தவளை
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 172
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எந்தக்காலத்துக்கும் இவன் ‘குணம்’ எண்ட ஒருவன்தான் இன்னும் மாறாம இருக்கிற ஒரு மனுசன். “ஆ! முந்திச் செய்த தொழில் எனக்கு இப்ப மறந்துபோச்சு…” என்று இண்டைய இந்த நிலையிலயும் அவன் ஆருக்குமே சொன்னதில்ல.
“எதையும் தள்ளி ஏன் நான் மறைப்பான் எண்டுதான் அவனுக்கு உள்ளாலயா இந்த நினைப்பு”.
அப்பத்தைய வருஷங்களில் அவன் காடுவழிய திரிஞ்சு தேன் எடுத்திருக்கிறான். இரவில வள்ளத்தை நந்திக்கடலில் கொண்டுபோய் விட்டு கட்டுவலை விரிப்பான். அந்தக் கட்டுவலையில நல்ல கரும் பச்சைப்பெருநண்டு பிடிபடும். அதே கடலில வீச்சுவலை நடந்து போய் வீசி றாலும் பிடிப்பான், மீனும் பிடிப்பான்.இப்படி அந்தக் கடல் தொழில் செய்து பிழைச்ச பிழைப்பால் அவனுக்கு எவ்வளவு காசுகள் மிச்சம். தண்ணி அளவுக்கு மீனும் றாலும் நண்டுமாச் சேர்ந்து பெருவாரியாக் கிடக்கிற இடம்தானே நந்திக்கடல். அந்தக் கடலிலேயே வள்ளம் ஓட்டி மீன் பிடிச்சு வித்துச்சேர்த்த காசுகளில்தானே பவளம். கனகம் என்று இருக்கிற தாவணி சுத்தின தன்ர தங்கச்சிமா ர்களையும் அவன் நல்ல இடத்தில கலியாணம் செய்து குடுத்துக் கரைசேர்த்தவன்.
“அப்பிடியே உன்ரை தங்கச்சிமார் ரெண்டு பேரையும் இப்பிடிக் கஷ்டப்பட்டு நீ கரைசேர்த்துப் போட்டாயடா சிங்கம்…” என்று ஊருக்கையுள்ள பெரிசுகளெல்லாம் இப்பிடிச் சொல்லி அவனுக்கு மரியாதையும் வைச்சவேயள்தானே.
“ஆத்தே அந்தப்பிள்ளை கிடந்து கஷ்டப்பட்டுக் கஷ்டப்பட்டு நெடுகத் தன்ரை குடும்பத்துக்கே உழைச்சுக் கொண்டு கிடக்கு..” என்று குணத்தின்ர கதையச் சொல்லி என்ன மாதிரியொருகாய் நகர்த்தல்..” “இப்பிடியெல்லாம் சொன்னால் உச்சி சுடும் வேலையில்லாம வீட்டில கிடக்கிற தறுதலையளுக்கு என்று குடும்பங்கள் வழியே உள்ள தகப்பன்மார் நினைக்கிறதுக்கு குணம் எண்டுறவன் ஒரு உதாரண புருஷன்தானே.
அந்தச் சுற்றுவட்டாரத்துக்குள்ளயே தேடிப் பார்ப்போம். இவன மாதிரி இப்பிடியா அங்க ஆரும் இருக்கினமோவெண்டு.. அப்பிடியாத்தான் எங்க அதுக்குள்ள தேடினாலும் தனிய இவனொருவன் குணம் எண்டுறவன்தானே தேடுற ஆக்களுக்குக் கண்ணுக்கு எம்பிடுவான். குணத்துக்கு எல்லாம் இப்ப படமாய் நினைவில ஓடுகிது தன்னினதும் ஊரினதுமான பழைய காலக்கதை. அந்த இடத்தில் தானும் சனமும் வாழ்ந்த அந்த இனிமையான வாழ்க்கையை நெக்கநெக்க அவன்ர மனம் இப்ப வேக்காட்டில் வெந்துபோகுது. எல்லாக் கதையும் இப்ப நினைச்சுப்பார்க்க முள்ளு ஒன்று தன்ர ஒற்றைக் கண்ணைக் குத்திக் கிழிச்சதுபோல இருக்கிது அவனுக்கு.
காட்டாறுமாதிரி கட்டுக்கடங்காம சுதந்திரமாத் திரிஞ்ச இடமெல்லே அவன் பிறந்து வளர்ந்த அந்த இடம். நெல்லுக்குத்தித்தான் சோறு. கடலில் பிடிச்சுக்கொண்டு வந்த மீனில் உடன் கறி. காலேலையும் பின்னேரத்திலயும் மாட்டுப்பால் கறக்க பக்கத்தில் உட்கார்ந்தா, சட்டுச்சட்டெண்டு காம்பில் தண்ணியடிச்சு காம்ப உருவஉருவ ‘சொர் சொர்’ என்று செம்பு நிறைய பிறகு பால்.
அந்தநேரமே பால் காய்ச்சி -சுடச்சுட வாய்ச் சாயம் கலந்த தேத்தண்ணி. காலேல அதக் குடிச்சாலே பிறகு மூச்சு வாங்காம மண்வெட்டி பிடிச்சு வேலசெய்யலாமே நடுமத்தியானமட்டும்…. குணத்தின்ர தேப்பனும் சரியாய்க் குணம் மாதிரி முந்திக் கெட்டித்தனமான ஆள்தான். குடியிருப்புக் காட்டந்தோனியார் கோயிலடிப் பக்கம் தான் அவரின்ட சொந்த ஊர். இவன் குணம் பிறந்த இடமும் அந்த இடம்தானே. குணத்தின்ர தகப்பன் வேற உங்க இருக்கிற சில ஆக்கள் மாதிரி ஒரு பேச்சும் பேசாம சும்மா இருந்துகொண்டு அரச மரத்தில அணில் பார்த்துக் கொண்டிருந்தவரில்ல. உடம்பு அசங்காமக் கசங்காம் வைச்சுக்கொண்டு சும்மா இருந்த ஆளில்ல அந்த ஆள்… ஆம்பிள எண்டவனுக்கு தொழில்தானே புருஷலட்சணம்.! அவர் அப்பவெல்லாம் ஊருக்குள்ள ஆடு மாடு அடங்கி சனங்களெல்லாம் உறங்கி தெருநாயள் கூட கடைசியாக் குலைச்சிட்டுப்படுக்கிற பிறகும் அந்தச் சாமத்தில கூட நந்திக் கடலுக்குப் போயிடுவார் தொழிலுக்கு.
இந்தப் புதுக்குடியிருப்புக் காட்டந்தோனியார் கோயில் எங்க இருக்கு….? அது மந்துவில் எண்டுற இடத்துக்குப் பக்கத்தில் தானே இருக்கு….. இவங்கள் எல்லாம் போய்த் தொழில் செய்யிற இந்த நந்திக்கடல் காட்டாந்தோனியார் கோயிலடிக்குப் பக்கமாகத்தான் தொடங்கி வற்றாப்பளை எண்டு இருக்கிற அவ்வளவு தூரமாப்போய்ப் பிறகு முடியுது.
எதையும் தள்ளி மறைக்காம இன்னும் விவரமாச் சொன்னா…. நந்திக்கடலின்ர மறு கரைப்பக்கம் கேப்பாபுலவும் – அப்பிடியே போய் வட்டு வாகல்வரை போகிற இடமு மெண்டுசொல்லவேணும். கடலோட நந்திக்கடல் தொடுவாய் உள்ள பக்கம் வட்டுவாகலும் முள்ளிவாய்க்கால் எண்டுற இடங்களும் இதுகளுக்கவா இப்ப சொல்லவேண்டி வருகிது.
மழை நல்லா அடிச்சுப் பெஞ்சு தண்ணி முட்டினா இந்த நந்திக்கடல் நிரம்பி வட்டுவாகல் பக்கமா உடைச்சுக் கொண்டுபோய் அப்பிடியே கடலில் கலக்கும். அந்த மிதப்போட தேடி ஓடிவந்த மாதிரி கடலில் உள்ள மீனெல்லாம் நந்திக்கடலுக்குள்ளயா வரும். அப்பிடி வந்த பிறகாத்தான் இந்த றால் மீன் நண்டெல்லாம் அதுக்க விளையிறகாலம் வருகுது.
அதுக்குப்பிறகுதான் அங்க இருக்கிற சனமெல்லாம்… “நந்திக்கடலுக்குள்ள எங்களுக்கு மீன் விளையப்போகுதடா… பெரிய றால் வரப்போகுதடா… நண்டு இனி வந்திடுமடா…” எண்டு அந்தக் கடலக் கடலப் பார்த்துக் கொண்டே – உதுக்க நாங்களெல்லாம் எப்பவா இறங்குவோம் – எண்ட யோசனையோட தெம்பா இருக்குங்கள். இப்பிடியா அங்க உள்ள மனுசர் கூட்டத்துக்கெல்லாம் இந்தா அந்தா எண்டு மனம் அலைய தங்கட நாளை அதுகளெல்லாம் இழுத்துக்கொண்டு போய்க்கொண்டிருக்குங்கள். அந்தக் கடலில் கூட்டிக்குமிச்சதாய்த் தாங்கள் அள்ளப்போகிற – றால் -நண்டு மீன்களையும் கூட சிலதுகள், நித்திரையிலயும் கூட கனவு கண்டு கொண்டுதானே இருக்குங்கள்.
அப்பிடியா அதுகள் எல்லாரும் நினைச்சுக் கொண்டி ருக்கிற அவசரமும் சரியாத்தானிருக்கு. அந்தக் கடலுக்க பிறகு பொதுக் கெண்டதாய்த்தானே பிறகு கெதியா எல்லாமே கிடந்து விளையிது….. நந்திக் கடலுக்க றால் மீன் நண்டு விளைஞ்சா ஊருக்குள்ள அங்கயா பிறகு ஆர் வீட்டுக்குள்ள இருப்பினம்…..? சுடலுக்குப் பக்கமுள்ள இட மெல்லாம் என்ன ஆள் இல்லாத அனாதிக் காடாயுள்ள இடமா…? எவ்வளவு சனம் அங்கயெல்லாம் இருக்கு…..? எல்லாமே சொந்தக்காறப் பட்டாளங்கள்தான்…… கூப்பிடக்கூப்பிட நான்வாறன் நான்வாறன் எண்டுகொண்டு கூட்டமாய்க்கூடி நந்திக்கடல்ப் பக்கமாப் போகுதுகள் எல்லாம்….. கடலில கிடக்கிறத அள்ளிக்கொண்டு வாற கணக்கில.
அங்க அந்தக் கடலுக்க சுட்டு விரலையும் நண்டுக்குமேல வைச்சு அழுத்திச் சிலதுகள் நண்டப் பிடிச்சிருங்கள். சிலதுகள் கம்பிக்குத்தால யூரியாபாக்கு நிறைய சேத்துடுங்கள் நண்டுகள்…… ஒரு பேச்சும் வீணாப் பேசிக்கொண்டிராம கிடக்கிற அந்த நாலு மாசம் மட்டும் கடலுக்க இறங்கி இதுதான் வேலை எல்லாருக்கும். வத்திப்போகாம ஊறிக்கொண்டிருக்கிறமாதிரித்தான் நந்திக்கடல் இந்த நாலு மாதம் மட்டும், அந்த ஊர்ப்பிறவியள் எல்லாத்துக்கும் தன்னட்ட உள்ளத நெடுகக் குடுத்துக்கொண்டிருக்கு சலிக்காம…. இந்தக்காலமெல்லாம் சனங்கள வீட்டில சும்மா இருக்க விடாம் அந்த தண்ணீருக்க நெடுகவா வாங்கோ வாங்கோ எண்ட மாதிரியா அந்தக் கடல் சிரிச்ச மாதிரி கைவிரிச்சு எல்லாரையும் கூப்பிட்டுக் கொண்டே இருக்கும். இப்படி வசதியான தங்கட காலத்தில் பெண்டுகளெல்லாம் மீன் வித்த சம்பாத்தியக் காசுகளில் ஒண்டுக்குரெண்டாய் வீட்டுக்கெண்டு பாய் வாங்குதுகள், அண்டா, உரல், உலக்கை, திருகை, அம்மி எண்டு பலதும் வாங்குதுகள். இந்தக் கடல் பிழைப்பால இப்புடியெல்லாம் வசதியாய் வாங்க எல்லாருக்கும் வழி பிறந்திட்டுது. முனகிக்கொண்டே கூட்டின பழைய விளக்குமாறையும் எறிஞ்சு போட்டு இந்தக்காலம்தானே புதுவிளக்குமாறு கூட சிலதுகள் வாங்குதுகள்.
கடலை இப்பிடி அலசி அலசி நாலுமாதம் சீவியத்தைப் போக்காட்டிப் போட்டுதுகள் சனங்கள். சோளகம் காத்தும் எழும்பி வீசத்துவங்கீற்று – இப்ப ஒரு ஈ காக்கா போலவும் இல்ல, வெறிச் சோடிச்சமாதிரித்தான் அந்தப்பக்கம் வந்திட்டுது.
சனமெல்லாத்துக்கும் இப்பவா அந்தத் தொழில் நிண்டு போச்சுது.பாவங்கள்! மனம் குளுந்து கொண்டிருந்த ஏழைச் சனத்துக்கெல்லாம் இப்ப மனம் காஞ்சு போச்சு. வீடு வீடா அங் காலையும் இங்காலையுமாச் சிலதுகள் போய்த் திரிஞ்சு பத்து ரூவா கடன் கேட்டுக்கொண்டுத்திரியுதுகள். மாடுகள் வைச்சு வளக்கிறவயள் மேயப்போய் வீடு வாறமாடுகளைப் பாத்துக்கொண்டிருக்குதுகள். அதுகளில் பால் எண்டாலும் கறந்து வித்து காசு கையில சிலவுக்கு எடுப்பம் எண்டும் அதுகள் யோசிச்சுக்கொண்டிருக்குதுகள்.
எல்லாரும் இந்த நிலையில தலயைப்போட்டு சொறிஞ்சு கொண்டு கல்லுமாதிரி யோசனையில் குந்திக்கொண்டிருந்தாலும், குணம் எண்டவன் மாத்திரம் கிறுங்கேல்ல. மற்றவயள் மாதிரி என்ன பண்ணுவம் ஏது பண்ணுவம் எண்டு அவன் ஏன் யோசிக்கப்போறான்? தவளை நிலத்திலயும் கிடந்து சீவிக்கும் தண்ணியிலயும் கிடந்து கூட அது சீவிக்கும். எங்கயும் கிடந்து சீவியத்தப் போக்காட்டக்கூடியது தானே தவளை. அந்தத் தவளையை மாதிரித்தானே இவன் குணமெண்டவனும்.
குணமென்ன புத்தியில்லாத பிழைக்கத் தெரியாத ஆளா? கடல் தொழில் போனா என்ன வன்னிக்காடு இருக்குத்தானே அங்க அவனுக்குப் பிழைப்புக்கு? எல்லாரும் அப்பிடியே வேலயில்லாம் விறைச்ச மாதிரி கிடக்க அவன் ஊருக்குள்ள உள்ள பெடியள் நாலு பேரையும் தன்னோட கூட்டிக்கொண்டு போயிட்டான் காட்டுக்குள்ள தேன் எடுக்கிறதுக்கு.
காட்டுக்குள்ள போன இளம் பெடியளுக்கு பெரும் தேனீக் குளவியளென்டாலே சரியான பயம். அதுகளெல்லாம் காட்டுக்குள்ளயா ஒரு ஓரமா ஒதுங்கி ஒதுங்கி நடந்துகொண்டிருக்குதுகள். தேனீக்கள் குத்தி எங்களுக்கு ஒண்டும் ஆயிடப் பிடாதெண்டு – குல தெய்வத்தையும் கும்பிடுதுகள். “எங்களைப் பிழைக்க வைச்சிடு வத்தாப்பளை அம்மாளாச்சி. என்று மீசையில்லாக் குட்டி என்று எல்லாரும் கூப்பிடுற சின்னவன் தன்ர வாயாலையும் சொல்லிக் கொண்டுவாறான்.
காட்டுக்குள்ள நெடுகப் புழங்கிப் புழங்கி குணம் எண்டுற இவனுக்கு தேன் எடுக்கிறதிலயும் நல்ல பரீட்சை இருக்கு….. இப்பிடி இவனமாதிரி பரீச்சையில்லாத ஒருவன் காட்டுக்கயா தேன் எடுக்கப்போனா, காஞ்ச கத்தாழ நாராய்த்தான் அதுக்க அலைஞ்சு திரிந்து போட்டு வெறுங்கையோட வெளியால் வரவேணும்.
ஆனா இவன் குணம் மாத்திரம் காட்டுக்க போனா, எப்பவும் வெறுங்கையா திரும்பி வந்ததில்ல. யார் அவனோட காட்டுக்கிளயா கூடப்போனாலும், தேனீக்களிண்ட இரைச்சல் சத்தம் குணத்துக்கு மாத்திரம் தெரியும்…. அப்பிடி அந்தச் சத்தத்தக் காதில அணைவு வைச்சமாதிரி அவன் பிடிச்சிடுவான்… காட்டுக்குள்ள அவன்ர கண்ணுக்குத் தேனீக்கள் காணாமப் போகுதா இல்லையா – அவன் பிடிச்சிருவான் ஒழுங்குமுறையாப் பாத்து எங்க தேன் கூடுகட்டி இருக்கெண்டு.
மரப்பொந்துத் தேன் எண்டா உயரம் நாலு அடி உயரமளவுக்கும் அதுக்குள்ளயா தேன் வதை இருக்கும். பெருந் தேனீ கட்டின கூடாயிருந்தால் அதுகள் பொத்தி வளத்த வதை எல்லாத்துக் கிளயும் நிறையவாத் தேன் இருக்கும். மரத்துக்கு மரம் தேனும் சுவையில வித்தியாசப்படும்தானே. வேம்புப் பொந்துத் தேனாயிருந்தா அதின்ர சுவை தான் இருக்கும். பாலைமரமெண்டா அது ஒரு சுவை…. இலுப்பையெண்டா அது அதின்ர பூ மணத்தோட உள்ளது மாதிரியாவேற.
மரத்தில் பொந்துத்தேன் இருக்கு எண்டு அறிஞ்சா குணம்தான் மரத்தில ஏறுவான். மேல ஏறி அவன் நிண்டுகொண்டு பொந்தை வெட்டிப் பெருப்பிப்பான். துலையில நிண்டு அவனோட போன பெடியள் அவன் செய்யிறதக் கவனிச்சுக்கொண்டே இருப்பாங்கள். குணம் பொந்து பெருப்பிச்சாப் பிறகு, வாசன பிடிக்கிற மாதிரி அதில முகத்தைக் கொண்டு போவான். அவன் பிறகு ஏதோ வாயால ஊதுறமாதிரித் தூரத்தில நிக்கிற பெடியளுக்குத் தெரியும். அது ஏதோ கம்ப சூத்திரம் மாதிரித்தான் அந்தவேல. பிறகு அவன் பொந்துக்காலே வதைகளை எடுத்து, வாய் அகட்டின சுரக்குடுக்கைக்குள்ள போட்டுக் கீழவா இறக்கிக் கொண்டருவான். பச்சைத்தண்ணிக்கும் தேனுக்கும் பொருத்தமேயில்ல. பச்சைத்தண்ணி விழுந்தாத் தேன் புளிச்சிடும். அதால தான் தேன் எடுத்துப் போட்டு வைக்கிற சுரக்குடுக்கையில தண்ணி சொட்டும் இல்லாம காஞ்சதாயிருக்கக் குணம் பாத்துக் கொள்ளுவான். காடு என்னவோ சொந்த இடம் மாதிரித்தான் குணத்துக்கு. அவன் மடமடவென் அதுக்குள்ளாலே நடப்பான். கடைசியா காட்டுக்குள்ளால வெளியேறப்போற இடம்கூட அவனுக்கு நல்லாத் தெரியும். ஒரு நாளைக்கு ஒரு காடு என்று அந்த வன்னிப் பக்கத்துக் காட்டுக்கையெல்லாம் உள்ளே போய் வெளியே வாறதெல்லாம் அவனுக்கு நல்லாத் தெரியும். குணத்துக்கு எப்பவும் அவனுக்கு வைச்ச பேர் போல ஒரு தங்கமான குணம்தான்! தனக்குக் கிடைச்சத நாலு பேருக்கும் பிறிச்சுக் குடுக்கிறதில் மகிழ்ந்து மலர்ந்து குளிர்ந்து போறவன்தான் அவன்.
குணம் மழை பெஞ்சு வெள்ளாம விளையாட்டி விறகாவது வெட்டிப் பிழைக்கக்கூடியவன். மழைத்தூறல் கண்டால் உடும்பு வேட்டைக்கு நாயோடையும் அவன் காட்டுக்கு வெளிக்கிடுவான். அவன் வளக்கிற நாய் வேட்டை நாய். ஓடுற உடும்பை தரையில வைச்சு அந்த நாய் பொத்தின மாதிரிப் பிடிச்சிடும். அப்பிடியே அந்த இடத்தில அழுத்திப் பதிச்சு மிதக்காம உடும்பை அமுக்கி வைச்சிருக்கும் அந்த நாய். அதுக்கு உடும்பின்ர வித்து எடுத்து மூக்கில அடிச்சு விட்டதாலதான் அந்த ரோசம்…. அதாலதான் உடும்ப வாயில் ஒரு இறுக்கு இறுக்கி ஆப்படிச்சமாதிரி அத அந்த நாய் பிறகு நிலத்திலயும் அடிக்கும்.
இப்பிடியே காட்டுக்குள்ள கல்லுகளோடயும் முள்ளுக ளோடயும் கலந்து கிடந்த வாழ்க்கை குணத்துக்குக் கொஞ்சக் காலம் செல்லக் கடந்து போகுது. ஒரு தொழிலுக்கும் அண்டைக்குப் போகக் கிடைக்காட்டி வீட்டில் இருந்து தன்ர மிருதங்கத்தை யெண்டாலும் எடுத்து அவன் வாசித்துக் கொண்டிருக்கிறான். அவன் மிருதங்க வித்துவானும்தான். வீட்டில் அவன் வாசிக்கிற மிருதங்க அடி இப்ப வெளியாலயும் உள்ள ஆக்களுக்கு கேட்டுக்கொண்டிருக்கு. இண்டைக்கு ஒரு கோஷ்டிக்குப்போய் வாசிக்க அவன் இருக்கிறதால அதில பாடுற பெடியனையும் அவன் ஆள்விட்டுக் கூப்பிட்டிருக்கிறான். கோஷ்டிக்குப் போறதெண்டால் அவன் பாடுற பாட்டுக்களை படிக்கச்சொல்லி ஒரு கை பழக்கப்படுத்திக் கொண்டுதான் அவன் வெளிக்கிட வேணும்.
இதெல்லாமே முன்னொருகாலம் அவன் வன்னிக்குள்ள இருக்கேய்க்க வாழ்ந்திருந்த வாழ்க்கை. இண்டைக்கோவெண்டா அவன் வெளிநாடு எண்டு போய் ஒரு பாலைவனம் பிரதேசத்தில் இருந்துதான் வேலைசெய்து சீவிக்சுக்கொண்டிருக்கிறான். அவனின்ர சகோதரிகளும் தாய் தேப்பனும் ஏலவே யாழ்பாணத்தில போய் இருந்து கொண்டதாயிருந்தாலும் – அங்க வன்னிக்கிள்ள உள்ள எத்தனைபேர் என்ர உறவினர்கள், எத்தனைபேர் என்ர தாயைப் போன்றவர்கள், சகோதர சகோதரிகளைப் போன்றவர்கள், என்று நினைச்சுத் தொடர்ந்து நித்திரை கொள்ள முடியாத அளவிலதான் அவன் துடிச்சுக் கொண்டிருக்கிறான். தான் சீவிச்ச இடத்த இங்கயிருந்து அவன் நினைக்கேக்க எல்லாமே கண்ணுக்கு எட்டிய வெளியாத்தான் அவனுக்கு இப்பயாத் தெரியுது. காட்டுக்க கூட எந்த ஜீவராசிகளின்ட சத்தத்தையும் இப்ப கேக்காத மாதிரியாத்தான் அவன் நினைக்கிறான்.
அப்பிடி எல்லாம் சரியான கெடுதி ஒண்டும் அங்க நேரக்கூடாதெண்டு அவன் எத்தினை நாள் கடவுளப் பார்த்துப் பிரார்த்தனை செய்திருக்கிறான். கூடுதலா அப்பிடி ஒரு கெடுதியும் அங்க நேராதெண்டு அவன் யோசிச்சுமிருந்தான். ஆனாலும் பிறகு எல்லா அதிர்ச்சியையும் அவனுக்குப் பலபேர் சொல்லக்கேட்டு சிந்திக்கக் கூடியதாய்த்தான் போச்சுது. எல்லாச் சுவடுகளும் அழிந்த மாதிரியாக என்ன வாழ்க்கை அந்த வன்னி மண்ணில் சீவிச்ச சனத்தின்ரை வாழ்க்கை.
குணம் அந்தச் சனத்தோட ஒரு காலம் உடனிருந்து சீவிச்சவன். அந்தச் சனங்களிண்ட வலியை உணர்ந்த பங்காளிகளில் இவனும் ஒருவன்தானே? ஆனாலும் இந்த அநியாயத்தைப் பற்றியெல்லாம் ஒரு வரியைக்கூட காகிதத்தில இண்டைக்கு அவனால ஆருக்கும் எழுதவே முடியாது. இப்ப அவனால் ஒழுங்காப் பேசவும் முடியாது. எல்லா அதிர்ச்சிகளையும் அவன் அறிஞ்சதுக்குப் பிறகு ஒரு மாசமா ஒரே யோசனை அவனுக்கு. அவன் பிறகு இப்ப கொடிய வருத்தத்திலதான் கிடக்கிறான் ஒரு ஆஸ்பத்திரி வார்டில… அவன அங்கினதான் இப்பவாப் போட்டுக்கிடக்கு. அவனுக்கு ‘பரலைய்ட்’ எண்டுற வருத்தமாம்! அப்பிடி எண்டுதான் அவனுக்கு வைத்தியம் பாக்கிற டாக்குத்தர் ரெலிபோனில் யாரோ விசாரிச்ச இடத்தில இப்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.
(நீராநதி-டிசம்பர் 2009) (சுடர்ஒளி -நவம்பர் 29-2009) (தாமரை – மார்ச்-2010)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
மிகநீண்ட மூன்று நாட்கள்
வாசுகி நடேசன்
October 6, 2026
இளிச்சவாயன் பட்டம்
ஸ்ரீ.தாமோதரன்
October 6, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
October 6, 2026
