ஆல்ப் மலை வயலட் பூ

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 109 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காகவபெர்தா மலைச் சிகரம் வருஷம் முழுவதும் மேகங்களால் மூடுண்டிருக்கிறது. கோட்டையின் கரடுமுரடான சுவர்களை வெண்மேகங்கள் மறைக்கின்றன. அதன் உயரமான கரிய கோபுரங்கள் அங்குமிங்கும் தலைதூக்கி நிற்கின்றன. தூரத்தி லிருந்து பார்க்கையில், மதில் புறங்களைக் காவல்காரர்கள் காத்து நிற்பது போலவும், கோட்டையின் பெரிய இரும்புக் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதாகவும், மலைமீது ஏறிவரும் ஒரு அந்நியனை எந்த நேரத்திலும் ஒரு காவலன் தடுத்து அறைகூவக்கூடும் என்றும் தோன்றுகிறது. 

ஆனால், காற்று மேகங்களைச் சிதறடித்ததும், வெண்சிதறல்கள் கரைந்துவிட்டதும், முதலாவதாகக் கோபுரத்தின் சரிந்த உச்சி தென்படுகிறது. பின்னர், சுவர்கள் மண்ணில் அரைவாசி புதைந்து காணப்படுகின்றன. அங்கே இரும்புக் கதவுகளும் இல்லை, காவலாட்களும் இல்லை. 

காகவபெர்தாவின் இடிபாடுகளில் நிசப்தம் ஆட்சிபுரிகிறது. கொந்தளிக்கும் பாஸட் ஆறு கீழே உள்ள பள்ளத்தாக்கினூடே, குறுகலான பாறைகளின் நீலப் படிகங்களைப் பளபளப்பாக்கிய வாறு பாய்ந்து ஓடும் ஓசைதான் அங்குக் கேட்கிற ஒரே சப்தம். சுழலும் தண்ணீருக்கடியில் ஆயிரம் ஓநாய்கள் தங்களைப் பிணைத் திருக்கும் இரும்புச் சங்கிலிகளைக் கடித்தவாறு ஊளையிடுவது போல் தோன்றுகிறது. 

ஒரு ராஜாளியும் ஒரு கழுகும் சுவர்களில் கூடுகள் கட்டி யிருந்தன. காலடியின் சரசரப்புக் கேட்டதுமே அவை கடூரமாகக் கூச்சலிட்டபடி மேலே பறந்து, இடிபாடுகளுக்கு உயரே வட்ட மிடத் தொடங்குகின்றன. மலைப்பருந்து ஒன்றும் அவற்றோடு சேர்கிறது. அதன் மூக்கு வளைந்த குறுவாளாகவும், அதன் கால் விரல்கள் கூரிய ஈட்டிகளாகவும், அதன் சிறகுகள் இரும்புக் கவசமாகவும் தோன்றுகின்றன. 

காகவபெர்தாவின் அத்தனை உயரத்தில் பூக்கிற ஒரே பூ வயலட்தான். அது ரத்தச் சிவப்பு நிறத்தில், மலைப்புறாவின் பாதங்களைப்போல் செக்கச் சிவந்த தண்டுடன் விளங்குகிறது. அம் மலர் இடிபாடுகளுக்கிடையே பூக்கிறது. இருண்ட கோட்டைச் சுவர்கள் மீது மேகங்கள் தாழ்ந்து படிந்திருக்கும் போது, புஷ்பம் தன் தலையை வெயிலால் உலர்ந்த பாறை ஒன்றின்மீது வைத்துக்கொள்வதற்கு வசதியாக அதன் தண்டு வளைந்து தணிகிறது. மகரந்தத்தில் குளிக்கிற பிரகாசமான வண்டு ஒன்று அந்தப் பூவை ஒரு ஊஞ்சலாகவும், உலகத்தை ஒரு செந்நிறப் புஷ்பமாகவும் காண்கிறது. 

ரொம்பவும் கீழே, பள்ளத்தாக்கில் பாசட் நதியின் எதிர்க் கரையில், அநேக குடிசைகள் இருக்கின்றன. காலை வேளையில், கூரைகளில் உள்ள வட்டத் திறப்புகளின் வழியே புகைத் தூண்கள் மேலெழுகின்றன. அவை நீல நாடாக்களாக உருமாறி மேகங்க ளிடையே மறைகின்றன. நண்பகலின் உஷ்ணத்தில், கிராமத்தில் ஒரு சேவல் கூவக்கூடும். ஒரு கிழக் குடியானவன் தன் வீட்டின் நிழலில் கொட்டாவி விட்டபடி, தனது பழைய நினைவுகளில் ஆழ்ந்து, மணலில் ஒரு குச்சியால் உருவங்களைத் தீட்டுகிறான். 

கீழே கிராமத்திலும் மேலே கோட்டையிலும் காலம் மெதுவாக நகர்கிறது. ஒரு மரத்தின் மாறுகின்ற இலைகளைப் போல் வருஷங்கள் அமைகின்றன. நினைவுகள் குழம்புகின்றன. இப்போது, எப்போதும் போலவே ஆறு வேகமாக ஓடுகிறது. மேலே அதே பாறைகளும் அதே மலைப்பருந்தும் இருக்கின்றன. 

பாஸட் ஆற்றங்கரையில் எத்தனை தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையைக் கழித்திருக்கின்றன! எத்தனை ஜனங்கள் கிழிந்து கந்தலான தங்கள் ரோமப் படுக்கைகளை இங்கே விரித்திருக் கிறார்கள்} தங்கள் கூரைகளை நாணற்புல்லினால் மூடியிருக் கிறார்கள் ! வசந்த காலத்தில், காகவபெர்தாவின் சரிவுகளில் வயலட் மலர்கள் பூத்துக் குலுங்கும்போது, எத்தனை பேர் தங்கள் வெள்ளாடுகளையும் செம்மறிகளையும் மலைவெளிப் புல்நிலங்களுக்கு ஓட்டிப்போயிருக்கிறார்கள்; பின்னர், தங்கள் சேணப் பைகளில் பாலாடைக்கட்டிகளை நிரப்பியிருக்கிறார்கள்; பிறகு, மாரிக்காலத்தில் தினைமாவினால் செய்த ரொட்டியோடு சேர்த்து அதைத் தின்றிருக்கிறார்கள்! 


உஷ்ணம் மிகுந்த ஒரு மத்தியான நேரத்தில், மூன்று பேர் குதிரைமீதமர்ந்து காகவபெர்தாவின் கரடுமுரடான சரிவுகள் மேலே போனார்கள். அவர்களுடைய உடைகள், மற்றும் அவர் களில் இருவர் சேணத்தில் அமர்ந்திருந்த விதம் இவற்றிலிருந்து, அவர்கள் நகரவாசிகள் என்றும், கோட்டையையோ மலைப் பாறைகளையோ இதற்கு முன்பு கண்டறியாதவர்கள் என்றும் கூறிவிடலாம். 

மூன்றாவது ஆள் அவர்களுடைய வழிகாட்டி. முதல் இரண்டு பேரும் தங்கள் குதிரைகளின் பிடரி மயிரைப் பற்றிக்கொண்டு, பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரேயடியாகக் குனிந்தபடி சவாரி செய்தார்கள். மூன்றாவது நபரோ சேணத்தில் ஆடி அசைந்த வேளையில் பாட்டு ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தான். அந்தப் பாடல் தூரத்துக் கிராமம்போல் துயரம் தேங்கியதாகத்தான் இருந்தது. 

கோட்டையை மூடியிருந்த மேகங்கள் சில நேரங்களில் திரை விலகுவதுபோல் விலகின; சில சமயம் சுவர்களை வெளிக் காட்டின. கோட்டையின் சிகரங்களை அவை ஒருபோதும் மூடி மறைத்ததில்லை. முதல் நபர் சுவர்களிலிருந்து தனது கண்களை அகற்ற முடியாதவனாய்க் காணப்பட்டான். அவன் தன் மனக்கண் களில் கோட்டைப்பற்றிய கதைகளை – இளவரசர்கள் இங்கே ஆட்சிபுரிந்தபோது, போர் வீரர்கள் அமர்ந்த குதிரைகள் இரும்புக் கதவுக்கு வெளியே உள்ள பாதையில் நடந்து சென்ற போது, வீரர்கள் ஈட்டிகளை சுழற்றிக்கொண்டு முற்றுகைகளி லிருந்து திரும்பிய காலத்தில் தோல் காகிதங்களில் எழுதிவைத்த வரலாறுகள் பாதுகாத்த கதைகளை – காட்சிகளாகக் கண்டான். கண்ணாடிகள் வழியாகக் கூர்ந்து நோக்கிய கண்கள் ஒரு பண்டிதனின் கண்கள் ஆகும். போர்வீரர்களை, அவர்களது பிரதாபங்களைப் புகழ்ந்து பாடிய வரலாற்றுக்காரர்களை, அவர்க ளுடைய கூர்மையான எழுதுகோல் தோல் காகிதத்தின்மீது வார்த்தைகள் கிறுக்குவதை அவன் நிஜமாகவே காணமுடிந்தது. அந்தப் புராதனமான குதிரைகளின் கால்குளம்பு ஓசையை அவன் கேட்க முடிந்தது. முன்னாளில் கோட்டையில் வசித்த வர்கள் மலைவெள்ளாடுகள் மாதிரி வெகு சுலபமாக ஏறிச் சென் பாறைகள்மேலே சவாரி போவது அவனுக்கு எவ்வளவு சிரமமாக இருந்தது! 

முடிவாக அவர்கள் கிராமத்தை அடைந்தார்கள். முதல் நபர் தன் வழியில் தொடர்ந்து சென்றான். அவன் பழைய பாதையைத் தேடிக்கொண்டிருந்தான். அவிந்த நெருப்பு மூட்டங் களின் சாம்பல் குவியலில் விளையாடிய குழந்தைகளையோ, வியப்புற்ற விழிகளால் அவனைத் தொடர்ந்து பார்த்த வெள்ளாடு களையோ அவன் கவனிக்கவில்லை. 

இரண்டாவது குதிரைக்காரன், ரோமத் தொப்பி அணிந் தவன், காகவபெர்தாவின் உச்சியில் கடந்த காலத்தைத் தேடிக் கொண்டிருக்கவில்லை. ஒரு கூர்மையான பென்சிலும், தடித்த சித்திரக் கையேடு ஒன்றும் அவனிடம் இருந்தன. ஒரு முகம், அல்லது பாசி படர்ந்த பாறையோடு வசீகரமாகத் தோன்றிய ஒரு மூலை அவன் பார்வையில் பட்ட உடனேயே அவன் வரையத் தொடங்குவான். 

ஒருவன் புதைபொருள் ஆய்வாளன் மற்றவன் கலைஞன். அவர்கள் முதல் குடிசையை அணுகியதும், அநேக நாய்கள் அவர்கள் மீது பாய்ந்தன. குரைக்கும் சத்தத்தைக் கேட்டதும், சில ஆட்கள் தோன்றி வாசற்படிகளில் நின்று அவர்களை உற்று நோக்கினார்கள். 

சாம்பல் நடுவில் விளையாடிக்கொண்டிருந்த பிள்ளைகள், குதிரைகளைத் துரத்தியபடி குரைத்தவாறே போகும் நாய்களைக் கவனித்தார்கள். வழிகாட்டி தன் சாட்டையினால் அவற்றை அடித்து விரட்ட வீண்முயற்சி செய்தான். நாய்கள் கோட்டைச் சுவர்கள் வரை அவர்கள் பின்னே சென்றன. அதன் பிறகுதான் அவை திரும்பிக் கீழ்நோக்கி ஓடலாயின. 

கோட்டையின் கற்கள் உயிர் பெற்றதுபோல் தோன்றின. புதைபொருள் ஆய்வாளனோடு அவை பேசின. அவன் ஒவ்வொரு கல்லையும் அணுகினான்; எதையோ தேடிக் கீழே குனிந்தான்; பிறகு அதை அளந்தான்; தனது குறிப்பேட்டில் குறித்துக் கொண்டான். தன் கால்நுனியால் புழுதியைக் கிளறி வேறொரு வித வடிவம் பெற்ற கல்லைக் கண்டான். முடிவில், அவன் சுவர் மீது ஏறினான்; கோபுரத்தில் இருந்த ஒரு நுழைவாயில் வழியே தலையை வெளியே நீட்டினான். சுவரில் பொறிக்கப்பட்டிருந்த எழுத்தைப் பார்த்ததும் உரக்கக் கூவினான். 

வழிகாட்டி, குதிரையிலிருந்து இறங்கிச் சுவர் ஓரத்தில் புகை பிடித்துக்கொண்டிருந்தவன், சத்தத்தைக் கேட்டதும் குதித் தெழுந்தான். கண்ணாடிக்காரனைப் பாம்பு கடித்துவிட்டது என்றே அவன் நினைத்தான். 

கலைஞன் சுவரின் இடிந்த பகுதிகளையும் ஊசிக் கோபுரத்தை யும் படமாக வரைந்துகொண்டிருந்தான். கோட்டையின் நுழைவாயிலை அவன் வரையும்போது, அவனது பென்சில் நடுவில் நின்றது. ஏனெனில், அவன் காலடி ஓசையால் கலவரமடைந்த கழுகு அதன் கூட்டைவிட்டு வெளியே பறந்தது. இப்போது அது கோபுரத்தின் மேலே வட்டமிட்டது. இதர பறவைகளும் பெரிதாகச் சிறகுகளை அடித்துக்கொண்டு பறக்கலாயின. 

பயந்துவிட்ட குதிரைகள் ஒன்றோடு ஒன்று நெருங்கி நின்றன. பாகுர் இளவரசன் புதைக்கப்பட்டிருந்த சிற்றறையைத் தான் கண்டுபிடித்துவிட்டதாக ஆய்வாளன் கீழே பார்த்துக் கத்திய போது, அவன் என்ன சொல்கிறான் என்று கலைஞனுக்குப் புரிய வில்லை. கழுகுகள் பறப்பதை, அவை தங்கள் இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்வதையே அவன் கவனித்துக்கொண் டிருந்தான். அவற்றின் வளைவான, ரத்தச் செந்நிற அலகுகளால் அவன் வசீகரிக்கப்பட்டான். அவை வட்டமிடுவதில் ஒருவகை காம்பீர்யம் இருந்தது. 

தன் தலையிலிருந்த தொப்பி நழுவி, ஒரு பாறைமீது விழுந்ததை அவன் கவனிக்கவில்லை. 

ஒரு குடியானவன் ஒரு தடிக்கம்பை ஊன்றிக்கொண்டே பாறைச் சரிவுகளில் ஏறிவந்தான். அவன் இடுப்பு வாரில் ஒரு அரிவாள் சொருகப்பட்டிருந்தது. தலையைச் சுற்றி ஒரு அழுக்குக் கைக்குட்டையைக் கட்டியிருந்தான். அவன் வழிகாட்டியின் அருகில் சென்றான். 

கண்ணாடி அணிந்தவன் ஒரு பாறையை அகற்றுவதை அவன் பார்த்திருந்தான். அந்த அந்நியர்கள் யார் என்றும், இடிபாடு களுக்கிடையே அவர்கள் என்ன தேடுகிறார்கள் என்றும் அவன் வழிகாட்டியைக் கேட்டான். வழிகாட்டிக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பிறகு, ஒரு ஜாடி நிறையத் தங்கக் காசுகள் காகவபெர்தா சிகரத்தின் ஒரு இடத்தில் புதைத்து வைக்கப்பட்டிருப்பதாக ஒரு புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அவன் கூறினான். 

குடியானவன் சிந்தனையில் ஆழ்ந்தான். அப்புறம் அவன் தன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு, பள்ளத்தாக்கை நோக்கிக் கீழே இறங்கினான். அவனது வயலில் விளைந்த தினைக்கதிர்களை அவன் அறுத்தாகவேண்டும். நடந்தபோது அவன் தனக்குத் தானே பேசிக்கொண்டான். மறைந்திருந்த புதையலை அவன் கண்டுபிடித்திருந்தால் அது எத்தகைய அதிர்ஷ்டம் ஆகும். அந்தக் கண்ணாடிக்காரன் நகர்த்திய அதே பாறைமீது அவன் எத்தனை தடவை உட்கார்ந்திருந்தான். புதையல் விஷயம் முன்பே அவனுக்குத் தெரிந்திருந்தால், அவனுடைய பைகளில் தங்கக் காசுகள் குலுங்குமே. ஆ, எத்தனை பசுக்களை அவன் வாங்க முடிந்திருக்கும்… இவ்வாறு எண்ணியபடி அவன் தன் வயலை அடைந்தான். தனது நீண்ட சட்டையைக் கழற்றிவிட்டு, பயனற்ற நினைப்புகளையும் ஒதுக்கிவிட்டு, அவன் கை நிறைய தினைக்கதிர்களைப் பற்றிக்கொண்டு அறுக்க ஆரம்பித்தான். 

இடிபாடுகளுக்கிடையே வயலட் பூ ஒன்று பூத்திருந்தது. ஆனால் புதைபொருள் ஆய்வாளன் அந்தக் கரும்சிவப்பு நிறப் பூவையோ புல்லையோ கவனிக்கவில்லை. அவை எல்லாம் அவன் காலணிகளின் கீழே மிதிபட்டு நசுங்கின. 

அவனுக்கு உலகம் முழுவதும் ஒரு மியூசியம் (பொருட்காட்சி சாலை) ஆகவே தோன்றியது. அதில் உயிருள்ள பொருள் ஒன்று கூடக் கிடையாது. பாறைகளை மூடிக்கிடந்த ஐவிக் கொடிகளை அவன் பிய்த்தெறிந்தான். வெடிப்பினூடே பூத்திருந்த வயலட் செடியைத் தன் கைக்கம்பின் நுனியினால் பிடுங்கி வீசினான். கற்கள் மீது ஆசையோடு கையால் தடவினான். அவற்றில் பொறிக்கப் பட்டிருந்த எழுத்துகளில் அடைந்துகிடந்த புழுதியைச் சுரண்டி அகற்றினான். ஆய்வாளன் அக்கறை காட்டிய அனைத்தையும் வரைந்து முடிந்ததும், கலைஞன், இடிபாடுகளை, கரடுமுரடான பாறைகளுக்கிடையே இருந்த கழுகுக்கூட்டை, சுவரடியில் பூத்திருந்த வயலட்டை எல்லாம் வரையலானான். 


பிற்பகலில் அவர்கள் கோட்டையைவிட்டுப் புறப் பட்டார்கள். கீழ்நோக்கி இறங்குவதற்கு முன்பு ஆராய்ச்சியாளன் இடிபாடுகளை மீண்டும் ஒரு தடவை சுற்றிவந்து, தனது கையேட்டில் குறிப்புகள் எழுதிக்கொண்டான். பிறகு மற்றவர் களோடு சேர்ந்துகொள்வதற்காக அவன் வேகமாக நடந்தான். 

இம்முறை வழிகாட்டி முன்னே சென்றான். ஆய்வாளன் பாகுர் இளவரசனையும் வரலாறுகள் நிறைந்த தோல் காகிதச் சுருள்களையும் பற்றி எண்ணிக்கொண்டிருந்தான். கலைஞன் பாஸட் ஆற்றின் கொந்தளிக்கும் நீரின் ஓசையைக் கேட்டவாறே வயலட் பூவை நினைவுகூர்ந்தான். வழிகாட்டியோ, வெள்ளாட் டின் பாலாடைக்கட்டியும் தயிரும் தோய்ந்த சூடான தோசையை எண்ணிக் கனவுகண்டான். 

முதல் குடிசையில் அவன் குதிரைகளை நிறுத்தினான். அவற்றை மேயும்படி விட்டுவிட்டு, அவன் குறுகிய வாசலினூடே புகுந்தான். பசியோடிருந்த குதிரைகள் புதிய புற்களை ஆசையோடு தின்னத் தொடங்கின. 

குடிசைக்குள், வாயிலின் பக்கத்திலிருந்த அடுப்பருகே ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். சூடான தீக் கங்குகளில் அவன் காளான்களை வறுத்துக்கொண்டிருந்தான். அந்நியன் வருகை யால் அவன் திடுக்கிட்டான். காளான்களைக் கருகப்போட்டுவிட்டு ஓடுவதா? இல்லை, அவற்றை அனலிலிருந்து வெளியே எடுப்பதா? என்று அவனுக்குப் புரியவில்லை. அவன் அப்பா வரும் காலடி ஓசை கேட்டதும் அவன் துணிவு கொண்டான். வறுத்த காளான் ஒன்றை வெளியே தள்ளினான். அதை அடுப்புக் கல் ஒன்றின்மீது ஆறவைத்தான். 

அவன் தாய் உள்ளே வந்தாள். தலைக்குட்டையைக் கண் களுக்கும் கீழே தொங்கும்படி இழுத்துவிட்டாள். மூலைக்குப் போனாள். அங்கிருந்த படுக்கைகளின் குவியலிலிருந்து இரண்டு திண்டுகளை வெளியே எடுத்து, விருந்தாளிகள் அமருவதற்காகப் போட்டாள். 

ஆய்வாளனின் பெரிய பைக்குள்ளிருந்து உணவுப் பொருள் டப்பா ஒன்றை வழிகாட்டி எடுத்தான். 

“என் சகோதரியே, நாங்கள் பசியோடு இருக்கிறோம். உன்னிடம் தயிர் இருந்தால் எங்களுக்குக் கொஞ்சம் கொடுக்க மாட்டாயா? தேநீரும் தயாரித்துத் தரமாட்டாயா? எங்களிடம் சர்க்கரை இருக்கிறது” என்று அவன் சொன்னான். 

அம் மங்கை அடுப்பருகே சென்றாள். உள்ளே கிடந்த காளான்களை அகற்றிவிட்டு, அனல்மீது குனிந்து, கங்குகளை ஊதினாள். அவள் தலையிலிருந்து குட்டை நழுவி விழுந்தது. அவளுடைய வெள்ளை நெற்றியும், கன்னங்கருத்த கூந்தலும், கரிய கண்களும் கலைஞன் பார்வையில் பட்டன. புகையும் அடுப் பையும், கங்குகள் மீது குனிந்திருந்த பெண்ணையும் விட்டுத் தன் கண்களை அவனால் அகற்ற இயலவில்லை. இந்த முகத்தை முன்பு அவன் எங்கே கண்டிருக்கிறான்? இதே பளிங்கு நெற்றி, இதே கரும் வயலட் கண்கள். அந்தப் பெண் ஒரு முக்காலியை எடுத்து நெருப்பின்மேல் வைப்பதற்காக எழுந்தபோது, அவள் கண் களும், அவளுடைய புருவங்களில் படிந்திருந்த வெண்சாம்பல் தூசியும், தலைமுடியும் அவனிடமிருந்து மிகச் சிறிதே விலகி யிருந்தன. 

எத்தனையோ வருஷங்கள் ஓடியிருந்தன! ஏதேனும் இரண்டு முகங்கள் ஒரே மாதிரி இருக்க முடியுமா? அவற்றின் வாய் அமைப்புகூட ஒரே மாதிரி இருந்தது. 

இந்தப் பெண்ணின் முகம் வெயிலால் கறுத்திருந்தது. ஆனாலும் இவள் கண்கள் அந்த இன்னொரு பெண்ணின் கண்களை ஒத்திருந்தன. இரண்டுபேருக்கும் ஒரே மாதிரி மெலிந்த இடை யும் கொடி உடலும்தான். விரைவாகவும் அமைதியாகவும் நகர்ந்தபடி அவள் அவர்களுக்குத் தேநீர் தயாரித்தாள். அவள் குனிந்து எழுந்த ஒவ்வொரு முறையும், அல்லது வைக்கோல் பாய்கள் மீது அவள் நடந்து போகையில், அவளுடைய கைகளில் கிடந்த வெள்ளிக் காப்புகள் சிறு மணிகள்போல் மெல்லொலி எழுப்பின; அவளது நீண்ட ஆடை மெதுவாகச் சரசரத்தது. 

இன்னொரு பெண்ணும் சரசரக்கும் ஆடைகளையே அணிந் திருந்தாள். ஆனால், அவள் சாம்பல் நிற மேல்சட்டையும், கரிய வெல்வட் தொப்பியும் அணிந்திருந்தாள். தொப்பியில் ஆரஞ்சு நிற ஊசியும் காணப்பட்டது. 

அந்தப் பெண் இப்போது வெகு தொலைவில் இருந்தாள். ஒருவேளை பாஸட் நதி, வேறொரு ஆற்றுடன் கலந்து ஓடி, முன்னொரு சமயம் அந்தப் பெண்ணின் பக்கத்தில் கடற்கரை மணலில் அமர்ந்திருந்தானே, அதே கரையை ஒட்டிய கடலில் சேர்ந்துவிடுவது சாத்தியமாகலாம். 

 வழிகாட்டி இரண்டாவது உணவு டப்பாவைத் திறந்தான். ஆய்வாளன் அங்கிருந்த துணியையும், அதன்மேல் வைக்கப் பட்டிருந்த பித்தளைப் பாத்திரங்களையும் பார்த்துக்கொண்டே யிருந்தான். பையன் தனது காளான்களைத் தின்றான். பிறகு, பளபளப்பான டப்பாவை ஆச்சரியமாகப் பார்த்தான். அந்நியர்கள் அதைக் காலி பண்ணட்டும் என்று காத்திருந்தான். அவன் பார்வையைக் கவனித்த வழிகாட்டி அதை அவனிடம் கொடுத்துவிட்டான். சிறுவன் அதைக் குலுக்கி ஆட்டலானான். வெளியே படுத்துக்கிடந்த ஒரு நாய், எஞ்சியிருந்து கீழே விழுந்த இறைச்சியை விழுங்கியது; துண்டுச் சிதறல்களை நக்கியது. உடனே அந்தப் பையன் பளபளக்கும் வெண்ணிற டப்பாவைத் தன் நண்பர்களிடம் காட்டுவதற்காக ஓடிப் போனான். அந்தப் பகுதிகளில் இதுபோன்ற ஒன்றை எவரும் கண்டதில்லை. 

அந்தப் பெண் அடுப்பருகில் உட்கார்ந்து, கெட்டில் மூடியை அடிக்கடி எடுத்து, தண்ணீர் கொதித்துவிட்டதா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் சுள்ளிகளை ஏறத்தள்ளித் தீயைத் தூண்டினாள். மேகம் மாதிரி எழுந்து, நாணல் தட்டைச் சுவர்களின் வெடிப்புகள் வழியாக வெளியேறிய புகையிலிருந்து பாதுகாக்கத் தன் கண்களை மூடிக்கொண்டாள். 

நீண்ட ஆடையின் அடியில் அவளது முழங்கால்கள் நன்கு படிந்து தெரியும் விதத்தில் அடுப்பருகே அமர்ந்திருந்த பெண், பொங்கிச் சுருண்டெழும் புகையில் எதிர்கால நிகழ்வுகளைக் கண்டறியக்கூடிய ஆற்றல் பெற்ற ஒரு மந்திரக்காரிபோல் கலைஞனுக்குத் தோற்றம் தந்தாள். 

இன்னொரு பெண் வெறும் காலுடன் நடந்ததேயில்லை; புகையும் அடுப்பருகே அவள் அமர்ந்ததும் இல்லை. 

கடல் காலைநேரங்களில் வெண்கலக் குழம்புபோல் சீறி எழுந்து, கரைநெடுக நின்ற கற்பாறைகளை நக்கிக்கொண் டிருந்தது. அந்தப் பெண் கறுப்பு வெல்வட் தொப்பி அணிந்து கடற்கரையில் இருந்தாள். அவள் தனது சிறுகுடையின் நுனி யினால் மணலில் கோடுகள் வரைவதும், பிறகு அவற்றை அழிப் பதுமாக இருந்தாள். அவன் தன் கையிலிருந்த காய்ந்த சுள்ளியைத் துண்டுதுண்டாக ஒடித்துக்கொண்டிருந்தான். அவர் களது பாதங்களில் நுரையை வீசியடித்த அலைகள் குச்சியின் துணுக்குகளைக் கடலுக்குள் இழுத்துச் சென்றன. கடற்கரையில் அவர்கள் அமர்ந்திருந்தபோது, அந்தப் பெண் அவனை மணந்து கொள்வதாக வாக்களித்தாள். அப்போது திடீரென்று உலகம் எல்லையற்ற ஒரு பெருங்கடலாக மாறிவிட்டது. அவன் இதயம் அதில் ஒரு பகுதியாயிற்று. 

அப்புறம் வேறு நாட்கள் வந்தன. வாழ்க்கை அவர்களைத் திடுமெனப் பிரித்துவிட்டது. அவளது வயலட் கண்கள், சாம்பல் நிற மேல்சட்டை, தனது உறுதிமொழியை மணலில் எழுதிப் பின் அழித்துவிட அவள் உபயோகித்த சிறுகுடையின் நுனி, இவற்றின் நினைவுதான் அவனுக்கு எஞ்சியிருந்தன. 

மூடி கடகடத்தது. அந்தப் பெண் ஒரு கூடையிலிருந்து சில தட்டையான பாத்திரங்களை எடுத்தாள். வர்ணம் தீட்டிய கண்ணாடி டம்ளர்களை அவற்றின்மீது வைத்தாள். அவைகளின் மேலே அவள் குனிந்தபோது அவளுடைய நீண்ட தலைப்பின்னல் தோளின்மீது நழுவி விழுந்தது. கடற்கரையிலிருந்த பெண் குட்டையான கூந்தலும், வெண்ணிறக் கழுத்தும், ஒளிவீசும் சருமமும் பெற்றிருந்தாள். 

காலி டப்பாவை எடுத்துக்கொண்டு பையன் உள்ளே ஓடி வந்தான். 

சிறுவர் கூட்டம் ஒன்று இப்போது வாசலருகே நின்று, அந் நியர்களை வெறித்து நோக்கியது. இரண்டாவது டப்பாவையும் அவனிடம் கொடுத்தபோது, பையனின் சந்தோஷத்துக்கு ஒரு அளவேயில்லை. இம்முறை அவன் வெளியே ஓடவில்லை; ஒரு பாயின்மேல் உட்கார்ந்தான். அவன் அம்மா அவனுக்கும் சிறிது தேநீர் கொடுத்தாள். கலைஞன் ஒரு பெரிய துண்டு சர்க்கரையை அவனது கண்ணாடி டம்ளருக்குள் போட்டான். சர்க்கரையி லிருந்து கிளம்பிய குமிழிகளால் சிறுவன் வசீகரிக்கப்பட்டான். அதை வெளியே எடுப்பதற்காக அவன் தன் விரலை உள்ளே நுழைத்தான். சூடான தேநீர் அவன் சருமத்தைச் சுட்ட போதிலும் அவன் வேதனைக்குரல் எழுப்பவில்லை. ஏனெனில், இளகிய சர்க்கரையின் சுவை மிக இனிதாக இருந்தது. ஆராய்ச்சி யாளன் புன்னகை பூத்தான். மனிதவர்க்கத்தின் கடந்த காலத்தி லிருந்து ஒரு காட்சியை அவன் நினைவுகூர்ந்திருக்கவேண்டும். அப் பெண் மறுபடியும் கெட்டிலை நிரப்பினாள். தனது குறும்பு மகனைப் பார்த்துச் சந்தோஷமாகப் புன்னகைத்தாள். 

அவள் புன்முறுவல் கலைஞன் பார்வைக்குத் தப்பவில்லை. அது ரொம்பவும் பழக்கம் உள்ளதாகத் தோன்றியது. இரண்டு பேர் ஒரே மாதிரி இருக்கிறபோது, அவர்களது இளமுறுவலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். முதலில், பெண்ணின் மேலுதடு துடித்தது ; பின் அவள் உதடுகள் விரிந்தன; முறுவல் கண்களில் ஒளியேற்றியது. 

கலைஞன் தனது சித்திர ஏட்டைப் பைக்குள்ளிருந்து சுண்டி இழுத்தான். பாறைகளும் பிற வரைபடங்களும் நிறைந்த தாள் களைப் புரட்டினான்; பிறகு, நெருப்பருகே அமர்ந்திருந்த பெண்ணை நேர்த்தியாக வரைந்தான். 

அவள் உருவத்தின் புறக்கோடுகள் அவனுக்குப் பழக்க மானவை; அவன் மனக்கண்ணினால் அவன் அவற்றை அநேக தடவைகள் தீட்டிப் பார்த்திருக்கிறான். 

பையனைத்தவிர வேறும் எவரும் அவனுடைய ஏட்டில் உள்ள சித்திரத்தைப் பார்க்கவில்லை. ரோமத் தொப்பி அணிந்த ஆளுக்குச் சொந்தமான ஏட்டின் வெள்ளைத் தாள்கள், அனைத்தை யும் எடுத்துக் காட்டுகிற நீரூற்றின் தெளிந்த நீரைப்போல் ஒவ்வொரு பொருளையும் பிரதிபலிக்கும் கண்ணாடியாக அக்குழந்தைக்குத் தோன்றியது. 

சிறிது நேரத்துக்குப் பிறகு. வழிகாட்டி குதிரைகளைக் கொண்டுவந்தான். கடிவாளங்களை மாட்டி, இடுப்பு வார்களை இறுக்கி, சேணப் பையைப் பிணைத்துவிட்டு, அவன் அந்தப் பெண்ணிடம் விடை பெறுவதற்காகத் திரும்பிச் சென்றான். அவள் எழுந்து தன் தலைக்குட்டையை வேகமாக நெற்றிக்கு மேலே இழுத்துவிட்டாள். முன்னே நீண்ட அவனது கையை அவள் விரல் நுனிகள் லேசாகத் தொட்டன. மற்ற இருவரும் தங்கள் கைகளை நீட்டினார்கள். ஆனால் அவளோ தன் கையைத் தனது நெஞ்சின்மீது அழுத்திக்கொண்டு தலையைத் தாழ்த்தி அவர்களுக்கு விடை கொடுத்தாள். 

கலைஞன் சிறுவனுக்குச் சில வெள்ளிக் காசுகள் கொடுத்து அவன் தலையை வருடினான். 

மூன்று குதிரைகள் காகவபெர்தாவின் பாறைச் சரிவுகள் வழியே கீழிறங்கி, அடியிலுள்ள பள்ளத்தாக்கை நோக்கி நடந்தன. மலைமீது குதிரை சவாரி செய்த மூன்று மனிதர்களும் தனித்தனியே அவரவர் எண்ணங்களில் ஆழ்ந்திருந்தனர். 

வழிநெடுக வயலட் பூக்கள் மலர்ந்திருந்தன. கலைஞன் தன் சேணத்திலிருந்து வளைந்து குனிந்து ஒரு பூவைப் பறித்தான். அதைத் தனது சித்திர ஏட்டில், அடுப்பருகே மெலிந்த பெண் ஒருத்தி இருந்த படம் தீட்டப்பட்ட பக்கத்தில் வைத்துக் கொண்டான். 

குதிரைகளின் குளம்புகளுக்குக் கீழே கற்கள் சிதறின. அவை இடுக்குகளுக்குள்ளே ஓசையிட்டு உருண்டன. 

கலைஞன் உள்ளத்தில் ஒரு கடல் புரண்டது. அது தனது கரைகள்மீது முதலில், கறுப்பு வெல்வட் தொப்பி அணிந்த அழகிய தலை ஒன்றை மேலே உயர்த்தும்; பிறகு கனத்த குழல் கற்றைகள் முதுகில் தொங்க நீண்ட ஆடை அணிந்த ஒரு பெண்ணைக் காட்டும்; அப்புறம், ஒரு கோட்டையின் இடிபாடுகளை யும், அதன் சுவர்களினடியில் மலர்ந்திருக்கும் கரும்சிவப்புப் பூக்களையும் பிரதிபலிக்கும். 


அந்தி மயங்கியது. 

ஒரு மனிதன் மலைமேல் உள்ள அதே பாதையில் ஏறிக் கொண்டிருந்தான். அவன் இடுப்பு வாரில் ஒரு அரிவாள் சொருகி யிருந்தது. அவன் களைத்திருந்தான். நாள் முழுவதும் அவன் தினைப்பயிரின் கட்டையான தண்டுகளை அறுத்துக்கொண்டிருந் தான். அவன் முதுகு வலித்தது. ஆகவே அவன் மெதுவாக அடி எடுத்து வைத்தான். தனது கைத்தடியின் மீது அழுத்தமாகச் சாய்ந்து, மூச்சு வாங்குவதற்காக அடிக்கடி நின்றான். அப்படி நின்றபோதெல்லாம் அவன் முழங்கால்கள் நடுங்கின. கோட்டையில் மறைந்துகிடந்த புதையலைப்பற்றி வழிகாட்டி தெரிவித்தானே, அதே ஆள்தான் அவன். குதிரைக்காரர்கள் சவாரி செய்து கீழே செல்வதை அவன் தன் வயலிலிருந்து தலை நிமிர்ந்து பார்த்திருந்தான். அவர்களுடைய சேணப் பைகளில் தங்கம் நிறைந்திருந்ததாக அவனுக்குத் தோன்றியது. அவனுடைய வெள்ளாடுகளும் செம்மறிகளும் இடிபாடுக ளிடையே மேய்ந்துகொண்டிருந்த வேளைகளில் அவன் உட்கார்ந் திருந்த அதே பாறையின் அடியில் பல நூற்றாண்டுக் காலமாகப் புதைந்துகிடந்த தங்கம் அது. இந்த எண்ணம் அவன் மன அமைதியைக் கெடுத்ததாலோ, அல்லது அவன் வெகுவாகக் களைத்திருந்ததனாலோ, மாலைநேர வேட்டையின்போது பசித்து அலையும் ஒரு கரடி மாதிரி அவன் எரிச்சல் அடைந்திருந்தான். 

அவன் முதல் குடிசையை அடைந்ததும், அவனை வரவேற்க வெளியே ஓடிவந்த நாயை எட்டி உதைத்தான். தனது இடுப்பு வாரிலிருந்து அரிவாளை எடுத்து ஒரு மூலையில் வீசி எறிந்தான். பிறகு, தடிக்கம்பை அடுப்பருகே சாத்திவிட்டு அவன் பாய்மீது அமர்ந்தான். 

அடுப்புப் புகைந்துகொண்டிருந்தது. கெட்டில் கொதித்துக் கொண்டிருந்தது. இரண்டு சர்க்கரைக் கட்டிகள் ஒரு திண்டின் மேல் கிடந்தன. 

கதிர் அறுப்பவன் தன் காலணிகளைக் கழற்றி, அவற்றிலிருந்த பதர்களை வெளியே அகற்றி முடிப்பதற்குள், அவன் மனைவி வந்து சேர்ந்தாள். அவளுடைய கைவளைகள் ஒலி எழுப்பின. நீண்ட ஆடையின் மடிப்புகள் சரசரத்தன. அவள் மகன், காலி டப்பாக் களைக் கைகளில் அணைத்தவாறு அவள் பாவாடையைப் பற்றி யிருந்தான். 

தன் பொக்கிஷங்களைக் காட்டுவதற்காக அவன் தந்தையிடம் ஓடினான். குதிரையில் வந்தவர்கள் தனது பாய்மீது உட்கார்ந் திருந்தார்கள் என்று அந்த மனிதனுக்கு சட்டென்று புலனாயிற்று. அப்புறம், கருணையுள்ள அந்நியன் தந்த வெள்ளிக் காசுகளைச் சிறுவன் அவனிடம் காட்டினான். 

அம் மனிதன் பையனை தூரத் தள்ளினான். டப்பாக்களை விசிறி அடித்தான். பையனைப் போலவே அவை உருண்டு புரண்டன. ஆனால், சிறுவன் துள்ளி எழுந்து அவற்றை மறுபடியும் பொறுக்கிக்கொண்டான். அப்புறம் தாயின் பாவாடையில் முகத்தைப் புதைத்து அவன் அழுதான். தந்தை அவனுக்காக வருத்தப்பட்டான். அவன் சிறுவனைக் கூப்பிட்டு, காசுகளைக் காட்டும்படி கேட்டான். பையன், அழுகையுடன் சிரிப்பும் சேர, காசுகளைத் தன் கையில் பொத்திக்கொண்டு அவன் அருகில் வந்தான். வெள்ளைத் தாள்களோடு மினுமினுத்த ஏதோ ஒன்றை அந்நியன் தனது சட்டைப்பையில் வைத்திருந்தான் என்று அவன் தந்தையிடம் சொன்னான். தனக்குக் காசுகள் தந்த மனிதன் அதன் பக்கங்கள் ஒன்றில் தன் அம்மாவின் படத்தை வரைந்து எடுத்துப் போனதையும் கூறினான். 

குடியானவனின் குமுறும் உள்ளத்தில் மின்னல் போல் பொறாமை பாய்ந்தது. அவன் பரக்க விழித்தான். முகம் வெளிறியது. அந்தப் பெண் தன் மகனை நோக்கினாள். முகம் சிவந்தாள். அவள் கன்னங்களில் செம்மை படிவதை அவள் புருஷன் கவனித்தான். அடுத்த கணம் அவன் எழுந்து நின்றான். முடி அடர்ந்த அவன் கை கனத்த தடியைப் பற்றியது; அந்தப் பெண்ணின் முதுகுமேலே அறைந்தது. 

அவள் ஆடையின் பொத்தான்கள் கலகலத்தன. நீண்ட குழல்கற்றைகள் குலைந்து சரிந்தன. கெட்டில் சாய்ந்து விழுந்தது. தடியின் நுனி முறிந்து ஒரு மூலையை நோக்கிப் பறந்தது. அவள் அழவேயில்லை; வேதனையால் வெறுமனே நெளிந்தாள். முதுகின்மீது கையை வைத்தபடி அவள் வீட்டை விட்டு வெளியே போனாள். அங்கே போய் அழுவாள். சிறுவன், இன்னும் டப்பாக்களை இறுகப் பற்றிக்கொண்டு அவள் பாவாடை மடிப்புக்களில் ஒளிந்தபடி அவள்கூடப் போனான். 

புருஷன், ஓயாது முறுமுறுத்தவாறு தினைத்தோசைகள் சிலவற்றைத் தின்றான். பிறகு ஆட்டுத் தோல் தொப்பியைத் தலைக்குக் கீழே வைத்து, பாயில் நீட்டி நிமிர்ந்தான். 

மீண்டும் காகவபெர்தா மலைச்சிகரத்தின் மவுனம் மீது கவிந்தது. இரவின் கருமை வந்து சூழ்ந்தபோது அடுப்புகளில் நெருப்பு அணைந்துவிட்டது. ஊர் நாய்கள், வனவிலங்குகளிடம் கொண்ட அச்சத்தால் நடுங்கியவாறே, வீடுகளுக்கு வெளிப் புறத்தில் சுருண்டு கிடந்தன. ஆடுகள் புல்லில் படுத்திருந்தன. அந்தப் பெண் ஒரு பாயில் படுத்து, அருகில் கிடந்த குழந்தையை நீண்ட ரோமப் போர்வையால் மூடியிருந்தாள். 

ஒரு மேகம், ஏதோ ராட்சச நத்தையைப்போல், மலை மீதிருந்து குடிசைகளை நோக்கி ஊர்ந்து வந்தது. 

கனத்த இருள் பாறைகளையும் பாசியையும் மூடி மறைத்தது. தூங்கும் ஆடுகளின் ரோமத்தின்மீது இரவின் ஈரம் படிந்தது. 

வயலட் பூவின் இதழ்கள்மேலே பனி விழுந்தது. சின்ன வண்டு ஒன்று, அதன் மணத்தில் கிறக்கமுற்று, பூக்கிண்ணத்தில் உறங்கிக்கிடந்தது. உலகமே மணம் நிறைந்த வயலட் பூவாக அந்த வண்டுக்குத் தோன்றியது. 

– அக்செல் பாகுன்ட் (1899-1937) 

– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *