தலைமைச் சேவகன்
கதையாசிரியர்: புலவர் த.முருகேசன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 80
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பிரெடிரிக் என்பவர் பர்சியா நாட்டை ஆண்ட மன்னர். மக்கள் நலமே தம் நலம் எனக் கருதி நேர் மயாக நாட்டை ஆண்டுவந்தார். எளியவரிடமும் இரக்கம்காட்டி அருள் செய்யும் அருளாளர். அவரிடம் பலர் பணிபுரிந்துவந்தனர். அவர்கள் அனைவரும் தம் மன்னரைத் தெய்வமாகவே கருதி மிக்க அன்புடன் பணி புரிந்துவந்தனர். மன்னரும் தம் பணியாளருடைய குறைகளை அவ்வப்போது அறிந்து தீர்த்துவந்தார்.
ஒரு நாள் மன்னர் தம் அறையில் அமர்ந்திருந்தார். மன்னர் தமக்கு ஏதேனும் தேவையாயின் வெளியில் உள்ள பணியாளரை அழைத்து ஆணையிடுவது வழக்கம். அரசர் அழைத்தாலொழிய அப் பணியாளன் உள்ளே செல்லக்கூடாது. பணியாளனை அழைக்க மன்னர் தம் அருகில் ஒரு மணியை வைத்திருந்தார். அம் மணியை அடித்தவுடன் வெளியில் உள்ள பணியாளன் உள்ளே சென்று மன்னரது ஆணையைக் கேட்டு நிறைவேற்றுவது வழக்கம்.
பணியாளனை அழைக்க மன்னர் மணி அடித்தார். வெளியிலிருந்து எவரும் வரவில்லை. மீண்டும் மணி அடித்தார். அப்போதும் பணியாளன் வரவில்லை. அரசருக்கு வியப்பாயிருந்தது. அவரது அறைக்கு வெளியே இருக்கும் பணியாளன் நற்பண்புகள் மிக்கவன். மன்னரது கருத்தறிந்து அவர் சொல்லாம அவரது தேவைகளை நிறைவேற்றுவான், எனவே, மன்னர் அப்பணியாளனிடம் மிகுந்த அன்புடையவராயிருந்தார். அவர் அரண்மனையில் இருந்த வேறு சில பணியாளர்கள் இதனால் அந்தப் பணியாளன் மீது பொறாமையுடைய வராயிருந்தனர். அவன்மீது ஏதேனும் குற்றம் கண்டு மன்னருக்கு அவன்மீது வெறுப்பு ஏற்படச் செய்ய வேண்டுமென்று காத்திருந்தனர்.
மன்னர் பலமுறை அழைத்தும் அப் பணியாளன் வாராதிருக்கவே அவர் தாமே வெளியே வந்தார். அப் போது பொறாமைகொண்ட பணியாளன் ஒருவன், ”அரசே! நீங்கள் பலமுறை அழைத்தும் அவன் மதியாமல் உறங்கிக்கொண்டிருக்கிறான். அவனுக்கும். பதில் நான் செய்கிறேன்” எனக் கூறினான். மன்னர் அவன் கூறியதைப் பொருட்படுத்தாமல் பணியாளன் உறங்குமிடத்திற்குச் சென்றார். பணியாளன் வாடிய முகத்தோடு படுத்துறங்குவதைக் கண்டார். அவன் அவ்வாறு இருக்கக்கூடியவன் அல்லன் என்பதை உணர்ந்ததால் அரசர் சினங்கொள்ளவில்லை. அருகில் சென்று அவனைப் பார்த்தார். அவனது சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அது அவர் கண்ணில் பட்டது. மன்னர் அக் கடிதத்தை எடுத்துப் படித்துப் பார்த்தார்.
அக் கடிதம் அப் பணியாளனின் தாயார் அவனுக்கு எழுதிய கடிதம். அதில், “மகனே! உனக்கு வருவாய் குறைவு என்பது எனக்குத் தெரியும். ஆயினும் உன் தேவைகளைக் குறைத்துக்கொண்டு எனக்குப் பணம் அனுப்பிக்கொண்டிருக்கிறாய். இரண்டு மாதங்களாக நான் நோய்வாய்ப்பட்டிருந்ததால் மருத்துவச் செலவுக் கென அதிகமாகப் பணம் அனுப்பியிருந்தாய். உன்னைப் பார்த்துவந்தவர்கள் நீ உன் உணவினை ஒரு வேளை குறைத்துக்கொண்டு அத் தொகையை எனக்கு அனுப்பியதாகக் கூறினார்கள். பெற்ற என் வயிறு அதனைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தது. உன் உணவினைக்கூட எனக்காக நீக்கிவிட்டாயே. உன் உடல்நலம் என்னவாகும்? பெற்ற தாயாகிய என்மீது உனக்கிருக்கும் பேரன்பினை நான் எண்ணி பெருமைப்படுகிறேன். ஆனாலும் எனக்காக உன் உணவுச் செலவைக் குறைத்துக்கொள்வதை நான் விரும்பவில்லை. எனக்கு நோய்முற்றி இறந்தாலும் கவலையில்லை. நீ எனக்காகப் பட்டினி கிடந்து உன் உடலைக் கெடுத்துக்கொள்ளாதே” என எழுதப்பட்டிருந்தது.
மன்னர் கடிதத்தை இருந்த இடத்தில் வைத்து விட்டுத் திரும்பிவிட்டார். உணவு உண்ணாத காரணத் தாலேயே அவன் சோர்ந்து படுத்திருப்பதை அறிந்து அவனை எழுப்பாமலேயே வந்துவிட்டார். பொறாமை யால் கோள் சொல்லிய பணியாளன் மனத்துள் மகிழ்ந் தான். மன்னர் அவனை உடனே வேலையைவிட்டு நீக்கித் தண்டிப்பார் என அவன் கருதினான்.
மன்னர் வந்துபோனதை அறியாமல் அப் பணி யாளன் உறங்கிக்கொண்டிருந்தான். பக்கத்திலிருந்த சிலர் அவனை எழுப்பி நடந்தவற்றைக் கூறினர். அவன் பதறி எழுந்தான். மன்னரிடம் ஓடிச்சென்று மன்னிப்புக்கேட்க விரும்பினான். விரைவாக எழுந்து செல்லும்போது அவனது சட்டைப் பையிலிருந்து நாணயத்தின் ஒலி கேட்டது. அவன் தன் பையினை நோக்கினான். அதனுள் தங்கக் காசுகள் கிடந்தன. அவனுக்கு மேலும் அச்சமேற்பட்டது. தன்மீது பொறாமைகொண்ட எவனோ தங்கக் காசுகளைத் தன் பையில் போட்டுள்ளான். தன்னைத் திருடன் என மன்னர் நினைக்குமாறு சூழ்ச்சி செய்துள்ளான் எனக் கருதினான். மன்னர் தன்னைத் தண்டிப்பது உறுதி என அஞ்சியபடியே ஓடினான்.
மன்னர் தனியே அமர்ந்திருந்தார். ஓடி வந்த பணியாளன் அவர் காலில் விழுந்து, “அரசே! என்னை மன்னிக்க வேண்டும். நான் தவறு செய்துவிட்டேன். என்னையறியாமல் கண்ணுறங்கிவிட்டேன். என் பிழை யினைப் பொறுத்து என்மீது அருள் காட்டுங்கள். நான் உறங்கும்போது எவரோ என் பையில் இத் தங்கக் காசு களைப் போட்டுள்ளனர். இவை எனக்குரியன அல்ல” எனக் கூறித் தங்க நாணயங்களை மன்னர்முன் வைத் தான். அவனது துாய உள்ளத்தையும் பிறர் பொருளை விரும்பாத நல்லியல்பையும் கண்ட மன்னர் மிக மகிழ்ச்சி யடைந்தார்.
அச்சத்துடன் பணிந்து நின்ற பணியாளனை மன்னா புன்முறுவலுடன் பார்த்தார். “நீ உன் தவற்றை உணர்ந் தாய். மேலும் நீ உன் தாய்மீது கொண்டுள்ள அன்பினை உன் பையிலுள்ள கடிதம்மூலம் தெரிந்துகொண்டேன். உன் பசியைக்கூடப் பொருட்படுத்தாமல் உன் தாயின் நோயைப் போக்கப் பணமி அனுப்பிய செயலை அறிந்து நான் மிக மகிழ்ந்தேன். உன்னைப் பெற்ற தாய் பெரும் பேறு பெற்றவள். உன்னைப் பெற மிகுந்த தவம் செய் திருக்கவேண்டும். மேலும், உன் நிலையறிந்து உனக்கு உதவத் தங்க நாணயங்களை நானே உன் பையில் போட்டேன். அதனை வைத்துக்கொள்ளவேண்டுமெனக் கருதாமல் பிறரது பொருள் எனக் கருதி என்னிடம் கொடுத்த உன் நேர்மையை நான் பாராட்டுகிறேன். அந்தக் காசுகளை உன் அன்னையிடம் நீ கொண்டுள்ள அன்பிற்கும் உன் நேர்மைக்கும் நான் தந்த பரிசாக வைத்துக்கொள். உன் தாயை இன்றே இங்கு அழைத்து வந்து அரண்மனை மருத்துவரைக்கொண்டு மருத்துவம் செய்கிறேன். இன்றுமுதல் நீ இந்த அரண்மனையில் தலைமைச் சேவகனாகப் பணிபுரிக” எனக் கூறினார்.
“தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை.” – கொன்றைவேந்தன்
“ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.” – திருக்குறள்
– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
![]() |
புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர்காப்பான் தோழன்
ஸ்ரீ.தாமோதரன்
October 12, 2026
போலித் துறவி
புலவர் த.முருகேசன்
October 10, 2026
வறுமையில் செம்மை
புலவர் த.முருகேசன்
October 10, 2026
