ஊருக்கு நல்லது சொல்வேன்
கதையாசிரியர்: எஸ்.மதுரகவி
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
இணைய வெளியீடு: November 16, 2026 முதற்பதிப்பு: 2026
பார்வைகள்: 201

மழைக் காலத்து மாலைப் பொழுது. ஞாயிற்றுக் கிழமை. பூவனம் கிராமம். அந்த ஊரின் ஊர்த் தலைக்கட்டு கார்மேகத்தின் வீட்டு மொட்டை மாடி . வாட்டசாட்டமான உருவம் கொண்ட கார்மேகம் , ஒரு மிகப் பெரிய ஆசனத்தில் அமர்ந்து இருந்தார்.
அவருக்கு மிக அருகில் நடுத்தர வயது பெரிய மீசை , கனத்த உருவம் கொண்ட அவருடைய மாப்பிள்ளை சுதாகர் பணிவுடன் நின்று கொண்டிருந்தார்.
சற்று தொலைவில் அவருடைய ஆட்கள் நின்று கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு நடுவே உயரமான , வெள்ளை சபாரி உடை அணிந்த நடுத்தர வயது நபர் நின்று கொண்டிருந்தார். மாநிறம். கருப்பு வெள்ளை கேசம். மழித்த முகம் .
கார்மேகம் பேசினார் –
“ யார் மாப்பிள்ளை இது நம்ம ஆளுங்களுக்கு நடுவுல புது ஆளு ? “
சுதாகர் பதில் சொன்னார் –
“ மாமா … இவன் டவுன்லேந்து வந்த ஆள் . சும்மா இல்லாம திருவிழா இல்லாத சமயத்துலயும் பயாஸ்கோப்ப தூக்கிட்டு வந்து அதுல ஜனங்களுக்கு புத்திமதி சொல்ற ஸ்லைடு வீடியோ எல்லாம காமிச்சுகிட்டு இருக்கான் …
அவனை நிறுத்த வைக்கறதுக்குத் தான் நம்ம ஆளுங்க ஒங்க கிட்ட அழைச்சுகிட்டு வந்து இருக்காங்க மாமா … “
“ அப்படியா ? ஏம்பா அவனுக்கு ஒரு நாற்காலிய போடுங்கப்பா … அவன் மூஞ்சிய கஷ்டப்பட்டு பார்க்க வேண்டி இருக்கு …. “
உயரமான உருவம் கொண்டவன் சிறிய நாற்காலியில் அமர்ந்தான்.
கார்மேகம் அவனைப் பார்த்தார்.
“ உன் பேர் என்ன ? “
“ கதிரவன் சார் … “
“ பிழைப்பு கிழைப்பு எதுவும் கிடையாதா ? எதுக்கு இந்த வேண்டாத வேலைய எங்க ஊர்ல வந்து பார்க்கறே … “
“ ஊருக்கு நல்லது சொல்லணுங்கறதுக்காக சார் விழிப்புணர்வு மெசேஜ் எல்லாம் பயாஸ்கோப்ல காட்டறேங்க சார் … நான் ஜனங்களுக்கு தொந்தரவு எதுவும் கொடுக்கறது இல்ல… எனக்கு உத்யோகம் இருக்குங்க ஐயா .. நடுவுல ஒரு மாற்றத்திற்காக ஜனங்களுக்கு நல்லது சொல்லனும் னு இப்படி .. … “
“ எங்க கிராமத்துக்கு மெனக்கெட்டு வந்து பயாஸ்கோப் காமிக்கறே …. சரி என்னென்ன சொல்லுவ ..என்கிட்ட சுருக்கமா சொல்லு .. “
“ குப்பைகளை நீர்நிலைகளில் போடக் கூடாது. சாக்கடைகளில் குப்பைகளைப் போடக் கூடாது. கண்ட இடங்களில் எச்சில் துப்பக் கூடாது .. டயர் ட்யூப் எரிக்க கூடாது … மின் சிக்கனம் தேவை இக்கணம் … “
“ ம்ம் …. சுற்றுச்சூழல் தூய்மை நம் அனைவரின் கடமைன்னு சொல்றே .. மாப்பிள்ளை சுதாகர் , மணி … இதுல என்னப்பா தப்பு இருக்கு … அவரை விடுங்க “
கார்மேகத்தின் மாப்பிள்ளை பேசினார் –
“ அது வந்து மாமா …. குழந்தை தொழிலாளர் முறை கூடாது … குழந்தைகள் திருமணம் கூடாதுன்னு எல்லாம் இவரு ஸ்லைடு வீடியோ எல்லாம் காமிக்கறாரு … அதனால தான் இவுரு இனிமேல நம்ம ஊரு பக்கம் தலை காட்டக் கூடாதுன்னு நீங்க எச்சரிச்சு அனுப்பணும் னு மணியும் மத்தவங்களும் இவரை ஒங்க முன்னாடி ஆஜர் படுத்தி இருக்காங்க மாமா … “
கார்மேகம் கதிரவனின் முகத்தைப் பார்த்தார்.
“ தம்பி அந்த குழந்தை திருமணம் , குழந்தை தொழிலாளர் கூடாது பத்தி வீடியோ எல்லாம் உன் மொபைல்ல இருந்தா என் கிட்ட காமி “
கதிரவன் எழுந்து நின்றான். அவர் அருகில் வந்து வீடியாக்களை அவரிடம் காண்பித்தான்.
கார்மேகம் பார்த்தார். எழுந்து நின்றார். கதிரவனின் தோள்களைத் தட்டினார்.
“ ஏம்பா … மணி … நல்ல விஷயம் தான் பா இவுரு காட்டறாரு… சின்ன பசங்கள வேலைக்கு அனுப்ப கூடாது.. திருமண வயசுக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு கல்யாணம் பண்ணக் கூடாது… நியாயமா இவருக்கு நீங்க மாலை போட்டு மரியாதை செஞ்சு இருக்கணும் … எல்லாரும் போங்க வேலைய பாருங்க .. தம்பி கதிரவன் உனக்கு ஒழியும் போதெல்லாம் இந்த ஊருக்கு வந்து ஜனங்களுக்கு பயாஸ்கோப் காட்டு ….
மாப்ளே சுதாகர் இவருக்கு இருபதாயிரம் பணம் கொடுங்க நம்ம வீடல நல்லா உபசரிச்சு சாப்பாடு போட்டு அனுப்புங்க .. வாழ்த்துக்கள் கதிரவன் … “
கூறி விட்டு கார்மேகம் மாடிப்படிகளை நோக்கி நடந்தார். அவரை சுதாகர் மட்டும் அல்ல கதிரவனும் வியப்புடன் பார்த்தான்.
– பயாஸ்கோப் கதைகள்.
![]() |
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.மதுரகவி (1962) எண்பதுகளிலிருந்து சிறுகதைகள். புதுக்கவிதைகள். நாடகங்கள் மற்றும் கட்டுரைகள் எழுதி வருபவர். புதுச்சேரி வானொலியில் 1984-ஆம் ஆண்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்துத் தந்துள்ளார். சென்னையில் விளம்பரவியல் துறையில் 1984 முதல் 2000 வரை ஊடகத் தொடர்பு மேலாளராகப் பணியாற்றியவர். 2000ம் ஆண்டு முதல் முழுநேர விளம்பரத்துறை எழுத்தாளராகப் பணியாற்றி வருகிறார். தொண்ணூறுகளில் இவரது படைப்புகள் சுமங்கலி, அமுதசுரபி, குங்குமம், குங்குமசிமிழ். முல்லைச்சரம், குடும்பநாவல் ஆகிய இதழ்களில்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வெற்றிக்கு யார் காரணம்?
எம்.எஸ்.நிர்மல்
November 16, 2026
மொஹித்தே
நாஞ்சில்நாடன்
November 16, 2026
இன்றைய இளைஞன்
இரா.கலைச்செல்வி
November 16, 2026
