எலி வேட்டை
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
தின/வார இதழ்: தினகரன் (இலங்கை)
கதைத்தொகுப்பு:
காதல்
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 287
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“உன்ரவாழ்க்கைச் சீவியத்துக்கெண்டு ஒரு துணை யில்லாத தனி ஆளாயெல்லே நீ இப்பவாப் போயிற்றாய்பிள்ளை திறந்த கண்களுடன் மாமி அவளைப் பார்த்துப் பரிதாபப்பட்டுக் கொண்டு சொன்னது, அவளுக்குப் பிளக்க முடியாத ஒரு வெறுப்பை தன்னிடத்தில் உருவாக்கித்தான் இருந்தது. மாமி அப்படி அவளைப் பார்த்துச் சொல்லி விட்டுப் போனதன் பிறகு, அவள் தன்னைத் திருமண வாழ்விலிருந்து அன்னியமாக்கிய அந்தக் காரணங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தாள்.
“எல்லாவற்றையும் நிதானமாக யோசிக்க வேண்டும்….. என்று எண்ணிக்கொண்டு, அப்போது தனக்குப் பேசிவந்த கல்யாணங்களை யெல்லாம் “வேண்டாம் எனக்கு…” என்று தவிர்த்ததை இப்போது நினைக்க ஒரு கணம் இழப்புணர்வில் அவளுக்குத் தொண்டை அடைத்தது. மார்பின் துடிப்பு உரக்க உடலெங்கும் எண்ணற்ற அதிர்வுகள் அவளுக்குக்கேட்டன. மூச்சு அவளுக்கு அழுத்திக்கொள்வது போல இருந்தது. வாயால் அவள் மூச்சுவிட்டாள். பெரியதொரு களைப்பு கைகால்கள் மீது பரவ, அப்படியே பக்கத்தில் இருந்த சோபாவில் பிறகு அவள் அமர்ந்துவிட்டாள். முகம் கவலை நிரம்பியதாக அவளுக்குவந்து விட்டது.மனத்திலே மீண்டும் அவளுக்குப் பழைய நினைப்பு உருவாயிற்று. கண்ணெதிரே தெரியும் வெள்ளையடித்த சுவரை உதட்டைக்கடித்தப்படி அவள் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மனம் அவளுக்குத் திறந்து கொண்ட அவளுக்குப்படம் போல சில காட்சிகள் அடுத்தடுத்து ஓடுவதுபோல நினைவில் வந்து கொண்டிருந்தன.
அன்றையப் பொழுதுகளில் பல தடவைகள் – அவள் தன் தாயைப்பார்த்து உரத்த குரலில் “எனக்குக் கல்யாணம் ஏன்.. வேண்டாம் வேண்டாம்.. இனி அந்தக் கதையையே நீங்க திரும்ப என்னோடயாக் கதைக்க வேண்டாம்…” என்று சொன்னதெல்லாம் இப்போது அவள் காதுகளில் வினோதமான பறவைகள் எழுப்பும் சத்தங்கள் போல கேட்டபடி இருந்தன. தாய் அப்படி அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டு ஒன்றும் பேசாது அமைதியாக இருந்து விடுவாளா? அவளுக்கு நெஞ்சில் பார உணர்வு ஏற்பட்டது.
“நீ இப்பிடி நெடுகவும் எங்களுக்குச் சொல்லிக் கொண்டி ருக்கிறதில என்ன அர்த்தமிருக்கு…?” வலுவான சக்தியோடு இந்தக் கேள்வியை மகளிடம் அவள்கேட்டாலும் அந்தக் கேள்விக்குத் தன் மகள் இப்படித்தான் பதிலைக் கூறுவாள் என்று தனக்குள் உணர அவளுக்கு ஒருவித அச்சம் ஏற்பட்டது.
” உங்களுக்கு உங்கட நிலமை தெரியாம இருக்கிறீங்க.. தனியாளா என்ன மட்டும் நீங்க பெத்துப் போட்டிட்டு காசு பணமும் சேர்த்து வைச்சுக் கொள்ளாமலா இப்பவா இருக்கிறீங்க…நான் கலியாணம் முடிச்சு ஒரு பக்கம் போயிற்றா உங்கள் வைச்சு யார் பாக்கவெண்டு இருக்கினம் ? இந்த ரீச்சர்வேலைச் சம்பளக் காசையும் வருறவன் எனக்குத்தா எண்டு கேட்டுப்புடுங்கி வாங்கீற்றா.. பிறகு நான் உங்களுக்கெண்டு என்ர கையால் என்னத்தைத் தான் தாறது….?” அவள் பிரித்துப் பிரித்துச் சொன்ன கதையிலே புதிதாய் ஒன்றும் இருக்கவில்லைத்தான் ! ஆனாலும் அதைக் கேட்கத் தாய்க்கு நடு நடுங்கியது மாதிரி சதிரமெல்லாம் இருந்தது. என்றாலும் அவள் மன முடைந்து போகாமல் திரும்பவும் சொன்னாள்.
“எங்கள் ரெண்டு பேற்றை சீவியத்தையும் ஏதோ எங்களுக்கு ஆண்டவன் தாற கஞ்சியக் கூழைக் குடிச் சென்டாலும் நாங்கள் காலம் கடத்திக் கொள்ளுவம் பிள்ளை… ஆனாலும் நீ கலியாணம் செய்யவேண்டிய வயசிலயாக் கலியாணம் செய்து கொள்ளாமக் காலம் கடத்திப் போட்டு பேந்தெல்லே கிடந்து கொண்டு கஷ்டப்படப் போறாய்?”
மகளின் மனதில் ஆழப்பதியக்கூடியதாய்த்தான் பெற்ற அந்தத் தாய்ப் பாசத்தோடு அவள் சொன்னாள். ஆனாலும் அந்தத் தாய்ப்பாசத்தின் நெருக்கம் இன்னும் இவள் மனதை உள்ளூர் அவள் நிலையில் உறுதிப்படவே வைத்தது. “அம்மா, பேந்தும் பேந்தும் உதுகளையே எனக்குச் சொல்லிச் சொல்லி ஏன் எனக்குள்ள இருக்கிற என்ர நிம்மதியக் கெடுக்குகிறீயள்? உந்தக் கதையள என்னோட கதைக்கிறத இனிமேலயா விட்டிடுங்கோ… ஆனாலும் இதுக்குள்ளயா நான் ஒண்ட உங்களுக்குச் சொல்லுறன் அதயும் நீங்கள் உங்களுக்குள்ளயா கொஞ்சம் யோயிச்சுப் பாருங்கோ. நாளைக்கு உங்களுக்கு வரப்போகிற கஷ்டத்தையும் கொஞ்சமாவது சிந்தியுங்கோ..அப்பா என்னம்மா நீங்க நினைக்கிறமாதிரி இப்பவா ஒரு தைரியமான ஆளே…? அவருக்கு இருதய வியாதியும் தொட்டுக்கொண்டுது. பெலவீனப் பட்டுப் போய்த்தான் தன்ர வேலையளப் பார்த்துக் கொண்டு இப்ப அவர் திரியிறார். அவருக்கு உளி பிடிக்க – சீவிலிக்கூடு பிடிக்கவே கை நடுங்கும்…. அவர் செய்யிற தச்சாசாரித் தொழிலை அவருக்கு இனிச் செய்யேலுமே..? அதால இனியாவது இதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாவது நீங்க யோசியுங்கோ… அப்பிடி யோயிச்ச பிறகாவது நீங்க என்னய இந்தக் கதேக்கிளையாலயா இனி இழுக்காம விட்டுப் போட்டுச் சும்மா உங்கட பாட்டுக்கு இருங்கோ….”
ஒரு சொல்லிலிருந்து முளைத்து, காடாகும் அளவுக்குப் பெரிதாகத்தான் தாய்க்கு விளக்கம் கொடுத்துவிட்டாள் அவள்…. ஆனால் மகள் சொன்னதெல்லாம் தாய்க்குக் கேட்க அவையெல்லாம் சாரம் அற்ற வெறும் சொற்கூடாகவே இருக்கிறதாகத் தெரிந்தது. என்றாலும் இப்படியாகவெல்லாம் அவளின் நிலையை உணரவைக்க கூடிய அளவிலே எத்தனையோ தடவைகள் அவள் இதை மகளுக்கு எடுத்துச் சொன்னாலும், அவளோ கர்வத்துடன் எல்லாவற்றையும் துண்டித்த மாதிரியாகவே நடந்து கொண்டுவந்தாள்.
மகளுக்கு இப்படியாக வெல்லாம் தன்னையே ஏமாற்றிக் கொண்டு காலங்கழிப்பதில் மிகையும் துன்பத்தைத்தவிர வேறு எதுவும் இருக்கவில் லைத்தான்.
அந்தத்துன்பத்திலிருந்து வெட்ட வெளியான ஒரு நிம்மதியைத் தேடிக் கொள்வதற்கு அவள் பிறகு முற்று முழுதாக பாடுபடத்தொடங்கினாள். ஆரம்பத்தில் பூக்கன்றுகளையும் மலர்மரங்களையும் நட்டு வளர்த்து அழகு பார்த்தாள். ஆனாலும் இருக்கிற கவலையை ஒத்திப் போடுவதற்குக்கூட அது ஒத்துழைப்பதாய் இருக்கவில்லை. அந்த அழகை அவள் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்றை அவள் அடையவேண்டும் என்பதாகவே உணர்த்திக் கொண்டிருந்தது.
வேண்டாம் இவைகளை – என்று ஒரு நாள் அந்த ஒரே நாளிலேயே முற்றத்திலுள்ள பூஞ்செடிகளையெல்லாம் வெட்டிப் போட்டு தூர எறிந்துவிட்டு வெட்ட வெளியாக்கிப்பார்த்தாள். அதைப்பார்த்துக் கொண்டிருக்க- தான் வேறு ஒரு பெண்ணாக இப்போமாறியது போலவும், தான் வெட்கத்திலும் சுய பரிதாபத்திலும் இப்போ ஆழ்ந்து போய்க் கொண்டிருப்பதாகவும் அவளுக்கு நினைக்கவும் தோன்றியதேயல்லாமல் வேறு ஒரு பிரயோசனமும் கிடைக்கவில்லை. “ஒரு நிம்மதியான மனத்தினளாய் நான் வாழ்ந்து கொள்வதற்கு இனி என்ன வழியைத்தான் நாடுவது?”
“கவலைகளை அழிக்கும் வெளிச்சம் இந்த நீல வானத்திலே நிச்சயம் இருக்கும். மனத்தைத் தொடும் அளவுக்கு அந்த வெளிச்சத்தைப் பார்த்தால், கவலையில் கூம்பியிருக்கும் என்மனம் திரும்பவும் மகிழ்ச்சியில் மலர்ந்து வந்து விடும். சூரியனைப் பார்த்து முகத்தை ஏந்தினால் அந்தப் பேரழகை என் கண் பார்வையால் தொடும்போது, பெரு மௌனமாய் நிரம்பியுள்ள என் மனக்கவலைகளெல்லாம் என்னிடத்திலிருந்து அழிந்து திரும்பவும் எனக்கு மன மகிழ்வுகிட்டும்….’
இப்படி ஒரு முயற்சியையும் தான் அவள் செய்து பார்த்தாள். அந்த ஒளிப்பிம்பத்தை அவள் பார்த்துக் கொண்டிருக்க அவளுக்குக் கண்களிலிருந்து கண்ணீர் சிந்தியது. கண்விழித்து நெடு நேரம் அதைப்பார்த்தும் மன அவலங்களின் திரை அவளுக்கு மனத்திலிருந்து அகலவே இல்லை. அந்த ஒளிச் சக்தி கூ அவளுக்கு தரவேண்டிய மன ஆறுதலை அளிக்கவில்லை.
ஏதோ பசி அவளை அடிமையாக்கி உள்ளுக்குள் அதிகாரம் பண்ணிக் கொண்டே இருந்தது. நாள் முழுக்க தன்னந் தனியனாக கொட்டுக் கொட்டு என்று…. விழித்துக் கொண்டிருப்பது போல இப்படியாக நான் வாழ்ந்து கொண்டிருப்பது எவ்வளவு கொடுமை….!”
இதையெல்லாம் நான் இன்னும் எவ்வளவு காலம் தான் அனுபவித்ததாய் வாழ வேண்டியதாய் இருக்குமோ? சர்வ வியாபியாக இருக்கும் என் வாழ்க்கையில் உள்ள இருட்டுக்குள் எப்போதாவது ஒரு வெளிச்சம் வந்து போகாதா?-அந்த ஒரு ஈடேறலான ஆசையை நெஞ்சிலிருத்திக் கொண்டு வீட்டிலிருந்து வெளியே வெளிக்கிட்டு தேவாலயத்துக்குப் போகவென்று அவள் வீதிவழியே மெளனமாக நடந்து கொண்டிருந்தாள். முன் பெல்லாம் அவள் வீதியில் நடந்து போகும் போது, களையான அவள் மேனி எழிலைக் கண்டு மனச் சலனமடையக்கூடிய விழிகள் ஏராளம் இருந்தன. தன் அழகால் அடித்து வீழ்த்தப்பட்டது போலப் போய்க்கொண்டிருக்கும் அப்படியான ஆண்களையெல்லாம் அவள் பார்த்திருக்கிறாள். ஆனால் தன்வெட்கத்தை விட்டு கண்ணை இப்போது அவள் யாரிடம் நிறுத்தினாலும் கரப்பான் பூச்சியைப் பார்ப்பது போன்ற வெறுப்புடன் ஆறுதலான ஒரு பார்வையுடன் அவர்களெல்லாம் போவது ஏதோ ஒரு வித சவத்தன்மையை தன்னிடம் அவர்கள் பூசிவிட்டுப் போவது போல நெஞ்சில் ஒரு உடைசலை அவளுக்கு ஏற்படுத்தத்தான் செய்கிறது. அவ்வித விரக்திகளுடன், வேர்களை இழந்த மாதிரியான ஒரு உணர்வுடன் நடந்தவாறு ஆலய வாசலருகில் வந்தவள், அந்த இடத்தில் சையிக்கிளில் வந்து இறங்கிய யூலியனைப் பார்த்தாள்.
‘இத்தனை வயது போயும் இவர் முகத்தில் பரிபூரண நிம்மதி நிலவுகின்றதான ஒரு அழகு இருந்து கொண்டிருக்கிறதே இப்பொழுதும் உருண்ட திரண்ட தோள்களுடன் – டெனிம் ஜீன்ஸ்சும் போட்டுக் கொண்டு இளமை குன்றாத மாதிரியாகவெல்லவோ இவர் இருக்கிறார்….!’
முன்பெல்லாம் யூலியனை அவள் காணும்போது உச்சந்தலை முதல் உள்ளங்கால்வரை ஒரு மின்னல் சக்தி அவள் உடலில் பாய்ந்து மறையும். ஆனால் இன்று உடல் சோர்வு அந்த உணர்வுகளை யெல்லாவற்றையும் தட்டிப் பறித்துக்கொண்டு போய்விட்ட கணக்காகத்தான் கோப்பை மூடிய மாதிரியாக அவளுக்கு இருந்தது. பல்லிவால் போல அதெல்லாம் துண்டிக்கப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் கிடந்து அதெல்லாம் துடித்துக் கொண்டிருக்கிறதோ?
அவனின் மேலுள்ள பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டு, “வாய்க்கெட்டாமல் போய் விட்டானே…!” என்ற ஏக்கத்துடன் தேவாலயவாசல் படியில் அவள் கால் தூக்கி வைக்கப் போனாள்.
“மார்கிறட்..!”
பாதம்அதிராமல் ஒரு படி ஏறி நின்றவள் ‘யார் என்னைக் கூப்பிடகிறார்கள்?” என்ற நினைப்பில் திரும்பி நின்று பார்த்தாள். கூப்பிட்டது யூலியன்தான் என்பது அவளுக்கு நன்றாக தெரிந்து கொண்டுவிட்டது. சையிக்கிளின் காண்டிலை ஒரு கையால் பிடித்துக்கொண்டு தன்னைப் பார்த்தபடி உதட்டில்சிரிப்புத் தவழ நிற்கின்ற அவனைப் பார்க்கவும், அவளுக்கு உள்ளூர மனத்திலே புளகாங்கிதமாகவே இருந்தது.
ஏறிநின்ற படியிலிருந்து கீழே உடனே இறங்கிவிட்டாள் அவள்.
அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. முன்னைய காலத்து நினைவூட்டலின் குளிர்ச்சி மனத்திலூற அவன் முகத்தைப் பார்த்தாள். ஆண்முகத்தை தொடர்ந்து கண்பார்வையை எடுக்காமல் பார்ப்பதற்கு இப்பொழுது அவளுக்குத் துணிச்சலும் இருக்கிறதுதான்.
சட்டென்று அவளுக்குச் சிரிப்பு வரவில்லை. இதழ்களை அதற்காக விரித்துக் கொள்வதற்கே நேரம் போவது போல் இருந்தன. ‘கோடை கால வெயில் அதிகரித்ததில் வறண்டு போய் விட்ட மாதிரியல்லவோ இருக்கின்றது என் உதடுகள்….
“மாக்கிறட்”
திரும்பவும் அவள் பெயரைச் சொல்கிறான் அவன்.
அவன் கூப்பிட்ட குரலினூடே சந்தோஷத்தில் நிரம்பியது அவள் இதயம்.
“யூலியன் எப்படி?” அவளும் சமரசம் செய்து கொள்வது போல அவனைப் பார்த்துச் சொன்னாள்.
“எங்க கோயிலுக்கா…?”
‘கோயிலடி வாசலிலேதானே இப்போது நான் நிற்கிறேன் பிறகு ஏன் இந்தக் கேள்வி”
உள்மனதில் நினைத்துக் கொண்டாலும் ‘ம்’ என்றாள். அந்த ‘ம்’ என்ற ஓசை கூட தன்னிடமிருந்து இளமை கலந்த இனிமையானதாக வெளி வரவேண்டுமென்பதில் பெரு மூச்சுக்கொப்பான ஆசை அவளுக்கு.
“வெளிநாட்டில் இருந்து கொஞ்சக் காலம் அப்பிடியே போயிற்று.. இங்க வந்ததில கோயில்பக்கம் ஒருக்கா பாத்திட்டு வருவமெண்டு வந்தன்..”
அவன் பிறகு இதைச்சொன்னான். அவன் நிற்கின்ற நிலை வசீகரமாக அவளுக்குத் தெரிந்தது.
அவன் சொன்ன அந்தக் கதைக்கு பிறகும் ‘ம்’ – என்றாள் அவள்.
‘நீங்கள் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளேல்லயா..?’
‘இல்லை..’
“அப்படி ஏன் பிடிவாதம் பிடித்தமாதிரியா இவ்வளவுகாலமா நீங்க இருந்திட்டீங்க..?”
இதை அவன் கேட்க தர்மசங்கடமாயிருந்தது அவளுக்கு. நெளிந்தாள்….. ஓடும் குளிர்ந்த ஆறு குளுகுளுவென்று குறுக்கிடுவது போல சில நிமிடங்கள் அவளுக்கு. இருந்து கொண்டிருந்தபோது, இந்த வட்டச் சூரியன் ஏன் அவன் வார்தையினூடே சேர்ந்து வந்தான் என்னைச் சுட..? தன் முன்னே சில பாம்புகள் குறுக்கே போகின்றது மாதிரியான ஒரு உணர்வாய் இருந்தது அவளுக்கு. உடம்பு அவளுக்கு அலுத்துச் சலித்துத்தவித்தது.
தன்னைப் பழிவாங்குவதைப் போல இருக்கும் அவன் கேட்ட கேள்விக்குத் திருப்பி என்ன பதிலைத்தான் கூறி அவள் சமாதானம் கொள்வாள்.
“இப்போதைக்கு எனக்குக் கலியாணம் செய்து கொள்ளுறதில விருப்பமில்ல.. இப்பவும் எனக்கு முந்தினதுகள் நினைச்சு சொட்டும் வருத்தமுமில்ல”
“உண்மையாவா..?”
“இல்லாம பொய் ஏன் நான் அதுக்காக வெண்டு சொல்ல வேணும்..?சரி அதையெல்லாம் நீங்க ஏன் என்னட்ட இப்பயாக் கேக்கிறீங்க…?’
“முந்தியெல்லாம் உங்களிட்ட நான் இதையெல்லாம் கதைக் கேலாது தானே?’
“அப்ப இப்பவா உங்களுக்குத் துணிவு வந்திட்டோ கேக்க..?”
“அப்பிடியாகவும் ஒரு கதைக்கு வைச்சுக் கொள்ளுங் களன்… உங்களை ஒரு காலம் பாத்து ஆசைப்பட்டுக்கொண்டும் நான் திரிஞ்சனான் தானே.. இப்பவும் என்ன…. உங்களில் எனக்கு நல்ல விருப்பந்தான்..!”
இப்போது மறைப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவில் நிர்வாணத்தைப் போல அந்தக் கதையை சொன்னான் அவன். அவள் உடனே அவனை ஊடுவிப் பார்த்தாள்..”இந்த வயது இப்படி வந்தால் விளையாட்டான கதையில் இவர்களைப்போன்றவர்களுக்கு பொழுதும் கடந்து போகுமோ..
இந்தக் கதைகளைச் சொல்லி என்னிடம் ஏறி வருவதற்கு இவருக்கு ஏணியும் கிடைத்திருக்கிறது போலும்….” அவளுக் குத்தன் நிலையை நினைக்க வேடிக்கையாக இருந்தது. யூலியன் அப்படி சொன்னதுக்கு ஒப்பாக தானும் தன் மனதிலுள்ளதை இப்போது வெளிப்படையாக சுதந்திரமாக சொல்லாம்தானே என்றவாறு அவள்நினைத்தாள். இனி எந்தத் தொந்தரவுகளிலும் வீண்தகராறுகளிலும் மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமும் எதனாலும் வராது என்றது போலவும் அவளுக்கிருந்ததது.
இளமை வயதான அன்றைய யூலியன் தன்னை சுவரோடு சொகுசாக அழுத்திப்பிடித்து தன் கனத்தை இரட்டையாக்கிக் கொண்டு – மூச்சு புஸ் புஸ் என்று முகத்தில் சுட கொஞ்சுவதுபோல அவளுக்கு ஒரு பிரமை…
“ஐயோ.. இப்படியாக வெல்லாம் யூலியன் என்னை நெடுகவும் நினைச்சுக் கொண்டு இருந்திருக்கிறாரே.. இந்த விஷயம் முன்கூட்டியே எனக்குத் தெரியவில்லையே….” குற்ற உணர்ச்சி அவளை அழுத்திப் பிடித்துக்கொண்டு மனத்தைப் போட்டுப் பிடுங்கிக் கிழித்தது.
என்றாலும் ஒரு நிமிஷம்.. இல்லை… இரண்டு நிமிஷம்தான் அவளிடம் இத்தகைய நிலை. அவள் வசப்படவில்லை.
“இப்படித்தான் என்னோடு படித்த டேவிட்டும் ஒரு நாள் என்னைக் காணேக்கிள சொன்னார்… அவரும் என்னை அப்போது விரும்பினாராம்.. இப்பவும் என்னையை விரும்புறாராம்.. எப்படி யிருக்கு இந்தக் கதையெல்லாம்…. எல்லாஆம்புளயளும் இப்ப நடிகர் ஜெமினி கணேசன் போல கலியாணங்களை முடிச்சுக்கொண்டு இருக்கக் தான் ஆசைப்படுகினம் போல…’
அவள் தனக்குத்தாளே இதை சொல்வதைப்போல சொல்லிவிட்டு விரத்தியுடன் யோசித்தாள்.
“மாக்கிறட் நீர் நினைக்கிறது மாதிரி நான் இல்ல..நான் உண்மையா உம்மை ஒரு காலம் விரும்பினனான்தான்..!”
சொல்லிவிட்டு அவளைக்கிண்டிப்பார்ப்பது மாதிரிப் பார்த்தான் அவன். அவனுக்கு ஊரான் வயலில் இறங்கி அறுவடை செய்கிற ஆர்வம் மனதில் துடித்துக் கொண்டிருந்தது.
மாக்கிறட் அவன் கதையில் மனம் இளகிப் போய் விட்டாள். இளகிய அவளின்மனம் பிறகு டைட்டானிக் கப்பலுக்கு நேர்ந்த கதிபோல பாதியாக உடைந்தது போன்ற திடீர் வேதனையாக இருந்தது.
“யூலியன்! வாழ்க்கை பொய்களால் ஆன தெண்டுதான் நான் என்னளவில இண்டைக்கும் யோசிச்சுக் கொண்டிருக்கிறன். ஆனாலும் நீங்க இப்ப என்ன அப்ப விரும்பினீங்க எண்டு சொன்னது என்னய அப்பிடியே திடுக்கிட வைச்சிட்டுது யூலியன்.. மனம் எனக்கு அப்பிடியே உறைஞ்சு போனமாதிரி எனக்கு இருக்கு.. நான் வேற ஆரும் நீங்க சொன்னமாதிரி சொன்னா நீங்களுமாச்சு உங்களிண்ட பேச்சுமாச்சு எண்டு வேண்டா வெறுப்பா சொல்லிப்போட்டுப் போயிடுவன்.. ஆனா நீங்க அப்படியா இப்ப எனக்குச் சொன்னதக் கேட்கேக்க பெரிய கவலையாயிருக்கு… யூலியன் உண்மையா உங்கடமனதில் இருந்ததை எனக்குச் சொல்லுங்கோ.. நீங்க அப்ப என்னைய விரும்பியே இருந்தனீங்கள்…?’
அவள் உணர்ச்சி வயப்பட்டு கண்கள்கலங்க இதைக் கேட்டாள்.
“பொய்ய நான் ஏன் சொல்லுறன்.. அப்பநான் உங்கள் எவ்வளவோ விரும்பி மனதில ஆசைப்பட்டனான் தான்..”
பொறுமையாகவும் நிதானமாகவும் வார்த்தை வார்த்தை யாகச் சொன்னான் அவன்.
ஆனால் மார்கிறட்டுக்கோ, அவளின் ஆத்மாவில் இரத்தமாய்க் கண்ணீரும் கண்களில் நிரம்பிவிட்டது.
“அப்ப நீங்க ஏன் அந்த நேரம் இதை எனக்குச் சொல்லேல்லாம பொத்திப் பொத்தி வைச்சுக் கொண்டது மாதிரி இருந்தியள்.?’
அவள் குரல் உடைந்த அளவில் கேட்டாள்.
ஆனால் யூலியனுக்கு அவளின் உணர்ச்சிப் பிரதிபலிப்பைப் பார்க்க, சுவாரஸ்யகரமான ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பது போல பொழுது போக்காக இருந்தது.
“உங்களிட்டயா முன்னம் அந்த என்ர ஆசையை சொல்லத்தான் நான் இருந்தன் ஆனா செல்லேல்ல..’
“அதான் ஏன் அப்பவா எனக்கு அதைச் சொல்லேல்ல நீங்க எண்டு கேக்கிறன்…?”
“சொல்லேலாத ஒரு நிலையா அப்ப எனக்குப் போயிட்டுது என்ன செய்ய..?”
அவன் அப்படி சொல்ல தன்னை எரித்து சாம்ப லாக்கினவன் போன்று நினைத்து அவனை ஒரு பார்வை பார்த்தாள் மார்க்கிறட். அவளுள் ரகசியம் போல ஒரு சோகம் அதன்பிறகு மனத்தினுள் கவிந்தது.
“நானும் அப்ப ஆரையும்கூட லட்சியம் செய்யாம் ஒரு கெப்பர்த் தனத்தில் எங்கயும் போய்க்கொண்டிருப்பன் என்ன.?”
முன் ஒரு காலம் தன் வாழ்வின் வழிகளை அடைத்துக் கொண்டு தவறிழைத்து விட்டதான சோகத்தோட சொன்னாள் அவள். மனப்பரப்பு அவளுக்கு அதிர்வுற்றதால், தன் மூக்களவு உயரமான குதியுயர்ந்து கூர்மையான காலணிகளுடன் நின்று கொள்வதற்குக் கால்களும் அவளுக்குத் தடுமாற்றமாக இருந்தன.
ஆனால் யூலியனுக்கு – மார்கிறட்டுடன் கதைத்தெல்லாம் மனதில் ஒரு வித தாக்கமுமில்லாது சர்வசாதாரணமாகவே இருந்தது. முன்னம் அவளுக்கிருந்த கர்வத்துக்கு இப்போது தான் ஒரு கொடூர மான அமில மழையை அவள் மீது பொழிந்ததான மகிழ்ச்சியுடன் அவன் இருந்தான்.
“என்னோட சேர்ந்து பழகிற ஆக்களிலயும் உண்மையான அன்பு,பாசம்,காதல் இருக்கிறது எண்டுறது இப்பத் தான் எனக்குத் தெரியுது யூலியன். .. ஆனா இனி நான் அதையெல்லாம் உணர்ந்து என்னதான் பயன் ம வரப்போகுது… எல்லாமே என்ர தலையெழுத்து.. என்ர தலையெழுத்தே சரியில்ல.. நான் வாறன்யூலியன்..”
தன்முகத்தில் திடீரெனப் பழுத்த காய்ந்த தவத்தின் கடுப்போடு சொல்லிவிட்டு, கோயில் வாசல் படிகளில் ஏறிச் சென்று கொண்டிருந்ததாள் மார்கிறட். அவளுக்கு இப்போது எண்ணம் நேராய் மாறிய அளவிலேதான் இருந்தது. அவள் படிகளில் ஏறிச் செல்வதை அதிலே நின்று சிறு நேரம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் யூலியன். அவன் சையிக்கிளை ஓடிக்கொண் டிருக்கும்போது – இளம் பெண்ணின் குட்டைப்பாவடை மாதிரி கச்சிதமாக ஒரு காலம் இருந்த மார்க்கிறட்டின் கவர்ச்சியான உடல் அழகு அவன் நினைவில் வசீகரத்துடன் வந்தது. அங்கங்களின் பிதுங்கல்கள் பளபளத்ததாய் ஜொலிக்க உள்ளத்தைச் சூறையாடுகிற மாதிரி மினுமினுக்கி மிளிர்கிற மாதிரியாய் ஒளிர்கிற நடை அவளது நடை. அந்த நினைவிலே கிடந்து உழன்று கொண்டு அவன் சையிக்கிள் மிதித்துக்கொண்டிருந்தபோது, மனைவி பின்னேரவேளை சாப்பாட்டுக்கடையிலிருந்து தனக்கு வாங்கிவரச் சொன்ன வடையின் ஞாபகமும் அவனுக்கு வந்தது. அவன் உடனே மார்கிறட்டின் நினைவை தன்னிலிருந்து தள்ளியதாய் வைத்து விட்டு மனைவி தன்னிடத்தில் சொன்ன அந்த வடை வாங்கிக் கொண்டு போகவேண்டும் என்ற நினைவில் கழுத்தளவு மூழ்கியவனாய்த் தன் நிலையை உடனே மாற்றிக்கொண்டான்.
(தினகரன் வாரமஞ்சரி – மே – 16, 2010)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஹார்மோனியம்
புஷ்பராஜ் கந்தசாமி
October 6, 2026
எப்பவோ கேட்ட குரல்
வாஷிங்டன் ஶ்ரீதர்
September 30, 2026
காதல் ஒளியோடு பயணிக்கும்
இளையவேணி கிருஷ்ணா
September 24, 2026
