ஆதித்தனாருக்குப் பெரிய மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 17, 2026
பார்வையிட்டோர்: 70 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1984ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆகஸ்ட் போராட்டத்தில் சிறைக்குப் போய் வெளியே வந்ததும் எனக்கு வேலை ஏதும் கிடைக்கவில்லை. எப்படி வாழப் போகிறோம் என்ற பெரிய கேள்விக் குறியோடு நாட்களைத் தள்ள வேண்டிய நிலை எப்போதும் போலவே எனது நண்பர் தி.ஜ.ரங்கநாதன் அவர்கள் தான் எனக்குப் புகலிடம் அளித்தார். 

வை.கோவிந்தன் நடத்தி வந்த ‘சக்தி’ பத்திரிகையில் தி.ஜ.ர. அப்போது ஆசிரியராக இருந்தார். அலுவலகம் பவழக்காரத் தெருவில் இருந்தது. காலையில் அங்கே போய் விடுவேன். தி ஐ.ர. பக்கத்திலேயே உட்கார்ந்திருப்பேன். அவரோடு கூடவே சாப்பிடுவேன். 

ஒரு நாள் தி. ஐ. ர. சொன்னார்: 

“இப்படியே போய்க் கொண்டிருந்தால் எப்படி? நீர் எங்கேயாவது வேலையில் சேர வேண்டும். ஆதித்தன் என்றெரு பெரிய பணக்காரர் சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறார். அவர் பேப்பர் ஆரம்பிக்கப் போவதாய்க் கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்க்கலாம் வாரும்.” 

ஆதித்தன் அவர்களைத் தேடிப் போனோம். தம்பு செட்டித் தெருவில் வாடகைக்கு ஓர் அறை பிடித்து அங்கே ஒரு மேஜையும் நாற்காலியும் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருந்தார் அவர்.தி.ஜ.ர. என்னை ஆதித்தனாருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். ஆஜானுபாகுவான உடல்வாகு. கோட் போட்டிருந்தார். சிரித்த முகம். இனிமையான நயமான பேச்சு. குரலில் கம்பீரம். பார்த்த மாத்திரத்திலேயே, “மரியாதை தரப்பட வேண்டியவர்’ என்ற உணர்வைத் தூண்டக் கூடிய தோற்றம். 

ஆதித்தனாருக்கு என்னை மிகவும் பிடித்துப் போய் விட்டது. “தினமும் இங்கே வந்து விடுங்க” என்றார். விடுவேனா? தினமும் போனேன். ரொம்ப நேரம் பத்திரிகை பற்றிப் பேசிக் கொண்டிருப்போம். கல்கி எழுத்தை விமரிசிப்போம். மணி நாலு ஆனதும் ஹோட்டலுக்கு அழைத்துப் போவார். எது ஆர்டர் பண்ணினாலும் இரண்டு இரண்டாகத்தான் பண்ணுவார். இரண்டு வடை, இரண்டு ஸ்வீட், இரண்டு தோசை என்று எல்லாமே டபிள் டபிள்! அதே மாதிரி எனக்கும் டபிள் டபிள்! 

நான் எற்கனவே பசியால் காய்ந்து போனவன். எனவே அந்த ‘இரண்டிரண்டு’ வரப்பிரசாதமாய் அமைந்தது. 

அப்புறம் இரண்டொரு மாதத்தில் சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு வீடு பிடித்து அந்த வீட்டில் தமிழன்” பத்திரிகையைத் தொடங்கினார். அதுவரை அவருடைய தமிழன் பத்திரிகை மதுரையிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்தது. திரு கோ. த. சண்முகசுந்தரம்தான் அதன் ஆசிரியர். நான் உதவி ஆசிரியர். சம்பளம் ஐம்பது ரூபாய். 

கொஞ்ச நாள் கழித்து திரு ஆதித்தன் அவர்கள் ‘தினத்தந்தி’ ஆரம்பித்தார். “நீங்கள் இஷ்டப்பட்டால் தினத்தந்தியிலும் எழுதலாம்” என்று என்னிடம் கூறினார். தினத் தந்தி வெளியான முதல் நாள் மட்டும் நான் சின்னச் சின்ன செய்திகளை மொழி பெயர்த்துத் தந்தேன். தினத்தந்தி ஆரம்ப காலத்தில் கையால் செய்த பழுப்பு நிறக் காகிதத்தில் வந்து கொண்டிருந்தது. பி.ஸ்ரீ.யின் மகன் திரு நாராயணன் தினத்தந்திக்கு வந்து சேர்ந்தார். அவர் நட்பும் எனக்குக் கிட்டியது. 

அப்போது தமிழ்ப் படங்கள் மிக நீளமாகப் பதினாறாயிரம் அடிவரை எடுக்கப் படுவது வழக்கம். அதைப் பதினோராயிரம் அடிக்குக் குறைக்க வேண்டும் என்று கல்கி தம் பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். அதை ஆதரித்து ‘நாலு பேர் அபிப்ராயம்’ என்ற தலைப்பில் நான் ஒரு நகைச்சுவைக் கட்டுரையைத் தமிழனில் எழுதினேன். கல்கி அதைப் படித்திருக்கிறார். பி.ஸ்ரீ.யும் அவரது மகன் நாராயணனும் தீபாவளியன்று கல்கியைப் பார்க்கப் போயிருந்தபோது அவர் களிடம் அந்தக் கட்டுரையைப் பாராட்டி விட்டு, “சாவியை என்னை வந்து பார்க்கச் சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார். நாராயணன் வத்து விஷயத்தைச் சொன்னதும் நான் உடனே கல்கியைப் பார்க்கப் போய்விட்டேன். 

“தந்தியில் எவ்வளவு சம்பளம் வாங்குகிறாய்?” என்று கேட்டார் கல்கி. 

“ஐம்பது” என்றேன். 

“இங்கே உனக்கு 75 ரூபாய் தருகிறேன். இங்கேயே சேர்ந்துவிடு” என்றார். உடனே சரியென்று ஒப்புக்கொண்டு மறுநாளே கல்கியில் சேர்ந்து விட்டேன். அப்புறம் பல வருடங்கள் ஆதித்தனாரை நான் பார்க்கவேயில்லை. அந்தக் குற்ற உணர்வு என்னுள் வெகுநாள் வரை உறுத்திக் கொண்டே இருந்தது. 

பின்னர், கல்கியிலிருந்து விலகிச் சொந்தமாக ‘வெள்ளி மணி’ ஆரம்பித்து அந்தப் பத்திரிகை பரபரப்பாக விற்பனையான போது ஆதித்தனார் ஒரு நாள் என்னையும் சின்ன அண்மலையை யும் பார்க்க விரும்புவதாகச் சொல்லி அனுப்பினார். சொல்லாமல் கொள்ளாமல் அவரிடமிருந்து நின்று விட்ட குற்ற உணர்வு என்னை அரித்துக் கொண்டே இருந்த போதிலும் நான் நேரில் போனபோது அவர் அதைப் பற்றி எதுவுமே பேசாமல், “வெள்ளி மணி மிகப் பிரமாதமாகப் போய்க் கொண்டிருக்கிறது. உங்கள் திறமையை நான்தான் முதலில் புரிந்து கொண்டவன். கொஞ்ச நாள் பொறுத்திருந்தீர்களானால் நானே உங்களைத் தமிழனுக்கு ஆசிரியராக்கியிருப்பேன்” என்று கூறியபோது நான் வெட்கிப் போனேன். அதோடு நிற்காமல், “நான் வெள்ளி மணியைத் தமிழகம் முழுமைக்கும் விநியோகம் செய்ய விரும்புகிறேன். அந்த உரிமையை எனக்குக் கொடுப்பீர்களா?” என்று கேட்டார். 

ஆதித்தனாருக்குத்தான் எவ்வளவு பெரிய மனது! 

– பழைய கணக்கு, முதல் பதிப்பு: 1984, சாவி பப்ளிகேஷன்ஸ், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *