இன்றையும் அழித்த நாளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 87 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மகள் அகாலத் தாய்மை எய்தி நிற்பதை மனைவி கூறக் கேட்ட மரியாம்பிள்ளை அதிர்ச்சியில் மயக்கம் போட்டு நாற்காலிக்குள் விழுந்தே விட்டார். அந்த மயக்கத்தைச் சாதாரண அதிர்ச்சியாக எண்ணி எல்லாம் இவளால் தானே என்ற ஆவேசத்தோடு அருகிலிருக்கும் சமயற்கட்டுக் கோடினாள் மனைவி ஞானாம்பாள்.

அங்கே உப்பிய வயிற்றுடன் விம்மி விம்மி அழுது நின்றாள் மார்க்கிரெட்! 

பத்திரகாளியாகிக் கண்களில் தீப்பொறி பறக்கவந்து நின்ற ஞானாம்பாள் அவள் குலைந்த கூந்தலைப்பிடித்து உலுக்கி ஆட்டியபடி “அடியே! மானங்கெட்ட நாயே! குடிகேடீ உண்மையைச் சொல்லிவிடு! யார் அந்தக் கொடியவன்? எவன்டி அந்தப் பாதகன்!… சொல்லேண் சண்டாளி” என்று முடுக்கினாள்!

வாட்டும் மனச்சான்றிற்கும், வதைக்கும் அன்னைக்கும் வகைசொல்ல முடியாமல் ”சரியாகச் சொல்ல முடியாதம்மா” என்று அரற்றினாள் அவள்.

“என்னடி சொன்னாய்! எவன் என்று சரியாகச் சொல்ல முடியாதா? அப்படியானால் ஐயோ… நீ பலரோடு ஆடி…ஆ…?” அவளும் மயங்கி விழுந்தாள்.

சுவருடன் சாய்ந்து சோர்ந்து நின்ற மார்கிரெட் தன் மறைக்க முடியாத களங்கத்தை, மன்னிக்க முடியாத குற்றங்களை எண்ணிக் கலங்கினாள்.

”இது பெண்பிள்ளை! நாளை கணவனாக வருபவனும் எப்படியான ஆளாக இருப்பானோ! எங்களோடு இருக்கும் மட்டுமாவது இவள் சுதந்திரமாக சந்தோஷமாக இருக்க வேண்டும்!” என்ற மரியாம்பிள்ளை மனைவி தடுத்ததையும் கேளாமல் தம் மகளை நம்பி, விரும்பியபடி உடுக்கவிட்டு, நினைத்த இடமெல்லாம் தனியே திரிய அனுமதித்து கண்டவர்களோடும் பழகவிட்டு வந்தார்.

பஸ்ஸில் நசிந்தும், திருவிழா நெரிசல்களில் இடிபட்டும் சினிமாக் காதற் காட்சிகளை தியேட்டருள் தானும் நடத்தியும், அடக்கத்தை முற்றாகத் துறந்துவிட்ட மார்கிரெட் பல இளைஞர்களுக்கு மலிந்த சரக்காகிவிட்டாள்! அதன் பலன்?

இன்று எவனுமே அவளை ஏற்க முன்வரமுடியாத நிலையில் குடும்ப மானமே கப்பலேறப் போகிறது.

ஆம்! தந்தைக்கிருந்த அவளின் நாளையைப் பற்றிய பயம் அவளது இன்றையும் சேர்த்துப் பாழடித்து விட்டது.

நீண்டநேரம் யோசித்து நின்றவளுக்கு தங்கள் குடும்பமானம் காக்க கவலை போக்க ஒரே ஒரு வழிதான் தென்பட்டது. மயக்கமாகக் கிடக்கும் பெற்றார் விழிக்கமுன் அவள் விழித்துக் கொண்டதன் பலன் – மூன்று பிணங்கள் வெந்து கிளம்பும் நெடியோடு அதோ அந்த மாளிகையை விழுங்கிய தீச்சுவாலைகள் வானோங்கிக் காற்றிலாடி அசைகின்றன.

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *