ஒரு கவிதையை முன்வைத்து..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 1, 2019
பார்வையிட்டோர்: 35,791 
 

காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம். கடிதம் என்றால் கடிதமில்லை. அன்புள்ள என்று ஆரம்பித்து நலம் நலமறிய மாதிரி இல்லை. இது முழுவெள்ளைத்தாளில் முழுவதும் கவிதையாய் ஓடி முடிவில் கேள்வி போட்டு தொக்கி நிற்கிறது. இது இப்படி முடியுமென்று அவன் ஒரு பொழுதும் நினைத்ததில்லை.

Lady writing அந்த அலுவலகத்தின் அக்கௌண்டன்ட் ரகு. அறிமுகமான ஒரு எழுத்தாளன். உணவு இடைவேளைகளில் அதிகமும் விவாதிக்கப்படும் அவன் கதைகளும் கவிதைகளும்.

அப்படி ஒரு விமர்சகியாகத்தான் அறிமுகமானாள் மாலதி. அந்த அலுவலகத்தின் தட்டச்சு தாரகை. புடவை நகைகள் பற்றிப்பேசும் பெண்கள் மத்தியில் புதுக்கவிதைகளும் கதைகளும் ரசிக்கும் பெண். படிப்பதற்காய் இவனிடமிருந்து அவ்வப்போது அசோகமித்திரன், ஆதவன் என்று வாங்கிப் போவாள் அவள். இப்படி இடம் மாறிப் போய்வந்த ஒரு புத்தகத்தினுள்ளேதான் இப்படி ஒரு கடிதம்.

“இங்கே
கதை கவிதை என்றால்
கிலோ என்ன விலை
என்னும் கணவன்.

போய்க்கொண்டிருக்கிறது வாழ்க்கை
பொத்தாம் பொதுவாக.

புத்துணர்வு ஊட்டி
புதுவழி காட்டி

இலைநுனி துளியாய்
எனைத் தாங்குவாயா?

இலக்கிய வானில்
இரு கரம் கோர்த்து
இணையாய் இதமாய்
இருந்திடுவாயா? ”

எது அவளை இப்படி எழுத வைத்தது? மணமாகி ஆறே மாதங்களுக்குள் மாற்றான் ஒருவனுக்கு இப்படி எழுதுமளவுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அப்படி ஒன்றும் இதுவரை தனது குடும்ப வாழ்க்கை பற்றி குறிப்பாய் கூட எதுவும் சொன்னதில்லையே அவள்.

மாலையில் இந்த கடிதம் தாங்கிய நாவலைத் தரும்போதுகூட ஒரு மலர்ச்சியோடே இருந்தது அவள் முகம். நாளை இதைப்பற்றிப் பேசும்போது அந்த முகம் எப்படி இருக்கும் என்ற சிந்தனையோடே ரகு தூங்கிப்போனான். அப்படி ஒன்றும் பெரிதாய் மாறிப்போய்விடவில்லை அவள் முகம்.

அலுவலக கேன்டீன்.

இயல்பாய் இப்படி எதிரில் அமர்ந்திருக்கும் இவளிடம் எப்படியும் பேசித்தான் தீர வேண்டும்.

“சொல்லுங்க ரகு… ஏதோ பேசனும்னு சொன்னீங்க….”

“நேத்து நீங்க திருப்பிக் கொடுத்த நாவலுக்குள்ள இது இருந்திச்சி” என்றபடி அந்த கடிதத்தை நீட்டினான்.

“ஓ.. இது அதுக்குள்ள வந்திடிச்சா?… இதைத்தான் நேத்து நைட்டெல்லாம் தேடிட்டிருந்தேன்…”

“என்ன இது மாலதி?… ”

“இதுவா..நானும் ஒரு கதை எழுதி பார்க்கலாம்னு முயற்சி பண்ணி ஒண்ணு ஆரம்பிச்சேன்… ”

“ஆனா இது ஏதோ கவிதை மாதிரி…? ”

“ஆமா…கவிதைதான். என் கதையோட நாயகி ஒரு படைப்பாளி. அவ எழுதற ஒரு கவிதையா இது கதையில வருது. முழுசா முடிச்சி உங்ககிட்ட காமிக்கலான்னு இருந்தேன்…. ”

வாழ்த்துக்கள் சொல்லி அப்படியே அந்த உரையாடலை முடித்துவிட்டு தன் இருக்கைக்கு திரும்பி மீதமிருந்த வேலைகளில் மூழ்கிப்போனான். இரண்டொருமுறை எதிர்ப்பட்ட மாலதியிடம் எந்த மாற்றமும் அவனுக்கு தெரியவில்லை. பெண்கள் இப்பொழுதெல்லாம் பெரிதும் தெளிவாகவே இருப்பதாய் தனக்குள் சொல்லிக்கொண்டான்.

அன்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய பிறகு மாலதி தன் முதல் கதையின் முதல் வரியை எழுத ஆரம்பித்தாள்.

காற்றில் ஆடிக்கொண்டிருந்தது கடிதம்…..

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *