புதிரிருட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 278 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்துப் பார்த்தாள். கண்ணிமைக்காமல் பார்த்தாள். வெறித்த பார்வை. விலகாத நங்கூரப் பார்வை. 

மனசின் பதற்ற அலைகள் விரல் நடுக்கத்தில் தெரிந்தன. கற்பாறையாக கனப்பது போலிருக்கிறது. 

“அவ்வண்ணமே கோரும் ஐ. மாரியப்பன்.” அவர் மகளுக்குத்தான் கல்யாணம். தேதியைத் தேடிப் பார்த்தாள். நாளை மறுநாள் முகூர்த்தம். சிவகாசி கல்யாண மண்டபத்தில் காலை முகூர்த்தம். 

‘போய்த்தான் ஆகணுமா?’ கற்பாறை கேள்வி. 

பத்திரிகையைப் பார்த்தாலே, பணக்கார வீட்டுக் கல்யாணம் என்று தெரிகிறது. கலைநயமான நாலு மடிப்புகள். வண்ண ஜொலிப்புகள். நாலு மடிப்புகளையும் விரித்தால்… பிரம்மாண்டமான அரண்மனை வடிவம். 

…ஒருவாரத்திற்கு முன்பு- 

இவளது குடிசை இருக்கிற வீதிக்குள் வருவதற்கு ஒரு சிமிண்டுக் கலர் கார் உறுமி உறுமித் திணறுகிறது. சின்னஞ்சிறு தெரு. வளைந்துத் திரும்ப மறுக்கிற கார். 

வேறு வழியில்லாமல் கார் கதவைத் திறந்து கொண்டு இறங்கி வருகிற பெரியவர். பளீர் நீல வெள்ளையில் ஜொலிக்கிற வேட்டி சட்டை. காலில் உயர் ரகச் செருப்பு. விரல்களில் மோதிரங்கள். மறைவில்லாத பணக்கார லட்சணம். 

‘கூலிவேலை செய்ஞ்சு வவுறு நனைக்கிற வக்கத்த ஏழைச் சிறுக்கி வீட்டுக்கா… இம்புட்டுப் பெரிய சீமான் வரப்போறாரு?’ 

சந்தேகமான திகைப்புடன் முற்றத்தில் நிற்கிற முத்து லட்சுமி. காரின் இடைவிடாத உறுமல் சத்தம்கேட்டு, ஈரக் கையை முந்திச் சேலையில் துடைத்துக் கொண்டு, குடிசையை விட்டு வெளியே வந்து நிற்கிற அவள் முகத்தில் குழப்ப இருட்டு. முகமெல்லாம் பூப்போன்ற சிரிப்பின் வெளிச்சம். நிறைந்த கும்பிடு போடுகிற அவர். யார் இது? பார்த்த மாதிரியும் தெரிகிறது. யார் என்றும் தெரியவில்லை. 

இவளும் மருட்சியும் குழப்பமுமாக கையெடுத்துக் கும்பிடுகிறாள், யந்திரமாக. 

“என்ன… முத்துலட்சுமி, நல்லாயிருக்கீயா?”

“இருக்கேன்யா,’ அவள் கண்ணில் கேள்விக்குறி.

“ஓம் மாப்ளே வீட்லே இருக்காரா?” 

“திருப்பூருக்கு வேலைக்குப்போய், ரெண்டு மாசமாகுது.’ “அப்படியா…! ஓம்புள்ளை நல்லாப் படிக்காளா?” 

“படிக்காள்…ஐயா,நீ…ங்…க…?” 

“என்னை ஒனக்குத் தெரியாது. ஒன்னை எனக்கு நல்லாத் தெரியும். உங்க அய்யா… அம்மா எல்லாரும் தெரியும். உங்க குடும்பமே எங்க தோட்டத்துலே வேலை பாத்துச்சு. விசுவாசமான குடும்பம். நம்பிக்கையான குடும்பம்.” 

“ம்..”. 

“எங்க தோட்டம் துரவு எல்லாம் இங்கதான் கெடக்கு. தொழில் தொடங்க செவகாசி போனோம். அங்கயே செட்டிலாயிட்டோம்… இந்தாம்மா, பத்திரிகை. மகளுக்கு கல்யாணம் வைச்சிருக்கேன். நீ கட்டாயமா வந்துரணும்மா…” 

“ஆட்டும் யா… ஆட்டும் யா…” என்று ஆட்டுரல் குளவி மாதிரி தலையை ஆட்டினாள். 

“நீ வராம இருந்துரக் கூடாது. ஒன்னை எதிர்பார்த்து வாசல்லே நிப்பேன். வந்தேயாகணும்மா… நீயும் எனக்கு ஒரு மகள் மாதிரித்தான்…” 

“வந்துரணும், வந்துரணும்” என்று திரும்பத் திரும்ப சொன்னார். மருகி மருகிச் சொன்னவிதத்தில், மனசின் கெஞ்சல் தெரிந்தது. 

வா என்று உபசரிக்கத் தெரியாத – உட்கார வைப்பதற்கு ஓர் இடமில்லாத – குடிப்பதற்கு எதுவும் வாங்கித் தர வக்கில்லாத இந்த ஏழைச்சிறுக்கியிடம், இம்புட்டுப் பெரிய சீமான் என்னத்துக்கு தேடி வரணும்? எதுக்கு இம்புட்டுச் சிரித்துச் சிரித்து மனப்பாசத்துடன் பேசணும்? உருகி உருகி என்னத்துக்குக் கூப்பிட்டு… கெஞ்சணும்? 

அவர் போய்விட்டார். ‘வந்துரும்மா வந்துரும்மா,’ என்று ஆயிரம் தடவையாவது சொல்லியிருப்பார். காருக்குள் உட்கார்கிறவரை கையசைப்புகள். முகச்சிரிப்புகள். மன வெளிச்ச சிதறல்கள். 

இவளுக்குள் கண்ணைக்கட்டி காட்டில் விட்ட மாதிரியோர் இருட்டு. புரியாத புதிரிருட்டுகள். மனசையெல்லாம் மருட்டிக் குழப்புகிறமாதிரி முடிச்சுகள். 

இந்த ஏழைச்சிறுக்கிமேல் அம்புட்டுப் பாசமா? அக்கறையா? எனக்கு இத்தனை முக்கியத்துவம் என்னத்துக்கு? 

பார்த்த முகமாக இருக்கிறதே… இது யார்? 

‘நீயும் எனக்கு ஒரு மகள் மாதிரிதான்’ என்கிறாரே, அந்தளவுக்கு அன்பும் வாஞ்சையும் கொண்டிருக்கிற இவர் யார்? 

முத்துலட்சுமி கையில் அந்த ‘அரண்மனை’ பத்திரிகை. 

நாளைக்கு கல்யாணத்துக்குப் போகணுமா? போகாமலிருந்தால் நன்றாக இருக்குமா? இத்தனை தூரம் ‘இறங்கி’வந்து, ஓர் அரண்மனைச் சீமான் மருகி மருகி அழைத்த பிறகும், போகாமல் இருக்கலாமா? அது மனுசத்தன்மையா? 

யார், எவர் என்று தெரியாமலேயே… காட்டுகிற பாசத்துக்காக கல்யாணத்திற்குப் போய்விட வேண்டுமா? பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமா? 

யார், எவர் என்பது தெரியணுமா? அது ரொம்ப முக்கியமா? பழகுறதுலே, பாசம் காட்டுறதுலே பண்பும் உண்மையும் தெரிந்தால்… போதாதா? அதுதானே, முக்கியம்! 

உறவுமுறைக்காகப் பழகுறது பாசமா? அது, ஊரு உலகத்துக்காகப் போடுற வேஷம். பாசத்தோட பழகுறவுக தான்… நிஜமான உறவுக்காரவுக. 

டிரங்க் பெட்டியைத் துழாவினாள். அடியில் கிடந்த ஒரு குயர் நோட்டு. இவளது கல்யாணத்தன்று எழுதிய மொய் நோட்டு. பிரித்து தேடினாள். ‘சிவகாசி. ஐ. மாரியப்பன்’ என்ற பெயருக்கு நேராக ‘இரு நூறு’ என்று போட்டிருந்தது. அந்த நோட்டிலேயே பெரிய தொகை அதுதான். மற்றதெல்லாம், இருபது, பதினைந்து, பத்துதான். பதினைந்துகள்தான் ஜாஸ்தி. 

அவரது பாசம் பொய்யில்லை என்று சொல்லுகிற மொய்யின் கனம். அப்படீன்னா… 

அவர் கல்யாணத்துக்கு வந்திருக்கிறார். நேரில் வந்திருக்கிறார். உள்ளுக்குள் குடைகிற யோசனை. மனசின் ஆழத்து சேகரங்களைத் தேடிக் குடைகிற யோசனை. யோசனையை உந்தி உந்தித் தள்ளுகிற மனக்குறுகுறுப்பு. 

‘ஆ… ங்!’ அவளுக்குள் ஒரு மின்னல் கீற்று. பளிச்சென்று வெளிச்சமிட்ட பழைய நினைவு. 

… மாலையும் கழுத்துமாக புதுமாப்பிள்ளையுடன் ஒட்டி நிற்கிறாள். தாய் மாமன், சித்தப்பா, பெரியப்பாமார்கள், அத்தைமார்கள், சித்திமார்கள் நெருக்கமான ரத்த பந்தங்கள் திருநீறு பூசுகிறார்கள். 

தட்டில் இருக்கும் திருநீறை அள்ளி, மணமகன் தலையில் தூவி, நெற்றியில் இட்டு, ஒரு கும்பிடு, அப்புறம் இவளுக்கும், அதே மாதிரி கும்பிடு. பதிலுக்கு இவர்களும் கும்பிடு. இவள் வகை உறவுக்காரர்கள் இவள் கைக்குள் அஞ்சோ, பத்தோ ரூபாயைத் திணிப்பார்கள். அவன் வகையினர் அவன் கையில். 

அந்த வைபவம் நடக்கும் வேளையில் – ரத்த பந்தமில்லாமல், யாரென்றும் தெரியாமல் ஒருவர் வந்தார். பெரிய மனிதர். பணக்காரச் சீமான் தோற்றம். 

சிரித்த முகத்தோடு திருநீறை எடுத்து, முதலில் முத்து லெட்சுமி பக்கம் திரும்பினார். அவர் கண்ணில் தளும்பி நின்ற மனக்கண்ணீர். பாசத்தில் துடிக்கும் மனசின் நெகிழ்ச்சி. 

இவளுக்கு முதலில் பூசி… இவள் கைக்குள் நூறு ரூபாய் தாளைத் திணித்தார். அவனுக்கும் பூசினார். 

“யப்பா… நீ நல்லாயிருக்கணும். முத்துலட்சுமியைக் கண்ணு கலங்காம… நல்லபடியா காப்பாத்தணும். ரெண்டு பேரும் ஒத்துமையா… சந்தோஷமாயிருக்கணும். பாவம், முத்துலட்சுமி, தாயில்லாம வளர்ந்த புள்ளே. கஷ்டப்பட்ட புள்ளே. இனிமேலாச்சும்… ஓங்கிட்டே அவ சிரிச்ச மொகத்தோட, செழிச்ச வாழ்க்கை வாழணும்.” 

“ஆட்டுங்க… நா பாத்துக்கிடுதேன்.” 

“முத்துலட்சுமி எம்புள்ளேமாதிரி. இவுக அம்மாவும் அய்யாவும் நல்லவுக. விசுவாசமானவுக. பணிவும், நம்பிக்கையமானவுக. எங்க தோட்டத்துலேதான் இவுக அய்யாவும், அம்மாவும் ரொம்ப வருஷமா பராமரிப்பு வேலை பார்த்தாக. நானும் அவுகளை நல்லா பராமரிச்சுக்குட்டேன். இவுக அம்மா நல்லவா. எம்மேலே ரொம்ப மதிப்பு. மனங்கோணாம நடந்துக்குவா… நானும் ரொம்ப பாசமா இருப்பேன். 

“அப்படியா… ய்யா?” 

முத்துலட்சுமி முகத்தைக் கனிவுடன் பார்த்தார். பார்த்த பார்வையில் நீர் கோர்த்தது. பேசிய குரலில் ஓர் உடைவு தெரிந்தது. நெகிழ்ச்சி இருந்தது. 

“நல்லாயிரும்மா.” 

போகும்போது, திரும்பித் திரும்பி இவளைப் பார்த்த அதே முகம்தான். 

மாலையும் கழுத்துமாக சந்தனக் கலர் சட்டையும் வேட்டியுமாக பக்கத்தில் உரசிக் கொண்டு நின்ற லட்சுமணன் கூட கேட்டான். 

“யாரு இது? ஒம்மேலே ரொம்பப் பாசமா இருக்காரே…” 

“தெரியலே…” 

“நெசமான பாசம் இருக்குறதாலேதான் பேசுறப்ப குரல் நெகிழுது. கண்ணுலே தண்ணி வருது. உங்க அம்மா வழிச் சொந்தமா இருக்குமோ…?” 

“தெரியலே… நெசமாவே தெரியலே…” 

அய்யா அவரிடம் பவ்யமும் மரியாதையுமாக ஒதுங்கி நின்று, உடல் வளைந்து… பணிவும் விசுவாசமுமாகப் பேசியதை கவனித்தாள். 

அதே முகம்… அதே பெரியவர்தான். அதே செல்வச்சீமான் தான். பத்திரிகை கொடுத்து, வீடு தேடி வந்து, ‘வந்துரும்மா வந்துரும்மா’ என்று கெஞ்சி மருகி விட்டுப் போயிருக்கிறார். 

சிவகாசியில் வாழ்கிற இந்தச் சீமானுக்கு, இங்கே பிறந்து வாழ்கிற கூலிக்காரச் சிறுக்கிமேல் அப்படியென்ன பாசம்? தோட்டங்களைப் பராமரித்த கூலிக்காரக் குடும்பத்தின்மீது அன்பு இருக்கலாம். கருணை இருக்கலாம். பாசம் இருக்குமா? குரல் கலங்குகிற அளவுக்கு கண்ணில் நீர் வருகிற அளவுக்குப் பாசம் இருக்குமா? நெகிழ்வு இருக்குமா? 

இது என்ன சங்கதி? இது என்ன மர்மம்? 

முத்துலட்சுமிக்குள் விலகாத அடர் இருட்டு. குழப்பித் திகைக்க வைக்கிற புதிரிருட்டு. மர்மப் புதிர். அவளுக்குள் புகையாக மண்டுகிற நினைவுகள், உள்ளுக்குள்ளேயே மண்டுகிற குழப்பங்கள். 

சரி…இப்ப கல்யாணத்துக்குப் போகணுமா? போகாம எப்படி இருக்கிறது? நம் கல்யாணத்துக்கு வந்து மொய் செய்திருக்கிறவருக்கு நாம எப்படிப் போகாமலிருப்பது? 

செய்த மொய்க்கு கூடுதலாக மொய் செய்தாகணுமே! செய்யாம வுடுறது, கேவலமில்லியா? ஏழு வண்டிக் கேவலம். 

சரி… இப்ப ரூபாய்க்கு எங்க போறது? மொய் முந்நூறு, செலவுக்கு நூறு ஆக நானூறு வேணுமே. திடுதிப்புன்னு அம்புட்டு ரூபாய்க்கு என்ன செய்ய? 

இந்த நினைவில் முட்டிக் கொண்ட மனதின் பதற்றம். விரல்களில் நடுக்கம். 

அந்தி வெயில் தங்கத்துகளாகத் தரையில் விழுகிறது. ‘திருப்பூர்லே வேலை பார்க்குற லட்சுமணன்கிட்டே கலந்து பேசிக்கிடலாம். 

ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு கடைக்குப் போனாள். பெட்டி போன் இருக்கும். பேசிக் கொள்ளலாம். 

அவன் போகச் சொன்னான். பணத்துக்கும் வழி சொன்னான். “போஸ்டாபிஸ்லே கேளு. நானூறு ரூவா தருவாக. நா ரூவா அனுப்புறப்ப, நானூறை கழிச்சுட்டு வாங்கு.” 

“தருவாகளா?” 

“நா போன் பண்ணிச் சொல்லிருதேன்.” 

நாளை மறுநாள் காலை முகூர்த்தம். நாளைச் சாயங்காலம் 4 மணி பஸ்ஸுக்குப் போக வேண்டும். 

பாதமும் பாவாடையும் புழுதி அப்பிக்கிடக்க, முகமெல்லாம் வேர்வைக்கோடு நெளிய ஓட்டமாய் ஓடிவந்த மகள் ராசாத்தி. 

ஊருக்கு கல்யாணத்துக்குப் போகிற தகவல் தெரிந்தவுடன், ராசாத்திக்கு ஒரே ஆதாளி. குதூகலக் கும்மாளம். “ஐய்ய்க்… ஐய்ய்க்… நா ஊருக்குப் போறேன்” என்ற உற்சாகக் கூப்பாடு. முகமெல்லாம் சிரிப்பு. 

‘பஸ்லே போகலாம். மரம் பின்னோக்கி ஓடுவதைப் பார்க்கலாம். புஞ்சைகள் வட்டமடித்து ஓடுவதைக் காணலாம். சிவகாசியைப் பார்க்கலாம். நாலுவகை கூட்டு சாம்பார் பாயசத்தோடு வாய்க்கு ருசியாக சோறு சாப்பிடலாம்’. 

அந்தச் சின்னச்சிட்டு சந்தோஷம் தாளாமல் தத்தளிக்கிறது. நிலைகொள்ளாமல் ஓடியாடிப் பாடுகிறது. 

ராசாத்தியின் துள்ளல்களையும் உற்சாகக் கூச்சல்களையும் பரிவுடன் பார்க்கிற முத்துலட்சுமிக்குள் கூடு கட்டுகிற சோகம். 

நல்ல சோத்துக்குக்கூட ஆலாய்ப் பறக்கிற சிறு பூச்செண்டு. தனது இல்லாமையைத் தானே உணர்கிற அவலம். ‘கதிகெட்ட ஏழைச்சிறுக்கி’ என்று நெஞ்சே அறைந்து சொல்லிக் கொள்கிற மனவலி. 

நாலுமணி பஸ்ஸுக்கு வந்துவிட்டாள், முத்துலெட்சுமி. பஸ் வருவதற்காகக் காத்திருக்கிறாள். ஓரிடத்தில் நிலை கொள்ளாமல், அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருக்கிற ராசாத்தி. அதில் ஏற… இதில் குதிக்க… இங்கு குதிக்க அங்கு ஓட என்று ஒரே ஆட்டம். 

இருப்பதிலேயே ஒரு நல்ல சேலையைக் கட்டிக் கொண்டாள். கூலிக்காரியாக இருந்தாலும்… ஒரு சீமான் வீட்டுக்கல்யாணத்துக்குப் போகிறாள். கெத்து விடாமல், விட்டுக் கொடுக்காத தன்மானத்துடன் இருக்க வேண்டும். யாரும் ஏளனமாகப் பார்க்கிறதுக்கு இடம் தந்துவிடக் கூடாது. 

காலை முகூர்த்தத்துக்கு உடுத்துவதற்கான பட்டுச் சேலையும், ராசாத்திக்கான பாவாடை சட்டையும், பைக்குள் மடித்து வைத்திருக்கிறாள். 

நாலுமணி பஸ் வந்து, வட்டமடித்து நின்றது. வந்த வேகத்தில் எழும்பிய புழுதி மண்டலம் காற்றின் போக்கில் நகர்ந்தது. 

பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பஸ்ஸுக்குள் துள்ளலும் துடிப்புமாக றெக்கை அடிக்கிற ராசாத்தி. ஒவ்வொரு சீட்டாக மாறி மாறி உட்கார்ந்து பார்க்கிற விளையாட்டு. 

விளையாடட்டும்… இஷ்டம்போல விளையாடட்டும். காசா, பணமா? மனசுபோல சந்தோஷப்படட்டும். 

கல்யாண மண்டபத்தின் முன் வாசலில் – வண்ணக் கோலத்துக்குப் பக்கத்தில் நின்றார், பெரியவர். சொன்னது மாதிரியே எதிர்பார்த்துக் காத்து நிற்கிறார். சொல்லில் பொய்யில்லை. பாசமும் பொய்யில்லை. 

இவளைப் பார்த்து நாலெட்டு முன்னால் வந்து, முகமெல்லாம் பூவாக மலர்ந்து சிரிக்க…” வாம்மா, வாம்மா… ஒனக்காகத்தான் இங்க நிக்கேன்… வந்துட்டே… நல்லவேளை…எனக்கு, மனசே நெறைஞ்சிருச்சு.” 

மகிழ்ச்சியின் தத்தளிப்பில் சிறுபிள்ளைமாதிரி சொன்னதையே சொல்லிச் சொல்லி பூரிக்கிறார். 

அரண்மனை மாதிரி பெரிய மண்டபம். ஜேஜே என்று கூட்டம். கழுத்து நிறைய நகைகளுடன் பெண்கள். இவள் கழுத்தைத் தடவிக் கொண்டாள். ஒற்றைச் செயின் கிடக்கிறது. 

ஏகப்பட்ட கார்கள். வாகனங்கள் அலங்காரம். கல்யாண களேபரத்தில் அத்தனை மும்முரத்திலும் 

மும்முரத்திலும் இவளை அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிற மாரியப்பன். விசாரித்துக் கொள்கிற பாச அக்கறை. 

“சாப்புடும்மா… நல்லா சாப்புடும்மா…” பந்தியிலும் இவளைத் தேடிக் கண்டுபிடித்து, பார்த்து உபசரிக்கிற பரிவு. 

“ஏம்மா… இது ஒம்புள்ளையா? ஒன்னைமாதிரியே அச்சு அசலா இருக்கா… ஒம் மாப்புள்ளே வரல்லியா? எங்க?” 

“திருப்பூருக்கு வேலைக்குப் போயிருக்காரு.” 

“சரி சரி… நீ நம்ம வீட்டுப்புள்ளை மாதிரி. நிச்சயதார்த்தத்துக்கு சீர்வரிசைத் தட்டு தூக்குறப்ப… நீயும் ஒரு தட்டைத் தூக்கிக்கணும். என்ன?” 

“ஆட்டும்யா…” 

இவள்மீது அவர் காட்டுகிற அக்கறை. அவர் ஓடி ஓடிவந்து உபசரிக்கிற மரியாதை. பாசத்தைப் பொழிகிற பாங்கு. 

இவளுக்குள் நெருடிக் கொண்டிருந்த அந்நிய உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. அவரது அன்பின் – பாசத்தின் அசல்தன்மையை அவளது ஆழ் மனசு உணர உணர… அவளுக்குள் ஓர் அந்நியோன்யம் அரும்புகிறது. மன ஒட்டுதல். 

அந்நேரம் அங்கே வந்த அவரது மனைவி, கழுத்து நிறைய நகைகள். பட்டுப் புடவையின் சடசடப்பு. 

“ஏய்… இங்க வா.” அதிகாரத் தொனி. 

“என்னங்க..”

“இதுவும் நம்ம வீட்டுப் புள்ளைதான். நம்ம மகா மாதிரி.” 

“அப்படியா?” 

“நிச்சயதார்த்தத்துக்கு சீர்வரிசை தட்டு தூக்குறப்ப… இவா கையிலேயும் ஒரு தட்டு இருக்கணும். நீதான் அதுக்குப் பொறுப்பு.” அவரது உத்தரவில் ஒரு கடுமைத் தொனி. 

“சரி சரி…” அவளது பார்வையில் ஒரு வித்தியாசம். அவளையும் அவரையும் பார்க்கிற நெருடலான பார்வை. 

மாரியப்பனின் பாசமும் அக்கறையும் இவளுக்குள் ஒரு நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மன நெருக்கம் கொள்கிறது. ‘இந்த ஏழைச்சிறுக்கிகிட்டே பாசம் காட்டுகிறதுக்கு இப்படியொரு சீமானா?” 

அவளுக்குள் உடைந்து நொறுங்குகிற இறுக்கம். பாசத்தை ருசிப்பதன் – மரியாதையை அனுபவிப்பதின் – பரவசப் பெருக்கு. உள்மனசின் உணர்ச்சி அலைக்கழிப்பு. கண்ணோரங்களில் மனசின் ஈரக் கசிவு. 

அந்தக் கணத்திலும்- 

அடிமனசில் அந்தப் புதிரிருட்டு. தோட்ட முதலாளியின் அன்புதானா? வெறும் இரக்கம்தானா? அதையும் தாண்டுகிற பாசத்துடிப்புக்கு என்ன காரணம்? என்ன காரணம்? 

எல்லாம் முடிந்தது. காலையிலும் உண்டு முடித்து, முகூர்த்தம் முடித்து, நகர்வலம் உடன்போய்… மதிய உணவும் முடித்து கூட்டமாய் மொய்த்து, மொய் செய்கிற இடத்தில் இவளும் நின்று முன்னூற்றி ஒன்று மொய் செய்து… நோட்டில் தன் பெயர் குறிப்பிடுவதைக் கண்காணித்து… திரும்பியவள் கையில் தாம்பூலப்பை. 

அவரைத் தேடி… ‘போய்ட்டு வாரேன்’ என்று சொல்லி விட்டுப் போய் விடலாமே என்று யோசிக்கிற கணத்தில், அவளை நோக்கி வருகிற அவரின் கையில், புடைப்பான மஞ்சள் நிறப்பை. 

“யம்மா… நீ வந்தது, எனக்கு ரொம்ப ரொம்பப் பெருமை.” 

“இருக்கட்டும்யா.” 

“நீ தட்டுத் தூக்கி ஊர்வலத்துலே வந்தே. நீயும் எம் மகா மாதிரித்தான். மகளுக்கான செய்முறையை ய நா செய்யணும்லே.’ 

“என்னதுய்யா?” 

“இந்தாம்மா” என்று ரெண்டு கையாலும் ஏந்தித் தருகிற மஞ்சள் நிறப்பை. 

“இதுலே ஒனக்கு புதுச் சீலை. மாப்பிள்ளைக்கு வேட்டி சட்டைத்துணி, சின்னப்புள்ளைக்கு டிரஸ் எல்லாம் இருக்கு. மாட்டேன்னு சொல்லிராம, நீ வாங்கிக்கிட்டாத்தான்… கல்யாணமான புள்ளையை வாழ்த்துற மாதிரி.” 

குழைந்துகனிந்த பாசச் சொற்களின் கெஞ்சல். அவரது வார்த்தையில், மீற முடியாத ஒருதளை இருக்கிறது. ‘பெற்றுக் கொள்வதே, வாழ்த்துவதாகப் பொருள்’ என்கிற வார்த்தை விலங்கு. 

“நீங்க இந்த மரியாதை செய்ஞ்சிருந்தா… நா மோதிரம் எடுத்திருக்கணுமே… அப்பத்தானே சரிக்குச் சரியாகும்…?” 

“அந்தச் சம்பிரதாயமெல்லாம் நமக்குள்ளே வேண்டாம்மா. தட்டு தூக்கச் சம்மதிச்சமாதிரி, இதையும் தட்டாம நீ வாங்கிக்கணும்” மருகிக் கெஞ்சுகிற அவரது முகக் குழைவு. 

சுற்றிலும் ஏழெட்டுப் பேர்கள். இதையே நின்று வேடிக்கை பார்க்கின்றனர். உற்றுக் கவனிக்கின்றனர். 

முத்துலட்சுமிக்கு தர்மசங்கடமாக இருக்கிறது. உள்ளுக்குள் ஒரு மனப்போராட்டம். இரு மனசு. தடுமாற்றப் பேதலிப்பு. 

மறுத்துட்டு வாங்காமப் போறது சுயமரியாதை. ஆனா, அது ரசாபாசமா இருக்கும். இந்தக் கூட்டத்துலே இவரு முகத்துலே கரியைப் பூசுனமாதிரி. பாசத்தைக் கொட்டுகிற முகத்தில் காறித் துப்புறமாதிரி. தாலி வாங்கின புள்ளையை வாழ்த்தாமப் போனமாதிரி… 

அவளுக்குள் மனத்தவிப்பு. 

“எல்லாரும் பாக்காகம்மா… வாங்கிக்க… நல்ல மனசோட வாங்கிக்கிட்டு, வாழ்த்திட்டுப் போம்மா…” 

ரெண்டு கையாலும் ஏந்தி நிற்கிற அவரது முகக் கெஞ்சல். இவளும் இருகையால் கும்பிட்டு விட்டு, ஏந்தி வாங்கிக் கொண்டாள். 

அவருக்கு முகமெல்லாம் பூமலர்ச்சி. கண்ணில் சந்தோஷ நீர்த்துளி. முகத்தில் ஒரு பெருமிதம். 

“நல்லதும்மா… நீ எம்புள்ளைமாதிரி… எம்மானத்தைக் காப்பாத்திட்டே. வாங்கின மனசோட, நெறைஞ்ச மனசோட வாழ்த்துவே. எனக்கு மனசு நெறைஞ்சிருச்சும்மா…” 

பூரிப்பின் தத்தளிப்பில் பெரியசாமி. அந்நேரம் அங்கே வந்த கிழவி, காதுகளில் தொங்குகிற பாம்படம். 

“என்னப்பா…பெரியசாமி, இது யாரு? அச்சு அசலா ஒன்னைப்போலவே முகலட்சணம் இருக்கு… யாரப்பா, இந்தப் புள்ளே?” 

“ஊர்லே நம்ம தோட்டங்க இருக்குல்லே?” 

“ஆமா?” 

“அதைப் பராமரிச்சுக்கிட்டிருந்த பார்வதியோட புள்ளை.” 

“அந்தப் பார்வதி மகளா? அப்படியே அச்சுல வார்த்தமாதிரி… ஒன்னையே உரிச்சி வைச்சமாதிரி… இருக்காளப்பா… கல்யாணத்துக்கு வந்தாளா? வரட்டும் வரட்டும்.” 

பாம்படம் ஆட தலையாட்டி விட்டு நகர்கிற கிழவி. 

இவளுக்குள் நெருடிக் கொண்டிருந்த புதிரிருட்டு சட்டென்று துடைத்தெடுத்த மாதிரியிருந்தது. கிழவியின் சொல் வெளிச்சம். 

“உரிச்சு வைச்ச மாதிரி…’, ‘அச்சு அசலா ஒன்னைப் போலவே முகலட்சணம்…’ கிழவியின் வார்த்தைகள். 

‘நீயும் எம் மக மாதிரித்தான்.’ அடிக்கடி நெகிழ்ந்து போய் அவர் சொன்ன சொற்கள். 

முத்துலட்சுமிக்குக் கையில் ஏந்திய துணிப்பாரம், கற்பாறையாகக் கனக்கிறது. அவளுக்குள் ஆயிரமாயிரம் சாட்டையடிகளின் சுழற்சிகள். அடிமனசின் உயிர்ச்சதையைக் கிழிக்கிற சாட்டைச் சுழற்சிகள். 

காடுகரைகள் சொந்தமாக வைத்திருக்கற சீமான்கள், தோட்டத்தில் அடிமைகளைப்போல கூலி வேலை செய்கிற பெண்கள் ஒரு சிலரிடம் அத்து மீறி நடப்பார்களோ? வரம்புமீறி ஆக்கிரமித்து அனுபவிப்பார்களோ? 

“இவுக அம்மா நல்லவா… எம்மேலே ரொம்ப மதிப்பு. மனங்கோணாம் நடந்துக்குவா. நானும் ரொம்ப பாசமாயிருப்பேன்…” 

பெரியசாமி குழைவும் பாசமுமாக சொன்ன சொற்களின் அடிமடிக்குள் இந்த அத்துமீறலும், ஆக்ரமிப்பும்தான் ஒளிந்திருந்ததா…? 

முத்துலட்சுமிக்குத் தன் பிறப்பின்மீதே கசப்பு வந்தது. ‘ச்சேய்… அடிமைகிட்டே அத்துமீறலா நடந்துக்கிட்ட ஒரு பணக்கார நாயின் வித்தில் முளைத்தவளா, நான்? ச்ச்சீச்சீய்…” அவள் மனசெல்லாம் கசப்பு. 

தன் கிராமத்துக்குப் போகிற டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தாள், முத்துலட்சுமி. அவள் பக்கத்தில், ராசாத்தி. 

மாரியப்பன் கொடுத்த மஞ்சள் நிறப் பைப் பொட்டலம், அதோ… தூரத்தில் போய்க்கொண்டிருக்கிற பிச்சைக்காரக் கிழவியின் தோளில். 

ராசாத்தி கேட்கிறாள். 

“ஏம்மா இதை வாங்குனே? என்னத்துக்கு அந்தப் பாட்டிகிட்டே குடுத்துட்டே?” 

எழுதவும் முடியாது. 

“போயொழிஞ்ச காலத்துலே நடந்ததைத் திருத்தி அதுக்காக… நாம் நம்ம, மானமரியாதையைப் பறிகுடுத்துட்டு… சூடு சொரணையத்து வாழவும் முடியாது.” 

எதுவும் புரியாத குழப்பத்துடன் அம்மா முகம் பார்க்கிற ராசாத்தி. அவள் சொன்னது, அவளுக்குப் புரியாத குழப்பத்தில் தூரத்து வெளியை வெறிக்கிற முத்துலட்சுமி. 

– 2009, ஓம் சக்தி தீபாவளி மலர்.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *