ஒரு வித்யாவின் கதை
கதையாசிரியர்: பிரபஞ்சன்
கதைத்தொகுப்பு:
குடும்பம்
கதைப்பதிவு: September 19, 2026
பார்வையிட்டோர்: 82
(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அனந்தராமனைக் கிருஷ்ணமூர்த்தி வெறுக்கத் தொடங்கி யிருந்தான். மனிதனை மனிதன் வெறுப்பது நியாயமல்லவே! எனினும் மனிதனை மனிதன் நேசிக்க எவ்வளவு காரணங்கள் உலகில் இருக்கின்றனவோ அவ்வளவு காரணங்கள் வெறுக்கவும் இருக்கத்தானே செய்கின்றன? அனந்துவை வெறுக்கக் கிருஷ்ண மூர்த்திக்கு உள்ள காரணங்கள் நியாயமானவை.
அன்று ஏப்ரல் இருபதாம் தேதி. சூரியன் மிகக் கடுமையாகத் தகித்தது. தகிப்பதுதானே சூரியன்? வியர்த்துக் கசங்கிய அன்று மாலை ஒவ்வோர் அறையாகப் புகுந்து, அனந்து மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தான். நாலணாவுக்கு மூன்று என்கிற மிட்டாய், வகை. கிருஷ்ணமூர்த்தி எழுதிக் கொண்டிருந்த போது கதவைத் தட்டினான் அனந்து. சலிப்புடன் பேனாவைப் போட்டுவிட்டுக் கதவைத் திறந்த கிருஷ்ணமூர்த்தி முன் மிட்டாயை நீட்டினான்.
“அனந்து சார்… என்ன விசேஷம்… பிறந்த நாளா?” “ஊகும்…”
“உத்தியோக உயர்வு… அப்படித்தானே…?”
“இல்லை. கண்டுபிடித்துச் சொல்லுங்கள். பார்ப்போம்.”
கஷ்டமென்பதே இதுதான். சமீப காலங்களில் கிருஷ்ண மூர்த்திக்கு இது போன்ற கஷ்டங்கள் வரத் தொடங்கியிருந்தன. காரணம் அவன் பிரபலமடையத் தொடங்கியிருக்கும் கதாசிரியன். அவனைத் தேடி ரசிகர்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். எப்படிப் பட்ட ரசிகர்கள்? எழுத உகந்த நேரம் என்று, விடியற்காலை நேரங்களில் அவன் பேனாவையும் பேப்பர்களையும் வைத்துக் கொண்டு அமர்கையில் வந்துவிடும் ரசிகர்கள். குளிக்கத் துண்டை எடுத்துக்கொண்டு கிளம்புகையில் முப்பது பக்கக் கதைகள் நான்கு ஐந்தை எடுத்து வந்து, படித்து உடனே அபிப்ராயம் சொல்லச் சொல்லும் ரசிகர்கள்; ராத்திரி இரண்டரை மணிக்குக் கதவைத் தட்டி, அவனுக்கு உலகம் அனுமதித்திருக்கிற ஒரே சந்தோஷமான தூக்கத்தைக் கெடுத்து, ‘வணக்கம் சார், ஸ்டார் டாக்கீசுக்கு இரண் டாவது ஆட்டம் சினிமாவுக்கு வந்தேன். இந்த நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று பார்த்துவிட்டுப் போக வந்தேன். குட் நைட் சார்…’ என்று விட்டுப் போகும் ரசிகர்கள். போதாததற்கு, அனந்து வைப் போல அடுத்த அறையிலேயே வாடகை தந்து குடியிருக்கும் தொந்தரவுகள். கிருஷ்ணமூர்த்திக்கு எரிச்சல் மண்டியது.
“சொல்லுங்க அனந்து… எனக்கு வேலை இருக்கு…” என்று மிட்டாயை வாயில் போட்டு அதக்கிக் கொண்டே சொன்னான் கிருஷ்ணமூர்த்தி, குரலில் கடுமை தொனிக்காமல்.
“எனக்கும் என் மனைவிக்கும் விவாகரத்து ஆயிடுச்சி, மூர்த்தி சார்… இன்னிக்கு மத்தியானம்தான் தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. அப்பப்பா…எத்தனை காலமா கோர்ட்டுக்கு நாயா அலையறது. இன்னைக்குத்தான் நிம்மதியா இருக்கு. அதைத்தான் கொண்டாடிக் கிட்டிருக்கேன்.”
கிருஷ்ணமூர்த்திக்கு அனந்து சொன்னது அதிர்ச்சியாய் இருந்தது. விவாகரத்தைக் கொண்டாடுற மனிதன் கூட உலகத்தில் இருக்க முடியுமா?
“விவாகரத்தா…?”
ஆமா. சனியன் தொலைஞ்சதுன்னு நிம்மதியா இருக்கு. எங்க உறவிலேயே நல்ல பொண்ணா, நல்ல சீர் வரிசை தர்ற இடமா பார்த்து எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதா சொல்லி யிருக்கார், எங்க மாமா. இந்த வழக்குத்தான் தடையா இருந்துச்சு… அதுவும் ஒரு வழியா முடிஞ்சுருச்சு…”
அனந்துவின் முகத்திலும் குரலிலும் தொனித்த உற்சாகம் மூர்த்தியின் ரௌத்திரத்தை ஒட்டுமொத்தமாகக் கிளறி விட்டது.
“எத்தனை மணிக்குத் தீர்ப்பு வந்துச்சு…”
“நாலு மணிக்கு…”
“இப்போ மணி என்ன?”
“அஞ்சு அம்பது…”
“இரண்டு மணி நேரத்துக்குள்ளே, உங்களுக்கு ரெண்டாவது பொண்டாட்டி ஞாபகம் வந்துடுச்சே! சே… என்ன மனுஷன் சார், நீங்க. உங்களோட விவாகரத்து வாங்கிக்கிட்ட அந்தப் பெண்ணோட மனசு என்ன பாடுபடும்னு நினைச்சுப் பாத்தீங்களா, அனந்து…?”
“அந்தக் கழுதையைப் பத்தி நான் எதுக்காக நினைக்கனும். ஆபீஸ் விட்டு வர்றபோதே எவனையாவது இழுத்துக்கிட்டு வீட்டுக்கு வர்றவ சார் அவ. அவளுக்காக நான் என்னத்துக்குக் கவலைப் படனும். சொல்லுங்க.”
“போதும்” என்றவாறு அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டான் மூர்த்தி.
அந்த நிமிஷம் தொடங்கி அனந்துவை வெறுக்க ஆரம்பித்தான் அவன்.
திருவல்லிக்கேணி வாழை மண்டிக் கடைகளை ஒட்டி ஏராள
மான சந்துகள். அவற்றில் ஒன்று மோதிலால் சந்து. எவ்வளவு நல்ல பெயர்? ஆனால், வாழை மண்டிக்காரர்கள் தங்கள் அவசரத் துக்கு உட்காரும் சந்தாக அது மாறிப்போனதால், அதுக்கு மூத்திரச் சந்து என்று வசையான பெயர் ஏற்பட்டுவிட்டது. அதில் ஒரு பழங்கால வீடு. வீட்டைக் கார்டு போர்ட் அட்டையால் தடுத்து மேலும் கீழுமாக சுமார் இருபது அறைகளை உருவாக்கி வாடகைக்கு விட்டிருந்தார் சாமர்த்தியக்காரத் தமிழர் ஒருவர். அவற்றில் தெருவைப் பார்த்து இருக்கும் இரு அறைகளில் ஒன்று அனந்துடை யது. மற்றது கிருஷ்ணமூர்த்தியுடையது. இருவர் அறைகளும் சம அளவு உடையதுதான். இருந்தும் மூர்த்தியின் அறைக்குக் கூடுதலாக இருபது ரூபாய் வாடகை. காரணம், மூர்த்தியின் அறையில் ஜன்னல் இருந்தது. ஜன்னல் வழியாகக் காற்றும் வெளிச்சமும் வந்தன. காற்று, வெளிச்சம் இரண்டுக்கும் தலா பத்து ரூபாய். சரிதானே?
மூர்த்தி ஒரு பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தான். அனந்துக்கு அரசாங்கத்தில் வேலை. ஒரு கையில் தன் உடைமைகள் அடங்கிய பெட்டியையும், மறுகையில் மூக்கையும் பிடித்துக்கொண்டு மூர்த்தி அந்த லாட்ஜ் வாசியாகிருந்தான். மூர்த்தியை முதலில் விசாரித்தவன் அனந்து தான்.
“எங்கே சார் வேலை?”
மூர்த்தி சொன்னான்.
“என்ன சம்பளம்?”
முதல் சந்திப்பில், முகம் தெரியாத ஒருவன் இக்கேள்வியைக் கேட்பதில் உள்ள நாகரிகக் குறைவை அனந்து அறிந்திராதது மூர்த்திக்குச் சங்கடமாக இருந்தது. ஆயினும் தன் சம்பளத்தைச் சொன்னான்.
“ப்பூ… இவ்வளவு தானா? பெரிய பத்திரிகையில் வேலை. இவ்வளவுதானா சம்பளம் தர்றான்? நான் உங்களைக் காட்டிலும் நாலு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கறேன். ஒரு விஷயம் தெரியுமோ? இந்த லாட்ஜிலேயே அதிக சம்பளம் வாங்குகிறவன் நான்தான்.”
இதைச் சொல்லிவிட்டு “ஹே… ஹே…” என்று சிரித்தான் அனந்து.
அனந்து அறை அறையாகச் சென்று இனிப்பு வழங்கியதைப் போலவே, பல மாதங்களுக்கு முன்னர் அறை அறையாகச் சென்று கல்யாணப் பத்திரிகை கொடுத்தான். முதல் பத்திரிகை மூர்த்திக்குத் தான். வழக்கமான வெள்ளை அட்டை அழைப்பிதழ். அனந்தராமன் பின்வரும் தேதியில், செல்வி வித்யாவைத் திருமணம் செய்து கொள்ள இருக்கும் இனிய நிகழ்ச்சிக்குத் தாங்கள் வருகை தந்து வாழ்த்தக் கோரும் அழைப்பிதழ்.
மூர்த்தி திருமணத்துக்குப் போயிருந்தான். பழைய மாம்பலத்தில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தில்தான் அது நடந்தது. அனந்துவின் திருமணத்தை மறக்க முடியாத நிகழ்ச்சியாக அடித்தவர் ரிடையர்ட் தாசில்தார் புஜங்கராவ்.
தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்த வித்யாவின் கழுத்தில் அனந்து தாலி கட்டி முடித்தவுடனேயே, மணமக்களுக்கு முன்னர் ஓர் ஆளுயர மைக் நிறுத்தப்பட்டது. அனந்து மைக்கின் முன் வந்து இன்று,”இப்போது பெரியவர் புஜங்கராவ் எங்களை வாழ்த்தி ஆங்கிலத்தில் உரையாற்றுவார்” என்றதும், புஜங்கராவ் எழுந்து மந்தகாசப் புன்னகையுடன், தன் கல்யாணத்தின் போது தைத்த கோட்டை இழுத்துவிட்டபடி வந்து மைக்கைப் பிடித்தார்.
பட்டுப்புடவையும், மல்லிகைப் பூவும் கொண்டு திருமணத்துக்கு வந்திருந்த பெண்கள் திகைப்போடு புஜங்கராவை வேடிக்கை பார்க்கத் தொடங்கினர். கல்யாண வீட்டில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த குழந்தைகள் அனைத்தும் ராவைச் சுற்றிக் குழுமி ஆச்சர்யத்தோடு பார்க்கத் தொடங்கின.
“லேடீஸ் அன் ஜென்டில்மேன்” என்று தொடங்கிய ராவ் சளசளவென்று விக்டோரியா ராணியின் ஆங்கிலத்தில் பொழியத் தொடங்கினார். சூழ்நிலையின் வித்தியாசத்தில் ஈர்க்கப்பட்டு இருந்தவர்கள் அடுத்த ஐந்தாவது நிமிஷத்தில் நெளியத் தொடங்கி னார்கள். ராவ், உலகம் முழுவதும் என்ன வகையில், திருமணம் நடைபெறுகிறது என்று விளக்கிக் கொண்டிருந்தார். கொத்துக் கொத்தாக ஆண்களும் பெண்களும் எழுந்து சாப்பிடவும், அல்லது வீட்டுக்கும் என்று வெளியேறத் தொடங்கினார்கள். திடீரென்று மூர்த்தி உணர்வு பெற்று தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டான். மணமக்களையும் அவனையும், ராவையும் தவிர வேறு ஒரு ஜீவனும் அங்கில்லை. ஆனாலும் ராவ் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தார். திடீரென்று அனந்து எழுந்து மூர்த்தியிடம் வந்தான். “அடுத்து நீங்கதான் பேசனும். சிறுகதை அரசர் கிருஷ்ணமூர்த்தி பேசுவார்னு சொல்லப்போறேன்…” என்றான். திடுக்கிட்டுப் போன கிருஷ்ண மூர்த்தி, “அனந்து சார்… ப்ளீஸ்… வேணாம்… என்னால பேச முடியாது. தயவு செய்து கேளுங்க… வேண்டாம்….” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, ராவ் மைக்கின் மூலம், “நண்பர்களே… இனி நீங்கள் ஓர் அற்புதத் தமிழ்ப் பொழிவைக் கேட்கப் போகிறீர்கள். நிகழ்த்தப் போகிறவர் தமிழ்நாட்டு மாப்பசான், கிருஷ்ணமூர்த்தி” என்று முழங்கிக் கொண்டிருந்தார்.
அறையைச் சாத்திக் கொண்டு உள்ளே வந்த கிருஷ்ணமூர்த்தி பேனாவை மூடி வைத்தான். எழுதிய தாள்களை அடுக்கிக் கட்டி வைத்தான். இனி எழுத முடியாது என்று அவனுக்குத் தோன்றியது. தலை கவிந்தவாறே அனந்து கட்டிய தாலியை ஏற்றுக் கொண்ட அந்த வித்யாவின் முகம் அவனுக்குள் தோன்றியது.
வித்யா இந்த நேரம் என்ன செய்து கொண்டிருப்பாள்? அழுது கொண்டிருக்கக் கூடும். பெண்கள் இந்த மாதிரி நேரங்களில் அழ மட்டுமே கற்றிருக்கிறார்கள். வித்யாவுக்கு அப்பா இருப்பார். அவர் தன் குடும்ப கௌரவமே போய்விட்டதாக, வாழ்வில் ஒரு மாசு வந்ததென எண்ணி, தாழ்வாரம் தன்னில் தலைசாய்ந்து அமர்ந்தி ருப்பார். வித்யாவுக்கு அம்மாவும் இருப்பாள். அவளுக்கென்று விதிக்கப் பட்ட ராஜாங்கமான அடுப்படியில் அமர்ந்து, மகளின் வாழ்வு மண் ணானது என்று சொல்லி கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கக் கூடும்.
மூர்த்திக்கு எழுத முடியாது என்று தோன்றியது. ராவ் மைக்கை அவன் கையில் கொடுத்துப் பேசு பேசு என்கிற போது அவனும் அந்த மணமக்களை வாழ்த்தித்தானே பேசினான். மைக்கைப் பிடித்துக்கொண்டு வாழ்த்தியது அவனுக்கு கூச்சமாய் இருந்ததே தவிர, வாழ்த்தியது உண்மைதானே. மனசுக்குள் இருந்து வந்தவை தானே வாழ்த்துரைகள்.
வித்யா என்கிற, அவனால் வாழ்த்துரைக்கப்பட்ட ஒரு பெண் வாழ்க்கையை இழந்து கலங்கிக் கொண்டிருக்கையில், கதை எழுதிக் கொண்டிருப்பது எவ்வளவு பெரிய அபத்தம்? கண்ணீருக்கு முன் கதை எங்கே? உலகம் முழுவதும் எவ்வளவு வித்யாக்கள்? ஒவ்வொரு வித்யாவுக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சினை. ஆக மொத்தத்தில் எல்லோருமே அழுது கொண்டிருக்கிறார்கள். ஆண்களும், பெண் களும், மிருகங்களும், உயிர் படைத்த அனைத்தும், எல்லோருடைய கண்ணீரையும் ஒரு கிருஷ்ணமூர்த்தியா துடைக்க முடியும்? ஆனா லும், கிருஷ்ணமூர்த்திக்கு எண்ணம் வேறு விதமாக இயங்கியது. இத்தருணம், உலகம் முழுதும் எங்கெங்கோ வீடுகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருக்கின்றன. எல்லாத் தீயையும் ஒரு மனிதன் அணைப்பது என்பது அசாத்தியமே, எனினும் கண்ணுக்கு முன் ஒரு வீடு தீப்பற்றி எரிகையில், கை கட்டிக்கொண்டு, கதை எழுதிக் கொண்டு இருப்பது ஒரு வகை நபும்சகத்தனம் அல்லாமல் வேறு என்ன?
மூர்த்தி தீர்மானத்துக்கு வந்தான். அவனால் நபும்சகனாக இருக்க முடியாது. அந்த வித்யாவைச் சென்று பார்ப்பது என்ற முடிவுக்கு வந்தான் மூர்த்தி. அவன். உடனடியாக சேகரிக்க வேண்டியது அவள் முகவரியை.
திருமணத்துக்குப் பிறகு அனந்து அறையைக் காலி செய்து விட்டு வித்யாவின் வீட்டோடு தங்கியிருந்தான். புறப்படுமுன், மூர்த்திக்குத் தன் மனைவி வீட்டின் முகவரியைக் கொடுத்த நினைவு வந்தது. பரபரவென்று தன் பழைய டயரிகளை எடுத்துப் புரட்டி, கண்டுபிடித்தான் வித்யாவின் முகவரியை.
சென்னையில் காலை நேரப் பஸ் பயணம் மிக இனிமை. காலை என்பது ஐந்துக்கும் ஏழுக்கும் இடைப்பட்ட காலம். பஸ்ஸில் உட்காரவும், ஏன், சரிந்து சாய்ந்து காலை நீட்டிக் கொள்ளவும் கூட முடியும். காலை நேரத்துப்பனி போர்த்த காற்று, நீங்கள் எதிர்பாராத நேரத்தில் உங்கள் மேல் வீழ்ந்து உங்களைச் சிலிர்க்கச் செய்யும் கல்யாண வீட்டுப் பன்னீர் மாதிரியும், நீங்கள் ஏதோ வேலையில் ஆழ்ந்திருக்கையில் பின்னிருந்து உங்கள் கழுத்தைக் கட்டிக் கொள் ளும் உங்கள் வீட்டுப் பிஞ்சுகள் மாதிரியும் இருப்பதை அனுபவிக்க முடியும்.
அனுபவித்துக் கொண்டு பயணம் செய்தான் மூர்த்தி. அழுக் கும், கொடூரமான ஹார்ன் சப்தங்களும், பெட்ரோல் புகையும் மலிந்த, தெத்துப்பல் மாதிரி ஒழுங்கற்ற சந்துகளும் நிறைந்த வட சென்னையின் ஒரு தெருவில் இருந்தது வித்யாவின் வீடு. கம்பி அழி போட்ட பழங்கால வீடு. முகப்பின் இரு பக்கமும் அகன்ற திண்ணைகள், மொத்தமும், அகன்றதும், சித்திர வேலைப்பாடு மிகுந்ததுமான கதவைத் திறந்ததும் விரியும் ரேழி. இடது கைப் பக்கம் சாய்வு நாற்காலி போட்டுப் படுத்திருந்தவர், அனேகமாக வித்யாவின் அப்பாவாகத்தான் இருக்க வேண்டும். பழங்கால போட்டோ மாதிரி மங்கிப் போய் இருந்தார், அவர். ஆளரவம் கேட்டுத் திரும்பி மூர்த்தியைப் பார்த்த அவர் “யாரு வேணும்” என்றார்.
“என் பெயர் கிருஷ்ணமூர்த்தி. அனந்தராமன் சினேகிதன். வித்யாவைப் பார்க்க வந்தேன்.”
பெரியவர் முகம் மேலும் மங்கியது ஒரு நிமிஷம் அவனைப் பார்த்தவாறே அமைதியாய் நின்றார் அவர்.
“எல்லாம்தான் முடிஞ்சு போச்சே. இனி அவளைப் பார்த்து என்ன ஆக வேண்டியிருக்கு?” என்றார் அவர் சலிப்பாக. உடன், பழகி வந்த நாகரிகம் நினைவு வந்தவராக, உட்காருங்க’ என்று எதிரில் இருந்த அவரைப் போலவே நம்பிக்கை இழந்த பழம்பெரும் நாற்காலி ஒன்றைச் சுட்டிக் காட்டினார். மூர்த்தி மிகக் கவனமாக அதில் அமர்ந்தான். வாசலுக்கு நேர் எதிரில் இருந்த இருண்ட குகையை நினைவுறுத்தும் ஓர் அறையைப் பார்த்து “வித்யா” என்று குரல் கொடுத்தார். குகை, ஒன்று சமையல் அறையாய் இருக்கும். அல்லது அதன் நீட்சியால் குளியல் அறையாய் இருக்கும். அந்த இருளில் இருந்த வித்யா, ‘என்னப்பா’ என்றவாறே வந்தாள்.
இரு முன்னங் கைகளிலும் சோப்பு நுரையும், நீரும் படிந்தி ருந்தன. நனைந்த புடவையை மேலே இடுப்பில் செருகியிருந்தாள். ஓர் அந்நியனைக் கண்டதும் புடவையை ஒழுங்கு செய்து கொண்டு, முன்னங் கைகளை தலைப்பால் துடைத்தவாறே அவனைப் பார்த்தாள். பெரியவர் சொன்னார்.
“சார், அனந்துவோட சினேகிதராம். பெயர் என்னன்னு சொன்னீங்க… அபாரமா மறதி வந்துடுத்து எனக்கு…”
“கிருஷ்ணமூர்த்தி” என்றவாறு கைகூப்பினான் அவன்.
“வணக்கம்” என்று கூறி நமஸ்கரித்தவள், “உங்களை எங்கோ பார்த்த நினைவு. சட்டென்று…”
மறித்து, மூர்த்தி சொன்னான்,
“உங்கள் கல்யாணத்துக்கு வந்திருந்தேன். உங்களை வாழ்த்திக் கூடப் பேசினேனே…”
“ஓ. ‘தமிழ்நாட்டு மாப்பசான்’ என்று கூடச் சொன்னார்களே..”
குபீரென்று சிரித்தாள் வித்யா. மூர்த்திக்கு வெட்கமாகி விட்டது. வித்யாவின் முகத்தில் சந்தோஷம்.
வருகை புரிந்த, நீண்ட காலம் பிரிந்திருந்த நண்பரை வரவேற்கிற தொனியில் வித்யா சொன்னாள்:
“வாங்க சார்… மாடிக்குப் போவோம். அங்கே சௌகர்யமா பேசலாம். என்ன சாப்பீடுவீங்க. காபியா, டீயா… பூஸ்ட் கூட இருக்கு.”
“எதுக்கு சிரமம்?”
“சிரமமா? அப்போ உங்க வீட்டுக்கு நான் வந்தா, காபி, டீ கூடக் கொடுக்காமே துரத்திடுவீங்களா?”
“சேச்சே…”
“பின்னே? சர்த்தான் வாங்க சார்… ரொம்பத்தான் பிகு பண்ணிக்கிறீங்க.”
மறுவார்த்தை பேசமுடியாது, மூர்த்தி அவளைப் பின் தொடர்ந்து மாடிக்குப் போனான். மாடிப்படிகள் மிக்க குறுகலா னவை. குதித்துத் தாண்டி நாலு எட்டில், மாடியை அடைந்து விட்டாள் வித்யா. நிதானமாகத்தான் மேலே வர முடிந்தது மூர்த்தியால். மாடி பெரும் பகுதி மொட்டையாகவும், ஒரு சிறிய அறையோடும் இருந்தது.
“இதுதான் என் அறை. இரண்டு நிமிஷம் உட்கார்ந்திருங்கள். பத்திரிகை பார்த்துக் கொண்டிருங்கள். நான் காபியோடு வந்து விடுகிறேன்…” என்று விட்டு திடுமென மறைந்து விட்டாள் வித்யா.
இரண்டு நிமிஷங்களில் மீண்டும் தோன்றி, அவனிடம் காபியைக் கொடுத்தாள். அவன் முன் அமர்ந்தாள்.
“சொல்லுங்க மிஸ்டர் மூர்த்தி… எப்படி இருக்கார் உங்கள் நண்பர்?”
“அனந்துவுக்கென்ன? அவரால் சந்தோஷமாக இருக்க முடிகிறது.”
“அவர் அப்படித்தான் இருப்பார்.”
“எனக்கு உங்களைப் பற்றிக் கவலையாய் இருந்தது. நான் வேறு மாதிரி நினைத்தேன்…”
“சொல்லுங்கள். என்ன மாதிரி நினைத்தீர்கள்?”
“ரொம்பவும் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். ரொம்பவும் வருந்துவீர் கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது என் கடமை என்று எனக்குத் தோன்றியது. அதற்காகத்தான் வந்தேன்…”
“ரொம்ப நன்றி மிஸ்டர் மூர்த்தி. இந்த நேரத்தில்தான் மனிதர் களின் பக்கத்துணை வேணும். உங்களுக்கு ஏதேனும் ஏமாற்றமாக இருக்கிறதா?”
“ஏமாற்றமா? அப்படியென்றால்?”
“நீங்கள் வரும்போது நான் அழுது கொண்டிருக்கவில்லை. தரையில் படுத்து சோகமே உருவாய் இருக்கவில்லை. சாப்பிடாமல் பட்டினி கிடக்கவில்லை. துணி வெளுத்துக் கொண்டிருந்தேன். அழுக்கான துணிகளை என்ன பண்ணுவது? வெளுப்பதைத் தவிர? நீங்கள் என் முன்னாள் கணவரின் நண்பர் என்று தெரிந்ததும், நான் முகத்தை மூடிக்கொண்டு அழுதிருக்க வேண்டும். அதையெல்லாம் நான் செய்யவில்லை. என்ன, இந்தப் பெண் இப்படிக் கல்லாட்டம் இருக்கிறாளே என்றுகூட நீங்கள் நினைத்திருக்கலாம்.”
“நான் அப்படி நினைக்கவில்லை. வித்யா, கொஞ்சம் நிம்மதி யாகக் கூட இருந்தது.”
“நிம்மதியா?”
“ஆமாம். நீங்கள் அப்படியெல்லாம் உடைந்து போகவில்லை. பிரச்சினையை எதிர்கொண்டு விட்டீர்கள். அதைச் சமாளிக்கவும் செய்கிறீர்கள் என்று புரிந்தது. அதனால் எனக்கு ஆறுதல்.”
“காபி ஆறிடும், சாப்பிடுங்கள். ஃபேனை இன்னும் கொஞ்சம் வேகமாய் சூழல விடட்டுமா? இது போதுமா?”
“போதும்.”
மூர்த்தி காபியைக் குடித்து முடிக்கும் வரை அமைதியாய் இருந்தாள் வித்யா.
“காபிக்கு டிகாக்ஷன் போதுமா? இன்னும் ஸ்ட்ராங்காக இருக்கலாமா? அல்லது குறைக்கலாமா? உங்க டேஸ்ட் எனக்குத் தெரியாதில்லையா?
“இது போதும். எனக்கு இந்த மாதிரி இருந்தால்தான் பிடிக்கும். காபி அதற்குரிய மணத்தோட இருக்கணும் இலேசா கசக்கணும். கசக்கிறது தான் காபி.”
“எனக்கும் அப்படித்தான்…”
வித்யா ‘குபுக்’கென்று சிரித்தாள். ஊற்று உடைத்துக் கொண்டு பொங்குவது மாதிரியான சிரிப்பு அவளுடையது. பிறகு சொன்னாள்.
“மூர்த்தி சார் நான் அழவில்லை என்று நினைக்காதீர்கள். கண்ணீர் விட்டால்தான் அழுகையா? என் மனசு ரணமாகி இரத்தம் கசிகிறது. நான் உடைந்து போய்விடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வில் தான், எதை எதையோ இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறேன். உங்களோடு சிரித்துப் பேசுகிறேன். காபி போட்டுத் தருகிறேன்…”
சுமார் ஒரு மணி நேரம் வித்யாவுடன் பேசிக் கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டான் மூர்த்தி. தெருவாசல் வரை வந்து அவனை வழியனுப்பி வைத்த வித்யா சொன்னாள்.
“மூர்த்தி… அடிக்கடி நாம் சந்திக்க வேண்டும், என் பலமும், என் ஆறுதலும் நண்பர்கள் தான், சரியா?”
மூர்த்தி ஒப்புக் கொண்டான்.
அவர்களின் வழக்கு பற்றி தீர்ப்பு மதியம் மூன்று மணிக்குத் தான் வழங்கப் பெற்றது. எனினும் காலை பதினோரு மணி முதலே வித்யாவும் அவள் தந்தையும் அவர்களின் வழக்கறிஞர் அறையில் காத்திருக்க வேண்டியிருந்தது. வழக்கின் முடிவை அவள் அறிந்தி ருந்தாள். அதை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் அதற்காக காத்தி ருக்கும் அந்தக் கணங்களே அசுர கணங்கள் என்று அவளுக்குத் தோன்றியது.
அனந்து, அவனுடைய வழக்கறிஞர் அறையில் காத்திருக்கக் கூடும். இரண்டு பேருமே ஒரு கட்டட நிழலில் ஒதுங்கிப் பிரிந்து போகக் காத்திருக்கிறார்கள். மூன்றாவது மனிதனின் அல்லது சமூகத்தின் உத்தரவுக்காகக் காத்திருக்கிறார்கள்.
வித்யா மூர்த்தியிடம் அந்த நேரத்தைப் பற்றி சொல்லி யிருந்தாள்.
“எனக்கு இதெல்லாம் ரொம்ப அபத்தமாகப்படுகிறது மூர்த்தி. நானும் அனந்துவும் சேர்ந்து வாழறதும் பிரியறதும் எங்கள் சொந்த விஷயம். எங்கள் இரண்டு பேர் மட்டும் சம்பந்தப்பட்ட விஷயம். நாங்கள் எதற்குச் சட்டத்தின் சம்மதம் கோர வேண்டும்? நாங்களே பிரிந்து போய் விடுவது என்று தீர்மானிதது விட்ட பிறகு, ஒரு மூன்றாவது மனிதரான நீதிபதியின் அங்கீகாரம் எங்களுக்கு எதற்கு?”
“சரி வித்யா. நீங்கள் இரண்டு பேரும் இணையும் போது, நீங்கள் ரெண்டு பேராக மட்டுமா இணைந்தீர்கள்? ஊரைக் கூட்டிச் சப்தம் போட்டீர்கள். சட்ட சம்மதம் பெற்றீர்கள். பிரியும் போதும் அப்படித்தானே செய்ய வேண்டும். ரெண்டு பேரும் மனமொத்துப் போனீர்கள் என்றால், மூன்றாவது சக்தி தலையிட வாய்ப்பே இல்லை. உங்களுக்குள் விவகாரம் என்றால், மூன்றாவது மனிதர் தலையிடத்தானே செய்வார்?”
“இப்போ எனக்குப் புரிகிறது மூர்த்தி. திருமணங்கள் சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்று நாம் நினைப்பதிலேயே ஊழல் இருக்கிறது. இல்லையா? அவனுக்கும் அவளுக்கும் பரஸ்பரம் ஒருவர்மேல் ஒருவருக்கு நம்பிக்கை இருக்கும் பட்சத்தில் சாட்சி எதற்கு ? பதிவு எதற்கு? சத்தமில்லாமல் இணையவும் செய்யலாம். பிரிய வேண்டுமென்று நினைத்தால் கௌரவமாகப் பிரிந்து விடலாம்.”
“நான் சொல்வதும் இதுதான். காதலோ, காமமோ மனப் பூர்வமாக இருவர் மட்டுமே தீர்மானிக்கிற அந்தரங்கமான விஷயம். நீங்கள் காதலித்தால் அதைச் செய்யுங்கள். நீங்கள் படுத்துக் கொள்ள வேண்டும் என்றால் படுத்துக் கொள்ளுங்கள். அதற்கெதுக்கு அடுத்த வீட்டுக்காரனையும், பக்கத்து வீட்டுக்காரனையும் அழைத்து சத்தம் போடுகிறீர்கள். மைக்கை அலற வைத்து டப்பா சங்கீத விஷத்தைத் தெருவில் இறைக்கிறீர்கள்? இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை. யாரோ முகம் தெரியாத இருவர் கல்யாணம் பண்ணிக்கொள் கிறார்கள் என்று கேள்விப் பட்டால் கூடப் போதும், நம் பெண் களுக்கு, அழுக்குப் பாவாடையைக்கூட மாற்றாமல் பட்டுப் புடவை யைச் சுற்றிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். கல்யாணத்துக்கு. ஆண்கள் மட்டும் என்ன விதி விலக்கு? அவர்களும்தான். சமூகத் துக்கு வெட்கம் கெட்டுப் போச்சு. கல்யாணமாய் இருக்கட்டும். விவாகரத்தாகட்டும். எல்லாமே அவர்களுக்கு வேடிக்கை.”
வித்யா முகத்தை மூடிக்கொண்டு சிரித்தாள். கடற்கரை மணலில் இருந்த ஒரு கிளிஞ்சலை எடுத்து அவன் மேல் எறிந்தாள்.
“சாரி”…. என்றான் மூர்த்தி.
“பரவாயில்லை. பச்சையான உண்மையை சட்டை போடாமல் பேசுகிறாய். என்ன பண்ண? கல்யாணத்துக்கு முந்தி நீ என் சினேகிதனாகக் கிட்டி இருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டி ருக்க மாட்டேன்.”
அவர்களின் தொடர்ந்த சந்திப்பு ஒன்றில், அந்த மாலையைப் பற்றி ஒருநாள் குறிப்பிட்டாள் வித்யா.
“எனக்கு விவகாரத்துக் கிடைத்ததில் வருத்தம் இல்லை மூர்த்தி. அது நான் எதிர்பார்த்தது தானே? என் அப்பாவைப் பார்க்கும் போதுதான் ரொம்ப வருத்தமாய் இருந்தது. நிலைகுலைந்து போய் விட்டார். என்னை மிகவும் நேசிக்கிறவர் அவர். என் வாழ்க்கை குலைந்து போயிற்றே என்று விசனப்பட்டார். உன்னிடம் சொல்வ தற்கு என்ன? மனம் ஒப்பாத ஒருவனிடம் இருந்து விலகுவதில் எனக்கு சந்தோஷமாகவே இருந்தது. மனசுக்குள் ரகசியமாக அதைக் கொண்டாடிக் கொண்டும் இருந்தேன். வாழ்க்கை எனக்குத் தீர்ந்து போய்விட்டது என்று அப்பா நினைத்தார். என் வாழ்க்கை இனிமேல்தான் தொடங்கப் போகிறது என்று நான் நினைத்தேன் மூர்த்தி. இப்போதுதான் நான் சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு இப்போதான் இறக்கை முளைத்த மாதிரி இருக்கிறது. இப்போதான் எனக்குப் பறக்க வேண்டும் போல் இருக்கிறது. வானம் முழுக்க வானத்தை அடைத்துக் கொண்டு, இடத்தை மிச்சம் வைக்காமல் பறக்க வேண்டும் போல் இருக்கிறது.
“அந்த மாலை எனக்குக் கசப்பைத் தந்தது நிஜம். அது தீர்ப்பால் வந்தது அல்ல. அந்தக் கட்டடத்துக்குள் இருந்த மனிதர்கள் என்னைப் பார்த்தப் பார்வைதான், மூர்த்தி. அவர்கள் படித்தவர்கள், சமூகத்தில் மிகவும் மேல் மட்டத்தில் இருப்பவர்கள். ஏன்? நமக்கு நீதி சொல்கிறார்கள் அவர்கள். அவர்களே கூட என்னை ஏதோ ஒரு விபச்சாரியைப் பார்ப்பது போலத்தான் பார்த்தார்கள். ஆண்கள் ஒரு குற்றமும் செய்யத் தெரியாதவர்கள் மாதிரியும், பெண்களே சகல குற்றங்களுக்கும் காரணிகள் மாதிரியும் பார்த்தப் பார்வை இருக்கிறதே…”
வித்யா, மூர்த்திக்கு முன் முதல் முறையாக அழுதாள். மடிந்த முட்டியின்மேல் முகத்தைப் புதைத்துக் கொண்டு வித்யா கசிந்து கசிந்து அழுதாள்.
கடல் ஓயாமல் கத்திக்கொண்டே இருந்தது.
வித்யா அழுது ஓயட்டும் என்று காத்திருந்தான் மூர்த்தி. பிறகு சொன்னான்.
“உன் அம்மா உயிரோடிருந்தால், இந்த நேரத்தில் உனக்கு ரொம்ப உறுதுணையாய் இருந்திருக்கும் இல்லையா, வித்யா…?”
வித்யா கலீரென்று சிரித்தாள். உறையிலிருந்து வெளிப்பட்ட கத்தி மாதிரி அவள் முகம் பளபளத்தது. சிரித்துக்கொண்டே சொன்னாள்.
“நீ எழுத்தாளன். மனித மனோபாவங்களை எழுதுபவன். உனக்கே சில விஷயங்கள் புரியவில்லை. இந்த நேரத்தில் என் அம்மா இருந்தால், எனக்கும் அவளுக்கும் நல்ல உறவு நிலவும் என்றா நினைக்கிறாய்? அப்படி இராது. விவகாரத்து ஆன பெண் ணைப் பார்க்கப் பார்க்க அவள் வயிறு எரியும். யார் யார் மீதோ கோபம் மண்டிக்கொண்டு வரும். எரிச்சல் மீறிக்கொண்டு கிளம்பும். அந்தக் கோபத்தை, எரிச்சலை யார் மீது அவள் காட்ட முடியும்? என் மேல்தான் காட்ட முடியும். என்னை அவளும், அவளை நானும் பிறாண்டிக் கொண்டு, இரத்தம் கசிய நிற்போம், பெண் களுக்கு முதல் எதிரி யார் என்று நினைக்கிறாய்? பெண்கள்தான். ஆண்கள் அப்புறம்தான்.”
வித்யா மீண்டும் சிரித்தாள்.
சிரிப்பு; மனுஷ குலத்துக்கு வாய்த்த எத்தனை பெரிய சொத்து! அது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது. மகிழ்ச்சியை எதிராளியிடம் மலர்த்துகிறது. நேசத்துக்கு அஸ்திவாரமிடுகிறது. சினேகத்துக்கு அது மழை. காதலுக்கு அது வேர். மனசுக்கு அது கண்ணாடி. வார்த்தை களுக்கு அது மாற்று. வாழ்க்கை ஏற்படுத்தும் காயங்களுக்கு அது மருந்து. ஒரு முத்தத்துக்கு அது நிகரானது.
வித்யா, ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில், அந்த நிறுவனத் தின் இயக்குநருக்கு நேர்முக உதவியாளர். ஓர் உள்ளங்கை அளவு குறிப்பு நோட்டை வைத்துக்கொண்டு இயக்குநர் சொல்வதைக் குறிப் பெடுத்துக் கொண்டு அதன் வழி காரியங்களை இயக்குபவள். உடம்பும் மனமும் ஆரோக்கியமாய் இருந்தன அவளுக்கு. ஆகவே, முதன் முறையாக பார்ப்பவர் கூட, இரண்டாம் முறை அவளைப் பார்க்க விரும்புவர். அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி, மிகையும், குறைவும் இன்றி அவள் எல்லோரிடமும் பேசினாள். நட்பு கொண்டாள். சிரித்தாள்.
வித்யாவிடம் பெரிய எதிர்பார்ப்புகள் இல்லை. தனக்கு வர இருக்கும் கணவனைப் பற்றி வண்ணமயமான கனவுகள் இல்லை. சகல கலையும் வல்ல சினிமா கதாநாயகர்கள் மாதிரி தன் கணவன் அமைய வேண்டும் என்று அவள் ஆசைப்படவில்லை. ரகசியத்தில் ஏங்கவில்லை. சுமாரான பாதுகாப்பான வேலையில் இருப்பவனாக, தன்னைப் புரிந்து கொண்டு இனிய தோழியாக ஏற்றுக் கொள்ளும் ஒருவனை அவள் எதிர்பார்த்தாள். நிறைய ஆண்களை எதிர்படும் பணியில்தான் அவள் இருந்தாள். எனினும் யாரையும் காதலிக்க அவளுக்கு ஏனோ தோன்றவில்லை. காதல், தெருவோரப் பெட்டி கடைகளில் ரூபாய்க்கு இரண்டு மூன்று விற்கப்படும் வாழைப்பழம் போன்று எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள். அந்த நிறுவனத்தில் பணிபுரியும், துணை மேனேஜராக இருக்கும் சிவந்த, அழகிய பல்வரிசைக் கொண்ட, நாலாயிரத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும், ஸ்கூட்டர் வைத்திருக்கும், ‘ரஜினி மாதிரி இருக்காம்பா’ என்று லஞ்ச் நேரத்தில் சக பெண்களால் ஒரு வகை ஏக்கத்துடன் குறிப்பிடப்படும் தன்மை கொண்டவனாக இருந்த ஒருவன், இன்ட்டிமேட் வாசனை கமழ, ‘நான் உன்னைக் காதலிக்கிறேன்’ என்று சொன்னபோது, சாமர்த்தியக்காரப் பெண்கள் என்ன செய்திருப்பார்களோ, அதற்கு எதிரான காரியத்தை வித்யா செய்தாள். ‘வருந்துகிறேன். நான் உங்களைக் காதலிக்கவில்லையே…’ என்று புன்னகையோடு அவளால் சொல்ல முடிந்தது. அவளுடைய நிறுவனத்தின் சகோதர நிறுவனமான ஒன்றில் பணி புரிந்த ரவி அவளுக்குச் சினேகமாக இருந்தான். ரவி ஒருத்தன்தான் வித்யாவின் சினேகிதன் என்று இருந்தான். அன்று மாலை ரவியிடம் இதைப் பற்றி வித்யா குறிப்பிட்ட போது ரவிகூட சொன்னான்.
“நீ தப்பு செய்துவிட்டாயோ என்று தோன்றுகிறது.”
“எப்படி?”
“நல்ல உத்தியோகம். வசதியான பையன். அழகானவனும் கூட, உன்னை விரும்புகிறவன். அப்புறம் என்ன மறுப்பு?”
“ரவி, மடையன் மாதிரி பேசாதே நீ சொல்றதெல்லாம் ஒரு கல்யாணத்துக்கு போதுமா? நான் அவனை விரும்ப வேண்டாமா?”
“எத்தனை காலம்தான் இப்படியே இருக்கப்போறே. அப்புறம் ஆம்பிளைகள் எல்லாம் குடும்பஸ்தர் ஆகிவிடுவார்கள். நீ தனியாகி விடுவாய்.”
“அதனால் என்ன! பெண்ணாய்ப் பிறந்தவள் எல்லாம் கல்யாணம் பண்ணிக் கொண்டே ஆகணுமா என்ன? இப்படியே இருந்துட்டுப் போறேன்?”
“உன் அப்பா விடுவாரா?”
“சங்கடமே அதுதான். பெண்களுக்கு கூடவே இருக்கும் எதிரிகள் பெரும்பாலும் பெற்றோர்கள் தானே. அன்புகூட துன்பம் செய்யுமா? செய்யும். இந்த அப்பாக்களும் அம்மாக்களும் தங்கள் பெண்களுக்குத் துன்பத்தைச் செய்வது அன்பு காரணமாகத்தான். அன்பு கரடு தட்டி கெட்டிப்பட்டுப் போகும் போது, பெண்ணுக்குச் சொந்த மூளை, சொந்த மனம், சொந்த விருப்பு வெறுப்பு எல்லாம் இருக்கும் என்று தோன்றாது. இருபது வயசுப் பெண்ணைப் கூடப் பச்சைக் குழந்தை என்றே எண்ணத் தோன்றும்.”
மூர்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது. சிந்தனையில் தெளிவும், செயலில் பிசிறு தட்டாத ஒழுங்கும் உள்ள வித்யா, எப்படி அனந்து மாதிரி ஒருத்தனை திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்தாள்?
“இதைத்தான் விதி என்று சொல்ல வேண்டும்” என்றாள் வித்யா.
கடற்கரை ரெஸ்டாரண்டில் வித்யாவும், ரவியும், மூர்த்தியும் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தார்கள். மூர்த்திக்கு ஃபோன் செய்து வித்யா தன் அலுவலகத்துக்கு அவனை அழைத்திருந்தாள். ரவிக்கும் மூர்த்திக்கும் அன்று அறிமுகம் ஏற்பட்டது. ஏற்படுத்தவே மூர்த்தியை அழைத்திருந்தாள் வித்யா. ஏற்பட்டவுடன் மூவரும் ஓர் ஆட்டோ பிடித்துக் கடற்கரை வந்திருந்தார்கள்.
ஆட்டோவை விட்டு இறங்கியதும், ஆட்டோவுக்கு யார் பணம் கொடுப்பது என்பது குறித்து அவர்களுக்குள் ஒரு யுத்தமே நிகழ்ந்தது. “நான் தருகிறேன்” என்று பர்ஸை எடுத்தான் ரவி. “முதல் முதலில் நாம் சேர்ந்து வந்திருக்கிறோம். நானே தருகிறேன்” என்றான் மூர்த்தி.
இதுக்குப் போய் ஏன் அடித்துக் கொள்கிறீர்கள்?” என்றவாறு தான் பணம் கொடுக்கப் போனாள் வித்யா.
“நீ தரக்கூடாது எங்களில் ஒருவர் தருகிறோம்” என்றான் மூர்த்தி.
“ஏனென்றால் நான் பெண். ஆட்டோவுக்கு நான் பணம் கொடுத்தல், உங்கள் பௌருஷம் கௌரவம் இழந்து விடும், இல்லையா?”
“சேச்சே” என்றார்கள் இருவரும்.
ஆகவே, வித்யாதான் பணம் கொடுத்தாள். வெற்றி கண்ட மிதப்போடு. அவர்கள் பின் தொடர ரெஸ்டாரண்டை அணுகினாள் வித்யா. அங்கு வைத்து முறை செய்து கொண்டார்கள் மூவரும், காபிக்கு ரவி பணம் கொடுப்பது, சுண்டல் மிளகு வடைக்கு மூர்த்தி. முதல் முறை சந்திக்கிறோம் இனிப்போடு தொடங்குவோமே..” என்றான் ரவி.
“எனக்கு குலோப்ஜாமுன்” என்றான் மூர்த்தி.
“எனக்கும்” என்றான் ரவி.
“எனக்கு இந்த வழவழ கொழகொழ சமாச்சாரங்கள் பிடிப்ப தில்லை. ஆகவே மைசூர்பாக்” என்றாள் வித்யா, இருவரையும் பார்த்துக் கண் சிமிட்டியபடி.
“இன்றைக்கு எங்களைச் சீண்ட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு வந்துவிட்டாய். நடக்கட்டும்…” என்றான் ரவி.
வித்யா மிக உற்சாகமாய் இருந்தாள். மணலில் வைத்துத்தான் மூர்த்தி அக்கேள்வியைக் கேட்டான்.
“விதியை நீயும் நம்புகிறாயா?”
“இல்லை. நம் முயற்சிகள் தோல்வியுறும் போது, அத்தோல்வி களை ஏற்றுக்கொண்டு சமாதானம் அடைய ஒரு பிடிமானம் தேவைப்படுகிறதே மூர்த்தி, சத்திரம் மாதிரி கொஞ்சம் ஓய்வு கொள்ள.
எனக்கு அவரை ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை. ஆனால், இவள் சம்மதித்த பின், என் அபிப்பிராயம் அர்த்தமற்றுப் போய் விடும், இல்லையா?” என்றான் ரவி குறுக்கிட்டு.
“உனக்கு அனந்துவைப் பிடித்ததா, வித்யா ?’
“எனக்குத் தெரியவில்லை மூர்த்தி. அப்பாவும் தரகர் மாமாவும் கூடிக் கூடிப் பேசிக் கொண்டார்கள். அப்பா ஒருநாள், என்னை அழைத்து, நல்ல வரன் வந்திருக்கிறதம்மா, அரசாங்கத்தில் வேலை பார்க்கிற பையன். தாய் தந்தை இல்லாதவன். நம் வீட்டோடு வந்துவிடுவான். உனக்கும் வேலைக்குப் பிரச்சினை இருக்காது. அதிகமாகவும் பையன் எதிர்பார்க்கவில்லை. நல்ல பையன் மாதிரி தான் தோன்றுகிறது. என்றார். எனக்கு மறுத்துப் பதில் பேச ஒன்றும் இருக்கவில்லையே, மூர்த்தி. வேலையில் இருப்பவன், வீட்டோடு வரப் போகிறவன், மாமியார் பிடுங்கல் இல்லை, முக்கியமாக. கை நிறையச் சம்பளம். என்ன சொல்லி மறுப்பது? கல்யாணம் பண்ணிக் கொள்ளக் கூடாது என்கிற மாதிரி விரதம் எதுவும் எனக்கு இல்லை. யாரையாவது காதலித்து தொலைத்திருந்தாலாவது, எனக்கு இந்தப் பையன் வேண்டாம் என்று சொல்லலாம், சொன்னால் அதில் அர்த்தம் இருக்கும். இத்தனை ஆம்பிளைகள் உள்ள எங்கள் ஆபிசில், ஏனோ இவன்தான் என் ஆண் என்று நான் நினைக்கிற மாதிரி ஒருத்தனும் எனக்குக் கிடைக்கவில்லை. தவிரவும் எவனைக் காதலிப்பது என்று ஆராய்ச்சி செய்து கொண்டா காதலிக்க முடியும்? அது திடீரென்று வந்து பெய்து விட்டுப் போகிற மழை மாதிரியல்லவா வரும். பதினேழு ‘சி’ பஸ்ஸுக்கு நிற்பது போலவா காதலுக்கு ஒருத்தி நிற்க முடியும்? எனக்கும் கல்யாணம் பண்ணிக் கொள்ள ஆசையாய் இருந்தது மூர்த்தி. உன்னிடம் சொல்ல என்ன வெட்கம்? எனக்கும் உணர்ச்சிகள் இருக்கிறதுதானே, எனக்கும் ஒரு வடிகால் தேவை தானே, என்னை உடம்பாலும் பகிர்ந்துகொள்ள ஒரு துணை தேவைப்பட்டது. அதுவும் ஒரு பாஷையில்லையா? வயசு இருபத்து நாலு. அப்பா கேட்டதும் சரி என்று விட்டேன். ஒரு ஞாயிற்றுக் கிழமை சாயங்காலம் அனந்து எங்கள் வீட்டுக்கு வந்தார். வெறும் காபி மட்டும் கொடுப்பது என்று தான் இருந்தேன். இந்த இடியட் ரவிதான், அது நன்றாக இருக்காது என்று சொல்லி எங்கேயோ போய் சோன்பப்படியும் முந்திரிப் பயிறு வறுவலும் வாங்கி வந்தான்.”
“மிச்சரை மறந்து விட்டாய், பார்…”
“வாயை மூடு, வந்தார். ஓர் ஆணை, ஒரு மனிதரைப் பார்த்த மாத்திரத்தில் என்ன முடிவுக்கு வர முடியும்? அவரோடு கொஞ்சம் காலம் வாழ்ந்து அப்புறம் முடிவு செய்கிற மாதிரியா நம் சமூக அமைப்பு இருக்கு? சரி என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு ஒரு வழியோ, வாய்ப்போ இருக்கிறதாகப் படவில்லை. எந்த எதிர்பார்ப்பும் இன்றித்தான் ஒப்புக் கொண்டேன். என்னமோ, எனக்கு திருமண வாழ்வில் பெரிய ஆசைகள் எல்லாம் எப்போதுமே இல்லை மூர்த்தி. உண்மையில் நான் ரொம்ப, பல விஷயங்களிலே, பழைய காலத்து மனுஷியாட்டம்தான் இருக்கேன். ரவிகூட என்னை விச்சுப் பாட்டின்னு கலாட்டா பண்ணுவான். நாலணா பூக்கூட அவன்- என் கணவன் வாங்கித் தரணும்னு எதிர்பார்க்கல்லை அன்பா ஒரு வார்த்தை. குளிர்ச்சியா ஒரு பார்வை. இதமான ஒரு பரிவு. அது போதும், மூர்த்தி எனக்கு. அவனுக்கு நான் நல்ல மனைவியா இருப்பேன். அவன் குழந்தைகளுக்கு நல்ல தாயா இருப்பேன். என் தோலை செருப்பா தச்சுகூட அவனுக்கு நான் தருவேன். நான் என்ன எதிர்பார்க்கிறேன், மூர்த்தி? சாயங்காலம் ஆனா, புருஷன் இடுப்பை சுத்திக்கிட்டு ஒரு ஸ்கூட்டர் பயணமா? இல்லை. வாரம் தவறாமல் சினிமாவா? இல்லை. மாசாமாசம் புடவையா? இல்லவே இல்லை. வருஷம் தவறாமே நகைகளா? எனக்கு நகைகள் பிடிக்காது. எனக்குத் தேவையானது ஒன்றே ஒன்று தானே, அன்பு ஒன்று தானே என் தேவை. என்னை மனுஷியா நினைச்சு அன்பு செலுத்து. என்னை நம்பு. நான் உனக்காக வாழ்கிறவள் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறே? இதுதானே என் பிரார்த்தனையாக இருந்தது. எனக்கு அதுகூட கிடைக்காதா மூர்த்தி… கிடைக்காதா… கிடைக்காதா?”
வித்யா உடைந்து போனாள்.
மே மாதம் புழுங்கி வழிந்தது. அறைக் காற்று அடுப்புக் காற்று மாதிரி இருக்கவே, மொட்டை மாடிக்கு வந்து படுக்கையை விரித்தான் மூர்த்தி.
இடுப்பில் ஒரு துண்டை மட்டும் சுற்றி கொண்டு தூரத்தில் படுத்திருந்த ராவ் எழுந்து உட்கார்ந்து கொண்டார். ராவை எதிர் பார்க்க வில்லை மூர்த்தி. யார் யாருடன் சிக்கிக் கொண்டார்கள் என்று சொல்வது? ராவின் கணீரென்ற ஆங்கிலக் குரல் மூர்த்தியை வந்து அறைந்தது.
“என்ன சாப்பாடெல்லாம் ஆயிற்றா?’
“ஆச்சு.”
“சைவமா, அசைவமா?”
“எத்தனைநாள், இந்தக் கீரைத்தண்டு சாம்பாரையும், கேரட் பொரியலையும் தின்று தொலைக்கிறது. ராவ்ஜி, ஒரு மாற்றம் வேணும்னு பொன்னுசாமி ஓட்டலுக்குப் போனேன்…’
“அசைவம்லாம் வெள்ளைக்காரன் பண்ணி சாப்பிடணும். அது ருசியே அலாதி. எங்க கலெக்டர் துரை சம்சாரம் கோழி பண்ணும். எலும்பை உலுக்கினா கறி உதிரும். அது அல்லவா ரோஸ்ட்? இவன்லாம்? அதான், இந்தியக்கார பயலுவ, என்னத்தைச்சமைச்சு, என்னத்தைச் சாய்ப்பானுங்க? அதெல்லாம் நாற்பத்தேழோட போச்சு…”
ராவ்ஜியின் உலகம் நாற்பத்தேழோடு அஸ்தமனம் ஆகி விட்டிருந்தது. சுதந்திரம் மட்டும் குறுக்கிடவில்லையென்றால், ராவ்ஜி சப்கலெக்டாராக ரிடையர்ட் ஆகியிருப்பார். விதி தான். ஓர் இந்திய ஐ.சி.எஸ். இளைஞன் அவருக்கு அதிகாரியாக வாய்க்க, அவனை சிறு பயல் என்று இவர் நினைக்க, இந்தக் கிழக்கோட்டான் எனக்குத் தேவையில்லை என்று பல்வேறு இடங்களுக்கு ராவை அவன் மாற்றியடிக்க, அந்தத் துவந்த யுத்தத்தின் முடிவாக தாசில்தாராகவே ரிடையர்ட் ஆனார் ராவ். உத்தியோகம் போகுமுன்பே மனைவியை இழந்திருந்தார். ஒரே பெண் வடக்கில் வாழ்க்கைப்பட்டிருந்தது. ஆண்டுக்கு இரண்டு மாதம். குளிர் அதிகம் இல்லாத காலமாய்ப் பார்த்து டில்லிக்குப் போய் மகளுடன் தங்கியிருந்து விட்டுத் திரும்புவார்.
“எங்கே உங்கள் பிரண்ட்?”
“யார்?’
“அனந்து தான்…”
ராவ், உணர்ச்சி வசப்பட்டு விட்டால், தமிழுக்குத் தாவி தமிழில் உரையாடுவார்.
“அந்தக் கம்மனாட்டிப் பயலைப் பற்றி என்னத்துக்கு பேச்சு? கழுதை எங்கே போகுதோ, வருதோ, யாருக்குத் தெரியும்?”
“என்ன திடீரென்று உங்களுக்குள் ஊடல்?”
“வெண்டைக்காய், அந்தப் பேமானி, கல்யாண செலவுக்குன்னு ஐயாயிரம் வாங்கினான். கல்யாணம் பண்ணி கட்டின தாலியையும் வாங்கிட்டான். இன்னும் அந்தப் பணத்தை திருப்பித் தரலை. பேங்க்கிலே இருந்தாலாவது நாலுகாசு வட்டியாவது கிடைச்சி ருக்கும்.”
“நிறைய சம்பாதிக்கிறார். ஏன் கடன் வாங்கினார்?”
“சம்பாதிக்கிறான், பணத்தை எல்லாம் குதிரை வாலில் கட்டி விடறான். வேறே என்ன? நல்ல சட்டை நாலு வச்சிருக்கானா சார்? பெரிய ஆபீசர், பத்து தேதி ஆனா, கை மாத்துக்கு வந்துடறான். இவனெல்லாம் என்ன மனுஷன் ? இவனையும் ஒருத்தி கட்டிக்கிட்டு வாழ்ந்தாளே, அவளைச் சொல்லணும்.”
அனந்துக்கு குதிரைப் பந்தயம் பழக்கம் இருப்பது மூர்த்திக்குப் புதிய செய்தி. இது அனந்துவின் புதிய முகம். காலையில் மூர்த்தி எழுவதற்குள், குளித்து வெளிக்கிளம்பி விடும் பழக்கம் உடையவன் அனந்து, பத்து மணி அலுவலகத்துக்கு காலை ஆறு மணிக்கு எதற்காகக் கிளம்புவது?
பைத்தியக்காரன் இல்லை பைத்தியக்காரன், அவனை மாதிரி தெருத் தெருவாத் திரியறான், மூர்த்தி. நேரா ஆனந்தா லாட்ஜுக்குப் போய் டிபன் சாப்பிடுவான். மணி ஆறரைக்குள் டிபன். ஆறரை தொடங்கி பத்து வரைக்கும் வீதி உலா.
அனந்து அதிசயமான பழக்கங்களைக் கொண்டிருந்தான். பைப்பில் வரும் தண்ணீரை குடிப்பதில்லை. அதில் அழுக்கு இருக்கிறது. ஆகவே எப்பவும் இரண்டு சோடா பாட்டில் வாங்கி அறையில் வைத்திருப்பான். தண்ணீரில் அழுக்கைப் பார்க்கிற ஆரோக்யமான பழக்கம் உடையவன். தன் அறையைக் கூட்டிப் பெருக்குவது இல்லை. அறையில் எங்கு கை வைத்தாலும் புழுதி ஒட்டும், கட்டிலுக்குப் போகும் வழியும், மேஜையைச் சுற்றிய கொஞ்சம் இடமும் தவிர, அறை முழுக்கப் புழுதி கனமாகப் படிந்து, பார்க்கவே அச்சத்தைத் தரும். அனந்து அந்த அறையில்தான் கவலையின்றி காலம் கழித்தான். ஒரு நாளும் அனந்து படித்து மூர்த்தி பார்த்ததில்லை. ஒரு வாரப் பத்திரிகையைக் கூட அங்கு அவன் பார்த்ததில்லை. வேலைக்குப் போகும் போதோ வரும் போதோ தபால்களைப் போட்டு வைக்கும் சதுரப் பெட்டியண்டை நின்று தனக்கு ஏதேனும் தபால் வந்திருக்கிறதா என்று அவன் கவனித்ததில்லை. அலுவலக நண்பர்கள் கூட அவனைத் தேடி வந்ததில்லை.
“அனந்து ஏன் இப்படி இருக்கிறான்?”
ராவ் சொன்னார்.
“அவனுக்குள் இருந்து ஏதோ ஒரு குரல் அவனை இப்படிச் செயல்பட வைக்கிறது. அவன் அப்படி இருப்பது தான் சரி என்று அவனுக்குத் தோன்றும் போலும். நாமெல்லாம் ஏதோ கிறுக்குப் பிடித்தவர்கள் என்று அவன் நினைக்கிறான். ஏதோ தீவு மாதிரி கிடக்கிறான். பொதுவாக மூர்த்தி, தீவுகள் ரொம்ப நாளைக்குத் தீவாகவே இருந்து விடுவதில்லை. கடல் தீவுகளை மூழ்கடித்து விடும். அனந்து, அமிழ்ந்து இருந்த இடம் தெரியாமல் போய் விடுவான்.”
அப்பாவுக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொண்டிருந்தாள் வித்யா. சமையல் உள்ளுக்குள் வாழும் சுண்டெலி போன்றவை இந்தச் சின்னஞ்சிறு ஸ்பூன்கள், பார்த்துக் கொண்டிருக்கும்போதே, காணாமல் போய் விடுபவை இவை. தேவைப்படும் நேரத்தில் கிடைக்காமல் போகிற பொருள்களில் ஒன்று ஸ்பூன்கள்; அதற்காகவே கம்பி வலை பொருத்தப்பட்ட குட்டி அலமாரியில் ஸ்பூன்களைப் போட்டு வைத்திருப்பாள் அவள். அலமாரியைத் திறந்து, மேல் தட்டில் ஸ்பூன்களுக்குத் துழாவுகையில்தான் அந்தப் பெரிய எவர்சில்வர் ஸ்பூன் அவள் கண்களுக்குத் தட்டுப்பட்டது. அது அவளுடையது இல்லை, பக்கத்து வீட்டு சுந்தா மாமியுடையது. சட்டென்று அவளுக்கு நினைவு வந்தது. மாமி கடன் வாங்கிச் சென்றிருந்த காபி பொடியை இந்த ஸ்பூனில் வைத்துத்தான் திருப்பிக் கொடுத்தாள்; திருப்பிக் கொடுத்த உடன் போய்விட வில்லை அவள். உட்கார்ந்து கொஞ்சம் நாழிகை வித்யாவிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு, ‘வித்யா கை காபி சாப்பிடக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே’ என்று வித்யாவை மஸ்கா பண்ணி ஒரு டம்ளர் காபி சாப்பிட்டு விட்டுத்தான் போனாள்.
மாமி தவற விட்டுப்போன ஸ்பூனை, திருப்பிக் கொடுக்கப் பக்கத்து வீட்டுக்குப் போனாள். கிறீச்சென்று கத்தியது தெருக் காம்பவுண்டுக் கதவு. துளசிச் செடி காற்றில் தலையசைத்து கொண்டி ருந்தது. வாசல் கதவண்டை நின்று கொண்டு, “மாமி.. மாமி…” என்றாள் வித்யா. ஆறாவது முறை அவள் மாமி என்று கூப்பிடுகிற போது தோட்டத்து நிலைப்படியாண்டை மாமியின் தலை தெரிந்தது. ‘வா… வா… வித்யா…என்ன அங்கேயே நின்னுண்டு… உள்ளே தான் வரது…” என்று எப்போதும் அட்டகாசமாக வரவேற்கிற மாமி, “யாரது” என்று மட்டும் சொல்லி, நிறுத்திக் கொண்டாள், வித்யா தான் என்பதை விளங்கிக் கொண்டவளாக, சற்று அருகே வந்தாள்.
வித்யா மாமியைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே “குட்மார்னிங் மாமி” என்றாள். வித்யா எப்போது இந்தக் காலை வணக்கத்தைச் சொன்னாலும், உடனே மாமி, “வெரி குட் மார்னிங்” என்பாள் வெகு உற்சாகமாக. அன்று சற்றும் ஊக்கம் இல்லாதவளாக, “உம்’ என்று மட்டும் சொன்னது, வித்யாவுக்கு என்னமோ மாதிரி இருந்தது. கொஞ்சம் கூச்சமாகக் கூட இருந்தது. வரவேற்பு இல்லாத இடத்துக்கு வந்து விட்டால், மனிதர்க்கு ஏற்படும் கூச்சம் அது.
“என்ன மாமி உடம்பு கிடம்பு சரியில்லையா?”
“உடம்புக்கென்ன கேடு. அது நன்னாகத்தான் இருக்கு” என்றாள் அசிரத்தையாக, பிறகு தொடர்ந்து, “என்ன வேலையா, இவ்ளோ காலமே?” என்றாள். “உள்ளே வாடி பொண்ணே’ என்று எப்போதும் வாய் நிறைய அவள் அழைப்பவள், மாமியின் முகமே வேறு பட்டிருந்தது.
“ஒன்றுமில்லை, ஸ்பூன் உங்களோடது; மறதியா எங்க வீட்டிலேயே வச்சுசுட்டு வந்திட்டீங்க… இப்பதான் பார்த்தேன். தூக்கிட்டு ஒடி வர்றேன்…” என்று ஸ்பூனை மாமியிடம் நீட்டினாள்.
ஸ்பூனை பெற்றுக் கொண்ட மாமி சரி என்றபடி நின்றாள்.
“ஏன் என்மோ மாதிரி இருக்கீங்க?” என்றாள் வித்யா.
‘அதான் சொன்னேனே, ஒன்றுமில்லைன்னு…”
“இல்லை… எதையோ மறைக்கறீங்க. என்னன்னு எங்கிட்ட சொல்லக்கூடாதா மாமி. எப்பவும் உற்சாகமா இருப்பீங்க… இன்னைக்கு உம்முன்னு இருக்கீங்களே…”
“துக்கம், சந்தோஷம் எதுவானாலும் அதை வெளிக்காட்டிக்க குடும்பப் பெண்களாலே முடியுமோ, முடியாதுன்னா?” என்றாள் மாமி, உத்தரத்தைப் பார்த்தவாறு.
என்னவோ மாதிரி இருந்தது, மாமியின் பேச்சு. அதென்ன குடும்பப் பெண்கள்? மாமி குடும்பப் பெண் என்றால், வித்யா குடும்பம் இல்லாத பெண்ணா? குடும்பம் இல்லாமல் ஒரு பெண் என்றால், என்ன அர்த்தம்? அவளுக்கு அப்பா இல்லையா? ரவி, மூர்த்தி என்று அருமையா சிநேகிதர்கள் இல்லையா? அவள் குடும்பப் பெண் இல்லையென்றால்? வேறு யார்?
மாமி ஸ்பூனை எடுத்துக்கொண்டு நகர்ந்தாள். அவள் நகர்வதற் குள் அவள் மகன் சாம்பு, அறையிலிருந்து வெளிப்படவும் சரியாக இருந்தது.
“ஹலோ, வித்யா?” என்றான் சாம்பு. தனியார் கம்பெனி ஒன்றில் எக்ஸிகியூட்டிவ் இன்ஜீனியராக இருக்கிறவன் சாம்பு. மாமி சலித்துச் சலித்துப் பெண் தேடிக் கொண்டிருந்தாள் சாம்புவுக்கு.
“ஹலோ” என்றாள் வித்யா. ஒரு மெலிந்த புன்னகையை முகத்தில் பூசிக் கொண்டு.
“எங்கே ஆளையே காணோம் முன்னெல்லாம் அடிக்கடி வந்துண்டிருப்பே. அம்மாவுக்கும் உனக்கும் என்ன ‘டூ’ வா? ஏன் வரதில்லை?”
‘கொஞ்சம் பிஸி. வராம என்ன ? ஏன், நீ அவ்வளவு அக்கறை இருந்தா வீட்டுக்கு வந்திருக்கலாமே! ரயிலேறி வரணுமா? பக்கத்து வீடு” என்றாள், கொஞ்சம் சிரித்துக்கொண்டு வித்யா.
மாமி நடையில் நின்றபடி இவர்கள் உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தாள். சாம்பு, கொஞ்சம் மென்மையான குரலில் சொன்னான்.
இப்போ சந்தோஷமா இருக்கியா வித்யா? ரொம்ப கஷ்டப் பட்டுட்டே, இனிமேலாவது நிம்மதியா இரு…” என்றான் சாம்பு.
வித்யா தலையசைத்தபடி, புன்சிரிப்போடு அவன் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அனந்துக்கு ஏதோ முடைன்னு, ஆபிசில் லோன் போட்டு பத்தாயிரம் வாங்கிக் கொடுத்தியே, அந்தப் பணத்தையாவது திருப்பிக் கொடுப்பானா அவன்?”
“எதை எதையோ எடுத்துக் கொண்டவர். எல்லாத்தையும் பாழாக்கியவர். இந்தப் பணத்தை மட்டும் திருப்பிக் கொடுத்துடு வாரா என்ன? நான் அந்தப் பணத்தை என் சம்பளத்திலிருந்து அடைத்துக் கொண்டிருக்கிறேன்.”
சாம்பு ஆங்கிலத்தில், தன் அம்மாவுக்குப் புரியக்கூடாது என்கிற நோக்கத்தோடு சொன்னான்.
“ஒரு நண்பன் என்கிற முறையில் சொல்லுகிறேன், வித்யா. உனக்கு உதவ விருப்பம். கூச்சமில்லாமல், நீ விரும்பினால், என்னி டம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேள், சந்தோஷமாகச் செய்வேன்.”
“தேவைப்படாது. உன் அன்புக்கு நன்றி” என்றாள் வித்யா. மாமி அங்கிருந்தபடியே சொன்னாள்.
“ஆபீசுக்கு டைம் ஆகலியா? அங்க என்னடா காலங்காத்தாலே வம்பு பண்ணிக்கிட்டு நிக்கற?”
வித்யா சரேலெனத் திரும்பி வீட்டுக்கு நடந்தாள். நடுத் தெருவில் தடுக்கி விழுந்தது மாதிரி இருந்தது. எல்லோரும் அவளைப் பார்ப்பது மாதிரி இருந்தது. அவள் ஒரு வேடிக்கைப் பொருள். அவள் ஒரு தெரு நாய். அவளை யார் வேண்டுமானாலும் கல்லெடுத்து எறியலாம். அடிபட்ட அவள் ஓட வேண்டும். எல்லோரும் அவள் ஓட்டத்தைப் பார்த்து ரசிப்பார்கள்.
வீட்டுக்கு வந்ததும் தான் நின்றாள். உடம்பு நடுங்கியது. மூச்சு தடுமாறியது. இதயம் வெகுவேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு வியர்வைப் பெருக்கெடுத்தது. கண் இருட்டிக் கொண்டு வருவது தெரிந்தது.
ஏன்… ஏன் இப்படி… ஏன் எல்லோரும் இப்படி இருக்கிறார்கள். எல்லோருக்கும் கைகள் வளர்கின்றன. கைகளில் கூரிய நகங்கள் வளர்கின்றன. நகங்கள் என்பவை பிறரைக் கீறிக் கிழிக்கும் கருவிகள் போலும். அவள் இந்த மண்ணின் அழுக்கிலிருந்து சற்று மேலெழத் தான் விரும்புகிறாள். ஆனாலும் பிறரது நகக் கைகள் அவள் கால் களைப் பிடித்திழுத்து மீண்டும் மண்ணிலேயே தோய்ப்பது ஏன்? அதில் என்ன இவர்களுக்குக் குரூர திருப்தி. மனிதன் இரத்தப் பசி எடுத்து அலைவது எதற்காக? இந்த இரத்த தாகம் எப்போது அடங்கும்? குகைகளிலிருந்து வெளி வந்து, ஆகாயத்தைத் துழாவி இவர்கள் என்று பறக்கப் போகிறார்கள் ?
அகலிகைக் கல் மாதிரி மணிக்கணக்கில் அமர்ந்திருந்தாள் வித்யா. அலுவலக நேரம் கடப்பதை உணர்ந்தாள். எழுந்தாள். குளித்து உடை மாற்றிக் கொண்டாள். வாணலியில் உப்புமா இருந்தது. தமிழ்த் தேசிய உணவு, கொஞ்சம் விழுங்கிக் கசந்த காபியைக் குடித்து, செருப்பை உதைத்து தூசியை அகற்றி அணிந்து கொண்டு, தெருவுக்கு வந்தாள். தெரு, வழக்கமான காலை நேரச் சுறுசுறுப்பு அடங்கி அமைதியாக இருந்தது. கும்பல் இல்லாத பஸ்ஸைப் பிடித்து, உட்கார இடம் கிடைத்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டு பயணம் செய்தாள். கும்பல் இல்லாத பஸ் தான் எவ்வளவு இனிமை! மனிதர்களின் வியர்வை வாசனையைச் சுவாசிக்கும் நிர்ப்பந்தம் இல்லாத கும்பல் இல்லாத பஸ். மனிதக் காமம் நெட்டித் தள்ளாத கும்பல் இல்லாத பஸ். உலகம், உலகம் முழுக்க பரவியிருந்தாலும். நாகரிகம் சிறிதும் இன்றி நெருக்கி உடம்பின் மேல் உடம்பு பட நிற்கிற கோரம், அருவருப்பு இல்லாத, கும்பல் இல்லாத பஸ். அந்த பஸ்ஸை அவள் காதலித்தாள். அந்தக் கணத்தில் அதைக் காதலிக்க வேண்டும் போல் இருந்தது. காதல் என்பது பரவசத் தொற்றுதல். அவள் பரவசம் பஸ்ஸைத் தொற்றியது போலும். பளிச்சென்று கரும் பச்சை இருக்கைகளும், மஞ்சள் மைக்கா பலகைகளும், பாதிக் கண்மூடிக் கொண்டிருக்கும் பக்கவாட்டு சப்பை பல்புகளும், அலுமினிய தேக்கங்கன்றுகள் மாதிரி, நிற்கவைத்த கம்பிகளும் அவளோடு சிரித்து உரையாடுவது மாதிரி இருந்தது.
எந்திர பஸ் அவளுக்கு ஏற்படுத்திய சந்தோஷம், அலுவலகத்து மனிதர்களால் அணைந்து போயிற்று.
“என்னம்மா லேட்?” என்றார் வயசான தேவசகாயம். “வீட்டுல கொஞ்சம் வேலை சார்…” என்றாள் வித்யா.
“வீட்டுல இப்போ என்ன வேலை. ஆம்படையானும் இல்லைன்னு ஆயீடுச்சு. அப்புறம் என்ன?”
“ஆம்படையான் மட்டும்தான் வேலையா சார்… மனுஷிக்கு வேறே பிரச்சினையே இல்லையா சார்…”
“என்ன பிரச்சினை?” என்றவர், அக்கம் பக்கம் திரும்பி பார்த்து யாரும் தங்களைக் கவனிக்கவில்லை என்று தெரிந்ததும், மிக மெதுவாகச் சொன்னார்.
“என்ன… காலைலே ரவி வீட்டுக்கே வந்துட்டானா?”
குபுக்கென்று சீற்றம் அவள் உடம்பில், மனதில் பற்றி எரியத் தொடங்கியது. யாரிடமிருந்துதான் இக்கேள்வி வரவில்லை? தாலி கட்டியவன் கூடக் கேட்டான். ‘சாயங்காலம் ஆனால் இழுத்துக் கொண்டு வந்துவிடுகிறாயே, யார் இந்த ரவி?” என்று ஒரு நாள் அனந்து கேட்டான். ‘என் சினேகிதன்’ என்றாள் வித்யா. ‘சினேகிதன் மட்டும் தானா’ என்று அடுத்துக் கேட்டான். ‘ஆமாம்’ என்றாள். அத்தோடு சேர்த்தும் சொன்னாள். ‘அனந்து, அவன் சிநேகிதன் மட்டும்தான் என்பதால் தான் அவனை வீட்டுக்கும் அழைத்துக் கொண்டு வந்தேன். நீங்கள் வருவதற்கு முந்தியே வந்தவன் அவன். எங்களுக்குள் வேறு மாதிரியான உறவு இருக்கும் பட்சத்தில், அதை சாமர்த்தியமாக நிறைவேற்றிக் கொள்ள எங்களுக்குத் தெரியாதா? நீங்கள் அறியாத எந்தப் பகுதியும் எனக்குள் இருக்கக் கூடாது என்பதால் தான் ரவியை வீட்டுக்கு அழைத்து வருகிறேன்’ என்றாள். அனந்தின் கேள்வியைத்தான் இப்போது தேவசகாயமும் கேட்கிறார். அனந்து வயது முப்பது. தேவசகாயம் ஐம்பதில் இருந்தார். மடமைக்கும், வக்கிரத்துக்கும் வயது ஏது?
“என்ன சார், கேட்டீங்க? ரவி காலைலேயே வந்தானா என்றா? இல்லை. நேற்று ராத்திரியே அவன் வந்துட்டான். எங்க வீட்டில் தான் படுத்திருந்தான். ஏன், என்னோட தான் படுத்திருந்தான். இன்னைக்கும் வருவான். இன்னைக்கும் படுத்துக்குவோம். போதுமா சார்? இது விஷயமா வேறு ஏதாவது தகவல் வேணுமா சார்? சொல்லுங்க சார்… சொல்லுங்க சார்… சொல்லுங்க மிஸ்டர் தேவச காயம்… சொல்லுங்க தேவசகாயம்… பதில் சொல்லுங்க தேவ சகாயம்…”
வித்யாவின் குரல் உயர்ந்து உயர்ந்து அந்த நான்கு அலுவலகச் சுவரையும் எட்டியது. எல்லோரும் வேலையைப் போட்டுவிட்டு வித்யாவையும், தேவசகாயத்தையும் பார்த்தார்கள்.
“உஸ்… சத்தம் போடாதே… ப்ளீஸ்” என்று கெஞ்சினார் தேவசகாயம்.
நாலைந்து சக பணியாளர்கள் அவர்களிடம் வந்தார்கள்… “என்ன வித்யா… என்ன விஷயம்?” என்றாள் டைப்பிஸ்ட் ரோகிE.
எல்லோரும் சொன்னதால் அன்று ஒருநாள் லீவு எழுதிக் கொடுத்துவிட்டுக் கிளம்பினாள் வித்யா. அவளுக்கு நடக்க வேண்டும் போல் இருந்தது. நடந்தாள். மிகவும் களைத்து போய் இருந்த அவள், பஜார் பக்கமாக வந்தாள். ஒரு ரெஸ்டாரன்டுக்குள் புகுந்து ஒரு காபி சாப்பிட்டாள். புன்னகையோடு அழகாக விசாரித்துக் காபி கொடுத்த வெயிட்டருக்கு இரண்டு ரூபாய் டிப்ஸ் கொடுத்தாள். திடுமென மனசு சந்தோஷமாக இருந்தது, அவளுக்கு. தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொண்டாள். ஏராளமான பேர் அவளைச் சுற்றி இயங்கிக் கொண்டிருந்தார்கள். தான் தனியாக இல்லை என்று அவளுக்குத் தோன்றியது. எத்தனை வகையான, எத்தனை எத்தனை நிறத்தில், எப்படி எப்படியெல்லாமோ உடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருந்து இந்தியாவைப் பார்க்க வந்த ஒரு சுற்றுப் பயணி மாதிரி எல்லோரையும், எல்லா முகங்களையும் ஆசை ஆசையாகப் பார்த்தாள். புது தேசம் மாதிரி இருந்தது இந்தியா அவளுக்கு. எல்லார் முகங்களிலும் வித்யாவின் சாயல் இருப்பதாகப் பட்டது. எல்லாரும் வித்யாக்கள்தான் என்று சட்டென்று அவளுக்குத் தோன்றியது.
அது பொதுவிடம் என்பதையும் மறந்து வாய்விட்டுச் சிரித்தாள் வித்யா.
– 1988
– பிரபஞ்சன் சிறுகதைகள், முதற் பதிப்பு: 2004, கவிதா பப்ளிகேஷன், சென்னை.
![]() |
பிரபஞ்சன் (ஏப்ரல் 27, 1945 - டிசம்பர் 21, 2018) தமிழ் எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். வார இதழ்களில் பணியாற்றிய இதழாளர். அரசியல் கட்டுரையாளர். தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது 1995-ம் ஆண்டு பெற்றவர். பிரபஞ்சன் 1980-1982-ல் குங்குமம் வார இதழிலும், 1985-1987-ல் குமுதம் வார இதழிலும் பின்னர் 1989-1990-ல் ஆனந்த விகடன் வார இதழிலும் பணியாற்றினார். நக்கீரன் இதழில் அரசியல்கட்டுரைகளும், மொழியாக்கங்களும் செய்துவந்தார். பிரபஞ்சன் பொதுவாசிப்புக்குரிய பெரிய இதழ்களில் பணிக்குச்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
ஒரு உறவு ஒரு பிரிவு
இரா.துரைமாணிக்கம்
September 30, 2026
சரசுவின் சௌந்தர்ய லஹரி
கவிஞர் கண்ணதாசன்
September 30, 2026
உறவுகள்
முல்லை அமுதன்
September 27, 2026
