கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 10, 2026
பார்வையிட்டோர்: 84 
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நம் நாடு முற்காலத்தில் பல பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அப் பிரிவுகளில் நடுநாடு என்பது ஒன்று. அந் நடுநாட்டில் திருவாமாத்தூர் என்று ஓர் ஊர் உண்டு. அவ்வூரின் கோயிலில் முன்னாளில் ஓர் ஆற்றல் வாய்ந்த பாறை இருந்தது. அப் பாறையின் முன் ‘பொய் சொல்லுபவர் இறந்துபோவார்கள்’ என்பது அக்கால மக்களின் நம்பிக்கை. 

திருவாமாத்தூரில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் மிகவும் கெட்ட குணங்கள் உடையவன். பொய் கூறியே தன் வாழ்நாளைக் கழித்தான். சூதாடுதல். களவாடுதல் போன்ற தீய பழக்கங்கள் அவனிடம் மிகுதியாக இருந்தன. அவன் திருவாமாத்தூரில் இருந்த அந்தப் பாறையைப்பற்றி மிகவும் இழிவாக நினைத்திருந்தான். அதனைத் தான் ஏமாற்றிவிட முடியும் எனவும் நம்பியிருந்தான். எனவேதான் அவன் பொய் சொல்ல அஞ்சவில்லை. 

அவனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் நல்லவன். எவ்விதத் தீய பழக்கமும் அவனிடம் இல்லை; நேர்மையாக வாழ்ந்துவந்தான். இவ்விரு வருக்கும் மிகுந்த செல்வம் இருந்தது. அவர்களது முன்னோர்கள் பெரும் பொருள் சேர்த்துவைத் திருந்தனர். கொடியவனாகிய அண்ணன் எல்லாப் பொருளையும் தானே எடுத்துக்கொள்ள எண்ணினான், தன் தம்பிக்கு எதுவும் கொடுக்காமல் ஏமாற்றிவிட முடிவு செய்தான். எனவே, அவன் எல்லாப் பொருள்களையும் விற்றுத் தங்கக் கட்டிகளாக மாற்றிவிட்டான். இச் செய்தி தம்பிக்குத் தெரியாது. நீண்டநாள் பொருள் சம்பாதிக்க வெளியூர் சென்று விட்டமையால் அண்ணன் பொருள்களை எல்லாம் விற்றதை அவன் அறியவில்லை. 

அண்ணன் தங்கத்தை எல்லாம் ஒருவரும் அறியாமல் வைத்திருக்க வழி தேடினான். ஒரு பெரிய மூங்கில் தடியை எடுத்தான், அதனை நன்கு துளைத்தான். தங்கக் கட்டிகளை எல்லாம் அதனுள் போட்டான். எப்போதும் அத் தடியைத் தன் கையிலேயே வைத் திருந்தான். பார்த்தவர்கள் எல்லாம் அவன் வெறும் கைத்தடி வைத்திருப்பதாகவே எண்ணினர். 

வெளியூர் சென்றிருந்த தம்பி திரும்பிவந்தான். தங்கள் குடும்பப் பொருள்கள் அண்ணனால் விற்கப் பட்டமையை அறிந்தான். ஊரில் உள்ளவர்களும் அப்போதுதான் அண்ணனது வஞ்சகத்தை அறிந்தனர். அவர்கள் தம்பியைப் பார்த்து, ‘உன் அண்ணன் உன் பங்கினையும் விற்றுவிட்டான். நீ சென்று உனக்குரிய பங்கினைக் கேட்டு வாங்கிவிடு” எனக் கூறினர். உடனே தம்பி அண்ணனிடம் சென்றான். “நம் முன்னோர் தேடிவைத்த பொருள்கள் எங்கே? எனக்குரிய பங்கினை எனக்குக் கொடுத்துவிடு” எனக் கேட்டான். அதற்கு அவன் அண்ணன், “நம் குடும்பத்தில் மிகுந்த கடன் இருந்தது. நம் முன்னோர் தேடிவைத்த பொருள் அந்தக் கடனுக்குச் சரியாகிவிட்டது. உன்னை நான் ஏமாற்றிப் பொருளை வைத்திருக்கவில்லை. உனக்கு நம்பிக்கையில்லை என்றால் என் வீட்டிற்கு வந்து பார்” எனக் கூறினான். தம்பி, அண்ணன் வீட்டிற்குச் சென்று பார்த்தான். அங்கு எப்பொருளும் இல்லை. அவன் மனம் வருந்தினான். 

ஊர் மக்கள் நடந்ததைக் கேட்டு வருந்தினர். அண்ணன், பொருள்களை எங்கு வைத்துள்ளான் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவர்கள் அண்ணனை நேரில் கேட்டுவிட முடிவு செய்தனர். அனைவரும் அண்ணனிடம் சென்றனர். “நீ உன் தம்பியை ஏமாற்றாதே. அவனுக்குச் சேரவேண்டியதை அவனிடம் கொடுத்துவிடு” என்றனர். அதற்கு அண்ணன், “நான் அவனை ஏமாற்றவில்லை. நான் என் குடும்பக் கடனை அடைத்தேன். என் தம்பிதான் என்னை ஏமாற்றிப் பொருள்களை ஒளித்துவைத் துள்ளான்’ எனக் கூறினான். ஊரார் அப்படியானால் கோயிலில் உள்ள பாறையின்முன் வந்து, “நான் என் தம்பிக்குரிய பொருளை வைத்திருக்கவில்லை என்று உறுதி கூறு. அப்போதுதான், நாங்களும் உன் தம்பியும் நம்புவோம்” என்றனர். அண்ணன், “நான் ஏமாற்ற வில்லை. பொய் பேசவும் இல்லை. எனவே பாறையின் முன் வந்து உறுதி கூறுகிறேன். எனக்குப் பயம் ஒன்றும் இல்லை’ எனக் கூறினான். அவ்வூர்க் கோயிலில் உள்ள பாறையின்முன் அனைவரும் கூடினர். மூத்தவன் தன் கையில் இருந்த தடியைத் தம்பியிடம் கொடுத்து, “இதனை வைத்துக்கொள்’ எனக் கூறினான். தம்பியும் மூங்கில் தடியை வாங்கித் தன் கையில் வைத்துக் கொண்டான். 

அண்ணன் பாறையின்முன் சென்றான்; பயபக்தி யுடையவன்போல் நடித்துப் பாறையைத் தொட்டுக் கும்பிட்டான். “தெய்வத்தன்மை பொருந்திய பாறையே] என் முன்னோர்கள் சேர்த்த பொருள் ஒன்றும் இப்போது என்னிடம் இல்லை. அவை எல்லாம் இப்போது என் தம்பியிடந்தான் உள்ளன. இது முற்றிலும் உண்மை’ எனக் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட அனை வரும். “இவன் இப் பாறையின்முன் இப்படிப் பொய் கூறுகிறானே! இவனை இப் பாறை கொன்றுவிடும். பொய் கூறுபவரையும் வஞ்சகரையும் இந்தப் பாறை பழிவாங்காமல் விடாது” எனப் பேசிக் கொண்டனர் ஆனால், பாறை அவனை ஒன்றும் செய்யவில்லை பின்னர்த் தடியைத் தம்பியிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்றான். 

மக்கள், “இவன் ஏமாற்றவில்லைபோலும். அதனால்தான் பாறை இவனைத் தண்டிக்கவில்லை. நாம்தான் இவனைத் தவறாக எண்ணிவிட்டோம்” எனப் பேசிக் கொண்டனர். தம்பிக்கு ஒன்றும் விளங்க வில்லை. அண்ணன் கூறுவது பொய் என்பது அவனுக்குத் தெரியும். அப்படியானால் “பாறை ஏன் அவனைத் தண்டிக்கவில்லை” என அறியாமல் திகைப்பு அடைந்தான். “பாறையே நீயும் பொய் பேசுபவர்க்குத் துணை செய்கிறாயா? நீயுமா ஏமாற்றுகிறாய்?” என அழுது புலம்பினான். மற்றவர்கள் அவனைத் தேற்றி அழைத்துச் சென்றனர். 

மூத்தவன் செய் தவை அனைத்தும் அவனுடன் சேர்ந்து இருந்த சிலருக்கு நன்றாகத் தெரியும். அவர் களும் அவனைப்போன்ற வஞ்சகர்களே. இந்தச் செயல் அவர்களுக்கும் பெரிய வியப்பாக இருந்தது. ‘இவன் பொய் சொல்வதால் பாறை இவனைத் தண்டித்துவிடும்’ என அவர்களும் அஞ்சியிருந்தனர். இப்போது அப் பாறைமீதிருந்த அச்சம் அகன்றுவிட்டது. அவர்கள் உண்மையை அறிய விரும்பி அண்ணனைப் பார்த்து, “நீ உன் தம்பியை ஏமாற்றிப் பொருளை மறைத்ததை நாங்களும் அறிவோம். அப்படியிருந்தும் நீ கூறிய பொய்யினால் அப் பாறை உன்னைத் தண்டிக்க வில்லையே ஏன்? இது எங்களுக்கு வியப்பாக இருக் கிறது’ என்றனர். 

“உங்களுக்குத் தெரிந்தது அவ்வளவுதான். இந்தப் பாறையை நான் என் அறிவினால் ஏமாற்றிவிட்டேன். என் கைத்தடியில்தான் எல்லாப் பொருள்களும் தங்கமாக இருக்கின்றன. நான் பாறையின்முன் உறுதி மொழி சொல்லும்போது கைத்தடியை என் தம்பியின் கையில் கொடுத்துவிட்டேன். எனவே, ‘முன்னோர் பொருள் முழுவதும் என் தம்பியிடமே உள்ளன’ எனக் கூறினேன். அது பொய்யில்லை அன்றோ? எனவே தான் பாறை என்னைக் கொல்லவில்லை. அறிவினால் நாம் தெய்வத்தைக்கூட ஏமாற்றிவிடலாம்” எனச் செருக்கோடு கூறினான். அவன் கூறியதைக் கேட்ட தீய நண்பர்கள் கைகொட்டிச் சிரித்தனர். அப்போது ஒரு பெரிய பாம்பு அங்கு வந்து அண்ணனைத் தீண்டியது. பாம்பினைக் கண்டதும் மற்றவர் ஓடி விட்டனர். உதவி செய்ய ஒருவருமில்லை. நஞ்சு தலைக்கு ஏறி அண்ணன் இறந்துபோனான். 

“மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின் 
அறன்சூழும் சூழ்ந்தவன் கேடு.” -திருக்குறள் 

”வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! யாவரையும்
வஞ்சித்தோம் என்று மகிழன்மின் – வஞ்சித்த 
எங்கும் உளன்ஒருவன் காணுங்கொல் என்றஞ்சி 
அங்கம் குலைவது அறிவு.” – நீதிநெறி விளக்கம்.

– கதைத் திரட்டு, ஆறாம் வகுப்பு, முதற் பதிப்பு: 1980, தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம், சென்னை.

புலவர் த.முருகேசன் புலவர் த. முருகேசனார் என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சிறந்த தமிழறிஞரும், மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் முக்கிய ஆளுமையும் ஆவார். புலவர் த. முருகேசனார் (24.06.1921 -18.02.2005) - முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: சிதம்பரம் புலவர் த. முருகேசனார் அவரைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன: மாநாடுகள் ஒருங்கிணைப்பு: இவர் 1954 ஆம் ஆண்டில் மாகாணத் தமிழாசிரியர் கழகத்தின் நான்காவது மாநாட்டினை அண்ணாமலை நகரில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *