உனக்காக உயிர்வாழ்வேன்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 86 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“நீ வேறு இதற்குள் பிறந்து விட்டாயே!” என்று மடிக்குள் கிடக்கும் மலர் மேனிக் குழந்தையின் முகத்தைங் பார்த்து ஆவேசம் பொங்க ஆனந்தி கத்திய போது ஒரு பாவமும் அறியாத அந்தக் குழந்தை திடுக்கிட்டுப் பயந்து மருண்டு பார்த்து வீலென்றலறுகிறது.

அதைத் தூக்கித் தோளில் போட்டுப் பொருமியவள் “எங்காவது ஆற்றிலே குளத்திலே என்றாலும் விழுந்து சாகவும் வழியில்லையே!” என்று தேம்பித் தேம்பி அழுகிறாள்.

ஈற்றில் குழந்தையின் முகத்தை நிமிர்த்திப் பாசத்தோடு பார்த்து விட்டு, அதன் அலறல் நடுவே “நான் சாகமாட்டேன்’டி உன்னை விட்டுச் சாகமாட்டேன்டி கண்ணு!” என்று பதறிக் குழந்தையை இறுக அணைக்கிறாள்.

அவள் கணவனுக்கு பல மோகினிகள் என்ற ஊர்ப்பேச்சு அவள் காதிலும் விழுந்ததால் ஏற்பட்ட பூகம்பம் தானிது.

“இந்தப் பிள்ளையின் முகத்தைப் பார்த்துக் கொண்டே என் வாழ்நாளை ஒட்டிவிடுவேன்!” என்று முணுமுணுத்த ஆனந்தியின் மனத்தில் ஒரு ஞாபகம் மின்னலடித்துச் செல்கிறது.

அவள் நான்கு வயதுச் சிறுமியாக இருந்த காலத்தில் தாய் கமலமும் இப்படித்தான் பல தடவைகள் அவளைக் கட்டிக் கொண்டு, “உன்னை விட்டுச் சாக முடியவில்லையேடி” என்று அலறியிருக்கிறாள்.

அப்படியானால் ஆனந்தியின் அப்பாவும் வேறு பெண்களோடு…? ஓகோ தலைமுறை தலைமுறையாக இதே கதை தானா? ஆண்கள் கட்டிய மனைவிமார்க்குத் துரோகமாக நடப்பதும், அப் பேதைப் பெண்கள் சாக நினைப்பதும், பின்பு பிள்ளைகள் முகம் நோக்கி, அவர்கள் பிற்காலத்தை நினைத்து, தற்கொலை எண்ணத்தைக் கைவிடுவதும் பாரம்பரிய வழக்கமோ?

அப்படியானால் இந்தக் குழந்தையும் நாளைக்கு மணமாகித் தாயாகி இப்படி அழநேர்ந்து…… தற்கொலையைத் தழுவி…! சேச்சே!

அவள் பெற்ற குழந்தையின் முகம் அப்பொழுது அவளை சாகாமற் காத்துவிடும் என்று பெருமூச்சுவிட்ட அன்னை கண்ணீரைத் துடைத்துக் கொண்டு “அடியே கள்ளி! உன்னை ஏமாற்றப் போகிறவனும் எங்கே பிறந்திருக்கிறானோடி” என்று கொஞ்சிய போது, குழந்தைதன் பொக்கை வாயைத் திறந்து தாமரையாகச் சிரிக்கிறது. 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *