பிரிவின் கண்கள்
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 157
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சிங்கப்பூரில் பெரும்பான்மையாகத் தமிழர்கள் வாழும் ‘லிட்டில் இண்டியா’ என்கிற இடம்தான் அது. அந்த இடத்தில் வானை உதைப்பதுபோல உயரமாய் நிற்கும் பல கட்டடங்களுக்கு அருகே இருக்கிறது அந்தப் பார்க்.
ஞாயிற்றுக்கிழமை நாட்களிலே சனநடமாட்டத்தினால் அந்தப்பார்க் நிரம்பிவழியும். பின்னேரமாய் அந்தப் பார்க் இருக்கும் பக்கம் போனால், கண்களால்மறக்கமுடியாத காட்சிகளும் பார்க்கக் கிடைக்கும்.
திங்கள் முதல் சனிக்கிழமை வரையான உழைப்பில் மாஞ்சு மாஞ்சு உடம்பை ஒடுக்கிக்கொண்ட இந்தியத் தமிழர்கள் இந்த இடத்திலேதான் வந்திருந்து ஆறுவார்கள். நண்பர்கள் உறவினர்களை அந்த இடத்திலே வரவழைத்துச் சந்தித்ததும், இருந்த விரக்தி மறைந்து ஒரு சுறுசுறுப்பும்பிறந்து விடும் அவர்களுக்கு. கதையில் ஒரு கல கலப்பு டன் சிரித்துக் கொண்டு முகமகிழ்ச்சியாய்ப் பிறகு அதிலே இருந்து கொண்டிருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமையென்றால் சாதாரணம் மீறிய அளவிலே அவர்களுக்கு, அன்றைய செலவும் இருந்து கொண்டிருக்கும். மதுப் புட்டிகளையும் வாங்கிக் கொண்டுவந்து அந்த இடத்திலே இருந்து உல்லாசமாக அவர்கள் குடிப்பார்கள். வெறி ஏறஏற ஆகாயத்தை தாங்கள் எப்படி சுண்டுவிரலால் தொடுவது என்கிறமாதிரியும் அவர்களுக்குக் கற்பனை சிறகடிக்கும். தாங்கள் மாதா மாதம் வாங்குகிற சம்பளப்பணத்தை. சேமித்து, அதை எவ்வாறு பிறந்த மண்ணிலே கொண்டுபோய் விதைவிதைத்த மாதிரி ஒழுங்காக ஏதாவது சொந்தத் தொழில் செய்து பயிராக்கிப்பழமறுப்பது என்பன போன்றவற்றை யெல்லாம் தங்களுடன் இருந்து கொண்டிருப்பவர்களுடன் யோசனை பண்ணி அவர்கள் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
இருட்டுப்பட்டாலும் மின்சார விளக்குகள் அவர்களுக்கு அதிலே இருந்து கொள்வதற்கு நேரத்தை வளர்க்கும். ஆணின் கண்களுள்ள வேறே மாதிரியான பெண்களும், அதிலே இருந்து சில ஆண்களுடன் உல்லாசமாகக் கதைத்துக் கொண்டிருப்பார்கள்.
இரவு வேளை மின்சார வெளிச்சம் குறைந்த இந்தப் பார்க்குக்குள் இங்கேயே தங்கிப் போனதாய்த்தான் பலர் இருப்பார்கள். எதையாவது சாப்பிடவென்று வாங்கிவந்து அதிலே வைத்துச் சாப்பிட்டுவிட்டு, அங்கேயே பிறகு படுத்து நித்திரை கொள்பவராகவும் பலர் இருப்பார்கள்.
அப்படியாக இந்த ஞாயிற்றுக்கிழமை நாளிலே அவர்களுக்கு எந்தவித அவசரமும் இருப்பதில்லை. அந்த இடத்தில் அமைதியாய் மின்சார விளக்கு வெளிச்சம் பார்த்துக்கொண்டு, மனஅலை அடங்க அவர்கள் மௌனமாகி விடுவார்கள்.
இப்படியொரு சுதந்திரமான மனித வாழ்க்கைக்கு சிங்கப்பூரும் ஒரு சிறந்த நாடுதான்.
இந்த நாட்டுக்கு நான் வரமுதல் இந்த இடத்தைப் பற்றி பலரும் எனக்குச் சொன்னது ‘கரெக்டா இருக்கிறதா? என்பதையும் நான் இங்கே வந்ததும் நேரில் கண்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளவேண்டுமே?’
சிங்கப்பூருக்கு நான் வந்த அன்று முன்னமே நான் ஒழுங்கு செய்திருந்த அந்த அடுக்கு மாடிக் கட்டடத்தில் உள்ள அறைக்கு ஒரு மாத காலம் தங்கி இருக்கவென்று வந்திருந்தேன்.
நான் விமான நிலையத்திலிருந்து அங்கே வந்த நேரம் இருட்டுப் பட்டதுமாதிரியான ஒரு சமயம்தான்!
என் உடுப்புப் பெட்டியை உள்ளே அறையில்வைத்து வெளிக் கதவைப் பூட்டி விட்டு, முன்னாலுள்ள வெளி ஓடை விறாந்தையில் நின்றபடி உயரத்திலிருந்து கண்ணுக்குத் தெரிந்த நகரத்தைப் பார்த்தேன்.
அந்த இருபத்தோராம் மாடி விறாந்தையிலே நான் நின்றபோது, ஜில்லென்ற காற்று என்மேல் பட்டுக் கொண்டிருந்தது. என்னைப் பிரயாணக் களைப்பிலிருந்து விடுதலையாக்கி, உடம்போடு என்னைத் தேவலோகத்துக்குக் கொண்டுபோவது போல் இருந்தது.
வர்ணமின்சார விளக்குகளுக்கு ஒரு பாஷையுண்டு. அதற்கும் மணமில்லாத ஒரு மலரைப் போல பேசுவதற்குத் தெரியும். இருளின் திறந்தவாய்க்குள் அணைந்து ஒளிகாட்டும் அதன் தன்மையை ஒரு தினுசாய்ப் பார்த்துக் கொண்டு நான் அப்போது யோசித்தேன். ” நீ பார்த்துக் கொண்டிருக்கிற இந்த இடம் பெருதாகிக் கொண்டு வருகிறது – பார்! – பார்!-”
என்று என் கண்களுக்குத் தெரிந்த இடத்தையெல்லாம் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தது அங்கங்கே நெருங்கிக் கிடந்ததாய் ஒளி விட்டுக் கொண்டிருக்கும் வெளிச்சங்கள். “இந்த மாடிக்கட்டிடத்தி லிருந்து என்னைப்பிடித்துக் கீழே யாரும் தள்ளி விட்டு விடு வார்களோ……?”. காரணம் புரியாமல் ஒரு நினைவு வந்து பக்கத்தில் உள்ள இரும்புக்கம்பியை நான் இறுக்கிக் கைகளால் பிடித்துக் கொண்டேன்.
“நான் யாரையும் என்வாழ்க்கையில் இதுவரையில் எந்தப் பள்ளத்திலும் தள்ளிவிட்டு மாய்த்த அளவுக்குச் செய்ததில்லையே? அப்படியாக இருக்கும் போது என்னையாரும் பிடித்துக் கீழே இப்படித் தள்ளி விடுவார்கள் என்று நான் ஏன் பயப்பட வேண்டும்..?”
நெருப்பை வைத்தாற் போல ஏன் எனக்கு இந்த நினை வெல்லாமே நிலைத்திருக்கிறது………
“ஓஹ். ஹோ”
இன்னும் என் மனதில் மடிமடியாய் விழுந்துகிடக்கும் யுத்தபயம் அகன்றதாகவே இல்லைப்போலும்!
‘பினாட்டுத் தட்டுப்போலல்லவா இதெல்லாமே ஒட்டிக் கிடக்கின்றன. ஏற்கனவே நான் பட்ட துன்பங்களின் நினைவுக ளெல்லாம் எங்கே நான் இருந்தாலும் திடுக்கென்று எகிறு கின்றனவே……..?’
தாய்க் குருவியும் குஞ்சுகளும் ‘கீச் கீச்’ என்று கத்துவது போல எனக்கு ஒரு நினைவாய் இருந்தது. தாயும் பிள்ளைகளுமாக பசியில் கத்துவதுபோல் பிறகு ஒரு நினைப்பாகவும் எனக்கு இருந்தது.
“ஏன் இதிலே நிற்கிறாய்? கீழே இறங்கிப் போ”- என்றது மாதிரி.. சொல்லிற்று என் மனம்.
அருகே காணப்பட்ட லிப்ட் உள்ளபக்கம் போனேன். திறந்த லிப்டுக்குள்ளே போய் கதவை மூட() பட்டனை அமுக்கினேன்.
பிறகு G கிறவுண்ட் பட்டன். அதற்குப் பிறகு பதுங்கிய மிருகம் மாதிரி யோசனையுடன் நான் லிப்டின் உள்ளே நிற்க, கீழே இறங்கிக் கொண்டிருந்தது லிப்ட் அது கதவைத்திறந்து கொள்ளவும் வெளியே நான் வெளிக்கிட்டேன். அங்கே பார்த்தால் ஒரே சன நெரிசல். என்றாலும் முன்னே உள்ள வீதியின் குறுக்காலே நடந்து போய் பூங்காவில் கால் வைத்தேன. அதற்குள்ளே போக விட்டு மனம் எனக்கு லேசாக இருந்தது.
அங்கேயுள்ள மின்சார விளக்குகள் இன்னும் அதற்குள் வெளிச்சம் போதாமல், வேறே இன்னமும் ஒன்றை ஒன்று தேடிக் கொண்டிருப்பதுபோல எனக்குப் பார்க்கவும் இருந்தது.
நான் ஏதோ கையிலுள்ளதை சிந்திவிட்டதைப் போல் நான் தேடும் பொருள் எனக்கு அகப்படாதா – என்ற நிலைபரத்தில் அவ்விடங்களில் சுற்றிச் சுற்றி நடந்து வந்தேன்.
அதற்குள்ளே பனை மரங்களின் விசிறி போன்ற பெருங் கொண்ட ஓலைகளைக் கொண்ட விருட்சங்கள்- ‘என்னைப் பாருங்ககோ… என்னைப் பாருங்கோ..’ என்ற விதத்தில் என் பார்வையின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தன.
அங்கே தங்கள் பேச்சில் மூழ்கியபடி அந்த மரங்களுக்குக் கீழே பலர் இருந்து கொண்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தின் ஆர்ப்பாட்டத்தை பார்த்துக் கொண்டு நானும் ஒரு மரத்தடியிலே போய் புல்மெத்தையில் ஏதோ சிங்காசனத்தில் உட்கார்ந்ததைப்போல உட்கார்ந்தேன்.
அந்த மரத்தடியிலே எனக்கு முன்னால் இருந்து கொண்டிருந்தவர்கள் “எங்கள் வேதனையை யாராவது பிறமனிதர் அறிந்து கொள்ள முடியுமா…..?” என்ற அளவுக்கு முகத்தில் வேதனையுடன் இருந்தார்கள்.
அவர்களுக்கு மூச்சு உண்டு தான் – ஆனால் பேச்சில்லை! முகம் செத்துப் போனதென்ற மாதிரித்தான் அந்த இருவரும் இருந்தார்கள்.
அதிலே அவர்களுக்கு முன்னால் உட்கார்ந்திருந்திருந்த என்னை வரண்ட கண்களுடன் அவர்கள் பார்த்தார்கள்.
இதென்ன மௌனம்! எனக்கு அவர்களுடன் கதைக்க வேண்டும் – என்ற ஆசையாக இருந்தது.
அவர்களும் தங்கள் கவலையின் ஒரு கதவை மூடிவிட்டு இன்னொரு கதவை எனக்காகத்திறந்து விடுகிறவர்கள் போல எனக்குத் தெரிந்தார்கள்.
அந்த இருவருக்குள் சடை மறைத்த முகமாயிருந்த வாலிபனுடன் முதலில் நான் கதையைக் கொழுவினேன்.
“நீங்கள் இந்தியரா?”
ஆங்கிலத்தில் கேட்டேன்.
தலையை ‘ஆம்! ” – என்ற தினுசில் ஆட்டினான்.
“தமிழரா?” என் தாய்ப் பாஷையில் பிறகு அவனைக் கேட்டேன். அவன் ‘ம்…!’ என்றான்.
அவன் இப்படி சொல்லவும்தான் இன்னும் பல கேள்விகளை அவனிடத்தில் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தில் என் தொண்டைக்குள் பல வார்த்தைகள் இறக்கையடித்துக் கொண்டிருந்தன.
தூரத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருப்பவர்களின் சிரிப்பு எனக்குக் கேட்டது.
“நீங்கள் தமிழ்நாட்டில் எவ்விடம்?”
நான் கதையைத் தொடர்ந்தேன்
“மதுரை..!”
“இங்கே சிங்கப்பூருக்கு வந்து எவ்வளவு காலம்?”
“ஒரு வருடம்!”
“வேலை செய்கிறீர்கள்..?”
“ம்…!”
“உங்கள் வாழ்க்கைச்செலவுக்கும் வீட்டுக்கும் அனுப்புவதற்கு ஏற்ற ஊதியம் உங்களுக்குக் கிடைக்கிறதா..?”
“கிடைக்கிறதுதான்…!”
புரியாத ஏதோ ஒரு பெரு மூச்சுடன் அவன் இதைச் சொன்னான். ‘அவன் மன இருளுக்குள்ளே உள்ள வேதனை யென்னும் சருகுகளை என் பேச்சு துன்பம் மிகைப்படவைக்க நனைக்கின்றதோ…?’ என்று நான் நினைத்தேன். என்றாலும் என் உரையாடலைத் தொடர்ந்தேன்.
“உங்கள் சம்பளத்தில் இப்படி பியர் வாங்கியெல்லாம் குடிப்பதற்கு உங்களுக்குக்கட்டுமா..?”
“அப்படி தொடர்ந்தெல்லாம் நாங்கள் குடிப்பதில்லை. மாதத்துக்கு ஒரு முறை மாத்திரம் இப்படியாய் வைத்துக் கொண்டிருக்கிறோம்..”
“இருவருக்கும் இன்றளவில் இதற்காக ஐம்பது டொலராவது செலவு வருமா..?”
“அப்படியாகத்தான் வரும்..”
சொல்லிவிட்டு போத்தலை கையிலெடுத்து வாய்ப்பக்கத்தை வாயில் வைத்துக்கொண்டு பியரை உறுஞ்சினான் அவன். பியரைக் குடித்துவிட்டு போத்தலை அவன் கீழே வைக்கும் போது உள்சென்ற திலிருந்து எரிப்பு மூச்சொன்று அவனிட மிருந்து வெளிப்பட்டது. வேர்வை அவன் நெற்றியில் முத்திட் டிருந்தது. என்றாலும் மெத்தான அமைதியாய்ப் பிறகு அவன் இருந்தான்.
இப்படி குடிக்கும்போது ஒருவருக்கு என்னசுகம்! என்ன சுகம்! என்று நானும் என் உடல் வருத்தத்துடன் ஒரு நிமிஷம் அதற்காக ஆசைப் பட்டுக்கொண்டேன்.
ஆனால் பிறகு அவனுக்குப் பக்கத்திலிருந்தவனும், தனக்கு முன்னால் உள்ள போத்தலில் உள்ள பியரை எடுத்துக் குடித்துவிட்டு, நாய் போல பிறகு இரைத்தது எனக்கு முன்பிருந்த அந்த ஆசையை மனத்திலிருந்து விரட்டியது.
முன்னம் என்னோடு பேசியவனின் உடலில் ஒரு வித வெறி யின்பம் பரவியதில் இப்போது என்னுடன் அவன் பேசத் தொடங்கினான்.
“நீங்கள் எந்த இடம்?”
“ஸ்ரீ லங்கா..”
“அங்கே பிரபாகரன் இறந்தது உண்மையா….?” உள்ளத்தை குத்திப் பார்க்கிற மாதிரியாக ஒரு கேள்வி கேட்டான் அவன். எனக்கு மாம்பழத்தில்கத்தியிறக்குவதுபோல அவனது வார்த்தைகளைக் கேட்கவும் இருந்தது. “ஸ்ரீலங்காவிலிருந்து எவனொருவன் வெளிநாட்டுக்குச் சென்றாலும் முதுகில் இரண்டு அறை வைப்பது போல அங்கிருப்பவர்களெல்லாம் இந்தக் கேள்வியைத் தானே விடுத்து விடுத்துக் கேட்கிறார்கள்.கண்களில் ஒளி ஊடுருவும் கத்திப் பார்வையுடன் கேள்வி கேட்கும் இவர்களுக்கு என்போன்ற ஒன்றுமறியாதவர்கள் என்ன பதிலைத்தான் சொல்வது…….?’
அவனின் முகத்தை நான் பார்த்தேன் அவன்முகத்தில் ஒரு தாயினது வேதனையும், ஒரு தகப்பனது வேதனையும் சேர்ந்திருப்பது மாதிரியாக எனக்குப் பார்க்கவும் தெரிந்தது.
நான் அவன் கேட்ட கேள்வியோடு ஜலத்தில் அமுங்கிய குடம் போல எனக்குள் மூழ்கினமாதிரியாய் ஒரு நிமிடம் இருந்தேன்.
சில விஷயங்களைக் கோழி அடைகாத்தது மாதிரி வைத்துக் கொண்டு திரிபவர்களுக்கு என்னத்தைத்தான் என்போன்றவர்கள் சொல்வது.
நெருப்புச் சிவப்பாக – தூரத்தில் தெரிந்த ஒரு மின்சார ‘பல்ப்’ வெளிச்சத்தை சிறிது நேரம் நான் கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
‘என்னதான் அவர் முடிவு? ஆள் இருக்கிறாரா இல்லையா..?”
என்னை ஆராய்கிறதுமாதிரி திரும்பவும் கேள்வி கேட்டான் அவன். வீணாக இதிலேயாய் வந்து இவனுடன் சகவாசம் கொண்டா டியதில் எனக்கு இந்தப் பாடுவந்து விட்டதே? என்று உடனே நான் நினைத்தேன்.
அவ்வாறு நினைத்துக் கொண்டு நான் அவனின் கண்களைப் பார்த்தேன். அவன் கண்கள் இன்னமும் ஆவலில் என்னைப் பார்த்தபடி திரிகள் மாதிரி எரிந்து கொண்டிருந்தன. “இன்னும் எத்தனை நிமிடங்களும் என்பதிலை கேட்பதற்காக அவன் பொறுமையோடு தயார்தான்…. ” என்பதுமாதிரி அவன் பார்ப்பதற்கு எனக்குத் தென்பட்டான்.
“இந்த விஷயத்திலெல்லாம் ஒன்றைப்பத்தாக்கி பத்தை நூறாக்கி சொல்வதற்கெல்லாம் எனக்குத்தெரியாது….”
முதலில் இப்படியொரு சொட்டுச் சொல்லை வாயால் சிந்த விட்டேன் நான். அதற்குப் பிறகு நான்சொன்னேன்.
“உங்கள் நாட்டிலே உலகம் உங்களுக்குப் பெரிதாக இருந்திருக்கலாம், அப்படியாக நீங்கள் எங்கேயும் போகவும் வரவுமாகச் சுதந்திரமாகச் சீவித்திருப்பீர்கள்…. ஆனால் என்போன்ற தமிழர்கள் சீவிக்கும் கொழும்பு போன்ற இடங்களிலே இருந்து அவர்கள் இந்தக் காலங்களில், இருந்த இடத்தை விட்டு அப்படியான இடங்களுக்கு அருகிலுள்ள இடங்களுக்குக் கூட போய்க்கொள்ள முடியாதபடி அவர்களைச் சுற்றி சுவர்கள் நான்கு புறங்களிலும் முளைத்துத் திமிர்த்து நிற்கிற அடைப்புக்குள்ளே ஆழ்ப்பட்டதாய்த்தான் போய் விட்டார்கள். ஆள் திரும்பக்கூட இடம் இல்லாதபடி நெருக்குகின்ற மாதிரியான ஒரு நிலைமை எங்களுக்கு…. இதனால் நாங்களும் உங்களைப் போல தொலைக்காட்சியில் தோன்றித் தோன்றி மறையும் காட்சி களைத்தான் தனியே இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்…’
வாய்ப்பாடு ஒப்பிப்பது போல் குரலைத்தணிவாய் வைத்துக் கொண்டு அவனுக்கு நான் சொன்னேன் “யுத்தம் ஆலஹால் விஷமெண்டாலும் அதில இருந்து அமிர்தம் கிடைக்குமெண்டு பார்த்தம், ஆனால் கவலை! கவலை! கவலை! நான் கவலை! உலகமே கவலை! எல்லாமே கவலை! கவலை! கவலை! கவலை!
அவன் நிலத்தில் தன் கையை பக்கத்தில் ஊன்றிவைத்துக் கொண்டு வெறியில் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த நேரம் நாங்கள் இருக்கும் இடத்தடியில் ஒரு தலை எட்டிப் பார்த்த மாதிரி பார்த்துவிட்டுப் போனது.
“குப்பை ஏதாவது இந்த இடத்தில் போட்டிருக் கிறோமா….? என்று அந்த பொலிஸ்காரன் பார்த்துவிட்டுப் போகின்றான்..”
என்று அவர் பார்த்துவிட்டுப்போனபிறகு, எனக்கு அவன் சொன்னான்.
அவன் அப்படிச் சொன்ன கையோடு நான் அவனுக்கு முன்னால் கிடந்த அந்த சொப்பிங்பையை பார்த்தேன். ‘என் நாட்டிலே எனக்குப் பெரிதாகப் பழக்கமில்லாத ஒன்றை கற்றுக்கொள்கிற வழியையும் நான் தெரிந்து கொள்ள வேண்டுமே….? ‘ என்று எனக்கு அக்கறையாயிருந்தது.
விதம்விதமாய் என் மனத்தில் ஆச்சரியம் வழிய அவன் அந்தச் சொப்பிங்பையில்போட்டு வைத்திருந்த பியர்போத்தல் மூடி, கடலைப்பைக்கற் கவர், சிகரெட் பில்ட்டர்களை நான் பார்த்தேன்.
அவன் தின்று தெறிந்த ஒரு பருக்கை கூட அவன் பக்கத்தில் இல்லாதிருப்பது என் கண்ணுக்குத் தெரிந்ததாயிருந்தது.
அந்த வாலிபனின் கண்கள் என்னைக் குற்றம் சாட்டுவது மாதிரியான ஒரு சாபத்தைச் சிந்திக்கொண்டிருந்தன.
‘இந்த விஷயத்தைப்பற்றி என்னதான் என்போன்றவர்கள் விளக்க முயன்றாலும் அதை யாரும் சரியாகப் புரிந்து கொள்வதாகவே இல்லை…” என்று அவன் கேள்வியால் என் மனதில் கவ்விக்கொண்டிருந்த இனம் புரியாத கொதிப்பின் அதீத நிலையை நான் படிப்படியாக தணித்துக் கொள்ளப் பாடுபட்டுக்கொண்டிருந்தேன்.
குனிந்த என்முகம் அவ்வப்போது நிமிர்கையில், அவன் கண்கள் என்னைக் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பது போல் எனக்குத் தெரிந்தது.
நான் :
‘-என்னை விட்டுடுடா-விட்டுடுடா..’
என்ற அளவில் என்னை அவர்களிடமிருந்து விலக்கி எடுத்துப் போகின்றதான ஒரு நிலையில், இருந்த இடத்தால் இருந்து எழுந்து நின்றேன்.
அவன் என்னை சமயத்துக்குத் தக்கவாறு நடந்து கொள்பவன்போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
எனக்கு இனி என் தங்கும் அறைக்குப்போய் அடைக்கலம் தேடிக் கொள்வது நல்லது என்பதாகப்பட்டது.
நான் அவனின் ஓங்கிய பார்வையை பார்த்துக் கொண்டு நான் போய் வருகிறேன்… என்று சொன்னேன்.
அவன் நான் சொன்னதற்கு தலையை மட்டும் ஆட்டினான். ஆனால் அவன் பார்வை மட்டும்???? இப்படியான ஒரு கணக் கெடுப்பிலே தொடர்ந்து என்னைப் பார்த்தபடியே இருந்து கொண்டிருந்தது.
(பெப்ரவரி 2010)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
ஆசிரியர் அளித்த அற்புதம்
இரா.கலைச்செல்வி
October 6, 2026
மேலோர்
ஜூனியர் தேஜ்
October 6, 2026
