ஆறாவது கட்டளை
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 109
(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவன் ஒரு பெரிய கவி என்று எல்லோரும் சொன்னார்கள்.
மரியா மகதலேனாளின் பாபத்தை மன்னித்த ஆண்டவனிடம் அவன் நம்பிக்கை வைத்திருந்தால்! ஆனால் அவன் மத நம்பிக்கை கொண்டவன் அல்ல. மேலும், தன்னலத் தியாகம் மடத்தன மானது என்று அவன் கருதினான். அவன் ஆண்மை நிறைந்தவன். அவனோடு பழகிய பெண்கள் அப்படித்தான் நம்பினார்கள். தடித்த உதடுகளும், உணர்ச்சி நிறைந்த பெரிய வாயும், நெளி நெளியான கரிய தலைமுடியும் பெற்றிருந்த அந்த இளைஞனோடு அவர்கள் சுற்றித் திரிந்தார்கள். ஒரே பார்வையில் வெற்றி கொண்ட, ஏக்கம் நிறைந்த கரும்கண்கள் தான் அவனின் மிகச் சிறந்த அம்சமாக விளங்கின. அவன் கழுத்தில் ‘டை’ கட்டிக் கொள்வதில்லை. மிகச் சமீபகால நாகரிக முறைகளை அவன் பின்பற்றமாட்டான்.
நேர்த்தியாக அலங்கரித்துக்கொண்ட யுனிவர்சிட்டி மாணவர்களை “இஸ்திரிபோட்ட உடுப்புகள்” என்று பெண்கள் பரிகசித்தார்கள். ஆனால், எப்போதும் அசிங்கமான தமாஷ் களைப் பேசிக்கொண்டு – தன் அம்மாவின் முன்னிலையில்கூட அவற்றைக் கூற அவன் தயங்கமாட்டான்-புகையும் கறுப்புக் குழாயை உறிஞ்சியவாறு காணப்பட்ட பார்கெவ் ஆராமஸை ஒரு காட்டுமிராண்டி’ என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அவன் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தினான். ஆனால், இளம் பெண்கள் ஆச்சர்யம் அடையவில்லை. அவனைக் கண்டதுமே காதல் கொண்டார்கள்.
“ஆறாவது கட்டளையாவது: விபசாரம் செய்!”
ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தங்கள் புனிதமான எழுத்துகளை உருவாக்கிய ஒரு மீனவனும் ஒரு தச்சனும் வாழ்க்கையைப்பற்றி என்ன கண்டார்கள்? அப்போது கூட மரியா மகதலேனா அருகிலேயே வாழ்ந்துகொண்டிருந்தாளே!
“அஸ்மிக் ஒரு பரிசுத்த கன்னி. ஒருநாள் அஸ்மிக் ஒரு புதிய கிறிஸ்துவைப் பெற்றெடுப்பாள் அந்தக் கிறிஸ்து நமது நாகரிகத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பார்; அதன் பிறகு முதலாவது குரங்கு திரும்பவும் கோடாரியைக் கண்டுபிடிக்கும்; அணுசக்தி ராக்கெட்டுகளை உற்பத்தி பண்ணக்கூடிய ஒரு புதிய சமூகத்தினர் தோன்றுவதற்கு அது உதவியாக இருக்கும்” என்று ஜிகாம் சொன்னான்.
யுகமுடிவு நாள் (கடைசித் தீர்ப்பு நாள்) பற்றி ஒவ்வொரு தலைமுறையும் தனக்குத் தோன்றிய வகையில் விளக்கம் கூறுகிறது.
அஸ்மிக் புனித கன்னியாகவே இருந்தாள். கரிய குழாயை, நெளிநெளிக் கூந்தலை, ஒரே பார்வையில் வெற்றி கொள்ளும் ஏக்கம் நிறைந்த கரும் கண்களை அவள் கண்டாள். ஆயினும் அவள் அவற்றுக்கு அடிமைப்பட்டுவிடவில்லை. அவளுடைய சிநேகிதிகள் சீற்றம் கொண்டார்கள். இளைஞர்களோ “அஸ்மிக்கா? அவள் எதுக்கு உதவுவாள்? அவள் நடப்பதையும் பேசுவதையும் சிரிப்பதையும் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கிறது” என்று வெறுப்புடன் சொன்னார்கள்.
“அவள் தன் வாழ்வில் ஒரே ஒரு முறைதான் அழுதாள்; காலில் ஒரு ஆணி குத்திவிட்டபோது” என்றார்கள்.
அவளை அவ்வளவு அழகுடன் படைத்து இயற்கை தன் சக்தியை வீணடித்துவிட்டது என்றே அனைவரும் நம்பினர். அவள் பார்கெவ் ஆராமஸைக்கூட கவனிக்கவில்லை. ஆயினும் அவன் அவளைக் கவனித்தான். அஸ்மிக் பெண்கள் அனைவரிலும் மிகுந்த வசீகரமானவளாகவும் வெகு அடக்கம் உள்ளவளாகவும் இருந்ததாலேயே அவன் அவளைக் கவனித்தான். அவள் குருடி போல் தோன்றியதே முக்கியக் காரணம் ஆகும். அவள் அவனைப் பார்த்தபோதிலும், உண்மையில் அவனை அவள் பார்த்ததில்லை.
நாம் நாடகம் பார்க்கப் போகலாம்”.
அஸ்மிக்கின் கண்கள் மின்னிப் பிரகாசித்தன.
“வா, போவோம். இன்று என் மனம் சோர்ந்திருக்கிறது.”
“மனம் சோர்ந்தபோது மட்டும்தான் நீ நாடகத்துக்குப் போவாயோ?”
“இல்லை.நான் அப்படிச் சொல்லவில்லை.”
“ஜெம்மா என்ன ஆனாள்?”
“அவள் அலுப்புத்தர ஆரம்பித்துவிட்டாள்.”
“நான் இன்னும் அப்படி ஆகவில்லையோ?”
“நாம் ஒருவரை ஒருவர் இன்னும் அறிந்துகொள்ளவே இல்லையே” என்று பார்கெவ் புன்னகைத்தான்.
“அதை நீ விரும்புகிறாயா?”
ஆமாம்.”
‘*ஏனோ?”
“நீ புதிதாக இருக்கிறாய். அழகாக இருக்கிறாய். நீ எப்படிப் பட்டவள் என்று நான் இன்னும் தெரிந்துகொள்ளவில்லை.”
“அப்படியானால் நான் நிச்சயமாக வரமாட்டேன்.”
“நிச்சயம் நீ வருவாய்.”
இறுதியில் அஸ்மிக் இணங்கிவிட்டதை அறிந்த ஒவ்வொரு வரும் திகைப்படைந்தனர்.
ஜியார்ஜியப் பிரதேசத்தின் நடிகன் ஒருவன் தனது குழுவுடன் அன்று அந்திநேரத்தில் நாடகம் நடித்துக்கொண்டிருந்தான். ஒரு ஜியார்ஜிய ஒத்தெல்லோ, ஆர்மேனிய டெஸ்டிமோனாவின் கழுத்தை நெரித்துக் கொல்வதைக் காண்பதற்காக நகரத்தில் பாதிப்பேர் கூடியிருந்தார்கள்.
டெஸ்டிமோனா வழக்கமாகக் கொல்லப்படுவதுபோல்தான், அவனும் அவளைக் கொன்றான். அஸ்மிக்கின் உணர்ச்சிப் பிரதிபலிப்பைக் கண்டு பார்கெவ் ஆச்சர்யம் அடைந்தான்.
நாடக அரங்கைவிட்டு வெளியேறியதும், அவன் “நாம் ஒரு ஓட்டலுக்குப் போவோம்” என்று சொன்னான்.
“நாடகம் அற்புதமாக இருந்தது, இல்லையா?”
“நீ அருகில் இருக்கையில் எதுவும் அருமையாகவே இருக்கும்.”
“ஏன்? நான் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லையே?”
“அதனால் என்ன? நாம் ஓட்டலுக்குப் போவோம். அது தான் நான் விரும்புவது.”
“அப்படியானால் நான் வரவில்லை.”
“ஓ.சும்மா வா.”
அவர்கள் உள்ளே பிரவேசித்ததுமே மூன்று முக்காட்டுக் காரிகள் ஓடிவந்தார்கள். இந்த வகையில் பள்ளிப் பெண்கள் மூவர் புகழ்பெற்றவர் ஆனார்கள். பார்கெவ் ஆராமஸ் அவர் களுக்குத் தன் கையெழுத்தை இட்டுத்தர இசைந்தான். அந்தக் கணத்திலிருந்து அவர்களது ஆட்டோகிராப்’ புத்தகங்கள் வரலாற்றுச் சாசனங்கள் ஆகிவிட்டன.
சிங்காரத்தலையினர் மூன்று பேரும் போனார்கள்.
அஸ்மிக் ஒரு கோணல் புன்னகையோடு சொன்னாள்: “நீ ரொம்பப் பிரசித்தமானவன் என்று தெரிகிறது.”
“நான் நன்றாக எழுதுவேன். கடைசியாக ஆர்மேனியர்கள் ஒரு நல்ல கவிஞனை அடைவார்கள்.”
“இல்லை.அவர்கள் அடையமாட்டார்கள்.”
“என்ன சொல்கிறாய்?”
“அவர்கள் அடையமாட்டார்கள்.நீ உண்மையான உள்ளொளி பெற்றவனில்லை. நீ உன்னிடமும் உனது அறிவிலும் வெறுமனே மோகம் கொண்டிருக்கிறாய்.”
“நான் அறிவாளி என்றுதானே சொல்கிறாய்?”
“ஆமாம். நீ அறிவாளிதான். திறமை உள்ளவன்கூட.”
“பின்னே என்ன குறை?”
“எனக்குத் தெரியாது.”
“இதுவரை யாராவது உன்னைக் காதலித்தது உண்டா? நீ யாரையாவது காதலித்திருக்கிறாயா என்று நான் கேட்கவில்லை. உன் ஆசிரியர்களில் ஒருவராவது உன்னைக் கண்டு கிறங்கியிருக்க வேண்டுமே?”
“இல்லை. நான் காதல் வசப்பட்டதேயில்லை. அதற்கும் இப்போதுள்ள இதற்கும் என்ன சம்பந்தம் என்று எனக்குத் தெரியவில்லை.”
“நாம் காதலால் உயிர் வாழ்கிறோம்” என்று பார்கெவ் தொடர்பு இல்லாமல் பேசினான். “நாம் கவிதை எழுதுகிறோம். இரண்டாயிரம் வருஷங்களுக்கும் மேலாகவே ஆர்மேனியர் களாகிய நாம் காதலிப்பதற்காகவே வாழ்ந்திருக்கிறோம்.”
“நல்லது.பின்னே, காதலியேன்.”
“யாரை?”
“என்னை.”
பார்கெவ் சிரித்தான். “நான் காதலிப்பேன். ஆனால் நீ என்னை மறுத்துவிடுவாய். மரியா மகதலேனாதான் என் ருசிக்கு அதிகம் பிடித்தவள். நீ பரிசுத்த கன்னி.”
“நான் அறிவேன். நான் ஒரு புதிய கிறிஸ்துவைப் பெற்றெடுப்பேன் என்றுகூடச் சொல்கிறார்கள். இதைக் கூறிவிட்டு அஸ்மிக் சிரித்தாள். பிறகு அவள் பணியாளுக்குச் சைகை காட்டினாள். “என் கணவருக்கு ஒரு கிளாஸ் காக்னக் வேண்டும்.”
பணியாள் சென்றான். பார்கெவ் தன் கையிலிருந்த பானத்தைக் குழப்பத்தோடு கீழே வைத்தான்.
“நீ என்ன சொன்னாய்?”
“ஒரு கிளாஸ் காக்னக்கை உன்னால் குடிக்க முடியாதா?”
“நிச்சயமாக முடியும்.”
“நான் காசு கொடுப்பேன். இதில் குழப்பம் அடைவதற்கு ஒன்றுமில்லை. பார்க்கப்போனால், நாம் இருவரும் மாணவர்கள் தானே.”
பணியாள் திரும்பி வந்தான். “மன்னிக்கவும். உங்களுக்கு எந்த ரகம் தேவை என்று கேட்க மறந்துபோனேன்.”
“என் கணவர் மிகச் சிறந்த பானத்தை மட்டுமே குடிப்பார்.”
பார்கெவ் அவநம்பிக்கையோடு அவளை உற்றுப் பார்த்தபடி இருந்தான்.
“அப்படி விழிக்காதே. அது மரியாதை இல்லை” என்று கூறி அவள் சிரித்தாள்.
‘விஷயம் சுவாரஸ்யமாகிக்கொண்டிருக்கிறது.”
“ரசமான விஷயங்கள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன. நமது ஜனவரி விடுமுறையின்போது நாம் கல்யாணம் செய்து கொள்வோம்.”
“என்னிடம் வந்த பெண்களை எல்லாம் நான் மணந்திருந் தால், எனக்கு எத்தனை மனைவிகள் இருப்பார்கள் தெரியுமா?”
“ஆனால், நீ என்னை மணந்துகொள்வாய். நான் வித்தியாசமானவள்.”
புறப்படுவதற்காக அவர்கள் எழுந்தபோது அஸ்மிக் சொன்னாள்: “கோர் என்னைவிட அதிக அழகி. நாஸிக் என்னை விட இனியவள். குழாயை வாயில் வைத்திருக்கையில் நீ நன்றாகவேயில்லை. அதை எப்படிப் புகைப்பது என்றும் உனக்குத் தெரியவில்லை. இனிமேல் புகை பிடிக்காதே”
மறுநாள் காலை பார்கெவ் அஸ்மிக்பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். அவளைப்பற்றி அதிகம் நினைக்க நினைக்க, அவனுக்குக் கோபம் அதிகமாக வந்தது. ஒரு கண்ணாடியைக் கடந்து சென்றபோது அதில் தெரிந்த தனது பிம்பத்தை அவன் பார்த்தான். அவனுடைய புகைக்குழாய் அவனுக்கு நன்றாகத் தான் இருந்தது. அஸ்மிக் சொன்னது தப்பு. அவன், வழக்கம் போல், குழாயைப் புகைத்தவாறே யுனிவர்சிட்டிக்குப் போனான். பேராசிரியர் லாலெயன் தாழ்வாரத்தில் அவனை நிறுத்தினார்.
“நான் உன் புத்தகத்தைப் படித்தேன், இளைஞனே. அது எனக்குப் பிடித்திருக்கிறது.”
“நன்றி.”
“எனக்கு நன்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீ தற்பெருமை காள்ளாமல் இருந்தால், நீ ஒரு உண்மையான கவிஞன் ஆவாய்.”
“என்ன?”
“பரவாயில்லை. உனது அடுத்த வகுப்புக்கு மணி அடிக்கிறது.”
வகுப்புகளின் இடைவேளையின்போது, முற்றிலும் எதிர் பாராத விதத்தில், “இன்று மாலை நாம் என் அத்தையைப் பார்க்கப் போவோம்” என்று அஸ்மிக் சொன்னாள்.
“எதுக்காக?”
“அவள் பழங்காலத்து மனுஷி. எனக்கு மணமகனாக வரப் போகிறவனைத் தான் பார்த்தால் ஒழிய, என் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டேன் என்று அவள் சொல்லியிருக்கிறாள்.”
“இந்தப் பேச்சை நிறுத்து!”
“நீ திரும்பவும் அந்தக் குழாயைப் புகைக்கிறாயா?”
“என்னை யார் தடுப்பது?”
“நீ புகை பிடித்துக்கொண்டேயிருந்தால் நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன்.”
“அதை நிறுத்து என்று நான் சொன்னேன்!” என்று பார்கெவ் கோபமாய்க் கூறினான்.
“கோபப்படாதே. நான் நேற்றே அதை உன்னிடம் சொன்னேன்.”
அது விசித்திரமாகப் படலாம். அன்று மாலை அவர்கள் சந்திக்கத்தான் செய்தார்கள்.
“நீ பரிசுத்த கன்னி என்றே எல்லோரும் எண்ணுகிறார்கள்.”
“அவர்கள் எல்லோருமே தப்புதான். உன் கழுத்துப்பட்டி அழுக்காக இருக்கிறது.”
“அதைப்பற்றி உனக்கு என்ன?”
“என் கணவனைக் கவனிக்கவேண்டியது என் கடமை.”
“உன் கேலிப்பேச்சுகள் எனக்கு விளங்கவில்லை.”
“நான் கேலி பேசவில்லை. மிக உண்மையாகவே பேசுகிறேன்.”
“ஆனால் நான்.”
“என்னைக் காதலி.’
“என்னை நானே அதுக்குப் பலவந்தப் படுத்த முடியாது.”
“பலவந்தம் பண்ணாதே. சும்மா உன் நெஞ்சைக் கேட்டுப் பார். நான் என் வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன். நாம் என் அத்தையின் வீட்டுக்குப் போகவேண்டியதில்லை.”
ஸாரிக்கின் இருப்பிடத்துக்கு உரிய சாவிகள் பார்கெவ் பையில் கலகலத்தன.
“வா, போவோம்.”
“எங்கே?”
“சும்மா வா.”
“நான் விளையாட்டுக்குச் சொன்னேன். எரவானில் எனக்கு அத்தை யாரும் இல்லை.”
“அது முக்கியம் அல்ல. நாம் போகலாம்.”
அஸ்மிக் படுக்கைமீது உட்கார்ந்தாள். அவளது பருத்தித் துணி ஆடையின் கீழ்ப்பகுதி சற்றே மேலேறியது.
“நாம் கல்யாணம் பண்ணிக்கொள்வோம் என்றா நீ சொல் கிறாய்?” என்று பார்கெவ் கரகரத்த குரலில் கேட்டான்.
“இனிமேல் இல்லை.”
அவன் சட்டென்று அவளை முத்தமிட்டான். பிறகு பின்வாங்கினான்.
:நான் உன் கல்யாணத்தை இங்கே நிறைவேற்ற மாட்டேன்” என்று கூறி அவள் முறுவலித்தாள்.
“பின்னே நீ ஏன் இங்கே வந்தாய்?”
“நீ கெட்டுப்போய்விட்டாய். எல்லாம் உனக்கு வெகு சுலபமாக வந்து சேர்கிறது. நாம் போகலாம்.”
“நீ எங்கும் போகப்போவதில்லை.”
“அசட்டுத்தனமாக நடக்காதே. நான் போய்க்கொண்டிருக் கிறேன் என்று நீ நன்கறிவாய். நீ வாசல்வரை வந்து என்னை வழி அனுப்பலாம்.’
பார்கெவ் காதல் தவிர்ந்த ஏனைய உணர்ச்சிகளை- கோபம், ஆச்சர்யம், வேதனை அனைத்தையும் – அனுபவித்தான்.
“வருத்தப்படாதே” என்று கூறி, அஸ்மிக் திடீரென்று அவனைத் தழுவினாள். “இதற்கு முன் உன்னை யாரும் காதலித்தது இல்லை. அவர்கள் உன்னை ஏமாற்றினார்கள். அவர்களை ஏமாற்றி விட்டதாக நீ நினைத்தாய். என்னை வீட்டுக்கு இட்டுச்செல்.”
அதிசயம்தான். அவனது உண்மையான முதல் கவிதை அன்று இரவு பிறந்தது. வெறுக்கத் தகுந்த, வித்தியாசமான, ஒரு பெண்ணைப்பற்றிய கவிதை அது.
அவனுடைய நண்பர்கள் புரியாது குழம்பினார்கள். பார்கெவ் ஆராமஸின் குழாய் திடீரென்று மறைந்துபோயிற்று. அவன் சட்டைகள் இப்போதெல்லாம் சதா சுத்தமாகவே இருந்தன.
இயல்பாக, அவர்கள் அந்தச் சமயத்தில் கவலைப்படவில்லை. அவளுடைய படிப்பு அறையின் சன்னலுக்குக் கீழே அவன் பல மணி நேரம் நிற்க நேரிட்டது. சதுக்கத்தில் ஒரு பெஞ்சில், தன்னை மணந்துகொள்ளும்படி அவளை அவன் திரும்பத் திரும்ப கேட்கவேண்டியதாயிற்று. அப்புறம், பார்கெவ் ஆராமஸ் கழுத்தில் ஒரு ‘டை’ கட்டக் கற்றுக்கொண்டதும், அவன் மற்ற அனைவரையும் போலவே ஆகிவிட்டான். அஸ்மிக் மட்டுமே வித்தியாசமாகக் கருதினாள். அவள் வேறுவிதமாகக் கருதி, வெகுவாகச் சந்தோஷப்பட்டாள்.
– காஷாக் ஜியுல்நஸாரியன் (1918)
– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
தொடர்புள்ள சிறுகதைகள்
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
மறுபக்கம்
தில்சாத் எ.எச்.எம்.
October 18, 2026
தீரவே தீராத காதல்
புஷ்பராஜ் கந்தசாமி
October 15, 2026