தருமர்
கதையாசிரியர்: புலவர் த.முருகேசன்
கதைத்தொகுப்பு:
சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 71
(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாண்டவர்களைப்பற்றி நாம் அறிவோம். தருமன் பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் என்பவரே அவர்கள். ஒரு நாள் பாண்டவர் ஐவரும் காட்டிற்குச் சென்றனர். அப்போது முனிவர் ஒருவர் அங்கு வந்தார் அவர் பாண்டவரைப் பார்த்து, “எனது தீக்கடைகோல் ஒரு மானின் கொம்பில் மாட்டிக்கொண்டது. அந்த மான் வேகமாக ஓடிவிட்டது. அந்தக் கடைகோல் எனக்குத் தேவை. நீங்கள் ஏப்படியாவது அம் மானைக கண்டுபிடித்து என் பொருளை மீட்டுத் தரவேண்டும்’ என வேண்டிக்கொண்டார். பிறருக்கு உதவுவதைத் தம் கடமையாகக் கொண்டவர் தருமர். உடனே அம் மானைத் தேடிப் புறப்பட்டார். அவரது தம்பியர் நால் வரும் அவருடன் சென்றனர். பாண்டவர் ஐவரும் பல விடங்களிலும் மானைத் தேடினர்; நீண்டதூரம் வந்து விட்டனர்.காட்டில் நெடுந்தூரம் நடந்ததால் களைத்துப் போய்விட்டனர். அனைவருக்கும் தண்ணீர் வேட்கை எழுந்தது. ஓரிடத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை தருமர் நகுலனைப் பார்த்து, “எங்காவது போய்த தண்ணீர் கொண்டு வா” எனக் கூறினார்.
நகுலன் தண்ணீரைத் தேடிச் சென்றான். சிறிது தூரத்தில் நாரைகள் பறப்பதைப் பார்த்தான். நாரைகள இருக்குமிடத்தில் தண்ணீர் இருக்கும் என எண்ணினான் எனவே, அத் திசைநோக்கி நடந்தான். அவன நினைத்தது சரியாகவே இருந்தது. எதிரே ஒரு குளம் தெரிந்தது. அந்தக் குளத்தில் இறங்கித் தண்ணீர எடுக்கப் போனான். அப்போது,”நகுலா!இக் குளம் என் பாதுகாப்பில் இருக்கிறது. இதில் நீர் எடுக்கவேண்டு மானால் என் அனுமதி வேண்டும். நான் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு நீர் எடுக்க வேண்டும்” என்று ஒரு குரல் கேட்டது. நகுலன் சுற்று முற்றும் பார்த்தான். நாரைகள்தாம் இருந்தன. வேறு யாரையும் காண்வில்லை. “சரி, யாரோ நம்மைப் பய முறுத்துகிறார்கள். நம்மிடம் வில் இருக்கிறது. நம்மை யாரும் எதுவும் செய்யமுடியாது” எனப் பொருட் படுத்தாமல் குளத்தில் இறங்கி நீர் குடித்தான்.உடனே அவன் மயக்கமடைந்து வீழ்ந்துவிட்டான் இறந்து போனவன்போலக் கிடந்தான்.
நகுலன் சென்று வெகுநேரம் ஆகிவிட்டது. தரு மருக்குக் கவலை ஏற்பட்டது. உடனே சகாதேவனைப் பார்த்து, ”நீ போய் நகுலனைப்பற்றித் தெரிந்து வா” எனக் கூறி அனுப்பினார். சகாதேவன், நகுலனைத் தேடிச் சென்றான். நகுலன் சென்ற குளத்தை அடைந் தான். நகுலன் விழுந்து கிடந்ததைச் சகாதேவன் கவனிக்கவில்லை. நீர்வேட்கை மிகுதியால் குளத்தைப் பார்த்தவுடன் நீர் பருக இறங்கினான். நகுலன் கேட்டது. போலவே சகாதேவனும் அக் குரலைக் கேட்டான். அவனும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் நீரில் இறங் கினான். நகுலனுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கும் ஏற் பட்டது. அவனும் இறந்தவன்போல வீழ்ந்துவிட்டான்.
சகாதேவனும் திரும்பாமல்போகவே தருமர் மிகுந்த வருத்தமடைந்தார். அருச்சுனனை அனுப் பினார். அருச்சுனனும் அந்தக் குரலைப் பொருட்படுத் தாமல் நீரில் இறங்கினான். இரு தம்பியருக்கும் ஏற் பட்ட நிலையே அவனுக்கும் ஏற்பட்டது. பெருவீரன் ஆகிய அருச்சுனனும் நீண்ட நேரம் ஆகியும் திரும்பா மையால் தருமர் மனம் கலங்கினார். தாமே சென்று பார்த்துவர எண்ணிப் புறப்பட்டார். இதற்குள் பீமன். “நான் போய்ப் பார்த்து அவர்களை அழைத்து வருகிறேன். நீங்கள் கவலைப்படாமல் இங்கேயே இருங்கள்” எனக் கூறிச் சென்றான்.
பீமன் அந்தக் குளக்கரைக்கு வந்தான். தன் தம்பியர் மூவரும் பிணம் போலக் கிடப்பதைக் கண்டான். ‘இவர்களுக்கு இந்தக் கதி எப்படி ஏற்பட்டது? யார் இப்படிச் செய்தவர்?’ என நினைத்து நாலாபக்கமும் பார்த்தான். நாரைகளைத் தவிர வேறு எவரும் அவனுக்குத் தெரியவில்லை. தண்ணீரைக் கண்டதும் நீர்வேட்கை மிகுதியாயிற்று. நீரைப் பருகிவிட்டு மேற் கொண்டு முடிவு செய்யலாம் என எண்ணிக் குளத்தில் இறங்கினான்.முன்போலவே அந்தக் குரல் அவனையும் தடுத்தது. மற்றவர்களைப்போலவே பீமனும் அதனைப் பொருட்படுத்தவில்லை வேட்கையைத் தணித்துக் கொள்ள நீர் பருகினான். உடனே அவனும் நிலத்தில் மரம்போலச் சாய்ந்துவிட்டான்.
நெடுநேரமாகியும் பீமன் திரும்பாததைக் கண்ட தருமர் பெரிதும் மனம் கலங்கினார். தம் தம்பிகளுக்குத் தீங்கு ஏற்பட்டுள்ளது என முடிவுசெய்தார். உடனே அவர் புறப்பட்டு அக் குளக்கரையை அடைந்தார். அங்குத் தம் தம்பியர் நால்வரும் மாண்டுகிடப்பதைக் கண்டு மனம் பதறினார். ‘எவ்வளவு பேர் எதிர்த்தாலும் எல்லோரையும் வெல்லும் திறன்மிக்க என் தம்பியர் இப்படிக் கிடக்கிறார்களே. இவர்களை யார் கொன் றிருப்பார்?இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது” என எண்ணினார். தருமர் ஒவ்வொருவரையும் பார்த்தார். எவ்விதக் காயமும் இல்லை. யாரும் போர் செய்து கொல்லவில்லை என அறிந்தார். இது துரியோதனனின் வஞ்சகச் செயலோ என எண்ணினார். தண்ணீரில் நஞ்சு கலந்திருப்பானோ? என ஐயம் கொண்டார். உடனே தண்ணீரில் இறங்கி ஒரு கை தண்ணீரை அள்ளி மோந்து பார்த்தார். உடனே ஒரு குரல், “தருமரே! உங்கள் தம்பியரை நான்தான் கொன்றேன். அவர்கள் என் சொல்லைப் பொருட்படுத்தாமல் எனக்குரிய குளத்தில்” இறங்கினார்கள். அதனால் அவர்கள் மாண்டனர். நீங்கள் என் கேள்விகளுக்கு விடை தாராமல் தண்ணீர் குடிக்கக்கூடாது. மீறினால் இவர்கள் கதியே உங்க ளுக்கும் ஏற்படும்” எனக் கூறியது.
“பேசுபவர் யார்?’ எனத் தருமர் உரக்கக்கேட்டார். “நான் ஒரு தேவன். நாரை உருவில் இருக்கிறேன். என் பேச்சைக் கேளாமல் தண்ணீர் எடுத்ததால் அவர்களைக் கொன்றேன். நீங்களாவது என் கேள்ளி களுக்குப் பதில் கூறுங்கள்” என்ற குரல் கேட்டது. உடனே ஒளியுடன்கூடிய அழகிய உருவமுடைய ஒருவன் தருமரின் முன்னே தோன்றினான்.
தருமர் அவனைப் பணிவுடன் வணங்கினார். “தேவா! எனக்குத் தெரிந்த வரையில் உங்கள் வினாக்களுக்கு விடையிறுப்பேன்” எனக் கூறினார்.
தேவன் : தருமரே! உயிர் வாழ்ந்தும் வாழாதவனாக எண்ணப்படும் மனிதன் யார்?
தருமன்: தேவா! தான் செய்யவேண்டிய கடமை களைச் சரியாகச் செய்யாத மனிதன் உயி ரோடு இருப்பினும் அவன் இறந்தவனாகவே கருதப்படுவான்.
தேவன்: பூமியைவிடச் சிறந்தவர் யார்?
தருமர் : தாயே பூமியைவிடச் சிறந்தவர்.
தேவன்: செல்வங்களுள் சிறந்தது எது?
தருமர் : மிகச் சிறந்த செல்வம் கல்வியே. தேவன் உயிரைவிடச் சிறந்தது எது?
தருமர்: ஒழுக்கமே உயிரைவிட மேலானது. தேவன்: செல்வன் யார்? ஏழை யார்?
தருமர்: போதுமென்ற மனம் உடையவனே செல்வன் ஆவான். மேலும் மேலும் வேண்டும் என்ற ஆசையுடையவன் ஏழை.
தேவன்: மனிதனுக்கு அடக்கமுடியாத பகைவன் யார்?
தருமர்: கோபம்தான் ஒரு மனிதனை அழிக்கும். அடக்க முடியாத விரோதி கோபம்தான்.
தேவன்: முடிவில்லாத நோய் எது?
தருமன்: பேராசை,
எல்லாவற்றிற்கும் தருமர் பணிவுடன் விடை சொல்லிக்கொண்டிருந்தார். அவர் கூறிய விடைகள் யாவும் அறிவுக்குப் பொருத்தமாயிருந்தன. தேவன் அவர் கூறிய விடைகளைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தான். தருமரது அறிவுக் கூர்மையைக் கண்டு வியந்தான். அவரது அடக்கம், அவனை மிகவும் கவர்ந்தது. எனவே, தருமருக்கு உதவி செய்ய விரும்பினான். “தருமரே! உங்கள் அறிவாற்றலைக் கண்டு நான் மகிழ்கிறேன். மற்றவர்களைப் போல இல்லாமல் நீங்கள் என் சொல்லைக் கேட்டீர்கள். எவர் சொல்லாக இருந் தாலும் அகனை ஆராய்ந்து பார்த்து உண்மை தெரிந்து கொள்ளவேண்டும். இதனை மறந்த உங்கள் தம்பியர் என் சொல்லை மதியாமல் மாண்டனர். நீங்கள் குரல் வந்தவுடன் அதனைக் கேட்டீர்கள். யார் பேசுவது? எனக் கேட்டு உண்மை உணர்ந்தீர்கள். மேலும் என் கேள்விகள் அனைத்திற்கும் சரியான விடையும் கூறினீர்கள். அதனால் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆகவே, உங்கள் தம்பியருள் ஒருவனை நான் உயிர் விழைக்கச் செய்கிறேன். யாரை நீங்கள் விரும்புகிறீர் களோ அவனது பெயரைக் கூறுங்கள்” என அருளுடன் கூறினான்.
தருமர் தேவனைப் பணிந்து, “நாங்கள் ஐவரும் இணைந்தே வாழ்ந்தோம். ஆகவே நீங்கள் அருள்கூர்ந்து தம்பியர் நால்வரையும் பிழைக்கச் செய்ய வேண்டும். உங்களைப் பணிந்து வேண்டுகிறேன்” என்றார். ஆனால் அத் தேவன், “தருமரே! அப்படிச் செய்ய இயலாது. எவரேனும் ஒருவரை மட்டுமே உயிர் பிழைக்கச் செய்யமுடியும். எவரைத் தாங்கள் விரும்பு கிறீர்கள்?” எனக் கேட்டான். தருமர் மிகவும் மனம் கலங்கினார். ஆயினும் ஒருவாறு மனம் தேறினார். சிறிது நேரம் சிந்தித்தார்.
“தேவா! தங்களின் கருத்து அப்படியானால், நான் என்ன செய்யமுடியும்? ஒருவனை மட்டுமே உயிர்ப்பிக்க முடியும் என்றால் நகுலனை மீட்டுத் தாருங்கள்” என்று கேட்டார்.
அத் தேவனுக்கு வியப்பு மேலும் மிகுதியாயிற்று. பெரு உடலோடு. இணையில்லாத வலிமையுடையவன் பீமன். அவனைக் கேட்பார் எனத் தேவன் எண்ணி யிருந்தான். இல்லையெனில் வில்லேந்திப் போர் புரிவதில் இணையில்லாத அருச்சுனனையாவது கேட்பார் எனக் கருதினான். ஆனால் அவர் நகுலனைக் கேட்டதும் தேவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தருமர் நிலை தடுமாறித் தவறாகக் கேட்டுவிட்டாரோ? என ஐயங்கொண்டான்.
எனவே, “தருமரே! அமைதியாகச் சிந்தித்துக் கேளுங்கள். உங்களுக்கு எந்தத் தம்பி வேண்டும்?” என்றான். மீண்டும் தருமர் உறுதியாக. ‘நகுலனை எழுப்பித் தாருங்கள்” என்றார். தேவனுக்கு வியப்புத் தாங்கவில்லை. தருமரை நோக்கி, ‘தருமரே! மற்போரில் நிகரில்லாமல் விளங்கும் பீமனை ஏன் நீங்கள் கேட்கவில்லை? தோல்வியே அறியாத வில்வீரன் அருச்சுனனையாவது கேட்டிருக்கலாமே? இவ்விரு வரையும் விட்டுவிட்டு நகுலனையா உயிர்பிழைக்க வேண்டுமென்கிறீர்கள்?” எனக் கேட்டான். ‘ஆம்’ என்றார் தருமர்.
‘உங்களுக்குப் பெருந்துணையாய் இருக்கக்கூடிய பீமனையும் அருச்சுனனையும் கேட்காமல் நகுலனைக் கேட்கக் காரணம் என்ன?’ எனத் தேவன் கேட்டான். தருமர் “தேவா! மனிதன் நேர்மையாக நடந்தால் அறம் அவனைக் காப்பாற்றும். அறம் தவறினால் அந்த அறமே அவனைக் கொன்றுவிடும். நான் அறத்தை மீறி நடந்தால் அதுவே என்னைக் கொன்றுவிடும். என் தந்தைக்குக் குந்தி, மாத்திரி என மனைவியர் இருவர். நாங்கள் இருவரையும் ஒன்றாகவே மதிக்கிறோம். நான், பீமன், அருச்சுனன் ஆகியேர் குந்தியின் மக்கள். நகுலன் மாத்திரியின் மகன். எங்களது இரண்டு தாய் மாரும் மக்களை உடையவராக இருக்கவேண்டும். குந்தியின் மகனாக நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்திரிக்கும் மகன் ஒருவன் உயிரோடு இருக்கவேண்டும். பீமனையோ அருச்சுனனையோ மட்டும் உயிர்பிழைக்கச் செய்தால் மாத்திரியின் மரபு அழிந்துவிடும். இஃது அறமாகாது. அதனால்தான் மாத்திரியின் மகனான நகுலன் உயிர் பிழைக்க வேண்டும் என வேண்டினேன்” என்று கூறினார்.
தன்னலமின்றித் தருமர் பேசியதைக் கேட்டவுடன் தேவன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான்; பெயருக்கு ஏற்றபடி தருமர் அறம் தவறாமல் இருப்பதை எண்ணி வியப்படைந்தான். அவரது நேர்மையான மனம். அவன் உள்ளத்தை உருக்கியது. “தருமரே! உங்கள் நேர்மையை நான் பாராட்டுகிறேன். எப்படிப்பட்ட துன்பம் வந்தபோதிலும் அறத்திலிருந்து தவறாத்வர் நீங்கள் என்பதைத்தெரிந்துகொண்டேன். பெரியோர்கள் எப்போதும் நேர்மை தவறமாட்டார்கள் என்பதை அறிந்தேன். உங்களைப் போன்ற நல்லவர்கள் சிலர் இருப்பதால்தான் நாட்டில் மழை பெய்கிறது. உங்கள் நேர்மைக்குப் பரிசளிக்க விரும்புகிறேன். உங்கள் தம்பியர் அனைவரையும் உயிர்பிழைக்கச் செய்கிறேன். அப்படி நான் செய்யாவிட்டால் நீங்கள் கடைப்பிடித்து வரும் அறமே என்னை அழித்துவிடும். உங்கள் தம்பியர் நால்வரும் உயிர்பிழைப்பார்கள். இவர்களுடன் நீங்கள் நீண்டநாள் நலமுடன் வாழ்வீர்களாக” என வாழ்த்துக் கூறினான்.
அப்போது பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகிய நால்வரும் தூங்கி எழுபவர்போல் எழுந்தனர்; நடந்ததைத் தருமர்மூலம் அறிந்தனர். தேவனை வணங்கி “எங்கள் குற்றத்தை மன்னிக்கவேண்டும். உங்களை யாரென்று தெரியாமல் புறக்கணிப்புச் செய்து விட்டோம். இனிமேல் இப்படித் தவறு செய்ய மாட்டோம். மூத்தோரது அறிவுரைகளைக் கேட்டு நடப்போம்” எனக் கூறினர். தருமர் தம்பியர் நால் வருடனும் தம் இருப்பிடம் திரும்பினார்.
‘நிலையில் பிரியேல்’ – ஆத்திசூடி
– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.
![]() |
புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
உயிர்காப்பான் தோழன்
ஸ்ரீ.தாமோதரன்
October 12, 2026
போலித் துறவி
புலவர் த.முருகேசன்
October 10, 2026
வறுமையில் செம்மை
புலவர் த.முருகேசன்
October 10, 2026
