ஸ்கைலேப்
கதையாசிரியர்: கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 3, 2026
பார்வையிட்டோர்: 39

1979 ஆம் ஆண்டு ஜூன் மாதம் என ஞாபகம். அமெரிக்கா. ஏவிய ஸ்கைலேப் என்ற விண்வெளி ஓடம் ஒன்று செயலிழந்தது. அதை விண்வெளியில் வைத்தே பொசுக்கும் தொழில் நுட்ப மெல்லாம் அப்போது இல்லாத காரணத்தால் அது விழுவதற்கு பூமியை நோக்கி முழுசாக வந்து கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.
அது ஆசிய நாடுகள் ஏதாவது ஒன்றில் அல்லது ஆப்பிரிக்காவில், அல்லது சீனாவில் அல்லது இந்தியப்பெருங்கடலில், அல்லது இந்தியாவில்,தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தில் எங்கு எப்போது வேணுமானாலும் விழலாம் என்று ஆள் ஆளுக்கு பீதியைக் கிளப்பிவிட்டுக் கொண்டிருந்தார்கள்.
வழக்கமாக இசக்கி பத்து மணிக்கு கடையை மூடுகிறவன் அன்று எட்டு மணிக்கே கடையை அடைத்து விட்டு வேகு வேகு என்று சைக்கிளில் ஊருக்குள் நுழைந்தான்
ஊரே பீதியில் உறைந்திருந்தது. இஷ்டத்துக்கு கதைகளை இட்டுக்கட்டி அவுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள் ஊர்வாசிகள்.
அமெரிக்காகாரன் எம்புட்டோ கண்ட்ரோல் பண்ணிப் பாத்தானாம் அடங்கலையாம்.
அத ஓட்டிக்கிட்டு வந்தவன் அதுல பிரயாணம் செஞ்சவுக எல்லாம் என்ன ஆனாக ?
அவுக எல்லாம் பாராசூட்டுல குதிச்சிருப்பாக என்னலே அது பிளேனா ராக்கெட்டா ?
எவமில இவன்… ஏல சவத்து மூதி அது ஆளு இல்லாத ராக்கெட்டாம்ல …
அது எம்புட்டு தண்டிக்கு இருக்கும் ?
அது நம்ம கழுகுமலை மலைத்தண்டிக்கு இருக்குமாம்.
பாவம் கிராமத்து ஜனங்க .. அவங்களால யோசிக்க முடிஞ்சது அவ்வளவுதான்.
ஆல் இந்தியா ரேடியோவும் பேப்பர்காரங்களும் நேத்தய முந்தா நாத்தைய செய்திகளைத்தான் சுடச்சுட பலுமாறிக் கொண்டிருந்தார்கள். மாட்டு வண்டியையும் சைக்கிளையும் தவிர – பைக், டிவி, செல்போன், வலைத்தளங்கள் இதையெல்லாம் கற்பனை கூட செய்து பார்த்திராத காலம். பேப்பர்ல என்ன போட்டிருக்கானோ அதுதான் வேதவாக்கு.
புயல் வருதாம் பேப்பர்லயே போட்டுருக்கான்.
பேப்பர்லேயே போட்டுட்டானா அப்பச்சரி.
விலைவாசி கடுமையா ஏறப்போகுதாம்.
அதும் பேப்பர்ல போட்டிருக்கானா அப்பண்ணா சரியாத்தான் இருக்கும்.
ஸ்கைலேப் மேட்டரும் அப்பிடித்தான்.இசக்கி பேப்பரை வாசிக்க வாசிக்க ஊரில் முக்கா வாசிப்பேருக்கு வகுத்தைக் கலக்கியது.
பத்து நாளில் பூமில விழுந்திருமாம். அது நேராக விழாமல் ஒரு சுற்றுவட்டப் பாதையிலேயே சுற்றி சுற்றி கீழே வந்து கொண்டிருக்கிறதாகவும் அது என்ன என்ன தேதியில் நாகர்கோயில் தூத்துக்குடி கோவில்பட்டி சங்கரன்கோவில் தென்காசி திருநெல்வேலி ஊர்களுக்கு மேலே பறந்து வருகிறது அது விழுந்தால் சேதம் எப்படி இருக்கும் என்றெல்லாம் துல்லியமாகக் கணித்து தினத்தந்தி, மாலைமுரசு தினமலர் நெல்லைப் பதிப்பில் போட்டு புளியைக் கரைத்தார்கள்.
விருதுநகர் அருப்புக்கோட்டை, இராமநாதபுரம் மதுரை மேலூர் தேனி பெரியகுளம் திண்டுக்கல் பழனி போன்ற ஊர்களின் மேல் எல்லாம் எப்போது பறக்கும் எங்கே விழும் வாய்ப்பு அதிகம் என்று இதே பேப்பர்காரர்களின் மதுரை பதிப்பு அந்தந்த ஏரியா மக்களை ராத்திரியும் பகலும் நிம்மதியாக சாப்பிட விடாம தூங்க விடாம கொலையாய் கொன்று கொண்டிருந்தது.
ஒரு வேளை திருச்சி பதிப்பும் அந்த ஸ்கைலேப், ஸ்ரீ ரெங்கம் ,துவாக்குடி திருச்சி,மணப்பாறை, விறாலிமலை குளித்தலை,தொட்டியம்,கரூர் வல்லம் தஞ்சாவூர் மேல கூடியெல்லாம் எப்பெப்போ வரலாம் விழலாம் என்று மிகத்துல்லியமாக சொல்லிக்கொண்டிருந்திருக்கும்.
சின்ன சின்ன கிராமத்தில் கூட வானத்தை அண்ணாந்து பார்த்து பயந்து கொண்டே பெண்கள் ஊர்க்கிணற்றுக்கு தண்ணி எடுக்கப்போனார்கள்.
அந்த ராக்கெட் விழும்போது பிடிக்கிற தீயின் உஷ்ணம் தாங்காம காடு கரைகள் ஆடு மாடுகள் வீடு மரங்கள் எல்லாம் கருகி சாம்பலாப்போயிருமாம்.
கடல்ல விழுந்தாக்கூட கடல் தண்ணி முழுசும் கொதிக்குமாம்.
ஆள் ஆளுக்கு கதை கட்டி விட ஜனங்களுக்கு வயித்தால போய்க்கொண்டிருந்தது.
வெளிக்குப் போனவன் கூட கெதக், கெதக் என்று தலைக்குமேல் ராக்கெட் விழுதா என்று மானத்தை அண்ணாந்து பார்த்து பதறியபடியேதான் போய்க்கொண்டு இருந்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஊரில் அரும்பாடு பட்டு வளர்த்த ஆடு மாடு கோழிகள் எல்லாத்தையும் அடித்து சமைத்து தின்றார்கள்.எல்லாருக்கும் பலுமாறினார்கள்.
சைக்கிளில் பக்கத்து டவுணுக்குப் போயி புரோட்டா செட்டும் சால்னாவும் பிரியாணியும் வாங்கித்தின்றார்கள். திண்ணையில் கிடந்த தாத்தா பாட்டிகளுக்கு கொடுத்தார்கள்.
கடன் கொடுத்தவனெல்லாம் வட்டிக்கு இப்ப என்னடே அவசரம் பிழைச்சுக்கிடந்தா பின்னாடிபார்த்துக்கிடலாம் என்றனர்.
கட்டிக்கொடுக்க மாட்டேன்னு சொன்ன புள்ளைகளையெல்லாம் அவளவளுக்கு புடிச்சவனுக்கே கட்டி வைத்தார்கள். கடைசியாக அது விழும் நாள் நெருங்கி விட்டது நாளாண்ணைக்கு விழுதாம் என்றது பேப்பர் செய்தி.
அதுக்கு மொத நாள் கிராமத்துக்கு பக்கத்தில் உள்ள சாமலை என்ற மலையில் ஒரு குகை உண்டு. மலை ஏற முடியாதவர்களைத்தவிர மற்றவர்கள் எல்லாம் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு மலையேறி பாறை இண்டு இடுக்குகள் குகைக்குள் ஒளிந்து ஒண்டிக்கொண்டிருந்தார்கள்.
இசக்கி கடையில் விற்பனைக்கு வாங்கி வைத்திருந்த வாழைப்பழம் பன் ரொட்டி முருக்கு சேவு கலர் வெத்தல பாக்கு பீடி சிகரெட்டு என்று சுமக்க முடிந்த அளவுக்கு கொண்டுவந்து குகைக்குள் கொட்டினான் ஒக்காளி சாகறதே சாகப்போறோம் அது எப்பிடித்தான் இருக்குதுன்னுபாத்துருவமே என்று பீடி சிகரெட் எல்லாம் குடிச்சுப்பார்த்து இருமிக்கொண்டு கிடந்தார்கள்.
கல்யாண வீட்டில் விருந்து சாப்பிட்டு விட்டு வெத்தல பாக்கு போட்டு புளிச்சு புளிச் என்று துப்பி நாக்கு சிவந்திருக்கா என்று பார்த்துக்கொண்டார்கள்.
துட்டி சொல்லிப்போகும் வெட்டியான் முத்து வீரன் சுடச்சுட சுட்டுக்கொண்டு வந்து தந்த சோளத்தோசையையும் காய்ஞ்ச கறியை வறுத்து மஞ்ச மிளகா வத்தல் உரலில் போட்டு இடித்த தோசைப்பொடியையும் அருவெறுப்பின்றி சுவைத்து சாப்பிட்டார்கள்.
ஏழை பணக்காரன் கீழ் சாதி மேல் சாதி என்ற பாகுபாடின்றி வெந்தும் வேகாததையும் சமைத்து சாப்பிட்டார்கள் ஒருவார காலம் அந்தக்குகை ஒரு சமத்துவபுரமாகத்திகழ்ந்தது
அதே போல குருமலை கழுகுமலை மலையிலுள்ள குகைகளில் எல்லாம் மக்கள் ரெண்டு நாள் ஒளிந்திருந்தார்கள்.அவர்களின் கண்கள் தீப்பிழம்பு பார்க்கவும் காதுகள் ஸ்கைலேப் விழுந்து நொறுங்கும் இடியோசையை கேட்கவும் ஆவலோடு காத்துக்கிடந்தன.
ஒருபுதுப்பேய் வந்து பழைய பேயை அடிச்சுத்துரத்தி விடுவது போல ஒரு பெரிய நோய் வந்து சின்ன நோயை காணாமலடித்துவிடுவது போலஒரு பெரிய கடன் வாங்கினதும் சின்னக்கடன்களெல்லாம் சில்லறை விஷயமாகி விடுவது போல ஒரு பெரிய ரவுடி வந்து சின்ன ரவுடியை சில்லுண்டி ஆக்கி விடுவதுபோல ஒரு புதுப்பணக்காரன் வந்து பழைய பணக்காரங்களை பொடிப்பயல்கள் ஆக்கிவிடுவது போல ஸ்கைலாப் வெடிக்கும் அபாயம் வந்து மக்களின் மற்ற அன்றாட துக்கங்கள் துயரங்கள் கஷ்ட நஷ்டங்களை எல்லாம் ஒண்ணுமில்லாமல் செய்து விட்டது உயிர் பயம் வந்ததும் கீழ் சாதி மேல்ஜாதி ஏழை பணக்காரன் எனும் ஏற்றத்தாழ்வுகள் தானாக பறந்து விட்டன.
ஊஹும் ரெண்டு நாள் ஆச்சு.அருவத்தக்காணும்.மக்கள் கொண்டு வந்து சமைச்சு சாப்பிட்டதில்தானிய தவசுகள் கோழி குஞ்சுகளெல்லாம் அருவாகிப்போச்சு ஆதிவாசிகள் போல தாடி மீசைகளோடு பாறைகளின் இடுக்குகளில் ஒளிந்து நின்று ஆகாயத்தை பார்த்துக்கொண்டிருந்த போதுதான் தாங்கள் இதுநாள் வரை எத்தனை சவுகரியமாக வாழ்ந்துகொண்டிருந்திருக்கிறோம் எனும் உண்மை புலப்படலாச்சு.
ஹூம் என்னலே ஆச்சு இந்த ராக்கெட் உருண்டுக்கிட்டு வருதா இல்ல பொடி நடையா வருதா.
பொறுடே ராக்கெட் இல்லா கண்டம் விட்டு கண்டம் தாண்டி வரணுமில்லா.
மக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்த போது மூணாம் நாள் கடக்கார இசக்கி பேப்பரை தூக்கிக்கிட்டு ஓடி வந்தான்.
ஏலே சொள்ளை ஸ்கைலேப் விழுந்துருச்சாம் …!
என்னது ?
அதாம்ல ராக்கெட் ஒடைஞ்சு விழுந்துருச்சு.
எஙக எங்க எங்க விழுந்துச்சாம் ?
அது வடக்க எங்கேயோ ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்துல ஒரு ஊருக்குள்ள விழுந்துருச்சாம்.
உயிர்ச்சேதம் உண்டுமாமா.
அதெல்லாமில்லையாம் ஒருத்தரும் சாகலையாம்.
என்னது ஒருத்தர் கூட சாகலையாமா அந்த ஊர் எங்கன இருக்கு ?
அது எங்க இருந்தா நமக்கென்னடே நம்ம மேல விழல அந்த மட்டுக்கும் தப்பிச்சோம்.
ஆனாலும் சில பேருக்கு கொஞ்சம் மனக்கொறைதான்.
சேச்சே உசுரப்பணயம் வச்சு அரும்பாடுபட்டு ஒளிஞ்சு திரிஞ்சும் அது நம்ம ஊர்ல விழாம வெள்ளக்காராப்பயக ஊர்லயே விழுந்து ஒரு பிரயோசனம் இல்லாமப்போச்சேன்னு பாதிப் பேருக்கு ரொம்ப மனச்சங்கடமாத்தான் இருந்தது
இதில் ஒரு பெரிய கொடுமை என்னண்ணா அவர்கள் பாய் தலைகணைகள் கத்தி கம்பு பானை சட்டிகளோடு பஞ்சம் பிழைக்கப்போனவர்கள் திரும்பி வந்தது போல திரும்பி வந்தபோது அத்தி மரத்தடியில் ஒரு நரிக்குறவ குடும்பம் கொக்குக்கறியையும் கதுவாலிக்கறியையும் சமைத்து சாப்பிட்டு விட்டு ஜாலியாகத் தூங்கிக்கொண்டிருந்தது.
அதை விடக்கொடுமை அவர்களின் குடிசைக்குள் கட்டித் தொங்க விடப்பட்ட மர்பி டிரான்சிஸ்டர் ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான் அனுபவி ராஜான்னு அனுப்பி வச்சான் என்று பாடிக்கொண்டிருந்ததுதான்.
உண்மையில் அவர்களுக்கு அது பற்றி ஒன்றும் அதிகமாகத்தெரியாது தெரிந்திருந்தால் சாமலை குகைக்கே போய் ஊசி பாசியையும் பத்துப்பதினைந்து கதுவாலிகளையும் விற்று விட்டு வந்திருப்பார்கள்.
இம்புட்டு களேபரத்துக்கிடையிலும் ஊருக்குள் ஒரு பெண்மணி குழந்தை வேறு பெற்றுக் கொண்டார் பெண் குழந்தை.அதற்கு என்ன பேர் வைத்தார்கள் தெரியுமோ ?
ஸ்கைலாப்.
அப்பாடா என்று நிம்மதியுடன் வீடுகளுக்கு வந்த அவர்களுக்கு அப்பதான் ஞாபகம் வந்தது ஊருக்குள்ளும் ஊரைச்சுற்றியும் அம்போ என்று அவர்கள் மறந்து விட்டு விட்டு வந்த கோவில்களையும் சாமிகளையும்.
வீடுகளுக்கு வந்த மக்கள் ஊர்க்கூட்டம் போட்டு அடுத்த கோவில் கொடையை எப்ப வச்சுக்கலாம் தலக்கட்டுக்கு வரி எம்புட்டு என்று கூடிப்பேசி சண்டை போட்டுக் கொண்டார்கள் மீண்டும் ஆடு மாடு கோழி குஞ்சுகளை வளர்க்க ஆரம்பித்தனர்.
வட்டிக்கு குடுக்கல் வாங்கல் பண்ணுகிறவன் வாசலில் நின்று வைய ஆரம்பித்தான்.
வைப்பாளன் வைப்பாட்டி சண்டைகளும் எடகோடிச்சண்டைகளும் வாய்க்கா வரப்புச்சண்டைகளும் கள்ளக்காதல்களும் தொடர்ந்தன.
சகல ஜாதிக்காரங்களும் எவனும் எவளும் ஜாதி விட்டு ஜாதி மாறி காதலித்து விடாமல் கல்யாணம் பண்ணிக்கொண்டு விடாமல் ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொண்டனர்.
இசக்கி திரும்பவும் சைக்கிளில் கோவில் நடை திறக்க பறக்கும் பூசாரி போல கடை திறக்க சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தான் தலைக்கு மேல் ஏதோ சத்தம் கேட்குதே என்று திடுக்கிட்டு மேலே பார்த்தான் ஒரு பிளேன் சிங்கப்பூருக்குப் பறந்து கொண்டிருந்தது.
– கும்பிடுதேன் சாமி சிறுகதைத்தொகுப்பு.
![]() |
கரடிகுளம் ஜெயாபாரதிப்ரியா என்பவர் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். குறிப்புகள் இயற்பெயர்: பாரதி பிறந்த ஊர்: கரடிகுளம் (கழுகுமலை அருகில், தூத்துக்குடி மாவட்டம்) பிறந்த தேதி: மே 22, 1957 பெற்றோர்: வி.எம். சம்பாரி - மாரியம்மாள் பணி: இந்தியன் வங்கி அதிகாரி (ஓய்வு) எழுத்துப் பணி: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு தமிழ்ப் பத்திரிகைகளில் நகைச்சுவைத் துணுக்குகள், சிறுகதைகள் மற்றும் நாவல்களை…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வாசமில்லா மலரிது; வசந்தத்தை தேடுது…
ராமன் செல்வராஜ்
October 3, 2026
புகழ்
ஸ்ரீ.தாமோதரன்
October 3, 2026
கால ஓட்டம்
சாரல் நாடன்
September 30, 2026
