கோணல் கம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 8, 2026
பார்வையிட்டோர்: 120 
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்

(2009ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பங்குனி மாசத்து உச்சிவெயிலையே வெறிக்கிற செல்லாண்டிக்குள், ஆவுடை பேசிய சொற்களின் தீக்கங்கான தகிப்பு. அவள் சொன்னதாக இவன் கேள்விப்பட்ட வார்த்தைகள். பாம்பெனச் சீறிச்சினந்த முகத்தீவிரம் எல்லாமே தீயலைகளாக குப்குப்பெனச் சீறுகிறது. 

வெட்டவெளிப் பொட்டல்தரிசில் பச்சைப்புல்லை ‘பறிச், பறிச்’ சென்று கடித்துக் கடித்து மேய்கிற செம்மறியாடுகள். ஓட்டைக் காது, முதுகில் உட்கார்ந்திருக்கிற கரிச்சானைப் பொருட்படுத்தாமல் பச்சைப்புல்லைப் பாய்ந்து பாய்ந்து பிடித்து மாட்டுகின்றது. கன்னக்கதுப்பில் காந்தலெடுக்கிற உச்சிவெயிலின் தகிப்பு. மனசுக்குள்ளும். 

பொட்டைச் சிறுக்கிக்கு அம்புட்டுத் திமிரா என்று நினைக்க நினைக்க உள்ளுக்குள் திகுதிகுவென்று எரிகிறது. 

காயடிக்காத கிடாயின் காமக்கனைப்பு, மேய்ச்சலில் குறியாக இருக்கிற செம்மறிகளை விரட்டி விரட்டி அச்சிலாத்திப் படுத்துகிற அதன் காமச் சேட்டை. 

கால் கட்டைவிரலால் ஒரு கல்லெடுத்து கைக்குக் கொண்டுவந்த கணக்கில் கல்லுக்கு ரெக்கை முளைத்து ‘விர்ர்’ ரென்று இரைந்தது. கிடாயின் முறுக்கி நின்ற கொம்பில் போய் சட்டேரென்று பட்டுத் தெறித்தது கல். 

ஆவுடை இன்ன மாதிரிப் பேசினாள் என்று காதில் செய்தி கேள்விப்பட்ட நேற்றிலிருந்து அலைபாய்கிற கொதி மனசு. 

ராத்திரி பூராவும் ஒறக்கம் கண்ணில் ஒட்டவேயில்லை. சாமத்து ஆந்தைகள் அலறுகிற சத்தம், பனந்தோப்பு, மயில் கத்தல் எல்லாவற்றையும் உறங்காமல் கேட்டுக்கொண்டிருந்தான். 

பத்து மணிக்குமேல்தான் தொழுவத்துப் படலைத் திறந்தான் செல்லாண்டி. மாறி மாறிப் பெய்த மூத்திரமும், போட்ட சாணமும் ஈரத்தரையை சகதியாக்கியிருந்தது. இளம் பச்சை நிறத்திலான சகதி. படுத்துறங்கி எழுந்த செம்மறிகளின் உதிர்ந்த ரோமங்கள். 

மூத்திரமும் சாணியும் கலந்த அந்த வாசம், செல்லாண்டிக்கு ரொம்பப் பிடிக்கும். கமகமவென்று மணக்கிற அந்த வாசத்தை தம் பிடித்து மூச்சிழுத்து உள்வாங்கி ரசிப்பான். இன்றைக்கு இருக்கிற மனக்கொதிப்பில் அதெல்லாம் தோன்றவில்லை. 

எரிச்சலில் படாரென்று திறந்த படல் கதவு. ‘நாமுந்தி நீ முந்தி’ என்று முண்டியடித்து வெளியேறிய செம்மறிகளின் ஆவல். அதன் கண்ணில் மனத்துள்ளல். பச்சைப் புல்லைத் தேடுகிற உயிர்ப் பசி. 

கூட்டுக்கனைப்புகளும், செருமல் சத்தங்களும் காற்றில்லா வெயிலை நிறைத்தது. தலைக்குலுக்கல்களில் உதறிச் சிதறுகிற மூக்குச்சளி, புழுதிமண்டலத்தில் தெறிக்கிறது. முட்டல்கள், மோதல்கள், தள்ளுமுல்லுகள், ஒன்றின் வயிறை ஒன்று இடிக்க, வெளியேறத் துடிக்கிற ஆடுகள். 

ஆட்டுக்கம்பைத் தூக்கிக்கொண்ட செல்லாண்டி. மஞ்சணத்திக் கம்பு. இவனே தேடித் தேடிக் கண்டுபிடித்து, வெட்டியது. துரட்டியால் சீவிச் சீவித் தோலுரித்து உள்ளிருக்கும் மெல்லிய தோலையும் செதுக்கி வழித்து வெள்ளை வெளேரென்று வழுவழுப்பாக்கியது. சற்றே கோணல்கம்பு.ஆனால் வலுவானது. 

கொழைக்கட்டுவதற்கான நூல்கயிறை பெல்ட் மாதிரி இடுப்பில் கட்டியிருக்க, அதில் தொங்குகிற ரெண்டுலிட்டர் தண்ணிப் பாட்டிலும், சோற்றுத் தூக்குச் சட்டியும். 

தெருவை நிறைத்த ஆடுகள் அததுக்கு விருப்பப்பட்ட திசைகளில் நகர, சிலதுகள் கூளப்படப்பில் உரசின. சிலதுகள் தித்திச் செடிகள், குருவிக்காய்ச் செடிகளைக் கடித்தன. சிலதுகள் வெளிப்பானைத் தண்ணீரில் வாய்வைத்தன. 

ஆவுடையின் மீதான ஆங்காரத்தையெல்லாம் கூட்டிச் சேர்த்து… ‘ஆய்ய்ய்க் ஆய்ய்ய்’யென்று காட்டமாக கூவல்காடு போடுகிற செல்லாண்டி. 

ஓட்டமும் நடையுமாக அங்கிட்டும் இங்கிட்டுமாக ஓடித் தவிக்கிற அவன். வசவுகளும் கோப வெடிப்புகளுமாகத் தெறிக்கிற செல்லாண்டி. 

“ஏய்ய்க், ஓட்டைக்காது. ஒழுங்கா இங்கிட்டு வாரீயா? இல்லே… கல்லெறி வாங்கிச் சாகப் போறீயா?” 

“ஏய் வவுத்து வெள்ளை, ஒனக்கு அங்கிட்டு என்ன ஜோலி”. 

“அடக், கிழிஞ்ச வாலு, மறிகளோட அணைஞ்சு நில்லு.”

கையை ஓங்குவதும், கம்பை வீசுவதும், கல்லெறிவதுமாக சத்தக்காடுபோட்டு எல்லா மறிகளையும் ஒரே மந்தையாக்கி, வண்டிப்பாதை வரம்புக்குள் நெறிப்படுத்தி நடக்க வைப்பதற்குள் உயிர் அ(று)ந்து போகிறது. 

காலை வெயிலில் எழுகிற தெருப்புழுதி மண்டலம், ஆடுகளின் வெக்கை மூச்சுகளால் நிரம்பி, கண்ணாடித் திரையாகிறது. 

ஆடுகள், ஊரெல்லை தாண்டிவிட்டன. 

“என்ன கோணாண்டி, இன்னிக்கு எங்குட்டு? சாமிநாத புரத்துக் காடா, ஆத்துப்பாலமா?” 

“ஆத்துப்பாலம் பக்கந்தான்.” 

செல்லாண்டி என்கிற அம்மா வைத்த பெயர், இப்ப கோணாண்டியாகிவிட்டது. ஆடு மேய்த்து மேய்த்து கோணல் காலாகிப் போனதால் வந்து அப்பிக் கொண்ட பட்டப்பெயர். 

ஆட்டுக்கம்பை ஒருச்சாயலாக ஊன்றி, இடது கட்கத்தை அதன்மேல் போட்டு காலை மடித்து நின்ற வாக்கில், உடல் பாரம் முழுவதையும் அதன் மேல் சாய்த்திருக்கிற செல்லாண்டி, குனிந்து காலைப் பார்த்தான். முழங்கால் முட்டியின் உள் வளைசலான புடைப்புகளால் கோணலாகி விட்ட அலங்கோலம். 

“அதனாலேதான்… ஆவுடை அப்புடிப் பேசிட்டாளோ. பொட்டைச் சிறுக்கி எம்புட்டு எடுத்தெறிஞ்சு பேசியிருக்கா? நம்மளை எம்புட்டு எளப்பமா நெனைச்சிருக்கா?” 

வெட்டவெளித் தரிசில் மேய்கிற ஆடுகள், மஞ்சணத்தி மரத்தின் நிழலில் அவன். ஒன்றிரண்டு கரிச்சான்களும் மைனாக்களும் குதித்துக் குதித்து கும்மாளிக்கின்றன. ஆடுகளின் செருமல்களில் சிதறுகிற சளியில் கிடக்கிற புழுக்களை மேய்வதில் அதன் உல்லாசம். 

அவனுக்குள் வந்து போகிற ஆவுடையின் முகச் சீற்றம். தீக்கங்குகளின் சொற்கள். ‘அவளை என்னமாச்சும் செய்யணும்’ என்கிற மூர்க்க வன்மம், ஜெம்மத்துக்கும் தீராத தலைகுனிவா கேவலப்படுத்தணும்… அசிங்கப்படுத்தணும் என்கிற உன்மத்தம். 

முத்தையாக்கோனார் வீட்டிலேயே ‘பதிவாக’ கூலி வேலை பார்த்து, கஞ்சித் தண்ணி குடித்த ஆத்தா முனியம்மா சாகிறபோது செல்லாண்டிக்கு வயசு, ஆறு. இவன் பிறந்த மூணாவது மாசமே போய்ச் சேர்ந்து விட்ட அப்பன். 

ஆட்டுத் தொழுவத்தில்தான் நாதியற்றுப் படுத்திருப்பான். ஆட்டின் கால்குளம்பு மிதிபட்டுத்தான் கண்விழிப்பான். கோனார் வீட்டம்மா எப்பவாச்சும் ஊத்துகிற கஞ்சி, இவனும் எட்டு வயசிலேயே கம்பு தூக்கிவிட்டான். ரெண்டு மூன்று வெள்ளாடுகளையும், கிடாய்களையும்தான் முதலில் மேய்த்தான். 

இப்பவும். கோனார் வீட்டுக் கஞ்சிதான். தொழுவத்தில்தான் படுக்கை. கயிற்றுக் கட்டில், ஒரு கந்தல் கம்பளி. 

அன்புக்கு ஏங்குவான். பாசத்துக்கும் பரிவுக்கும் தவிப்பான். “என்ன மொகம் வாடியிருக்கே” என்று கேட்க ஓர் உயிரில்லையே என்று ஏங்கிச் சாவான். என்ன செய்ய? பாலை. அன்பில்லா அனல் பாலையே வாழ்க்கை. பாசமோ, பரிவோ, ஈரமோ தட்டுப்படாத பாலைத் தகிப்பு. 

ஆட்டுக்குப் பின்னால் காலம் பூராவையும் கரைத்ததால் ஆட்டுக் கம்பின் பலத்திலே நின்று நின்று வேரடித்ததால் காலே வளைந்து விட்டது. ரெண்டு முழங்கால் மூட்டுகளும் உள் பக்கமாகப் புடைத்து, ஒன்றையொன்று உரசும். இடமும் வலமுமாக பாதங்கள் அகலித்து விரியும். 

‘கோணாண்டி, கோணாண்டி’ என்று எல்லாரும் ஏளனமாய்ப் பேசுவார்கள். 

கோணல் கம்பு, கோணல் தலையெழுத்து, காலும் கோணல். 

தூரத்தில் ஆள் வந்தால், முகத்தை முதலில் பார்க்க மாட்டான். காலையும் நடையையும்தான் பார்ப்பான். மனசுக்குள் ஏங்குவான். 

“குடுத்து வைச்ச புண்ணியாளன்க. காலு ரெண்டும் நேரா நெடு, நெடுன்னு இருக்கு. சிங்கம் கணக்கா நடக்கான். நமக்கும் பாரு காலை. 

அவனே அவனை இகழ்வாக எண்ணி எண்ணி வந்த ஒரு தாழ்மை உணர்ச்சி. 

“கோணக்காலு உள்ள பயலுக்கு ஒருத்தரும் பொண்ணு தர மாட்டாக” என்று எகத்தாளமாகப் பேசி நையாண்டிச் சிரிப்பு சிரிப்பார்கள். 

“பொண்ணு குடுத்துட்டாலும் வைச்சு சாமிதான் கும்புட முடியும். குடும்பமா நடத்திர முடியும்?” என்று வேறு கூத்தடித்து கும்மாளம் போடுவார்கள். இவனுக்கு நம்பிக்கையின் ஆணி வேர் அறுபடும். 

இப்படிப் பேசுவதைக் கேட்டுக்கேட்டு அதையே நிஜமென நம்பி, கல்யாணமே வேண்டாமென்று வெறும் வாழ்க்கை வாழ்ந்து செத்த சங்கரலிங்கம் போன்றவர்கள் கதைகளும் உண்டு. 

ஆள் செல்வாக்கு இருந்து கல்யாணமே நடத்தி விட்டாலும் “கோணக்காலு பயலோட எப்படி குடும்பம் நடத்தி குப்பை கொட்டுறது” என்று நினைத்து கிட்டவே அண்டவிடாமல் தாம்பத்யத்தையே கிழித்து நாசம் பண்ணிக் கொண்ட பெண்களும் உண்டு. 

கிராமத்தில் ஆடு மேய்க்கிற பலருக்கும் கோணல்காலாகி விடுவதும் உண்டு ஆகாமலிருப்பதும் உண்டு. 

முத்தையா கோனாருக்கு கோணல் கால்தான். ரெண்டு பெண்கள் அவருக்கு. அதுகளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து பேரன் பேத்திகளைப் பார்த்துவிட்டார். 

“நாதியத்த நம்ம பயலுக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்க்கலாமே” என்று பாசத்தோடு நினைத்தார். ஒவ்வொரு பெண்ணாக யோசித்தார். கூலி வேலை பார்த்து, கஞ்சி குடிக்கிற மூக்கம்மா மகள் ஆவுடையை மனசுக்குள் குறித்தார். 

“நம்ம பய நாதியத்த அனாதைப்பய. அவளோ மூக்குத்திக்கும் வழியில்லாத ஏழைப்புள்ளே. நாதியத்தவனையும், ஏதுமத்தவளையும் ஒண்ணு சேர்த்துட்டா எல்லாம் உள்ளவுகளாயிருவாக” என்று முணுமுணுப்போடு யோசித்தார்… சட்டென்று துரிதப்பட்டார். 

மாரிக்காளையை ஏவி விட்டார். “மூக்கம்மாகிட்டே போயிப் பேசு. முத்தையாக் கோனாரு அனுப்பி வைச்சதாக சொல்லு.” 

அவன் திரும்பி வந்து பதில் சொல்கிறபோது முத்தையாக் கோனார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து மீசையை நீவிக் கொண்டிருந்தார். 

செல்லாண்டி வீட்டுக்குள் மறைவில் குத்துக் கால் வைத்து உட்கார்ந்து, கஞ்சி குடித்தான். 

“என்னப்பா? போன காரியம் காயா – பழமா?” 

“காய்தான்.” 

“என்னவாம்?” 

“அவனுக்கு வாழ்க்கைப்படுறதைவுட பாழுங்கெணத்துலே வுழுந்து மாண்டுரலாம்னு ஆவுடை சீறிப் பாய்றா.” 

“ஏனாம்?” 

“வாக்கப்பட்டு வந்தவளை வைச்சு பூசைபண்ணுவானா? கோணக்காலை வைச்சுக்கிட்டு அவனாலே என்ன முடியும்? என்ன தெரியும்? ஆம்பளையா பெறந்தா போதுமான்னு சீறு சீறுன்னு பாம்பு கணக்கா சீறுதா.” 

கவலையும் சோகமுமான யோசிப்புக்களுடன் முழங்காலைத் தடவுகிற அவர் முகத்தில், அவமானப்பட்ட மனசின் வலி. முகவாட்டம். 

இவன் பெயர் சொல்லாவிட்டாலும் இவனுக்குப் புரிந்து போயிற்று. ஆவுடையின் ஒவ்வொரு சொல்லும் அரிவாள் வெட்டுகளாக விழுந்தன. 

ஒரு பெண்ணின் நிராகரிப்பே, அரிவாள் வெட்டுத்தான். அதுவும் இப்படி எடுத்தெறிந்து பேசி, இழிவுச் சொற்களுடன் நிராகரிப்பதென்பது உயிரின் குருதியில் விழுகிற அரிவாள் வெட்டு மாதிரி. 

ஆவுடையின் வார்த்தைகள், ஏகப்பட்ட அரிவாள்களாக அவனைச் சுற்றிச் சுற்றி வருகின்றன. 

இதோ வெட்ட வெளிச்சத்தில் விரிகிற வெயிலையும் மேய்கிற ஆடுகளையும் வெறிக்கிற கண்கள். ஆவுடையின் சொற்களையே நினைக்கிற மனசு. 

“ஏய்க் கருங்காலு. எங்குட்டுப் போறே?” 

அவனிடமிருந்து சிறகு முளைத்து ‘விர்ரெ’ன்று இரைச்சலோடு பறக்கிற கல். காது, வெள்ளைக்கு ஒரு வசவு. ‘ஒடைஞ்ச மூக்கு’க்கு ஒரு கல் சீறல், ‘வால் செவலை’க்கு ஒரு கல் பாய்ச்சல். 

எல்லாமே அனிச்சைச் செயலாக, அவன் மனசுக்குள் தீ நாக்குகள் பற்றிப் படர்ந்து தொற்றி உயர்கிற நினைவுத் தீ. 

“ஆம்பளையா பொறந்தா போதுமா?” ஆவுடையின் கருத்த முகம், சீறிச் சினந்து துடிக்கிற உதடுகளின்சுழிப்பு, கோபத்தில் முகவிறைப்பு. கண்களின் விரிவு. தகிக்கும் பார்வை. விடைத்தெழும் நாசிநுனி. 

செல்லாண்டிக்கு அவள் மேல் எப்பவும் ஓர் ‘இது’ உண்டு. ஆடுகளை மேய்த்து, கருங்கல் கிடங்குத் தண்ணீரில் போட்டெடுத்து, தாழ்வாரப்படலில் அடைத்து, குட்டிகளுக்கு கொழை கட்டி முடிக்கிறபோது, மணி எட்டாகிவிடும். குளிப்பும், கஞ்சியும் முடிந்து தலைநிறைய குளுகுளுவென்று தேங்காயெண்ணெய் தேய்த்து, மினுமினுப்பாகி, ஆவுடையின் கூரைக் குடிசையை ரெண்டு மூணு ரவுண்டடிப்பான். 

முற்றத்து வெளிச்சத்தில் சட்டிபானை கழுவ, விறகு அள்ள என்று வருகிற ஆவுடையை வைத்த கண் எடுக்காமல் பார்ப்பான், பார்ப்பான்… அப்படிப் பார்ப்பான். பார்க்கிற பார்வையில் மன உக்கிரம். 

அவளது வட்ட முகம். ஒட்டிவைத்த ஓவியமாக கச்சிதமான உதடுகள். கண்ணில் மின்னல். இவனுள் ஓர் ஈர்ப்பு, கிறுகிறுப்பு. மன மயக்கம். 

“ஏய்… ஆவுடை. 

“என்ன சவுண்டு ஏறுது?” 

“ஆட்டுக்குப் போகணும்லே?” 

“அதுக்கு?” 

“பொழுதாவதுலே? கஞ்சியை ஊத்து.” 

“ஒனக்குப் புடிக்குமேன்னு வாளைக்கருவாடு வதக்குதேன். காலைக் கையை கழுவு.” 

“கருவாடா? அடி சக்கை.” 

இப்படி ஒன்றல்ல. பலநூறு சம்பவங்கள். அவனுக்குள்ளேயே அவளுடன் குடும்பம் நடத்தியிருக்கிறான். வெவ்வேறு விதமான நிகழ்வுகள், நினைவுகள், நினைவின் மயக்கத்தில் சொருகிக் கொள்கிற மனக்கண்ணின் இமைகள். 

உயிருக்குள் ஆணி வேரடித்திருந்த ஆத்ம நினைவுகள் மீதுதான், காறித் துப்பியிருக்கிறாள் ஆவுடை. 

“அவனால் என்ன முடியும்? என்ன தெரியும்?” 

அவனது ஆண்மையையும் ஆன்மாவையும் துடிக்க வைத்து வதைக்கிற வார்த்தைகள். 

கம்பை ஊன்றிய நிலையில் குனிந்து தனது முழங்கால் மூட்டுகளைப் பார்த்தான். இடமாகவும் வலமாகவும் நடையை அகலிக்கிற மூட்டுகளின் உள்வளைவு உரசல். 

முகம் தெரியாத அம்மாவின் வாசம், நினைவில்கூட இல்லை. நினைவெல்லாம், ஆட்டுமூத்திர வாசம். செம்மறியாடுகளின் உடல் சூடு. ரோமச் சொர சொரப்பு. ஆட்டு ரோமங்களுக்குள் ஒளிந்து பம்மியிருக்கிற உண்ணிகள். 

கோனார் வீட்டுக்கஞ்சி, ஆட்டுக்கம்பு, ஆடுகிற சிறுவால்களின் துள்ளல். ஆதரவற்ற அனாதையாகவே வாழ்ந்த நாட்களின் கசப்பும் கைப்புமாக ருசி. அன்பற்ற பாலையின் வெக்கையே தலைவிதியாகப்போன அவல வாழ்க்கை. 

வெயில் எரிக்கிறது. தரிசு நிலத்தில் திரிகிற ஆடுகள். வேலிமரத்து விளார்களில் நிற்கிற கரிச்சான். வேலிமர அடர்த்திக்குள்ளிருந்து ஏக்கமும் சோகமும் ததும்புகிற செம்போத்துப் பறவையின் நீள்கூவல். 

செம்மறிகள் புல்லை ‘பறிச் பறிச்’ சென்று ஆவிஆவிக் கடிக்கின்றன. வாயில் நுரை தள்ள மேய்கிற வேகப் பறப்பு. வால் செவலைக்குப் பக்கத்தில் மேய்கிற வேங்கடம்மாவின் கரிய வெள்ளாடுகள். 

அப்போது செல்லாண்டிக்குப் பதினெட்டு வயது இருக்கும். கருகருவென்று முடிகள் உதட்டுக்கும் மேல். வாலிபத்தின் வாசலை நெஞ்சுக் குழி ரோமம் திறக்கிறது. உடம்பில் ஒரு மினுமினுப்பு. திரேக முறுக்கு. 

வேங்கடம்மா ஒரு நாள் கூப்பிட்டாள். வயது முப்பத்தைந்து இருக்கும். கல்யாணமாகி பன்னிரண்டு வருஷமாயிற்று. பிள்ளை பாக்கியமில்லை. முகத்துக்குமுன்னாலும் பின்னாலும் ‘மலடி, மலடி’ என்று நீள்கிற குத்தீட்டிகள். 

“யார் மலடு?… பாத்துருவமா?” என்று கேள்வி கேட்க முடியாத குடும்ப நிலைமை. குத்தீட்டிகளின் பாய்ச்சல் உயிரை அதிர வைக்கிறது. 

“என்னம்மா?” 

“எங்கவூட்லே ஒரு வெள்ளாடும் ரெண்டு கிடாய்களும் நிக்குது. எங்களாலே இரைபாத்து சமாளிக்க முடியலே…” 

“அதுக்கு நான் என்ன செய்ய?” 

“ஒன்னோட ஆடுகளோட பத்திட்டுப்போ. ஆடுகளோட ஆடா மேயட்டும். சாயங்காலம் வர்ரப்ப, எங்க உருப்படிகளை எங்கவூட்லே வுட்டுரு.” 

“ம்… அப்படியா?” 

“மாசாமாசம் இம்புட்டுன்னு ஒரு சம்பளம் தந்துருவேன்.” 

“எங்க மோலாளி சொன்னாச் சரி”. 

முத்தையா கோனாரிடம் வந்து நின்றாள் வேங்கடம்மா. 

“பத்திட்டுப்போடா.. குடுக்கற சம்பளத்தை கைச்செலவுக்கு வைச்சுக்கோ.” 

செல்லாண்டிக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. மனசுக்குள் ஒரே கூத்தாட்டம். கொண்டாட்டம். 

இது ஒரு பொறுப்பு. பாட்டோடு பாடாக இது ஒரு சிறு வேலை. தானும் சிலதுக்கு தேவைப்படுகிறோம் என்கிற தன்னம்பிக்கை தருகிற பொறுப்பு. அவனது அருமை அவனுக்கே புரிகிறது. 

ஆடும் கிடாய்களும் பத்தப்போகிற – விடப்போகிற நேரமெல்லாம் – உபசாரம் தூள் பறக்கும். காரச்சேவு கிடைக்கும். சோளத்தோசையும் சட்னியும் கிடைக்கும். உளுந்த வடை கிடைக்கும். மனசுக்கும் வாய்க்கும் ருசி. 

‘இதென்னடா – மாப்பிள்ளைச் சோறா?’ என்று மனசு கிடந்து பரவசப்படும். பூரிப்பு. ஏகக்கொண்டாட்டம். வாழ்வில் பார்த்தறியாத பலகாரம், அனுபவித்தறியாத உபசார மரியாதை, உணர்ந்தறியாத அன்பு, உயிர் குளிர்கிற அன்பு. 

சம்பளம் வாங்கப்போன அன்றுதான்… அவள் தன்னையே பந்தி வைக்க… இவனையே பலகாரமாக அவள் வாரிச்சுருட்டி விழுங்கிவிட… 

இப்போது- 

அந்த அம்மாவுக்கு ரெண்டு பெண் பிள்ளைகள். 

பல்கிப் பெருகி வளர்ந்த வெள்ளாடுகளும் கிடாய்க் குட்டிகளும் அதோ மேய்கின்றன. 

இவனுக்குள் வேங்கடம்மாவின் தேக அலைகள். 

தெற்கில் கருத்தூரணிப்பக்கம் ஆடுகளைப் பத்திக் கொண்டு போகிறபோது எருமைமாடுகளைப் பத்திக்கொண்டு மேய்ச்சலுக்கு வருகிற கண்ணாத்தாளை மேய்ந்த நினைவுகள், திரேகச் சகவாசங்கள். 

தன்னுடன் சேர்ந்து ஆடு மேய்க்க வந்த ஒருசில பெண்களுடன் நிகழ்ந்த மன்மதச் சகவாசங்கள். 

ஆனால், ஆவுடை கேட்கிறாள். ‘அவனால் என்ன முடியும், என்ன தெரியும்’ என்று. 

அவனுக்குள் ஆத்திராவேசம். அப்படியே அவளை ‘சப்சப்சப்’ பென்று அறையலாமா என்கிற வெறி. 

பொழுதுக்காலைப் பார்த்தான். உச்சியிலிருந்து விலகி விட்டது. காலடியில் அரும்பிய நிழல். 

மேய்ச்சல் இடத்தை மாற்றலாமா என்ற யோசிப்பு. ‘ஆய்க்… ஆய்ய்ய்க்’ என்று ஆடுகளைப் பத்தினான். சிதறி மேய்ந்த செம்மறிகளைக் கல்லால் எறிந்து எறிந்து திரட்டினான். இடப்பெயர்வு நிகழ இருப்பதை உணர்ந்து மூத்திரம் பெய்கிற செம்மறிகள், நின்று புழுக்கைகளைப் போடுகின்றன. 

ஆறு என்ற பெயரில் கிடந்த நீள் கிடங்கு. மணலையும் நீரையும் பறி கொடுத்து விட்ட விதவையைப்போல வெறுமையாகக் கிடந்த கிடங்குக்குள், வேலிமரப் புதர்கள். வெட்டுப்பட்டு காய்ந்து கறுத்த முட்குமிகள். நிறைய ஆவரஞ்செடிகளும், வேலி மர நிழல்களில் அருகம்புல்லும்… கோணல் கம்பால் ஆடுகளின் முதுகில் செல்லத் தட்டுகள் தட்டி அதட்டுகிற செல்லாண்டி. 

“ஏய்… கறுத்த மூக்கு, எங்குட்டுப் போறே?” 

“ஏய் கிழிஞ்ச காது. உள்ளே போ.” 

“இந்தா மொட்டை நாக்கு, கல்லெறி வாங்கிச் சாகாதே.” 

ஆடுகள் ஆற்றுக்குள் இறங்கி அருகம்புல்லை மடக்கிப் பிடித்து கடிக்கின்றன. அதுகளின் ஆவல் பறப்பு, குதூகல மனசு, ஆடுகிற வாலில் தெரிகிறது. 

தூரத்தில் வேலிமர அடர்த்திக்குள் ஏதோ சத்த சலனம். ஏதோ வேற்றாள் இருப்பதற்கான அடையாளம். காய்ந்த முள் விளார்களை உதறி உருவுகிற அரவம். நறுக்குகிற அரிவாள் சத்தம். வீட்டு விறகுக்கு முள் நறுக்குறாகளோ… 

“இந்நேரத்துலே யாரு? நடுக்காட்லே… ஆளுல்லாத வனாந்தரத்துலே… அத்துவானக் காட்டுலே. மத்தியானப் பொழுதுலே. யாரு? ஆளரவமத்த மறைப்பான எடத்துலே ஒத்தையிலே யாரு?” 

இவனுக்குள் குறுகுறுப்பு. ஆர்வக் குசும்பு. 

கைலியை மடித்துக் கட்டினான். கோணல் கம்பும், டயர் செருப்புமாக நடையை எட்டிப் போட்டான். வேலி முள் விளார்கள் கண்ணில் படாதவாறு குனிந்தும், விலகியும் மெல்ல நடக்க. 

இடப்பக்கமாகவும் வலப்பக்கமாகவும் அகலித்து விரிகிற கோணல்கால். குதித்துக் குதித்து நடப்பது போன்ற நடை. 

‘உச்சி மதியப்பொழுதுலே… வனாந்தரத்துலே வெற்கு நறுக்குறதுன்னா… ஏதாச்சும் கெழடுகட்டையாக இருக்குமோ…?” 

போய்ப் பார்த்தால், குத்துக்கால் வைத்து உட்கார்ந்து நறுக்கிக்கொண்டிருப்பது ஆவுடை. 

இவனுக்குள் ஆவுடையின் சொற்கள். தீக்கங்குளான சொற்கள். இவனது ஆண்மையையும், ஆன்மாவையும் உலுக்கி யெடுத்த அரிவாள் வார்த்தைகள். 

“வாக்கப்பட்டு வந்தவளை வைச்சுப் பூசை பண்ணுவானா?” 

இவனுக்குள் வேங்கடம்மாவின் தேக அலைகள். கண்ணாத்தாவின் உடல் சூடு. கோணல் உறவுகளின் தித்திப்பு. 

நடையை எட்டிப்போட்டான். மனசின் வெறியும் வன்மமும் அவனைத் திருகுமுறுகலாக்குகிறது. கோணல் புத்தியாகிறது. திகுதிகுவென்று பற்றியெழுந்து உயர்கிற தீ நாக்குகள். 

நீட்டிப் போட்டிருந்த கயிற்றில் நறுக்கப்பட்ட முள் விறகுகள். உட்கார்ந்து நறுக்கிக் கொண்டிருந்த வேலிக் குச்சிகள். 

போய்… ‘தக்க்’ கென்று நின்றான். ஆட்டுக் கம்பும், கோபப் பார்வையும், வன்ம உக்கிரமுமாக கருப்பண்ணசாமியாக ஆவேசத்தில் நிற்கிற செல்லாண்டி. 

அண்ணாந்து பார்க்கிற அவள் கண்ணில் பீதியும் கிலியும். முகமெல்லாம் அச்ச வியர்வை. பயப்படபடப்பு. உதடெல்லாம் உலர்ந்து முகமெல்லாம் கறுத்து, குப்பென்று திரேகமெல்லாம் வியர்த்து. 

“மாரிக்காளைகிட்டே என்ன சொன்னே?” 

அடிபட்ட சர்ப்பத்தின் சீற்றக்குரல். அவமானப்பட்ட மனக்காயத்தின் வலியால் வந்த அதட்டல். 

“என்ன சொன்னேன்?” குரலில் குழப்பநடுக்கம். 

“என்ன முடியும்? என்ன தெரியும்? வாக்கப்பட்டு வந்தவளை வைச்சு பூசை பண்ணுவானான்னு கேட்டீயாமே?” அதிகாரமும் ஆவேசமான அதட்டல். 

“இப்படியே செந்தூக்கா தூக்கிட்டுப் போயி என்னாலே என்ன முடியும், என்ன தெரியும்னு பூசை பண்ணிக் காட்டட்டா?” 

ஆவுடையின் கழுத்து நரம்பில் வழிகிற வியர்வை. குத்துக்கால் வைத்து உட்கார்ந்திருந்ததால், மேல் நோக்கிப் பிதுங்குகிற மார்பகச்சதை, அவனுக்குள் வெறி கொள்கிற உன்மத்தம். 

தினவெடுத்து திமிறுகிற திரேகம். அவமானப்பட்ட மனசின் தினவு. 

“என்ன பூசை பண்ணிக் காட்டட்டா?” 

அவளது விரிந்த கண்ணில் பய நடுக்கம். அச்சத்தில் அலை பாய்கிற கருவிழிகள். மழையில் நனைந்த கோழிக் குஞ்சாக நடுங்குகிற ஆவுடை. அவள் முகமெல்லாம் திகில். 

காட்டிலேயே அலைந்து காட்டிலேயே பிழைத்து காட்டானாகவே ஆகிப்போன அந்தக் கோணல் குணத்து மனிதனுக்குள். 

ஆவுடையின் நடுங்கிய கண்கள். 

ஒரு நீர்ச்சுனையைக் கசிவெடுக்க வைக்கிறது. 

அரிதாக ஊற்றெடுக்கிற அருஞ்சுனை. அன்புச் சுனை. 

ஐயோ பாவம் என்றிருக்கிறது. மனசுக்குள் மனைவியாக ஆத்ம பங்காளியாக வாழ்ந்தவள், வாழ்கிறவள், அவனுக்குள் அன்பெனும் அருஞ்சுனையின் குளிர்ப்பரவல். 

“ஏய்.. ஆவுடை. என்ன இப்படி முழிக்கே? நா ஆட்டுக்காரப்பயதான். நாதியத்த நாயி. நாலு நல்ல புத்திமதி சொல்லி ஒழுங்காக்க ஆளுல்லாத அனாதைதான். கொழை களவாண்டு குட்டி வளர்த்த மாதிரி. தட்டாங்காய் பாசிப் பயத்தங்காய் களவாண்டு அவிச்சுத்திங்குறவன்தான். காடேறிக் கழுதைதான். வவுத்துக் கஞ்சிக்கு ஆடு மேச்சு, கோணக்காலானவந்தான். வாழ்க்கையும் கோணலாகணுமா? எங்க கோனாரு மோலாளிமாதிரி குடும்பம் குட்டின்னு ஆகக்கூடாதா?” 

கோபத்தின் குரலில் இறுக்கம், அதிலும் அவனது சோகப் பெருமூச்சு. 

“என்னாலே என்ன முடியும், என்ன தெரியும்னு கேட்டீலே. காட்டட்டா? இங்கனேயே பூசை பண்ணிக் காட்டட்டா? நா ஒண்ணும் ஏலாதவனில்லே, யோக்கியவானுமில்லே. ஆனா ஒன்னைத் தொடமாட்டேன் ஏந்தெரியுமா?” 

கருப்பண்ண சாமியாக ஆகாச மட்டத்துக்கு உயரமாகத் தெரிகிற செல்லாண்டி. அண்ணாந்து பார்க்கிறாள். 

“இப்பவரைக்கும் ஏங்குட்டே சிக்குன பொம்பளைகளை அனுபவிச்சிருக்கேன். அவுக மேலே ஆசையில்லே. பிரியமில்லே. பாசமில்லே. ஆனா… ஒம்மேல எனக்கு ஆசையிருக்கு. பிரியமிருக்கு. உசுருக்கு உசுரா நெனைக்குற அன்பு இருக்கு. அதனாலே, ஒன்னைத் தொட மாட்டேன். சீரழிச்சு வேடிக்கை பார்க்க மாட்டேன். கண்ணுக்குள்ளே முழியா வைச்சு காப்பாத்த நெனைக்குற ஒன்னை, நா எப்புடி வீம்புக்கும் வீராப்புக்கும் நாசமாக்குவேன்?” 

விறுவிறுவென்று திரும்பிப் போகிற செல்லாண்டியின் முதுகையே வெறிக்கிற ஆவுடை, இடமும் வலமுமாக கால்கள் அகலித்து நடக்கிற அவனை, முட்டிகள் உரச நடக்கிற அந்தக் கோணல் கால்களை, கோணல் கம்பையே வெறிக்கிற அவள்… 

அவளுக்குள் கருப்பண்ணசாமியாய் கம்பீரமாக உயர்கிற அந்தக் கோணல் காலன். 

– ஜூன் 2009, உயிர் எழுத்து.

– அக்னி வாசம் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: டிசம்பர் 2009,கங்கை புத்தக நிலையம், சென்னை.

மேலாண்மை பொன்னுச்சாமி மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர். வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார். மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *