வெள்ளை ஆட்டுக்குட்டி

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 13, 2026
பார்வையிட்டோர்: 99 
வாசிப்பு நேரம்: 6 நிமிடங்கள்

(1981ல் வெளியான ஆர்மேனியச் சிறுகதை 1991ல் மொழிபெயர்க்கப்பட்டது, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கிழத் தோட்டக்காரன் நவசார்த் குளித்து ஓய்வெடுப் பதற்காக முந்திரி மரத்தடியில் பொங்கிப் பெருகிய நீரூற்றுக்குப் போனான். வெயிலில் கருகிய தன் முகத்தின்மீது குளிர்ந்த நீர் படட்டும் என்று அவன் குனிந்தானோ இல்லையோ, அவனது குழுத் தலைவன், “ஏ நவசார்த்! சீக்கிரம் வா! உன் மகன் அர்ஷாக் வந்திருக்கிறான்!” என்று அவனை அழைக்கும் குரலைக் கேட்டான். 

”என்ன?” என்று கிழவன் பரபரப்புடன் கத்தினான். பிறகு சிரமத்தோடு நிமிர்ந்தான். தனது வயதுக்கு மீறிய வேகத்துடன் அவன் அந்த ஆள் நின்ற இடத்துக்கு விரைவாகத் திரும்பினான். “நீ என்ன சொன்னாய்? அவன் எப்போது வந்தான்? எங்கே இருக்கிறான்?” 

“அவன் கிராமத்தில் இருக்கிறான். நானே அவனைப் பார்த்தேன். நீல ஸெடான் காரை அவன் ஊர் வழியாக ஓட்டிச் சென்றான். நீ அதிர்ஷ்டசாலிதான் நவசார்த்; ஆண்டவன் உனக்கு ஒரு அருமையான மகனை அருள் புரிந்திருக்கிறார்! 

சூரியன் முன்னைவிடப் பன்மடங்குப் பிரகாசமாக ஒளிரத் தொடங்கியது. நவசார்த் காற்றில் மிதப்பதுபோல் உணர்ந் தான். பரவசத்தினால் அவன் இதயம் துடித்தது. 

நவசார்த் ஊரின் பக்கமாகப் பார்த்தபோது எதையோ சிந்தித்ததாகத் தோன்றியது. ஆனால் உடனே அவன் வேகமாகத் திரும்பி மதுவடிக்கும் இடம் நோக்கி ஓடினான். 

அவன் பத்து வருஷங்களாக அர்ஷாக்கைப் பார்க்கவில்லை. ஒவ்வொரு வருஷமும் அவன் நம்பிக்கையோடு ரஸ்தாவை நோக்குவான்; காத்திருப்பான். அவன் பொறுமையோடு காத்திருந்தான். இப்போது, நெடுங்காலத்துக்குப் பிறகு, அவன் மகனைப் பார்ப்பான். அர்ஷாக் நல்ல சமயத்தில் வந்திருக்கிறான்; பழத்தோட்டங்களில் கனிவகைகள் நன்கு பழுத்துள்ளன. அவன் இன்னும் திடமாகவும் உற்சாகமாகவும் இருந்தான். 

நவசார்துக்கு அந்த ஊரில் உறவினர் எவரும் உயிரோடில்லை. அவன் வாழ்க்கை மகிழ்வு நிரம்பியதாக அமையவில்லை. அவனுக்குச் சொந்தமாகக் குழந்தை எதுவும் கிடையாது. அவன் மனைவி பல வருஷங்களுக்கு முன் இறந்துவிட்டாள். அவனுடைய சகோதரனும் மைத்துனியும் யுத்தத்தின்போது பட்டினியால் செத்துப்போனார்கள். அவர்களின் ஒரே மகன் அர்ஷாக் மட்டும் எஞ்சியிருந்தான். 

ஓடை ஓரத்தில் தரைமீது கிடந்த மண்வெட்டியை எடுத்து நவசார்த் தோண்ட ஆரம்பித்தான். மண் ஈரமாக, திராட்சை ரச வாடையுடன் இருந்தது. அவன் பத்து வருஷங்களுக்கு முன்பு புதைத்து வைத்த ஒரு சிறு ஜாடியை வெளியே எடுத்தான். அந்த மண்பாண்டத்தின் குளிர்ந்த ஸ்பரிசம் அவனுக்கு மகிழ்வளித்தது. திராட்சை மதுவின் நுண்மையான நறு மணத்தை நுகர்ந்தபடி அவன் புன்னகைத்தான். “அது சிங்கப்பாலாக மாறிவிட்டது” என்று தானே சொல்லிக் கொண்டான். பிறகு, ஆற்றின் கரை அருகே நின்ற பெரிய மல்பெரி மரத்தின் கீழே தர்பூசணிப் பழங்களில் மிகவும் பெரிதாக இருந்தது நன்கு முற்றியிருந்தது என்பதை அவன் நினைவு கூர்ந்தான். அதன் காம்பை நறுக்கி, அவன் தனது நீண்ட சட்டையின் விளிம்பினால், பழத்தின்மீது படிந்திருந்த வெண்ணிறத் தூசியைத் துடைத்தான். அதன் மினுமினுப்பான கோடுகளை வியந்தான். 

“என் அர்ஷாக்கிற்கு தர்பூசணிப் பழங்கள் பிடிக்கும்” என்று அவன் முணுமுணுத்தான். கீழே முழந்தாளிட்டு அமர்ந்து, பழத்தைச் சுற்றிக் கைகளை வைத்து, கடுமையாக அழுத்தினான். அப்போது காதை அதன்மீது பதித்திருந்தான். பழத்திலிருந்து எழுந்த ஓசையைக் கேட்டு அவன் திருப்தியோடு தலையசைத்தான். அப்புறம் அவன் அத்திமரத்துக்குப் போனான். சிரமத்தோடு அதன்மீதேறி, தேன் என இனித்த பழங்களை அங்கும் இங்கும் பறவைகள் கொத்தியிருந்தவற்றைப் பறிக்க லானான். மிகச் சிறந்த பழங்களாகத் தேடிப்பறித்து அவற்றைப் பிரகாசமான ஒரு கூடையில் மெதுவாகச் சேர்த்துவைத்தான். 

பின்னர் நவசார்த் கரை வழியே, ஆறு மாதமேயான வெள்ளைநிற ஆட்டுக்குட்டி ஒன்று மேய்ந்துகொண்டிருந்த இடத்துக்குப் போனான். அந்தக் குட்டியை அவன் விசேஷமான ஒரு சந்தர்ப்பத்துக்காகக் காப்பாற்றிவந்தான். 

“அர்ஷாக் வீட்டுக்கு வந்துவிட்டான். அந்த நாளைக் காண்பதற்கு எனக்குக் கொடுத்துவைத்திருக்கிறது” என்று
நவசார்த் தனக்குத் தானே கூறிக்கொண்டு, ஆட்டுக்குட்டியை அவிழ்த்தான். அது பலமாகக் கத்தியது. 

“நாம் போகலாம், பயலே. வா. அர்ஷாக் வீட்டுக்கு வந்திருக்கிறான்” என்று நவசார்த் சொன்னான். 

கிராமத்துக்குச் செல்லும் செங்குத்தான பாதையில் அவன் ஏறி நடந்தான். கனத்த கூடை அவன் தோள்களை அழுத்தியது. மது ஜாடியில் தெறித்தது. எளிய சாதுவான ஆட்டுக்குட்டி சில சமயம் அவனுக்கு முன்னே ஓடியது, அல்லது அவனுக்குப் பின்னால் நடந்தது. 

வழியில் அவன் சந்தித்த ஆட்கள், பகல் நேரத்தில் இவ்வளவு சீக்கிரமாக எங்கே போகிறாய்?” என்று கேட்டார்கள். “அர்ஷாக் பார்த்துப் போவதற்காக வீட்டுக்கு வந்திருக் கிறான்” என்று கிழவன் பெருமையோடு பதிலளித்தான். 

வழியில் ஒவ்வொரு மரமும் செடியும், ஒவ்வொரு கல்லும் ஊற்றும் அர்ஷாக்கின் குழந்தைப் பருவத்தை அவனுக்கு நினைவூட்டின. அநேக தடவைகள் அவன் குழந்தையை முதுகில் சுமந்துகொண்டு அந்தச் செங்குத்தான பாதையில் சென்றிருக் கிறான். ஓய்வு பெறுவதற்காக அவன் இந்தக் கல்மீது அமர்வான். நவசார்த் ஒரு பீயர் பழத்தை அர்ஷாக்கிடம் கொடுத்து, அவனது மூக்கை தன் நீண்ட சட்டையின் விளிம்பால் துடைப்பான். அர்ஷாக் நீர் குடிக்க ஆசைப்பட்ட ஊற்று அதோ இருந்தது. நவசார்த் தன் கைகளில் நீரை அள்ளுவான். அவன் கைகளிலிருந்து அர்ஷாக் குடிப்பான். சிறிய பழத் தோட்டம் இதோ இருந்தது. மரங்கள் இன்னும் வளமாகக் கனிகள் தந்தன. பனிக்காலத்திலும் வெகுநாட்கள் பசுமையாக நின்றன. அர்ஷாக் ஏழு வயதாக இருந்தபோது, அந்தச் செர்ரி மரத்திலிருந்து கீழே விழுந்து காலை ஒடித்துக்கொண்டான். நவசார்த் அவனைச் சுமந்து, தூரத்துக் குடியிருப்பில் வசித்த டாக்டரிடம் கொண்டுபோனான். 

அப்புறம், அவன் அந்தப் பையனைக் கல்வி கற்பதற்காக அனுப்பி வைத்ததும், நகரவாழ்வுக்குத் தக்கபடி அர்ஷாக் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் விற்றுவிட்ட எல்லாப் பொருள் களையும்பற்றி நவசார்த் எண்ணினான். அது ஒரு நீண்ட பட்டியல் ஆகும். ஆனால் அர்ஷாக் யுனிவர்சிட்டியில் கற்றுத் தேர்ந்தான். அதன் பிறகு மாஸ்கோவில் மேல்படிப்புப் படித்தான். உலகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தான். 

தலைநகரில் அர்ஷாக் செய்துகொண்டிருக்கும் மிக முக்கிய மான வேலைபற்றியும், அவனுடைய பெரிய காரைப்பற்றியும், மாஸ்கோவில் ரொம்பப் பெரிய வீட்டில் அவன் வசித்தான் என்பதையும் நவசார்த் தன் ஊர்க்காரர்களிடம் அடிக்கடி சொல்வான். 

கிழவன் கிராமத்தை அடைவதற்கு அவசரப்பட்டான். மது ஜாடியில் தெறித்தது. எளிமையான, பயந்த ஆட்டுக்குட்டி அவனைப் பின்தொடர்ந்தது. 

அவன் முடிவில் வீடு சேர்ந்தான். ஆனால் அர்ஷாக்கின் காரை வெளியே காணவில்லை. “அவன் ஏன் நேரே இங்கு ஓட்டி வரவில்லை?” என்று நவசார்த் ஆச்சர்யப்பட்டான். ஆ என்ன பேச்சு இது! இங்கே கற்கள் ரொம்பவும் கூர்மையாக இருக்கின்றன. டயர்கள் கெட்டுப்போகும் என்று அவன் பயந் திருப்பான். அவன் வீடு வரை காரை ஒட்டி வராததும் நல்லது தான்.” 

அவனது ஒற்றை மாடித் தட்டுக்கட்டு வீடு, ஒரு மெத்தையும் மண்தரையும் கொண்டு, கழுகின் கூடுபோல் மலைச்சரிவில் ஒட்டி யிருந்தது. அநேக வீடுகளில் அதுவும் ஒன்று. 

நவசார்த் முற்றத்தில் புகுந்து, ஜாடியையும் கூடையையும் தரையில் வைத்தான். ஆட்டிக்குட்டிக்கு ஒரு கைப் புல் வீசிவிட்டு சுற்றுமுற்றும் பார்த்தான். அவன் வாழ்விலேயே முதல் முறையாக அந்த வீடு பரிதாபத்துக்கு உரியதாகவும் தளர்ந்து குன்றியும் காணப்பட்டது அவனுக்கு. 

“நல்லது. இது அர்ஷாக்கின் வீடுதானே? இங்குதான் அவன் வளர்ந்தான். தன் சொந்த வீட்டைப் பார்த்து அவன் வெட்கப் படமாட்டான்” என்று அவன் தனக்கு ஆறுதலாகச் சொல்லிக் கொண்டான். முற்றத்தைச் சுத்தம் செய்யத் தொடங்கினான். 

“வாழ்த்துகள், நவசார்த். அர்ஷாக் வந்திருக்கிறானே.” பக்கத்து வீட்டுக் கிழவிதான் வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தபடி பேசினாள். 

நவசார்த் சந்தோஷப் பெருக்கினால் சிவந்தான். “நன்றி. உன்னைப் பிரிந்து ஊர் சுற்றுகிறவனும் திரும்பிவந்து சேரட்டும்.” 

“நான் அர்ஷாக்கைப் பார்த்தேன்.” 

“அவன் இங்கே வந்தானா?” 

“இல்லை. நான் ஊசிகள் வாங்கக் கடைக்குப் போனேன். பண்ணை அலுவலகத்தின் முன்னால் அவன் நிற்பதைப்பார்த்தேன். எவ்வளவு நேர்த்தியான இளைஞனாக இருக்கிறான். அவன் ஒரு ராஜா மகன் இல்லை என்று யாரும் சொல்லமாட்டார்கள். அவன்மேல் வைத்த கண்ணை என்னால் திருப்பவே முடியவில்லை. ஆண்டவன் உனக்கு அருள்புரியட்டும்.” 

கிழவன் உணர்ச்சி துளும்பிய குரலில் “நன்றி” என்றான். அவன் முற்றத்தைச் சுத்தப்படுத்துவதில் ஆர்வமாக ஈடுபட்டான். 

முதலில் அவன் அசுத்தங்களை அகற்றினான். “என் பையன் செருப்புகளை அசிங்கமாக்குவதை நான் விரும்ப மாட்டேன்.” அப்புறம், துருத்திக்கொண்டிருந்த ஒரு ஆணியை கல்லினால் அறைந்து தட்டினான். “அர்ஷாக்கின் கை அதிலே பட்டால், அவன் சட்டை கிழிந்துபோகும்.” 

நவசார்த் கதவைத் திறந்தான். வெறும் சுவர்மீது ஒரு கட்டில் கவனிப்பற்றுச் சாய்ந்திருந்தது. “அர்ஷாக், நீ இந்தக் கட்டிலில் படுத்து உறங்கியது நினைவிருக்கிறதா? நான் இங்கே தரையில் தூங்கினேன் என்று அவனிடம் சொல்லுவேன்.” இப்படி உரக்கச் சிந்தித்தவாறே அவன் கட்டிலைச் சரிப்படுத்தினான். “இதுதான் நீ சாப்பிட்ட பழைய கிண்ணம். பார், அர்ஷாக்! இதோ உன் மரக்கரண்டி. தச்சன் மானஸிடமிருந்து நான் இதை வாங்கி வந்த நாள் உனக்கு நினைவிருக்கிறதா? அதில் பூ வேலைப் பாடு எதுவும் இல்லையே என்று நீ கோபம் கொண்டாய். உடனே நான் அதை ஓவியனிடம் எடுத்துப்போய், உனக்காக வர்ணம் தீட்டச் செய்தேன் என்று அவனிடம் கூறுவேன்.” 

இவ்வாறு நினைப்பிலேயே அர்ஷாக்குடன் உரையாடிக் கொண்டு, அவன் ஊற்றுக்குப்போய் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வந்தான். முற்றத்தை, மெத்தையை, உட்புறத்தின் தரையை, தண்ணீரால் தெளித்தான். பிறகு பெருக்கத் தொடங்கினான். 

மீண்டும் அடுத்த வீட்டுக் கிழவியின் தலை வேலிக்கு மேலே தோன்றியது. 

‘நவசார்த், அர்ஷாக் சேர்மன் வீட்டுக்குப் போயிருக்கிறான், தெரியுமா?” 

“தெரியாதே. அங்கே அவன் எப்போது போனான்?” 

“நீ வருவதுக்குச் சற்று முன்புதான்.” 

“வீட்டில் யாரும் இல்லை என்பதை அவன் பார்த்திருக்க வேண்டும். அதனால் ஓய்வெடுக்க அங்கே போயிருப்பான். அவன் வந்து சேருவான். வழி தவறிவிட மாட்டான்.” 

“நிச்சயமாக.” 

நவசார்த் சிறிதளவு விறகுச் சுள்ளி எடுத்துவந்து, வெளிப்புற அடுப்பின் பக்கத்தில் அடுக்கிவைத்தான். பிறகு இடுப்பு வாரிலிருந்து கத்தியை எடுத்தான். ஆட்டுக்குட்டி அருகில் போனான். கடைசி நேரத்தில் மனம் மாறினான். “அர்ஷாக் வருகிறவரை காத்திருப்பேன்” என்று அவன் தீர்மானித்தான். சேர்மனின் இரட்டைமாடி வீடு இருந்த திசையைப் பார்த்தான். ‘அவன் ஏன் இன்னும் அங்கேயே இருக்கிறான்? சீக்கிரம் இருட்டி விடுமே. அத்திப் பழங்கள் கெட்டுப்போகும். கார்னல் பழம் ருசி இழந்துவிடும்.” 

அவன் பழங்களைக் கூடையிலிருந்து வெளியே எடுத்து சன்னல் விளிம்பில் வைத்தான். பிறகு, அண்டை வீட்டாரிடமிருந்து ஒரு புதிய மேஜை விரிப்பு இரவல் வாங்கி, மேஜைமீது பரப்பினான். கம்பளியை உதறி, சாய்வு ஆசனத்தை மூடினான். அதன்மேல் ஒரு தலையணையை வைத்தான். 

இப்போது எல்லாம் தயார். இன்னும் அர்ஷாக் வரவில்லை. “என்ன விஷயம்? அவன் ஏன் சேர்மன் வீட்டுக்குப் போனான்?” நவசார்த் எரிச்சலோடு வியப்புற்றான். அவன் கைகளில் ஒரு நடுக்கம் பாய்ந்தது. ஆயினும், இவ்வாறு சொல்லி, தன்னைத் தானே அவசரமாகத் தேற்றிக்கொண்டான் : 

“அர்ஷாக் முக்கியமான மனிதன். அங்கே எட்டிப்பார்த்து, கிராமத்தில் நிலவரங்கள் எப்படி இருக்கின்றன என்று சேர்மனிடம் கேட்டாக வேண்டுமே. எனக்கு ஏன் இந்த ஆத்திரம்? அவன் இரண்டு நாட்கள் என்னுடனேயே இருக்கப் போகிறான். அவனை நான் என் பார்வையிலிருந்து தப்பவிட மாட்டேன். இழந்த காலத்தை நாங்கள் சரிக்கட்டி விடுவோம்.” 

சூரியன் அஸ்தமித்தது. ஆனாலும் அர்ஷாக் இன்னும் வீட்டுக்கு வரவில்லை. கிழவனின் ஆவல் அதிகரித்தது. ஒருகணம் அவன் சேர்மன் வீட்டுக்குப் போகக் கிளம்பினான். ஆனால், உடனே தன் நினைப்பை மாற்றிக்கொண்டான். 

அவன் வெளிமுற்றத்துக்குப் போய், பக்கத்து வீட்டுக்காரியின் பேரனைக் கூப்பிட்டான். 

“அங்கே ஓடி அர்ஷாக் என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று பார். நான் வீட்டுக்கு வந்துவிட்டேன்; அவனுக்காகக் காத்திருக்கிறேன் என்று அவனிடம் சொல்லு’ என்றான். 

சிறுவன் வெகு விரைவில் திரும்பினான். 

“என்ன, நீ அர்ஷாக்கைப் பார்த்தாயா?”

“ஆமாம்.” 

“அவன் என்ன செய்கிறான்?” 

“ஒயின் குடிக்கிறான்.” 

“நான் வீட்டுக்கு வந்துவிட்டேன் என்று அவனிடம் சொன்னாயா?” 

“ஆமாம்.” 

“அவன் என்ன சொன்னான்?” 

“சரிதான் என்றான்.” 

நவசார்த் அவ் வார்த்தைகளைத் தனக்குள் திரும்பவும் சொன்னான். “நல்லது. அப்படியானால் அவன் சீக்கிரம் வீடுவந்து சேர்வான் என்று அர்த்தம். நான் அடுப்பைப் பற்றவைக்கிறேன். 

விரைவில் அடுப்பில் தீ நன்கு பற்றி எரியும்படி செய்தான். அப்புறம், இறைச்சி சுடும் சாதனங்களைச் சுத்தப்படுத்தினான். வீட்டினுள் மறுபடி போனான். விளக்கிலிருந்த தூசியைத் துடைத்தான். காத்திருப்பதற்காக மேஜை முன் அமர்ந்தான். 

நேரம் முடிவில்லாமல் இழுபட்டது. கிராமத்தில் விளக்குகள் எரியலாயின. வீடுகள் இதமான தோற்றம் கொண்டன. தெரு ஓசைகள் அடங்கிக்கொண்டிருந்தன. பின்னர், தூரத்தில் நாய்கள் சோகமாய்க் குரைக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. 

அர்ஷாக் இன்னும் வரவில்லை. தீ அணைந்தது. அடுப்பில் ஒரு குவிய சாம்பலே எஞ்சியது. ஆட்டுக்குட்டி புல்மீது படுத்து அசைபோட்டுக்கொண்டிருந்தது. நவசார்த் செவிகளைக் கூர்மை யாக்கி இருட்டுக்குள் கவனித்தான். அவன் கண்கள் வலித்தன; நீர் பெருக்கத் தொடங்கின. தலை கனத்தது. அவன் எழுந்தான். ஆனால், கால்கள் நகர மறுத்தன. “நான் ஏன் அவனிடம் பிச்சை கேட்கப் போகவேண்டும்? அவனைவிட நான் வயது முதிர்ந்தவன். அவன்தான் என்னிடம் வரவேண்டும்” என்று அவன் குறைபடத் தொடங்கினான். ஆனால், பிறகு திரும்பவும் இப்படிச் சொல்லித் தன்னைத் தேற்றினான்: “நல்லது. அவன் முக்கியமான மனிதன். ஒருவேளை சேர்மனோடு கலந்து பேசவேண்டிய முக்கிய வேலை ஏதேனும் அவனுக்கு இருக்கலாம். அவன் கட்டாயம் காலையில் வருவான்.” 

ஆனாலும்கூட, அவன் காத்திருந்தான். இரவில் வெகுநேரம் வரை காத்திருந்தான். இருட்டினுள் விடாது உற்றுப் பார்த்த தனால் கிழவனின் கண்கள் மங்கிப்போயின. அவன் மெதுவாகத் தூக்கத்தின் வசப்பட்டான். நவசார்த் மேஜை முன் உட்கார்ந்த படியே தூக்கத்தில் ஆழ்ந்தான். 

எவ்வளவு நேரம் தூங்கினான் என்பதை அவன் அறியான். முற்றத்திலிருந்து கூப்பிட்ட அடுத்த வீட்டுக்காரியின் குரலால் அவன் விழிப்படைந்தான். கண்களைத் திறந்ததும், சூரியனின் முதல் கிரணங்கள் சன்னலுக்குள் எட்டிப்பார்ப்பதைக் கண்டு வியப்புற்றான். 

”நவசார்த்! ஏ நவசார்த்!” என்று பக்கத்து வீட்டுக்காரி கூப்பிட்டாள். 

அவன் வீட்டைவிட்டு வெளியே பாய்ந்தான். அடுத்த வீட்டுக்காரி வேலிக்கு மேலாகப் பார்த்துக்கொண்டிருந்தாள். “இன்று எப்படி நீ இவ்வளவு நேரம் தூங்கிவிட்டாய்?” என்று கேட்டாள். 

“என்ன, அர்ஷாக் வீட்டுக்கு வந்துகொண்டிருக்கிறானா?” 

”இல்லை” என்று கூறி அவள் தலையை ஆட்டினாள். “உன் அர்ஷாக் ஊரைவிட்டுப் போகிறான். ரஸ்தாவைப் பாரேன்.” 

கூரை இடிந்து தலைமீது விழுந்தது போன்ற உணர்வு நவசார்துக்கு ஏற்பட்டது. அவன் தணிவான தொழுவத்துக்கு ஓடி, கூரைக்கு ஏறினான். அர்ஷாக்கின் கார் சாலையின் வழியே, சூரிய ஒளியில், பளபளத்துக்கொண்டு விரைந்தது. சிறிதாகிச் சிறிதாகி சீக்கிரத்தில் மறைந்தது. 

நிதானமற்ற அவனது நடை ஒரு கிழவனுக்கு உரியதுதான். நவசார்த் பழத்தோட்டங்களைநோக்கிச் சென்ற பாதையில் தன் வழியே இறங்கி நடந்தான். தரையையே பார்த்த அவன் கண்கள் குழிக்குள் ஆழ்ந்தவையாய் தோன்றின. அவனது முதுகு முன்னை விட அதிகம் குனிந்து காணப்பட்டது. வெண்ணிற ஆட்டுக்குட்டி அவனுக்குப் பின்னால் துள்ளி ஓடியது. 

– ஸெரோ கான்ஸாடியன் (1915) 

– ஆர்மேனியச் சிறுகதைகள், தொகுப்பாசிரியர்: ஸோஃபி அவாகியான், ஆங்கில மொழிபெயர்ப்பு: ஃபெய்னா கிளாக்கொலீவா, ஏ.மக்ஹொவ்லியன், ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், தமிழாக்கம் முதற் பதிப்பு: 1991, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *