ராஜாக்களும் சீட்டுக் கம்பெனிக்காரர்களும்
(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சுடலைமாடன் சாமிகளுக்கு விசேடநாட்களில் புதுத் துணியும், மாலையும், சூட சாம்பிராணிப் புகையும், படையல் வாசனையும் என சபிக்கப்பட்டிருப்பது போல இந்த சிலைகளுக்கும் பிறந்த தினங்களில் பூமாலைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அந்த நகராட்சி பேருந்து நிலையத்தில் இரண்டு சிலைகள் நின்றன. ஒன்று முகப்பில். பச்சைக்களிம்பு பிடித்துக் கறுத்த வெண்கலச்சிலை. ஒரு காலத்தில் அந்த மாவட்டத்தின் ‘ராசா’ என்று பூசிக்கப்பட்டவர்.
பண்டித நேரு பிரதமராக இருந்த காலத்தில், அந்த மாவட்டத்திற்கு ஒருமுறை சுற்றுப்பயணம் போனார். வழக்கமான ஷெர்வானி, குர்தா. குல்லாவுடன். வரவேற்க கும்பலாய் நின்ற மக்கள் ‘ராசாவை’ மட்டுமே அறிவார்கள். பிரதமரை அறியமாட்டார்கள்- ஆனால் ‘ராசாவுடன்’ வருகிறவர் முக்கியப்பட்ட புள்ளியாகத்தானே இருக்கவேண்டும் என்ற யூகத்தில் ”… ராசாவுக்கும் கூட வந்த சாகிபு எசமானுக்கும் ஜே” என்று கோஷமிட்டார்கள்.
அந்த ‘ராசா’ இப்போது வந்துபோகும் வண்டிகளைப் பார்த்துக் கொண்டு வகுப்பறையில் ஆசிரியர் முன் கைகட்டி நிற்கும் மாணவன் போல் நின்றிருந்தார். காகங்கள் குருவிகள்தவிர பேருந்து நிலையத்துக்கு வேறெந்தப் பறவை வரும்? சில ஒரு நிமிடம் உட்கார்ந்து மேற்பார்த்து விட்டுச் செல்லும்; சில மலம் கழித்துவிட்டுப் பறக்கும்.
பேருந்து நிலையத்தின் மத்தியில் வேறொரு சிலை. அவர் இல்லாத தமிழ்நாட்டுப் பேருந்து நிலையங்கள், முச்சந்தி நாற்சந்திகள் இல்லை. போக்குவரத்து காவற்படையினர் ஓய்வெடுக்கும் போது அவரிடம்தான் பொறுப்பை ஒப்படைத்து விட்டுச் செல்வார்கள். சில சந்திகளில் இரண்டு பேருமே சம உயரத்தில் நிற்பார்கள்.
அந்தந்த ஊர்களில் சிலையெடுப்பவர்களின் மனோலயங்களுக்குத் தகுந்தபடி, பிரிந்த பணத்துக்குத் தகுந்தபடி அவர் இடுப்பளவிலோ, முழு உயரத்திலோ, செங்கல் சுண்ணாம்பிலோ, நிழற்குடையுடனோ, வெண்கல வார்ப்பிலோ நிற்பார்.
பணப்பிரிவுக்குப் போகிற சீட்டுக்கம்பனி ஊழியன் போல கையில் ஒரு பையோடு, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் போல் கைக்கிடையில் இடுக்கிய பையோடு, கல்லூரிப் பேராசிரியர் போல கையில் புத்தகங் களோடு, இப்போதே ஒரு சொற்பொழிவு தொடங்கி விடுவேன் என்ற அச்சுறுத்தலோடு, கொன்று போடுவேன் அல்லது அவசரமாய் ஒன்றுக்குப் போகவேண்டும் என்பது போல் விரலை உயர்த்திக் கொண்டு, சட்டையில்லாமல் கண்ணாடி போட்ட கணக்குப்பிள்ளை போல் சம்மணம் போட்டு அமர்ந்து… தமிழ்நாட்டையே அவர்தான் கண்டுபிடித்தார் என நாளை வரலாற்றாசிரியர்கள் பதிவு செய்யச் சான்றாக…
சுடலைமாடன் சாமிகளுக்கு விசேட நாட்களில் புதுத்துணியும் மாலையும் சூட சாம்பிராணிப் புகையும் படையல் வாசனையும் என சபிக்கப்பட்டிருப்பது போல், இந்தச் சிலைகளுக்கும் பிறந்த தினங்களில் பூமாலைகள் விதிக்கப்பட்டிருந்தன. சில சமயம் ஒரே சுடலைமாடன் கோயிலுக்கு சண்டைக்கார இரண்டு சொக்காரன்மாரும் தனித்தனி நாட்களில் கொடை நடத்துவது போல் இவர்களுக்கும் போட்டியாளர்கள் மாலை போட்டனர்.
அந்த நகராட்சி பேருந்து நிலையத்தின் மையத்தில் போக்குவரத்துத் தீவாக அமைந்த இடத்தில் கொஞ்ச நாட்களாய் அவர்நிற்கிறார். சுற்றிலும் சிறியதோர் பூந்தோட்டமும் நீரூற்றும் அமைத்தபின் குடும்பச் சொத்தான நகராட்சி கைமாறிவிட்டது. பராமரிப்பு இல்லை. பேருந்துகளுக்காகக் காவல் நின்றவர்கள் சிலையைச் சுற்றிய சுவரில் கடுக்கும் காலை மடித்து ஊன்றி நின்றார்கள். தலையை ஒருச்சாய்ந்து ‘சவுக் கென்று வெற்றிலை துப்பினார்கள். கையில் கனத்த சாக்குப்பைகளை, பொதியல்களை, கருப்பட்டி அல்லது புளிச்சிப்பங்களைக் கையாறுவதற்காக வைத்தார் கள். கரியாலும் சாக்குக்கட்டியாலும் ஒரு சினிமா நடிகனை வாழவும் இன்னொருவனை ஒழியவும் கட்டளைகள் இருந்தன. ஒரு சுவிசேஷ எழுப்புதல் கூட்டத்துக்கான சுவரொட்டி இருந்தது.
மதியம் பன்னிரண்டு மணிக்கு வெயில் காட்டமாய் அடித்தது. தாறுமாறாய் பேருந்துகள் கிடந்தன.ஓர் ஒழுங்கின்றி, சீரின்றி, தத்தம் வண்டிகள் வந்ததும் காட்டுத்தனமாய் சாடி விழுந்து ஏறினார்கள்.
“வேய்… குடை… வேய்… குடை… விடும் வேய்…”
“ஓய் பொம்பளையாளு ஏறட்டு… மனுசனா மாடா ஓய்? இப்பிடிச் சமுண்டுகேரே…”
“எக்கா…எக்கோவ்… பிள்ளையை இப்பிடிக் கொண்டா…இப்படி சென்னலோடதா… சரி. நீ ஏறு. பாத்துக்கிட்டு நிண்ணா முடியாது.”
எப்படியோ கூட்டம் முழுவதும் பேருந்தினுள் திணிபடும். சில இருக்கைகள் கைக்குட்டையால், பையால், தலை முண்டால் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
“கொஞ்சம் தள்ளி இரிங்கோ அண்ணாச்சி.”
“ஆளு வருகு…”
“வந்தா எந்திரிச்சிருகேன்.”
”சொன்னாக் கேளுமே வேய்… அதிய சாமார்த்தியமில்லா காட்டுகேரு…”
கூட்டத்தினுள் சச்சரவுகள்.
வேடிக்கை பார்த்துக்கொண்டு, தனது பஸ் வராதா என்ற ஆர்வத் துடன் காத்து நின்றான் அவன். போக வேண்டிய பஸ் பன்னிரண்டு முப்பத்தைந்துக்கு என்றாலும், முன்னதாகவே வந்துவிடும். பஸ்ஸில் ஏறி அமர்ந்தால் வெயிலில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். ‘ராசா’வுக்கும் ‘சீட்டுக் கம்பனிக்கார’ருக்கும் என்றும் வெயிலில் இருந்து விடுதலை கிடையாது.
பன்னிரெண்டே காலுக்கு பஸ் வந்தது. அந்த நேரத்தில் அந்தத் தடத்தில் அதிகக் கூட்டம் கிடையாது.
நிதானமாகப் பேருந்தில் ஏறி, மகளிருக்கு என ஒதுக்கிய இருக்கை களைத் தவிர்த்து கற்பு காத்து, முன்னால் வசதியான ஓர் ஓரத்தில் அமர்ந்து வெளியே கவனித்தான்.
ஒவ்வொருவராய், பாரதப் பெருங்குடி மக்களின் பிரதிநிதிகளின் ஊர்வலம்.
“ஐயா ரெண்டு கண்ணுமில்லாத பாவி…”
அம்மா கண்ணவிஞ்ச பாவிக்கு அஞ்சு பைசா போடுங்க தாயே…” என்று ஒருவர்.
மத்தளமாய் மாற்றிய வயிற்றில் அறைந்து “நாங்க புதுசாக் கட்டிக் கிட்ட ஜோடி தானுங்க. நல்ல பாட்டுப் படிக்கும் வானம்பாடி தானுங்க. நாங்க புதுசா….” என்று பாடிய சிறுமி.
“கடலை மிட்டாய்… கப்பலண்டி மிட்டாய்… இஞ்சி மொரப்பா… சார்கப்பலண்டி மிட்டாய் வேணுமா?” என்று ஒரு சிறுவன்.
விபத்தில் கை கால்களை மொத்தாய் இழந்த கணவன் ஐந்து குழந் தைகள், ஆதரவுக்கு ஆளற்ற நிலையை அட்டையில் அச்சடித்து விநி யோகம் செய்து கையேந்தும் முகம்… சாம்பல் பூத்த முப்பத்தைந்து வயதுக்காரி.
கடைசியாக அந்தச் சிறுவன் வந்தான். பத்து வயதிருக்கும். அழுக் காகிப் போனதுவர்த்து ஒன்றை இடுப்பில் உடுத்து அதை மடித்துக் கட்டி யிருந்தான்.மேலே துணியே இல்லை. தலைமயிர் குறுகத் தறிக்கப்பட்டி ருந்தது.
இன்னும் இரண்டுமாதம் தலை வார வேண்டாம். உடம்பில் அழுக்கு இல்லை. வாட்டம் இல்லை. நல்ல கறுப்பாய் இருந்தான். முகத்தில் நல்ல களை. கள்ளங்கபடு அற்ற முகங்கள் மட்டுமே சொந்தங் கொண்டாட முடிகின்ற களை. பிச்சை கேட்பது போல் இல்லாமல் மிக உரிமையுடன் தொட்டு, சிரித்து, காசு கேட்டான். இல்லையென்ற போதும் அவன் முகத்தில் வாட்டம் இல்லை. சிரித்துக்கொண்டே அடுத்தவரிடம்…
எதிர்ப்பக்க இருக்கைக்காரர் அவனிடம் கேட்டார்.
“ஒரு பாட்டுப் படி பார்ப்போம்.”
“எனக்கு பாட்டுத் தெரியாதே!”
”பின்னே சும்மாகாசு கேட்டா ஆராம் தருவாளா?”
“பாட்டுத் தெரிஞ்சால்லா படிப்பேன்?”
“சினிமாப் பாட்டுக் கூடத் தெரியாதா?”
”எனக்கு ராகமாட்டு பாடத் தெரியாது பாத்துக்கிடும்” ஐந்து பைசா கொடுத்து அவர் அனுப்பியதும் அவனிடம் வந்தான். அவனிடம் பேச வேண்டும் என்று தோன்றியது.
“எந்த ஊருடே?”
”எனக்கா? வெட்டூர்ணிமடம் இருக்குல்ல… அதுக்குப் பக்கத்திலே ஒரு வேதக் கோயிலு இருக்கு பாத்திருக்கேரா? அதுக்கு பொறத்தயாங்கும் வீடு…”
“நீ பள்ளிக்கூடத்துக்கு ஒண்ணும் போகதில்லியா?”
“மூணு வரை போனேன்… பொறவக்கி எனக்க தள்ளை பள்ளிக்குப் போகவாண்டாம் பிலேண்ணு நிறுத்திப்போட்டா.”
“அப்பா இல்லியாப்போ?”
“அப்பா கெடையாது… அம்மையும் ரெண்டு தங்கச்சியும் நானும் மட்டுந்தான்…”
“அம்மை என்ன செய்யா?”
“எங்கயாம் சோலிக்குப் போவா…”
“காலம்பற என்ன திண்ணே?”
“நேத்து ராத்திரி திருவந்திரம் பஸ்ஸிலே படுத்துக் கெடந்தம்லா… காலத்தை முளிச்சு மொகங் களுவீட்டு போனாலே மிடாலம் பஸ்ஸிலே பதினஞ்சுபைசா கெடச்சு. அடுத்தால குலசேரம் பஸ்ஸிலே பத்து பைசா…. பெறவு இருவது பைசா குடுத்து ரெண்டு தோசை வாங்கித் திண்ணேன். மிச்சம் அஞ்சு பைசா இருந்து பாத்துக்கிடும். பெறவு நாலஞ்சு பஸ்ஸிலே அலஞ்சதுலே பத்துப் பைசாதான் கெடச்சிருக்கு…”
“அப்பம் பதினஞ்சு பைசாதானே ஆச்சு… மத்தியானம் சாப்பிடதுக்கு என்ன செய்வே?”
“நீரு அஞ்சு பைசா தந்தேருண்ணா எதுத்த கடையிலே போயி என்னவாம் வாங்கித் திம்பேன்…”
“ஒரு ரூவாதந்தா என்ன செய்வே?”
”ஒரு ரூவாயா? சும்மா வெளையாடாதீரும்…”
”என்ன செய்வ சொல்லு?”
“சோறு திண்ணு ரெண்டு மூணு நாளு ஆச்சுல்லா… தெனமும் தோசை இல்லேண்ணா இட்லிதானே… ஒரு ரூவாய் தந்தேருண்ணா வவுறு புள்ளா சோறு வாங்கித் திம்பேன்… எதுத்த கடையிலேதான்… போர்டுலே எழுதீருக்குல்லா… அதையும் நான் பாத்துத்தான் வச்சிருக் கேன்… அறுவத்தஞ்சு பைசா அளவுச் சாப்பாடு… எனக்கு போரும் பாத்துக்கிடும்…”
ஒற்றை ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து நீட்டினான்.
முகத்தில் தயக்கம், வெட்கம், சந்தேகம், சந்தோஷம்.
“வாங்கிக்கோ… போய் சாப்பிடு…”
“வாங்கிக்கடே…” பக்கத்து இருக்கைக்காரர்.
கை நீட்டலில் இன்னும் சந்தேகம் தொனித்தது. மகிழ்ச்சியை மறைக்க முடியாமல் இறங்கி ஓடினான். ஜன்னல் வழியாகப் பார்த்த போது, எதிர்த்த காப்பிக் கடையுள் அவன் நுழைவது தெரிந்தது.
‘ராசாவும்’ சீட்டுக்கம்பனிக்காரரும்’ எதையும் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தனர். அவர்களுக்கு பசி வயிற்றில் அல்ல, கால் முட்டில்.
– கேரளத்தமிழ், 1979.
நன்றி: https://nanjilnadan.wpcomstaging.com/
November 16, 2026