நாடகம் போட்டுப்பார்
கதையாசிரியர்: மெரீனா
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு:
நகைச்சுவை
கதைப்பதிவு: October 21, 2026
பார்வையிட்டோர்: 86
(2010ல் வெளியான குறுநாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
பகுதி – 7 | பகுதி – 8

அன்றிரவு ராம்குமாரால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அவ்வப்போது விளக்கைப் போட்டு, ஸ்கிரிப்டை எடுத்துப் படித்து அதில் சின்னச் சின்ன மாற்றங்கள் செய்து கொண்டிருந்தான். இரண்டு மணிக்குத் தூங்கியவன், விடியற்காலை நான்கு மணிக்கெல்லாம் விழித்துக்கொண்டு, இரண்டு டேப் ரிக்கார்டர்களை வைத்துக்கொண்டு மியூஸிக்கை ரிக்கார்டு செய்தான். அதற்குப் பிறகு ஏதேதோ கணக்குகள் போட்டுப் பார்த்து, அன்றைய செலவுக்காகக் கையிருப்புப் பணத்தை எண்ணிப் பார்த்தான். ஐநூறு ரூபாய் துண்டு விழுந்தது! படுக்கையில் படுத்தபடியே, அந்தப் பணத்தை எப்படிப் புரட்டுவது என்று சிந்திக்கத் தொடங்கினான்.
காலையில் எழுந்ததிலிருந்து முரளியும் பிஸியாகி விட்டான். நேரில் சென்று சில சபா காரியதரிசிகளை அழைத்தான். சிலருக்கு ‘போன்’ செய்தான். பத்திரிகை அலுவலகங்களுக்குச் சென்று நாடக விமரிசனம் செய்பவர்களுக்கு இன்விடேஷன் கொடுத்து, இரண்டு வரிகளாவது எழுதும்படி மன்றாடினான்.
சப்பாணி, சினிமா டைரக்டர் பாப்ஜிராம் வீட்டுக்குச் சென்று காத்திருந்து, பல்லை இளித்து, பெரிய கும்பிடு போட்டு, காலில் விழாத குறையாக இனாகுரேஷனுக்கு வரச் சொன்னான். அவர் மூலமாக எப்படியாவது சினிமாவில் நுழைந்துவிட வேண்டுமென்பது அவனது இரண்டாண்டுக் கனவு.
பத்து மணிக்கு ராம்குமார் வீட்டுக்கு வந்தான் முரளி. இருவரும் கவர்களில் பெயர்கள் எழுதிப் பணம் போட்டனர்.
சரியாக இரண்டு மணிக்கு ராம்குமார் தியேட்டரில் இருந்தான். அது நிசப்தமாக இருந்தது. மனித நடமாட்டமே இல்லை.
சூளைமேடு பாபுவின் ஆட்களில் இருவர், ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தனர். ராம்குமார் ஒரு நாற்காலியில் அமர்ந்து, அன்று செய்யவேண்டிய மாற்றங்களைக் குறித்து வைத்திருந்த பேப்பரை ஒரு முறை படித்தான். ‘எல்லோரும் நேரத்துக்கு வருவார்களா?? நினைத்த மாற்றங்களைச் செய்ய முடியுமா? ஹாலுக்கு மியூஸிக்கை முழுவதும் ஒரு முறை போட்டுக் காட்ட வேண்டு மே… நேரம் இருக்குமா? நாலாவது ஸீன்லே…!’- இப்படி யோசித்துக் கொண்டிருந்தவன் அசந்து தூங்கிவிட்டான்!
விழித்துக் கொண்டபோது, ‘ரொம்ப நேரம் தூங்கிவிட்டோமோ’ என்று பயந்துபோனான். மணி மூணரை, அப்போதும் தியேட்டர் காலியாகத்தான் இருந்தது. முரளியைக்கூட காணோம். ‘எல்லோரையும் ரெண்டு மணிக்கே வரச்சொல்லியிருந்தேன். இவ்வளவு சொல்லியும் இவங்களுக்குப் பொறுப்பே இல்லியே…’ ராம்குமார் பொறுமையிழந்தவனாய் மேடைக்கும் வாசலுக்கும் நடந்து கொண்டிருந்தான்.
மூன்றேமுக்காலுக்கு வியர்வையில் நனைந்தபடி முரளி வந்தான். அவன் மீது ‘வள்’ளென்று விழுந்தான் குமார். “நீயே லேட் பண்ணினா எப்படி?”
முரளி அவன் மூடைப் புரிந்து கொண்டான். ‘குமார்! இன்னிக்கு லேட்டா வந்தா யாரையும் ஒண்ணும் சொல்லாத. அவங்க மூடு அவுட்டாயிடும். அப்படியே விட்டுடு. ரொம்ப சேஞ்சஸ் பண்ணினா கன்ஃப்யூஸ் ஆயிடுவாங்க…”
“சரி, சரி மொதல்லே அந்த ஆளுங்களை எழுப்பு… ஸ்பாட் லைட்ஸையெல்லாம் மாத்திக் கட்டணும்…”
நாலரை மணிக்கு மேக்கப் கண்ணபிரான் வந்தார். “கண்ணபிரான் சார், அப்புறம் மறந்துடுவேன்… பாலுவுக்கு நேத்து வெச்ச மாதிரி அவ்வளவு பெரிய மீசை வேணாம். மூர்த்திக்கு வேறே ‘விக்’ வையுங்க” என்றான் ராம்குமார், ஸ்பாட்டை சாக்பீஸால் மார்க் செய்து கொண்டே! ஐந்து மணிக்கு சுபத்ரா வந்து ராம்குமாருக்கு அவசர அவசரமாக “நமஸ்தே” என்று சொல்லிவிட்டு, மேடையைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு மேக்கப் அறைக்கு விரைந்தாள். ஆறேகால் வரை ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்தனர்.
“ஆறேகாலுக்கு மேக்கப் அறையிலும் ஸ்டேஜிலும் ‘வளவளா’ பேச்சு. ‘சளசளா’ பரபரப்பு. கண்ணில் பட்டவர்களையெல்லாம் நிறுத்தி ராம்குமார் ஏதோ இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்துக் கொண்டிருந்தான். அதை அரைகுறையாகப் புரிந்து கொண்டவர்களின் முகங்களில் பேயறைந்த எக்ஸ்ப்ரஷன்!
ஆறேமுக்காலுக்குப் பூஜை. வி.கே. வந்திருந்தான். ஆனால், ராம்குமார்தான் ‘வாத்தியார்’! பெரியவன், சின்னவன் என்ற பேதமில்லாமல் அவன் காலைத் தொட்டு வணங்கினார்கள். வெளி ஆசாமிகள் நாலைந்து பேர் நடிகர்களின் கைகளைக் குலுக்கி ‘பெஸ்ட் ஆஃப் லக்’ சொன்னார்கள்.
முதல் மணி அடிக்கப்பட்டது. திடீரென்று பரபரப்பு அதிகமாயிற்று. அங்குமிங்கும் ஓடி ஆளுக்கு ஆள் இன்ஸ்ட்ரக் ஷன் கொடுக்கத் தொடங்கினர். ஒரே குழப்பம், குளறுபடி செம டென்ஷன்!
ஹாலில் சுமார் இருநூறு பேர் கூடியிருந்தனர். சப்பாணி படுதா இடுக்கு வழியாகப் பார்த்தான். ஸீட்டில் பாப்ஜிராம் இல்லை. ஏகமாக ஏமாற்றம், சுபத்ரா, முரளியிடம் நாலு பேருக்கு ‘காம்ப்ளிமெண்டரி டிக்கெட் கேட்டாள்.கூட்டமே இல்லையே என்று அவனுக்கு எரிச்சல். “நிறைய இடம் இருக்கு… எங்கேயாவது உட்காரச் சொல்லுங்க மேடம்.”
ராமுடுவும்… சோனியும் ஹாலுக்குள் வரவில்லை. என்ட்ரன்ஸில் நின்றபடியே சிகரெட்டும் கையுமாக நண்பர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
இரண்டாவது ‘பெல்’ கொடுத்து, விளக்குகள் அணைந்து, டைட்டில் மியூஸிக் தொடங்கிவிட்டது.
சாமிஜி இரண்டு ‘லோட்டாக்களுடன் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த செய்தி உள்ளே பரவிற்று. உடன் வந்த சந்தியாதேவியும் முத்தம்மாவும் இரண்டு வரிசை தள்ளி உட்கார்ந்திருந்தார்கள். இந்த களுதைங்களை எவன் கூப்பிட்டான்?” இது சுபத்ராவின் காமெண்ட்.
முரளி நைஸாக ராம்குமாரை மியூஸிக் ‘பிட்’டுக்கு அனுப்பிவிட்டான். அவன் உள்ளே இருந்தால் எல்லோ ரையும் டென்ஷனாக்கிவிடுவான் என்ற தீர்க்க தரிசனம் அவனுக்கு!
நாடகம் தொடங்கி, காட்சிக்குக் காட்சி ஆடியன்ஸ் ரசித்ததைக் கண்டு பூரித்துப் போனான் ராம்குமார். அதே சமயம் குறைகளையும் மனத்தில் குறித்து வைத்துக் கொண்டான்.
நாலாவது காட்சி முடிந்ததும், சாமிஜி, ‘லோட்டா’க்கள், சந்தியாதேவி முத்தம்மா – ஐவரும் ‘வாக்- அவுட்’ செய்ததை ட்ரூப்காரர்கள் சிலர் கவனித்துக் கிசுகிசுத்தனர்.
இடைவேளையின்போது ராமுடுவும், சோனியும் காணாமல் போனார்கள். கர்ம சிரத்தையாகச் சபாக்களுக்குப் போய் ‘நாடகம் ஊத்திக்கிச்சுப்பா’ சொல்லியாக வேண்டுமே!
நாடகம் முடிந்து கூட்டம் கலைந்து சென்றபோது… ‘ஜோக்’ தோரணங்களையே கேட்டுப் பழக்கப்பட்டவர்கள், “காமெடியே இல்லேப்பா” என்றனர். கஞ்சத்தனமாகப் புகழ்பவர்கள், நல்லா செஞ்சிருக்காங்க” என்று மேலுதட்டோடு பாராட்டினர். ‘மெஸேஜ் பிரியர்கள்’, “மொத்தத்துலே என்ன சொல்றாங்கன்னே புரியலே” என்று புருவத்தை உயர்த்தினார்கள்.
“நீங்க பட்ட கஷ்டம் வீண் போகலே” என்று யாரோ ஒருவர் ராம்குமாரிடம் சொல்லிவிட்டுப் போனார்.
அப்படியென்றால் இனிமேல் கஷ்டப்பட வேண்டாமா?
நாடகம் போடுவதிலுள்ள கஷ்டங்கள் அரங்கேற்றத்தோடு தீர்ந்து விடுமா? வீட்டைக் கட்டின கஷ்டம் புதுமனை புகுவிழாவோடு தீர்ந்துவிடுகிறதா? கல்யாணம் பண்ணுவதில் உள்ள சிரமம் முகூர்த்தம் நடந்ததோடு முடிந்துவிடுமா?
ராம்குமார் இனி படப்போகும் சிரமங்கள் ஒரு தொடர் நாடகம். ஒவ்வொரு முறை நாடகம் மேடையேறும்போதும் ஒரு சோதனையைச் சந்திப்பான். உள்ளூரிலும் வெளியூரிலும் சபாக்களில் தேதி வாங்குவதும், அத்தனை பேரையும் ஒன்றாகச் சேர்த்து (கடைசி நிமிடத்தில் காலை வாரிவிடுபவர்களுக்கு ‘சப்டிஸ்ட்யூட்’ போட்டு) நாடகம் போட்டுவிட்டு வருவதும் பகீரதப் பிரயத்தனத்தை விடவும் கடுமையானது என்பதை உணரப்போகிறான். ஆனால், சோதனைகளுக்குப் பின்னர் சாதனையின் பெருமையில் மூழ்கித் திளைப்பான். அந்த ஆனந்தம் நாடகம் போட்டுப் பார்த்தவர்களுக்குத்தான் புரியும்.
வாழ்க அமெச்சூர் நாடகக்கலை!
– நாடகம் போட்டுப் பார், முதற் பதிப்பு: 2010, அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
தொடர்புள்ள சிறுகதைகள்
பதவிப் பரிதாபங்கள்…
காரை ஆடலரசன்
October 21, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
October 21, 2026
நாடகம் போட்டுப்பார்
மெரீனா
October 18, 2026