ஐயோ வாசுகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2026
பார்வையிட்டோர்: 59 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1960ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நூல்நிலையத்தில் அதிக நேரமிருந்து படித்தகளைப்புடன் தேநீர் அருந்துவதற்காக விடுதிக்கு வந்து கொண்டிருந்தான் சேகர். விடுதிவாசலில் கால் வைத்ததுமே ஒரு தந்தி அவன் கையில் கொடுக்கப்பட்டது. தந்தியை அவசர அவசரமாகப் பிரித்துப் படித்தவன் உடனேயே மயக்கத்தினால் விழுந்துவிட்டான். நண் பர்களுடைய உதவியால் மீண்டும் சுயநினைவுக்கு வந்தான் தனி மையாக அவனுடைய அறைக்கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தான். மனத்திற்குள் பணக்காரவர்க்கத்தின் அக்கிரமங்களைச் சபித்துக் கொண்டிருந்தான். “இந்த உலகத்தில் ஏழைகளுக்குத் தகுந்த கல்விபெறமுடியாதா? பணம் படைத்தவர்கள் அந்த ஏழை கட்குத் தயாளநெஞ்சுடன் உதவக்கூடதா? அவர்கள் ஏனொரு பிரதியுபகாரத்தைக் கருதி உதவ வேண்டும். அப்படியான உதவி யைப் பெற்றதாற்றான் இந்த உலகில் வாழவேண்டியவள் வாழப் பிறந்தவளுடைய உயிர் போய்விட்டது. ஐயோ வாசுகி என்று பிதற்றிக் கொண்டிருந்த சேகரின் மனத்தில் கடந்தகால நிகழ்ச்சிகள் நிழற்படம் போல் ஓடத்தொடங்கின. 

பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வு வகுப்பு வரையும் சேகரின் தகப்பனார் எவ்வளவோ கஷ்டப்பட்டு அவனைப் படிப்பித்தார். தங்களுடைய மகன் பிறருக்குக் கடமைப்படக்கூடாதென்ற மனப் பான்மையுடையவர்கள் சேகரின் பெற்றோர்கள். எத்தகைய கஷ் டங்கள் வரினும் சேகரினுடைய திறமையான மூளைக்குத் தகுந்த பலனைத் தேடிக் கொடுக்க வேண்டுமென்ற அவாவுடையவர்களா யிருந்தனர். பல்கலைக்கழகப் புகுமுகப் பரீட்சையும் எழுதிவிட் டான் சேகர். பரீட்சை முடிவுவரும் வரை வீட்டிலிருந்தான். திடீரென ஒருநாள் அவனுடைய தந்தை காலமாகி விட்டார். தந்தையினுதவி இனிமேலில்லாத படியால் அவனை வேலை ஏதும் தேடும்படி கூறினாள் தாயார். சேகருக்கோ படிப்பை இடையில் நிறுத்த வேண்டுமென்பது ஏதோ முடியாத காரியமாய்ப் போய் விட்டது. ஆனால் அவனுக்கு உதவி செய்ய ஒருவருமில்லை. உறவி னர்கள் உதவுவதற்கு அவனிடம் பணமில்லை. அத்துடன் அவனின் னும் பரீட்சையும் சித்தியடையவில்லையே. தாயினுடைய விருப் பத்திற்கிணங்க வேலை தேடவாரம்பித்தான். வேலை தேடிக் கொண்டிருக்கும் பொழுதே பரீட்சை முடிவு வந்துவிட்டது. அதில் அவன் சித்தியடைந்து விட்டான். தாய்க்கோ மகனை நினைத்து வேதனை அதிகரித்தது. சேகருக்கோ தொடர்ந்து படிக் கும் ஆவல் உச்சநிலையை அடைந்தது. ஆனால் பணம்?. 

பல்கலைக்கழகத்திற்குள் சேகர் நுழைந்துவிட்டானானால் கட்டா யம் முதற்பிரிவிலேயே கலைமாணிப் பட்டம் பெற்றுவிடுவான். படிப்பதற்கு உதவிதான் வேண்டும். பரீட்சை முடிவு சேகரை அவனுடைய சுற்றத்தார்களிடையே அறிமுகஞ் செய்து வைத்தது. “சேகர் பட்டம் பெற்று வந்தால்.. என்ற எண்ணமே சுற்றத் தார்களுடைய மனத்திலேற்பட்டது. சிலர் அவனுக்கு உதவி செய்ய முன் வந்தனர். ஆனால் அந்த உதவி பிரதியுபகாரத்தை எதிர்பார்க்கும் உதவியாகவே இருந்தது. சிலர் அவன் எப்படியா வது உதவிபெறாமலிருக்க வேண்டுமெனக் கவனித்துக்கொண்டனர். ஆனால் இந்த இருவகையான சுற்றத்தார்களின் அறிமுகம் சேகருக் குக் கடைசியில் ஒரு உதவியையும் அவன் மனமுவந்து பெறாமலாக் கியது. இவ்விருவகைப்பட்டவர்களிலும் சேராதவராகக் காட்டிக் கொண்டார் நமசிவாயம். 

நமசிவாயம் ஒரு பெரிய பணக்காரர். அவருக்கு ஒரேயொரு மகளுண்டு. அவளுக்குச் சேகரை எப்படியாவது மாப்பிள்ளையாக்கி விடவேண்டுமென்று எண்ணினார், ஆனால் அதை வெளியில் கூறி னால் சேகரின் தாய் அடியோடு மறுத்துவிடுவாளென்றதற்காக அதை மனத்துள் மறைத்துக் கொண்டார். ஏதோ தயாள குணத் துடன் உதவ முன்வந்திருப்பதாகக் கூறினார். சேகரின் தாய்க்கோ தன்னுடைய மகன் வேறொருவருடைய பணத்தில் படித்துப் பட்டம் பெறப்போவது விருப்பமில்லை. சேகருக்கோ எப்படியாவது தான் படிக்க வேண்டுமென்ற விருப்பமிருந்தது. கடைசியில் சேக ரின் விருப்பம் நிறைவேறியது. 

சேகர் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். நம- சிவாயம் அவனுக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்துக்கொண் டிருந்தார். 

காதல் என்பது ஏழை பணக்காரனென்று பார்ப்பதில்லை. தூய்மையான அன்புள்ள எவனுடைய மனத்திலும் திடீரெனத் தோன்றிவிடும். அதற்கு மாத்திரம் உண்மையான அறிவிருந்தால் ஏழைகளுடைய மனத்தில் தோன்றி வீணாக அவர்கள் மனத்தைத் தொந்தரவு செய்யாது. ஆனால் அது தான் வெறும் உணர்ச்சியா யிற்றே. ஒருவருடப் பல்கலைப் படிப்புக்குப் பின் சேகர் சேகர் அந்த உணர்ச்சிக்குப் பலியானான். சேகரின் ஏழ்மையை நன்கு அறிந் தாள் ஒரு பெண். அவன் மேல் அவளுக்கு ஆழ்ந்த அனுதாபமேற் பட்டது. கடைசியில் அந்த அனுதாபம் காதலாக மாறியது. காதல் உலகில் பிரவேசித்தாலும் சேகர் தன்னுடைய முக்கிய வேலையை மறந்துவிடவில்லை. வேறொருவரின் பணத்தில் தான் படிப்பதென்பதையும் மறந்துவிடவில்லை. 

விடுதலைக்குப் போகும் போதெல்லாம் அவன் அடிக்கடி நமசி- வாயத்தின் வீட்டிற்குச் செல்வான். அவருடைய மகள் வாசுகி யைத் தனது தங்கையென நினைத்து அவளுடன் அன் போ டு கதைத்து வருவான். தேவையான நேரங்கனில் அவளுக்கு ஆசிரிய னாகவும் மாறினான். வாசுகியும் அவனைத் தன் சகோதரனென நினைத்தாள். நமசிவாயத்தின் மனதிலிருப்பதை இருவரும் அறியா தவர்கள். ஒரு நாள் சேகர் தன்னுடைய பல்கலைக்கழகக் காதலைக் கூட வாசுகிக்குக் கூறிவிட்டான். வாசுகி அதைக் கேட்டு மகிழ்ச்சி யுற்றாள். தந்தையில்லாத சமயங்கள் பார்த்து சேகரின் காதலைக் கூறிக் கேலி செய்வாள். அவனுடைய காதலி எப்படி இருப்பா ளென்று குறும்பாகக் கூறுவாள். 

முதலாவது வருட இறுதித் தவணை விடுதலைக்குப்பின் பல்கலைக் கழகம் சென்று விட்டான் சேகர். தனது எண்ணத்தைச் சேகருக்கு வெளியிட வேண்டுமெனத் தருணம் பார்த்திருந்தார் நமசிவாயம். ஒரு வருடம் தன் பணத்தில் படித்தவன் மற்ற வருடங்களுக்கும் தன்னுடைய பணத்தையே நாடியிருக்க வேண்டுமென்ற துணிவிலி ருந்தார் அவர். தனது எண்ணத்தை வாசுகியிடம் கூறாமலேயே சேகருக்குக் கடிதமெழுதினார். தங்கையாக நினைத்துப் பழகிய வாசுகியைத் தான் மணம் புரிய வேண்டும்; அதற்காகத் தான் நமசிவாயம் தனக்குப் பணங் கொடுக்க முன்வந்தாரென்று கேள் விப்பட்ட சேகருக்குத் தலையில் சம்மட்டியாலடித்தது போன்றிருந் தது. அத்துடன் தனது பல்கலைக்கழகக் காதலியின் களங்க மற்ற அன்பை நினைந்து ஏங்கினான். உடனே விடயத்தை வாசுகிக்கு எழு தினான். வாசுகி இதைக் கேள்வியுற்றவுடன் தந்தை மேல் கோப முற்றாள். அத்துடன் சேகருடைய காதலைப்பற்றியுங் கூறினாள். சேகர் காதல் கொண்டிருக்கின்றானென வாசுகி கூறக்கேட்ட நமசி வாயம் சீறினார். “என்னுடைய பணத்தில் படிக்கும் இவனுக்குக் காதல் வேறா” என்று ஏளனமாகக் கூறினார். ‘அப்பா, நான் சேகரை எனது சகோதரனாகக் கருதுகின்றேன். அவரை என்னால் மணமுடிக்க முடியாது. படித்துப் பட்டம் பெற்று வரும் சேகருக்குப் படிக்காத, அழகற்ற நான் மனைவியாவதற்கு அருகதையற்றவள். பணமிருந்தால் அவரை விலைக்கு வாங்கவா நினைத்துவிட்டீர்கள். அவருடைய வாழ்க்கையைப் பாழாக்க நான் ஒரு போதும் இணங்க மாட்டேன் என்று வாசுகி கூறிய சொற்கள் யாவும் நெஞ்சில் அம்புகள் பாய்ந்தன போன்றிருந்தன. “எப்படியாவது சேகரைத் தான் நீ மணம்புரிய வேண்டும். என்னுடைய எண்ணத்தை மாற்ற முடியாது”. என்று திடமாகக் கூறிவிட்டார் நமசிவாயம். 

சேகர் தன்னைப் பிழையாக எண்ணி விடப் போகின்றானே யென்ற எண்ணத்துடன் அவனுக்குத் தனது எண்ணத்தைத் திட மாக அறிவித்துவிட்டாள் வாசுகி. ‘அண்ணன்’ என்னும் சகோதர பாசம் அந்தக் கடிதம் முழுக்க ஊடுருவிச் செல்லும்படி எழுதியிருந் தாள் தனது தகப்பன் பிடிவாதமாயிருந்தால் விளைவு விபரீதமா யிருக்குமென்று வாசுகி எழுதியிருந்ததைப் பார்த்த சேகர் பதை பதைத்துப் போய்விட்டான் 

“எனக்காகத்தான் வாசுகி இப்படித் தகப்பனையும் எதிர்க்கின் றாள். நான் விரும்பினால் அவள் என்னை மணந்துகொள்வாள். எனக் காக அந்த இளம் பெண் இப்படித்துக்கப்படும் போது நான் ஒரு கொடியவனென்று என்னுடைய காதலியிடமிருந்து பெயரெடுத் தாலும்பரவாயில்லை” என்று மனத்திற்குள் திட்டமிட்டான் சேகர் அதன்படி தான் வாசுகியை மணம்முடிக்க விரும்புவதாக நமசிவா யத்திற்குக் கடிதம் எழுதினான். நமசிவாயத்திற்குச் சேகர் எழுதிய கடிதம் வாசுகி கையிலகப்பட்டது. தன்னால் சேகர் தன்னுடைய காதலைத் துறக்கப் போகின்றானென்பதையறிந்த வாசுகி துயரடைந் தாள். தான் இவ்வுலகிலிருப்பது சேகருக்கு இடையூறையே ஏற் படுத்தும் என்பதை உணர்ந்தாள். அத்துடன் தகப்பனுடைய பணமில்லாவிட்டால் சேகர் தொடர்ந்து படிக்க முடியாதென்பதை யும் உணர்ந்து ஒரு முடிவுக்கு வந்தாள். 

அடுத்த நாள் நமசிவாயம் மகளைப் பிரிந்து கதறினார். சேகரின் தாயார் உடனே சேகருக்குத் தந்தி கொடுத்தாள் ……. 

வாசுகி அன்றொருநாள் கடிதத்தில் ‘விளைவு விபரீதமாயிருக் கும்’ என்று குறிப்பிட்டதன் கருத்தைக் கட்டிலில் படுத்திருந்த படியே யோசித்தான். 


நமசிவாயத்திற்கு சேகரில் அளவில்லாத கோபமேற்பட்டது. “இவனால் தானே என்னுடைய மகள் தற்கொலைபுரிந்து கொண் டாள். இவன் இன்னும் என்னுடைய பணத்தில் படிக்கக்கூடாது’ ‘என்று எண்ணிய நமசிவாயம் சேகருக்குக் கொடுப்பதென வாக்கு றுதியளித்திருந்த பணத்தைக் கொடுக்க மறுத்து விட்டார். 

வேறுவழியில்லாத சேகர் பல்கலைக்கழகத்தைவிட்டு நீங்குவதென முடிவு செய்தான். பணமில்லாத காரணத்தால் தான் பல்கலைக் கழகத்தை விட்டு நீங்கப் போவதாகச் சேகர் துணை வேந்தரிடம் அனுமதி கோரினான். ஆனால் சேகரின் படிப்புக்கெனப் பல்கலைக்கழ கத்தின் பெயரில் வங்கியில் ஐயாயிரம் ரூபாய் கட்டப்பட்டிருக் கின்றதெனத் துணைவேந்தரிடமிருந்து தெரிந்து கொண்ட சேகர் ஆச்சரியத்தில் மூழ்கினான். உடனே வாசுகியினுடைய தூய அன்பு அவனுடைய கண் நிறைய நீரைக் கொண்டு வந்தது, “வாசுகியைப் போன்ற ஒரு அறிவுள்ள தங்கையை நான் இனிமேல் எப்படிக் காண்பேன்” என்று கதறினான். 

– இளங்கதிர், 1960-1961, பதிமூன்றாவது ஆண்டு மலர், தமிழ்ச் சங்கம், இலங்கை பல்கலைக்கழகம், பேராதனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *