கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 149 
வாசிப்பு நேரம்: 4 நிமிடங்கள்

(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாங்கள் ஊர்ப்பிள்ளைகள் எல்லோரும் எப்போதும் சந்தோஷமாக இருந்தோம். 

எங்களுக்கென்று பள்ளிக்கூடம் எதுவும் கிடையாது; படிப் பதற்குப் பாடங்களும் இல்லை. நாங்கள் பறவைகள் மாதிரித் துள்ளித் திரிந்தோம். நாள் முழுவதும் விளையாடினோம். ஆ, நாங்கள் எப்படி ஆடிக் களித்தோம்! எவ்வளவு நல்ல நண்பர்கள் நாங்கள்! நாங்கள் ஒருவரை ஒருவர் எப்படி நேசித்தோம்! எங்களுக்குப் பசி வந்தபோது நாங்கள் வீட்டுக்கு ஓடி ஒரு துண்டு ரொட்டியும், மண்பானையிலிருந்து கொஞ்சம் வெண்ணெயும் எடுத்துத் தின்போம். திரும்பவும் விளையாட ஓடுவோம். அவ்வப்போது மாலை நேரங்களில் நாங்கள் வம்பு பேசவும் கதைகள் சொல்லவும் கூடுவோம். 

பையன்களில் ஒருவன் பெயர் நெஸோ. அவனுக்கு ஏகப் பட்ட கதைகளும் மோகினிக் கதைகளும் தெரியும். அவற்றுக்கு ஒரு முடிவே கிடையாது. 

கோடையில் நிலா நிறைந்த இரவுகளில், எங்கள் முற்றத்தில் குவிந்து கிடந்த கட்டைகள் மீது வட்டமாக அமர்ந்து, நாங்கள் நெஸோவின் முகத்தையே கிறக்கத்தோடு கவனித்துக்கொண் டிருப்போம். அவன் கூரி-பாரிபற்றியும், சொர்க்கத்தின் இனிய பறவைபற்றியும், ஒளியும் இருளும் நிறைந்த அரசுகள்பற்றியும் கதைகள் பல சொல்வான். 

”சொல்லு, நெஸோ. இன்னும் ஒரு கதை சொல்லு. குருட்டு ராஜாபற்றிய கதை கிளிக் கதை, வழுக்கைத் தலையனையும் தாடியில்லாத ஆசாமியையும்பற்றிய கதை சொல்லு. 

2 

ஒருநாள் எங்கள் ஊரில் ஒரு பள்ளிக்கூடம் திறந்தார்கள். என் பெற்றோரும், சுமார் இருபது முப்பது பெற்றோர்கள் செய்ததுபோலவே, என்னைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினார்கள். படிப்புச் செலவு வருஷத்துக்கு மூன்று ரூபிள்கள். அதனால்தான் சம்பளம் கட்ட முடியாத பெற்றோர்களின் பிள்ளைகள் பள்ளிக் கூடத்தில் சேர்க்கப்படவில்லை. என் நண்பர்களில் ரொம்பப் பேர் – அவர்களில் நெஸோவும் ஒருவன் – பள்ளிக்கூடம் போக முடியவில்லை. 

நாங்கள் எங்கள் வாழ்விலேயே முதல் முறையாகப் பிரித்து வைக்கப்பட்டோம். பள்ளிக்கூடமும் வாத்தியாரும்தான் எங்களை அப்படிப் பிரித்துவைத்த சக்திகள். இப்போது தான் எங்களில் சிலர் அதிக வசதி படைத்தவர்கள் என்றும், மற்றவர்கள் ஏழைகள் என்றும் நாங்கள் முதல் தடவையாக உணர்ந்து கொள்ள முடிந்தது. நெஸோ புழுதியில் புரண்டவாறே “நானும் பள்ளிக்கூடம் போக விரும்புகிறேன்” என்று அழுது புலம்பியது இப்பவும் என் செவிகளில் ஒலிக்கிறது. 

அதட்டிக் கூப்பாடு போட்ட அவனுடைய தந்தையின் குரலையும் நான் இன்னும் கேட்க முடிகிறது. “அட கடவுளே! ஏன்டா இது உனக்கு விளங்கவில்லை? என்னிடம் பணம் இல்லையே. என்னிடம் மூன்று ரூபிள்கள் இருந்தால், அதைக் கொண்டு நான் தானியம் வாங்கி, நீ பட்டினி கிடக்காதபடி காப்பாற்றுவேனே. என்னிடம் பணமே இல்லை” என்று அவர் சொன்னார். 

பள்ளிக்கூடத்தில் சேராத நெஸோவும் என் இதர நண்பர் களும் கும்பலாக வந்து, வாசல் முன் கூடி நின்று, உள்ளே இருக்கும் எங்களை எட்டி எட்டிப் பார்ப்பார்கள். ஆனால் வாத்தியார் அவர்களை உள்ளே விடமாட்டார். அப்பால் விரட்டுவார். இடைவேளையின்போது சேர்ந்து விளையாடு வதற்குக்கூட அவர் எங்களை அனுமதிக்க மாட்டார். பள்ளிப் பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடுவதற்கு வெளிப் பிள்ளை களுக்குத் தகுதி கிடையாது என்று அவர் சொன்னார். என் நண்பர்கள் வெளியே போய் உட்கார்ந்திருப்பார்கள்; பள்ளி முடிந்து நாங்கள் வெளியேறும்வரை காத்திருப்பார்கள். பிறகு நாங்கள் அனைவரும் ஒன்றாக வீடு திரும்புவோம். 

மெதுமெதுவாக, முதல் வருடம் பள்ளிக்கூடத்தில் எனக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். வருஷ முடிவில், பள்ளிக் கூடத்தில் சேர்ந்திராத நெஸோவும் என் இதர நண்பர்களும் வெளியில் எனக்காகக் காத்திருப்பதை விட்டுவிட்டார்கள். 

3 

எங்கள் ஊர்ப் பள்ளியில் நான் இரண்டு வருஷங்கள் படித்தேன். அதன் பிறகு என் தந்தை என்னைப் பக்கத்து நகருக்கு இட்டுச் சென்றார். அங்கே இருந்த பெரிய பள்ளியில் என்னைச் சேர்த்துவிட்டார். இது எனக்கு ஒரு புதிய உலகமாக இருந்தது. எல்லா வீடுகளும் சிவப்புக் கூரைகள் பெற்றிருந்தன. நகர மக்கள் அனைவரும் நேர்த்தியான, தூய ஆடைகள் அணிந்திருந் தார்கள். பள்ளிக்கூடமும் பெரிதாகவும் அழகாகவும் இருந்தது. ஊர்ப் பள்ளியில் ஒரே ஒரு வாத்தியார்தான் இருந்தார். இங்கோ அநேக ஆசிரியர்கள். அவர்களில் ஒருவர் பெண். இது எனக்கு இனிமையான ஆச்சர்யமாக இருந்தது. 

எனது புதிய சூழ்நிலைகளுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் தகுந்தாற்போல, என் ஆடைகளும் ஒரு மாறுதலுக்கு உள்ளாயின. இப்போது நான் அழகிய, சுத்தமான, நகரப் பள்ளியின் சீருடை அணிந்தேன். இந்தவித மாறுதலுடன் நான் விடுமுறைக்காக எனது ஊருக்குத் திரும்பினேன். நெஸோவும் என் இதர பழைய நண்பர்களும், நான் வீட்டுக்கு வந்திருப்பதைக் கேள்விப்பட்டதும், காலையில் முதல் வேலையாக அங்கே வந்து, சுற்றி அலைந்து, உள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள். அவர்களை வரவேற்க நான் வெளியே போனேன். நாங்கள் பரஸ்பரம் என்ன பேசினோம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் எங்களுடைய பழைய தோழமை போய்விட்டது என்பது எனக்கு நினைவிருக்கிறது. அவர்கள் முதல் காரியமாக எனது சீருடையைத்தான் கவனித்தார்கள். என் அத்தியாவசியமான கட்டைச் சட்டையை ஒரு தினுசாகப் பார்த்தபடி நெஸோ சொன்னான்: ”உன் வாலிலிருந்து இறகுகளை அவர்கள் பிடுங்கி விட்ட மாதிரித் தோன்றுகிறது” என்று. 

எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. ஆனாலும் நான் ஒன்றும் பேசவில்லை. பிறகு நெஸோ என் சட்டைத் துணியைத் தொட்டுப் பார்த்தான். மற்றவர்களும் அப்படியே செய்தார்கள். துணியின் மென்மைபற்றி அவர்கள் அனைவரும் வியந்தார்கள். அப்போதுதான் நான் முதல் முறையாக அவர்களுடைய ஆடைகளை நன்கு கவனித்தேன். அவை அழுக்கு நிறைந்தும் கிழிந்துபோயும் இருப்பதைப் பார்த்தேன். உண்மையில், அந்த ஊர் முழுவதுமே வறுமை மிகுந்து அழுக்குமுட்டிப்போய் இருப்பதாக என் பார்வையில் பட்டது. 

4 

அப்புறம் இரண்டு வருஷங்களுக்குப் பின்னர், என் தந்தை என்னை வேறொரு பெரிய நகரத்துக்கு அழைத்துப்போனார். மேலும் பெரிதான இன்னொரு பள்ளியில் என்னைச் சேர்த்தார். நான் அங்கிருந்து ஊர் திரும்பியபோது, எனது முன்னாள் விளையாட்டுத் தோழர்கள் என்னைக் காண வந்தார்கள். இப்போது அவர்கள் பெரியவர்களாகி இருந்தார்கள். அவர்களும், இதர குடியானவர்களைப்போல் எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, அவர்களைப் போலவே மரியாதைகாட்டி ஒரு புறமாக ஒதுங்கி நின்றார்கள். எங்கள் சம்பாஷணையில் ஒரே ஒரு தடவை, ஊர்ப் பள்ளிக்கூடத்தில் நாங்கள் படித்த நாட்கள் எனக்கு நினைவிருக் கிறதா என்று யாரோ கேட்டபோதுதான், நெஸோ பேசினான். 

“இரவு நேரங்களில் உன் வீட்டு முற்றத்தில் மரக்கட்டை களைச் சுற்றி நாம் எல்லோரும் உட்கார்ந்து கதை பேசியது உனக்கு நினைவு இருக்கிறதா?” என்று அவன் கேட்டான். 

“அதை நான் எப்படி மறக்கமுடியும்! என் நினைவில் நிற்கிற மிக அருமையான விஷயங்களில் அது ஒன்று ஆயிற்றே!” 

இதைக் கேட்டதும் நெஸோவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாக நான் நினைத்தேன். எனினும், அவன் ஒரு அந்நியனாக, தொலைவிலேயே நின்றான். 

நான் மாநகருக்குத் திரும்பவேண்டிய காலம் வந்ததும், என் தந்தை எனக்காக நெஸோவின் அப்பாவிடமிருந்து ஒரு குதிரையை வாடகைக்கு அமர்த்தினார். நான் சவாரி செய்யும் குதிரையினோடு நெஸோவும் செல்லவேண்டும் என்று ஏற்பாடு. நாங்கள் புறப்பட்டோம். நான் குதிரைமீது அமர்ந்தும், கிழிந்த துணிகளும் தேய்ந்து பழசாகிவிட்ட செருப்புகளும் அணிந்த நெஸோ நடந்தும் பயணம் செய்கையில் எனக்கு மன வருத்தம் உண்டாயிற்று. சிறிது தூரம்தான் போயிருப்போம். நான் நடக்க விரும்புவதாகச் சொல்லிக் கீழே இறங்கினேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடந்தும், மாறி மாறி முறை வைத்துக் குதிரை சவாரி செய்தும் முன்னேறினோம். நெஸோ சந்தோஷப்பட்டான். ஆனால், எனது நேர்மை உணர்வையும் தோழமை உணர்ச்சியையும் அவன் புரிந்துகொள்ளவில்லை. மாறாக, நான் நடந்து சென்றதற்காக என்னை மடையனாகவே அவன் கருதினான் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். இதனால் என் மனம் புண்பட்டது. ஆயினும், இதைவிட மோசமானது இனிமேல்தான் நடக்கவிருந்தது. 

வழியில் உணவு உண்பதற்காக நாங்கள் நின்றோம். முலாம் பழத்தை நறுக்கவேண்டிய தேவை ஏற்பட்டதும், நான் எனது சின்னக் கத்தியை நெஸோவிடம் கொடுத்தேன். பிறகு, நாங்கள் மறுபடியும் புறப்படத் தயாரானதும், கத்தி மறைந்துபோனதை நான் கவனித்தேன். அதை அவன் திருப்பித் தந்துவிட்ட தாகவும், நான் கத்தியைப் பைக்குள் போட்டுக்கொண்டதாகவும் நெஸோ சத்தியம் செய்தான். உண்மையில் அதை அவன் திருப்பித் தரவில்லை என்று நான் நிச்சயமாக அறிவேன் ஆயினும், என் சட்டைப் பைகளை முழுக்கச் சோதித்தேன். இறுதியில், நாங்கள் கிளம்பினோம். அவன் அந்தக் கத்தியைத் தனக்காக வைத்துக்கொண்டான் என்பது திட்டமாகப் புரிந்தது. பின்னர், மற்றவர்கள் அதை அவனிடம் கண்டதும் உண்டு. எங்கள் வழியை நாங்கள் தொடர்ந்தபோது, என் இதயம் வலித்தது. நிச்சயமாக அது எனது மறைந்துபோன கத்திக்காக அல்ல; ஆனால் நான் அனுபவித்த அதைவிடப் பெரிய இழப்புக்காக; எதை என் நண்பன் அறிந்துகொள்ளவில்லையோ அதற்காகத்தான் அந்த வேதனை. 

நாங்கள் போய்ச் சேரவேண்டிய இடத்தை அடைந்ததும், நெஸோ திரும்பவேண்டிய நேரத்தில், குதிரைக்கு உரிய வாடகைப் பணம் போக, அவனுக்காக ஒரு சட்டைக்குத் தேவையான துணி ஒன்றும் வாங்கி அளித்தேன். அதைப் பெற்றுக்கொண்டதும், “என்ன, நீ எனக்கு இனாம் காசு எதுவும் தரமாட்டாயா?” என்று அவன் கேட்டான். 

நான் மிகுந்த குழப்பம் அடைந்தேன். அவனுக்குப் பணம் கொடுத்தேன். ஆனாலும், அதுமுதல், எனது குழந்தைப் பருவத்தையும், நாங்கள் மரக்கட்டைகள் மீது உட்கார்ந்திருக்க நெஸோ கதைகள் சொல்லி மகிழ்வித்த நிலா இரவுகளையும் நான் நினைத்துக்கொள்கிற ஒவ்வொரு தடவையும், என் இதயம் வேதனையாலும் இரக்கத்தாலும் கனத்துவிடும். 

“நெஸோ ஏழை… நெஸோ கல்வி அறிவில்லாதவன்… கிராம வாழ்வின் பயங்கர வறுமையினால் நசுக்கப்பட்டவன் நெஸோ… அவன் கல்வி கற்றிருந்தால், அவன் நல்ல முறையில் வளர்க்கப்பட்டு, போதுமான வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால், என்னைவிட மிகச் சிறந்த மனிதனாக அவன் விளங்கியிருக்க முடியும்.” 

இப்போது நெஸோபற்றி நான் நினைக்கிறபோது அவனை மன்னித்து, என் நோக்கில் அவனை உயர்ந்தவனாகக் காணவும், என் சிறு பிராயத்தில் முன்பு நான் அவனை நேசித்ததுபோல் இப்பவும் அவனிடம் அன்பு செலுத்தவும் முயல்கையில், எனக்கு நானே சொல்லிக்கொள்வது இதுதான். அமைதியான, நட்சத் திரங்கள் ஒளிர்ந்த, நிலாக்காலத்து இரவுகளில் அவன் எப்படி இருந்தானோ,அதேபோல நெஸோ எப்பவும் எனக்குத் தோற்றம் அளிக்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால், அது சாத்தியமற்றது என நான் அறிகிறேன். அப்படி அவனை நான் காண முடியாது. உடனடியாகவே மற்றொரு சித்திரம், வெட்க மானதும் துயரம் தருவதுமான ஒன்று, என் மனசில் எழுகிறது. 

எனது படிப்பை முடித்து, இவ் உலகில் எனக்கு ஒரு ஸ்தானத்தை அமைத்துக்கொண்ட பிறகு, நான் மீண்டும் எனது சொந்த ஊருக்கு வந்தேன். அன்றைய தினம் ஊர் மைதானம் கும்பலும் சந்தடியும் மிகுந்து காணப்பட்டது. திடலின் நடுவே ஒரு கம்பத்தில் கட்டுண்டு நின்றான் நெஸோ. அவன் தலை அவமானத்தால் தாழ்ந்திருந்தது. 

திருடியதற்காக அவன் தண்டிக்கப்படுகிறான் என்று என்னிடம் சொன்னார்கள். அவனுக்காக நான் பரிந்து பேசினேன். அவன் விடுதலையானான். ஆனாலும், சுட்டெரிக்கும் வெயிலில், கம்பத்தில் கட்டுண்டு, குமுறும் கும்பலிடையே அவன் தலைகவிழ வெட்கி நிற்பதை நான் என் மனக்கண்ணில் இன்றும் காண்கிறேன். 

திருடுவதும், அதற்காகக் கசையடி படுவதும் எங்கள் ஊரில் சர்வசாதாரண விஷயங்கள் தான். ஆனால், நிலாக்கால இரவு களில் கட்டைகள் மீது அமர்ந்து எங்களுக்குக் கதைகள் சொன்ன சின்ன நெஸோவை நான் மறக்க முடியாதது போலவே, இந்த நிகழ்ச்சியையும் என்னால் மறக்க முடியாது. எவ்வளவு புனிதமான, இனிய நெஸோ – எனது சிறுபருவத் தோழன் நெஸோ. 

– ஹோவன்னஸ் டூமேனியன் (1869-1923) 

– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *