திருத்தம்
கதையாசிரியர்: நீ.பி.அருளானந்தம்
தின/வார இதழ்: தினக்குரல்
கதைத்தொகுப்பு:
சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 186
(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“என்னிடமுள்ள துன்பத்தை யார் அகற்றுவார்கள்” என்று மனைவியைப் பார்த்து நான் கேட்டேன். “சரிதான் நீங்கள் சரியாகத் தூங்கவில்லை! உங்களை நகைப்புக்கு ஆளாக்கும் இந்தக் கதையை மட்டும் திரும்பத்திரும்ப யாரிடமேனும் தயவுசெய்து சொல்லிக்கொண்டு திரியாதீர்கள்” – என்று சொன்னாள் அவள்.
‘யாரை நீங்கள் ஏமாற்றப் பார்க்கிறீர்கள். உங்கள் சுகபோகத்தையே நீங்களெல்லாம் விரும்புகிறீர்களே உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?’ நான் சினத்துடன் அவளைக் கேட்டேன். தாம்பத்திய உறவில் நான் என் மனைவியை சில காலங்களாக பிரிந்தே இருக்கிறேன். என்னுடைய மோக உணர்வுகளெல்லாம் வரவர இப்போ காற்றோடு போன மாதிரியாகப்போய் விட்டன. காரணம் நாட்டு நிலமை யுத்தத்தால் சனம்பட்டுக் கொண்டிருக்கிறகேவலங்களை நினைக்க நினைக்க, எல்லாமே எனக்கு வற்றியதாய்ப் போய்விட்டன.
“தொடக்கத்திலேயே இவைகளெல்லாவற்றையும் நினைத்துக் கல்யாணம் கட்டிக் கொள்ளாமலே நீங்கள் இருந்திருக்கலாமே? நான் ஒரு சரியான மடைச்சி!” – என்று அவள் சொல்லிக்கொண்டு அதிலே நின்றாள். “என் மனைவி என்னை வெறும் பொருளாக நடத்தத்தான் நினைக்கிறாள் போலும்!” என்று நான் எனக்குள் நினைத்தேன். “பெரிய தவறு செய்துவிட்டேன். திருமணத்துக்கு முன்னம் என்னைப்பற்றி அவளுக்கு நான் தெளிவுபடுத்தியிருக்கலாம். அதுவொன்று என் பிழைதானே?”
மேசைமேல் அவள் எனக்குத் தயாரித்துக் கொண்டு வந்து வைத்திருந்த பால் தேத்தண்ணீர், மேலும் மேலும் ஆறிக்குளிர்ந்து கொண்டிருந்தது. எனக்குத் தேநீரும் பருக விருப்பமே வரவில்லை. பென்னை எடுத்துக்கொண்டு வந்து அந்த மேசைக்குப் பக்கத்தில் உள்ள கதிரையில் இருந்தேன். அதிலே கிடந்த வெள்ளைக்காகிதத்தை முன்னே நகர்த்தி அதில் ஒரு சிறு கதையை எழுதுவோம் என்ற திட்டத்தில் எழுதத் தயாரானேன்.
என் கண்களுக்கு முன்னே மழைத்துளிகள் விழுந்ததுபோல இருந்தன. எல்லாமே வெறும் நினைவுதான். ஆனாலும் அதிலே உண்மை நிகழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதில் ண்மை என்ற ஒன்று இருப்பதால்தானே அந்த நினைவு எனக்குத் திரும்பத் திரும்ப வருகிறதாய் இருக்கிறது.
தமிழ்ச்சகோதரன் ஒருவன் எனக்குத் தன் ஊரில் வன்னிக்குள் நடந்த உண்மைக்கதையைச்சொன்னான். அன்று அங்கு நல்ல மழையாம். கனத்த மேகங்கள் கீறிய தண்ணீர்த் தோல்பைகள் போல வானம் நீரைக் கொட்டிக்கொண்டிருந்தாம். அந்த மழைக்குள்ளாலே விதவையாம் அவள்…. மூன்று பிள்ளைகளாம் அவளுக்கு! எங்கேயோ அலைந்து திரிந்து அவள் அரிசி கொஞ்சம் போல வாங்கிக் கொண்டு வந்திருக்கிறாள் வீட்டில் உள்ள தன் பிள்ளைகளுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்ற. இன்னும் கையிலுள்ள அரிசிப்பையோடு வீடுவந்து சேரவில்லை அவள். சேற்றுக் குழம்பலில் “சளப்சளப்” என்ற காலடி ஓசையுடன் அவள் நடந்துவந்து கொண்டிருக்கின்றபோது – அந்த நேரம் அடை மழையின் சோவொலியையும் அமுக்கிக் கொண்டு நெருங்கி வந்ததாம் டமாராலி – வெருண்ட சுண்டெலி போல னே ஒடுங்கினதுதான் அவள். அடுத்த கணம் ஷெல் துண்டுகள் பறந்து வெட்டிக் கால்களே அவளுக்குத் துண்டிக்கப் பட்டுவிட்டதாம். அடுத்தகணம் அதையடுத்துக் களகளத்துப் பெருகியதாம் இரத்தம். அவள் அப்படியே பிறகு மயக்கமடைந்து விட்டாள்- என்றான் அவன். நானும் அவன் சொன்ன கதையைக் கேட்டுப் பரிதாபப்பட்டேன். அதற்குப்பிறகு என் ஆழ்மனத்தில் அவன் சொன்ன அந்தச் சம்பவம் அழியாமல் இத்தனை நாளும் கிடந்து கொண்டிருந்தது. அதையே கதையாக எழுதலாம் என்றுதான் நெடுகவும் என்மனதில் நினைத்துக் கொண்டிருந்தேன்.
ஆனால் அதையெல்லாம் இடையில் வந்து குழப்பிவிட்டது இன்னும் அனேகமான மனத்துயரங்கள். எல்லாக் கொடுமைகளையும் கேள்விப்படக் கேள்விப்பட, மனத்தாலே தாங்கிக் கொள்ள முடியாத கொடூரமான துயரக் காட்சிகளை மக்கள் தொலைக்காட்சியிலே பார்க்கப் பார்க்க, இந்தக் கொடுமைகளுக்கெல்லாமே ஒரு அளவில்லையோ? என்று நினைத்து இரத்தக் கண்ணீர் வடிக்கின்ற அளவுக்குத்தான் நிலமை எனக்கு வந்துவிட்டது. இன்றைய நாட்டு நிலமையில் எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? சுதந்திரம் இருக்கிறது? கீழ்த்தரமாகத்தான் தமிழராகிய நாங்கள் இருக்கிறோம். கொழும்பிலே இருக்கிறோமென்ற படியாலே நாங்கள் இன்று நலமாயிருக்கிறோமா? நிம்மதியாயிருக்கிறோமா? நாங்கள் முன்னின்று அங்கேயுள்ள மக்களுக்கு ஏதும் உதவ முடியுமா?
அப்படியாக வெளிக்கிட்டால் எங்கள் உயிருக்கே சிலவேளை ஆபத்தாகவும் வருமே? என்மனைவி இன்னும் என்னைப் பார்த்தபடியே அதிலே நின்று கொண்டிருந்தாள். எனக்கு முன்னால்தான்! வைத்த கண்வாங்காமல் பார்ப்பது என்கிற மாதிரித்தான். “இந்த மாதிரி ஆளுடன் இவளவு காலமும் என்னால் எப்படிச் சேர்ந்து வாழ முடிந்தது?” – என்றதாய்த்தான் அவள் என்னைப் பார்த்து இப்போது நினைத்துக் கொண்டிருக்கிறாள்போல…. என்று அவளின் களைத்த விழிகளின் பார்வையைக் கொண்டு நான் இவ்விதம் கணித்துக்கொண்டேன்.
“நல்லது தேத்தண்ணீர் தந்து விட்டீர்தானே ….. இனிநீர்போய் உம்முடைய வேலையளப்பாரும்” என்று நான் அவளுக்குச் சொன்னேன். பேச்சுமேலே ஓடவில்லை.
ஆனால் அவள்: “எழுத்து வேலையை நீங்கள் தொடங்கப் போகிறீங்களோ?” – என்று என்னைக்கேட்டாள்.
“அதைத்தள்ளிப்போடுவானேன்! எவ்வளவு சீக்கிரத்துக்கு அவைகளைப் பற்றியெல்லாம் என்னால் எழுதமுடியுமோ அவ்வளவுக்கு எழுதி விடுகிறது நல்லது அல்லவா?” – என்றேன் நான்.
“அதுவும் சரிதான்! ஆனால் எந்தச் சம்பவத்தை முக்கியமாக எடுத்து நீங்கள் கதை எழுதப் போகிறீர்கள்?” – என்று ஒரு கேள்வி கேட்டாள் அவள்.
அவள் கேட்ட கேள்வியோடு எனக்கென்றால் பெரும் யோசனை.
மேசைக்குப் பக்கத்தில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியின் ஓரத்தில், பூச்சி ஒன்று ரீங்காரம் செய்வது மாதிரி சத்தம் எனக்குக் கேட்டது. அது ஈயாக இருக்க வேண்டுமென்ற நினைப்போடுதான் நான் அங்கே பார்த்தேன். ஆனால் நான் நினைத்துக்கொண்டு பார்த்ததுபோல் அது ஈ அல்ல கோடுகளிட்ட பெரிய குளவி. சிறகுகளை படபடத் தவாறு கண்ணாடியில் அது பிடிவாதமாக நகர்ந்து கொண்டிருந்தது. என் சிந்தனையும் அந்தக் குளவியின் நிலையில்தானே இவ்வேளை இருந்துகொண்டிருக்கிறது. எதை எழுதுவோம், எதை எழுதுவோம்? – என்று ஒரு இழுவைப் பாடாய்த்தானே எனக்கும் இருக்கிறது. ஒன்றிலும் திட்டவட்டமாக முன்னேறவே எனக்கு முடியாமலிருக்கிறதே?
இந்தக் காகிதம் முன்னால் இருந்தாலே பிழை. இதை மடித்துப் பைக்குள் வைத்துக் கொண்டால் படபடப்பு இராது. கொஞ்சம்போல் இதிலே இருந்து சிந்தித்துவிட்டு எழுதலாம் என்ற யோசனையும் எனக்கு வந்தது. அதுவும் நல்ல யோசனைத்தான்! என்று உடனே அந்த நீலக் கோடிட்ட காகிதத்தை மடித்து நான் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். முன்பெல்லாம் அங்கே யாழ்க்குடா நாட்டில் யுத்தத்தால் ஏற்பட்ட கொடுமையான நிகழ்வுகளை ஞாபகத்தில் வர நான் முயற்சித்துப் பார்த்தேன். மனப்பதிவுகள்முன்புபோல் அவ்வளவு வலிமை மிக்கனவாய் எனக்கு இருக்கவில்லை. அந்த நிகழ்ச்சிகளின் நினைவுகள் இப்போது தளர்ந்து விட்டது மாதிரியாகத்தான் எனக்கு இருந்தது. “என்ன எல்லாம் புகையாய் மறைந்துவிட்டது மாதிரி இருக்கிறதே?” – என்று நான் நினைத்துப் பயந்தேன். அனேகருக்கு நாற்பது ஆண்டுகளுக்குப் பிற்பாடும் அவை நினைவில் பசுமையாய் இருக்குமே! எனக்கு ஏன் இப்படி? என்மனைவி இப்பொழுதும் அதிலேயே நின்றபடி என்னையே ஊடுருவும் முறையில் பார்த்துக் கொண்டு நின்றாள். மின்வெட்டுப்போல அவள் மூளையில் ஓர் எண்ணம் உதயமாயிருக்க வேண்டும். அதனால், “நான் உங்களுக்கு சில விஷயங்கள் சொல்லலாமா?’ என்று அவள் கேட்டாள். நான் அவள் கேட்டதற்குச் “சரி சொல்லுமன்” – என்றேன். “நீங்கள் யாழ்ப்பாண நூலகத்தை எரித்தது பற்றிய அந்தச் சம்பவத்தை வைத்துச் சிறந்த சிறுகதையினைப் படைக்கலாமே?”
இதைச் சொல்லும் போது அவளுடைய கண்கள் பளிச்சிட்டன. “தமிழருக்கென்று இருந்துவந்த மதிப்பிட முடியாத அந்தப் பெரும் சொத்தை – அவர்களைப்பற்றிய வரலாற்று நூல்களை எரித்தமாதிரியான ஒரு சம்பவம் மாதிரி வேறு ஏதாவது சம்பவம் எங்களுக்குப் பெரிதாக இருக்குமா?” என்று அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
நான் உடனே “ஆமாம்! மெய்தான்! இருக்காதுதான்…!” என்று திடுமெனக் கத்தினேன். “நூலகத்தை எரித்த மாதிரி இருக்குமா எதுவும்?” – என்று அவள் சொன்னதை அப்படியே திரும்பவும் நான் அவளுக்குச் சொன்னேன். எனக்கு உடல் பதற்றமும் கோபமும் ஏற்பட்டன. அதனால் மூச்சை உள்ளே அழுத்தி அடக்கி வெடிக்கப்போகிறவன் போல அமர்ந்திருந்தேன். “இதையெல்லாம் என் மனைவி சொல்லி புரிந்து கொள்கிற அளவுக்கு ஒரு மரம் போல நான் இருந்திருக்கிறேனே?” – என்றதாய் ஒரு எண்ணமும் அப்போது என்மனதில் உதித்தது. என்றாலும் நான் அந்தத் தமிழ்ச் சகோதரன் சொன்னானே ஒரு கதை. அந்தச் சம்பவத்தில் அவன் சொன்ன அந்த விதவைத் தாயின் துயரமாக கடைசி நிகழ்வை – மனைவி சொன்ன சம்பவத்தோடு இணைத்து நினைத்துப் பார்த்தேன். கால்கள் இரண்டையும் இழந்து விட்ட அந்தத் தாயானவள் மயக்கமடையும் வரை “என்ர பிள்ளையள் என்ர பிள்ளையள்” என்று சொல்லித்தான் அழுதிருக்கிறாள். இலேசாய்த்துளியளவே அவளுள் எஞ்சியிருந்த சுய நினைவோடு -யாரோ சிலர் அவளை வைத்தியசாலையில் கொண்டு போய்ச் சேர்ப்பித்திருக்கிறார்கள். அங்கே சுயநினைவு திரும்பியதும் அவளுக்குத் தன் கால்கள் இரண்டும் துண்டிக்கப்பட்டது நினைவில்லை. அந்த அச்சத்தின் ஜில்லிப்பு இல்லாமல் – தான் அப்போது கையில் கொண்டு வந்து கொண்டிருந்த அரிசிப் பையிலேதான் அவளின் நினைவுஎல்லாம்! அப்படி உறுதியாய் அந்த நினைவு அவள் மனதில் நிலைபெற்றுவிடக் காரணம் என்ன? அந்தத் தாய்க்குத் தன் பிள்ளைகளின் பசிதான் மிகைப்பானதாய் மனதிலிருந்தது. அந்த ஒரேயொரு நினைவோடு இருந்ததினால் தான் “என்ர அரிசிப் பை எங்கே….? என்ர பிள்ளைகளுக்குப்பசி! அதுகள் அங்க பசியில துடிச்சுக் கொண்டு கிடக்கப் போதுகள்!” என்று அழுது புலம்பியவாறு சொல்லிக் கொண்டிருக்கிறாள். அந்தத் தாயின் தாய்ப்பாசம் தான் என் மனதை உலுக்கிப் போட்டது. ஓ…!! எப்படிப்பட்ட கவலைக்குரிய சம்பவம்! இந்தச் சம்பவத்தை நீட்டி இழுத்துப் போகாமல், சிறுகதைக்குரிய இறுக்கத்துடன் எழுத முடிந்தால் படிப்பவர்களின் மனதை இக்கதை ஒரு உலுப்பு உலுக்கி எடுக்கும்’ என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில்;
“இன்னொரு சம்பவத்தைப் பற்றியும் கதையாக எழுதிவிட உங்களுக்கொரு வாய்ப்பு இருக்கிறது. யாருமே ஒரு எழுத்தாளர் இதுவரையில் எழுதாத கதையாகவும் அது இருக்கிறது. அந்தச் சம்பவத்துடன் ஒப்பிடக் கூடியதான சம்பவம் இந்த உலகில் எதுவுமே இல்லை. அதையே நீங்கள் எழுதுங்களேன். அப்படி நீங்கள் எழுதினால் இந்த விவகாரத்தைப் பற்றி -பேச்சு வருங்காலச் சந்ததிகளிடமும் அடிபடும்” – என்று மீண்டும் ஒரு அருமையான விஷயத்தைப் பற்றி சொல்லத் தயாராக நின்றாள் அவள்.
“ஓ அப்படியா? பொறுத்துக்கொள், பொறுத்துக் கொள்! அவ்வளவு பயங்கரமான சோகம் நிறைந்த வெறுக்கத்தக்க ஓர் சம்பவமா நீ இப்போதைக்காய் எனக்குக் கூறப்போவது?” – என்று ஆவலுடன் நான் அவளைக் கேட்டேன். என்னுடைய வாய் சற்று திறந்தபடி நின்றது. என் மனைவி கதைகள் எழுத ஆரம்பித்தால் என்னைவிடத் தேர்ந்த திறமையுடைய எழுத்தாளராகவும் ஆகிவிடுவாள் – என்றும் நான் அவ்வேளையில் நினைத்தேன். இனி அவளுடன் முட்டி மோதிக் கொள்ளாது அன்புடன் நான் நடந்து கொள்ள வேண்டும் என்றும் என்மனத்துக்குள் நான் தீர்மானம் எடுத்தேன். “ என்ன யோசனை உங்களுக்கு?” – என்று என்னைக் கேட்டாள் அவள். “ஒன்றுமேயில்லை நீர் சொல்ல வந்ததைச் சரியான படிக்குச் சொல்லும்” – என்றேன் நான்.
“அந்தச் சம்பவத்தைப் பற்றிய விளக்கத்தை உங்களுக்குத் தருவது இப்போதுள்ள உலகத்தின் சூழ்நிலைக்கு பொருத்தமாக இருக்கும்! இன்றைய காலத்தில சீவிக்கிற சனங்கள வெறும் முட்டாள்களாக நீங்களெல்லாம் நினைச்சிடாதயுங்கோ?” – என்று விட்டு தன் பேச்சை சற்று நிறுத்திக் கொண்டு அவள் யோசித்தாள்.
“நீ ங்கள் இந்த வரலாற்றைப் புரிஞ்சி கொள்ளுங்கோ… இரண்டாவது மகாயுத்தம் நடந்து கொண்டிருந்த போது ஜேர்மனி நாட்டு ஹிட்லர் என்ற சர்வாதிகாரி, தன் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் துப்பாக்கி ஏந்தி போருக்குச் செல்ல வேண்டும் என்று கட்டளைபோட்டான். ஹிட்லர் சொல்லவும் பணிந்து எல்லாரும் துப்பாக்கியை ஏந்தினார்கள். என்றாலும் இரண்டாயிரம் பேர்கள் வரை துப்பாக்கியையே நாங்கள் எங்கள் கைகளால் தொடவே மாட்டோம் என்று சொல்லி முற்றாக அதை மறுத்துவிட்டார்கள். அவர்கள் யெகோவாவின் சாட்சிகள் என்ற சமயத்தவர்கள். ஹிட்லர் தான் போட்ட சட்டத்தை அவர்கள் மீறியதற்காக அவர்களை குகைபோன்ற ஓர் இடத்தில் அடைத்து வைத்து நச்சுப்புகை அடித்துக் கொன்றான். இந்த நிகழ்விலிருந்து இந்த மனிதகுலம் எவ்வளவோ படிப்பினையைக் கற்றுக்கொள்ளக் கூடியதாகத்தான் இருக்கிறது. மகிழ்ச்சியாக சுதந்திரமாக நிம்மதியாக வாழ மனித குலத்திற்கு இந்த ஆயுத கலாசார மெல்லாம் எதற்கு? போர் எதற்கு? ஏன் கொன்றொழிக்கும் ஆயுதங்களை ஒரு மனிதன் கையாலே தொடவேண்டும்? மனிதனின் வாழ்வுக்கு அன்பா ஆயுதமா தேவை? அப்படியானால் அன்று உயிர் துறந்த அவர்கள் அத்தனை பேரும் வீணாகிப்போன ஆத்துமாக்கள்தானா?” என் மனைவி என்னிடமே கேள்வி மேல் கேள்வியாக தொடுத்தபடி நின்றாள். நான் கணப்பொழுதுக்கு வாயடைத்துப் போய்விட்டேன். அப்படியே எங்கள் இருவருக்குமிடையிலும் பரவிய மெளனம் விரிசல் விடுகிறது.
எவ்வளவு அக்கறையாக இந்த உலகத்தை என் மனைவி கவனிக்கிறாள்! என்று நினைக்க வியப்பாக இருந்தது எனக்கு. “தன் அதிகாரத்தைச் செலுத்தி நான் சொல்கிறபடி நீ போய்க் கொலைசெய்” – என்ற நிலைமையில்தானே யுத்தமே உலகில் பிறக்கிறது. ‘ விலங்கு உணர்ச்சியும் மூர்க்கத்தனமும் கொண்டது தான் போர்’ என்று சிக்மண்டப்பிராயிட்டும் சொல்லி இருக்கிறாரே’ – அவைகளை வைத்தும் என் மனைவி கடைசியாகச் சொன்ன சம்பவத்தை வைத்தும் ஒரு அருமையான சிறுகதையை படைத்துவிடலாமே? – என்று நான் இப்போது முடிவெடுத்தேன். ஒரு ஆணின் முன்னேற்றத்துக்கு பெண் என்பவள்தான் முன்னால் நின்று கொண்டு அவனுக்கு வழிகாட்டுகிறாள் என்பது இவ்வேளையில் எனக்கு விளங்கியது.
(தாமரை -ஏப்ரல்-2009) (சுடர் ஒளி -ஏப்ரல்-2009) (தினக்குரல் வாரமஞ்சரி – 04 ஆக்டோபர் -2009)
– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.
![]() |
நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
காயம்
தங்க-பிரகாஷ்
October 6, 2026
ஆசிரியர் அளித்த அற்புதம்
இரா.கலைச்செல்வி
October 6, 2026
மேலோர்
ஜூனியர் தேஜ்
October 6, 2026
