கதையாசிரியர்: நாஞ்சில்நாடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
முதல் வெளியீடு: 2003
இணைய வெளியீடு: November 22, 2026
பார்வைகள்: 46
வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்

(2003ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘நேரமே கிடைக்க மாட்டேங்கு’ எனும் சலிப்பு ஒரு பக்கம். இருந்த நேரத்தை என்ன செய்தோம் எனும் அலுப்பு மறுபக்கம். சோம்பலில் நெளிந்து, தூங்கிக் கலைந்து, ‘பன்ன’ தமிழ் சினிமா பார்த்து, பருவ இதழ்களில் பொய்யுரை படித்து அடிக்கடி சந்திக்கும் முகங்களையே நண்பர் எனப் பாவித்து, பொருளற்றுப் பேசிச் சிரித்து, வெற்றுச் சொப்ப னங்கள் கண்டு, அலுவலகத்தில் காகிதப் பதடிகள் பெருக்கி, அரை வேக்காட்டு அறிவுரைகள் ஊடகங்களில் கேட்டு…

சனியும் ஞாயிறும் விடுமுறைகள் சேர்ந்து வந்தன. ஏதோ ஒரு இழ வெடுத்த பண்டிகையும். ஒலிபெருக்கி இசைக் குப்பைகூளங்கள். கதவு சன்னல்களைச் சாத்திக்கூட சத்தம் நுழையா இடம் இல்லை. பரம் பொருள் தோற்றுப் பின்வாங்கும். ஏதும் பாத்திர பண்டங்களைப் போட்டு உடைக்கலாம் எனத் தோன்றியது. காலை ஆறுமணிக்குத் தொடங்கிவிட்டார்கள். காம விகார முக்கல் முனகல்கள், அறைகூவல், ஆணை இடுதல். ‘தமிழ்கூட நாட்பட நலிந்து போகலாம், என் நாயகியே. உன் கொங்கைகள் சுருங்கிப் போகாது. ‘வாடி என் மாரியம்மா, வேப்பிலைக்காரி கையினால் பாம்பை எடுத்துப் புற்றுக்குள் விடுப வளே… தாடியம்மா எனக்கு லாட்டரிச் சீட்டில் நாற்பத்தேழு லட்சத்து முப்பத்தாறாயிரத்து இருபத்தி நாலு ரூபாய் அறுபது காசுகள்.’

டிவி சத்தம் காதில் விழவில்லை; டெலபோன் மணி ஒலிக்க வில்லை. வேட்டியை உரிந்துபோட்டுவிட்டு தெருவோடு ஓடலாம் போலிருந்தது. பெண்டிரும் பிள்ளைகளும் வார விடுப்பில் ஊருக்குப் போயிருந்தார்கள். அவளுக்கு அடுக்களை அலுப்பில் இருந்து தற்காலிக மீட்சி. பிள்ளைகளுக்கு பாடப்புத்தகக் குரல்வளை நெரிப்பிலிருந்து சுத்த சுவாசக் காற்று.

இரண்டு போணிகளில் தோசை மாவு இருந்தது. மூடிய பெரிய வட்டகையினுள் புளிக்காய்ச்சி இருந்தது. மற்றொரு வட்டையில் சுண்டவைத்த கடலை- மொச்சை – வடகம் – அடைமாங்காய்-போட்டு வைத்த தீயல் இருந்தது. ஐந்தாறு முட்டைகள் இருந்தன. பாதி நீட்டுப் பாண் இருந்தது. அலுமினிய டப்பாவில் சீவல் பக்கோடா இருந்தது. பாட்டில்களில் தயிர் இருந்தது.

இரண்டு தோசை சுட்டுத் தின்பதோ, நான்கு பாண் துண்டுகளைப் பொசுக்கிக்கொள்வதோ, குக்கர் வைத்து ஒரு தம்ளர் அரிசி பொங்கிக் கொள்வதோ, ‘பையாடால்’ அல்லது எலுமிச்சை ரசம், குட்டி உருளைக் கிழங்கு பொரியல் செய்துகொள்வதோபெரும் பிரயத்தனம் அல்லதான்.

என்றாலும் உயிர்ச் சலனங்கள் அற்று உட்புறம் தாளிட்ட வீடு காற்றுப் புகாக் குகைபோல் திகைப்பூட்டியது. வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே இறங்கினான். பூட்டுமுன் கக்கூஸ், குளிமுறி, படுக்கை அறை, கட்டிலின் கீழ்ப்புறம், கதவுகளின் பின்புறம், எங்காவது யாராவது கரந்து உறைகிறார்களா என அறையறையாய் சோதித்தான். மூன்று முறை சமையல் வாயு சரியாக மூடப்பட்டுள்ளதா எனப் பரிசோதித்தான். திடீரென இடிமின்னல் வந்தால் என்ன செய்வதென்று டி.வி.ஸ்டீரியோ, மிக்ஸி ஒயர்களை உருவிப்போட்டான். ஃப்ரிட்ஜ் பல பண்டங்களைப் பாதுகாக்க வேண்டியதிருந்தது. நகர மனிதத் தீவனத்தின் ஆதார சுருதி. துணிவு கொள்ளாமல் வேறு மார்க்கமில்லை. வெளியே வராந்தாவில் கிடந்த தோல் காலணிகளை உள்ளே போட்டான். பூட்டை மூன்று முறை இழுத்துப் பார்த்தான். அதென்ன கணக்கு மூன்று முறை? முக்காலே முண்டாணி மூடத்தனம். சோர் பாக்கெட்டில் மூன்று நூறு ரூபாய்த் தாள்கள். பிருஷ்டப் பாக்கெட்டில் சில பத்து ரூபாய்த் தாள்கள். சட்டைப் பாக்கெட்டில் நாணயங்கள். பர்ஸில் நூறு ரூபாய் சொச்சம். முகவரி அட்டைகள், சின்ன டெலபோன் குறிப்பேடு, கைக்குட்டை, சீப்பு, துண்டுக் காகிதங்கள், பேனா.

எந்த நோக்கமும் இல்லை. பார்க்கும் தோதில் எந்தப் படமும் இல்லை. காலைக்காட்சி, பக்கத்து தியேட்டரில், ‘ஏதோ மோகம் ஏதோ தாகம்! எல்லாம் ஒரே மோகம்தான், ஒரே தாகம்தான். பதினொன்றரைக் குத்தான் போடுவார்கள். இடைவேளை முடிந்து ‘பிட் ‘ஒட்டியதும் படம் முடிந்துவிடும். மேலும் தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு படம் பார்க்கப் போகவேண்டும். பழகிய முகங்கள் தென்பட்டுவிடலாம்.

காந்திபுரம் பேருந்து நிலையம் வந்தபோது கைக்கடிகாரம் எட்டே முக்கால்தான் காட்டியது. உத்தேசமின்றி பேருந்துகளைப் பார்த்து நடந்தான். ஆனைக்கட்டி போகும் வண்டி ஒன்று நின்றது. சன்னலோர இருக்கையில் ஏறி அமர்ந்தான். கையில், கடையில் வாங்கிய வாராந்தர வாந்தி ஒன்று. படித்து முடித்த உடன் சன்னல் வழியாகச் சாலையில் எறிந்தும் விடலாம்.

மழை பெய்து முடிந்திருந்த மார்கழி மாதம். காற்றில்தணுப்பு இருந் தது. சூரியனில் வெக்கை இல்லை. இரு மருங்கும் மரமசைய சின்னத் தடாகம், கணுவாய் வழியாக ஓடிக்கொண்டிருந்தது பேருந்து. தென்னந் தோப்புகள், வாழைத் தோட்டங்கள், கரும்பு வயல்கள், காய்கறிக் கொல்லைகள், செஞ்சோளக் காடுகள்…

சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமம் வரும் முன்னே பேருந்து மேடு ஏற ஆரம்பித்துவிட்டது. குன்றின் பாதப் புடைப்புகள்.

ஆனைக்கட்டி வந்தபோது மஞ்சளாய் வெயிலடித்தது. எட்டு மணிக்குத் தின்ற இரண்டு தோசைகள் பாதி செமித்துவிட்டன. சுடச்சுட பருப்புவடை போட்டுக்கொண்டிருந்தனர், நாயர் சாயாக்கடையில். மலையாளம் பேசினால் நாயர், இந்தி குஜராத்தி மார்வாரி – பெங்காலி பேசினால் சேட்டான். தொப்பி தரித்திருந்தால் சாகிபு.

வந்த பேருந்து கோவைக்குத் திரும்பிக்கொண்டிருந்தது. பாலம் தாண்டி கேரள மாநிலப் பேருந்து ஒன்று வந்து திரும்பி நின்றது. ஆங் காங்கே கடைவாசலில் பராக்குப் பார்த்துக்கொண்டிருந்த கூட்டம் சாக்கு மூட்டை, சணல் பைகள், பனையோலைச் சிப்பங்கள், பிரப்பங் கூடை கள் எனக் குவிந்து பேருந்தின் ஒற்றைத் திறப்பு வழியாக உள் நுழையப் பிரயத்தனப்பட்டார்கள்.

கையில் இருந்த துணிப்பைகள், ரெக்சின் பைகள், துண்டுகள், கைலேஞ்சுகள், புத்தகங்கள், சாப்பாட்டுப் போணிகள் என இருக்கை களில் எறிந்து இடம் பிடித்து…

ஓட்டுனர் திறப்பின் வழியாக ஏறி இருக்கைகளில் அமர்ந்தவர். சன்னல் வழியாகச் சிறுவர் சிறுமியரின் குண்டியைப் பிடித்துத் தாங்கி உள்ளே எறிந்தவர். திறப்பின் வழியாக அடித்துப் பிடித்து ஏறிய திராணி யுள்ளவர் மூன்று இருக்கைகளையும் வழிமறித்தபடி சாய்ந்து கிடந்தவர்…

அவன் சற்று நேரம் வேடிக்கை பார்த்தான். ஓட்டுனரும் நடத்துனரும் சாயா குடிக்கப் போனார்கள். சாயா குடித்தபின் புகைப் பார்கள். முறுக்கான் போடுவார்கள். மூத்திரம் பெய்வார்கள். எப்படியும் இன்னும் அரைமணி நேரம் ஆகும் போல.

முகப்புப் பக்கம் வந்து எழுத்துக் கூட்டிப் போகும் ஊரின் பெயர் வாசித்தான். மன்னார்க்காடு என்று கண்டிருந்தது. மன்னார்க்காடு பூரம் என்றெரு சொல் இடைவெட்டிப் பாய்ந்தது. எத்தனை தூரமோ? எத்தனை பயணக்காசோ? எத்தனை தூரமானாலும் பூமிகோளம் தானே! சேண்மை சேண்மையுமல்ல அண்மை அண்மையும் அல்ல. அன்று தவிர்த்த மறு நாளும் விடுமுறை இருந்தது. போவதா வேண்டாமா என்பதைப் பேருந்து புறப்படும்போது கூடத் தீர்மானித்துக் கொள்ளலாம். மர நிழலில் ஒதுங்கி நின்றான். சுற்றிலும் காட்டின் சுவடுகளைக் கோடி காட்டிய செடி கொடிகள்.

பேருந்தின் முதுகில் ஏகமாய் பாரம் ஏற்றிக்கொண்டிருந்தனர். காய்கறி மூடைகள், வாழைக் குலைகள், தேங்காய் மூடைகள், வெள்ளை லகான் கோழிக் கூண்டுகள். தயிர் பீப்பாய்கள், டயர், சைக்கிள், கருவேப்பிலைக்கட்டு…

பாலத்திலிருந்து மலைப்பாதை தொடங்கும் எனத் தெரிந்தது. பாலத்தின் கீழ்க்கை தமிழ்நாடு எல்லை, மேல்கை கேரள எல்லை. கடவு ளின் சொந்தம் பூமி. கடவுளை வைத்து நாட்டைக் கணிப்பதா, நாட்டை வைத்துக் கடவுளைக் கணிப்பதா?

பாலத்தைக் கடந்து ஜீப் ஒன்று வந்து நின்று திரும்பியது. ஜீப்பி லிருந்து இறங்கிய ஒருவன் அட்டப்பாடி, அட்டப்பாடி எனக் கதறினான். அவசரமாய் ஐந்தாறு பேர்கள் பேருந்திலிருந்து குதித்து ஓடினார்கள். தோளில் குந்தியிருந்த குரங்குடன் ஒருவன் ஓடிப் போனான்.

பேருந்தின் வெற்றிடம் ஒன்றில் தன்னைச் செருகிக்கொண்டான் அவன். மலையாளிகள் போன்றுமல்லாது தமிழர்கள் போன்றுமல்லாது கலப்பினம் போல் பயணிகள் காணக் கிடந்தனர். நடத்துனர் பிரேம் நசீர் போன்ற நறுக்கு மீசையும் படிய வாரிய தலைமுடியுமாய் நகர்ந்து வந்தார். சீருடை இல்லை என்றால் காவல்துறை ஆணையர் என்று கூடச் சொல்ல லாம். ஓட்டுனர், விதி பிடர் பிடித்து இந்தச் சோலிக்கு உந்தி விட்டது எனும் விறைப்புடனும் கடுப்புடனும் ஏறிப் படார் எனத் தகரக் கதவை அறைந்தார். பெண்டாட்டி இழவோ, கடன்காரர் இழவோ, கதவில் நசுங்கிச் சிதைந்தது.

கயிற்றில் கட்டிய ‘டிங்டிங்’ மணி அனங்கியது. சாலையில் ஓடும் விமானம் போன்றும் நளமகாராஜனின் ரதம் போன்றும் அனுமன் கை தாங்கிய மருத்துவாழ் மலை போன்றும் மேல் கியர்உறுமலுடன் பேருந்து ஓடியது.

காடு தொடங்கி விட்டது. இரு புறமும் பெயரறியாச் செடிகொடி கள், மரங்கள், புதர்கள், புல் பூண்டுகள். நகர மனிதன் ஒருவனுக்கு மரங்கள், செடிகள், கொடிகள், புல் பூண்டுகள் எனச் சேர்த்து எத்தனை பெயர்கள் தெரியும்? ஓட்டல் பண்டங்களின் பெயர்கள் அளவுக்குக்கூட, நடிக நடிகையர் பெயர்கள் அளவுக்குக் கூட தெரிந்திருக்குமா? தெரிந்து தான் என் செய? ஒரு சம்பள உயர்வு கிடைக்குமா அல்லது பஞ்சப்படி கிடைக்குமா?

சமீபத்தில் பெய்த மழையால் மண்ணில் மரம் மட்டைகளில், புல் வெளிகளில், புதர்களில், பாதைகளில், காற்றின் ஒலியில் ஈரநயப்பு இருந் தது. சூரியன் அனுமதி கேட்டுத்தான் உள்ளே வரலாம் எனும் படியான அடர்வனம். தனிப் பாடல் வரியைக் கடன் கொண்டால், ஈ புகுந்தால் இறகொடியும்!

நல்லதூக்கம் சுழன்று வந்தது. சன்னலோர இருக்கை இன்னும் வசதி யாக இருக்கும். வானரங்களும் மந்திகளும் குடும்பம் குடும்பமாய் குத்த வைத்திருந்தன. கொண்டை ஊசி வளைவுகள் அமர்ந்தவரையும் நிற்ப வரையும் அலைக்கழித்தன.

அட்டப்பாடியில் பாதிப்பேர் இறங்கினார்கள். பாதிப் பொதிகள் இறக்கப்பட்டன. மலையாளத்தின் மலைப்பிரதேசம். சாலையோரக் காய்கறி வியாபாரிகள். கூலித் தொழிலாளர்கள். பலசரக்குக் கடை போலும் பேக்கரி போலும் பல்பொருள் அங்காடி போலும் தோற்றம் கொண்ட கடைகளில் வேலை செய்வோர் தமிழர்களாக இருந்தனர். வறுமையும் இடரும் அவமதிப்பும் வரையோடிய முகபாவங்கள். வட நாட்டில் தென்னிந்தியர்களை மதராஸி என்றும் மும்பையில் உ.பி.காரர் களை பையா என்றும் (லல்லு பிரசாத் யாதவ் உட்பட) பட்டப் பெயர் இருந்ததுபோல, மலையாளம் பூராவும் தமிழன் ‘அண்ணாச்சி அல்லது ‘பாண்டி.’ ஏளனத்தை ஏற்றுக்கொண்டு இளிப்பது தவிர வேறு வழி இல்லை; கடவுளின் சொந்தம் நாட்டிலும் கூட.

சன்னலோர இருக்கை வாய்த்தது. எட்டிப் பார்த்தபோது மேலும் அடர்வனம். மூன்று மாதங்கள் வாகனப் போக்குவரத்து இல்லை எனில் காடு கவிந்து தடம் மாய்ந்துவிடும். கால் செலாது, கந்தவேள் வேல் செலாது, வென்றியான் வால் செலாது, இராவணன் கோல் செலாது, அவன் குடை செலாது எனும் ரீதியில்.

அட்டப்பாடியில் ஓட்டுனர்- நடத்துனர் இறங்கவில்லை. சாயா குடிக்கும் தாவளம் வேறு ஏதேனும் இருக்கும். நல்ல கடுப்பம் கூட்டிய சூடான சாய்.

ஓட்டுனருக்கு மூலக்கடுப்பு முதலான வெறேதும் கடுப்புக்கள் இருக்கும்.ஏற, இறங்கத் தாமதித்தவர்களைத் தரமற்ற சொற்களால் காய்ச் சினார். எதிரே வரும், பின்னால் வந்து முந்தத் தடம் கேட்கும் வாகன ஓட்டிகளைக் குரோத மொழிகளால் வாழ்த்தினார். ஓட்டுதலில் வெறுப்புப் பொதிந்த முரட்டுத்தனம். வளைவுகளில் ஆடியபடி விழுந்த வாறிருந்தனர் மக்கள். வேகம் எடுத்தபோதும் முறித்தபோதும் ஒரு அவசரம் தெரிந்தது. யாரும் எதிர் பேசும் வலு உடையவர் அல்ல.எப் படியோ கைகால்கள் உடையாமல், உராயாமல் போய்ச் சேர்ந்தால் போதும். மேலும் நாளையும் அந்தத் தடத்தில் பயணம் செய்யும் நிர்ப்பந் தம் உடையவர்கள்.

அடுத்த தாவளத்தில் இறங்கி ஒரு சாய் பருகினால் நன்றாக இருக்கும். அந்த நினைப்பு ஓட்டுனருக்கும் வரவேண்டும். அவரன்றி ஓரணுவும் அசையாது.

கடுமையான ஏற்றம். காற்றின் அமைதியைக் கிழித்துக்கொண்டு வேகமான டயர் ஓசை. சற்று தூரம் வளைவுகளற்றுத் தெரிந்தது. வண் டொன்று வண்டிக்குள் நுழைந்து ரீங்கரித்துப் பறந்து வெளியேறியது. எந்தப் பெண்ணின் கூந்தலுக்கு அங்கு இயற்கை மணம் இருந்ததோ! பக்கவாடுகளில் தென்னையோ, கமுகோ அல்லாத, ஆனால் அதுபோன்று ஓலைகள் நீட்டிய மரங்கள் செறிந்திருந்தன. காட்டு ஈந்த மரமோ அல்லது சளவோலைப் புதரோ? ‘சில்’லென ஒலி உமிழக் கிடந்தது வனம்.

தொலைவில் சாலையின் குறுக்கே சுசீந்திரம் தாணுமாலையன் தேர் வடம் போல் ஏதோ கிடந்தது. காட்டு மரத்தின் முறுகிய கிளை ஒன்று பட்டு ஒடிந்து விழுந்திருக்கலாம்.

வண்டி மேலும் நகர, பட்டுப் போன காட்டுமரத்தின் கிளை அசைவ தாய்ப்பட்டது. தலையும் வாலும் தெரிந்தது. உடல் மீது அள்ளித் தெளித்த புள்ளிக் கோலங்கள் தெரிந்தன. பேருந்தின் வருகையின் இரைச்சலை, அதிர்வை ஏதோகாட்டு மிருகம் என்று எண்ணியதோ, மந்தையிலிருந்து பிரிந்த துண்டுச் சூறாவளி என்று நினைத்ததோ! ஒரு அவசரமும் தெரியக் காட்டவில்லை பாம்பு. கடுப்பு மிகுந்த ஓட்டுனர் ஏற்றிக் கொன்றுவிட்டு மேலேறுவான் என மனம் பதைத்தது.

ஒரு குழந்தையைத் தோளிலிருந்து இறக்கி நிற்க வைப்பதைப் போல பேருந்து வேகம் குறைத்து நளினமாய் நின்றது. பாம்பு சாலையைக் கடந்து செல்லும் பரபரப்பின்மையை மொத்தப் பயணிகளும் உள் வாங்கிக் கொண்டனர். கர்ப்பிணியாக இருக்கலாம். இரையெடுத்த நிறை வயிறாகவும் இருக்கலாம். காட்டில் உலாத்துவதற்கு எந்த நேரமும் தோதான நேரம்தான்.

‘போ மோளே பெட்டெந்து’ என்றார் ஓட்டுனர், கியரில் கை வைத்தபடியே. குரலில் கனிவு கசிந்துகொண்டிருந்தது.

– ஓம்சக்தி, தீபாவளிமலர் 2003.

நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/

நாஞ்சில்நாடன்

வாசிப்பு நேரம்: 5 நிமிடங்கள்நாஞ்சில்நாடன் வாழ்க்கைக் குறிப்பு: பெயர் : G. சுப்ரமணியம் (எ) நாஞ்சில் நாடன்எழுதும் துறை : நாவல், சிறுகதை, கவிதை,...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *