முதுகில் பாயாத அம்புகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 22, 2021
பார்வையிட்டோர்: 2,922 
 

ராசகுமாரி, அந்தப் பெயருக்கு எதிர்ப்பதமாய் அல்லாடினாள். சண்டைக் கோழிகளான மாமியாருக்கும், அவள் எதிரிக்கும் இடையே உள்ள இடைவெளியில் நின்றபடி இரண்டு கைகளையும் விரித்துப் போட்டு, அவர்களின் மோவாய்களைத் தொட்டாள். பிறகு, தலைக்கு மேல் கரம் தூக்கி அதைக் கும்பிடாக வைத்துக் கொண்டு கரகம் ஆடுபவள்போல், அங்குமிங்குமாய் சுழன்றாள். ஆனால், அவள்களோ, இவளை ஒரு பக்கமாக ஒதுக்கிவிட்டு, முன்னாலும் பின்னாலுமாய் நகர்ந்தார்கள்.

இன்றைக்கு எப்படியும் தன்னுடைய சங்கதியும் வெளி வந்துவிடப் போகிறது என்று பயப்பட்டவள் போல், ராசகுமாரி இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு அங்குலம் அங்குலமாய் சரிந்து அப்படியே குத்த வைத்தாள். இதைப் பற்றி கவலைப் படாமல், மாமியார் சினியம்மாவும், கிழவீட்டு சக்கரையம்மாவும் ஒருத்திக்கு ஒருத்தி சளைக்காமல் வசவுக்கணைகளை சரம் சரமாகவும், சரச சரசமாகவும் விட்டுக் கொண்டிருந்தார்கள்.

“நீ சொன்னாலும் சொல்லாட்டாலும்… நாங்க கவரிமான் வமுசந்தாண்டி. ஒரு முடி போனாலும் உயிர விடுற கொலம்தாண்டி…”

“தன்னை மெச்சிக்கிட்டாம் தவிட்டுக் கொழுக்கட்ட… ஊரை மெச்சிக்கிட்டாம் ஊசக் கொழுக்கட்ட… கவரிமானாம் கவரிமான்… து… கழுதைக்குப் பேரு முத்துமாலையாம்… அப்படிப்பார்த்தா ஒன் தலையில ஒரு முடிகூட இருக்கப்படாது….”

“எங்க, விரல மடக்கி சொல்லுழா பாக்கலாம்…”

“விரலு போதாதுழா… கோயக்கண்ணி… ஒவ்வொரு முடியா மடக்கிச் சொன்னாலும் ஒன் சங்கதிவள முடிக்க முடியாது….”

ஒருத்தி பேசும்போது, இன்னொருத்தி இடைமறிக்காமல், அதே சமயம், அந்த ஏச்சுக்களைக் காதுகளில் உள்வாங்கிக் கொள்வது போல், நிற்பாள். பின்னர் உடனடியாக எதிர் ஏச்சு விடப்படும். சடுகுடு ஆடுவதுபோல், இருவரும் திட்டிக் கொண்டார்கள். சினியம்மா, வைது கொண்டே முன்னோக்கி நடக்கும்போது, சக்கரையம்மா அதைக் காதில் வாங்கிக் கொண்டே பின்னோக்கி நடப்பாள். பிறகு சினியம்மா, மூச்சு விட்டுக் கொண்டு பின்னோக்கி நடக்கும்போது, சக்கரையம்மா முன்னோக்கிப் போவாள். இருவரின் இருபது விரல்களும், முளைக்கம்பி மாதிரி வீறிட்டுத் துடித்தன.

அதே சமயம், இருவரும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியைத் தாண்டிப் போவதில்லை. இருவரையும் ஒப்புக்குப் பிடித்த உறவுக்காரப் பெண்கள், அடுத்த தரப்பைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினார்கள். இவள்கள் மட்டும், அவள்களைப் பிடித்து இழுத்தால், சண்டை எப்போதோ ஒய்ந்திருக்கும். ஆனால், ஒவ்வொருத்தியின் பின்னாலும், இவள்கள் நின்று கொண்டு ஒவ்வொரு கோழியும் நகரும்போது தங்களையும் ரசனையோடு நகர்த்திக் கொண்டார்கள். இந்த ஒத்தாசைப் பெண்களை ஒட்டி, அவள்களின் பிள்ளை குட்டிகள்… கல்லையும், கட்டியையும், வைத்துக் கொண்டு தயாராய் நின்ற எலிவால் பின்னல் சிறுமிகள்… எக்கிய வயிற்றுப் பயல்கள்.

தொலைநோக்காய்ப் பார்ப்பவர்களுக்கு, அந்த இருவருமே அசப்பி ல் ஆண்களைப் போலவே தோன்றுவார்கள். சினியம்மாவின் கழுத்தைச் சுற்றி பாம்புபோல் சுருண்டு கிடந்த சேலையின் சிவப்புக்கரை, அசல் ஆம்புளைத் துண்டு போலவே தெரிந்தது. சக்கரையம்மாவின் மாராப்புக் கிழே விழ, அவளோ பனியன் போட்டிருப்பது போல் எதுவும் இல்லாமல் தோற்றம் கொடுத்தாள். ஆனாலும், அவர்களுக்குள் இந்த ஆம்புளைத் தனமும், உறவு முறையும் தவிர்த்து ஏகப்பட்ட வித்தியாசங்கள்.

சினியம்மா உயரமானவள். ஒல்லியானவள்: கண்களை ஒரங்கட்டிப் பார்க்கும் கோயக்கண்ணி கழுத்து மட்டும் ஒரு முழம் இருக்கும். ஐம்பது வயதுக்கு மேலான அவளை இரண்டாக மடித்துத் தலையை மட்டும் தட்டிப் போட்டு விட்டால் எப்படிப்பட்ட உருவம் கிடைக்குமோ, அப்படிப்பட்ட உருவம்தான் சக்கரையம்மா. நாற்பது வயதுக்குக் கிழானவள்: குள்ளம், தடி… கழுகு மூக்கு… வாயில் மட்டும் இல்லாமல் கண்களிலும் ஒரு கள்ளச்சிரிப்பு. பெருத்தவயிறு, வயதால் ஏற்பட்ட கோளாறாகத்தான் இருக்கவேண்டும். காரணம், கணவன் பத்து வருஷத்துக்கு முன்பே பரலோகம் போய்விட்டான்.

ஒவ்வொருத்தியும், ஏச்சுக்கு பதில் ஏச்சாய் விடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்படி ஏச்சு வராமல் போகும்போது, சம்பந்தப்பட்டவள் கோபத்தில் கீழே குனிந்து மண்ணை எடுத்துத் து.ாள் பரப்பப் போவாள். உடனே ஒத்தாசைக்கு நிற்பவர்களில் ஒருத்தி பிடித்துக் கொள்வாள்.

ஆயிற்று… அரைமணி நேரம் ஆயிற்று… இருவருக்கும் தொண்டைத் தண்ணீர் இன்னும் வற்றிப் போகவில்லை. அதே சமயம் விக்கலும், திக்கலும் வந்தது உண்மைதான். சினியம்மாவுக்கு முழங்காலுக்குக் கிழே சேலை இல்லை. சக்கரையம்மாவுக்கு, இடுப்புக்கு மேலே புடைவை இல்லை. ஒருத்திக்கு வைக்கப்படப்பு பின்னணி. இன்னொருத்திக்கு எருக்குழி பின்புலம். சோர்ந்து போகும் சமயங்களில் ஒருத்தி வைக்கப்படப்பில் சாய்ந்து கொள்வாள். இன்னொருத்தி எருக்குழி மேட்டில் ஏறிப்போய் நிற்பாள். அடித்துப் போட்ட காட்டெருமை மேல் புலி நிற்பது மாதிரி!

என்ன சண்டை என்பது அந்த இரண்டு பேருக்குமே, இப்போது மறந்து விட்டது. அப்படியே சொல்வதாக இருந்தாலும், யோசித்துப் பார்த்துத்தான் சொல்லவேண்டும். அந்தக் காரணமும் சண்டைக்கு ஒரு சாக்கே தவிர, சரக்கு அல்ல. சினியம்மாவின் பப்பாளிச் செடியின் ஒரு கொப்பு, சக்கரையம்மாவிள் ‘செருவையைக் கடந்து போய்விட்டது. உடனே, சக்கரை, அந்தக் கொப்பை ஒடித்துப் போட்டு விட்டாள். “என் வீட்டுச் செடியின் கொப்பை எப்படிழா ஒடிக்கலாம்” என்பது சீனியம்மாவின் கேள்வி. “உன் வீட்டுச்செடி என் வீட்டு சன்னலை எப்படி உற்றுப் பார்க்கலாம்” என்பது சக்கரையம்மாவின் பதில்.

அந்தச் செடி மட்டும் மரமாகி அந்தக் கொப்பு ஒரு கிளையாகி, ஒரு பழம் தொங்கியிருந்தால், சக்கரையம்மா ஒசைப்படாமல் அதைப் பறித்து விட்டு அந்தக்கிளையை அடுத்த பிரசவத்திற்காக விட்டு வைத்திருப்பாள். ஆனாலும், அதற்கு சந்தர்ப்பம் கொடுக்காமலே, செடியாகி மரமாய்ப் போனால் சினியம்மா, அப்படிப்பட்ட கிளையை வெட்டியிருப்பாள். ஆகையால் விவகாரம் அதுவல்ல கட்டு மஸ்தான உடல்காரியும், விதவையுமான சக்கரையம்மாவின் இஸ்கு தொஸ்குகளில் சினியம்மாவுக்கு ஒரு மயக்கம். படிதாண்டாமல் போய் விட்டோமே என்று பின்யோசனை செய்யும் பத்தினியான சினியம்மாவுக்கு, தனது புதுமருமகள் வந்ததும், சக்கரைக்கு, தான் வேப்பங்காயாப் போய்விட்ட வருத்தம். அத்த, அத்த’ என்று வார்த்தைக்கு வார்த்தை வலியப் பேசும் எரப்பாளிபயமவள், தனக்கு வந்த புதுமருமவள் ராசகுமாரியோடு கிசுகிசுப்பது அவளுக்குப் பிடிக்கவில்லை. ஒரே ஊரில் பிறந்தவர்கள் என்பதற்காக ஒரேயடியாய்க் குழைகிறாளே என்ற குமைச்சல். சக்கரையம்மாவுக்கும், பாடாவதிகிழவிக்குப் பதிலாக தனது மனோரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு பருவப்பெண் கிடைத்தாளே என்கிற் மகிழ்ச்சி. இந்த ராசகுமாரியின் புருஷன் செல்லப்பாண்டியோடு, தான் ஒரு சமயத்தில் சூதுவாதில்லாமல் பேசியதை, அந்தக் கிழவி சூதாக எடுத்துக் கொண்டு, மகனைத் திட்டியதிலிருந்தே இவளுக்கு ஒரு மனத்தாங்கல். அதுதான் இன்று தெருச்சண்டையாகிவிட்டது. பப்பாளிக்கொப்பை ஒடிச்ச சக்கரையம்மாவை, சினியம்மா கைதட்டிக் கூப்பிட்டு, “என் வீட்ல எதையும் யாரையும் விட்டு வைக்க மாட்டே போலுக்கே என்றாள். உடனே இவள், ஒன்வீடு பெரிய அரண்மனை. உன் மவன் பெரிய மன்மதன்… என்னால விட்டு வைக்க முடியல’ என்றாள்.

ஆக மொத்தத்தில் பப்பாளிக் கொப்பு பகைக்கொப்பாகி விட்டது. வீட்டுக்குள் துவங்கிய சண்டையை, இருவரும் தூக்கிப் பிடித்துக் கொண்டு தெருவுக்கு வந்தார்கள். அவர்கள் போட்ட கூச்ச்லில், தொழுவத்து மாடுகள் முளைக்கம்புகளில் கட்டப்பட்ட முளைக் கயிறுகளைச் சுண்டி இழுத்தன. பெட்டைக்கோழியை வலம் வந்த ஒரு சேவல், ஆபத்தை அறிந்து எல்லா மனிதச் சேவல்களையும் போல அந்த கோழியை அம்போ என்று விட்டுவிட்டு ஓடிவிட்டது. மறுபக்கம் நின்ற நாய்க்கு பயந்து சுவர்ப்பக்கம் குதித்த பூனை, அந்த நாயே தேவலை என்பது போல் அந்த நாய் பக்கமே குதித்தது. பீடியும் தட்டுமாகப் போன கலர்ச்சேலைக்காரிகள் அங்கே நின்று வேடிக்கை பார்க்காமல், லேசாய்த் திரும்பி மட்டும் பார்த்துக் ாெகண்டு நடையைத் தொடர்ந்தார்கள். ‘இவள்களோட சண்டைக்கு ஒரு மரியாதை கொடுக்கப்படாது என்பது அவர்களோட எண்ணம். இன்னும் சில தும்பைப்பூ வேட்டிக்காரர்கள்… மடிப்புக் கலையாத சட்டைக்காரர்கள், அங்கே அப்படி ஒரு சண்டை நடக்காததுபோல் வேகவேகமாய் நடந்தார்கள். ஊர் விவகாரிகள் இவர்கள்… பொம்புளையையோ… பொம்பளைச் சண்டையையோ நான்குபேர் முன்னிலையில் பார்க்க விரும்பாதவர்கள். ஆனாலும், பனையேறி லிங்கசாமியும் கட்டில் கட்டி மாடக்கண்ணுவும் “நாங்க ஆம்பளைங்க நிக்கத நினைச்சுப் பேசுங்களா என்று ஒவ்வொரு ஏ வார்த்தைக்கும் ஒரு சென்ஸார், குரலைக் கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் சென்ஸாரும் சினிமா சென்ஸார் போல் எடுபடவில்லை. ஆகையால் திரைப்பட சென்ஸாரைப் போல அவர்கள் கண்களுக்கும் இமைகள் திரையாயின; காதுகள் மட்டும் கூர்மையாயின.

சக்கரையம்மாவும், சினியம்மாவும் இப்போது விவகாரத்தை தர்க்கரீதியாக அலசப்போவது போல, நிதானமாகப் பேசினார்கள்.

“ஏடி சக்கரை… நீ எத்தனை குடியக் கெடுத்திருக்கே… அதாவது ஒனக்கு ஞாபகம் இருக்கா மூதேவி…”

“சொல்லுடி பாக்கலாம் கிழட்டு முண்டை.”

“கட்டுன புருஷனுக்குத் துணி வெச்சுக் கும்பிடும்போதே அதுக்காக வந்திருந்த அக்கா புருஷனோட கதவச் சாத்துனவா நீ… அதனாலய ஒன் அக்கா ஒன் வீட்டு வாசற்படி இன்னும் ஏறல. பருத்தி வியாபாரி ஆவுடைக்கண்ணன, வீட்டுக்குள்ளய வெச்சு நூலா பிரிச்சு சேதாரம் பண்ணுனே… வெளியூர் ஒயர்மென் பெண்டாட்டியக் கூட்டிட்டு ஊருக்கு வரப் போனவனைக் கண்ணடிச்சு கைக்குள்ள போட்ட… கடைசியில அவன் பொண்டாட்டி கன்னி கழியாமலே பொறந்த வீட்ல இருக்க வேண்டியதாப் போச்சு… ஊரு ஒலகத்துல ஒவ்வொருத்திவ இடக்கு மடக்கா ஒருத்தன வச்சிருப்பாள் ஒனக்கு என்னடான்னா கண்ணுல படுறவன் எல்லாம் வைப்பாளன். தொட்டா பொறுக்காம படுக்கிற தட்டுக்கெட்ட முண்ட… நீயா எனக்கு சோடி…”

“ஆமாடி… நான் அப்படித்தான்… புருஷன் செத்ததால அப்படி ஆயிட்டேன்னே வச்சுக்குவோம். ஆனா நீ… உன்னைப் பத்தி ஊருக்குத் தெரியாதுங்கிறதால நீ பத்தினின்னு அர்த்தமா…”

“எங்க… விரல மடக்கிச் சொல்லுடீ… என்னப் பத்தியோ, இந்த இவளைப் பத்தியோ… சபைல சொல்லுடி சண்டாளி… கழுதையும் கவரிமானும் ஒண்ணாகுமா”. ஆலம்பழமும், அண்டங்காக்காயும் சரியாகுமாடி… சொல்லுடி பார்க்கலாம்…”

சினியம்மா, தன் பேச்சுக்கு ஆக்ஷன் வேறு கொடுத்தாள். கீழே கதிகலங்கி உட்கார்ந்திருந்த மருமகள் ராசகுமாரியைத் தூக்கிப் பிடித்து, சக்கரையம்மாவின் முன்னால் நிறுத்தி, “சொல்லுடி’ என்றாள். ராசகுமாரி, கண்களை மூடிக்கொண்டாள். காதுகளை மூடநினைத்துக் கண்களிலிருந்து கைகளை அகற்றியபோது, மாமியார் அவற்றைப் பிடித்துக் கொண்டாள். சக்கரையம்மா, எந்த நிமிடத்திலும் அவள் ‘சங்கதியை’ வாயிலிருந்து ஒலிபரப்பப் போகிறாள் என்று பயந்தாள்! அங்குமிங்குமாய்த் தலையாட்டினாள். மாமியாரின் எதிரியிடம் கும்பிடுவது போல் கைகளைக் கொண்டு போனாள். ஆனால் சக்கரையம்மா, அவளைப் பார்க்கவில்லை. வயிறு மேடானதால், மார்பகம் மலையாக, உடம்பின் மேல் பக்கமும், கால் பக்கமும் பாதாளம் போல் தோன்ற, அசல் வாத்து மாதிரி அங்குமிங்குமய் பார்த்த ராசகுமாரியை அவள் கண்டுக்கவே இல்லை.

சினி, சக்கரையை அதட்டியது.

“ஏமுளா வாயை மூடிட்டே… என்னப் பத்தியோ, இவளப் பத்தியோ சொல்லு பார்க்கலாம்…”

“ஏ கெழட்டு முண்டே… நான் சொல்லிட்டேன்னா, நீ தூக்கு போட்டு சாக வேண்டியிருக்கும்… என் வாயை கிளறாதே…”

ராசகுமாரி, முகத்தை மூடிக் கொண்டு அழுதாள். நாகரீகமான குடும்பத்திலிருந்து வந்த அவள், இப்படிப்பட்ட ஒரு தெருச்சண்டைக் குடும்பத்தில் மாட்டிக் கொண்டதற்காக அழுவதாக, மற்றவர்கள் நினைத்தார்கள். சினியம்மா அதட்டினாள்.

“வாய்க்குள்ள கொழுக்கட்டையா வெச்சிருக்கே… சொல்லேமுளா…”

“சொல்லாமலா இருப்பேன்… நீ எங்க மாமனார வச்சுக்கிட்டு இருந்தது ஊருக்குத் தெரியாம இருக்கலாம். ஆனா, எனக்குத் தெரியும்டி… என் வீட்டுக்கார மவராசன் சாகிறதுக்கு முன்ன என்கிட்ட சொன்னார்டி… அவரு, அப்பாகிட்ட கடைசிவரைக்கும் பேசாம இருந்ததுக்கு நீதான்டி காரணமாம்… ஆம்பளைதான் பொம்புள வீட்டுக்கு வருவான். நீ என்னடான்னா, எங்க வீட்டுக்குள்ளயே வந்து, அதோ அன்னா தெரியுதே கட்டிலு…. அதுலயே என் மாமனாரோட பொராண்டிருக்கே… எம் புருஷன் சொல்லிட்டுத்தான்டி செத்தாரு….”

ராசகுமாரிக்கு தனக்கும் ஒரு துணை கிடைத்த திருப்தி. ஆனால் சினியம்மாவோ வெலவெலத்தாள். கூட்டம் முழுவதும் அவளையே கண்களால் கொத்தியது. சிலர் சக்கரையம்மாவின் வாசல்பக்கம் போய் அந்தக் கட்டிலையே ரசனையோடு பார்த்தார்கள். சண்டையில் சுவை குறைந்து வெளியேறப் போனவர்கள் கூட, கால்களைத் தேய்த்துக் கொண்டே அங்கேயே நின்றார்கள். நிலைகுலைந்து போன சீனியம்மாவைப் பார்த்து சக்கரையம்மா ஒரு தகவலையும் சொன்னாள்.

“என் மாமனாரோட வப்பாட்டியே… ஏண்டி பேச மாட்டேங்கே… ஒன் மகனோட முக்கும், முழியும் என் மாமனார் மாதிரியே இருக்கத மறைக்க முடியுமாடி…”

சினியம்மாவுக்குப் பேச்சு வரவில்லை. மூணு வருஷத்துக்கு முந்தி செத்துப்போன இந்த சக்கரையம்மாவின் மாமனார் அய்யாத்துரை, அசல் ஒட்டகச்சிவிங்கி. சொந்தப் பொண்டாட்டியே ‘மாப்பிள்ளை பிடிக்கலை என்று முதலிரவுக்குப் போக பல இரவுகள் யோசித்தாளாம். அப்படிப்பட்ட தெம்மாடிகிட்ட சேத்துப் பேசுறாளே… கையும் களவுமாப் பிடித்தது மாதிரி சனங்க பாக்குதே. பத்தினியும், பத்தரை மாத்துப் பத்தினியுமான தன்னை ஒரு பலபட்டறைப் பய பொண்டாட்டி இப்படிப் பேசிப்பிட்டாளே…

சினியம்மா, பேச்சு வராமலே உடம்பைக் குலுக்கினாள். முந்தானையை எடுத்துப் பந்து போல் சுருட்டி, வாய்க்குள் திணித்தாள். அப்படியும், அழுகையை அடக்க முடியவில்லை. அக்கம் பக்கம் பார்த்து அமங்கலமாய் விம்மியவள், அப்புறம் மனம்விட்டு முகம் விட்டு அழுதாள். மாறி மாறித் தலையில் அடித்துக் கொண்டாள். பிடிக்க வந்த மருமகளை தலையிலேயே, தன் தலையை முட்டவிட்டாள். அவள் தோளிலேயே தலையை மடக்கிப் போட்டு அவள் முதுகை நனைத்தாள். ஐயையோ… இப்படிக் கேட்டு. இன்னும் நான் உயிரோடு இருக்கேனே…” என்று மருமகளின் முதுகிலிருந்து தலையைத் தூக்கி, அங்குமிங்குமாய்க் கண்களை சுழற்றினாள். கூட்டம் வாயடைத்து நின்றது. ஒத்தாசைப் பெண்கள் சிறிது விலகிப்போய் நின்றார்கள். சக்கரையம்மா எதிரியை மானபங்கப் படுத்திய பெருமிதத்தோடு கைகளுக்கு சொடக்குப் போட்டாள். அப்போது –

மாட்டுவண்டிச் சத்தம் கேட்டது. மணியோசைச்சத்தம்: ‘இம்பா, இம்பா என்ற மணிச்சத்தம். கட்டை வண்டியின் சக்கரங்கள் கரடு முரடான தரையிலும், கற்களிலும் மோதி ஏற்பட்ட தபேலா சத்தம். அந்த சத்தங்கள் பெரிதாகிப் பெரிதாகி, அவற்றை உற்பத்தி செய்த அந்த வண்டி, தெருவின் திருப்பத்திலி ருந்து சண்டைக்களம் நோக்கி நெருங்கியது. ஒரு கையில் மாடுகளின் மூக்கணாங்கயிறுகளைக் கையில் பிடித்துக் கொண்டு, மறுகையில் சாட்டைக் கம்பை வைத்துக் கொண்டு வண்டியோட்டி வந்த செல்லப்பாண்டி, அம்மாவைப் பார்த்ததும் அப்படியே கிழ்ே துள்ளினான். மிரண்ட மாடுகளையும், குடைசாயப் போன வண்டியையும், கட்டில்கட்டி மாடக்கண்ணு சரிப்படுத்தினார்.

சினியம்மா, மகளை அப்படியே கட்டிப்பிடித்துக் கொண்டாள். பிறகு சிறிது விலகி நின்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டாள். செல்லப்பாண்டி, புதுப் பொண்டாட்டியைக் கோபமாகப் பார்த்தான். அவள் பயந்துபோய், தான் சண்டைக்கு ஒரு காரணம் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லப் போவது போல், மாமியாரை அணைக்கப் போனாள். உடனே அவள், “சண்டையில் ஒரு ஒத்தாசை செய்யாம இப்ப மட்டும் புருஷன் மெச்சுறதுக்கு வாரியாக்கும் என்று சொல்விட்டு, அவளிடமிருந்து ஒரு திமிரு திமிறி, சாட்டைக் கம்பு போலவே வாட்டசாட்டமாய் இருந்த மகனைப் பார்த்தாள். விரிந்த தலையோடு நீர்படிந்த முகத்தோடு ஒப்பாரியிட்டாள்.

“இந்த சண்டாளி என்ன கேக்கக்கூடாத கேள்வி யா கேட்டுட்டா. என் வாயால எப்படிடா சொல்றது…? இன்னும் ஒரு தடவை சொல்லுழா… எங்கழா நகரப் பார்க்கே… நின்ன இடத்துலயே நில்லு. அய்யோ… என்ன மாதிரி கேட்டுட்டா… அதைத் திருப்பிச் சொன்னா அதே மூச்சுல என் உக்ரு போயிடுமே… என் பேரனைப் பார்த்துட்டு நான் சாகாண்டாமா…”

செல்லப்பாண்டி, சக்கரையம்மாவைப் பார்த்தான். அவளோ, மேற்கொண்டு நகராமல் உதட்டைக் கடித்தபடி வீறாப்பாய் நின்றாள். “அண்ணி அண்ணி என்று அடிக்கடி கூப்பிட்ட அவளை, அந்த கணத்திலேயே ஒரு பகையாளியாய்ப பார்க்க அவனால் இயலவில்லை. அந்தச் சிரிப்பையும், “மச்சி மச்சி என்ற அவளின் பேச்சையும் அவனால் திடுதிப்பென்று உதற முடியவில்லை. ஆனாலும், நெஞ்சில் ஒலித்த சக்கரை அண்ணியின் வார்த்தைகளை, அம்மாவின் வார்த்தைகள் அழித்துக் கொண்டிருந்தன. அவன், அக்கம்பக்கம் பார்த்தபோது, கட்டில் கட்டி பட்டும் படாமல் சொன்னார்.

“பொம்பளயுவ பேச்சைப் பெரிசா எடுக்கப்படாது.டா.. அப்படி ஒண்ணும் பெரிசாவும் நடக்கல… ஒங்கம்மா சக்கரையோட சங்கதியைத் துண்டு துண்டா வெட்டிப் போட்டாள். உடனே, அந்தப் பன்னாடைப் பய மவள், ஒங்கம்மா அவளோட மாமனாரை

வெச்சிருந்ததா ஒரு வார்த்தை பேசிப்புட்டாள்… அம்புட்டுத்தான் விஷயம்… விட்டுத் தள்ளு கழுதைய…”

“ஏ கட்டில்கட்டி… அந்த மூளி அலங்காரி, மூதேவி சண்டாளி ஒனக்குக் கட்டில் கட்டுறதுக்கு கூப்பிட்டான்னு ஒரஞ்சாஞ்சா பேசுறே… ஏண்டா… என் மவனே, ஒன் மூக்கும் முழியும் அந்த வீட்டு காலமாடன் மூக்கும் முழியும் மாதிரி இருக்குன்னு அந்த மூளி சொல்லுறாடா… நான் இனிமேல் இருக்கணுமாடா… அய்யோ அய்யய்யோ…”

செல்லப்பாண்டி, சக்கரையம்மாவை ஒரு சக்கையைப் போல் பார்த்தான். அத்தனை உறவும் உறவாடலும் இப்போது பகையாய் பகையாடலாய் மாறின. கிழே கிடந்த சாட்டைக்கம்பை எடுத்துக் கொண்டு, அவளை நோக்கிப் பாய்ந்தான். அவளோ, நகத்தைக் கடித்துக் கொண்டு “அடிடா பார்க்கலாம் என்பது போல் நின்றாள். இதற்குள், இரண்டு ஆண்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களையும துக்கிக் கொண்டு, அவன் சக்கரையைப் பார்த்து ஓடினான். தெம்மாடி’யான காலமாடனுக்கு, தான் பிறந்து, சண்டியரான அப்பாவுக்குப் பிறக்காமல் போயிருப்போமோ என்ற சந்தேகம் அதுவே ஒரு ஆவேசம். அவள் மட்டும் அகப்பட்டிருந்தால், அந்த சாட்டைக் கம்பே ஒரு வேல் கம்பாகியிருக்கும். அதற்குள் பலர் வந்து, அவனைக் குண்டுக்கட்டாய்த் துக்கினார்கள். இதனால் வேட்டி அவிழ்ந்து டவுசரோடு நின்ற அவன் வாயையே சாட்டையாக்கினான்.

“கட்டுனவன் செத்ததும் கண்டவன் கூடெல்லாம் படுத்துப் படுத்து, அவங்கள சாகாமல் சாகடிச்ச செறுக்கி… நீயா எங்கம்மாவைப் பார்த்து இப்படிக் கேட்டே?”

“நான்தாண்டா கேட்டேன் எரப்பாளிப் பய மவனே… இதோட போயிடு. இல்லாட்டா இன்னொரு விஷயமும் அம்பலமாயிடும்… அப்புறம் நீ ஊர்ல் இப்படி நெஞ்ச நிமுத்திக்கிட்டு லாந்துறது மாதிரி லாந்த முடியாது… என் வாயக் கிளறாதடா…”

செல்லப்பாண்டி, தன்னைப் பிடித்தவர்கிளிடமிருந்து திமிறிக் கொண்டிருந்தபோது, ராசகுமாரி பல்லைக் கடித்து அழுகையை அடக்கினாள். காதுகள் இரச்சல் குழிகளாயின. சவுக்கு மரம் மாதிரி அவை ஆடுவது மாதிரி அனுமானம். தலை தறுதலையாய்க் கனத்தது போன்ற பாரம். தரை நொறுங்கி, கால்கள் பாதாளப் புதைமண்ணுக்குள் சிக்கிக் கொண்டதைப் போன்ற வாதை… மூச்சு விட முடியாத மூர்ச்சை. அங்கயே செத்து ஆகாய வெளியில் மேலும் கீழுமாய்ப் படுத்திருப்பது போன்ற பிரமை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, டவுனிலிருந்து ஊருக்கு டெக் கொண்டு வந்து சினிமா காட்டிய பேதில போவான் ஆறுமுகம், இவளைப் பார்த்துசிரிக்க, இவள் அவனைப் பார்த்து சிரிக்க அவர்களுக்குக் நேரம் காலம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. இருவருக்குமிடையே இருந்த ஏடாகூடம் ஊருக்கும் தெரிந்துவிட்டது. அடுத்த சாதிக்காரனான அவனை குடும்பத்தினர் (மரத்தில்) கட்டி வைக்கப் போனபோது, அந்தப் பயல், தனது பைக்குள் இருந்த கடிதங்களைப் பிறந்த வீட்டுக்கு வந்திருந்த… ஏற்கெனவே பரிச்சயப்பட்ட சக்கரையம்மாவிடம் நீட்டினான். இவளும், இந்த ராசகுமாரியின் குடும்பத்திற்கு புத்திமதி சொல்லி விஷயத்தை விட வைத்தாள். அதோடு, காதும் காதும் வைத்தது போல், இந்த ராசகுமாரிக்குத் தனது அனுபவத்தின் அடிப்படையில், தானே ஒரு நாட்டு வைத்தியராகி, பிள்ளை கழிச்சாள்: இது நிசம், இந்த நிசம் வெளிப்பட்டால், அவள் வாழ்க்கை பொய்யாய் பழங்கந்தலாய் போய்விடுமே…

ராசகுமாரி, இறுதியில் தலைக்கு மேல் தண்ணீர் போன விரக்தியில் உடம்பின் ஒரு அணுவைக்கூட அசைக்காமல் அப்படியே நின்றாள். செல்லப்பாண்டிேயோ, சிக்கெனப் பிடித்த மனிதக் கும்பலி லிருந்து விடுபட, ஒரு போராட்டம் செய்து கொண்டிருந்தான். அம்மாக்காரிதான், எதிரியை உசுப்பி விட்டாள்.

“ஏழா சக்கரை… நீ ஒரு அப்பனுக்குப் பொறந்தவன்னா… எதையோ சொல்லுதேன்னு சொன்னியே… அதை இப்பவே ருசிப்பிக்கணும்…”

“ருசிப்பிக்கத்தாண்டி போறேன்… நீங்க கன்னின்னு கோழி அடிச்சு சேலை வச்சிக் கும்பிடுறியளே. உன் பெரிய மகள் நாகம்மா… அவள் ஆடு மேய்ச்சபோது, மாடு மேய்ச்ச மயில்சாமியோடு ஒரு இது வச்சிருந்தாளாம் என் புருஷன் சொல்லிட்டுத்தான் செத்தாரு…” “ஏழா… உன் வாயில் புத்து வரும்… அவள் சாகும்போது அவளுக்கு வயசு எட்டுழா நாயே…”

“எட்டு வயசுல காதல் வரக்கூடாதா…”

“அது ஒன் புத்தி… என் புள்ளையச் சொன்னவள் நாக்கு அவிஞ்சி போயிடும்…”

செல்லப்பாண்டி, தூக்கிப் பிடித்த கூட்டத்திலிருந்து விடுபட்டு மீண்டும் சக்கரையைப் பார்த்து ஒடப் போனான். சாட்டைக் கம்பை எடுப்பதற்காக அவன் அங்கும் இங்குமாய்த தலையைத் திருப்பியபோது, பலர் அவனை அமுக்கிப் பிடித்தார்கள். அம்மாக்காரி சினியம்மாவே இப்போது புத்திமதி சொன்னான்.

“எட்டு வயசுப் பச்ச மண்ணுக்கே குத்தம், குற சொல்லுற பைத்தியக்காரிக்கிட்ட என்னடா பேச்சு…? சந்திரனெப் பார்த்து நாய் கொலைச்சா கொலைக்கட்டும்… வாடா உள்ள…”

“ஆமாம்பா… ஆமாம். இன்னும் கொஞ்ச நேரத்துல மூணு மாசக் குழந்தை சிரிக்கதக் கூட இவ வேற விதமாக அர்த்தப்படுத்துவா. உள்ள போடா…”

செல்லப்பாண்டியை நான்கைந்து பேர் தள்ளிக் கொண்டு போய் வீட்டுக்குள் விட்டார்கள். அதே சமயம், அவர்கள் அவன் ‘மூக்கையும் முழியையும் ஆராய்ச்சி மாணவர்போல் ஆய்வு செய்தார்கள். அம்மாக்காரியும் தனது கற்பு, செத்துப்போன தன் மகள் மூலம் உயிர்ப்பிக்கப்பட்டதை நினைத்து பெருமையில்லை என்றாலும், சிறுமைப்படாமல் உள்ளே போனாள். உச்சக் கட்டத்தை எதிர்பார்த்த கூட்டம், உடைந்து போனது.

செல்லப்பாண்டியின் மனைவி ராசகுமாரிதான், நடந்ததை நம்ப முடியாமல் நகத்தைக் கடித்தாள். இன்னும் வீட்டுக்குள் போக வேண்டும் என்ற சுரணையில்லாமல், சண்டைக் களத்திலேயே நின்றாள். வாசல் படியில் தலைசாய்த்து, எங்கேயோ தொலைநோக்காய்ப் பார்த்த சக்கரையம்மாவை ஓரங்கட்டிப் பார்த்தாள். அந்த சக்கரை அத்தை அசல் மகாராணி மாதிரி, ராசகுமாரியை பார்க்காமலேயே, தன்பாட்டுக்குப் பன்மையில் பேசினாள்:

“நாங்கல்லாம் பட்டுப்போன வாழைய வெட்டுவோம்: குலைபோட்டு முடிஞ்ச வாழைமரத்தை சாய்ப்போம்… ஆனால், துளிர்த்து வார வாழக்குருத்த வெட்ட மாட்டோம்… அது குலைபோட்டுப் பார்க்க ஆசைப்படுவோமே தவிர, கொலை செய்யமாட்டோம்: இப்ப மட்டுமில்லை. எப்பவுமே..”

– புதியபார்வை (பொங்கல், சிறுகதை மலர் – ஜனவரி 1993)- சமுத்திரக் கதைகள், முதற் பதிப்பு: டிசம்பர், 2001, ஏகலைவன் பதிப்பகம், சென்னை – 600 041

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *