இதயத்தால் வாழ்ந்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 5, 2026
பார்வையிட்டோர்: 31 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

”அடியே பத்மா! இன்று போயாவுக்கு முதல் நாள்! அவர் வந்திருப்பார்” லீலா சிந்தனையோடு கூறிவிட்டு நாற் காலிக்குள் அமர்ந்திருக்கும் பத்மாவை உற்றுப்பார்க்கிறாள். 

“யாரைச் சொல்கிறாய் லீலா!” பத்மா குழப்பத்தோடு கேட்கிறாள். 

”அவரைத்தான் சொல்கிறேன்! என்னுடைய அவரை பத்மா! எங்கள் உள்ளங்கலந்த காதலைத் தெரிந்து கொண்டும் அவர் பெற்றாரைப் பணத்தைக்காட்டி மருட்டி, அந்தக் கல்நெஞ்சக்காரி அவரை அபகரித்துக் கொண்டாலும் அவர் இதயம் என்னை மறக்கவில்லையடி!”

பேசிக்கொண்டு போனவள் திடீரென்று பேச்சை நிறுத்தி நாணிக்குனிந்து கன்னங்களில் செம்மையும் கண்களில் படபடப்புமாக புன்முறுவலோடு நிற்கிறாள். மேனியிலும் இலேசான இன்ப நடுக்கம்!

திடிரென்று அவளில் ஏற்பட்ட மாற்றத்தை அவதானித்துப் பத்மா வியந்து கொண்டிருக்கையில் “பத்மா அவர் என்னை இப்பொழுது அன்போடு அணைத்து என் கன்னங்களில்…” என்று நிறுத்திக் கன்னத்தை வருடிக் கொண்டபோது லீலாவின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் துளும்புகிறது.

”எனக்கொரு குறைச்சலுமில்லைப் பத்மா! அவர் எங்கிருந்தாலும் அவர் இதயத்தில் நிகழ்வதை எனக்காக அவர் உள்ளம் உருகுவதை அப்படியே புரிந்து கொள்ளும் வலிமையை என் அன்பின் சக்தி எனக்கு வரமளித்திருக்கிறது.” என்ற லீலா அதிர்ந்து விழித்து,

”ஐயோ! அவரை அந்த நெஞ்சழுத்தக்காரி ஏனோ ஏசித்தொந்தரவு தந்து…….. பாரடி! அவர் அழுகிறாரடி!” என்று தேம்பி அழுது நின்று பதறுகிறாள்.

பாவம் லீலா! எப்படி மெலிந்துவிட்டாள். பைத்தியம் வேறு பிடித்துவிட்டது போலிருக்கிறதே. என்று பத்மா பரிதாபமாகப் பார்த்திருக்கையில் லீலா துள்ளி விழுந்து நிலத்தில் புரண்டு.

“அடியே! அவர் நஞ்சு குடித்து விட்டாரடி!” என்று அலறித்துடித்தெழுந்து கொட்டும் மழை யுள் அலங்கோலமாக ஓடுகிறாள்! அவளைத் துரத்திக்கொண்டு பத்மா ஓடுகிறாள்.

எத்தனையோ வளைவுகளில் திரும்பி ஓடி ஒரு வீட்டினுள் லீலா நுழைந்தபோது அங்கே…… என்ன அதிசயம்…… பலர் கதறும் அழுகை, ஒப்பாரி!

பத்மா பதறிக்கொண்டு உள்ளே சென்ற பொழுது கட்டிலில் கிடந்த ஒரு ஆணின் பிணத்தைச் சூழ்ந்திருந்து பல பெண்கள் அழுது கொண்டிருக்கின்றனர். ஒரு பெண் லீலாவின் வெறும் பிணத்தைக் கூந்தலில் பற்றி இழுப்பதும், காலால் மிதிப்பதும், உருட்டுவதுமாகப் பத்திரகாளியாக நிற்கிறாள். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *