வாசல் தேடி வந்த வசந்தம்

0
கதையாசிரியர்: கல்பனா ராஜகோபால்
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
வெளியான ஆண்டு: 2026
இணைய வெளியீடு: November 20, 2026
பார்வைகள்: 1,343
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5

மீண்டும் தேடிய பாசம்

“வருடங்கள் கடந்தாலும் சில உறவுகள் மனதை விட்டு மறைவதில்லை…”

“ரெண்டு வருசம் கழிச்சு ஒரு நாள்…

வட நாட்டுல வேலை பார்த்துட்டு நம்ம ஊருக்கு வந்த ஒருத்தர், கவிதாவையும் அந்தப் பையனையும் ரெண்டு மாசக் கைக்குழந்தையோட அங்க பார்த்ததா உங்க தாத்தாகிட்ட சொன்னாரு.

அன்னைக்கு முழுசா சோறு தண்ணி இல்லாம கிடந்தோம்.

அப்ப உனக்கு ஒன்னரை வயசு.

‘இத்தனை வசதி இருந்தும் எம்புள்ள அநாத மாதிரி குழந்தையோட தத்தளிக்கிறாளே…’ன்னு மனசு வருத்தப்பட்டாலும்…

ரோஷமும் வீம்பும் அவளைத் தேடிப் போக முட்டுக்கட்டையா இருந்துச்சு.

அதுக்கப்புறம் ஞாபகம் வர்றப்போ எல்லாம் ஒரு மூலையில உட்கார்ந்து அழுவோம்.

இப்படியே நாட்கள் ஓடிடுச்சு.

ஆனா எங்க நினைவு எல்லாம் எம்பேத்தியா… இல்ல பேரனா…

அவங்களையே சுத்தி சுத்தி வந்துச்சு…”

என்று சொல்லிய லஷ்மி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

“பாட்டி…

நீங்க சொன்னதுக்கப்புறம்தான் நான் எல்லா இடங்களிலும் தேட ஆரம்பிச்சேன்.

அப்பதான் எனக்கு புனே காலேஜ்ல படிக்க சீட் கிடைச்சது.

ஒரு நாள் அங்க…

கவிதா அத்தையை அச்சு அசலா இருந்த ராகவியைப் பார்த்து நான் திகைச்சுப் போயிட்டேன்.

விசாரிச்சப்பதான் எல்லா விஷயமும் தெரிஞ்சது.

அவங்க வீட்டுக்குப் போய் கவிதா அத்தையைப் பார்த்துப் பேசினேன்.

அத்தையும் மாமாவும் புனேல ஒரு பெரிய நிறுவனம் நடத்திட்டு இருக்காங்க.

என்னைப் பார்த்ததும்…

அத்தைக்கும் மாமாவுக்கும் ரொம்ப சந்தோஷம்.

அதே நேரம் அதைவிட அதிகமான மனவேதனையும் அவங்களுக்குள்ள இருந்துச்சு தாத்தா…”

என்று கோபி சொல்லிக் கொண்டிருக்கும்போது, வெங்கட்ராமனின் கண்கள் கலங்கின.

“அவங்க உங்க ரெண்டு பேரையும் பார்க்கவும், எங்க அப்பாவைப் பார்த்துப் பேசவும் ஆசைப்பட்டிருக்காங்க.

நம்ம வெளியூர் கோயில்களுக்கு போகும்போது கூட தூரமா நின்னு உங்களைப் பார்த்துட்டு போயிருக்காங்க.

அம்மாவைப் பார்த்துப் பேசணும்னு நினைச்சாலும், ஒரு நாளும் தைரியம் வராம திரும்பிப் போயிருக்காங்க தெரியுமா?”

கோபியின் குரல் உடைந்தது.

“நான் அத்தையையும், அவங்க குடும்பத்தையும் நம்மளோட சேர்த்து வைக்கணும்னுதான் இங்க ராகவியைக் கூட்டிட்டு வந்தேன் தாத்தா.

அத்தையும் மாமாவும் டவுன்ல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்காங்க.”

“ஏன் கோபி?

அரண்மனை மாதிரி இங்க நம்ம வீடு இருக்கும்போது எதுக்காக ஹோட்டல்?”

என்று லஷ்மி கேட்டார்.

“அம்மா…

அக்காவுக்கு அப்பாவும் நீங்களும் அவங்களை ஏத்துக்குவீங்களா… மாட்டீங்களான்னு பயம்தான்.

அதனாலதான் வெளியே தங்கியிருக்காங்க.”

அந்த நேரத்தில் அருகில் இருந்த ரவியைப் பார்த்த வெங்கட்ராமன்,

“அட ரவி… பூரணி… நீங்க ரெண்டு பேரும் எப்ப வந்தீங்க?”

என்று கேட்டார்.

அப்போது ரவி மெதுவாகச் சிரித்துக் கொண்டே அருகில் உள்ள சோபாவில் அமர்ந்தார்.,

“எப்பா கோபம் இருந்துச்சுப்பா…

ஒரு வருஷம் கழிச்சு அவ குழந்தையோட இருக்கான்னு தெரிஞ்ச பிறகு அது கவலையா மாறிப்போச்சு.

எங்க மூச்சு அடங்குறதுக்குள்ள அவளை ஒரு தடவையாவது பார்க்க மாட்டோமான்னு ஏக்கமா மாறிப்போச்சு.”

என்றார் வெங்கட்ராமன்.

“அப்படி எல்லாம் சொல்லாதீங்க…”

என்ற ராகவி தாத்தாவின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

“அதான் உங்க பேத்தி நான் வந்துட்டேன் இல்ல…

கோபி உங்களைப் பற்றி எல்லாமே சொல்லியிருக்கார் தாத்தா.

அம்மா, அப்பாவும் எப்பவும் உங்களையும் மாமா, அத்தையையும் பற்றித்தான் பேசிக்கிட்டே இருப்பாங்க.

அவங்க ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பொறுமையா இருந்திருக்கணும்னு எப்பவும் வேதனைப்படுவாங்க பாட்டி.”

ராகவியின் வார்த்தைகளைக் கேட்ட லஷ்மியின் கண்களில் மீண்டும் கண்ணீர் நிறைந்தது.

“இனியும் கொஞ்ச நேரத்துல உங்க பொண்ணும் மாப்பிள்ளையும் வந்துருவாங்க…”

என்று கோபி சொன்ன அந்த நேரத்தில்…

வாசலில் கார் நுழையும் சத்தம் கேட்டது.

அனைவரின் பார்வையும் வாசலை நோக்கித் திரும்பியது.

– தொடரும்…

கல்பனா ராஜகோபால்

வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்பெயர்: கல்பனா ராஜகோபால்வயது: 56எழுதிய சிறுகதைகள்: 25பிரசுரமானவை: 12 கல்கி/மங்கையர் மலர் ஆன் லைன்: 11 கதைகள் கல்பனா ராஜகோபால் ஆரம்ப...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *