மிருகம், மனிதன், தெய்வம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 9 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த நகர்ப் புறத்துக் கல்லூரியில் நானும் ஓர் ஆசிரியன். அன்று பிற்பகல் கல்லூரி விளையாட்டரங்கில் உதை பந்தாட்டப் போட்டி கரைகடந்த உற்சாக ஆரவாரத்தினிடையே நடந்துகொண்டிருந்தது.

அரங்கைச்சுற்றி ஏராளமாக நின்ற மாணவர் கூட்டத்தின் நடுவே “நல்ல காலம் டா! இன்று காலை வீட்டில் அனுமதி கேட்டிருந்தால், நிச்சயமாக இந்த அருமையான போட்டியைப் பார்த்திருக்கவே முடியாது” என்று எனக்கறிந்த குடும்பத்துப் பையன் ஒருவன் கூறுவது என்காதிலும் பட்டது.

வீட்டில் சொல்லாமல் இவன் இங்கு நின்று காலம் தாழ்த்த வீட்டில் இவனைக் காணாமல் பெற்றார் எப்படி யெல்லாம் கற்பனை பண்ணி நெஞ்சு கலங்குவார்கள் என்று எண்ணியபோது “தனது சுகம், தனது மகிழ்வுக்காக மட்டும் இயங்கும் கொடிய மிருகம்!” என்று என் வாய் முணுமுணுத்துக் கொண்டது.

உதை பந்தாட்டம் முடிந்து ஐந்து மணி மஞ்சள் வெய்யிலில் நான் மிதிவண்டியில் வீடு நோக்கிப் போய்க் கொண்டிருக்கையில் அந்த மாணவனின் தகப்பன் பதைத்துத் தவித்து ஓடி வந்தவன் என்னைக் கண்டதும் ”சார்! என் மகனை எங்காவ கண்டீர்களா? காலையிற் பள்ளிக்கு வந்தவன்! இன்னுங் காணவில்லை!” என்று மூச்சு இரைக்க இரைக்கத் திணறினான்.

உடலெல்லாம் உடையெல்லாம் தோட்டப் புழுதி வியர்வையில் கசிந்து கொண்டிருந்தது, அவன் மகன் வழியில் வந்து கொண்டிருப்பதாக நான் கூறியபோது “வரட்டும் இன்றைக்கு” என்று குமுறினான் அவன்.

‘கடமைக்கும் பாசத்துக்குமிடையில் நின்று தத்தளிக்கும் அசல் மனிதன்’ என்று என் மனம் கணக்கெடுத்துக் கொண்டது!

அங்கிருந்து புறப்பட்டு அவன் வசிக்கும் வீட்டையும் தாண்டி மிதிவண்டியில் நான் வந்து கொண்டிருந்தபோது அவனது தாய்க்கிழவி நாலடி வைப்பதும் குந்துவதுமாக எதிரில் வந்து கொண்டிருந்தாள். முன்தானை மடி கனத்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அவளருகில் மிதிவண்டியை நிறுத்தி இறங்கினேன்.

கண்களைக் கூசி என்னைப் பார்த்தாள். ”வாத்தியாரே! என்ர பொடியனுக்கு மரவள்ளிக்கிழங்குத் துவையல் என்றால் நல்ல ஆசை! மாதாமாதம் பசி கிடந்தென்றாலும் கிழங்கு வாங்கி அவிச்சுத்துவைக்சுக் குடுக்காவிட்டால் உறக்கம் வராதாம் தம்பி! பிள்ளைக்கு என்ர வீட்டுக்கு வரவும் நேரமிருக்காது! பாவம் குழந்தை குட்டிக்காரன் அதுதான் நான் இருந்து இருந்தென்றாலும் போய்ச் சேரலாமென்று வெளிக்கிட்டனான்” – என் உடல் எங்கும் கூத லோடிற்று! அந்தத்தியாக வடிவம் என் கலங்கிய கண்களுக்குத் தெய்வமாய்த் தெரிந்தது. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *