பப்பா
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 88
(1990ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அப்போதெல்லாம் பப்பாவைப் பார்க்கப் போவதென்பது எங்களுக்கு ஒருபொழுது போக்கு, ஒரு வேடிக்கை, ஒரு விளை யாட்டு. அப்போதுதான் நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்திருந்தேன். என்னுடன் விஜயராகவனும், மைக்கேலும் கூட உயர்நிலைப் பள்ளிக்கு வந்திருந்தார்கள். நாங்கள் மூன்று பேரும் இணைபிரியாத் தோழர்கள். தமிழாசிரியர்கள் எங்களை மூவேந்தர்கள் என்பார். ஆனால் மூவேந்தர்கள் எப்போது ஒன்றாக ஒன்று சேர்ந்து, எங்களைப் போல நண்பர்களாக இருந்தார்கள்? காலம் முழுக்க ஒருவரையொருவர் அடித்துக் கொண்டல்லவா இருந்தார்கள். ஒற்றுமையாக இருந்தார்கள் என்றால், யாராரோ அந்நியர்களும், ஆங்கிலேயர்களும், பிரஞ்சுக்காரர்களும் இந்த நாட்டுக்குள் எப்படி நுழைந்திருக்க முடியும்?
பள்ளிக்கூடம் மாலை நான்கு மணிக்கு விடும். நாங்கள் பெரிய பாப்பாரத் தெரு வழியாக மிஷன் தெரு சேர்ந்து, டூப்ளெக்ஸ் தெரு திரும்பி கவர்னர் மாளிகையைத் தொட்டு சர்க்கிள் கிளப்புக்கு வருவோம். எங்களுக்கு முன்னே, பத்துப் பனிரெண்டு வயதுக்குட் பட்ட சிறுவர் கூட்டம் ஒன்றும் பப்பாவுக்காகவே காத்திருக்கும். சிறுவர்கள் என்று அல்ல. பெரியவர்கள், ஏழ்மைப் பட்டவர்கள், ஒன்றிரண்டு ரிக்ஷா வண்டிக்காரர்கள் என்று சிலர் பப்பாவுக்காக சர்க்கிள் கிளப்புக்கு வெளியே காத்திருப்பார்கள். சர்க்கிள் கிளப் என்பது எல்லா கிளப்புகளையும் போல வெறுமனே குடிக்கும் கூத்தடிக்கும் இடமாகவும் இல்லை. நகரின் பொறுக்கி எடுத்த பிரமுகர்கள் மட்டுமே வந்து கூடுகிற இடம் அது. அதில் உறுப்பினராக இருந்து, அங்கு காணப்படுவதே, தங்கள் பெரிய மனிதத் தன்மைக்குச் சாட்சி, என்று கருதினார்கள் அவர்கள்.
பப்பா, அங்கு சரியாக ஆறு மணிக்கு வருவார். வந்தால் ஏழு, ஏழரை மணி வரை சீட்டாடிப் பொழுதைப் போக்குவார். அவருடன் சீட்டாடுவதற்கென்று, உள்ளங்கை நமைச்சல் எடுத்துக் கொண்டு அமர்ந்திருப்பார்கள், ஊர்ப் பிரமுகர்கள்.
சர்க்கிள் கிளப்பின் எதிரே, பூங்கா இருக்கிறது. பிரஞ்சுக் காரர்கள் ஏற்படுத்திய பூங்கா. வரிசை வரிசையாகக் கொன்றை மரங்கள் மலிந்த பகுதி அது. சீசன் சமயங்களில், மஞ்சள், சிவப்பு என்று வண்ணம் வண்ணமாகப் பூத்து நிற்பது, மரங்கள் தீப்பற்றிக் கொண்டு எரிவது மாதிரி இருக்கும். நடைபாதையிலும், தெருவிலும் பூக்கள் சிதறி, கால் வைக்கக் கூசும், பூக்களை மிதிக்கக் கூடாது, அல்லவா?
பப்பா வரும் நேரம் நெருங்க நெருங்க, அந்தக் கூட்டம் அமைதியை இழக்கத் தொடங்கிவிடும். கிளப்புக்கு வந்து நிற்கும் எந்தக் காரையும் போய்ப் பப்பா, பப்பா என்று சுற்றிக் சூழ்ந்து கொண்டு நிற்கும். அந்தக் காரில் வந்தவர் பப்பாவாக இருக்க மாட்டார். பப்பாவுடன் கதைப்பதற்கு என்று வந்த லட்சுமணசாமி உடையாராக இருக்கும். அல்லது பிரதேச காங்கிரஸ் தலைவர் நாதனாக இருக்கும். இல்லை, அஷ்ரப் வந்திருப்பார். அல்லது கந்தசாமிப் பிள்ளையாக இருக்கும். கூட்டம்தன் ஏமாற்றத்தைச் சிரித்துப் போக்கிக் கொள்ளும். ஒவ்வொரு முறை ஏமாறும் போதும், அப்படி ஏமாறுவதையே ஒருவகை விளையாட்டு என்கிற பாவனை யில், ஏமாற்றத்தை விளையாட்டாகப் பண்ணிக் கொண்டு மகிழும்.
நாங்கள் சர்க்கிள் கிளப்பின் துணை வாசல் எதிரே, கட்டைச் சுவரில் ஏறி நிற்போம். எங்கள் பார்வையில், பப்பா படாமல் கிளப்புக்குள் அவர் சென்றுவிட முடியாது. தவிரவும், அந்த, தலையில் எண்ணெய் இல்லாத, சட்டை போடாத, போட்டாலும் அழுக்குப் படிந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள் இல்லை என்கிற தோரணையில் நாங்கள் நிற்பதற்கும், எங்களைத் தனிப் படுத்திக் கொள்ளவும் அந்த இடம் வசதியாக இருந்தது. ஒப்பித் தாலைக் கடந்து வருகிற எந்தக்காராக இருந்தாலும், அது பப்பாவின் காராகத்தான் இருக்க வேண்டும் என்பது போல, காரைக் கண்ட மாத்திரத்தில், அந்தக் கூட்டத்தில் ஓர் எழுச்சி ஏற்படும். இது தொடர்ந்து ஆறு மணி வரை நீடிக்கும்.
கடைசியில் பப்பா வந்தே விடுவார். ஒன்று, நேராகக் கோன்சி யில் இருந்து வருவார். அல்லது ஏதாவது கூட்டத்தில் இருந்து வருவார். எப்போதும் அவருடன் இரண்டு மூன்று பேர் சேர்ந்து வந்து இறங்குவார்கள். இளைஞர்களாயும் அவர்கள் இருப்பார்கள். அல்லது ரொழே டாக்டர், தாவீது அவொக்கா போன்ற பெரியவர் களாகவும் இருப்பார்கள்.
பப்பா கதர் வேஷ்டியும், கதர் அரைக்கைச் சட்டையும் அணிந்து வெள்ளை வெளேரென்று இருப்பார். சுபாவத்தில் அவர் ரோஜாப்பூ நிறம். தொட்டால் சிவந்து கொள்ளும் நிறம். அதற்கு மேல், வெள்ளைக் கதர் ஆடையுடன் அவர் இருப்பது, ரோஜாக் கூடையை வெளுத்த வேஷ்டியில் வைத்துக் கட்டியது போல் இருக்கும்.
பப்பா சட்டையில் நான்கு பாக்கெட்டுகள் இருக்கும். மேலே இரண்டு, கீழ்ப்புறத்தில், கோட்டுக்கு இருப்பது போல இரண்டு. கீழே இருக்கும் இரண்டு பாக்கெட்களிலும், கொத்துக் கொத்தாகச் சில்லறைகளை அள்ளிப் போட்டுக் கொண்டுதான் அவர் எங்கும் புறப்படுவார்.
பப்பா காரில் இருந்து இறங்கினார். அதுவரையில் ஏமாந்து இருந்த கூட்டம் பப்பாவைக் கண்ட மகிழ்ச்சியில், அலைமோதும், அவரைச் சுற்றிச் சூழ்ந்து கொள்ளும். தன் கைகளை ‘பப்பா… பப்பா’ என்றபடி நீட்டும். இடுப்பில் ஒரு குழந்தையை வைத்திருக்கும் ஒரு பெரிய குழந்தை அவருக்கு முன் அலுமினியக் குவளையை நீட்டும். தன்முன் நீட்டப்பட்ட எல்லாக் கைகளுக்கும் சில்லறை சென்று சேர்வது மாதிரி, பப்பா, தன் பாக்கெட்டிலிருந்து சில்லறைகளைக் கொத்துக் கொத்தாக அள்ளிப் போடுவார். அது, வானத்திலிருந்து மழைத்துளி மண்ணில் விழுவது மாதிரி எங்களுக்குத் தோன்றும். குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கென்று மாத்திரமல்ல. பெரியவர் களுக்கும் பப்பா, தன் கையில் உள்ளதை ஈவார்.
குழந்தைகளும், பெரியவர்களும் கூட ‘பப்பாவுக்கு ஜே’ என்று கோஷம் போடுவார்கள். ரோஜா மலர்வது போல பப்பாவின் முகத்தில் எப்போதும் புன்னகை மிளிரும். அது உதடுகளை விரி வாக்கிக் கொள்வதால், விளைவது அன்று. உள்ளத்தில் இடையறாது சுரந்து கொண்டேயிருக்கும் அன்பெனும் ஊற்று, புன்னகையாய் விகசிக்கிறது. அவ்வளவு தான்.
நாராயணன் என்று எனக்கு ஒரு நண்பர். என்னை விடவும் பத்து வயது மூத்தவர். எப்போதும் என்னை விடவும் மூத்தவர்கள் தான் எனக்குச் சிநேகிதர்கள். அவர் ஒரு கட்சியின் தீவிர அநுதாபி. எல்லோரையும் தோழர் தோழர் என்றுதான் அழைப்பார். அவர் எனக்குச் சொன்னார்.
“பப்பா, பிச்சைக்காரத்தனத்தை வளர்க்கிறார்.”
தோழர் சொல்வதில் சாரம் இருக்கலாம்… ஆனால் பசித்து எரியும் வயிற்றுக்குத் தத்துவத்தைத் தீனியாகக் கொடுக்க முடியாது. அந்த வேளைக்கு டீயும், பன்னும் வாங்கிக் கொள்ளக் காசு கொடுப்பவன் தெய்வமே. இதில் எனக்குச் சந்தேகம் இல்லை. பசி என்கிற அநுபவத்தைப் பெற்றவன்தான், சில்லறைகளின் பெருமையை அறிவான்.
கொடுப்பதில் சிலருக்கு சந்தோஷம். கொடுப்பதில் உயிர் வாழ்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு அது ஒரு யாகம். பப்பா, அந்த யாகத்தைத் தன் உயிர் உள்ளவரையில் செய்யத் தான் செய்தார்.
“உதவலாம். முதலமைச்சரின் வேலை உதவுவது அல்ல; ஒருவன், உதவியை எதிர்பாராமல், தன் கையால் உழைத்துக் சாப்பிடும் சூழ்நிலையை ஏற்படுத்துவதே” என்பார் தோழர். சரிதான்.
பப்பா அப்போது முதல் அமைச்சராக இருந்ததாய் ஞாபகம்.
அது ஒன்றும் அவரைக் கிளப்புக்குப் போவது, சீட்டாடுவ தினின்றும் விலக்கி விடவில்லை. முதல் அமைச்சர் பதவி என்பது, அவர் முடியில் சூடியுள்ள இன்னுமோர் இறகு. அவ்வளவுதான். பப்பாவால், எங்கள் மாநிலத்து முதல்வர் பதவி மரியாதை பெற்றது. என்றும், பெறவில்லை என்று சிலரும் சொல்வார்கள்.
பப்பா, நீதி பரிபாலனம் மிக்க வேடிக்கையாகவும், அர்த்தம் நிரம்பியதாகவும் இருக்கும். சீட்டாடும் இடத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பைல்களைத் தூக்கிக்கொண்டு வந்து அவர் கையெழுத் துக்குக் காத்துக் கொண்டு நிற்பார்கள். பின்னாளில், எனக்கு இது ஒரு குறியீடாய்த் தோன்றியது. அரசு என்கிற ஆள்கிற வர்க்கம், மக்களின் பிரதிநிதியிடம் அல்லது மக்களிடம் தாழ்ந்து பணிந்து ஏவலுக்கு நிற்கிற மாதிரியே எனக்குத் தோன்றியது. பைல் கத்தை களைச் சுமந்து கொண்டு யாருக்கும் தலை வணங்காத அந்த அதிகாரிகள், கிளப்பின் வாசலில் கால் மாற்றி கால் மாற்றி நின்றது இன்றைக்கு நினைத்தாலும் எனக்குள் மகிழ்ச்சி ஏற்படுத்தும் அநுபவமாகவே இருக்கிறது.
பப்பா மிகத் தீவிரமாக சீட்டாட்டத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது பப்பாவோடு ஒரு காலத்தில் கோழிப் பந்தயத்தில் கலந்து கொண்ட வரும், பப்பா கட்சியில் பங்கு கொண்டவருமான துரைசிங்கம், தன் பையனோடு, கிளப் வராந்தாவில் நின்றிருந்தார். பப்பாவின் தலை இடது புறமாகத் திரும்பும் நேரத்தை எதிர் பார்த்துக் கொண்டு அவர் இருந்தார். நேரிடையாக அவர் முன் போய் நிற்பதும் துரைசிங்கத்துக்கு சங்கடமாக இருந்தது.
பப்பா எதேச்சையாகத் திரும்பினார். துரைசிங்கத்தைப் பார்த்து விட்டார். அவர் நெற்றி சுருங்கியது. சட்டென்று எழுந்து துரைசிங்கம் அருகில் வந்து, “நீங்க முசியோ துரைசிங்கம்தானே?” என்றார்.
“ஆமாம்” என்று தலையசைத்தார் அவர்.
பப்பா அவர் கையைப் பிடித்துக் குலுக்கியதோடு நிற்கவில்லை. சேர்த்து அணைத்துக் கட்டிக் கொண்டார்.
“எத்தனை வருஷமாச்சு. சுமார் பத்து வருஷம் இருக்குமா? இருக்கும். வாருங்கள்” என்று கிழிந்த சட்டையும், அழுக்கு வேஷ்டியுமாக இருந்த அந்த மனிதரைக் கிளப்புக்குள் அழைத்துச் சென்று ஃபேனுக்குக் கீழே அமர வைத்தார்.
“என்ன சாப்பிடுகிறீர்கள்? பீர், விஸ்கி, ஒயின்… என்ன வேணும்?” என்று கர்ஜித்தார் பப்பா.
“ஐயையோ….அது ஒன்றும் வேண்டாம். எனக்கு ஓர் உதவி செய்யுங்கள்.”
“என்ன வேண்டும். பணம்…? அல்லது…?”
“என் பிள்ளைக்கு ஒரு வேலை. குடும்பம் ரொம்பக் கஷ்டத்தில் இருக்கு. பப்பா. நீங்க பார்த்துத்தான் கண் திறக்கணும்…” என்று கும்பிட்டார் துரைசிங்கம்.
பப்பா, காபி வரவழைத்து துரைசிங்கத்துக்குக் கொடுத்தார். அவருடைய பதினைந்து வயதான பிள்ளைக்குக் கைகுலுக்கி, வரவேற்பு சொல்லி, அவனுக்கும் காபி கொடுக்கச் சொன்னார். தன் பி.ஏ.வை அழைத்து, “திராவாபப்ளிக் திரேக்தரை நான் கூப்பிட்டதா, எங்கே இருந்தாலும் உடனே என்னை வந்து பார்க்கச் சொல்லு- அல்லது பேசச் சொல்லு…” என்று கட்டளையிட்டார். அடுத்த கால்மணியில் பொதுப்பணித்துறைச் செயலாளர் அங்கு தோன்றினார்.
“சாம்பசிவம், இந்தப் பையன் நம் சினேகிதர் பையன். நமக்கு ரொம்ப வேண்டிய சிநேகிதர். நீ என்ன பண்றே? நாளைக் காலைலே இவன் வந்து உன்னைப் பார்ப்பான். ஒரு மேசையைப் போடு. ஒரு நாற்காலி போடு. இவன் முன்னால ரெண்டு பைலைக் கொடுத்து வேலை கொடு. நீ போகலாம்.”
பப்பா, முகத்தைத் திருப்பிக் கொண்டார்.
செயலாளர் குழப்பத்தில் ஆழ்ந்தார். இது என்ன கொத்தவால் சாவடி விவகாரமா? ஒரு மேஜையைப் போட்டு நாற்காலி போட்டு அரசாங்க வேலை கொடுக்கிறதாவது?
“மன்னிக்கணும்… சட்டம், முறைன்னு ஒன்று இருக்கு… முறைப் படி…” பப்பாவுக்குக் கோபம் வந்துவிட்து.
“கொஷோன்-சட்டமாவது-முறையாவது… மனுஷனுக்கு உதவாத சட்டம் என்ன சட்டம். கஷ்டத்துக்குக் கை கொடுக்கத் தான் நான்! எவன் நான் சொல்ற வார்த்தையை மறுக்கிறவன்… தொலைச்சுப்புடுவேன்…’
பப்பா வார்த்தையில் மட்டும் தொலைப்பவர் அல்லர். உண்மையாகவே, தன் ஏவலை மதிக்காதவரை அவர் ஆள்கள் உதைத்து இருக்கிறார்கள், செயலாளர், தன் சட்ட அறிவைச் சுருட்டிக் கொண்டு போனார்.
பப்பா எப்போதும் இப்படித்தான். அவரது மனத்தில் கருணை சுரந்து கொண்டேயிருந்தது. மனிதர்களைச் சிரிக்கச் செய்ய எந்த சட்ட வரம்பையும் அவர் புறம் தள்ளத் தயாராக இருந்தார்.
என் சிநேகிதன் ரவிக்கு, பப்பா சொன்னபடியே, பொதுப் பணித்துறையில் வேலை கிடைத்தது. தட்டில் பழம், வெற்றிலை யோடுபோய் அவர் காலில் விழுந்தான். பப்பா, பழங்களை அவனுக்கே தந்து அனுப்பி வைத்தார்.
இன்னுமொரு வழக்கு எனக்குத் தெரியும்.
முதலியார்பேட்டைப் போலீஸ் ஸ்டேஷனில் சின்னச்சாமி என்று ஓர் இன்ஸ்பெக்டர் இருந்தான். ரௌடியாம் அவன். அவன் கொடுமை பொறுக்கமாட்டாமல், மக்கள் அவனை அடித்துப் போட்டிருக்கிறார்கள்.
அடித்தவர் பப்பாவை அணுகினார்.
பப்பா சொன்னார்.
“ரௌடித்தனம் பண்றவனை உதைக்கிறது சரி. ஆனா, அவன் நம்ம ஆபீஸ்காரன் அல்லவா? என்கிட்டே சொல்லிட்டு அப்புறம் அல்லவா அவனை நீ உதைச்சு இருக்கணும்… சரி. நீ போ…” என்று அடித்தவர்களை அனுப்பி வைத்தார்.
*கொஷோன் – பன்றி
இன்ஸ்பெக்டரும் பப்பாவை அணுகினான். அவன் வாய் கிழிந்து முகம் வீங்கி இருந்தது.
“நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்கே உன் மனசுல. கொஷோன், உத்தியோகம் பண்ண வந்தா, ஏழைகளை மிரட்டறதுன்னு அர்த்தமா? அவனுக்குத் தொண்டு பண்ணத்தான் நீ வந்திருக்கே. தெரிஞ்சுதா? மரியாதையா வேலையைப் பாரு. இல்லேன்னா, நானே உன்னை உதைக்க ஆள் அனுப்புவேன்.”
இன்ஸ்பெக்டர் அத்துடன் வாலைச் சுருட்டிக் கொண்டான்.
பப்பாவின சாகசங்கள் பலப்பல.
‘மக்களுக்கு எதிராகச் செயல்பட்ட இன்ஸ்பெக்டரையே எச்சரித்தார் பார்த்தீரா’ என்று என் தோழரிடம் சொன்னேன்.
தோழர் தலையசைத்துக் கொண்டு சொன்னார். ‘இன்ஸ் பெக்டரை உதைத்தவர் காங்கிரஸ் நண்பர். அதே காரியத்தைக் கம்யூனிஸ்டுகள் செய்திருந்தால், ‘பப்பா’ அதை அனுமதித்து இருப்பாரா? பப்பான்னா, தமிழில் அப்பா என்று அர்த்தம். அதாவது மாநிலத்தின் தந்தை. தந்தை, காங்கிரஸ் பிள்ளைக்குப் பிஸ்கோத்தும், கம்யூனிஸ்ட் பிள்ளைக்குப் பிரம்படியும் கொடுப்பானா? கொடுத்தால் அவர் தந்தையா?’
தோழர் வார்த்தையில் உண்மை இருந்தது.
– 1990
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
கால ஓட்டம்
சாரல் நாடன்
September 30, 2026
உயிர் மல்லாரி
அனந்த் ரவி
September 30, 2026
இதுதான் ட்ரெண்ட்!
இரா.கலைச்செல்வி
September 30, 2026
