புதிய வார்ப்புகள்…

0
கதையாசிரியர்: பிரேமா நரசிம்மன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
வெளியான ஆண்டு: 1992
இணைய வெளியீடு: November 20, 2026
பார்வைகள்: 1,370
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1992ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காலிங் பெல்லை மூன்றாம் முறையாக அழுத்திய சுபாவிற்கு உள்ளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது. ஆபீஸிலிருந்து பஸ் பிடித்து வருவதற்கே நாழியாகி விடுகிறது. இதில் இன்று மழையும் வேறு சேர்ந்து கொண்டதால் முண்டியடித்து கொண்டு வருவதற்குள் திணறிப் போய் விட்டாள். டிராயிங் ரூமில் ஸ்டீரியோ அலறி விட்டு ஓய்ந்தது. கதவைத் திறந்து கொண்டு நின்றாள் அனு.

“ஹாய் மாம்!”

பதின்மூன்று வயதுதான் என்றாலும் பதினைந்து வயதுக்குரிய பதர்ப்பு. நல்ல பருமனும், உயரமாய் செழுமையுடன் விளங்கும் அனுவைக் காணும் போதெல்லாம், சுபாவிற்கு வயிற்றில் ஏதோ ஓர் இனம் தெரியாத சிலிர்ப்பு ஏற்படும்.

“கதவைத் திறக்க இத்தனை நாழியா? ஹோம் வொர்க் பண்ணாம என்ன கூத்தடிக்கிறே?” சிடு சிடுத்தாள் சுபா.

”நாளைக்கு எனக்கு லீவ். அதனாலே இன்னிக்கு ஜாலியா இருக்கப் போறேன்” – சிட்டாய் உள்ளே பறந்தாள் அனு.

“நீ என்னைக்குத்தான் ஜாலியா இல்லாமே இருந்தே?” என்றவள் பாத்ரூமிற்குள் சென்று ஈரப் புடவையை அவிழ்த்து விட்டு, வேற்று புடவை அணிந்துக் கொண்டாள். தலையை டவலில் துடைத்துக் கொண்டு வந்தவளுக்கு சூடாக ஒரு கப் டீ சாப்பிட்டால் தேவலை என்று தோன்றிற்று. டைனிங் டேபிள் இருந்த கோலத்தைக் கண்டு மீண்டும் கோபம் வந்தது. சாப்பாட்டு பாத்திரங்கள் தாறுமாறாக கிடந்தன. சாப்பிட்டத் தட்டு போட்டது போட்டபடி இருந்தது. துணியை எடுத்து வந்து சிந்திய சோற்றுப் பருக்கைகளைத் துடைத்தவள், “ஏய் அனு இங்கே வா! – இப்படியா எங்கே கண்டாலும் சாதத்தை இறைக்கிறது? வயசாச்சே தவிர, புத்தியில்லை… உன் வயசிலே நான்…”

அவளையே நோக்கும் அனுவைக் கண்டு ஒரு கணம் தயங்கினாள்.

“ஓ காட் என்ன சொன்னேன் நான்? ஐ சவுண்ட் ஜஸ்ட் லைக் மை மதர்!” டைனிங் சேரில் உட்கார்ந்தாள் சுபா.

இப்படித்தான் இதே மாதிரி தான் காலேஜிலிருந்து வந்தவுடன் விவிதபாரதியை அலற விட்டு. மில்ஸ் அண்ட் பூன்ஸ் கதை படிக்க உட்கார்ந்து விடுவாள் சுபா. பின்னணியில் அம்மாவின் குரல், ‘ஏ… சுபா… எல்லாத்தையும் எச்சில் பண்ணிக் கொறிக்கணுமா? சரியான விவஸ்தை கெட்ட ஜன்மம். உன் வயசிலே நான் இரண்டு குழந்தைகளைப் பெத்தாச்சு. இன்னும் சின்னக் குழந்தையாவே இருக்கியே…’

‘போம்மா… யாருக்கு வேணும் உன் ஆச்சாரம்? நீ என்னை நடத்தற மாதிரி எம் பொண்ணை ஒரு நாளும் நான் நடத்த மாட்டேன்!’

நிகழ்காலத்திற்கு வந்தாள் சுபா.

தன்னை நோக்கும் பெண்ணைக் கண்டவள் மென்மையாக… “அனு கண்ணு.. அம்மாவுக்கு ரொம்பத் தலையை வலிக்கிறது. ஒரு கப் டீ போட்டுண்டு வாம்மா… நான் சமையல் செய்ய ஆரம்பிக்கணும்.”

தான் படித்த சைக்காலஜி பாடத்தை நினைவுறுத்திக் கொண்டாள். குழந்தைகளிடம் பொறுமையையும், டிப்ளமெஸியையும் கடை பிடிப்பது மிக அவசியம். சுபாவின் இதமானக் குரக் கேட்டு நெகிழ்ந்து போய் அனு. “இதோ ஒரு நிமிஷத்திலே போட்டுண்டு வரேன்” என்று சமையலறைக்குள் புகுந்தாள்.

நினைவுக் கோர்வை மீண்டும் பின்னோக்கி சென்றது.

சுபாவிற்கு அம்மாவுடனும், பாட்டியுடனும் மல்லுக்கு நிற்பதே ஒரு பொழுது போக்காக இருந்தது. அவள் ஷர்மீளா டாகூர் ஹேர் ஸ்டைலில் வளைய வருவது அம்மாவிற்கு பிடிக்காத ஒன்று. ‘அது என்ன குருவி கூட்டைத் தலையிலே தூக்கி வெச்சிண்ட மாதிரி ஒரு வேஷம்? அழகாக தழைய தழைய பின்னல் போடக் கூடாதா? இந்த வேஷம் போதாதுன்னு… மஸ்லின் துணி மாதிரி ஒரு புடவை…துணிக்குப் பஞ்சம் வந்த மாதிரி ஒரு ரவிக்கை… தினம் சுப்ரபாதம் பாடித்தான் எழுப்ப வேண்டி இருக்கு. ஒரு நாள், கிழமையானா கூட ஸ்தோத்ரம் சொல்ற வழக்கம் கிடையாது. எல்லாம் என் தலையெழுத்து’ என்று அப்பாவிடம் பொருமித் தீர்ப்பாள். அவர் எதையும் காதில் போட்டுக் கொள்வது கிடையாது. தான் உண்டு; தன் லா புத்தகங்கள் உண்டு; பாலிடிக்ஸை கரைத்துக் குடிக்கும் தன் நண்பர் குழாம் உண்டு என்று மூழ்கி விடும் வர்க்கம்.

சுபா பி.ஏ. வரை படித்தது போதும் என்று நினைத்த அம்மா அவர்கள் உறவு பிள்ளை ரவியைப் பார்க்க முனைந்த போது ஒரு பிரளயமே நிகழ்ந்தது.

“நோ… நோ… நோ… அந்த சிடுமூஞ்சியைக் கல்யாணம் பண்ணின்டு அந்த பைத்தியக்காரக் கும்பலோடு வாழ நான் தயாரா இல்லை. நான எம்.ஏ. படிக்கப் போறேன்” என்று கத்தித் தீர்த்தாள். பாட்டிக்கும், அம்மாவிற்கு அவள் மேல் ஏக வருத்தம். போதாக் குறைக்கு ரவியின் அம்மாவும், ‘நல்ல வேளை என் பிள்ளை இந்த அடங்காபிடாரியைக் கல்யாணம் பண்ணிக்கலை…’ என்று நொடித்துக் தீர்த்தாள், சுபா எம்.ஏ. முடித்து வேலைக்கு சேர்ந்த பின்பும் அம்மாவிற்கு அது ஆறாத ரணமாக இருந்தது. அவள் சங்கரைக் கை பிடித்த போதுதான் அம்மா ஓரளவுக்குத் தேறினாள், ஆயிற்று… அந்த கதை நடந்து பதினைந்து வருஷமாகிறது. அதற்கு அத்தாட்சியாக இதோ குழந்தையாகவும் இல்லாமல் அடல்டாகவும் இல்லாமல் அனு. அதற்குப் பிறகு இரண்டு குறைப் பிரசவங்கள், இப்போதைக்கு அனு அவர்களுக்கு ஒரே குழந்தை.

‘உம்….’ பெருமூச்சை விட்டபடி ‘டீ போடறேன்னு போனாளே… எங்கே இந்தப் பொண்ணைக் காணேம்?’ என்று சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள் சுபா. அனு அங்கே இல்லை. காஸ் அடுப்பில் டீத்தூன் கொதித்து கண்டிப் போயிருந்தது. காஸை அனைத்து விட்டு புயலாக அனுவின் அறைக்குள் நுழைந்தாள். புத்தகக் குப்பைக்கு நடுவே வாக்மேனை காதில் பொருத்திக் கொண்டு கதைப் புத்தகத்தில் ஆழ்ந்து போயிருந்தாள் அனு. எப்படியும் இவள் எவ்வளவு கத்தினாலும் அனுவின் காதில் விழப் போவதில்லை. ஒரு வித ஏமாற்றத்துடன் சமையலறைக்குள் புகுந்து இரவுச் சாப்பாட்டை முடிப்பதில் முனந்தாள்.

காலிங் பெல் அடிக்கும் சத்தம் ஒலித்தது. கைக் காரியத்தைப் போட்டு விட்டு கதவை திறக்க விரைந்தாள் சுபா, அனு போனில் பிஸியாக யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள். சனியன் ஒண்ணு பாட்டு… இல்லேன்ன பேச்சு.. வேற ஒண்ணும் தெரியறதில்லை! மனசுக்குள் சலித்தபடி கதவைத் திறந்தாள்.

“ஹாய் டியர்!” என்று மலர்ந்த புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் சங்கர். எப்போதும் மனசைக் கொள்ளும் அந்த கொள்ளைக் குறும்பும், இதமும் இன்று மனசை தொடவில்லை.

“என்னாச்சு சுபா? ஏன் டல்லா இருக்கே?”

அந்தக் குரலின் பரிவில் நெகிழ்ந்து போய் மடை திறந்தாற் போல் அழுகை பொத்துக் கொண்டு வந்தது. கூடவே நெருஞ்சி முள்ளாக உறுத்திக் கொண்டிருந்த அந்தக் குறையும் வெளிப்பட்டது.

“தங்கும் என்று எதிர்பார்த்த அந்த இரண்டும் போயிடுத்து. ஒண்ணு கண்ணே ஒண்ணே கண்ணுனு இருக்கிற இவ ஒருத்தியும் என்ன படுத்தறா? ஒரு டிஸிப்ளினோ நேர்த்தியோ கிடையாது…” சங்கரின் முகத்தில் முத்தாய் புன்னகை ஒளிர்ந்தது. “ஏய் ஏய்.. நாட் ஸோ ஃபாஸ்ட். உங்கம்மா இந்த தடவை வந்த போது என்ன சொன்னா. அவாவா சின்ன வயசிலே இருந்ததை நன்னா ஞாபகம் வெச்சிண்டு அப்புறம் பசங்களை லவகுறை சொல்லணும் என்று சொல்லலை? காலம் தான் மாறுகிறதே தவிர, ஸிக் இன்ஸ்டிங்கட்ஸ் மாறுவதே இல்லை, இதை புரிஞ்சுண்டு ஒத்துப் போணும்” என்று நிறுத்தி நிதானமாக பேசியவன், “பை தி வே.. உனக்கு ஒண்ணே ஒண்ணுனு அனு மட்டுமா இருக்கா? நான் இல்லை!” என்று மென்மையாக அவள் கையை அழுத்தினான். சுபா புன்னகையுடன் அவனை ஏறிட்டு நோக்கினாள். தெளிவு வருவது போல் தோன்றியது.

– அக்டோபர் 1992, ராஜம் தீபாவளி மலர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *