கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 92 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தெருக்கதவை விரியத் திறந்து வைத்துவிட்டு, ஒதுங்கி நின்று கொண்டு வீதியின் இருபுறமும் பார்த்தாள் ரேணு. வீட்டு நடையி லிருந்து சைக்கிளைப் பின் பக்கமாகத் தள்ளிக்கொண்டு கீழ் இறங்கித் தெருவில் நிறுத்தின நடராஜன், ‘நான் வரட்டுமா… ஜாக்ரதை… கதவைச் சாத்திக்கோ’ என்றுவிட்டு, சைக்கிளை மிதித்துத் தள்ளி ஏறி உட்கார்ந்து கொண்டு போனான். 

தெருவை நோட்டம் விட்டாள் ரேணு. அவளுடையதும் தெரு வில் இன்னும் மூன்று வீடுகளுமே கல்வைத்துக் கட்டிய, மேலே தீப்பிடிக்காத கூரைச் சாதனக் கூரையாலான வீடுகள். மற்றதெலாம் கூரை வேய்ந்தவை. தெரு சுறுசுறுப்படைந்திருந்தது. ஆண்கள் அலுமி னியத் தூக்குப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். பெண்கள் மையக்கிழங்கு வேர்க்கடலைக் கூடைகளை எடுத்துக்கொண்டு வியாபாரத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அழுக்குப் பிடித்த பைகளைத் தோளில் மாட்டிக் கொண்டிருந்த குழந்தைகள் மறக்காமல் மதிய உணவுக்கான அலுமினியத் தட்டுக்களோடு பள்ளிக்கூடம் போயின. நேர் எதிரே இரண்டு வீடு தள்ளி கூரைக்குக் கீழே திறந்த வெளியில் கழுத்து மாரியம்மன் கோயில் வேறு இருந்தது. தலையும் கீழே விரித்த மஞ்சள் பாவாடையுடனான ஓர் அடி உயர சாமி. ரேணு தன்னிச்சையின்றிக் கன்னத்தில் போட்டுக் கொண்டாள். கோயிலுக்கு நேர் எதிரேயே ஒரு குழந்தை காலைக் கடனுக்கென உட்கார்ந்திருந்தது. அப்படியே மண்ணில் விளையாடிக் கொண்டி ருந்தது. அதன் நேர் எதிரே, கண்ணம்மாக் கிழவியின் ஆப்பக் கடை. பெண்கள் சிலர் ஆப்பக் கடையில் தட்டோடு காத்திருந்தார்கள். இருந்தவர்கள் இருவருக்குள் ஏதேனும் தகராறு வந்திருக்க வேண்டும். ஏதோ சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு குடிசைக்கு எதிரிலும் அதன் உரிமையாளர்கள் எனத் தெரியும் ஆண்கள் வெயில் காய்ந்து கொண்டிருந்தார்கள். பீடிப் புகையுடன் கூடிய கோழையைக் கனைத்துக் கனைத்துத் துப்பிக் கொண்டி ருந்தார்கள். இவளுக்கு நேர் எதிரே இடப்புறம் தள்ளி, வீட்டை ஒட்டிய நடைபாதையில், நரை தாடியும் மீசையுமான கிழவர், தன்னை முழுதும் முரட்டுக் கம்பளியால் போர்த்திக் கொண்டு, குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டு பீடி பிடித்துக் கொண்டி ருந்தார். நிமிஷத்துக்கொருதரம் காறி, காறிக் கோழையைத் துப்பிக் கொண்டிருந்தார். அவர் பக்கத்தில் கூட்டி வைக்கப்பட்ட ஒரு சிறு குப்பை மேட்டுக்கு மேலே செவலை நாய் ஒன்று நீட்டிப்படுத்து அரைக் கண்ணைத் திறந்து வைத்துக்கொண்டு சுகமாக வெயில் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு தெருவுக்கே உரித்தான வீடுகள், அதன் மனிதர்கள், அவர்கள் காரணமாகச் சாக்கடைகள், குப்பைகள், அசுத்தங்கள், நாய்கள் எல்லாம் சாலை வெயிலில் களை கட்டி யிருந்தன. 

ரேணுவுக்கு இடப்புறம் இருந்த இரும்புத் தகடடித்த கதவு பெரும் சப்தத்தோடு திறந்தது. வீட்டுக்காரியான அஞ்சலை வெளியே வந்தாள். பக்கத்து வீட்டு வாசலில் நின்றிருந்த ரேணுவைத்தான் முதலில் பார்த்தாள். பார்த்தவள் முறுவலித்தாள். அறிமுகம் இல்லாத வர்களிடம் பேச நேர்ந்த தயக்கம் அவளிடம் இல்லை. அஞ்சலை சுபாவமாகப் பேசத் தொடங்கினாள். 

‘புதுசா வந்திருக்கீங்களா’ என்றாள் அஞ்சலை. 

‘ஆமா… நேத்து ராத்திரிதான் வந்தோம்’ என்றாள் ரேணு. ‘அதான் ராத்திரியெல்லாம் ‘லொடபுடான்னு’ சத்தம் கேட்டுக்கினே இருந்துச்சா.’ 

ரேணு சிரித்துக் கொண்டு சொன்னாள். ‘ம்ஹ்ம்-சாமான் செட்டு எல்லாத்தையும் அடுக்கி வச்சுக்கினு இருந்தோம்.’ 

அஞ்சலை ரேணுவை நோட்டம் விட்டாள். 

ரேணு குளித்து முழுகிவிட்டிருந்தாள். ஒரு நூல் அளவுக்கு மஞ்சள் ஏறிய முகம். இயற்கையாகவே மஞ்சள் நிறம் கொண்ட அவளுக்கு மஞ்சள் மேலும் பொலிவூட்டியிருந்தது. காலை வெயிலில் புதுக்காசு மாதிரி பளபளத்துக் கொண்டு நின்றாள். ஒரு சின்ன எலந்தம் பழம் அளவுக்குப் பொட்டு, ரொம்பச் சின்னப் பெண்தான். அதிகம் போனால் பதினெட்டு வயசிருக்கும். நிச்சயம் இருபதைத் தாண்டாது. கழுத்தில் இருந்த தாலிக் கயிறு புத்தம் புதுசாய் நூல் திரி தெரியக் கனமாக இருந்தது. கழுத்துச் செயினும் கை வளை யலும் ‘கவரிங்’தான் என்பதைக் கூர்மையாகக் கவனித்து அறிந்தாள். கம்மல் மட்டும் பவுன்தான். புத்தம் புதிய நூல் புடவை. உள்ளே கட்டியிருக்கும் பாவாடைகூடப் புதுசுதான். ஓரம் அழுக்குப் படாததில் இருந்து அதுவும் புதுசுதான் என்று உறுதியாயிற்று. 

‘புதுசா கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கீங்களாக்கும்.’ 

‘ஆமா… போன வாரம்தான் கல்யாணம் ஆச்சு. எங்க வீட்டுல தான் இருந்தோம். நேத்து ராத்திரிதான். இங்க வீடு பார்த்து, அது அழைச்சுக்கிணு வந்துச்சு-” 

‘ஊட்டுக்காரு என்ன பண்ராறு.’

‘கொசு மருந்து அடிக்கிற ஆபீஸ்ல வேலை.’

‘வேலைக்குப் போயிட்டாரா அவரு?’ 

‘இப்பத்தான் போச்சு எப்பவும் காலையில போயிடும்… திரும்பச் சாயங்காலம் ஆறு மணிக்கு மேலேதான் வரும்-‘ ரேணு கூச்சம் தெளிந்து, வார்த்தைக்கு ஒரு தரம் சிரித்துக் கொண்டு பேசினாள். அஞ்சலைக்கு ரேணுவைப் பிடித்துப் போய்விட்டது. 

‘நாஸ்தாவெல்லாம் ஆச்சா-‘ என்று கேட்டாள் அஞ்சலை.

‘உம்… காலைல ஓட்டல்லேந்து இட்டிலி வாங்கியாந்து குடுத்துட்டுத்தான் போச்சு- மத்தியானத்துக்கு அரிசி, சாமான்லாம் இருக்கு. காய்கறிதான் வாங்கணும்-‘ 

‘கடை கண்ணியெல்லாம் இருக்கிற இடம் தெரியுமா?’

‘இங்க எதுவுமே எனக்குத் தெரியாது-‘ 

‘நான் அழைச்சுக்கிட்டு போறேன்- ரெண்டு சொம்பு தலையில் ஊத்திக்கிட்டு வந்துடறேன். நானே வந்து கூட்டிக்கிட்டு போறேன்.’ 

‘உம்…’ 

‘வீடு புடிச்சிருக்கா?’ 

‘ஊம்… பொட்டி மாதிரி இருக்கு. அதுக்கு புடிச்சிருக்கு. அப்புறம் நமக்குப் புடிச்சிருந்தா இன்னா, புடிக்காட்டி இன்னா?” 

‘உங்களுக்கு புடிக்க வேணாமா-‘ 

‘உக்கும்- பொம்பளைங்க இஷ்டத்தையெல்லாம் ஆம்பிளைங்க பாப்பாங்களாக்கும். எனக்கு புடிச்சுத்தான் இருக்கு. பிடிக்கலேன்னா கூட என்னங்க பண்றது? கழுத்த நீட்டிட்டோம். அது சிரிக்க வச்சாலும் சரி. அழ வச்சாலும் சரி…’ 

‘உங்க ரெண்டு பேருக்கும் இது எதேஷ்டம்’ 

‘ஆமா- ஆனா எல்லார்க்கும் பொது கக்கூஸ், பொது குளியல் அறைன்னு இருக்கிறதுதான் புடிக்கல்லே. வெளியே ரெண்டுபேரு கையில் சொம்பை வச்சுக்கிட்டுக் காத்துக்கினு இருக்கிறப்போ, நிதானமா தேச்சு குளிக்க முடியுமா, இன்னா? அதான் எனக்குப் புடிக்கல்லே.’ 

அஞ்சலை சிரித்தாள். 

‘சரி… தோ வந்தட்டேன்-‘ என்றவாறு, பலத்த சப்தத்தோடு கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனாள் அஞ்சலை. 

போகிறவளைப் பார்த்தவாறு நின்றாள் ரேணு. 

ரேணுவை விடப் பத்து வயது கூடுதலாக இருக்கும், அவளுக்கு. முகமும், உடம்பும் வெள்ளரிப் பிஞ்சு மாதிரி இளசுதான். ஏதோ ஓர் அழுக்குப்புடவையைக் காமா சோமாவென்று சுற்றிக் கொண்டிருந்தாள். கழுத்தில் அழுக்கேறி, நாட்பட்டு இறுகிய தாலிக் கயிறு மட்டும்… பாவம். ஏழைப்பட்ட ஜென்மம் என்று நினைத்துக் கொண்டாள் ரேணு. 

‘போலாமா’ என்று கேட்டுக்கொண்டே, கதவைத் தள்ளி தலையை நீட்டினாள் அஞ்சலை. 

‘தோ…’ என்றவாறு, ஆணியில் மாட்டியிருந்த பூட்டையும் சாவியையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள் ரேணு. கல்யாணத் துக்குப் பிறகு அது வாங்கிக் கொடுத்த வெல்வெட் வாரும், வாரின் மீது சரிகை மாதிரி மினுக்குகிற கோடுகளும் கொண்ட செருப்பை அணிந்துகொண்டு வந்த ரேணு கதவைப் பூட்டிக்கொண்டு வீதிக்கு வந்தாள். 

தெரு முக்கு வந்ததும், இடது கைப்பக்கம் திரும்பினார்கள். வரிசையாக இருந்த கடைகளில் ஒன்றைக் காட்டி அஞ்சலை. ‘இதான் செட்டியார் கடை. பலசரக்கு சாமான்லாம் இங்க வாங்கிக் கலாம். சமயங்கல்லே கடனும் வாங்கிக்கலாம். மாசம் பொறந்து கடனைக் கொடுக்கலாம். செட்டியாரு நல்ல மனுஷன். நான் சொல்லி விடறேன்’ என்றாள். 

‘சரிக்கா’ என்றாள் ரேணு. 

இருவருக்கும் நேசப்பாலம் ஏற்பட்டிருந்தது. பரஸ்பரம் அன்பு காரணமாக மனம் குழைந்திருந்தது. ரேணு நெத்திலி மீன் கருவாடும், பாகற்காயும் வாங்கினாள். கொஞ்சம் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியும் வாங்கிக் கொண்டாள். அஞ்சலை ஏதோ பொடி மீன்கள் வாங்கினாள். 

வரும்போது அஞ்சலை கேட்டாள். 

‘உனக்குப் பாவைக்கா புடிக்குமா இன்னா?’ 

ஐயோ…! ரேணுவின் முகம் சுருங்கி, கசப்பை விழுங்கு கிறவளைப் போல, கோணல் மாணலாகியது. ‘எனக்கு புடிக்காதுக்கா. இந்தச் சனியனை நான் தொடவே மாட்டேன். அதுக்குப் புடிக்கும். நெத்திலிக் கருவாட்டையும், குண்டு பாவைக்காயையும் போட்டு வறுத்து வச்சா அது நல்லா சாப்புடும். 

செட்டியார் கடையைக் கடக்கும்போது ரேணு கேட்டாள். ‘குழந்தைங்களைப் பள்ளிக்கூடம் அனுப்பி இருக்கியாக்கா.’ 

‘இருந்தாத்தானே அனுப்பறத்துக்கு-‘ என்றாள் அக்கா.

இருவரும் பேசிக் கொள்ளாமலே வீடு வந்து சேர்ந்தார்கள்.

‘எங்க வீட்டுக்கு வந்துட்டுதான் போயேங்க்கா’ என்றாள் ரேணு, கதவைத் திறந்து கொண்டே. 

கதவைத் திறந்ததும், ஒரு சின்னக் கூடம். அதுவே அறையும் கூட. அதை ஒட்டி இடப்புறம் ஒரு சின்ன அறை. சமையலுக்காக. அவ்வளவுதான். புதுப் பாத்திரங்கள் அழகாகவும் ஒழுங்காகவும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெரிய கோரைப் பாய் தலைகாணி யோடு சுற்றப்பட்டு, அறையின் பாதியை அடைத்துக் கொண்டி ருந்தது. மூலையில், அழுத்தி அணைக்கப்பட்ட இரண்டு சிகரெட் துண்டுகள் கிடந்தன. 

சுவரில், ரேணுவும் கணவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட மார்பளவுப் போட்டோ மாட்டியிருந்தது. 

‘உங்க ஊட்டுக்காரரு அழகாகத்தான் இருக்காரு’ என்றாள் அஞ்சலை. 

ரேணு கூச்சத்தோடு சிரித்தாள். 

‘அதான் அப்பாவுக்கு அதைப் புடிச்சுப் போயி, அதுக்கே என்னைக் குடுத்திட்டாங்க-‘ என்று சொல்லிவிட்டு ரேணு மீண்டும் சிரித்தாள். 

‘எங்க அத்தை மவனுக்குதான் என்னைக் குடுக்கிறதா இருந்தாங்க- இது படிச்சும் இருக்கு – கவர்மெண்டில் வேலை. நல்லா சிவப்பா, பாக்கவும் அழகா இருந்துச்சா — அப்பாவுக்குப் பிடிச்சுப் போச்சு-‘ 

‘உங்க அப்பாவுக்குத்தான் அவரைப் புடிச்சுதா உனக்குப் புடிக்கலையா-‘ என்றாள் அக்கா. 

‘போக்கா’ என்று வெட்கத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்ட ரேணு, ‘உனக்குக் காபி போடப் போறேன்-‘ என்றவாறு ஸ்டவ்வுக்கு முன் உட்கார்ந்தாள். 

அக்காவும் உட்கார்ந்து, ரேணுவின் பையிலிருந்த நெத்திலிப் பொடிகளைக் கீழே கொட்டி, தலையைக் கிள்ளி ஆய ஆரம்பித்தாள். 

பாலைச் சூடு பண்ணியவாறு ரேணு கேட்டாள். 

‘ஏக்கா-உனக்கு குழந்தையே பொறக்கலியா இல்லே பொறந்து தக்காமே போயிடுச்சா-‘ 

கருவாட்டைத் தலைவேறு, உடல்வேறாகக் கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தவள், சட்டென்று நிறுத்தி விட்டுச் சொன்னாள். 

‘இந்தப் பாழும் வயிறு தொறக்கவே இல்லையே ரேணு. ரெண்டாந்தாரமா வாழ்க்கைப்பட்டவ நானு. என் மூத்தாளுக்கும் கொழந்தையே இல்லை. அவளும் மஞ்சக் குங்குமத்தோடப் போய்ச் சேர்ந்துட்டா. எனக்கு விதிச்சதும் அதுதான் போல…’ என்றாள். கண்ணிலிருந்து வழிந்த நீரை மேல் துணியால் துடைத்துக் கொண்டாள். 

ரேணு, தலையைக் குனிந்தவாறே காபியை நீட்டினாள். அக்கா வாங்கி மடக் மடக்கென்று சத்தம் வர அதைக் குடித்தாள். வாயையும் மூக்கையும் அழுந்தத் துடைத்துக்கொண்டு சொன்னாள். 

‘உடம்பு பூரா எண்ணையைத் தடவிக்கிட்டு, மண்ணுல உழுந்து புரண்டு புரண்டு எழுந்திருச்சாலும், உடம்புல ஒட்டறது தான் ஒட்டும். அத்தை வுடு. இப்ப இன்னா கெட்டுப் போச்சி. சொத்து சுகம் இருந்தாலும் ஆண்டு அனுபவிக்க புள்ளை இல்லை யேன்னு வருத்தமா இருக்கும். அதுக்கில்லே. நாளைக்கு முடியாம போற காலத்துல கஞ்சி தண்ணி ஊத்திக் குடுக்க ஒரு புள்ளை இல்லையே… நமக்கு விதிச்சது அவ்வளவுதான்.’ என்று ஒரு தீர்மானம் போலச் சொன்னாள். 

‘ஏக்கா… இனிமே பொறக்கக் கூடாதுன்னு இருக்கா…’ என்றாள் ரேணு, கண்கள் மட்டும் சிரித்தபடி. 

‘ஆமா… எனக்கு அது இல்லாமத்தான் நோவுது…’ என்றவாறு, கைகளை உதறிக் கொண்டு எழுந்து போனாள் அக்கா. 

அக்கா குள்ளம்தான். ஆனால் குட்டை என்று சொல்ல முடியாது. உடம்பு பாந்தம் தான். முதுகு, இடுப்பின் சரிவு, கால் கைகள் எல்லாம், ஒழுங்கும் திடமான வளர்ச்சியோடு லட்சணமாகத் தான் இருந்தாள். நல்ல சாப்பாடும், நல்ல துணியும் இருந்தால் அக்கா அழகியாகத்தான் காட்சியளிப்பாள் என்று ரேணுவுக்குத் தோன்றியது. 


ரேணு அக்காவோடு பசையாக ஒட்டிக் கொண்டாள். அக்கா இல்லாமல் ஒன்றும் ஆகாது என்கிற நிலைமையில் ரேணு இருந்தாள். வீட்டுப் பைப்பில் தண்ணீர் வராத நாட்களில் தெருப்பைப்புக்கு அழைத்துச் சென்று தண்ணீர் அடித்துக் கொடுப்பது அக்காதான்; அவசரத் தேவைக்குக் கடை கண்ணிக்குப் போய் வருவதும் அவள்தான். மீன் ஆய்ந்து கொடுப்பதும் அக்காதான். ரேணுவின் புருஷனுக்குச் சௌகரியப்படாத நாட்களில் ரேணுவைச் சினிமாவுக் குப் பகல் ஆட்டம் அழைத்துச் சென்று திரும்புவதும் அவள்தான். வேண்டாம், வேண்டாம் என்று சொன்னாலும் இட்டிலிக்கு மாவு அரைத்துப் போடுவதும் அவள்தான். எல்லாவற்றுக்கும் மேலாக, பிறந்த வீட்டை விட்டுப் புது வீட்டுக்கு வந்து கொஞ்சகாலமே ஆன ரேணுவுக்குப் பெண் துணையாகவும், பேச்சுத் துணையாகவும் அக்கா விளங்கினாள். 


ரேணுவின் புருஷனுக்குக் காலை ஏழு மணிக்கெல்லாம் அவன் அலுவலக வேலை தொடங்கிவிடுகிறது. வீட்டிலிருந்து ஆறு மணிக்கெல்லாம், மேலே போனால் ஆறரை மணிக்குமுன் கிளம்பி விடுவான். பெரும்பாலான நாட்களில் ரேணு கதவைத் திறந்து வைத்து, சகுனம் பார்த்து, பிறகே கணவனை வேலைக்கு அனுப்பி வைப்பது வழக்கமாக இந்தது. அவள் அம்மாவிடமிருந்து அவள் கற்றுக் கொண்ட பழக்கம் அது. ரேணு கதவைத் திறக்கும் அதே நேரத்துக்கு, அக்காவும் தன் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து நிற்பாள். அல்லது ரேணுவின் வீட்டுக்குள் நுழைவாள். அவன் கேட்பான். ‘என்ன, அக்கா தங்கையைப் பார்க்கப் போராப்போலயா’ என்று. ‘அப்படித்தான் இருக்கட்டுமே’ என்பாள் அஞ்சலை. 

சில நாட்களில் அஞ்சலையே ஏதேனும் பேசுவது வழக்கமாயிற்று.  

‘கிளம்பியாச்சா’ 

‘உம்…’ 

‘அது என்ன ஆபீசோ.. ஊர் உலகத்துல இல்லாத ஆபீசு… கோழி கூவுறதுக்கு முன்னாலயா ஆபீசை துறப்பாங்க… என்பாள். 

அவன் சிரித்துக்கொண்டு பேசாமல் போய்விடுவான். ஆக, ரேணுவோடு, அஞ்சலையும் அவனை வழியனுப்ப வருவது வழக்கமாகிவிட்டது. அஞ்சலை கருக்கலிலேயே எழுந்து குளித்து விட்டிருப்பாள். ஏதேனும், பழம் புடவையாக இருந்தாலும், சுத்தமாகத் துவைத்து ஒழுங்காகக் கட்டிக்கொண்டிருப்பாள். முன்னே போலக் கன்னாபின்னா என்று புடவையைச் சுற்றிக் கொண்டு வருவதில்லை அவள். 

சைக்கிளில் அவன் தெருத் திரும்புகிறவரைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுத்தான் நகர்வார்கள். அக்கா ரேணுவின் வீட்டுக்குள் வருவாள். அப்புறம் அவர்கள் செய்யவும் பேசவும் ஏராளமான காரியங்கள் ஏற்பட்டுப்போகும். இட்லி அல்லது தோசை பண்ண வேண்டியிருக்கும். வீடு கழுவ வேண்டியிருக்கும். மத்தியானம் சமையலுக்கு அரிசி களைய வேண்டுமே. புருஷன் ராத்திரியோடு ராத்திரிதான் சுடு சாதம் சாப்பிடுகிறவனாகையால், அவனுக்காகக் கடைக்குப் போய் காயோ, மீன் பொடியோ வாங்க வேண்டியிருக்கும். பவானி, கலாவில் அவ்வப்போது படம் மாற்றுவார்கள். மதிய ஆட்டம் போய்வர வேண்டியிருக்கும். வீடு என்றிருந்தால் வேலையா இல்லை? 

அஞ்சலை அக்கா சமையலில் படுகெட்டிக்காரியாக இருந்தாள். ரேணு ஆக்குகிற அதே மீன், அதே தக்காளி, அதே வெங்காயம், அதே மிளகாயைத்தான் அக்காவும் உபயோகப்படுத்திச் சமைக் கிறாள். அவள் கைப்பட்டாலே குழம்புக்கு தனி ருசி வந்து விடுகிறது. வெறும் குழம்பு தேனாக அல்லவா ஆகிவிடுகிறது. அவன் குழம்பைத் தாண்ட மாட்டேன் என்கிறானே. அப்படி ஒரு கைப் பக்குவம். கை நிதானம் அவளுக்கு. ரேணுவின் கூடவே இருந்து, அக்காவே குழம்பு வைத்து, கூட்டு, கறி பண்ணித் தருவதும் உண்டு. வாசனையைக் கொண்டே அவன் யூசித்து விடுவதுண்டு ‘இது இன்னா அக்கா சமையலா?’ என்று கேட்டு விடுவான். அக்கா வந்தவுடன் ‘எங்க வீட்டுக் காரரு அப்படிச் சொல்லிச்சி என்று சொல்லிவிடுவாள் ரேணு. 

‘அப்படியா கேட்டாரு’ ‘ஆமாக்கா’ 

‘நீ சொன்னியா.’ 

‘இல்லேக்கா.’ 

‘பின்னே அவருக்கு எப்படித் தெரிஞ்சுது.’ ‘வாசனையாலயே தெரிஞ்சுக்கிட்டு இருக்கும்.’ 

‘சரியான கழுகு மூக்கு உன் வீட்டுக்காரருக்கு.’ ‘போக்கா’ 

‘ஐயோ. புருஷனை சொன்னதும் பொத்துக்கிட்டுச் வந்துடிச் சாக்கும் கோவம்.’ 

‘போக்கா’ 

‘நான் ஆக்குறதே நல்லாருக்குன்னு சொன்னாரா.’ 

‘ஆமாக்கான்னா.’ 

‘நீ பொய் சொல்றே’ 

‘சாமி சத்தியமா…’ 

‘உட்டேன்னு சொல்லு — எதுக்கெடுத்தாலும் சத்தியமா பண்றது? சத்தியம் சர்க்கரைப் பொங்கலாப் போச்சு உனக்கு.’ 

‘நீதான் நம்ப மாட்டேங்கிறியே.’ 

‘நம்பறேன் – நெஜம்மா, நல்லாயிருக்குன்னு சொன்னாரா’ 

‘சத்…’ 

ரேணுவுக்குச் சேவல் கொண்டை மாதிரி செக்கச் சிவந்த நுனி நாக்கு… மேலும் அது சிவக்கும். 

அப்புறம் அவர்கள் நிறையப் பேசுவதற்கும் விஷயம் இருந்தது. மனிதர்களைப் போலவே மனித வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அக்கா காற்று மாதிரி. தோட்டத்துக்குள் புகுந்த காற்று மலர் மணங்களை அள்ளிக்கொண்டு வருவதுபோல, தெருவுக்குள் எல்லா வீட்டுக்கும் அக்கா போவாள். செய்தி கனக்கும் நெஞ்சத்தோடு வீடு திரும்புவாள். எந்த வீட்டுப் பெண்ணும் அவளை வரவேற்பதிலும், பகிர்ந்து கொள்வதிலும் தயக்கம் காட்டவில்லை. அக்காவால் தங்களுக்கு அபாயம் ஒன்றும் இல்லை என்று அவர்கள் அறிவார்கள். தவிரவும், அக்காவால் அவர்களுக்கு காரியம் ஆக வேண்டியிருந்தது. அக்கா சுளுக்கு எடுப்பதில் கெட்டிக்காரி. குழந்தைகளுக்கு உரம் விழுந்தாலும் பெரியவர்களுக்கு சுளுக்கு விழுந்தாலும் அதை எடுக்க அக்காவைத்தான் அணுகுவார்கள். அந்த வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும் ஒண்டி ஒத்தாசைக்கு உதவுபவள் அக்கா தான். தங்களை இறக்கி வைக்க நல்ல சுமை தாங்கி அக்கா என்று அவர்கள் எண்ணம். பிறர் அந்தரங்கங்களைப் புறம்கூறித் திரியும் பழக்கம் அவளிடத்தில் இல்லை. அக்கா தான் சேகரித்த விஷயங்களைக் கொட்டித் தன்னைச் சுத்தமாக்கிக் கொள்ள ரேணுவைக் கொண்டிருந்தாள். ரேணுவுக்கும் இது சௌகரியமாக இருந்தது. அவள் வம்புகளுக்காக வீடு வீடாகப் போவதில்லை. அக்காளைத் தவிர வேறு பெண்களோடும் அவளுக்குப் பரிச்சயம் ஏற்படவில்லை. வம்புகளை வாங்கி வைத்து பூட்டிக் கொள்வதில் சுகமிருந்தது அவளுக்கு. இருந்த இடத்திலிருந்தே அக்கா மூலம் அவள் பொது அறிவும் வளர்ந்தது. 

தெருமுனையில் குடிசைபோட்டு இருந்தாள் மரவள்ளிக் கிழங்குவிற்கிற பட்டு. கண் தெரியாத அம்மாக்காரியோடு வாழ்ந்து வருபவள். மணிக்கூண்டுக்குக் கீழே கடை வைத்து வியாபாரம் செய்கிறாள். பக்கத்தில் டைலர் கடை. சேட்டுக் கடை. அங்கே ஒரு பையன் செவசெவ என்று சைனாக்காரன் மாதிரி, பம்மென்று தலை முடி வைத்துக்கொண்டு, அழகான பல்வரிசை தெரிய, சிரித்துப் பேசிக் கொண்டிருப்பான். பட்டுவோடும் சிரித்துப் பேசிக் கொண்டி ருப்பான். உலகத்தில் நடக்காதது ஒன்றும் நடந்துவிட வில்லை. பட்டுவின் பிள்ளையைக் கலைக்க அக்காதான் உதவ வேண்டியிருந்தது. 

‘தப்பு இல்லையாக்கா?’ என்றாள் ரேணு, அரிசியை ஆய்ந்தவாறே. 

கிழிந்த புடவையைத் தைத்துக் கொண்டே அக்கா சொன்னாள். ‘தப்புன்னா தப்புதான். இல்லேன்னா இல்லைதான்.’ 

‘தப்பு இல்லாமே ஆவுமா-‘ 

‘மனுஷங்களுக்குத் தப்புந்தான் கேக்குது. நல்லதும்தான் கேக்குது-‘ 

‘அதுக்காக…’ 

‘இந்தப் பாழும் மனசு இருக்கே- அது ஒரு நேரம் இல்லாட்டி ஒரு நேரம் ஐயோ — இப்பிடிப் பண்ணிப் போட்டோமேன்னு அடிச்சுக்கும். தப்புப் பண்ணிட்ட பின்னால. ஆனா, கழுதை. அதுதானே கேட்டுச்சி—’ 

ரேணுகாவுக்குச் சம்மதமாகவில்லை. 

‘என்ன இருந்தாலும் தப்புதாங்க்கா-‘ 

‘தப்பு இல்லேன்னு சொன்னனா? ஆனா, பகலும் ராவும் மாதிரி நல்லதும் பொல்லதும் சேர்ந்துதான் வாழ்க்கை-‘ 

ரேஷன் அரிசியில் கல் பொறுக்கிக் கைசோர்ந்து போனாள் ரேணு. முதலில் இருந்தே அரிசியை மட்டும் பொறுக்கி இருக்க வேண்டும். 

‘தப்புக்கு நீயே துணை போறயேக்கா-‘ 

‘தப்புக்கு நான் மட்டுமா துணை போனேன் – அவளை  விட்டுட்டு ஓடிப்போனானே அவ கழுத்தில் தாலிய கட்டினவன் – தப்பு அங்கேந்து ஆரம்பிக்குது – சரி. தப்பு நடந்து போயிடுச்சு – அது வெளிப்பட்டுப் போச்சு – அதனால அது தப்பாயிடுச்சு – அதுக்காவ உசுரையேவா உட்டுடச் சொல்றே. தெரியாத்தனமா எதையாவது மிதிச்சுடறோம் அதுக்காவ காலையேவா வெட்டிக்க முடியும்? இனிமே சாக்கறதையா நடந்துக்கணும்னு நெனச்சுக்கனும்’ 

அக்கா தைத்து முடித்து, ஊசியைக் காலண்டரில் குத்தி வைத்தாள். எழுந்து புடவையை உதறி மடிக்கத் தொடங்கினாள். 

அக்காவின் வீட்டுக்காரர் நயினார் உள்ளே வந்தார். கையை மடக்கி, தோளில் இருந்து விரல் நுனிவரை கட்டுப் போட்டிருந்தார் அவர். 

‘வாங்க… டாக்டர் இன்னா சொன்னாரு’ என்றாள் ரேணு. ‘வயசாயிடுச்சு. கை கூடக் கொஞ்ச நாள் ஆவும்னாரு டாக்டர்’ என்றார் அவர். 

ஓடு மாற்ற, கூரைமேல் ஏறி, கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டிருந்தார் அவர். 

‘கொஞ்சமான பாவமா இந்தக் கையாள பண்ணாரு இந்த ஆளு. அதான் கடவுளே பார்த்துக் கையை முறிச்சு வச்சிருக்காரு’ 

‘என்ன பாவ மயித்தடி நீ கண்டே’ என்றார், நரை மீசையை இடது கையால் தடவி விட்டுக் கொண்டு கிழவர். முதுமையால் நொறுங்கிப்போன உடம்பில், விரைத்துக் கொண்டிருந்தது அவர் மீசை மட்டும்தான். 

‘ரேணு. இந்த ஆளு பாத்தா பாவம். புள்ளைப் பூச்சி மாதிரி இருக்காரேன்னு நினைக்காதே. கொட்டினா தேளு. அக்காவை அதான் என் மூத்தாளைக் குடிச்சுப் போட்டு இவரு அடிச்ச அடி இருக்கே… அப்பா… இதைக் கட்டிக்கிட்டு அடி உதைதின்னே உசுரைவிட்டா அந்த மகராசி. கட்டுக் கழுத்தி பாவம் சும்மா விடுமா? அதான் கையைச் சுத்துது…’ என்றாள். 

‘கிழவர், தான் பாராட்டப்படுகிறாற் போன்ற பாவத்தில் சிரித்துக் கொண்டு நின்றார். மேல் வரிசையில் இரண்டு பல் இல்லை என்பதைக் கவனித்தாள் ரேணு. 

‘வா… வேளையோட பழையதைத் தின்னுட்டுப் படு. காலை வெயில்லே களைச்சுப் போயி வந்திருப்பே…’ என்றவாறு முன்னே போனாள் அக்கா. கிழவர் நாய்க்குட்டியைப் போல பின்னால் ஓடினார். தாத்தாவும் பேத்தியும் போவது மாதிரி இருந்தது. 


‘அக்காவுக்கு வாலிபம் திரும்புது’ என்றாள் ரேணு. 

பிரஷ்ஷால் பல் துலக்கிக் கொண்டிருந்தாள் ரேணு. பற்பசை நுரை வாய் ஓரங்களில் வழிந்தது. கூந்தலை அள்ளிச் சொருகி இருந்தாள். புடவையைத் தூக்கி இடுப்பில் சொருகி இருந்ததால் முட்டிவரை கால் வெளிப்பட்டிருந்தது. அன்னாந்து வானத்தைப் பார்த்து ஒருவித சத்தத்தோடு பல் தேய்த்துக் கொண்டே, அக்காவு டன் பேசினாள் அவள். 

கீழே தரையில் குத்துக்காலிட்டு உட்கார்ந்து கொண்டு, கூந்தலை அவிழ்த்துப் போட்டு, குளித்துவிட்டு வந்து தலை ஈரத்தைக் காலை வெயிலில் உலர்த்திக் கொண்டிருந்தாள் அக்கா. புதுசாக உள்பாடி அணிந்திருந்தாள். அதைக் குறிப்பிட்டே ரேணு அக்கா வைக் கேலி செய்தாள். 

‘உக்கும்… அக்கரைக்குப் போயிருந்திச்சி. இப்ப திரும்பி வந்தி டுச்சி.. போவியா… சட்டை கிழிஞ்சு போயிருந்திச்சி… உடம்பு தெரிய வேணாம்னு, பாடியை எடுத்துப் போட்டுக் கிட்டேன்’ என்றாள். ஆனாலும் அக்காவுக்கு, ரேணு அவ்வாறு கேட்டதில் சந்தோஷம் தான். சின்னப் பெண்ணைப் போல முகத்தைக் கவிழ்ந்து கொண் டாள். அழுந்தத் தேய்த்த மஞ்சள் வெயிலில் புதுக்காசு மாதிரி நெற்றிக்குப் பொட்டு வைத்திருந்தாள். 

‘இன்னும் நீ சின்னப் பொண்ணாட்டம்தான் இருக்கேக்கா வயசானா சதை வைக்கும். உனக்குச் சூடு போட்டது மாதிரி இல்லே சுரீர்னு இருக்கு உடம்பு-‘ என்றாள். 

அக்கா பொய்க் கோபத்துடன், ‘உனக்குக் கேலி பேச இன்னைக்கு நான் கெடைச்சுட்டேன்’ என்றாள். அவள் குரலில் இருந்த குழைவு, இன்னும் இதுபோல் ரேணு பேசமாட்டாளா என்று இருந்தது. முகம் சிவக்க, முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக் கொண்டு, முடிக் கற்றையை உதறினாள். தூசு பறப்பது மாதிரி ஈரம் பறந்தது. 

‘மெய்யாத்தாங்கா சொல்றேன். நமக்கெல்லாம் கொஞ்சம் வயசானா, இரண்டு பக்கத்து இடுப்பலேயும் கட்டு சாத மூட்டை மாதிரி சதை வச்சுடுது… வயிறு முன்னுக்கு வந்துடுது… உனக்கு புடி அளவுகூட எங்கயும் சதை போடல்லியே… இப்பத்தான் வயதுக்கு வந்து, நடுவூட்ல உக்கார வைச்சுப் புட்டு சுத்தின பொண்ணு மாதிரி இருக்கே. எனக்கே ஆசை வருதுன்னா பாரேன்-‘ என்றாள் ரேணு. வாயைக் கொப்பளித்துக்கொண்டே. வாய்த் தண்ணீரைப் பளிச் சென்று துப்பினாள். 

முடியை வடம் போட்டுச் சுற்றிச் சொருகியவாறு, அக்கா சொன்னாள். ‘அது கெடக்கட்டும். ஆமா உன்னை ஆடி மாசத்துக்காக அழைச்சுக்கிட்டு போவ அம்மா வர்ராங்கன்னு சொன்னியே – எப்ப வர்ராங்க-‘ 

‘வர புதன்கிழமை வர்ராங்களாம்… எனக்கு அதை நெனச்சாத் தாங்கா கஷ்டமா இருக்கு… அதுக்கு ஓட்டல் சாப்பாடு புடிக்காது… என்ன பண்ணும்னு தெரியல்லே…’ என்றாள் ரேணு. 

‘ஏன்… நாங்கல்லாம் இல்லாமயா பூட்டோம். நாங்க பாத்துக்க மாட்டோமா… கவலைய உடு-‘ என்றாள் அக்கா. 

‘ஆமாக்கா. அதக் கொஞ்சம் பாத்துக்கோ… அப்பப்போ ஏதாச்சும் கொழம்பு, ரசம் வச்சுக் குடு. சோறு அதே பொங்கிக்கும். அதை உட்டா சாம்பார் வக்கிறேன்னு புளிக் குழம்பு வைக்கும்…’ ‘இப்பல்லாம் பொண்ணுங்க, புருஷனுக்கு எதை எதையோ கத்துக்குடுக்குதுங்க சோறு ஆக்க மாத்திரம் கத்து குடுக்கிறதில்லே…’ என்றாள் அக்கா. 

‘போக்கா..’ என்ற ரேணு கிளுக்கென்று சிரித்தாள். பிறகு, அதை பார்த்துக்கோக்கா… என் மனசு இங்கயே இருக்கும்…’ என்றாள். 

‘கொஞ்ச நாளைக்குத்தானே அதுக்குள்ள உம் புருஷன் இளைச்சு ஓடா தேஞ்சுடமாட்டான். பத்திரமா என் முந்தானை யிலயே முடிச்சுப் போட்டு வச்சிருந்து, நீ வந்ததும் அவுத்துக் கொடுக்கறேன்-‘ 

‘போக்கா-‘ 


ஆடி மாசத்தை அடுத்து மேலும் சில நாட்கள் கழித்துத்தான் ரேணு புருஷன் வீடு திரும்பினாள். நல்ல நாள் கிடைக்கவில்லை. ஓர் அந்திப் பொழுதில் அண்ணனோடு வந்து சேர்ந்தாள் ரேணு அம்மா வீட்டில் எடுத்துக் கொடுத்த சரிகை இழையோடிய புதுப் புடவையோடும், 

தலையில் அம்பாரமாகப் பூவுமாக. 

ரேணுவின் புருஷன் வீட்டுக்கு வந்து, குளித்துவிட்டு, கூடத்தில் ஏதோ ஒரு பழைய பத்திரிகையைப் புரட்டிக் கொண்டிருந்தான். ரேணு, கொண்டு வந்த பண்டம், பாத்திரங்களோடு உள்ளே போய் விட்டாள். 

மாமனும், மைத்துனனும் பேசிக்கொண்டிருந்தார்கள். பேச்சுச் சப்தம் கேட்டு, அக்கா வந்து சேர்ந்தாள். 

‘வந்துட்டியா எங்கண்ணு’ என்றாள் அக்கா. 

அடே! அக்கா தான் எவ்வளவு மாறிப்போய் இருந்தாள். சின்னப் பெண் போல், சிக்கென்று. கண்ணில் மை கூட… என்ன இங்கிதமாய்ப் பூசிக் கொண்டிருக்கிறாள். தலையை ஒழுங்காக, சிரத்தையாக வாரி விட்டிருந்தாள். 

‘வாக்கா. என் கண்ணிலயே இருந்தே நீ… நல்லா இருக்கியா.’ 

‘எனக்கென்ன – நீ சொல்லு – போனியே, நீ பாட்டுக்கு அங்கியே தங்கிட்டே – இங்க நாங்க எவ்வளவோ தவிச்சுப் பூட்டோம் தெரியுமா-‘ 

அக்கா இதைச் சொல்லும் போது அவள் கண்ணில் நீர் கோத்துக் கொண்டது. 

ரேணு அக்காவின் கையைப் பிடித்துக் கொண்டாள். 

‘நான் போகணும், போகணும்னுதான்கா சொல்லிக்கிட்டு இருந்தேன். நாளும் கிழமையும் சரியா இல்லேன்னுட்டு, இப்பத் தான் அனுப்பி வைச்சாங்க-‘ என்றாள். 

‘காபி போட்டு கொண்டாரட்டுமா-‘ என்று அக்கா கேட்டாள். 

‘இனிமே என்னத்துக்குக் காபி? வரும் போது அண்ணன் வாங்கிக் கொடுத்துச்சி. சாப்பிடறநேரம். பொங்கிக்கிடலாம்னு நெனைக்கிறேன்—’ 

அக்கா இருப்பாள் என்று ரேணு எதிர்பார்த்தாள். ஆனால் என்னவோ அவள் சீக்கிரம் கிளம்பிவிட்டாள். ‘வேலை இருக்கு…’ என்று கூறிவிட்டுப் போய்விட்டாள். அண்ணனும் சொல்லிக் கொண்டு கிளம்பிவிட்டான். ஊரில் இருந்தே கொண்டு வந்திருந்த நெத்திலிப் பொடியும், பாகற்காயும் போட்டு, அவனுக்குப் பிடித்தமாக ஆக்கி வைத்தாள். சமையல் வேலை எல்லாம் முடித்து, கூடத்துக்கு வரும்போது, நிலா பாய்விரித்த மாதிரி, வெளிச்சமிட்டிருந்தது. ஜன்னல் வழியாக வழிந்த விளக்கு வெளிச்சத்தில் இன்னும் பத்திரிகையையே படித்துக் கொண்டிருந்தான் அவள் புருஷன். 

‘வாங்க சாப்பிடலாம்…’ என்றாள். 

உடன், கையில் இருந்ததை மூடி வைத்துவிட்டு உள்ளே வந்து தட்டில் உட்கார்ந்தான் அவன். ரேணு ஊருக்குச் சென்ற நாளில் இருந்து, அவர்கள் தனியாக இருப்பது இதுவே முதல் முறை என்று அவளுக்குத் தோன்றியது. 

அதுவே, அவள் நடு முதுகைச் சிலிர்க்கச் செய்தது. சோற்றைப் போட்டுக் குழம்பையும் ஊற்றினாள். குனிந்து பிசைந்து அவன் உண்டான். 

அவள், அன்பு மிகுதியான வேளைகளில் அவன் செய்யும் குறும்புகளைச் சேஷ்டைகளைத் தன் நினைவுக்குக் கொண்டு வந்தாள். 

‘நீயும் தட்டைப் போட்டுக் கொண்டு உட்கார்’ என்பான். இப்போதும் சொல்வான் என்று எதிர்பார்த்தாள். இத்தனை நாள் பிரிவு – கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நாள் பிரிவு – அவனை நெகிழ்த்தி இருக்க வேண்டுமே. இல்லை. அவன் சோறே குறியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சோறு போடும் கையைப் பிடித்துக் கொள்வான். சமயங்களில் ஊட்டி விடுவான். 

எந்தச் சலனமும் இன்றி, ஓட்டலில் சாப்பிட வந்தவன் சாப்பிடுவது மாதிரி, அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். ‘சாப்பிடும் போது என்ன யோசனை…’ என்றாள் அவள். 

‘ஒன்னுமில்லே..’ என்றான் அவன் அசுவாரஸ்யமாக. புருஷனின் கிட்டத்து இருப்பு அவளைக் கிளர்த்தியது. அவன் மட்டும் கிளர்ச்சி அடையாதது ஏன் என்று அவளுக்கு விளங்கவில்லை. 

சாப்பிட்டவன் மீண்டும் வந்து நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு மீண்டும் படிக்க ஆரம்பித்தான். ரேணுவுக்குச் சாப்பாடு இறங்கவில்லை. மீந்துவிடக் கூடாதே என்று கட்டாயமாகச் சாப்பிட்டாள். உண்ட இடத்தை ஒழித்துப் போட்டுவிட்டு, வெளியே வந்தவள், அவனைப் பார்த்து, ‘என்னங்க… பரிட்சைக்குப் படிக் கிறீங்களா…’ என்று கேட்டாள். பதிலை எதிர்பார்க்காமல், உள்ளே வந்து படுத்துக்கொண்டாள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகுதான் அவன் எழுந்து உள்ளே போனான். படுத்தான். 

சுவர்ப்பக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டிருந்த ரேணுவைத் தன் பக்கமாகத் திருப்பினான். முதலில் வீம்பாக இருந்தவள், அப்புறம் தான் திரும்பினாள். 

‘அழுதியா…’ என்று கேட்டான். 

அவள் கன்னத்தையும், கண்களையும் துடைத்தான். 

‘என்ன குழந்தை மாதிரி…’ என்றான். சிணுங்கிக் கொண்டே ரேணு அவனிடம் ஒட்டிக் கொண்டாள். 

அவன் மார்பைத் தடவியவாறு ‘நீங்க ரொம்ப இளைச்சுட்டீங்க…’ என்றாள். 

காற்று பலமாக அடித்துத் தெருக் கதவைக் குலுக்கிச் சத்தம் போட வைத்தது. 

‘கதவை சாத்தனீங்களா’ என்றாள் ரேணு. 

‘ஊம்-‘ 

‘உள்ளியும் மேலயும் இம்மாந் துணி போட்டு, ஏன் புழுங்கிப் போறேங்க… பாரு வேர்த்து வடியுது…’ என்றான் அவன். 

‘சீய்…’ என்றாள் அவள். 

ரேணு மீண்டும் நினைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆர்வ மில்லாமல் சாப்பிடுகிற அவன். அத்தனை நாள் பிரிவிலும் கொஞ்ச மும் கிளர்ச்சி ஊட்டப்பெறாத அவன். தட்டையே பார்த்துக் கொண்டு, கொஞ்சமும் பசியில்லாமல், கட்டாயத்துக்காகச் சாப்பிடுகிறவனாக அவன்… 


சைக்கிளைத் தள்ளிக்கொண்டு படி இறங்கப் போனான் அவன். அப்போது அவள் சொன்னாள். 

‘வேற வீடு பாருங்க…’ 

திடுக்கிட்ட அவன், ‘ஏன்’ என்றான். 

‘எனக்குப் பிடிக்கல்லே.’ 

டைனமாவைப் பார்த்தவாறு அவன் கேட்டான். 

‘திடீர்னு சொன்னா?… முதல்லே பிடிச்சிருக்குன்னு சொன்னியே…’ 

‘அப்பப் பிடிச்சுது. இப்பப் பிடிக்கல்லே…’ 

அவன் போய்விட்டான். 

அக்கா உள்ளே வந்தாள். 

‘அவரு போயிட்டாரா…’ என்றாள் அக்கா. 

‘உன் எதிருக்க தானே போனாரு…’ என்றாள் ரேணு. அக்கா ரேணுவைக் கூர்ந்து பார்த்தாள். 

‘குளிச்சுட்டு வந்துடறேன்… கடைக்குப் போலாமா-‘

‘எனக்கு நாழி ஆகும்கா. நீ போயேன்’ 

‘நீ வரல்லியா…’ 

‘ஒழிஞ்ச போது போறேன்… இன்னுமா எனக்கு வழி தெரியாதுன்னு நெனைக்கறே..’ 

‘சரி… நான் வரேன்…’ என்று சொல்லிய அக்கா, தலையைக் கவிழ்ந்துகொண்டே போனாள். ரேணு அக்காவைப் பார்த்தாள். 

ஆத்திரமாக இருந்தது. ஒரு நிமிஷம்தான். அப்புறம் பாவமாகவும் இருந்தது. 

– 1985

– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.

பிரபஞ்சன் பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *