கிழவர் பழுத்துவிட்டார்
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 164
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

முள்ளுக்கம்பி வேலிக்குள்ளே சிறை வைக்கப்பட்டது போலக் கிடக்கிற இந்த அகதி முகாம் வாழ்க்கை வேலுப் பிள்ளைக்கு இப்ப வாச்சரியான சோகமாகிப் போச்சு. இந்தவயசுபோன காலத்தில தன்ர தேப்பனுக்குக் தேப்பனா அவரப் பாத்துப் பராமரிச்சுக் கொண்டிருந்த வளர்ந்த ஒரு குமர்ப் பிள்ளையான அந்த ஒருத்தியும் வன்னிப்பக்கம் விழுந்த செல்லடியில கழுத்தறுந்து செத்துப் போயிட்டாளே. அந்த அதிர்ச்சியில உறைஞ்ச ரெத்தம் இப்பவும் குங்குமக்கட்டி மாதிரி இவரிண்ட நெஞ்சில ஒட்டின மாதிரிக் கிடக்கு.
“இன்னும் தனக்கு என்னென்ன சூறாவளி இப்படியா வந்து சுத்தப் போகுதோ….?” – எண்டதுதான் இதுக்குள்ள நாளும் பகலுமா அவருக்கு இருக்கிற பெரிய்ய மனக் கவல…
இந்தப் பத்தடித் தறப்பாழ்க் கூட்டுக்கிள்ள வெக்கைக்குள்ள கிடந்து கொண்டு தங்கட சீவியத்த நினைச்சு நினைச்சு அழுகாத சனம் பாக்கியில்ல. எல்லாரிண்ட அழுகிற சத்தமும் கேக்குது அவருக்கும்! சிலதுகள் அழுதழுது சொல்லியழுகிற ஒப்பாரிகளும் விழுகுது அவருக்குக் காதில!
உயிருக்குப் பயந்து ஓடி ஓடித்திரிஞ்சு மெலிஞ்சுஉசிர் வத்தினமாதிரிப்போன சனங்கள்தான் இதுக்கிளயா இப்ப இருக்கிற சனங்கள். தொற்றுநோய் வருத்தம் வந்து கோழி பொம்மிக் கொண்டு திரிஞ்சு செத்துப்போற கணக்காத்தான் இந்த அகதிமுகாமுக்கயும் வன்னிச் சனங்கள் வருத்தம் வந்து சாகுதுகள். பிணமாப் போன அந்த மனுசரப் பாத்துக்கொண்டு இதுக்குள்ள உசிரோட இருக்கிறதுகள் பேச்சு மூச்சேயில்லாமல் கவலையோட கிடக்குதுகள். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஆள் செத்த அடையாளமே இல்ல..காம்புக்குள்ள பிணத்தவிடுவாங்களே? கொண்டுபோயிற்றாங்கள் செத்துப்போன பிணத்த.
“தானாடாவிட்டாலும் தன்ரைசதை ஆடுமெண்டு சொல்லு வாங்களேயப்பா…”
தன் ஊர்ச் சனம் இப்பிடி ஆடுமாடுகள் செத்தமாதிரிச் சாக, வேலுப்பிள்ளைக்கும் மனசப் போட்டுப் பிழிஞ்செடுக்கிற மாதிரிப் பெரிய கவலைதான்! எண்டாலும் இந்த அநியாயமெல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் தெரியும் ! அவர்தான் இதுக்கொரு நீதியக் கேக்க வேண்டுமெண்டு போட்டு அவர் மனம் கொறிச்சாலும் பேசாமல் இருந்து கொள்ளுறார்.
இண்டைக்கு மங்கலாயிருந்த மத்தியானத்துக்குப் பிறகு மேகம் ஒரு மாதிரியாக் கறுத்து இறங்கிக்கீழ வந்த மாதிரிக் கிடக்கு. “இதென்னப்பா இது கோலம்? நாங்க இருக்கிற கேட்டுக்கு மழையும் வந்து பிளந்து கட்டப்போகுதோ..?” எண்டு சனங்களெல்லாம் வெட்டுக்கிளிக்கூட்டம் மாதிரி குமிஞ்சு நிண்டு கொண்டு வானத்தையே பரிதாபமாப் பாத்துக்கொண் டிருக்குதுகள். மழை பெஞ்சு பள்ளத்துக்க வெள்ளம் நிண்டமாதிரி சேறாப் போனா தட்டத் தரையிலயும் இதுக்கிளயெல்லாம் மனுசர் இருக்கேலாது… படுக்கேலாது மாதிரியா உள்ளதும் போயிடுமே.. மழைக்கு வேற எங்கயும் இதுக்க ஒதுங்க நிக்க ஒழுங்கா ஒரு இடமுமில்லையே? தலைவலி காய்ச்சல் எண்டு கிடக்கிறதுகள் இதுகளுக்க பிறகு படுத்துக்கிடக்கேலுமோ..? மழையிக்க நனைஞ்சாப்பிறகு சன்னியாக்கியும் போடுமே….?
ஆண்டவனே ஆண்டவனே..எண்டுமேகத்த விரட்டி அடிக்கிற மாதிரியா அதுகளெல்லாம் சொல்லித் தவிச்சிக் கொண்டு நிண்டாலும் மேகங்களொண்டும் கலைஞ்சு போகேல்ல. அதக் கலைச்சுவிடுறதுக்குக் காத்தும் ஒழுங்கா வீசேல்ல. எங்கயும் ஒழிஞ்சு ஓட்டமா ஓடாத கணக்கில் அடிச்சுக்கொண்டு இறங்கி வந்திட்டுது பேந்து ‘கடகட’வெண்டு கொட்டுற பெரிய மழை…..” இந்த வெட்ட வெளியான ஒரு இடத்திலயா மழையும் காத்தும் ஆதிக்கம் செலுத்தினா எப்புடியிருக்கும்? அதை யெல்லாம் வாயால எப்பிடிச் சொல்லேலும்? தாய்மாரெல்லாம் அழுகிற கண்ணக் கசக்கிக்கொண்டு பிள்ளையளத் தூக்கிவைச்சுக்கொண்டு தார்ச் சீலைக்கொட்டிலுக்க நடுங்கிக்கொண்டு நிக்குதுகள். வகுத்துப் பிள்ளைக்காறியள் ஈரக்குலையை அறுக்கிற நனைஞ்ச அந்தக் குளிரோட கிடந்து நடுங்கிக்கொண்டிருக்குதுகள். அரைப்பிள்ளையை வகுத்துக்க வைச்சுக் கொண்டு இப்பிடியா அதுகளுக்கு ஒரு கஷ்டம். நனைஞ்ச வயிறு தெரியுதேண்டு சீலைய இழுத்து மறைச்சுக் கொண்டு அந்தப்பிள்ளை நிக்குது பாவம். முதல் அடிக்காத காத்து இப்பச்சுளீர் சுளீரெண்டு சுழட்டிச் சுழட்டி அங்காலயும் இங்காலயுமா பேய்மாதிரி அடிக்குது. உடம்பு தெம்புபலம் இல்லாம குளிரில் நடுங்கினபடி… ஆளையாள் பாத்துக்கொண்டு அழுகை அழுகையா வர “இப்பிடி ஒரு விதிய எங்கட தலையிலயும் எழுதீட்டியா கடவுளே” எண்டு சொல்லி அதுகள் கடவுளையும் திட்டுதுகள். இருக்க ஒரு கூடும் இல்லாத மாதிரியாப் போய் இப்பிடிக் கிடந்து நாங்கள் கஷ்டப்படுகிறமே எண்ட கவலை அதுகளுக்கு! ஆனாலும் இதுக்குள்ள சிலதுகள் கண்ணீரும் வருத்தமுமாய்ப்பட்டு இவ்வளவு நாளும் உறைஞ்சமாதிரி போனதிலை மனதில் வைராக்கியம் முத்தினதாகவும் நிண்டு கொண்டிருக்குதுகள். பழைய கஞ்சியெண்டு எதக்கிடைச்சாலும் பசியப்பிடிச்சுவைச்சுக் கொள்ளுறதுக்கு மளமளவெண்டு குடிச்சுப்போட்டு அதுகள் பேசாம இருக்குதுகள் இப்ப.
அடிச்சகாத்து சுத்தி விட்டுப் போன மாதிரிப் போனாப் பிறகு, உறைச்சுப் பெஞ்சுகொண்டிருந்த மழையும் நிண்டுபோச்சு. வேரோட பிடுங்க இதுக்க ஒழுங்கான மரமில்லாத இந்த இடத்தில் விசிறி அடிச்சமாதிரி வீசின கடுங்காத்து தறப்பாள்ச் சீலையள கிழிச்சுச் சுருட்டித் தூரவா எறிஞ்சு போட்டுப் பிறகு போயிற்ருது.
வறுத்தெடுக்கிற வெயிலுக்க வேர்த்து விறுவிறுக்கக் கிடந்து இந்தக் கூடாரங்களில நாங்க சுக்காக் காஞ்சு போனாலும் பறவாயில்லக் கடவுளே! ஆனா இந்த மழை தப்பியும் இனிவர வேண்டாம். தள்ளியும் இனிவரவேண்டாம். எப்பவுமே வேண்டாம்! எண்டு எல்லாச் சனங்களும் வாயால் சொல்லிக் கொள்ளுதுகள். மழையில நனைஞ்சு குளிர்க்காய்ச்சல், மார்ச்சளி பிடிச்சதுகளெல்லாம் முகாமுக்குள்ள நடத்திற வைத்தியசிகிச்சைப் பிரிவுக்குப் போகுதுகள் மருந்துவாங்க… ஊரில அங்க வன்னிப் பக்கம் இருக்கேக்க சுண்டு வலி, முதுகுவலி கூட வந்ததில்லச் சிலதுகளுக்கு….. இப்ப இதுக்க கிடந்து படுறபாட்டில் மாரில் நெஞ்சுவலி எண்டு கொண்டு மருந்தெடுக்கப்போகுதுகள் கீயூவில.
வேலுப்பிள்ளைக்கும் நெஞ்சில கொஞ்சம் சளி வருத்தம் தான்…..அகதி முகாமில இருக்கிற சனங்களெல்லாத்தையும் ஒண்டா உரிமை கொண்டாடுற வருத்தம் இந்தச் சளிவருத்தம் தான். அது வேலுப்பிள்ளைக் கிழவரையும் பிடிக்காம சும்மா விட்டுடுமா? அவரும் நெஞ்சுச்சளியைக் காறிக் காறி ஒரு எத்து எத்தி வேலிப்பக்கமாய்ப் போய்த் துப்பிப் போட்டுவந்து, பேந்து மூலையெல்லாம் இடமில்லாம ஊத்தை பிடிச்ச வேட்டிய மடிச்சுக்கட்டிக் கொண்டு, உள்ள சேற்றுப்பகுதி இடமெல்லாம் அங்காலயும் இங்காலயுமா நடந்து கொண்டிருக்கிறார்.
பூமி குளிரப் பெய்த அந்த மழையோட அவருக்கு இப்பவாத் தன்ரைவயல் ஞாபகம் ஊர் ஞாபகம் வந்திட்டுது. கண்ணுக்கெட்டின தூரம் மட்டும் பறந்துகொண்டிருக்கும் காக்கா குருவியள அதுக் குள்ளயா நடந்தபடி வெறிச்சு வெறிச்சு உத்துப் பார்த்துக் கொண்டு அதையே அவர் யோசிக்கிறார்.
தான் விதைச்ச நெல்லு வெள்ளாமைக் காடுகள் பிணம் எரிக்கிற சுடுகாடுமாதிரி இண்டைக்கு ஆகிப் போச்சே எண்டுற கவலையள் இருதயக்கூட்டில அவருக்கு…. நாத்து நட்டாப்பிறகு நிறுத்தி வைச்ச மாதிரி தளதளவெண்டு மலர்ந்து மலர்ந்து பச்சப் பசுமையா வெல்லே அந்த அவற்ற வயல் முழுக்கவாப்பாக்க இருக்கும். அந்தப் பயிர் முளைச்ச வயல்களப் பாக்கப்பார்க்க அவருக்கு எவ்வளவு ஆச…ஆச! அந்த விதைச்ச வயலுகள் ஒழுங்கா விளைஞ்சு பிறகு வீடு வந்து சேந்திட்டா ஆறாள் பத்தாள் கூட அவரிண்ட வீட்டில வருசம் முழுக்க இருந்து சாப்பிட்டுத் திண்ணயில படுக்கேலுமே.
வீட்டில நிக்கிற அவரிண்ட பசுக்களும் நாம்பன்களும் தலையைத்தூக்கிப் பாக்காமத் திண்டு கொண்டிருக்கிற அளவுக்கு வைக்கோலும் பிறகு கிடக்குமே வளவுக்க. கோவணத்த இறுக்கிப் பின் அருணாக்கொடியில செருகிக்கொண்டு இவ்வளவு நாள் வயலுக்க நிண்டு தனியவாக்கஷ்டப்பட்டதெல்லாம் அவருக்குப் பிறகு கொஞ்சநாளுக்கு அப்பவா இல்லாமலாப் போயிடுமே.
அதுக்குப் பிறகெல்லாம் அவர் எப்படியாயெல்லாம் நல்ல சந்தோஷமா வீட்டில் நிம்மதியா சீவியத்தப் போக்காட்டுவார். நல்லாச் சாப்பிட்டுக் குடிச்சு ஒரு அலுப்பு வந்தா பகலிலயும் அவர் படுத்துக்கொள்ளுவார். பொழுதுபட்டா மேல் நனைஞ்சுகுளிர தண்ணியூத்திக் குளிச்சு அது முடிய வீட்டுத்திண்ணையில அவர் கால் நீட்டி உக்காந்து கொண்டு புத்தகமும் படிப்பார்… இப்படியா அங்கினேக்க வாழ்ந்து எல்லாச் சுகத்தையும் அனுபவிச்சவர் தானே அவர்.
ஆனா அவர் உழுத அந்த வயல் உள்ள பூமிக்கிளயெல்லாம் பிறகு மனித இரத்தம் கடுஞ் சிவப்பாக் கசியுமெண்டு அவர் கனவிலகூடக் கண்டாரா? யுத்தம் எண்டு ஒண்டுவருகிறதாலதான் விபரமொண்டும் அறியாத அப்பாவியான சனங்களிண்ட சீவியங்களெல்லாம் பாழாய்ப் போறது… எண்டு அப்பிடியெல்லாம் அங்க நடந்த பிறகால தானே அவர் தன்ர அனுபவத்தில் கண்டு கொண்டார். இந்த வேதனையான காட்சிகளையெல்லாம் பிறகு அவர் கண்டு கொண்டபடி யாலதானே அவர் நெஞ்சப் பிடிச்சுக் கொண்டு இப்படியெல்லாம் யோசிக்கத் தொடங்கினார்.
காடுகரையெல்லாம் அங்கங்க ஊடுருவி ஆமி வருகுது எண்டு சொல்லிக்கொண்டு கையில எடுக்கக் கூடியதுகள சனம் எடுத்துக் கொண்டு தங்களக் குப்பை கூட்டித் தள்ளின மாதிரியா ஓட, இவரும் தான் அதுகளுக்குப் பின்னாலேயே அந்தநேரம் ஓட்டமும் நடையுமாய் ஓடினார்….களைக் கொத்தெடுத்துச் சுரண்டியெறிற மாதிரியா அப்பத்தான் அவர் தன்ரவீடு வாசலாலே அவர் வெளிக்கிடுத்தி விடப்பட்டார். முழங்கால் தண்ணீருக்கையும் இடுப்பளவு கழுத்தளவு தண்ணிக்குமேலயும் இறங்கி நடந்து கரை யேற அவர் என்ன மாதிரியான பாடெல்லாம் அப்ப பட்டார்… பூமியும் பிழைப்பும் அப்பத்தைய அந்த நாளோடுதானே அவருக்குப் பாழாய்ப் போன மாதிரி அழிஞ்சு போச்சுது.
மூண்டு அறையாத்தடுத்திருக்கக் கட்டிவைச்ச பெரிய கல்வீடு டெல்லே இவருண்ட வீடு…அவர் சிறுகச் சிறுகக் கட்டிக்கட்டிப் பெரிசாக்கின வீடு அந்தக்கல்வீடு. உள்வீட்டு அறைக்கதவிலயிருந்து எல்லா அறைக்கதவுகளுக்கும் அவர் போட்டிருந்த பலகதிறம் வேப்பம் பலக.
பின்கதவத் திறந்தா செடிசெத்தையெல்லாம் செருக்கி அவர் வைச்சிருந்த திறந்த வெளியால இருந்து குப்பெண்டு அடிச்ச மாதிரி அறைக்கிளயா நல்ல காத்து வரும். வளவைச் சுற்றி முள்ளுக்கம்பி அடிச்சு கிளுவையும் கறி முருங்கையும் அதுவழிய போட்டதான் அந்த உயிர் வேலியோட வீட்டுக்கும் அது நல்ல ஒரு மறைப்புத்தானே!
அதெல்லாம் இப்ப அங்கினேக்கயா இருக்குமோ இல்லையோ? எல்லாம் துலைஞ்சது மாதிரி இப்ப அந்த வீடும் செல்லடியில் தாறுமாறாச் சிதறிப் போயிருக்குமோ..? நினைக்க நெஞ்சுக்கதவை அடைக்கிறமாதிரி வருகுது அவருக்குச் சோகம். அந்தச் சோகத்த மனத்தில் இருந்து விலக்கிக் கொள்ளாத அளவுக்கு அவருக்கு கண்ணீரும் இப்ப வருகுதே.
கண்ணால இருந்து நீர் சொட்டச் சொட்ட அவர் அந்த முள்ளுக் கம்பி வேலிக்கு வெளியால தூரவாய்ப் புல் மேய்ஞ்சு கொண்டிருக்கிற மாடுகளப் பாக்கிறார். தன்ர வீட்டு மாடு கண்டு களிண்ட நினைவுகள் இப்ப சூடுபிடிக்கவாப் புத்தியில அவருக்கு ஓங்கி உறைக்குது… அவர் வீட்டை விட்டு வெளிக்கிட்டு புத்திதடுமாற்றத்தில் ஓடின அண்டைக்கு பட்டியில அடைச்சுக் கிடந்த பசு மாடு கண்டுகளையும் வெளியால போக விடவா அவர் திறந்து விடேல்லயே?
“ஷெல் அடி விழ விழ அந்தப் பசுமாடு கண்டுகள் அதுக்க கிடந்து என்னா கத்துக் கத்திச்சுதோ பாவங்கள்.” அதுகளப் பட்டியில் இருந்து அவிட்டுக்கலைச்சுவிடாத பழிபாவம் தான் இப்ப எனக்கு வந்து இப்பிடி முள்வேலிக் கூட்டுக்கிள்ள கிடந்து கஷ்டப்படுறதா ஆயிட்டுதோ?
இந்த எல்லாக் கவலையளும் அவருக்கு தொண்டைக் குழியில நிக்கிறமாதிரி தட்டிக் கொண்டு நிக்குது. ஆனாலும் தன்ரகவலயள உசத்திப் பிடிச்சுக் கொண்டு, ஆருக்கு அவர் இதுகளைச் சொல்லி இங்க அழலாம்? இளந்தாரி வயசுக்கு ஏற்ற வளத்தியில்லாமல் குரும்பையா இருக்கிற பெடியள் பெட்டையளயே இதுக்கிள்ள வாறவங்கள் சிலபேர் உருட்டி உருட்டிப் பாத்துப்போட்டுக்கூட்டிக்கொண்டு போயிடு றாங்கள். அப்பிடியா ஒரு இழவு வீடாவே சீச்சிஎண்டு சொல்லுற அளவுக்கு இந்த அகதி முகாம் இருக்கு. இதையெல்லாம் பாத்து நெஞ்சில காரமுள்ளும் – சூரமுள்ளும் – கள்ளி முள்ளும் சேர்ந்து ஒண்டாக் குத்தினதுமாதிரி சனங்கள் வேதனையில் கிடந்து வதைபட்டுக் கொண்டிருக்குதுகள். தங்கட பிள்ளயள் பலிக்கடாவாப் போயிருங்களோ வெண்டு நினைச்சு சில தாய் தேப்பன்கள் கிடந்து அழுது புலம்பினபடி இருக்குதுகள். இப்பிடியான அதுகளிண்ட பெரிய பெரிய துன்பக்கதையளுக்க இவர் தன்ரகதைய ஆருக்கும் சொல்ல வெளிக்கிட்டா அதையெல்லாம் ஆர்தான் தங்கட காதுகளில பெரிசா இதுக்குள்ள எடுக்குங்கள்.
இந்தக் கடைசி யுத்தம் குடுத்து விட்டுப்போன கொடுமையளப் பார்த்தா அதில் தங்கட அப்பன் செத்துப் போட்டானெண்டு சிலதுகள் சொல்லி அழுகிறதாயிருக்குதுகள், சில பெம்புளயள் கட்டினவன் செத்துப்போயிட்டான் எண்டு செத்தசவம் மாதிரித் திரியுதுகள். தாய் தகப்பன் செத்துப்போச்சு பிள்ளைகள் செத்துப் போச்சு எண்ட சாவிண்ட மூஞ்சிகள தங்களிண்டமுகத்தில வைச்சுக்கொண்டு சீவிக்கிறதாய் எத்தின சனங்கள் இப்ப இதுக்க இருந்து கொண்டிருக்கிதுகள். இதுகளுக்கெல்லாம் ஆரும் தெம்பு திறம் சொல்லி மனச் ஆத்தேலுமே? இதுகளெல்லாம் இழப்புக் குடுத்த அந்த நேரத்திலதுடங்கி உசிர்கிழிய ஓங்கிக்கத்திக்கத்தி இப்பவா உடம்பு வழிய உசிரு ஏதும் இல்லாதது மாதிரித்தான் இருந்து கொண்டிருக்குதுகள்.
இதெல்லாம் சிலமாதங்களுக்கு முதல் நடந்து முடிஞ்சு துலைஞ்சு கெட்டுப் போச்சுத்தான். ஆனாலும் எப்பத்தைய வருஷத்துக்கும் எங்கட சாதிசனத்தாலும் மறக்கவே முடியாதகதயள் தானே இதுகள் எல்லாம். இனிமேல் இந்தச் சனத்துக்குப் பிறக்கப்போற பிள்ளைகளாலும் இது மறக்க முடியாத கதயாத்தான் இதெல்லாம் நெடுகவா இருக்கும் போலப் பாக்கக்கிடக்கு. இதெல்லாம் எங்களுக்கு நடந்தது என்ன விதியோ? என்ன தலையெழுத்தோ? இல்லாட்டி ஆர்எவர்செய்து விட்டுப்போன பழி பாவமோ தெரியாது! உமியப் புடைச்சுச் சுளகால தள்ளின மாதிரி எல்லாமே தூசியாய்ப் பறந்து போனமாதிரித்தானே உள்ள உசிருகள் உடமைகளெல்லாம் இப்ப இந்தச் சனங்களுக்கு துலைஞ்சு போன கணக்கா ஆச்சு.
இனிமேல் இதுக்குள்ளாலயா இருந்து நான் வெளிய வெளிக் கிட்டு என்ர இடத்துக்குப் போனாலும் அங்கின ஆள் இல்லாத ஆனாதிக் காட்டில ஒத்தப் பாதையில நான் தனியப் போறமாதிரித்தானே முடிஞ்சு போகும் போல. இப்படியாத்தானே இவங்களெல்லாம் சேந்து எங்களக் குத்திக் குத்தி ரெத்தம் ஒழுக விட்டமாதிரிச் செய்திருக்கிறாங்கள்.
இந்தக் கெடுவெல்லாம் வந்து கேடு கெட்டதால் உண்மையாவே செத்துப்போனா என்ன எண்டது மாதிரித்தானே மனம் எங்களுக் கெல்லாம் இப்ப வெறுப்பா இருக்கு?
ஆனாலும் என்ன எங்களுக்கு ஆர் இப்பிடிகொடுமையள் செய்தாலும் எங்களிட்ட இருக்கிற இந்த மனத்தைரியம் மட்டும் எப்பவுமே எங்களுக்கு இனிக் குறைஞ்சு கெட்டுப் போகாது. நாங்கள் சாப்பிடாமக்கிடந்தாலென்ன? அங்கபோயும் எங்ளிண்ட வயல நாங்கள் உடன உழ ஏலாமக்கிடந்தாலென்ன? பெத்தபிள்ள இல்லாட்டியென்ன? ஒரு பிழைப்பில்லாமலா போனால் தான் இனி யென்ன?- போய்த்துலைஞ்சதுகள் இனிமேலயா போய்த் துலைஞ்சதா யிருக்கட்டும்.
“ஆனாலும் ஒண்டு! எங்களிண்ட மனசில பச்சை குத்திவிட்டுப் போன மாதிரியா உள்ள இந்த நினைப்புகள் எப்பவுமே எங்கட சனத்துக்கு இனி அழியவே அழியாமல் ஆயுசுபரியந்தம் மட்டும் இருக்கத்தான் போகுது… நாங்க எந்த இடத்தில் இருந்தாலும் அந்த ஞாபகம் எப்பவும் எங்களுக்குச் சாகவே ஒரு நாளும் சாகாது…” என்று அதையெல்லாம் நினைக்க நினைக்க தன்னிடமிருந்து எழுந்து வந்த அழுகை நிற்க வில்லை வேலுப்பிள்ளைக்கு. தன் கண்ணை விட்டுத்தவ்வி வந்த கண்ணீர்த் துளிகளின் வழிவை இரண்டு கைகளாலும் அவர் நடை நடந்துகொண்டு தானே பிறகு துடைத்தும் கொண்டார். அவ்வேளை நெஞ்சுக்குள்ளே அவருக்கு சுத்தமான அக்கினி சுவாலித்து எரிவதுபோலவும் இருந்து கொண்டிருந்தது.
(ஜனவரி 2010)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
ஆசிரியர் அளித்த அற்புதம்
இரா.கலைச்செல்வி
October 6, 2026
மேலோர்
ஜூனியர் தேஜ்
October 6, 2026
