பழையது சாப்பிட்டேன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 65 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கந்தன்குடி என்பது ஓர் ஊர். அவ்வூர் நன்செய் நிலங்கள் நிறைந்தது; நீர்வளம் உடையது.எனவே அவ்வூர் மக்கள் வளமாக வாழ்ந்தார்கள். அவர்கள் உழவுத் தொழில்மூலமும் வாணிகத்தின்மூலமும் பொருள் சம்பாதித்துவந்தனர். சிலர் பெரும் செல்வர்களாகவும் இருந்தார்கள். அவர்களுள் செல்வநாதர் என்ற ஒருவர் இருந்தார். அவரது முன்னோர்கள் பெருஞ்செல்வம் சேர்த்துவைத்திருந்தார்கள். செல்வநாதரின் தந்தையார் சிறந்த உழைப்பாளி, தம் முன்னோர்- தேடிவைத்த செல்வத்தை நம்பியிராமல் தாமே உழைத்தார். அதனால் அவரது செல்வம் மேலும் பெருகிற்று. அவர் இறக்கும் தறுவாயில் செல்வநாதரை அழைத்து, “நம் குடும்பம் பரம்பரை பரம்பரையாகச் செல்வக் குடும்பம் அன்று; என் பாட்டனார் வறுமையில் வாழ்ந்தவர்; அயல் நாடுகளுக்குச் சென்று உடல் வருந்தி உழைத்தார்; தம் உழைப்பினால் பெருஞ்செல்வம் சேர்த்தார்; அச் செல் வத்தை வீண் வழியில் செலவிடாமல் சிக்கனமாக வாழ்ந்தார்; பிறகு ஊர் திரும்பிவந்தார். 

“உழுது பயிர் செய்வதற்கு ஏற்ற நன்செய் நிலங்களை அவர் வாங்கினார்; தாமே உழுது பயிர் செய்தார். அதன் பிறகு என்னுடைய தந்தையும் இரஷ பகலாகப் பாடுபட்டு விளை நிலங்களைப் பெருக்கினார். இடைவிடாத உழைப்பினால் மேலும்மேலும் செல்வம் பெருகியது. நான் குடும்பத் தலைவன் ஆன பிறகு முன்னோர் வழியைப் பின்பற்றி நானும் உழைத்தேன். அதனால், நம் குடும்பநிலை மேலும் உயர்ந்தது. இப்போது நான் நம் குடும்பப் பொறுப்பை உன் கையில் ஒப்படைக்கிறேன். இதன் பெருமை குன்றாமல் காக்க வேண்டியது உன்னுடைய கடமையாகும்” எனக் கூறினார். 

தந்தையார் காலமானதும் செல்வநாதர் குடும்பப் பொறுப்பை ஏற்றார். அவரது உறவினர் அவர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தனர். அமுதவல்லி என்ற அழகிய பெண்ணை மணம்பேசி முடித்தனர். அமுதவல்லி அருங்குணங்கள் பலவும் உடையவர். சிறந்த உழைப்பாளி. வீட்டுவேலைகள் அனைத்தையும் தாமே செய்து வந்தார். ஆடு மாடுகள் அனைத்திற்கும் தாமே தீனிபோட்டுக் கவனித்துக்கொண்டார். அமுத வல்லி வந்தபிறகு வீடு மேலும் சிறப்படைந்தது. தமது கணவருக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் அன்போடு செய்துவந்தார். செல்வநாதர் தம் மனைவி வின்மீது பேரன்பு கொண்டிருந்தார். 

செல்வநாதர் இளமைமுதல் செல்வமாகவே வளர்ந்தவர். வியர்வை சிந்த உழைத்து அறியாதவர். குடும்பப்பொறுப்பு ஏற்றபிறகும் அவர் உழைக்கவில்லை. தமக்கு மிகுந்த செல்வம் இருப்பதால் தாம் உழைக்கத் தேவையில்லை எனக் கருதினார். அதற்கேற்ப அவருக்கு நண்பர் சிலரும் சேர்ந்தனர். அவர்கள் செல்வ நாதரின் செல்வத்தைத் தவறான வழிகளில் செலவழிக்கத் தூண்டினர். செல்வநாதர் அவர்களோடு சேர்ந்து வீண் பொழுது போக்கிவந்தார். தம்முடைய நிலங்களுக்குச் சென்று கண்காணிக்கவில்லை; வேலைக்காரர்களையே நம்பி நிலங்களை அவர்களிடம் விட்டுவிட்டார். செல்வ நாதர் நிலங்களைப் பார்வையிட வரமாட்டார் என்த் தெரிந்ததும் வேலைக்காரர்கள் சரிவர வேலை செய்வ தில்லை. எனவே, நிலங்கள் சரிவர விளையவில்லை. குடும்பத்தின் வருவாய் படிப்படியாகக் குறைந்தது. ஆனால், செலவுமட்டும் மிகுந்தது. கடைசியாகச் செல்வநாதர் தம் முன்னோர் தேடிவைத்த நிலங்களை விற்கத் தொடங்கினரர். 

தம்முடைய கணவர் உழைக்காமல் வீண் செலவு செய்துவருவதைக் கண்ட அமுதவல்லி மிகவும் வருந்தினார். தம் கணவர் சோம்பேறியாக இருப்பதை அவர் விரும்பவில்லை. பலமுறை தம் கணவரிடம் எடுத்துரைத்தார். ஒரு நாள் அமுதவல்லி தம் கணவரைப் பார்த்து, ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும் என்பது உங்களுக்குத் தெரியுமன்றோ? உழைக்காமல் உள்ளதைச் செலவழித்துவந்தால் விரைவில் நம் குடும்பம் வறுமை அடையும். மீண்டும் இழந்த செல்வத்தை உங்களால் சேர்க்க முடியாது. வருவாய்க்குத் தக்கவாறு செலவு செய்யவேண்டும். நம்மிடம் செல்வம் உள்ளவரை நண்பர்கள் சூழ்ந்திருப்பார்கள். செல்வம் குறைந்ததும் அனைவரும் சென்றுவிடுவர். சுற்றத்தார் பழிப்பர்’ என்று எடுத்துக் கூறினார். அதற்குச் செல்வநாதன், ”என் முன்னோர் நிறையச் செல்வம் சேர்த்துவைத்துள்ளனர். நான் ஏன் ஏழையைப் போல் உழைக்க வேண்டும்? உணவுக்கு வழியில்லாத வர்கள்தாம் உழைக்கவேண்டும். உனக்கு ஒன்றும் தெரியாது. நீ பேசாமல் இரு” எனக் கூறி அடக்கி விட்டார். அமுதவல்லி கணவரின் போக்கைக் கண்டு மனம் வருந்தினார். செல்வநாதர், ‘அமுதவல்லி உழைப்பதால்தானே வருந்துகிறாள். அவளுக்கு மகிழ்ச்சிதரும் வகையில் ஏதாவது செய்யவேண்டும்” என எண்ணினார். உடனே வீட்டு வேலைகளைச் செய்ய ஒரு பெண்ணை ஏற்பாடு செய்தார். சமையல் செய்ய ஒரு சமையல்காரனையும் அமர்த்தினார். அமுதவல்லி எவ்வளவோ தடுத்தும் அவர் கேட்கவில்லை. சமையற் காரன் வந்த பிறகு வீட்டுச்செலவும் மிகுந்தது எனவே, செல்வநாதர் மேலும் நிலங்களை விற்றார். ஆயினும் அவருக்கு உழைத்து உண்ணவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. 

அமுதவல்லி தம் கணவரை எப்படியாவது திருத்த வேண்டும் என எண்ணினார். அதற்குரிய சமயத்தை எதிர்பார்த்திருந்தார். பொங்கல் திருநாள் வந்தது. செல்வநாதர் வீட்டில் சிறப்பாகப் பலவகை உணவுகள் சமைக்கப்பட்டிருந்தன. செல்வநாதர் வயிறு நிரம்ப உண்டு படுத்து உறங்கினார். கண்விழித்து எழுந்த போது அமுதவல்லி சோர்வாக உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார். அவர் அமுதவல்லியைப் பார்த்து, ‘சாப்பிட்டுவிட்டாயா? ஏன் சோர்வாக இருக்கிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அமுதவல்லி, ‘சிறிது பழையது. சாப்பிட்டேன்” எனக் கூறினார். செல்வநாதருக்கு கோபம் வந்துவிட்டது. உடனே சமையற்காரனை அழைத்து “வீட்டுத் தலைவிக்கு ஏன் பழையது போட்டாய்? சமைத்த உணவு வகையெல்லாம் எங்கே?” எனக் கேட்டார். சமையற்காரன். ”ஐயா! அம்மா புதிய சாப்பாடுதான் சாப்பிட்டார்கள். இன்று சமைத்த எல்லா உணவு வகைகளையும் வைத்தேன்’ எனக் கூறினான். 

செல்வநாதர் மனைவியைப் பார்த்து, “இன்று சமைத்த உணவு வகைகளைச் சாப்பிட்டுவிட்டுப் பின் ஏன் பொய் சொல்லுகிறாய்?” எனக் கேட்டார். அதற்கு அமுதவல்லி, ‘பொங்கல்- திருநாள் உழைக்கும் மக்கள் விழா. உழைத்து அதனால் வரும் பொருள்களைக் கொண்டு சமைத்து உண்ணும் விழா. நீங்கள் உழைத்துச் சம்பாதித்த பொருள்களைக்கொண்டு இந்த உணவு சமைக்கவில்லை. உங்கள் முன்னோர் உழைப் பினால் வந்த உணவையே இன்று உண்டேன். எனவே தான் ‘பழையது சாப்பிட்டேன் எனக் கூறினேன்.’ இதில் பொய் ஒன்றுமில்லை” எனக் கூறினார். 

இதனைக் கேட்ட செல்வநாதன் ஒன்றும் கூற வில்லை. மனைவி கூறியதை எண்ணிப் பார்த்தார். மனைவி கூறியது சரியே என முடிவு செய்தார். தாம் இதுவரை சோப்பேறியாக இருந்துவந்ததை எண்ணி வெட்கமடைந்தார். தாம் உழைக்காமையால் தமது செல்வம் குறைந்ததை எண்ணிப் பார்த்தார். தம் மனைவி பலமுறை எடுத்துக் கூறியும் கேட்காமல் போனதை எண்ணி வருந்தினார். இனிமேலாவது உழைக்க வேண்டும் என முடிவெடுத்தார். 

அன்றுமுதல் நாள்தோறும் தம் வயலுக்குச் செல்வ நாதர் சென்றார். தம் ஆள்களோடு தாமும் உழைத்தார். தினமும் தமது நிலங்களைப் பார்வையிடச் செல்வதில் தவறுவதில்லை. செல்வநாதர் உறுதியாக வருவார் என அறிந்ததால் அவரது வேலையாள்களும் தவறாமல் வந்து நன்றாகப் பாடுபட்டு உழைத்தனர். நிலமும் அந்த ஆண்டு நன்றாக விளைந்தது. செல்வநாதர் உழைப்பின் பெருமையை உணர்ந்துகொண்டார். உழைப்பின் உயர்வினைத் தமக்கு எடுத்து உணர்த்திய மனைவியின்மீது அவருக்கு அன்பு மிகுந்தது. உழைப் பதால் தமது உடலும் நலமாக இருப்பதை உணர்ந்தார். உழைப்பின் பயனாகத் தமது செல்வம் பெருகியதைக் கண்டு மகிழ்ந்தார். ‘உழைப்பே உயர்வு தரும்’ என்னும் உண்மையை உணர்ந்தார். 

“சோம்பித் திரியேல்”. -ஆத்திசூடி 

“போனகம் என்பது தான் உழந்து உண்டல்.” – கொன்றைவேந்தன். 

“உழைக்காதவனுக்கு உண்ண உரிமையில்லை.” – காந்தியடி

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *