ஒரு ஆர்மேனியன்
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 115
(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குழந்தைப் பருவத்திலிருந்து சில காட்சிகள்
(நாவலிலிருந்து ஒரு பகுதி)
மெசபடோமியாவிலிருந்து வருகிற ஒட்டகப் பயணிகளின் கூட்டங்கள் எங்கள் வீட்டு வாசலின் முன்பாகத்தான் போகும். ஆசியா மைனரில் உள்ள பல்வேறு முக்கிய வர்த்தகக் கேந்திரங் களுக்கு, தூர தொலைவில் உள்ள செபஸ்டியாவுக்கும், அவர்கள் போவது வழக்கம். பனிக்காலத்தில் எங்கள் பழத்தோட்டங்கள் காய்த்து ஓய்கிற கட்டத்தை அடையும் சமயம், ஒட்டகக் கூட்டங்கள் எல்லையிலாப் பாலைப் பெருவெளியை நோக்கித் திரும்பும். செல்வம் கொழிக்கும் பாபிலோனிய மற்றும் அராபிய நகரங்களுக்கு, நட்சத்திரங்களைப்போல் பிரகாசிக்கும் வைரங்களும் இதர மணிக்கற்களும் மிகுதியாகக் கிடைக்கும் இடங்களை நோக்கி, அவை போகும்.
தென் பிராந்தியத்தின் இனிமையான பேரீச்சம்பழங்களை ஒட்டகக் கூட்டங்கள் எங்களுக்குக் கொண்டு தரும். ஒட்டகக் கூட்டங்கள் வந்ததும் எங்கள் சந்தை மைதானம் உயிர்பெற்று விளங்கும். அவற்றின் சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி ஓசையினாலும் -அறிவார்ந்த, அமைதி படிந்த ஒட்டகங்களின் கண்ணோட்டங்களாலும் – துயருற்றுப் புலம்பும் அவற்றின் நெடிய களைத்துப்போன குரல்களினாலும் நகரம் நிறைந்திருக்கும்.
பாலைவன வானத்தைப்போலவே அமைதியானது ஒரு ஒட்டகத்தின் பார்வை. ஒட்டகக் கூட்டங்கள் பிரிந்துபோன பின்னரும் அந்தப் பார்வையின் நினைவு எங்கள் உள்ளத்தில் வெகு நாட்கள் நிலைத்து நிற்கும்.
மாரிக்காலத்தில் அவர்கள், காலுறைகள் தயாரிப்பதற்காக ஒட்டக ரோமங்களைச் சேகரிக்கும்பொருட்டுத் தங்களைத் தொடர்ந்து வரும் பிள்ளைகள் கூட்டத்தைச் சட்டைபண்ணாது. நடந்து போகையில், ஒட்டகங்கள் எங்கள் தெருக்களின் ஓரத்தில் வரிசையாகத் தென்படும் சுவர்கள் மீது தங்கள் கண்களைப் பதித்திருக்கும். தெற்கத்திய எல்லையற்ற அகண்ட பரப்புகளைக் கண்டு பழகியிருந்த அக் கண்கள் அடிவானத்தின் அமைதியையும் முடிவிலா விரிவையும் தேடுவதுபோல் தோன்றும்.
இதோ ஒன்று கடந்து போகிறது. கீழ்திசை நாட்டின் மணப் பெண்போல் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது அது. துண்டுதுண்டுக் கண்ணாடிகள், வசந்தகால இன்னோசை என ஒலிக்கும் சின்னஞ்சிறு மணிகள், பட்டுத் துணிகள், மற்றும் பலவித வர்ணங்கள் கொண்ட உல்லன் ஆடைகள் அதை அணி செய்தன.
ஒட்டகக் கூட்டத்தின் முதலாளியின் சொந்த ஒட்டகம் அது. முதலாளி, வடக்கே உள்ளே புதிய புதிய நாடுகளைக் காட்டு வதற்காகத் தன் குடும்பத்தையும் தன்னோடு அழைத்து வருவான்.
நெட்டையான ஒட்டகத்தின் முதுகின் மேலே, உயரமாக, அழகுபடுத்தப்பெற்ற டோலி ஒன்று இருக்கிறது. வர்ண விசித்திரங்கள் கொண்ட பட்டுத் துணித் திரைகளால் மூடுண்ட அது, ஒட்டகத்தின் சீரான அசைவுகளுக்குத் தகுந்தபடி ஆடி அசைகிறது. பெண்களின் முகங்கள், கீழிருந்து மூக்குகள் வரையிலும், மேலிருந்து புருவங்கள் மட்டிலும் மூடப்பட்டிருக் கின்றன; தென்பிராந்தியச் சூரியன்போல் பிரகாசிக்கிற கண்கள் மட்டுமே வெளியே தெரிகின்றன. அவர்கள் ஓயாது எதையாவது தின்றுகொண்டிருக்கிறார்கள். மேலும் கீழுமாக ஏறி இறங்கும் அவர்களது தாடைகளின் அசைவுகள் ஒட்டகத்தின் ஆட்டத்துக்கு இணங்க இயங்குகின்றன. பளிச்சிடும் வர்ணங் களில் அமைந்த சிறிய மெத்தைகள் மீது சாய்ந்துகொண்டு அவர்கள் தின்றவாறு இருக்கின்றார்கள். எங்கள் நகரின் சன்னல்களை, வீட்டுக் கூரைகளை, பெண்களை, ஆண்களை எல்லாம் வேடிக்கையாகப் பார்க்கிறார்கள். கனவு துளும்பும் கண்களை உடைய இந்தப் பாலைவனப் பெண்கள் முடிவேயில்லாமல் ஒட்டகத்தினால் தொட்டிலாட்டப்படுகிறார்கள்; இரவு பகலாக பாபிலோனியப் பிரதேசங்களிலிருந்து ஆசியா மைனரின் நகரங்கள் மற்றும் கிராமங்கள் வரை தாலாட்டப்படுகிறார்கள்.
ஒட்டகக் கூட்டத்தில் பரபரப்புக் காணப்படுகிறது. அது எங்கள் நகரிலிருந்து கிளம்பப்போகிறது. ஒட்டகம் எழுந்து நிற்கிறது. குறுகிப்போன வானவளையத்தை ஏறிட்டுப் பார்க் கிறது. முதலாளியின் நம்பகமான வேலைக்காரன் குட்டை ஏணியை எடுத்து வர விரைகிறான். ஒட்டகத்தின் வயிற்றோடு ஏணி சாய்த்து வைக்கப்படுகிறது. முதலாளி மேலே ஏறுகிறான்; தன் மனைவியின் அருகில் படுத்துக்கொள்கிறான்.
சீக்கிரமே, முன்னேறிச் செல்கிற ஒட்டகத்தின் சீரான ஆட்டத்தைத் தொடர்ந்து மணிகளின் கிண்கிணி நாதம் ஒலிக்கிறது. ஒட்டகக் கூட்டம் மேலே செல்கிறது.
இரவு பகலாக அது தன் வழியே செல்கிறது. சாமான்களை இறக்க, பண்டமாற்றுச் செய்ய, சரக்குகளை விற்கவேண்டிய அவசியம் ஏற்படுகிறபோதுதான் அது ஓய்ந்து நிற்கிறது. பிறகு மறுபடியும், அது தன் பயணத்தைத் தொடர்கிறது.
இரவின் ஆழ்ந்த அமைதியினூடு ஒட்டகக் கூட்டம் நகர் வந்து சேர்கிற சமயங்களில், மேகமின்றி நட்சத்திரங்கள் ஒளிரும் வானத்தின் கீழே வெகுதூரத்திலிருந்து அலைமோதி வருகிற சின்னஞ்சிறு மணிகளின் கிண்கிணி நாதத்தை நாங்கள் கேட்போம். மந்தகதியில் ஊர்ந்து அது நெருங்கி நெருங்கி வரும். ஒட்டகத்தின் சொந்தக்காரர்கள் அரைத் தூக்கத்தோடு ஒட்டகங்களின் சீரான அசைவுக்குத் தக்கவாறு ஆடி அசை வார்கள். எங்கள் நகரின் சதுக்கம் ஒன்றில் வந்து ஒட்டகக் கூட்டம் நிற்கிறவரை அது நிகழும். எங்கும் நிற்காமலே போய்க்கொண்டிருந்தால், அதுவும் தொடர்ந்து நிகழும். மணியோசை படிப்படியாகத் தேய்ந்து. எங்கள் நட்சத்திர மயமான ஆகாயத்தின் ஆழத்தில் புதைந்துபோகும்.
எங்கள் தெருவுக்கு அப்பால் உள்ள சதுக்கத்தில் மூன்று நாட்களாக ஒட்டகக் கூட்டம் ஒன்று தங்கியிருக்கிறது. ஒட்டகக் காவலனின் ரோம உடைகள், பிசைந்த மாவு,ஒட்டக ரோமம் ஆகியவற்றுக்கே உரிய இயல்பான மணம் காற்றில் நிலவி நிற்கிறது. ஒட்டகங்களின் களைப்புற்ற குரல்களும் அமைதியான பார்வைகளும் அங்கே நிரம்பியிருக்கின்றன. ரோமங்களால் வேயப்பட்ட காவலர் கூடாரங்கள் நன்கு நிறுவப்பட்டிருக் கின்றன. மாலை வேளைகளில் நெருப்புகள் மூட்டப்படுகின்றன. காவலர்கள் தங்கள் ஒட்டகங்களுக்கு உணவு அளித்து, அவற்றிடம் அன்பு காட்டுகிறார்கள். அவர்கள் உரக்கச் சிரிப்ப தில்லை; புன்னகை மட்டுமே புரிகிறார்கள். லேசான சோபையற்ற புன்முறுவல் அவர்களது முகங்களில் தோன்றிய உடனேயே மறைந்தும் போகின்றன. ஆனால், ஒரு பாலைவன மனிதனின் பார்வை நெருப்புமயமாக இருக்கிறது; அவனுடைய கண்கள் கதிரொளியோடு சுட்டுப் பொசுக்குகின்றன; எப்போதும் உயிர்ப் போடும் பேசும்பான்மை’யிலும் உள்ளன. பாலை மணலின் சூட்டையும் அமைதியையும் அவை நமக்குக் கொண்டு தருகின்றன.
விரைவிலேயே ஒட்டகக் கூட்டம் மீண்டும் தன் வழியே போகிறது. ஒட்டகங்களின் கம்மலான, துயரம் தேங்கிய, தேடித் தவிக்கிற நெடுங்குரல்களால் நகரம் முழுவதும் நிறைந்து விடுகிறது.
ஆனால் ஒட்டகங்களில் ஒன்று அசைய மறுக்கிறது. அது எழுந்து நிற்கவில்லை. தரையில் கிடந்தபடி வெறுமனே பார்க்கிறது.
காவலர்கள் அதைச் சுற்றிக் கூடுகிறார்கள். அதன் கண்களின் ஆழத்தினுள் ஊடுருவிப் பார்த்து அதனுடைய அந்தரங்க உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்கிறார்கள்-ஒரு முரண்டு அதைப் பற்றிக்கொண்டுவிட்டது. அதற்கு உணவளித்து அதைக் கவனித்துவரும்
காவலன் ஒட்டகக் கூட்ட முதலாளியின் கோபத்தை எண்ணிப் பயந்தவனாய் வெளிறிப்போகிறான்.
அந்த ஆள் செய்த ஏதோ ஒரு காரியத்தினால் அவ் ஒட்டகம் மனவேதனை கொண்டிருக்கிறது. முதலாளி திரும்பி வருகிறான்.
இதன் முரண்டு தணிகிற வரை நீ இதன்கூடவே இங்கே தங்கவேண்டும். பிறகு எங்களோடு வந்து சேர்ந்துகொள்” என்று அவன் கட்டளையிடுகிறான்.
காவலன் அதற்குக் கட்டுப்படுகிறான். ஒட்டகக் கூட்டத்து மணிகளின் ஓசை மீண்டும் ஒலிக்கிறது. முரண்டு பிடித்த ஒட்டகம் தனது தலையைத் திருப்பி, விலகிச் செல்லும் தன் தோழர்களை வெகுநேரம் கவனிக்கிறது. பிறகு நீண்ட துயரக் குரல் ஒன்றை எழுப்புகிறது. முதலாளி ஒட்டகக் கூட்டம் முழுவதையும் நிறுத்தினான். ஒருவேளை அந்த ஒட்டகம் தனியே விடப்படுவதை விரும்பவில்லைபோலும். ஆனால் அப்படியில்லை. அது உட்கார்ந்தே இருக்கிறது. எழுந்து நிற்க மறுக்கிறது. மறுபடியும் ஒட்டகக் கூட்டம் நகர்கிறது. மெசபடோமியா போகிற வழியே, பாபிலோனியா மற்றும் அராபியப் பாலை வனங்களை நோக்கி, அது செல்கிறது.
முரண்டு பிடித்த ஒட்டகத்தின் காவலன் தனது ரோம உடையைக் கழற்றி அதன் அருகில் வைக்கிறான். தன் போர்வையின் அடியில் சுருண்டு மடங்கித் தூங்கிவிடுகிறான். அவன் விழித்தெழுகிற நேரத்திற்குள், அந்த ஒட்டகம் தன் மனக்குறையை மறந்துவிடும்; சாயங்காலத்திற்குள் அவர்களும் ஒட்டகக் கூட்டத்துடன் போய்ச் சேர்ந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கை அவனுக்கு.
நாட்கள் ஓடுகின்றன. அந்த ஒட்டகம் தனது மிருக முரண்டை விட்டுவிடவில்லை. காவலனுக்கு அதைத் தட்டித் தடவிக் கொடுப்பது அலுத்துவிட்டது. எங்கள் நாட்டின் கற்பாறைகளைப்போல், அதன் இதயம் கடினமாகியிருந்தது.
பனிக்காலத்தின் குளிர் தெற்கிலிருந்து வந்துள்ள மனிதனை பயப்படுத்த ஆரம்பித்தது. அவனிடம் உணவு எதுவும் எஞ்சி யிருக்கவில்லை. அவனுக்கு யாரையும் தெரியாது. எவரிடமும் அவன் உதவி கேட்க முடியாது. ஒட்டகத்துக்காகத் தயாரிக்கும் மிருதுவான, பிசைந்த மாவையே அவனும் சாப்பிடுகிறான். ஒட்டகத்தின் முதுகிலிருந்து ரோமம் திருடும் பிள்ளைகளிடம், அவர்கள் அவனுக்கு ரொட்டி கொண்டு தந்தால், பதிலுக்கு அவனே அவர்களுக்காக ரோமத்தைப் பிடுங்கித் தருவதாக அவன் விவரிக்கிறான்.
ஒருசில நாட்களில், ஒட்டகத்தின் உடம்பில் ஒரு ரோமம் கூட இல்லாதுபோயிற்று. அதன் ரோமம் அனைத்தையும் அதன் காவலன் ரொட்டிக்காக விற்றுவிட்டான். அந்த மிருகம், பாலைவனத்தின் வீரநாயகன்கூட இப்போது குளிரை உணர லாயிற்று. ரொட்டிக்கு மாற்றாகக் கொடுப்பதற்கு ஒட்டக ரோமம் இல்லை; இனிமேல் பிச்சை எடுக்கவேண்டியதுதான் என்று எண்ணவைக்கும் நாளும் வந்தது.
அந்த வட்டாரத்தின் குழந்தைகள் தொடர்ந்து அவனுக்கு உணவு எடுத்து வருகிறார்கள். தங்கள் சாப்பாட்டின் மிச்ச சொச்சங்களைக் கொண்டு தருகிறார்கள். காவலன் அவர்களை அணைத்து, நன்றி உணர்வோடு முத்தமிடுகிறான்.
வலிமை நிறைந்த இளைஞர்கள் சிலர் பாலைவன மனிதனுக்கு உதவிபுரியத் தீர்மானிக்கிறார்கள்.
“அது எழுந்து நின்றுவிட்டால் போதும். நேரே பாலை வனத்தைப் பார்த்து நடக்கத் தொடங்கிவிடும்” என்று அவர்கள் எண்ணுகிறார்கள்.
அவர்கள் இரண்டு மரக் கம்புகளை எடுத்து வருகிறார்கள். ஒட்டகத்தின் மடங்கிய கால்களுக்கடியில் சிரமத்தோடு அவற்றை வைக்கிறார்கள். இருபது ஆட்களின் துணையோடு, அவர்கள் அம் மிருகத்தை உயரத் தூக்குகிறார்கள்.
இரைஞ்சுகிற, நீண்டு ஒலிக்கிற, நெடுந்துயர ஓலமிட்டுக் கொண்டு, ஒட்டகம் நிற்கிறது. ஒவ்வொருவருக்கும் ரொம்ப சந்தோஷம். தனது மகிழ்ச்சியை எப்படி வெளியிடுவது என்றே பாலைவன மனிதனுக்குத் தெரியவில்லை. அவன் மென்மையாகப் புன்னகைக்கிறான். இவனையும் அவனையும் கட்டித் தழுவுகிறான். ஆனால், ஒன்றிரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு அந்த ஒட்டகம் முன்னுக்கும் பின்னுக்கும் ஆடி அசைகிறது; முட்டு மண்டி யிடுகிறது; பிறகு உட்கார்ந்துவிடுகிறது. காவலன் சோகத்தில் ஆழ்ந்துபோகிறான்.
“என்ன பிடிவாதம் பிடித்த மிருகம்!” என்று அவர்கள் எல்லோரும் கூறுகிறார்கள்.
பனியின் முதல் விழுகை தரைமீது லேசாகத்தான் படிகிறது. ஆனாலும் அது எங்கள் கருநிற ஆடைகள்மீது படிகிறபோது, வெண்மைச் சிதறல்கள், மனிதக் கரங்கள் ஊசிகொண்டு செய்கிற பின்னல் வேலைகளைவிட முற்றிலும் நுண்மையான வேலைப் பாடுகளை உருவாக்குகின்றன.
நாங்கள் பனியைக் கவனிக்கிறோம். பேருவகை அடைகிறோம். ஆனால் பாலைவன மனிதன் அச்சத்தால் அவதியுறுகிறான்.
இவ் விசித்திரமான வெண்ணிறச் சிதறல்களை ஒட்டகம் பார்க்கிறது. ஒரு பெரிய பனித்தூவல் அதன் கண்ணிமைகள் மீது படியவும், அது தன் கண்களை மூடி, உணர்வுத் தடுமாற்றத் துடன் தலையை ஆட்டுகிறது.
காவலன், தனது போர்வையால் மூடுண்டு, ஒட்டகத்தின் முன்னே மண்டியிட்டு, முதல்முறையாக அழ ஆரம்பிக்கிறான். அருகே நிற்கும் நாங்கள் அவனுக்காகச் சிறிது ரொட்டி கொண்டு வந்திருக்கிறோம். அந்தப் பசித்த மனிதனோ இப்போது உணவில் கவனம் செலுத்தவில்லை.
பனிப்படலங்கள் இருந்தபோதிலும், கண்ணீர் அவன் இமைகளைச் சுட்டது. நீர்த்துளிகள் கண்களிலிருந்து ஆறாகப் பெருகி மூக்கின் இருபுறமாகவும் வழிந்து, அடர்ந்த மீசை தாடியினுள் மறைகின்றன. ஒட்டகம் ஆர்வத்தோடு தனது காவலனை உற்றுநோக்குகிறது: அவனுடைய கண்களின் ஆழத்துள் நோக்குகிறது; அவன் கண்ணீரைக் கவனிக்கிறது. அதே சமயம் காவலனின் ஈரம் படிந்த பார்வை அம் மிருகத்தின் கண்களைச் சந்தித்து, அவற்றின் ஆழத்துள் ஊடுருவிச் செல்கிறது. கண்ணீர் மேலும் மேலும் வழிந்து அவனது இமைகளைச் சுடுகிறது.
படபடக்கும் பனியினால் எங்களுக்கு ஏற்பட்ட சந்தோஷத் தோடு பாலை மனிதனின் துயரமும் இணைந்து கலக்கிறது.
திடீரென்று ஒட்டகம் தன் கழுத்தை முன்னே நீட்டுகிறது; இருவரின் மூச்சுகளும் இணைகின்றன. மன்றாடும் குரலில் அது சில ஒலிகளை எழுப்புகிறது. பெருமூச்சு விடுகிறது. எழத் தொடங்குகிறது.
நாங்கள் மகிழ்ச்சியோடு கத்துகிறோம்.
“ஒட்டகம் எழுந்துவிட்டது! ஒட்டகம் எழுந்துவிட்டது!”
காவலன் தன் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, நாங்கள் அவனுக்காக எடுத்து வந்திருந்த ரொட்டியைச் சேகரிக்கிறான். ஒட்டகத்தின் சேணத்தைப் பற்றிக்கொண்டு, மேலே ஏறுகிறான். புன்னகை பூத்து, சந்தோஷத்தோடு, பாலை நிலத்தை நோக்கிப் பயணப்படுகிறான்.
தெருவின் இருபுறமும் மக்கள் நின்று, முரண்டுபிடித்த ஒட்டகத்தைக் கவனிக்கிறார்கள். அது நடந்தவாறே புலம்பிக் கொண்டு, வெகுவெகு தொலைவில் தன் கண்களைப் பதித்தபடி நடக்கிறபோது ஆடி அசைகிறது.
காவலன் தெரு ஓரங்களில் நின்ற மக்களுக்கு வணக்கம் தெரிவிக்கிறான். அவர்கள் அவனுக்காக வீசிய காசுகளைச் சேகரிக் கிறான். ஒரு பையை ரொட்டியால் நிரப்புகிறான். நகரத்தை விட்டு நீங்கி, மணல் பரப்பை நோக்கி, சூரியனை நோக்கி, நகர்ந்து போகிறான்.
சிவப்பும் மஞ்சளுமான இலைகளைக்கொண்ட இலையுதிர் காலத்துக்குப் பிறகு, கடுமையான மாரிக்காலம் தொடங்கி யிருக்கிற ஒரு நாட்டை விடுத்துச் செல்கிறான் அவன்.
– வாகன் டோடோவென்ட்ஸ் (1834-1938)
– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026