என் கணவரைக் கொடு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 20, 2021
பார்வையிட்டோர்: 10,005 
 

சாலையைக் கடக்க முயன்ற சேகர் நிலை தடுமாறிப் போனான். எதிரில் வந்த கார் அவனை நெருங்கியதும் பயங்கர ஒலியுடன் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்றது. ஒரு விநாடியில் பிழைத்தான் அவன். ஆத்திரத்துடன் காரை ஏறிட்டு நோக்கினான். உள்ளே இருந்த அவளைக் கண்டதும் அவனுக்கு ஒரே அதிர்ச்சி!

கவர்ச்சியான முகம்; அந்தஸ்தின் மிடுக்கு; அவள் கழுத்திலும் காதுகளிலும் வைரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன.

அவள் –

கோமுதானா?

இல்லை; பிரபல சினிமா நட்சத்திரம் குமாரதேவி.

சேகரைப் பார்த்ததும் அவள் கண்களில் ஒரு மிரட்சி. விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டாலும் டிரைவருக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. தாமதிக்காமல் காரை அந்த இடத்தை விட்டுக் கிளப்ப முயன்றான்.

‘டிரைவர், காரை நிறுத்து’ என்றாள் குமாரதேவி.

கார் நின்றது. அவள், முகத்தைத் திருப்பி சேகரைப் பார்த்தாள்.

‘கோமு…! சேகரின் குரல் வியப்புடன் ஒலித்தது.

‘முதலில் காரில் ஏறுங்கள். என்னைப் பார்த்தால் கூட்டம் கூடிவிடும்.’ என்றாள் அவள் அவசரத்துடன்.

அவன் காரில் ஏறினான். கார் வேகமாகப் பறந்து சென்று அவள் பங்களாவின் போர்ட்டிகோவில் போய் நின்றது. அந்த பங்களாவைப்பார்த்து சேகர் மலைத்து நின்றான். அங்கே செல்வம் கொடி கட்டிப் பறந்தது. குமாரதேவி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள்.

‘கோமு…’

‘இப்போது நான் கோமு இல்ல்லை; குமாரதேவி!’

‘சினிமாவில் நான் உன் உருவத்தைப் பார்க்கும் போதெல்லாம் நீதானோ என்று சந்தேகப்பட்டேன். நீ எப்படி…?’

குமாரதேவி அவன் கைகளைப் பற்றிச் சாப்பிட அழைத்துச் சென்றாள். டைனிங் டேபிள் முன் தன் அருகில் அவனை அமர்த்திக் கொண்டாள். இரண்டு வேலைக்காரர்கள் தட்டேந்திப் பரிமாறினர்.

சாப்பிட்ட பின் அவனை அவள் மாடிக்கு அழைத்துச் சென்றாள். மிக அழகாகக் குளு குளுவென்றிருந்தது அந்த அறை. விலை உயர்ந்த கட்டில்கள்! மெத்தென்று மெத்தைகள்!

‘சிறிது நேரம் படுத்துக் கொள்ளுங்கள்’ என்றாள் குமாரதேவி.

கட்டிலில் படுத்துக் கண்ணயர்ந்து விட்டான் சேகர். சுகமான தூக்கம். கண் விழிக்கவும் சிற்றுண்டி தயாராக இருந்தது. குமாரதேவி தன் தளிர்க் கரங்களால் தம்ளரை ஏந்தி சுவை மிகுந்த பானத்தை சேகரின் வாயில் புகட்டினாள்.

பதினைந்து தினங்களுக்கு மேல் ஆகிவிட்டன. சேகர் தனக்கு ஒரு வீடு இருப்பதையே அடியோடு மறந்துவிட்டான். அவனைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்ட ரேவதியின் நினைப்போ, அவனது இரண்டு குழந்தைகளின் எண்ணமோ எல்லாமே அவனை விட்டு அடியோடு போய்விட்டது.

ரேவதி இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு திணறிக் கொண்டிருந்தாள். ‘அம்மா! அப்பா எங்கே?’ என்று அவளுடைய ஆறு வயதுப் பையன் ராஜு அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். மூன்று வயதுப் பெண் கமலி ‘அப்பா, அப்பா’ என்று ஏங்கிக் கொண்டிருந்தது.

ஆபிசுக்குப் போய் விசாரித்தாள் ரேவதி. அங்கே அவன் வேலையை ராஜிநாமா செய்துவிட்ட விஷயம் தான் தெரிந்தது. துடிதுடித்துப் போய்விட்டாள். கணவன் குடும்பத்தைக் கைவிட்டு ஓடிவிட்ட தவிப்புடன் கைச் செலவுக்கும் பணமில்லாமல் தத்தளித்தனர்.

சேகர் இப்படிச் செய்வானென்று அவள் நினைக்கவே இல்லை. அவனைக் கல்யாணம் செய்துகொண்ட போது எத்தனை இடைஞ்சல்கள்? எவ்வளவு எதிர்ப்புகள்? சேகரும் ரேவதியும் ஒரே ஆபிசில் வேலை பார்க்கும் போது அவர்களிடையே காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகுவது கண்டு ஆபிசே பொறாமைப்பட்டது. மானேஜர் கண்டித்தார். சேகர் வீட்டிலிருந்து பலமான எதிர்ப்புகள். ரேவதிக்குக் கூட கெஞ்சியும் பயமுறுத்தியும் எத்தனையோ கடிதங்கள் வந்தன. எல்லாவற்றையும் உதாசீனம் செய்துவிட்டுத் தைரியமாக அவர்கள் கல்யாணம் செய்து கொண்டனர். அதன் காரணமாக அவர்கள் வேலை கூட போய்விட்டது. எவ்வளவோ முயற்சிகளுக்குப் பின் சேகருக்கு மட்டும் வேலை கிடைத்தது.

ரேவதியிடம் கொண்ட காதல் தன் ஊரையும் நெருங்கிய சொந்தங்களையும் கூடத் துறந்து விட்டான் சேகர். ‘என் உயிரே ரேவதிதான்’ என்று எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருந்த அவனா அவளை ஒரேடியாக மறந்துவிட்டுப் போய் விட்டான்?

பக்கத்து வீட்டு மாணிக்கம் ஒரு நாள் ஓடோடி வந்தான். ‘ரேவதியம்மா! சேகர் அய்யா எங்க இருக்கார்னு கண்டுபிடித்து விட்டேன்’ என்றான்.

போர்ஷன்காரர்கள் எல்லோரும் அங்கு கூடி விட்டனர். ‘எங்கே, எங்கே?’ என்று அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

‘சினிமா நடிகை குமாரதேவி வீட்டில் தான் இருக்கிறார். குமாரதேவியைக் கல்யாணம் செஞ்சிக்கிருக்கார்’ என்றான்.

யாராலும் அதை நம்ப முடியவில்லை.

‘குமாரதேவி எங்கே? இவர் எங்கே? நீ வேறு யாரையோ பார்த்துவிட்டுச் சொல்கிறாய்’. என்றார் அடுத்த போர்ஷன்காரர் ஒருவர்.

‘குமாரதேவியும் சேகர் அய்யாவும் ஒண்ணா காரில் போறதை நான் என் கண்ணால் பார்த்தேன். குமாரதேவி வீட்டு வேலைக்காரங்களை விசாரிச்சேன். சேகரய்யா குமாரதேவியை கல்யாணம் செய்துகிட்டது உண்மைதான்’ என்று மாணிக்கம் உறுதியாகக் கூறினான்.

ரேவதி ‘ஓ’வென்று அழுதுவிட்டாள். அவளைச் சமாதானம் செய்தார் பொன்னையா. அந்தப் பகுதியில் அவர்தான் பெரிய மனிதர். விவகாரம் என்று வந்தால் பிரதிபலன் எதிர்பாராமல் நல்ல முறையில் தீர்த்து வைப்பார் அவர்.

பொன்னையா இரண்டு பேர்களுடன் குமாரதேவியின் பங்க்ளாவுக்குச் சென்றார். வாசலில் நின்ற காவல்காரன் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டான். காலையிலேயே குமாரதேவியும் சேகரும் ஸ்டூடியோவுக்குப் போயிருந்தனர். அவர்கள் வரும்வரை பொன்னையா பொறுமையோடு பங்களாவுக்கு வெளியே காத்திருந்தார். ரொம்ப நேரத்துக்குப் பிறகு குமாரதேவியுடன் நெருக்கமாக உட்கார்ந்திருந்த சேகர் பொன்னையாவைப் பார்த்தான். உடனே தன் முகத்தை மறு பக்கம் திருப்பிக் கொண்டான். போர்டிகோவில் கார் நின்றதும் இறங்கி வேகமாப் பங்களாவுக்குள் போய்விட்டான். பொன்னையாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. காரைப் பின் தொடர்ந்து ஓடி வந்தார். அவரைத் தடுக்கக் காவல்காரன் போட்ட கூச்சலைக் கேட்டு காரிலிருந்து இறங்கிய குமாரதேவி திரும்பிப் பார்த்தாள்.

பொன்னையா அவளைக் கையெடுத்துக் கும்பிட்டார்.

குமாரதேவி அவரை ஏற இறங்கப் பார்த்தாள். ‘யார் நீங்கள்?’

‘நாங்க சேகர் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரங்க.’ என்றார் பொன்னையா.

‘எங்கே வந்தீங்க?’

‘சேகர் தம்பி இருக்கிறதைப் பார்த்தோம்…’

‘அவர் இங்கே என் கூடத்தான் இருக்கிறார். அதற்கென்ன?’

’வீட்டில் ஒரு வார்த்தைகூட சொல்லிக்காம அவர் வந்துவிட்டார். அவரை அழைத்துப் போக வந்தோம்.’

‘அவர் அங்கே வரமாட்டார். இங்கேதான் இருப்பார். இனி அவர் வீடு இதுதான்’.

‘அம்மா அவருக்கு பெண்சாதி பிள்ளைகள் இருக்கு.’

‘இருந்தால் என்ன? அவருக்கு அங்கே வரப் பிரியமில்லை. வீணாய் இங்கே வந்து தொந்தரவு கொடுக்காதீங்க.’

‘நீங்க பேசுவது சரியில்லை. ஒரு குடும்பத்தை தவிக்கவிட்டு வந்திருக்காரே அவர்; இது நியாயமா?’

‘அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. இங்கே அவர் சுகமகா இருக்கிறார். அதைக் கெடுக்காதீங்க.’

எவ்வளவு மமதையான பேச்சு? பொன்னையாவுக்கு வேகம் தான். ஆத்திரம் கொண்ட மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவர், ‘சேகரையாவது பேசச் சொல்லுங்க’ என்றார்.

‘அவர் பேசமாட்டார். வம்பு பண்ணாம பேசாம போயிடுங்க..இல்லைன்னா போலீசுக்குப் போன் பண்ண வேண்டி வரும்’.

பொன்னையா யோசித்தார். இன்னும் சிறிது நேரம் நின்றால், தான் மரியாதை இழக்க நேரிடும் என்பதை உணர்ந்தார். மேலே ஒன்றும் பேசாமல் நேரே ரேவதியிடம் திரும்பி வந்தார்.

‘அம்மா உன் வீட்டுக்காரரை நல்லா வசியம் பண்ணி வச்சிருக்கா அந்த சினிமாகாரி. சேகர் எங்களைப் பார்த்தும் பேசாமல் போய்விட்டார். சினிமாவில் தான் பெரிய கற்புக்கரசி மாதிரி நடிக்கிறாள் அவள். கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் பேசுகிறாள். நீ போய்த்தான் உன் வீட்டுக்காரரைக் கூட்டி வரணும்’ என்று பொன்னையா நடந்தவைகளைக் கூறினார்.

‘அவ்வளவு தூரம் நடந்ததா அந்த சினிமா சிறுக்கியை நான் ஒரு கை பார்க்கிறேன்’ என்று வீராங்கனையாய் எழுந்தாள் ரேவதி. தன் இரண்டு குழந்தைகளையும் கையில் பிடித்துக் கொண்டு புறப்பட்டாள்.

‘நானும் கூட வருகிறேன்’ என்று பொன்னையாவும் அவளுடன் புறப்பட்டார்.

IMG_20160302_124435373.jpg

இரு குழந்தைகளோடு ரேவதி குமாரதேவியின் பங்களாவுக்கு வந்தாள். காவல்காரன் அவளை உள்ளே விட மறுத்தான்.

‘வழி விடுகிறாயா இல்லையா’ என்று கத்தினாள் ரேவதி.

சேகர் இதைத் தற்செயலாய் மாடியிலிருந்து எட்டிப் பார்த்தான். ரேவதியைக் கண்டதும் சுறுக்கென்று உள்ளே போய்விட்டான். ரேவதி காவல்காரனையும் மீறி உள்ளே ஓடினாள். காவல்காரன் பெரும் கூச்சல் போட்டான்.

‘இதென்ன சத்தம்?’ என்று குமாரதேவி வாசலுக்கு வந்தாள்.

ரேவதி அவள் எதிரில் போய் கோபத்தோடு அவளைப் பார்த்தாள். பொன்னையாவும் உடன் வந்து நின்றார்.

‘யார் நீ?’ என்று அதிகாரத்தோடு கேட்டாள் குமாரதேவி.

‘அவர் எங்கே? முதலில் சொல்லு’ என்று ரேவதி அனல் பறக்கக் கேட்டாள்.

‘நான் அவர் மனைவி’ என்று உரிமையோடு சொன்னாள் ரேவதி.

‘நானும் அவருக்கு மனைவிதான்!’

‘இல்லை; நீ ஒரு நாளும் அவருக்கு மனைவியாக முடியாது. சட்டப்படி நான் தான் அவர் மனைவி.’

‘நீ அவர் மனைவி என்று எந்தச் சட்டத்திலும் எழுதி வைத்திருக்கிறது?’

‘நாங்கள் ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொண்டிருக்கிறோம். நினைவிருக்கட்டும்.’

‘நான் நினைத்தால் உன் ரிஜிஸ்டர் கல்யாணத்தையே இல்லாமல் செய்துவிடுவேன். எனக்கு அவ்வளவு சக்தி உண்டு’.

‘உன்னால் முடியுமா? என்னைச் சாதாரணமாக நினைத்துவிடாதே. நான் படித்தவள். உன் பணத்தால் நீ ஒன்றும் என்னைச் செய்துவிட முடியாது.’

‘படித்த தைரியத்தில் தான் இங்கு வந்திருக்கிறாயோ?’

ரேவதியின் முகம் சிவந்தது. ‘உன்னிடம் யாசகம் கேட்க நான் வரவில்லை. அவரைக் கூப்பிடு. அவரிடம் பேசிக் கொள்கிறேன்’ என்றாள்.

‘ஓகோ! அவரிடம் தான் பேச வேண்டுமோ? அவரை வரச் சொல்கிறேன். பேசிப் பாரம்மா பேஷாய்!’

குமாரதேவி சேகரை அழைத்து வரச் சொன்னாள். சேகர் வந்தான்.

‘அவள் உங்கள் மனைவியாம். செல்வமும் புகழும் பெற்ற ஒரு மனைவியை விட்டு நீங்கள் இந்தத் தரித்திரம் பிடித்த மனைவியோடு போக வேண்டுமாம். போகப் போகிறீர்களா?’ என்று கேட்டாள் குமாரதேவி.

‘என் மனைவி நீ தான். அவளைப் பற்றி எனக்குக் கவலை இல்லை.’ என்று சேகர் ரேவதியைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் கூறினான்.

‘என்னைப் பார்த்துப் பேசுங்கள்’ என்றாள் ரேவதி ஆத்திரத்துடன்.

‘நீ இங்கு ஏன் வந்தாய்?’ என்று வெறுப்புடன் கேட்டான் சேகர்.

‘இரண்டு குழந்தைகளோடு என்னை நடுத்தெருவில் விட்டுவிட்டு ‘ஏன் வந்தாய்?’ என்றா கேட்கிறீர்கள்?’

‘நீ வந்தவுடன் குமாரதேவியுடன் மோதி அவளைப் பேசாத பேச்செல்லாம் பேசினதை நான் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். அவள் தகுதி என்ன? உன் தகுதி என்ன? நீ அவளிடம் பணிஞ்சு போயிருக்கணும்.’

‘நான் குமாரதேவியை நம்பி வரவில்லை. நான் ஏன் அவளுக்கு பணியணும்?’

‘குமாரதேவிக்குப் பணியலேன்னா வெளியே போ! உனக்கும் எனக்கும் இனி சம்பந்தம் கிடையாது.’

‘உங்களை விடமாட்டேன். என் குழந்தைகளுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?’

குமாரதேவிக்கு வேடிக்கையாக இருந்தது இது. பரிகாசமாகச் சிரிக்க ஆரம்பித்தாள் அவள்.

‘என் வயிறு எரிகிறது. நீ சிரிக்கவா செய்யறே?’

‘வயிறு எரிகிறதா? நல்லா எரியட்டும்.’ – குமாரதேவி மீண்டும் சிரித்தாள்.

‘என்னை இந்த கதிக்குக் கொண்டு வந்த நீ உருப்பட மாட்டே! என் வயிறு எரிகிற மாதிரி உன் வயிறும் எரிந்து…’

‘பத்தினி சாபமா?’

‘சீ! கேலியா பண்றே? உங்க ரெண்டு பேரையும் கோர்ட்டில் ஏத்தி சந்தி சிரிக்க வைக்கிறேனா இல்லையா பார்!’

‘கோர்ட்டுக்குப் போகப் போகிறாயா? போம்மா போ! கோமுவைத் தெரியுமா உனக்கு? கோர்ட்டுக்கு அவளையும் அழைத்து வருகிறேன்.’

ரேவதியின் முகம் திடீரென்று மாறியது. நாடி ஒடுங்கித் திணறிக் கொண்டு நின்றாள். பொன்னையாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெண் புலி போல் சீறிய ரேவதி பெட்டிப் பாம்பாய் அடங்குவானேன்? ‘கோமு என்பது யார்?’ என்று கேட்டார் அவர்.

‘அம்மா ரேவதி! கோமு யாரென்று உன் கூட வந்தவரிடம் சொல்லம்மா?’ – குமாரதேவி.

‘வாங்க, நாம் போகலாம்’ என்று ரேவதி புறப்பட ஆரம்பித்தாள்.

‘தப்பி ஓடவா பார்க்கிறாய். கோமு யாரென்று நான் சொல்கிறேன். விவகாரம் பேச வந்தவர் தெரிந்து கொள்ள வேண்டாமா? இவள் யாரைத் தன் கணவர் என்று உரிமை கொண்டாடி வந்திருக்கிறாளோ அவருடைய முதல் மனைவி தான் கோமு. உற்றார் உறவினர் முன் அக்கினி சாட்சியாக இவர் கல்யாணம் செய்தது கோமுவைத்தான். இந்த ரேவதி அந்தக் கல்யாணத்துக்குப் பின் வந்தவள். பட்டணத்தில் இவரோடு ஆபிசில் வேலை பார்த்தாள். கோமு இருக்கும்போதே அவருக்குக் காதல் வலை வீசி அவரை வசப்படுத்திக் கொண்டாள். நானூறு மைலுக்கு அப்பால் கிராமத்திலிருந்த கோமுவுக்கு இந்த விஷயம் தெரிந்தது. தன் கணவனை விட்டுக் கொடுக்கும்படி எத்தனைக்கடிதங்கள் எழுதியிருப்பாள் தெரியுமா? கோமு படிக்காத அப்பாவிப்பெண். அவளால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியத்தில் இந்த ரேவதி பதிலே போடாமல் அலட்சியமாக இருந்தாள். கடைசியில் கோமுவைக் கண் கலங்க வைத்து இவரை ரிஜிஸ்டர் கல்யாணமும் செய்து கொண்டு இவரைக் கிராமத்துக்கே வரவிடாமல் செய்துவிட்டாள் இவள். அந்த நேரத்தில் கோமு பட்ட கஷ்டம்! தவித்த தவிப்பு! வேதனை! இவ்வளவும் நடந்ததா? என்று உங்கள் ரேவதியிடம் கேளுங்கள்’ என்றாள் குமார தேவி.

‘இது உண்மை தானா ரேவதி’ என்று கேட்டார் பொன்னையா.

‘அந்தக் கோமுவைத் தவிக்க விட்டதின் பலன் இப்போது நான் குழந்தைகளோடு நடுத் தெருவில் நிற்கிறேன்’ என்றாள் ரேவதி.

‘உன்னை எவ்வளவு கெளரவமாக நான் நினைச்சிருந்தேன்? நீயும் ஒரு பெண்ணின் குடியைக் கெடுத்தவள் தானா?’

ரேவதி தலை குனிந்து நின்றாள்.

‘இப்போது அந்தக் கோமு எங்கே இருக்கிறாள்?’ என்று கேட்டார் பொன்னையா.

‘நான் தான் அந்தக் கோமு. கணவன் ஆதரவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். அவரைப் பார்க்கப் பட்டணம் வந்தேன். பட்டணத்தில் இவரைத் தேடி நடுத்தெருவில் அலைந்தேன். கையில் பணமில்லாமலும் தங்க இடமில்லாமலும் தவித்த எனக்கு, சினிமா தொடர்புள்ள ஒருவரின் ஆதரவு கிடைத்தது. அவருடைய தூண்டுதலில் சினிமாவில் சேர்ந்து குமாரதேவி ஆகிவிட்டேன். என்னை வயிறெரியச் செய்த ரேவதி வயிறெரிவதை ஒரு நாள் பார்க்கணும் என்று நினைத்தேன். இன்று அதை என் கண்களாலேயே பார்த்து விட்டேன்.’

‘அம்மா உண்மை தெரியாமல் உங்களை ஏதேதோ பேசிவிட்டேன். சேகர் உங்களுக்குத்தான் உரியவர்’ என்று பொன்னையா ரேவதியை நோக்கி, ‘ரேவதி, நியாயத்துக்கு விரோதமாக நடந்தது நீ தான். அதன் பலனை அனுபவித்துத்தான் தீர வேண்டும். உன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போ’ என்றார்.

ரேவதி அழுது கொண்டே குழந்தைகளுடன் புறப்பட்டாள்.

‘நில் ரேவதி! – குமாரதேவி ஓடிப் போய் ரேவதியின் கைகளைப் பற்றிக் கொண்டாள். ‘என் மனம் கல் இல்லை. களங்கமற்ற இந்தக் குழந்தைகளை நான் தகப்பன் இல்லாமல் தவிக்க விடமாட்டேன். அவரை அழைத்துக் கொண்டு போ’. என்றாள்.

சேகருக்குப் போக மனமில்லை. ‘கோமு, நியாயப்படி நான் உனக்குத் தான் கணவன். உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே’ என்றான்.

‘எனக்குத் தெரியும் – நீங்கள் உரிமை கொண்டாடுவதன் ரகசியம். இன்று எனக்குச் செல்வம், புகழ் இருப்பதால் மனைவி என்று ஒப்புக் கொள்கிறீர்கள். மதிக்கிறீர்கள். என்னைப் பழைய நிலையில் இருந்தால்…ஏற்பீர்களா? நம்பிய பெண்ணைக் கைவிடுவதுதான் உங்களுக்குக் கலையாயிற்றே! கள்ளம் கபடமற்ற இரண்டு குழந்தைகள் இருந்தும் கூட உங்கள் மனம் கல்லாக இருந்ததே! உங்களை இன்னும் நான் நம்புவதா? நான் சம்பாதித்த பணம் வேறு எங்காவது போய் விடுமோ என்று பயப்படாதீர்கள். ரேவதியின் குழந்தைகளுக்காக அதை நான் பத்திரமாய்ப் பாதுகத்து வருவேன். நீர் ஒழுங்காக அந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு காலம் தள்ளுங்கள்’ என்றாள்.

‘அம்மா இருவரி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்துத்தான் தீர வேண்டும். உரிமைப்பட்ட நீங்கள் விட்டுக் கொடுத்ததுதான் பெருந்தன்மை’ என்றார் பொன்னையா.

ரேவதி, ‘அக்கா….!’ என்று குமார தேவியைக் கட்டித் தழுவிக் கொண்டாள்.

சேகரோ கூனிக் குறுகி நின்று கிடந்தான்!

(தினமணி கதிர் 2-1-1970)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *