உண்மையான உழைப்பிற்கு கிடைத்த பரிசு
கதையாசிரியர்: இளையவேணி கிருஷ்ணா
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: October 9, 2026
பார்வையிட்டோர்: 117

முகுந்தன் மிகவும் சிரமப்பட்டு கண்களை திறந்து பார்த்தபோது விடியற்காலை ஐந்து மணி என்று கடிகாரம் காட்டியது… மிகவும் நிதானமாக எழுந்து அமர்ந்து இரு கைகளையும் தேய்த்து கண்களில் ஒற்றிக் கொண்டு அப்படியே கண்களை மூடி நிதானமாக மூச்சை இழுத்து விட்டான் ஒரு ஐந்து முறை…
பின்னர் எழுந்து காலை கடமைகளை முடித்து குளித்து விட்டு தனது இஷ்ட தெய்வமான பெருமாளை வணங்கி தீபாராதனை காட்டி விட்டு தனது சமையல் தொழிலுக்கு தேவையான பாத்திரங்கள் மற்றும் சின்ன அடுப்பு இத்யாதிகளை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டினான்..
வீட்டுக்கு வெளியே தனது தள்ளுவண்டியை ஒரு முறை தொட்டு கும்பிட்டு விட்டு நேராக மாவரைக்கும் அரவை மில்லுக்கு சென்றான்.. அங்கே தனது நண்பர் சுகன் மிகவும் பரபரப்பாக மாவு அரைத்துக் கொண்டு இருந்தது வெளியே இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.. அவன் தோளை தொட்டு “ஹாய் நண்பா இனிய காலை வணக்கம்.. என்ன எனக்கு இட்லி மாவு தயாராகி விட்டதா என்று கேட்டான் சிரித்துக் கொண்டே…”
“இதோ நண்பா எடுத்து தருகிறேன்” என்று அவன் ஒரு பெரிய தூக்கு வாளியை தூக்கி கொடுக்க முகுந்தன் அதை பெற்றுக் கொண்டு “நன்றி நண்பா”…வேலை முடிந்ததும் வருகிறேன் என்று பரபரப்பான தொனியில் சொல்லி விட்டு தாம் வழக்கமாக தொழில் செய்யும் தெருவில் தனது தள்ளுவண்டியை நிறுத்தி விட்டு காலை சிற்றுண்டி தயாரிக்க ஆயத்தமானான்… அவன் தள்ளுவண்டியில் எப்போதும் ஒரு வானொலி இருக்கும்.. அதில் பாடல் கேட்டுக் கொண்டே காலை சிற்றுண்டி தயார் செய்தான்..
நேரம் காலை ஏழு மணி… கடைக்கு வழக்கமான வாடிக்கையாளரோடு இன்று நிறைய பேர் வந்து இருந்ததை கண்களால் நோட்டமிட்டபடியே மாவு போதுமா என்று தூக்கு வாளியை எட்டி பார்த்தான்… கொஞ்சம் பத்தும் பத்தாவது போல இருந்தது வந்திருந்த கூட்டத்திற்கு.உடனே தனது நண்பன் சுகனை தொடர்புக் கொண்டு இன்னும் மூன்று படி மாவு அனுப்பி வை நண்பா என்று சொல்லி முடித்து விட்டு தனது வேலைகளில் கவனம் செலுத்தி வந்தான்…
வாடிக்கையாளர்கள் தவிர மற்றவர்களிடம் நமது கடை சிற்றுண்டி எப்படி உள்ளது என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.. அங்கே ஒரு வாடிக்கையாளருக்கு கார சட்னி ஊற்றிக் கொண்டே… மிகவும் அற்புதமான சுவை .. தங்களது கடையில் இன்று தான் முதன் முறையாக சாப்பிடுகிறேன்.. இங்கே ஒரு வேலையாக வந்தேன்…இனி தங்களது கடையில் தான் சிற்றுண்டி என்று சிரித்துக் கொண்டே சொன்னார்… மிகவும் மகிழ்ச்சி என்று சொல்லி விட்டு அடுத்தடுத்த வாடிக்கையாளரின் சிற்றுண்டி தேவையை மனம் கோணாமல் பூர்த்தி செய்து கொண்டே வந்தான்…
ஒரு வழியாக வாடிக்கையாளர் அனைவரும் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு அவரவர் வேலையை பார்க்க சென்றுகொண்டிருந்த சமயத்தில் அங்கே அரசு சிற்றுந்து வந்து நின்றது.. அதில் இருந்து இறங்கியவுடன் வந்த காவலரை வைத்து அவர் ஆட்சியர் என்று தெரிந்துக் கொண்டேன்… அவர் என்னப்பா சாப்பிட வைத்து இருக்கிறீர்கள் என்று கேட்க எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை…
உடனே இட்லி சார் பாசிப்பயறு சாம்பார் தேங்காய் சட்னி கார சட்னி என்று உற்சாகமாக சொல்ல அவர் அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்து தனது சக பணியாளரான காவலர்கள் இருவரையும் அமர சொல்லி விட்டு மூன்று பேருக்கும் இட்லி கொண்டு வா பா என்றார்..
எதிர் பாராத விதத்தில் ஆட்சியரே நமது கடைக்கு வந்து சாப்பிடுகிறார் என்றவுடன் அவனுக்கு மகிழ்ச்சியில் ஒன்றும் புரியவில்லை…இதோ சார் என்று வேகமாக வேலையை ஆரம்பித்தான்…
பொறுமையாக செய் பா ஏன் இவ்வளவு பரபரப்பு என்று ஆட்சியர் கேட்டதை சிரித்துக் கொண்டே காதில் வாங்கிக் கொண்டு இட்லியை ஊற்றி அடுப்பில் வைத்தான்…
பிறகு அது வேகும் இடைவெளியில் ஆட்சியர் நீங்கள் என்ன படித்து இருக்கிறீர்கள் என்று கேட்க முகுந்தனோ நான் ஒரு பொறியியல் பட்டதாரி சார்.. எனக்கு இங்கே தகுந்த வேலை கிடைக்கவில்லை.. மேலும் அப்படி கிடைத்த வேலையோ எனது ஊரை விட்டு தொலைதூரத்தில் இருந்தது சார்.. எனக்கு எப்போதும் என் ஊர் மிகவும் பிடிக்கும்.. அத்தோடு என் தாய் தந்தை வாழ்ந்த வீட்டை விட்டு வெளியே வேலை தேடி போக மனமில்லை சார்…மேலும் எனக்கு சமைப்பது மிகவும் பிடிக்கும்.. அதனால் நான் ஒரு தள்ளுவண்டி கடை வைத்தால் என்ன என்று யோசித்தபோது எனது நண்பர்கள் செய்ய சொல்லி ஊக்கப்படுத்தினார்கள்.. அதனால் நான் இதை எனது நேசித்த தொழிலாக பக்தி சிரத்தையுடன் செய்கிறேன் என்றான்..
உங்கள் பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்க அவன் சற்றே குரல் கம்ம எனது பெற்றோர்கள் இருவரும் ஒரு சாலை விபத்தில் சிற்றுந்து பயணத்தில் இறந்து விட்டார்கள் என்று சொல்ல ஆட்சியரோ அடடா அப்படியா என்று சொல்லி விட்டு கொஞ்சம் நேரம் அமைதி காத்தார்…
இதற்கிடையில் இட்லி வெந்து விட அதை லாவகமாக எடுத்து ஒரு தட்டில் இலையை போட்டு ஆட்சியர் மற்றும் காவலர்களுக்கு பரிமாறிக் கொண்டே அவனது கதையை ரத்தின சுருக்கமாக சொன்னான்…
தனது தந்தை சிறந்த தொழிலதிபர் என்றும் இடையில் ஏற்பட்ட தலைதூக்க முடியாத கடனால் தொழில் சிதைந்து போனதில் இருந்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்தார் என்றும் அந்த சமயத்தில் குடும்ப உறவு ஒன்றின் திருமணத்திற்கு சென்ற போது அந்த சாலை விபத்தில் இறந்து விட்டார்கள் தாய் தந்தை இருவரும் என்றும் தனது கல்வியை தனது தூரத்து உறவினர் உதவியோடு முடித்ததாகவும் சொல்லி முடிக்கவும் ஆட்சியர் அதை கூர்ந்து கவனித்து கேட்டுக் கொண்டே சாப்பிட்டு முடித்து எழுந்தார்…
“சரி முகுந்தன்… சிற்றுண்டி தனது கைப் பக்குவத்தில் மிகவும் ருசியாக இருந்தது..ஏதோ எனது தாயார் கை பக்குவத்தில் மிகவும் அற்புதமாக சாப்பிட்ட உணர்வாக இருந்தது..நீ என்ன செய்கிறாய் என்றால் நாளை வந்து என்னை ஆட்சியர் அலுவலகத்தில் வந்து பார்”என்று தனது அனுமதி கடிதத்தை அந்த இடத்தில் உடனடியாக தயார் செய்து கொடுத்தார்..
முகுந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.பேசாமல் அவர் கொடுத்த அனுமதி கடிதத்தை வாங்கிக் கொண்டு அவரை மிகுந்த மரியாதையுடன் சிற்றுந்து வரை வந்து வழி அனுப்பி வைத்தான்..
அடுத்த நாள் காலையில் தனது காலை சிற்றுண்டி வியாபாரத்தை முடித்து விட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று அவர் கொடுத்த அனுமதி கடிதத்தை காட்டி விட்டு அங்கிருந்த இருக்கையில் காத்திருக்க உடனடியாக அவனை ஒரு காவலர் கூட்டி சென்றார் அவரது அறைக்கு…
அங்கே”வா முகுந்தன்… அமருங்கள்” என்று புன்னகையோடு சொல்லி விட்டு அங்கிருந்த இன்டர் காம்மில் இரண்டு தேநீர் கோப்பையை வரவழைத்தார்… அவன் அந்த தேநீரையும் அவரையும் தயக்கத்துடன் மாறி மாறி பார்த்தான்.”தேநீரை பருகுங்கள் சொல்கிறேன் “என்று அவர் சொல்ல அவன் மிகவும் நிதானமாக அந்த தேநீரை பருகி முடித்தவுடன் ஒரு கோப்பை அவனிடம் நீட்டினார்..அதை புரியாமல் வாங்கிக் கொண்டு அவரை பார்க்க…
அவரோ இது இந்த ஆட்சியர் அலுவலகத்தில் நீங்கள் கேண்டின் நடத்துவதற்கு அனுமதிக்கான கடிதம்.. நீங்கள் வரும் மாதத்தில் இருந்து இங்கே கேண்டின் வைத்து நடத்திக் கொள்ளலாம் என்று சொல்ல முகுந்தன் கண்களில் கண்ணீர் கலங்க அவரை ஏறிட்டு பார்த்து சார் என்று கரகரத்த குரலில் சொல்ல..
“இது உங்களுக்கு நான் செய்த உதவி என்று மட்டும் நினைக்காதீர்கள்… எனக்கும் தாய் சில வருடங்களுக்கு முன்பு தான் இறந்தார்கள்… அவரது பிரிவு என்னை மிகவும் பாதித்து அதில் இருந்து வெளியே வர நான் மிகுந்த சிரத்தையுடன் தேர்வு எழுதி இங்கே ஆட்சியராக தற்போது இருக்கிறேன்..நீ உனது துக்கத்தை மறைக்க உனக்கு பிடித்த தள்ளுவண்டி கடை ஆரம்பித்தது போல நான் இந்த ஆட்சியராக வர நேசித்து எனது தாயார் மறைவை மறக்க தேர்வு எழுதினேன்… கிட்டத்தட்ட நமது இருவர் நிலையும் ஒன்று தான்.. ஏன் வயது கூட ஏறக்குறைய நம் இருவருக்கும் ஒன்றாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்…” என்றார்
“இனி உனது சிற்றுண்டி சாப்பிடும் போதெல்லாம் மற்றும் மதிய உணவு சாப்பிடும் போதெல்லாம் உன் கை பக்குவத்தில் எனது தாயாரை பார்ப்பேன் அல்லவா” என்று சிரித்தார்..
முகுந்தன் தற்போது மீண்டும் உற்சாகமாகி அவரை கையெழுத்து கும்பிட அவரோ இவனை அருகில் அழைத்து ஆர தழுவிக் கொண்டார்…
இங்கே இயற்கை விதி உண்மையாக உழைப்பை நேசிக்கும் ஒருவருக்கு எப்படி எல்லாம் பேரன்போடு ஒத்திசைவில் உதவுகிறது என்று அங்கே மேசை மீது இருந்த பீங்கான் சாடியில் வைத்திருந்த அன்றைய புதிய மலர்களும் தலையசைத்து இவர்களை மௌனமாக ஆசீர்வதித்தது..
தொடர்புள்ள சிறுகதைகள்
கடவுளே உனக்குக் கேட்கிறதா
நீ.பி.அருளானந்தம்
October 9, 2026
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
ஆசிரியர் அளித்த அற்புதம்
இரா.கலைச்செல்வி
October 6, 2026