முருகனும் கண்ணனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 3 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குன்றத்தூர் என்னும் ஊரில் முருகன், கண்ணன் என்ற சிறுவர் இருவர் இருந்தனர். இருவரும் உயர் நிலைப் பள்ளியில் படித்து முடித்தபின் வாணிகம் செய்தனர். ஒரு நாள் காலையில் இளைஞர்கள் இருவரும் பல்லாவீரம் என்னும் ஊரில் கூடும் சந்தைக்குச் சென்றனர். இருவரும் தங்களுடைய சிறிய கடைகளில் தாங்கள் கொண்டுபோன பொருள்களை எடுத்துவைத்து விற்பதற்காக உட்கார்ந்தனர். முருகன் தன்னுடைய கடையில் பழங்களும் காய்கறிகளும் வைத்திருந்தான். கண்ணன் தன் கடையில் தேங்காய்களை வைத்திருந் தான். இருவர் கடைகளிலும் பலர் பொருள்களை வாங்கிக்கொண்டு போனார்கள். 

முருகனுடைய கடையில் எல்லாப் பொருள்களும் விற்றுக் கடைசியாக ஒரு முலாம்பழம் மட்டும் மீதம் இருந்தது. மாசிலாமணி என்ற பெரிய மனிதர் ஒருவர் முருகனின் கடைக்கு வந்தார். அந்தப் பெரிய முலாம் பழத்தின்மேல் கையை வைத்தார். ‘இவ்வளவு பெரிய முலாம்பழமாக இருக்கிறதே! என்ன விலையடா தம்பி! என்று கேட்டார். 

“ஐயா எல்லாப் பழங்களும் விற்பனையாகிவிட்டன. இந்த ஒரு பழந்தான் இருக்கிறது. இது நல்ல பழம் போலத் தோன்றினாலும் இதில் கொஞ்சம் அழுகி இருக் கிறது ஐயா!” என்று சொல்லி முருகன் அந்த முலாம் பழத்தின் மறுபக்கத்தைத் திருப்பிக் காட்டினான். 

”ஆமாம், அழுகி இருக்கிறது; எனக்கு அந்தப் பழம் வேண்டாம்” என்று கூறிவிட்டார். பழம் வேண்டியதில்லை என்று சொன்ன பெரியவர் முருகனின் வஞ்சகம் இல்லாத முகத்தைப் பார்த்தார். “தம்பி, உன் பழத்தைப்பற்றி நீயே குறைகூறலாமா?” என்று கேட்டார். 

”ஐயா! ‘நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டா’ என்னும் நெறியைப் பின்பற்றியே நான் நடக்கிறேன். கற்றபடி நடக்காவிட்டால் படித்துப் பயன் என்ன?” எனப் பணிவுடன் கூறினான் முருகன். 

அப்பெரியவர், ”தன் நெஞ்சு அறிவது பொய்யற்க, என்றார் திருவள்ளுவர். வள்ளுவர் வாய்மொழிப்படி நீதியைக் கடைப்பிடித்து நடக்கும் உனக்கு ஒரு குறையும் ஏற்படாது. நீ உன் மனச்சான்றின்படியே நட.ஒரு பொழுதும் இதை நீ மறவாதே நான் இனிமேல் உன்னுடைய கடையை மறக்கமாட்டேன்” என்று கூறிச் சென்றார். அந்தப் பெரியவர் அடுத்திருந்த கண்ணனின் கடைக்குப் போனார். அங்குள்ள தேங் காயை விலை பேசினார். து என்ன நல் தேங் காயா? பால்பிழிய வருமா?” என்றார். 

“ஆம், ஐயா! நல்ல தேங்காய். நேற்றுத்தான் மரத்திலிருந்து பிடுங்கியது. நான்தான் உரித்தேன். வாங்கிக் கொண்டு போய்ப் பாருங்கள். இதற்காக நான் என்ன பொய்யா சொல்லப் போகிறேன்?’ என்று நயவஞ்சகமாகப் பேசி அவரிடம் தேங்காயை விற்று விட்டான். பெரியவர் அவன் பேச்சை நம்பித் தேங்காயை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் சென்றார். 

கண்ணன் முருகனைப் பார்த்து, “நீ என்னடா முழு மூடனாக இருக்கிறாயே! முலாம்பழத்தில் இருக்கிற குறையை நீயே எடுத்துக் காட்டலாமா? அவர் என்ன உன்னைக் கேட்டாரா? ‘எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பதுபோல நீயாக ஏன் முந்திக்கொண்டு சொன்னாய்? இனிமேல் இந்தப் பழத்தை யார் வாங்கப் போகிறார்கள்? நீ சொன்ன உண்மைக்காக அந்தப் பழத்தை வீட்டுக்குத்தான் சுமந்துபோக வேண்டும். இல்லையானால் எங்கேயாவது தூக்கி எறிந்துவிட்டுப் போ. நான் எப்படி அந்த அழுகல் தேங்காயை விற்றேன் பார்த்தாயா? அவர் என்ன அதைப்பற்றி அறிந்துவிட்டார்? நல்ல தேங்காய்களை விற்ற விலைக்குக் குறையாமல்தான் – அதனையும் விற்றேன். அந்த முலாம்பழத்தை ஒன்றும் கவனிக்காமலேயே அவர் வாங்கிக்கொண்டு போயிருப்பார். நீதான் சத்தியவான் போலப் பேசி வியாபாரத்தைக் கெடுத்துக்கொண்டாய்” என்றான். 

“கண்ணா! இன்று காலையிலிருந்து விற்று ச் சம்பாதித்ததே போதும். இதைப்போல இன்னொரு மடங்கு காசு கிடைப்பதாக இருந்தாலும் நான் பொய் சொல்லி ஏமாற்றிப் பொருள் சேர்க்கப் போவதில்லை. பிறரைக் கெடுத்துச். சம்பாதிக்க வேண்டும் என்னும் எண்ணம் எனக்கில்லை. 

“கற்றதன்படி வாழ்க்கையில் நடப்பதுதான் அறிவுடைமையாகும். வாணிகம் செய்பவர் பிறர் பொருளையும் தம் பொருள்போல நினைக்கவேண்டும். அதுதான் நடுவு நிலைமை ஆகும். அழுகல் காயை நெற்றுத்தேங்காய் என்று சொல்லி ஏமாற்றியதை நீ பெருமையாகப் பேசுகிறாய். நல்லவர்கள் மனம் வருந்தும்படியாக நாம் நடக்கக்கூடாது. உண்மையைப் பேசியதால் இன்று எனக்கு ஒரு வாடிக்கையாளர் கிடைத்தார். இனிமேல் அந்தப் பெரியவர் என் கடையிலேதான் பொருள்களை வாங்குவார். இனி அவர் உன்னுடைய கடைக்கு வரவே மாட்டார். இப்பொழுது நீ சிந்தித்துப் பார். யாருக்கு நன்மை. யாருக்கு இழப்பு என்பது தெரியும்” என்று முருகன் பதில் உரைத்தான். 

முருகன் கூறியதுபோலவே மறுநாள் அந்தப் பெரியவர் வந்தார். முருகனிடத்தில் தமக்குத் தேவை யான காய்கறிகளையும் பழங்களையும் வாங்கினார் தமக்குத் தெரிந்தவர்களிடத்தில் எல்லாம், “முருகன் கடையில் நல்ல பொருளாகக் கிடைக்கும்: விலையும் மலிவு. நான் அங்கேதான் வாங்கி வருகிறேன். நீங்களும் வாங்கிப் பாருங்கள் தெரியும்” என்று சொன்னார். அவர் கூறியபடி பலரும் முருகன் கடை யிலேயே பொருள்களை வாங்கினர். அதனால் முருக னுடைய வாணிகம் பெருகிற்று. 

பொய் சொல்லி ஏமாற்றிய கண்ணன் கடைக்கு அந்தப் பெரியவர் செல்வதே இல்லை. ஏனைய மக்களும் அவன் கடைக்குச் சென்று பொருள் வாங்குவது இல்லை. அதனால் அவன் நாளடைவில் வருவாய் இழந்து வருந்தினான். 

பெரியவர் மாசிலாமணி அவர்களுக்குச் சொந்தமான பண்டசாலை ஒன்று இருந்தது. அந்தப் பண்டசாலைக்கு உண்மையும் நம்பிக்கையும் உடைய ஒருவன் தேவைப் பட்டான். பெரியவர் மாசிலாமணி முருகனுடைய பண்புகளை நாள்தோறும் கண்டு வந்தமையால் அவனைத் தம்முடைய பண்டசாலையில் வேலைக்கு அமர்த்திக்கொள்ள நினைத்தார். முருகனிடத்தில் அவர் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். முருகனும் பண்டசாலையில் வேலைக்கு அமர விருப்பம் தெரிவித்தான். பண்டசாலையில் வேலையை ஏற்ற முரு கடைக்குவரும் அனைவரிடமும் இனிய முகத்துடன் இன்சொல் பேசி எல்லாருடைய அன்பையும் பெற்றான். பெரியவர் மாசிலாமணி முருகனின் உண்மை, நேர்மை, உழைப்பு ஆகியவற்றைக் கண்டு மகிழ்ந்தார். சில ஆண்டுகளுக்குப் பின் பெரியவர் முருகனைப் பண்டசாலையில், ஒரு பங்காளி ஆக்கிக் கொண்டார். முருகன் பேரும் புகழும் பெற்றுச் செல்வச் செழிப்புடன் இனிது வாழ்ந்தான். 

“உண்மை உயர்வளிக்கும்.” 

”வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் 
பிறவும் தமபோல் செயின்
” – திருக்குறள் 

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *