனத் தாய்க்கு குலை கொதிக்கிறது. “ஐயோ… ஐயோ…” என்று பதறிப் பதைக்கிறது, மனசு. அலைபாய்கிற உணர்வு.
“அடப் பாதகத்திகளா… இம்புட்டு அழிமானமா?” ஓயாமல் கத்துகிறாள். அதட்டலாகக் கூச்சலிடுகிறாள்.
சித்திரைக் கடைசி. சாரல் மேகம், மேற்குத் தொடர்ச்சி மலை முதுகுகளில் படுத்துக் கிடக்கிறது. அவற்றைச் செங்குழம்பாகக் காட்டுகிறது, அடைகிற பொழுது. ‘கருகரு’ என்று ஆகிறது, காலத் தேவதையின் இறக்கை நிழலாகப் பரவுகிற இருட்டு. கிளிகளின் ஆட்டம் சற்று அடங்கியது. தூரத்துப் பனைகளில் அதன் கூப்பாடு. அவை அதன் வீட்டை அடைகின்றன.
‘இன்னிக்கு மல்லுக்கட்டு முடிஞ்சது’ என்று சோர்ந்து துவள்கிறது மனசு. ‘இனிமேத்தான்… சோத்துப்பாட்டுக்கு வழி பார்க்கணும்’ என்று நினைக்கிறபோது… மலைத்துப் போகிறது நினைவு. தளர் நடையாக வீடு வந்து சேர்ந்தாள் சந்தனத்தாய்.
பொட்டச்சியா ஜெம்மமெடுத்ததுக்கு… இம்புட்டுச் சீரழிவா’ என்ற சோர்வுணர்வு. ‘உஸ்ஸ்’ என்று உட்காரச் சொல்கிற கால்கள். ‘நீட்டி நிமிர்ந்து படு’ என்கிற குறுக் கெலும்பு.
“யம்மா… சோறு வை” என்று ஓடி வருவானே சின்னப் பயல். “என்ன சாப்புடலாமா?” என்று வந்து நிற்பானே சின்னக்கனி.
வாழ்க்கையின் சாட்டையடிச் சுழற்சியில் முடுக்கப்படுகிற சந்தனத்தாய், அடுப்பை மூட்டுகிறாள். உலை கொதிக்கிறது. அரிசியை அலசி அள்ளிப்போட்டு கைக்கணிசமாக உப்பும் போட்டு காய்கறியை நறுக்குகிறாள். ஒரே புளிக்குழம்பாக வைத்துவிட்டால், நாளை மதியம் வரைக்கும் சரிக்கட்டிவிடலாம்.
இன்னொரு அடுப்பில் டீத்தூளைப் போட்டுக் கொதிக்க விட்டாள். கடையில் வாங்கி வைத்த காராச்சேவு, திண்பண்டத்தைப் பார்த்துக் கொண்டாள். வந்து நிக்கிற மகனும் சரி, சின்னக்கனியும் சரி… “பசிக்குது, என்னமாச்சும் இருக்கா?” என்பார்கள்.
காராச்சேவையும் டீத்தண்ணீரையும் தந்தால் பசி தணியும். அதற்குள், அடுப்பு வேலை முடிந்துவிடும்.
அலுத்து வியர்த்த உடம்பு, குளித்தால்தான் உயிர்த் திரும்பி வரும். சின்னக்கனி, எப்ப தொடுவான் என்று சொல்ல முடியாது. தொட்டால் மறுக்க முடியாது. குழைந்து இடம் தரணும். உடம்பும் மனசும் தயாராக இருக்கணும்.
சின்னக்கனி, என்றால் சந்தனத் தாய்க்கு ஒரே கிறுக்கு. இந்த ஊரிலேயே டக்கர் டிரைவரான முதல் இளவட்டம், இவன்தான். டக்கர் சீட்டில் ஏறி உட்கார்ந்து, சட்டைக் காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு நிமிர்ந்து பார்த்தால்… ராஜாமாதிரி கம்பீரமாகத் தோன்றுவான்.
“அவன்தான் வேணும்” என்று ஒற்றைக்காலில் தவமிருந்து கட்டிக் கொண்டவள், சந்தனத்தாய். அவன்மீது அம்புட்டு கிறுக்கு. தேனில் விழுந்த எறும்பாகத் தித்திப்போடு திணறுகிற மனமயக்கம். உயிர்த்திளைப்பு.
இவள் ஆசைப்பட்ட கணத்தில் “இப்ப வேண்டாம்” என்று உறக்கத்தில் சின்னக்கனி கண்ணைச் செருகியதுண்டு. இவன் தொட்டு அவள் மறுத்த நாளே கிடையாது. அவன் தொடுகிற நேரமெல்லாம் உயிர்க்குழைய மனம் சிலிர்ப்பாள்.
அவன் தொட்டால், பூ வந்து விழுந்த மாதிரி உணர்வாள். தொடுதலில் ஒரு நளினம். ஓர் இனிய வருடல். இதமான ஸ்பரிசம். நெஞ்சு குளிரும். உணர்வுலகில் மிதப்பாள்.
சின்னக்கனியும் வந்துவிட்டான். பம்ப் செட் மோட்டாரில் குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு வந்திருந்தான்.
“என்ன சந்தனம், கிளி வரத்து ரொம்ப இருந்துச்சோ?”
“அதை ஏன் கேக்கீக…? உசுர் அ(று)ந்து போச்சு.”
“வனத்துல இருக்குற மரங்களையெல்லாம், கண்மாயின் உள்வாய் மரங்களையெல்லாம் வெட்டிக் காலிபண்ணப் பண்ண இருக்க எடமில்லாம மயில்காடும், கிளிக் காடும் இங்க வந்து உசுரை வாங்குது.”
“கருது பெறக்குற வரைக்கும் இந்தச் சீரழிவுதான்…”
“அதுக்குள்ளேயே ஏதாச்சும் ஒரு வழி பார்க்கணும்” என்று தொண்டைக்குள்ளேயே சத்தமாக முணுமுணுத்துக் கொள்கிறான் சின்னக்கனி. அது, அவளுக்குக் கேட்கவில்லை.
“விடியக்காலம் மயில் சனியன்களும் உங்களைப் பாடாய்ப்படுத்திருதோ?”
“அதையேன் கேக்கே? மந்தைமந்தையா மயில்கூட்டம். கருதைச் சீரழிக்குற விதமே, ரொம்பக் கொடுமையாயிருக்கு.”
“என்ன செய்ய! வெளைய வைக்குற சம்சாரி, சூரியனைப் போல. சூட்டையும் வெய்யிலையும் தானே வைச்சிக்கிட முடியுமா? பகிர்ந்து குடுக்கணும்லே?”
சந்தனத்தாயை எரிச்சலுடன் பார்க்கிறான் சின்னக்கனி. தாய் மனசோடு பேசுகிறாள் தொடர்ந்து,
“எல்லா ஜீவராசிகளுக்கும் இரைகுடுக்குற கடமையும் நமக்கு இருக்குல்லே?”
“எல்லாருக்குமே இரையாகுறது சம்சாரிகதானே?”
அவனது குரலில் ஓர் இறுக்கமான நையாண்டி. பகைமை உணர்வின் குத்தல்.
அன்றைக்கு அவன் தொடவுமில்லை. மூர்க்கம் கொள்ளவுமில்லை. ஏதோ கனத்த யோசனையில் மல்லாக்கப் படுத்துக் கொண்டே உச்சி முகட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறான், சின்னக்கனி.
மறுநாள் சாயங்காலம் கிளிப்படை வந்துருக்குமோ என்ற பதைப்பில், சந்தனத் தாய் கதவைச் சாத்திவிட்டு, ‘அவக்தொவக்’ என்று பரபரப்பாகப் பாய்ந்தாள். நடையை எட்டிப்போட்டாள்.
புஞ்சையை நெருங்கினாள். அடர்த்தியான கம்பம் பயிர்கள். சமஉயரத்திலான பயிர்களின் அணிவகுப்பு. பசிய வெண்மை நிறக்கதிர்கள். காற்றுக்கு ஒன்றுபோல் தலை வணங்கி கையசைக்கிற கம்பம் பயிர்கள். கதிர்களின் கூட்டசைவுகள், கோடிக் கைகளின் முழக்கங்கள்போல தோன்றுகிறது. கதிர்களின் அசைவுகளில் காற்றின் உருவம் தெரிகிறது.
கிளிகளைக் காணவில்லை. என்னாச்சு?
பேராச்சரியத்தில் தத்தளிக்கிறாள் சந்தனத்தாய்.
ஆங்காங்கே செத்துக் கிடக்கிற கிளிகள். அதன் அடி வயிற்று வெண்திட்டு. கிளிகளை மொய்க்கிற எறும்புகள். சற்று தள்ளிப் பார்த்தால் பெண் மயில்கள் விறைத்துக் கிடக்கின்றன. விஷம் தின்று மாய்ந்திருக்கிற கிளிகள், மயில்கள்.
சந்தனத் தாய்க்குள் தீவைத்த மாதிரியான பகீர் உணர்வு. உயிரின் ஆணி வேர் வரைக்கும் அதிர்ந்து நடுங்கினாள். பதற்றத்தில் சட்டென வாய் உலர்ந்தது. மழலையின் மரணத்தைப் பார்த்த மனப்பதைப்பு.
“ஐயய்யோ… அடப்பாதரவே… இந்த அப்புராணி ஜீவராசிக்கும் வெஷம் வைச்சு கொல்றதுக்கு, எந்தப் பாவிப்பயலுக்கு மனசு வந்துச்சு? அவன் மனுசப் பயதானா? அவன் வாய்லே மண்ணுவுழ!”
கொதிப்பும் குமுறலுமாகக் கொந்தளித்துச் சீறுகிறாள் சந்தனத்தாய்.மனச்சீறலாக தெறிக்கிற சாபச் சொற்கள். தாய் மனசு தாங்காத உயிர்க் கொலைகள். தாய் ரௌத்ரம்.
“இந்த மயில் சனியங்களோட இனிமே என்னாலே மாரடிச்சு மாய்ஞ்சு போக முடியாதும்மா…” சின்னக்கனியின் அயர்ச்சியான குரல், நினைவுக்குள் உரசியது.
அவளுக்குள் குலை கொதித்தது.
சாப்பிடும்போது.
“மயிலுகளும் கிளிகளும் செத்துக் கெடக்குதுக. பாத்தீகளா?”
“எப்படியும் வெளைஞ்ச வெள்ளாமையைக் காப்பாத்தணும்லே?”
குனிந்து சோற்றையள்ளிக் கொண்டே அவன் சொன்ன பதிலில்… சந்தனத்தாய் அதிர்ந்து நடுங்கிவிட்டாள்.
இந்த ஈனப்பயலையா… இம்புட்டு பெருசா நெனைச்சு சொக்கிப்போய்க் கெடந்தேன்?’
மலத்தை மிதித்துவிட்ட மாதிரியோர் அசூயையில் ஒடுங்கிப் பம்முகிறது ஆன்மா.
இரவில்-
புஜத்தில் கைபோட்டான் சின்னக்கனி. இவன் தொடுதலில், உயிர்குழைய வில்லை; விறைத்தது.
தொட்ட கையை ஆங்காரமாய்த்தட்டி விடுகிறாள் சந்தனத்தாய்!
– ஜூலை 2009, மங்கையர் மலர்.
– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.
![]() |
மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
அதுவரை பொறுத்திரு!
மா.வீ.தியாகராசன்
September 21, 2026
புலம்பலால் வெளிவந்த உண்மை…
ராமன் செல்வராஜ்
September 21, 2026
நல்லதுக்கு காலமில்லை
இரா.கலைச்செல்வி
September 21, 2026
