துரோகி
கதையாசிரியர்: வல்லிக்கண்ணன்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 104
(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மாரிக்காலத்தின் ஒரு குளிர்ந்த நாளில் நாங்கள் ஓய்வு பெறுவதற்காக, பெர்சிய எல்லை அருகிலிருந்த மலையடிவாரக் குக்கிராமம் ஒன்றில் தங்கினோம். அங்கே இரவைக் கழித்துவிட்டு மறுநாள் காலையில் மலை ஆடுகளை வேட்டையாடப் போகலாம் என்று எண்ணினோம். நெட்டையாக உயர்ந்திருந்த ஒருவன் வீட்டில் நாங்கள் தங்கினோம். அவன் முகம் கோணலாய், வெளிறியும் வருத்தமாகவும் காணப்பட்டது. அதன் ஒரு பகுதி துண்டில் மூடுண்டிருந்தது.
சுடர்விட்டு எரியும் கணப்பின் முன்னே நான் கிழக்கத்திய முறையில் உட்கார்ந்து, எனக்குப் பிடித்தமான பாணியில் வேட்டையையும் வேட்டைக்காரர்களையும்பற்றிப் பேசிக்கொண் டிருந்தேன்.
“நான்கூட முன்னொரு காலத்தில் வேட்டைக்காரனாக இருந்தேன்.ஆனால் அதை விட்டுவிட்டேன். அது ஒரு அயோக் கியத் தொழில்” என்று வீட்டுக்காரன் பெருமூச்சுடன் சொன்னான்.
“ஒருவர் வேட்டையாடுவதை நிஜமாகவே விட்டுவிட முடியுமா?” என்று என் கூட்டாளி கேட்டான்.
அந்த மனிதன் மறுபடியும் நெடுமூச்சு உயிர்த்தான். “மிகப் பெரிய பாம்பு ஒன்று என் வேட்டைக்கு முடிவு கட்டி விட்டது.”
“இது சுவாரஸ்யமாக இருக்கிறதே” என்று நான் நினைத்தேன்.
பேசாமல் இருந்த வீட்டுக்காரன், எங்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி, இறுதியாக மனமிளகி, பின்கண்ட கதையைச் சொன்னான்: கணப்பருகே அமர்ந்து, தனது ஹுக்காவைப் புகைத்தபடி அவன் சாவதானமாகக் கூறினான்.
“ஒரு காலம் இருந்தது” என்று அவன் ஆரம்பித்தான். “அப்போது என் முகம் கோணியிருக்கவில்லை. ஜனங்கள பார்வையில் படாதவாறு இப்போது நான் அதை மூடி வைத் திருப்பதுபோல் அப்போது மறைத்திருக்கவில்லை. அக்காலத்தில் நான் இவ்வளவு துயரத்தோடும் வாடித் தளர்ந்தும் இருக்க வில்லை. நானும் உங்களைப்போல் இளமையோடும் அழகாகவும் இருந்தேன். தோளில் துப்பாக்கியைச் சுமந்துகொண்டு பெரிய மாசிஸ் மலைமுகட்டின் சரிவுகளில் வேட்டையாடப் போனேன். வேட்டைதான் உற்சாகமற்ற என் வாழ்க்கையின் ஒரே சந்தோஷமாக இருந்தது. அதே வேட்டைதான் என் முகம் இப்படிப் பயங்கரமாக உருமாறிப்போனதற்கும் காரணமாக இருந்தது.”
அந்த வீட்டுக்காரன் நெட்டைச் சுலைமான் தன் முகத்தை மூடியிருந்த துண்டை அகற்றினான்.
எங்கள் ரோமம் குத்திட்டு நின்றது. அவனுக்கு வலது கன்னமே இல்லை. நெற்றிக்கும் கீழ்த்தாடைக்குமிடையில் ஒரு பெரிய துளை இருந்தது. அதன் வழியே வெள்ளெலும்புகள் கோரமாகத் துருத்திக்கொண்டிருந்தன.
ஒரு கண்ணுக்குப் பதிலாகப் பயங்கரமான கறுப்புக்குழி ஒன்று இருந்தது. அந்த மனிதனது தலையின் வலப்புறம் சுமார் இருபது வருஷ காலமாக மக்கி மடிந்திருக்கும் என்று தோன்றியது. எலும்புகளிலிருந்து சதை அழுகி உதிர்ந்துவிட்டது. இடது பக்கம், இன்னும் உயிரோடிருந்தபோதிலும், சாவின் அருகாமையில் பயந்து கலங்கி, நிலையான அச்சத்தின் சாயலைத் தாங்கியிருந்தது.
அவன் கதை மர்மம் நிறைந்தது எனத் தோன்றியது. அதை அறிய நான் ஆவலோடு தவித்தேன்.
சுலைமான் மறுபடியும் தன் தலையை மூடி மறைத்துக்கொண்டு பேசினான்: ”இது எப்படி ஏற்பட்டது, இயற்கை ஏன் என்னை இவ்வளவு கொடூரமாகத் தண்டித்தது என்று இப்போது நான் உங்களுக்குச் சொல்வேன்.
ஒரு சமயம் பனிக்காலத்தின்போது, நான் துப்பாக்கியும் கையுமாய், ஒரு நரியை வழிமறிப்பதற்காக, மாசிஸ் மலை அடிவாரத்தில் உலர்ந்த புல்களினூடே ஓடிக்கொண்டிருந்தேன். என் பார்வை நரிமீதே பதிந்திருந்தது. என் காலின் கீழே என்ன இருந்தது என்றே நான் கவனிக்கவில்லை. குறுகி ஆழமாக இருந்த ஒரு குழியின் அடிமட்டத்தில் போய் விழுந்த பிறகுதான் நான் அதைக் காணமுடிந்தது. அது ஒரு கிணறு மாதிரியே இருந்தது. எனக்கு மேலே உயரத்தில், குழியின் வாய்க்கு மேலாக வளர்ந்து தொங்கிய செடிகளினூடு, நீலவானத்தின் ஒரு துணுக்கை நான் பார்க்க முடிந்தது.
என்னதான் கடுமையாக முயன்றாலும், நான் வெளியேற இயலவில்லை. குழியின் சுவர்கள் மிருதுவான வழுக்குப்பாறையால் அமைந்திருந்தன. கையால் பற்றிக்கொள்ளவோ, காலுக்குத் தாங்கலாக அமையவோ அங்கே எதுவும் இருக்கவில்லை. அடியோடு நம்பிக்கை இழந்து நான் ஒரு கல்மீது உட்கார்ந்தேன். அதுமாதிரிச் சாவது எவ்வளவு மடத்தனமானது என்று எண்ணினேன்.
திடீரென்று ஒரு மூலையில் இரண்டு கண்கள் மினுமினுப்பதை நான் கண்டேன். நெருக்கமாகப் பார்த்தேன். என் தேகம் விறைத்தது. ஒரு பெரிய பாம்பு அங்கே சுருண்டு கிடந்தது. அது என்னையே நிலையாகப் பார்த்துக்கொண்டிருந்தது.
ஆகவே, நான் பயத்தால் செயலிழந்து, ஒரு பாம்புக்கு நேர் எதிராக உட்கார்ந்திருந்தேன். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருந்தோம். எங்களில் யாரும் அசையத் துணிய வில்லை.
அதைச் சுடுவதற்கு முயலலாமா என்ற எண்ணம் எனக்கு எழுந்தது. ஆனால், நான் அதை ஒரேயடியாகக் கொல்லாமல், வெறுமனே காயப்படுத்தினால் என்ன நேரும்? அப்புறம் என் கதி என்ன ஆகும்?
முதலில் பகைமை உணர்வால் பளபளத்த பாம்பின் கண்கள், மெதுமெதுவாக அமைதியுற்றது.
தட்டையான அது தனது பெரிய தலையை வெளியே நீட்டி, முன்னே நகர்ந்தது. என் மீதிருந்த பார்வையை அது அகற்றவேயில்லை.
‘இப்போது அது என்னை உணவாக விழுங்கப்போகிறது’ என்று நான் நினைத்தேன். பயம் என் இதயத்தைக் கவ்வியது. நான் என் துப்பாக்கியை எடுக்க விரும்பினேன். ஆனால் என் கை கீழ்ப்படிய மறுத்தது. இதற்குள் பாம்பு மெதுவாக என் அருகில் வந்து, சுருண்டு, என் கண்களுக்குள் நேரே உற்றுப் பார்த்தபடி தலையை உயர்த்தியது.
நான் ஒரே அடியாக நடுங்கிக்கொண்டிருந்தேன். உண்மை தான். அது பகை உணர்வு எதுவும் கொண்டிருந்ததாகத் தோன்றவில்லை. ஆனாலும் பாம்பு என்ன செய்யும் என்று யாருக்குத் தெரியும்? அலட்சியப்படுத்துவதற்குரிய ஐந்து இல்லையே அது. ஒரு பாம்பின் பார்வையை எதிர்த்து நோக்கு வதற்கு ஒருவன் வைரநெஞ்சு பெற்றிருக்கவேண்டும்.
நான் ஆடாது அசையாது இருந்தேன். பாம்பும் அசையவில்லை. அது ஒரு கல்பகாலம் நீடித்ததாகத் தோன்றியது.
சிறிது நேரத்துக்குப் பிறகு அது தன் தலையை என் மடிமீது வைத்தது. என் உடம்பின் கதகதப்பு அந்தப் பிராணிக்குப் பிடித்திருக்கவேண்டும். ஏனெனில், சிறிது சிறிதாக, சுருள் சுருளாக, அது தன் தேகம் முழுவதையும் என் மடியில் சீராக வைத்துக்கொண்டது. எனது மேல்சட்டையின் ஓரத்தால் நான் அதை மூடினேன். அது சூடாகவும் சுகமாகவும் தூக்கத்தில் ஆழ்ந்தது.
இப்போது நான்தான் குளிரால் நடுங்க நேரிட்டது. ஒரு பாம்பின் குளிர்ந்த உடலை உணர்ந்தபடி இருப்பது வெறும் விளையாட்டில்லை.
இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக நான் அமைதி அடைந்தேன். பாம்புகளின் இயல்புகளை நான் நினைத்துப் பார்த்தேன் – அவற்றுக்கு நாம் தீங்கிழைக்காமல் இருந்தால், அவை களுக்கு நல்லவர்களாக நடந்தால், அவையும் நமக்குத் தீமை செய்யாமல் நம் நண்பர்களாக இருக்கும். இந்தப் பாம்பு வயது முதிர்ந்து, அனுபவம் மிக்கது என்று தெரிந்தது. நான் இருந்த நிலைமையைக் கண்டு என்னை அப்படியே விட்டுவைக்க அது தீர்மானித்திருக்கவேண்டும்.
‘ஐயோ! வல்லமை மிகுந்த இயற்கை எனது துயர வேளையில் எனக்கு ஒரு பாம்பைத் துணைக்கு அனுப்பியிருப்பதாகத் தோன்று கிறது. நல்லது எனக்கு எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு நான் திருப்தியுறவேண்டும். இனி என்ன ஆகும் என்பதையும் பார்க்கலாமே’ என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன்.
மேலேயிருந்து வந்துகொண்டிருந்த வெளிச்சம் மங்கலாகத் தொடங்கியது. விரைவிலேயே எனது பொந்துக்குள் காரிருள் சூழ்ந்தது.
பாம்பு அமைதியாக உறங்கியது. அதன் குளிர் என் உடலைக் குத்தி உள்ளே பாய்ந்தது. அந்த இரவு எனக்கு ஒரு வருஷம் போல் இருந்தது.
காலையில், பாம்பு கண் விழித்தது. தனது தலையை உயர்த்தி, மீண்டும் என் கண்களுக்குள் வெகுநேரம் பார்த்தது. முடிவில், அது தன் பெரிய வாயைத் திறந்து, முரடான முடிச்சு விழுந்த நாக்கினால் என் கைகளை நக்க ஆரம்பித்தது.
நான் துணிவு பெற்று அதன் தலையையும் கழுத்தையும் தடவிக்கொடுத்தேன். அதன் குளிர்ந்த வழுவழுப்பான சருமத்தைத் தொட்டபோது அருவருப்பினால் என் உடல் நடுங்கிய போதிலும், நான் தடவினேன். எனது அன்பான வருடுதல் பாம்பின் உள்ளத்தை இளகவைத்ததுபோலும். இப்போது அது மிகுந்த நட்பும் மென்மையும் கலந்த கண்களால் என்னைப் பார்த்தது. அதனால் என் பயம் முழுவதும் கரைந்தது.
இறுதியில், பாம்பு என் பக்கத்திலிருந்து விலகி, எட்ட இருந்த ஒரு மூலைக்கு ஊர்ந்துபோய், வெள்ளைக் கல் ஒன்றை நக்கத் தொடங்கியது. அது என்ன ரகமான கல் என்று எனக்குத் தெரியாது. ஆயினும், அடுத்து வந்த நாட்களிலும் பாம்பு அடிக்கடி அதை நக்கியது.
நடுப்பகலில், பனிக்காலச் சூரியன் அதிக வெப்பத்தோடு இருக்கையில், பாம்பு தன் வாலின்மீது எழுந்து நின்று, சுவர்மீது வழுக்கி ஏறி, பொந்து வழியாக வெளியே பார்த்தது. அது எவ்வளவு நீளமாக இருந்தது என்று அப்போது நான் கண்டறிந் தேன். குழிக்கு மேலே இருந்த சில செடிகளைப் பிடித்தவாறு அது தன்னை வெளியே இழுத்துக்கொண்டது. நான் எழுந்து, வெளியேறுவதற்காக மீண்டும் பல தடவைகள் முயன்றேன். ஆனால் வீணாக என்னை நானே சோர்வுறச் செய்ததுதான் கண்ட பலன். நம்பிக்கை இழந்து நான் பழையபடியும் மூலையில் உட்கார்ந்தேன். என் கண்கள் கலங்கின.
‘எக்கச்சக்கமான நிலையில் மாட்டிக்கொண்டேன். இதை விட அபத்தமான சாவு இருக்க முடியுமா?’ என்று எண்ணினேன். என் குழந்தைகளை நினைத்தேன். என் நெஞ்சு வலித்தது.
சிறிது நேரத்துக்குப் பிறகு, தலைக்கு மேலே சலசலப்புக் கேட்டது. பாம்பு, வாயில் ஒரு முயலைக் கவ்வியபடி, தலையை பொந்துக்குள் நீட்டுவதைப் பார்த்தேன். அது ஒரு செடியை வாயால் பற்றிக்கொண்டு தன்னைக் கீழே தாழ்த்தியது.
அப்புறம் – நான் பொய் சொன்னால் அல்லா என்னைச் சாகடிப் பாராக – அது முயலை எனக்கு முன்னால் வைத்தது. முயலையும் என்னையும் மாறிமாறிப் பார்த்தவாறு இருந்தது. பாம்பு கோபம் கொண்டு, அங்கு யார் எஜமான் என்று எனக்குக் காட்ட முற்படலாம் என்ற பயத்தால் நான் அந்த முயலைத் தொடு வதற்குத் துணியவில்லை. ஆனால், அது முயலின் பக்கமே வரவில்லை. வெறுமனே முயலைப் பார்த்தது; பிறகு என்னைப் பார்த்தது. எனக்கு எதையோ புரியவைக்க முயல்வதுபோல் அது அவ்வாறு தொடர்ந்து செய்தது.
முடிவில் நான் முயலை எடுக்கத் துணிந்தேன். பாம்பு நகரவில்லை. பள்ளத்தின் தரைமீது காய்ந்த இலைகளும் சுள்ளிகளும் ஏராளமாகக் கிடந்தன. நான் அவற்றில் ஒரு குவியல் சேகரித்து, தீ மூட்ட விரும்பினேன். ஆனால் அப்படி நான் சுதந்திரமாகச் செயல்படுவதைப் பாம்பு எவ்வாறு மதிக்குமோ என்று தயங்கி அந்த எண்ணத்தைக் கைவிட்டேன்.
மாலையில் மறுபடியும் பாம்பு என்னிடம் ஊர்ந்து வந்தது. அதன் பல சுருள்களை என் மடியில் வைத்து, மீதிப் பகுதியால் என் பாதங்களைச் சுற்றிக்கொண்டு தூக்கத்தில் ஆழ்ந்தது. வெப்ப காலத்தில்கூட, ஆராரட் பள்ளத்தாக்கில் இரவு நேரங்கள் குளிர்ந்துதான் இருக்கும். எனவே, குளுமையான ரத்தம் பெற்ற அந்தப் பிராணிக்கு இரவு நேரங்களில் கதகதப்பு அளிப்பதனால் நான் எவ்வளவு பெரிய சேவை செய்துகொண் டிருந்தேன் என்பது எனக்குத் தெரியும். அதே வேளையில், ‘நீ ஒரு பாம்பை வளர்த்தால், தொல்லைகளை எதிர்பார்த்திரு’ என்ற பழமொழியையும் நான் எண்ணிப்பார்க்கத் தவறவில்லை. அது தரக்கூடிய தொல்லையின் நினைப்பு என் என் உடம்பைச் சிலிர்க்க வைத்தது.
மறுநாள் மீண்டும் பாம்பு, வெயில் காயவும் ஏதேனும் உணவு தேடவும் வெளியே சென்றது. முயலை அது விட்டுச் சென்றது. எனது சக்கிமுக்கிக் கல்லும் இரும்பும் என்னிடமே இருந்தன. ஆகவே, நான் நெருப்பு மூட்டினேன். முயலைத் தோல் உரித்து,உப்புச் சேர்த்து, சிறிது வாட்டி எடுத்தேன். முறையான விறகு இல்லை. இலைகளும் சுள்ளிகளும் சரியானபடி எரியவில்லை. அதனால் முயல் மோசமாக அரைவேக்காட்டு நிலையில் இருந்தது. ஆனாலும், பசித்த வேட்டைக்காரன் நெருக்கடி வேளையில் பச்சை மாமிசத்தையும் தின்னக்கூடும். முயல் மிக மிருதுவாக இருந்தது. நான் அதில் பெரும் பகுதியை விரைவில் தின்றுவிட்டேன்.
உடனடியாக, அதை ஏன் சாப்பிட்டோம் என்ற வருத்தம் எனக்கு ஏற்பட்டது. எனக்குப் பெரும் தாகம் உண்டாயிற்று. பித்துப் பிடிக்கக்கூடிய அளவுக்கு அது மிகுந்தது.
மாலையில் பாம்பு திரும்பி வந்தது. இம்முறை அது ஒன்றும் கொண்டுவரவில்லை. நான் பாதி முயலை வைத்திருந்தேன். அதன் குடல்கள், தோல், தலை, கால்கள் ஆகியவற்றை ஒளித்து வைத்திருந்தேன். பாம்பு வந்து சேர்ந்ததும், அதன் நல்லெண்ணத் தைப்பெறலாம் என்ற நினைப்போடு, எஞ்சிய முயல் இறைச்சியை அதனிடம் கொடுத்தேன். பாம்பு அதை ஒரே வாயில் விழுங்கியது. பின்னர் நான் முயல் தோலில் பொதிந்துவைத்த குடல் பகுதி களையும் தலையையும் பாம்பின் முன் வைத்தேன். அவை அனைத்தையும்கூட அது விழுங்கியது. ஒரு ஓநாய் அல்லது நாய் விழுங்குவதுபோல் அல்லாது, மெதுவாக, ஆனால் பசியோடு, உள்ளே இழுத்து இழுத்துத் தின்றது.
அதன் பிறகு நாங்கள் மேலும் சிறந்த நண்பர்கள் ஆனோம். பாம்பு மறுபடியும் மூலையில் இருந்த வெள்ளைப் பாறையை நக்கத் தொடங்கியது. என்னையும் அவ்வாறு செய்ய அழைப்பது போல், அடிக்கடி என்னைப் பார்த்துக்கொண்டே நக்கியது.
நான் அருகில் சென்றேன். அந்தக் கல்லைக் கையில் எடுத்து, பாம்பின் விஷநாக்குப் பட்டிராத பக்கங்களை நக்கினேன். தாகம் அவ்வளவு தூரத்துக்கு என்னை வதைத்தது. அதனால் நான் எதையும் முயன்று பார்க்கத் தயாராக இருந்தேன். பெர்சியப் பாலைவனங்களில் பயணம் போகிற மக்கள் தங்கள் வாய்களில் ஒரு சிறிய உருண்டைக் கூழாங்கல்லைப் போட்டு உறிஞ்சுவார்கள்; அது எச்சிலைச் சுரக்கச்செய்து தாகத்தைத் தணிக்க உதவும் என்று நான் கேள்விப்பட்டிருந்தேன்.
நான் கல்லை நக்கினேன். தாகம் தணிவதை உணர்ந்து வியப்படைந்தேன். அந்தப் பாறாங்கல் ருசி எதுவும் இல்லா திருந்தது; ஆனாலும் அது தாகத்தைத் தணித்தது. அது எச்சிலைச் சுரக்கச் செய்ததனாலா, அல்லது ஏதோ ஒரு மாயசக்தியை அந்தக் கல் பெற்றிருந்ததனாலா – அது எனக்குத் தெரியாது.
இந்தவிதமாக மேலும் இரண்டு தினங்களை நான் போக்கி னேன். அதற்குள்ளாகப் பசியாலும் தாகத்தாலும் நான் வெகுவாகப் பலவீனம் அடைந்தேன். என்னால் எழுந்து நிற்கவும் இயலவில்லை.
ஒரு நாள் காலை பாம்பு என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டது. அதன் சுருள்களினுள் நான் கட்டுண்டிருந்தேன்.
இது மிகவும் சுகமான நிலை என்று பாம்பு கண்டுகொண்ட ஏனெனில், இந்நிலையில் அதன் நீண்ட உடல் முழுவதையும் நான் வெம்மைப்படுத்த முடிந்தது. திடீரென உயரே இறக்கைகளின் படபடப்பு ஓசை எழுந்தது. ராஜாளியால் துரத்தப்பட்ட ஒரு புறா எங்கள் குழிக்குள் விழுந்தது. திகைப்படைந்து ஒரு மூலையில் அமர்ந்தது. எங்களைக் கண்டதும் அது பறந்து போக முயன்றது; ஆனால் பாம்பின் சக்தி வாய்ந்த பார்வை அதை அந்த இடத்தி லேயே நிலைபெற வைத்தது.
ஒரு பாம்பின் பார்வைக்கு உரிய சக்தியை நான் அறிவேன். பறவை வசமாக மாட்டிக்கொண்டது என்று உறுதியாக உணர்ந்தேன்.
பாம்பு அதன் கண்களையே நோக்கியது. புறா செயல் இழந்து உடல் நடுங்க நின்றது. தனது இரையை வைத்த கண் வாங்காது பார்த்தபடி, பாம்பு அமைதியாக அதை நோக்கி ஊர்ந்தது. அபலைப் பறவையைக் கழுத்தில் கவ்வி எடுத்து என்னிடம் கொண்டு தந்தது.
நான் இரண்டு துண்டு இறைச்சியை எடுத்துக்கொண்டு மீதியைப் பாம்பிடம் போட்டேன். அது பறவை முழுவதையும், இறகுகளையும் சேர்த்து விழுங்கியது. நான் பச்சை இறைச்சியில் உப்புச் சேர்த்துத் தின்றேன். பிறகு கல்லை நக்கத் தொடங்கினேன்.
தாகம் அடக்க முடியாதது ஆயிற்று. அதனால் நான் பித்தனானேன். புலம்ப ஆரம்பித்தேன். சுவரைப் பிறாண்டினேன். வெளியே போகவேண்டும் என்று வெறியோடு குதித்தேன். மீண்டும் உள்ளேயே விழுந்தேன். பாம்பு வியப்போடு என்னைக் கவனித்திருந்தது. நான் வெளியேற விரும்பினேன் என்பதை ஒருவாறு அது புரிந்துகொண்டது என்று தோன்றியது. ஏனெனில், அது பொந்தை விட்டு வெளிப்பட்டு, ஒரு செடியைப் பிடித்துக்கொண்டு வாலைக் கீழே தணித்தது.
நான் அதை ஆச்சர்யமாகப் பார்த்தேன். அதன் செய்கையின் பொருள் எனக்குப் புரியவில்லை.
ரொம்ப நேரம் அது அப்படியே இருந்துவிட்டு, பிறகு தன் வாலை மேலே இழுத்தது. தலையைத் தாழ்த்தி, கேள்விக் குறிப்போடு என்னைப் பார்த்தது. பின் மறுபடி முன்போல் கிடந்தது. அதன் வால், யானையின் துதிக்கைபோல், என் தலைக்குமேல் தொங்கியது.
சில பாம்புகள் எவ்வளவு வலிமை மிகுந்தவை என நான் அறிவேன். அதன் வாலை நான் பற்றிக்கொண்டால் அது என்னை மேலே தூக்கிவிடும் என்ற உறுதி எனக்கு இருந்தது. அதே வேளையில் நான் அதைக் காயப்படுத்தி அதற்குக் கோபம் உண்டாக்கிவிடுவேனோ என்ற பயமும் இருந்தது. அவ்வாறானால்.
‘அதனால் என்ன? இப்போது இருக்கிற நிலைமையைவிட மோசமாக ஒன்றும் ஆகிவிடாது’ என்; று எண்ணினேன். பாம்பின் வாலைப் பிடித்தேன். அது பெரும் முயற்சி எடுத்தது. அதன் வால் ஒரு இரும்புத் துண்டுபோல் கடினமாயிற்று.உடனே அது என்னைக் குழிக்குள்ளிருந்து வெளியே தூக்கிவிட்டது.
படுகுழியில் நெடுநாட்கள் இருந்த பிறகு மீண்டும் சூரிய வெளிச்சத்தைப் பார்த்ததும், எனது அன்புக்கு உரிய வயல் களையும், ஆராஜ் நதியின் அலைமோதும் தண்ணீரையும், எங்கள் கிராமத்தின்மீது சுருளும் புகையையும் கண்டபோது, நான் புதிதாகப் பிறந்ததுபோல் உணர்ந்தேன். ஒரு குழந்தை மாதிரி சந்தோஷப்பட்டேன்.
நான் என்னைக் காப்பாற்றிய பாம்பின் கழுத்தைக் கட்டிக் கொண்டு விம்மி அழத்தொடங்கினேன். என் தலை சுற்றியது. மூர்ச்சித்து விழும் நிலையில் நான் இருந்தேன். என் கால்கள் என்னைச் சுமக்க முடியாது தள்ளாடின. நான் தடுமாற்றத்தோடு முன்னேறினேன். பாம்பு தன் தலையைக் காற்றில் உயர்த்தியபடி, புல் சரசரக்க, என் பின்னால் ஊர்ந்து வந்தது.
வழியில் நாங்கள் ஒரு முயலைப் பார்த்தோம். அதை நான் சுட்டேன். பாம்பு துள்ளியது. அதன் கண்கள் கொடூரமாக நோக்கின. ஆனாலும் நான் முயலை எடுத்துத் தனக்கு முன்னே வைத்ததைக் கண்டதும் அது அமைதி அடைந்தது. பாம்பு முயல் முழுவதையும் விழுங்கியது. அது பாம்பினுள் மெதுவாக நகர்ந்து, அதன் உடலை உப்பவைத்ததை நான் கவனித்தேன்.
ஆகவே, நட்பு உணர்வோடு நாங்கள் கிராமத்தை அடைந் தோம். இருள் பரவிக்கொண்டிருந்தது. மேய்ச்சலிலிருந்து திரும்பிவந்த பசுக்கள் கத்தின. கூரைகளின்மேலே புகை நின்றது. நாய்கள் குரைத்தன. பாம்பு அதற்கும் அப்பால் முன்னே போகாமல் பின் தங்கியது. நான் ஊருக்குள் நுழைந்ததும் திரும்பிப் பார்த்தேன். பாம்பு உலர்ந்த புல்லில் கிடந்து தன் கண்களால் என்னைப் பின்பற்றியது.
என் மனைவியும் மக்களும் பெரிதாகப் பிரலாபித்து என்னை வரவேற்றனர். அனுதாபத்துக்கு உரிய அவர்கள் மறுபடியும் என்னைக் காணமுடியும் என்ற நம்பிக்கையை இழந்துவிட் டிருந்தனர். குர்துக்கள் மாசிஸ் மலையில் என்னைப் பிடித்துக் கொலை செய்திருக்கவேண்டும் என்றே அனைவரும் எண்ணினர்.
கிராமத்தில் உள்ள மக்கள் என் கதையைக் கேட்ட பிறகு, பாம்புகளைப்பற்றி நல்லவிதமாக எண்ணினர்.
ஒரு வருஷம் சென்றது.
அன்று கோடையின் வெப்பமான நாள். நாய்கள் தங்கள் நாக்குகள் வெளியே தொங்க, தொழுவங்களில் பதுங்கிக் கிடந்தன. கோழிகள் நிழல் அடர்ந்த மூலைகளில் பாதுகாப்பாக ஒதுங்கி ஒண்டியிருந்தன. எருமைகள் சேற்றுக் குட்டைகளில் தங்கள் கழுத்து வரை அமிழ்ந்திருந்தன.
திடீரென்று பரபரப்பு ஓசைகளை நான் கேட்டேன். எங்கள் ஜனங்கள் எல்லோரும், பெரியவர்களும் சிறியவர்களும் தெருவுக்கு வந்து, சந்நியாசிகள்போல் உடை அணிந்திருந்த நான்கு அந்நியர்களைப் பின் தொடர்ந்து போவதைப் பார்த் தேன். ஒருவன் குழல் ஊதிக்கொண்டிருந்தான். இன்னொருவன் ஒரு பறையை அடித்து முழக்கினான். மற்ற இருவரும் வர்ண விசித்திரங்கள் நிறைந்த சில பெட்டிகளையும் பாம்புகள் இருந்த ஒரு இரும்புக் கூண்டையும் இழுத்துச் சென்றார்கள்.
ஊர் சதுக்கத்தை அடைந்ததும் அவர்கள் தங்கள் சுமைகளைக் கீழே வைத்தார்கள்; பெட்டிகளையும் கூண்டையும் திறந்தார்கள். ஒரு கம்பளத்தைப் பரப்பி, கூண்டை அதன்மீது கவிழ்த்தார்கள். சமுக்காளத்தில் ஏகப்பட்ட பாம்புகள் ஒன்றன்மீது ஒன்று ஏறி நெளிவதைப்பார்த்ததும் பெண்கள் கூச்சலிட்டனர்; குழந்தைகள் உற்சாகத்தோடு கத்தின.
அந்தப் பாம்புகளை எல்லாம் பார்க்கவேண்டுமே! ஒரு பாறைத்துண்டு போன்ற நிறமுடைய ஒரு வகைப் பாம்பு; பிரமாண்டமான உடலும் தட்டையான பெரிய தலையும் கொண்ட குர்ஜாப் பாம்பு: அகன்ற வாய் உள்ள கன்னங்கரிய விஷப்பாம்பு; பிரகாசமான ஷக்மார்; முடிக்கொம்புப் பாம்பு; மற்றும் அநேக வகைகள்.
சந்நியாசிகள் குழல் ஊதிக் கொட்டு அடித்தார்கள். பாம்புகள் தங்கள் வால்களில் எழுந்து நின்று நாட்டியம் ஆடுவது போல் வேடிக்கையாக அசைந்து நெளிந்தன.
மற்றொரு சந்நியாசி தனது அச்சமின்மையை விளம்பரப் படுத்திக்கொண்டிருந்தான். பாம்புகளில் மிகுந்த விஷமுள்ள ஒன்றை – ஒரு விரியனை – எடுத்து, அதைத் தன் மார்பின்மேல் அவன் போட்டுக்கொண்டான்; பாம்பு சந்நியாசியின் உடம்பில் ஊர்ந்து, சட்டைக்குள் புகுந்து, கால்சட்டையினுள் மறைந்து, பிறகு திடீரென்று உடுப்பில் காணப்பட்ட ஒரு ஓட்டையின் வழியாக, அல்லது திறந்த கழுத்துப்பட்டை வழியாக எட்டிப் பார்க்கும்.
அப்புறம் அவன் வேறொரு பாம்பை எடுத்து, அதன் தலையைத் தன் வாய்க்குள் வைத்தான். பெண்கள் அலறினர். சந்நியாசியோ அமைதியாகச் சிரித்து, தனது தாடியைத் தடவினான். குடியானவர்களில் ஒருவன் சொன்னான்:
“இதில் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதன் பல்லை அவர்கள் பிடுங்கிவிட்டார்கள். அதற்கு இப்போது விஷமே இல்லை. எனது கிழத் தாத்தாகூட இப்படிப்பட்ட ஒரு பாம்பைத் தன் வாய்க்குள் திணிப்பதற்குத் தயங்கமாட்டார்.
‘மாட்டாரா? நல்லது. இதுக்கு விஷம் கிடையாது என்று நீ எண்ணினால், இங்கே ஒரு கோழிக்குஞ்சு கொண்டுவா’ என்று சந்நியாசி கூறினான்.
அந்த விவசாயி தன் பேச்சை வாபஸ் பெறத் தயாராக இல்லை. அவன் ஒரு சேவலைக் கொண்டுவந்து, பாம்பின் முன்னால் வைத்தான்.
பாம்பு அச்சுறுத்தும் பார்வையோடு தன் கழுத்தை முன்னே நீட்டியது. அதன் கண்கள் சிவப்பாய் ஒளிர, அது சீறியது. முன்னால் பாய்ந்து சேவலின் கொண்டையில் கடித்தது. ஒரு சிறு துளிரத்தம் கீழே வடிந்தது. கொண்டையில் லேசாக ஒரு கீறல் மட்டுமே தென்பட்டது. ஆனால், விஷம் மிக வலுவானதாக இருந்ததால், சேவல் உடல் வீங்கி எங்கள் கண் முன்னாலேயே செத்தது.
‘இதை ஆழக் குழிதோண்டிப் புதையுங்கள். நாய்கள் அதைத் தொட்டுவிடக்கூடாது’ என்று சொல்லி, சந்நியாசி பாம்புகளைச் சேகரம் செய்தான். பிறகு கூட்டத்தை நோக்கி அவன் சொன்னான்:
‘நல்லது, மக்களே! இங்கே யார் வீட்டிலாவது பாம்புகள் தொல்லை தருகிறதா? நாங்கள் அவற்றை நொடிப்பொழுதில் அகற்றிவிடுவோம்.’
‘ஏன், அவை எங்களுக்குத் தொல்லையாக இல்லை. ஒரு பாம்பு எங்களின் உபகாரியாக்கும்’ என்று கிழவர்களில் ஒருவர் சொன்னார்.
‘ஏவாளைக் கெடுத்த பாம்பு என்று முதல் மனிதனின் நண்பன் ஆயிற்று?’ என்று சந்நியாசி பரிகாசக் குரலில் கேட்டான்.
‘எங்கள் பக்கத்து வீட்டு நெட்டைச் சுலைமான் உயிரை ஒரு பாம்பு காப்பாற்றிய நாள் முதல்தான்’ என்று என் நண்பன் அஸ்க்யார் கூறினான்.
‘ஓ, அவ்வளவு புத்திசாலியான பாம்புகள் உங்களிடம் இருக்கின்றனவா?’
அவர்கள் என் கதையை விவரமாகச் சந்நியாசிக்குச் சொன் னார்கள். அவன் கண்கள் பேராசையால் ஒளிர்ந்தன. ஆட்டின் ஈரல் துண்டைக் கண்டுவிட்ட ஒரு பூனை மாதிரி அவன் விழித்தான்.
‘சுலைமான், என் நண்பனே! அந்தப் பாம்பை என்னிடம் தா. நான் அதைத் திபிலிசுக்கும், பாகு நகரத்துக்கும் எடுத்துப் போவேன். அதைப் பார்த்து மக்கள் வியப்படைவார்கள்’ என்று அவன் சொன்னான்.
‘அப்படிச் செய்வது யோக்கியமான விஷயம் ஆகாது. அதற்கு நான் ஒருபோதும் சம்மதியேன்’ என்று நான் பதிலளித்தேன்.
‘சுலைமான், என் நண்பனே! அல்லா சாட்சி. இதில் அயோக்கியத்தனம் என்ன இருக்கிறது? நான் அதைப் பட்டிலும் வெல்வட்டிலும் வைத்துக் காப்பாற்றுவேன். ருசிகரமான இனிப்புப் பண்டங்கள் கொடுத்து வளர்ப்பேன். இந்தக் காட்டுச் செடிகளிடையே வசிக்கையில் அது சதா குளிராலும் பசியாலும் சிரமப்படும். என்னிடம் இருந்தால் அது கதகதப்போடு சுகமாக வாழும். சும்மா எங்களுக்கு அந்த இடத்தைக் காட்டு, சுலைமான். நாங்களே அதை எடுத்துக்கொள்வோம். அதற்காக நான் உனக்குப் பத்து துமான் நாணயங்கள் தருவேன்.’
‘சந்நியாசி, நீ தீர்க்கதரிசியின் பக்தன். இரக்கம் பற்றி உபதேசித்தவாறு நீ சுற்றித் திரிகிறாய்.ஆனாலும் இங்கே நீ தீய காரியம் செய்யும்படி என்னைக் கட்டாயப்படுத்துகிறாய்’ என்று நான் கூறினேன். ஆ என் பையா, பத்து துமான் நாணயங்களைக் கொண்டு ஒரு மாடு வாங்கலாமே’ என்று எனக்குள் நினைத்துக்கொண்டேன்.
‘உன் பாபத்தை மன்னிக்கும்படி நான் தீர்க்கதரிசியிடம் வேண்டுவேன், சுலைமான். நீ சும்மா எனக்கு அந்த இடத்தைக் காட்டு.’
சந்நியாசி கீழே ஒரு கம்பளத்தை விரித்து, முழந்தாளிட்டு, கிழக்கு நோக்கித் திரும்பி இருந்து, குனிந்து வணங்கினான். தன் கைகளை உயர்த்தி, முணுமுணுக்க ஆரம்பித்தான்.
அதனால் ஊக்கம் பெற்ற நான், என் நண்பனை, என் உயிரைக் காப்பாற்றிய பாம்பை, பதினைந்து துமான்களுக்கு விற்க இசைந் தேன். மிக இழிந்த பிறவியானேன்.
சந்நியாசிகள் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். என் பாம்பின் வீடான குழியை நோக்கி நாங்கள் எல்லோரும் போனோம்.
அந்த இடத்தை நெருங்க நெருங்க, என் மனசாட்சி என்னை அதிகம் உறுத்தியது. நாசமாய்ப் போகிற இந்த தரித்திரம்- அது மனிதனுக்குச் செய்கிற தீங்குகள் – அவனை ஒரு திருடனாக, கொலைகாரனாக, அல்லது ஒரு துரோகியாக ஆக்கிவிடுகிறதே.
‘பரவாயில்லை. பார்க்கப்போனால் அது ஒரு ஊமைப் பிராணிதானே. காட்டிக்கொடுப்பதுபற்றி அதற்கு என்ன புரியப்போகிறது? அது ஒரு மனிதனா என்ன! அதன் கண்களை நேரே பார்க்க நான் வெட்கப்படவேண்டியதில்லையே’ என்று என்னை நானே தேற்றிக்கொள்ள முயன்றேன்.
முடிவாக நாங்கள் அந்தக் குழியை அடைந்தோம். நான் ஒருபுறமாக ஒதுங்கி நின்றேன். பாம்பு பொந்தில்தான் இருந்தது.
சந்நியாசிகளில் ஒருவன் பெர்சியப் பட்டுச் சமுக்காளம் ஒன்றைக் குழிக்குள் தொங்கவிட்டான். சூரிய ஒளியில் ஆயிரம் வர்ணங்களில் அது சுடர்வீசி தகதகத்தது. பாம்பு அந்தச் சமுக்காளத்தைப் பார்த்துத் திடுக்கிட்டுத் திகைத்தது. நான் புதர்களிலிருந்து எட்டிப் பார்த்தேன். மன்னர் என் சொந்தத் தம்பியையே இராணுவத்திற்காக இழுத்துச் செல்வது போன்ற உணர்வினால் என் இதயம் வேதனையோடு துடித்தது.
சந்நியாசி, மென்மையான இனிய குரலில், தாலாட்டும் அரபுப் பாடல் ஒன்றைப் பாடத் தொடங்கினான். ஒரு பறையில் லேசாகத் தாளம் கொட்டினான். மணிகள் கிண்கிணிக்கும்படி அதை ஆட்டினான். பாம்பு தன் சுருள்களுக்கு மேலாகத் தலையை உயர்த்தி, ஆச்சர்யத்தோடு நோக்கியது. ஆயினும், அந்த இசைக்கு அதை அமைதிப்படுத்தும் ஒரு சக்தி இருந்ததை நான் கவனித்தேன்.
சந்நியாசி தன் சட்டைப் பையிலிருந்து பிரகாசமான ஒரு பொருளை எடுத்து பாம்பின் முன்னே காட்டினான். அதே வேளையில் குழலில் ஒரு இனிய ராகத்தை இசைக்கலானான்.
ஓ, இன்னிசையின் சக்திதான் என்ன! இன்னிசை எவரையும் பைத்தியமாக்கிவிடும். உலகத்தின் மிக உயர்ந்த அழகியைக்கூட ரத்த வெறிபிடித்த ஒரு ஓநாயாக, அல்லது கொடிய பாம்பாக, அது மாற்றிவிடும்.
இசைக்கு இணங்கி அந்தப் பாம்பு பல வர்ணச் சமுக்காளத் தின்மீதேறி மேலே வந்து, பாட்டுப் பாடிய சந்நியாசியின் மடியில் தலைவைத்துக் கிடந்தது.
இப்படியாக அந்தப் பாம்பு ஏமாற்றப்பட்டு, ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்காமல் இருப்பதற்காக நான் சிறிது தூரம் விலகிச் சென்றேன். நான் ஒரு இழிந்த செயலைச் செய்துவிட்டேன். எனக்காக நானே வெட்கினேன்.
பாம்பு பத்திரமாகக் கூண்டில் அடையுண்டு, கூண்டின் மூடி இறுகச் சாத்தப்பட்டதும், சந்நியாசி என்னிடம் வந்து, பேசிய பணத்தை எனக்குத் தந்தான். ‘சுலைமான், என் நண்பனே! நீ இதை நல்ல முறையில் பயன்படுத்துவாய் என்று நம்புகிறேன். நீ எனக்குப் பெரும் பொக்கிஷம் ஒன்றைக் கொடுத்திருக்கிறாய்’ என்றான்.
அந்தப் பணம், நெருப்புபோல், என் உள்ளங்கையைச் சுட்டது.
கூண்டுக்கு ஒவ்வொரு புறமும் ஒரு கைப்பிடி இருந்தது. அதைப்பற்றித் தூக்கி, தங்கள் கொள்ளைப் பொருளை அவர்கள் உற்சாகமாகச் சுமந்து சென்றார்கள். அவர்கள் என்னைக் கடந்த போது பாம்பு சட்டென்று தன் தலையை உயர்த்தியது. என்னை வன்மத்தோடு ஒரு பார்வை பார்த்தது. சீறிக்கொண்டு, விடுபட்டு வெளியேற முயற்சிப்பதுபோல் து கூண்டின் இரும்புக் கம்பிகள் மீது உடலால் மோதியது.
அது என்னை அடையாளம் கண்டது அந்தக் கொடிய பிராணி என்னைக் கண்டுகொண்டது. நான் அதைக் காட்டிக் கொடுத்தேன் என்று அது புரிந்துகொண்டது. நான், முன்பு அந்தப் புறா செயலிழந்து நின்றதுபோல், அதே இடத்தில் அசையாது நின்றேன். பாம்பு திரும்பவும் என் மீது ஒரு உக்கிரப் பார்வை வீசியது. தன் தலையைக் கம்பிகளோடு அழுத்தி, மஞ்சளும் பச்சையும் கலந்த விசித்திரமான எச்சிலை என் முகத்தை நோக்கித் துப்பியது. என் வலது கன்னத்தில் இருந்த ஒரு சிறிய புண்ணில் வந்து பட்டது அது.
‘ஏ, கேவலமான நாயே! உனக்காக நான் கவலைப் பட்டேனே. உன்னை நன்கு கவனித்து, நரகக் குழியிலிருந்து சூரிய வெளிச்சத்துக்கு இட்டு வந்தேனே. பதினைந்து துமான் களுக்கு நீ என்னை விற்கவேண்டும் என்பதற்காகத்தானா நான் உன் உயிரைக் காப்பாற்றினேன்? அசிங்கம் பிடித்த சின்னப் பயலே; உன் துரோக நெஞ்சின்மீது நான் காறித் துப்புகிறேன் என்று பாம்பு சொல்ல விரும்பியதுபோல் அது அமைந்தது.
நான் பயந்து கூச்சலிட்டு மயங்கி விழுந்தேன். அப்புறம் என்ன நடந்தது என்றே எனக்கு நினைவில்லை.
இதற்குப் பிறகு பல மாதங்கள் நான் அரைப் பைத்தியமாக இருந்தேன். பகலும் இரவும் அந்தப் பாம்பு என் கண்முன் நின்றது.
அது தன் பற்களிலிருந்து உறிஞ்சிய விஷம் அந்த எச்சிலில் கலந்திருந்தது. என் முகத்திலிருந்த புண்ணுக்குள் புகுந்து அந்த விஷம் முகத்தைத் தீய்த்து, அதைத் தின்றது. முடிவில், என் கன்னம் அழுகத் தொடங்கியது. சதை துண்டு துண்டாக உதிர்ந்தது. நான் இப்போது இருக்கிற நிலைமை இப்படித்தான் ஏற்பட்டது.’
நெட்டைச் சுலைமான் தனது ஹுக்காவை உறிஞ்சினான். கணப்பில் கிடந்த கரித்துண்டுகளைக் கிளறினான். ஒரு பெரு மூச்சுடன் சொன்னான்:
“ஆமாம், சகோதர வேட்டைக்காரர்களே; இதுதான் என் கதை”.
– வாக்தாங் அனான்யன் (1905)
– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.
தொடர்புள்ள சிறுகதைகள்
நீ இல்லாத உலகத்திலே….!
வளர்கவி
October 21, 2026
அஞ்சல் நிலைய அதிகாரி
பூ.சோமசுந்தரம்
October 21, 2026
பிழி திறன்
உரு.வளவன்
October 21, 2026