தானியங்கி பண இயந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2026
பார்வையிட்டோர்: 152 
வாசிப்பு நேரம்: 10 நிமிடங்கள்

சிங்காரவேலன் மனதைத் திடமாக்கிக் கொண்டு மனதிற்குள் சொன்னபடி இருந்தான். ‘நிச்சயம் இதை இன்னிக்கு ராத்திரியே செய்திடணும். நான் ஒண்ணும் பெரிய தப்பு செய்யலை. உலகத்தில் இதெல்லாம் நடக்கறதுதானே! வேற வழியும் இல்லை. அவசரத்துக்கு உதவ ஆளுமில்லே. வள்ளியோட உடல்நிலை சரியாகறதுக்கு இதை விட்டா வழி ஏதும் எனக்கு தெரியலை. இடத்தை தேர்ந்தெடுத்து நல்லா செக் பண்ணியாச்சு. சேஃப்டியான இடம். இன்னிக்கு முடிச்சுடணும். இன்னும் 48மணி நேரத்துக்குள்ள பணத்தைக் கட்டணும்.’ உடல் லேசாக நடுங்கி முகம் வியர்த்தது போல் தோன்றியது அவனுக்கு.

‘சேச்சே, அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நம்ம கற்பனைதான். சிங்காரவேலா, அநாவசியமா பயப்படாதே. துணிச்சலா இரு. உன்னால் முடியும் இது’ என்று தனக்குத் தானே ஊக்கம் தந்து, சமாதானமாகிக் கொண்டான்.

சிங்காரவேலன் சித்தர்குடிலூர் நகரில் கீரைகள் விற்கும் கடை வியாபாரம் செய்து வருகிறான். அதே கடையில் பழச்சாறு விற்பனைகளும் செய்கிறான். அவனுடைய கடையில் எந்த கலப்படமோ அல்லது தரமற்ற பழங்களை உபயோகிப்பதோ இருந்ததில்லை. இதனால் வாடிக்கையாளர்களிடம் அவன் கடைக்கு நல்ல பெயர் உண்டு. அதேபோல் கீரைகளை சிங்காரவேலன் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று வாங்கி வருவதால் நல்ல பசுமையாகவும், இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்டதாகவும் இருப்பதால், காலை வேளைகளில் மிகவும் சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும். இதனால் சித்தர்குடிலூரில் ‘சிங்காரவேலன் கீரை, பழச்சாறு கார்னர் ‘ என்ற அவனது கடை சற்று பிரசித்தம்.

சிங்காரவேலன் விவசாய இளங்கலை பட்டதாரி. அவன் நண்பர்கள் குடும்பம் மூலம் அறிமுகமான வள்ளியை விரும்பி இரண்டரை ஆண்டுகள் முன்பு திருமணம் புரிந்தான். வள்ளி வணிகவியல் கற்றவள். அவளுக்கு பட்டயக் கணக்காளர் ஆக வேண்டும் என்று ஆவலுடன் இருந்தாள். ஆனால் அவளுடைய மூத்த சகோதரன் குருநாதன், அவளை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி வந்தான். அவர்கள் இருவருக்கும் அன்னையான காந்திமதியும் அதையே கூறி வந்தாள். குருநாதன் பூவரசூர் நகரில் துணிக்கடை வணிகம் செய்கிறான். அவன் கடை வியாபாரம் மிகவும் நல்ல முறையில் நடந்து வருகிறது. தந்தை ஆரம்பித்து செய்து வந்ததை அவர் மறைவுக்குப் பின் சில புதிய அணுகுமுறைகள் ஏற்படுத்தி கடையை பிரபலப் படுத்தினான் குருநாதன். அதில் பலனும் கண்டான். நல்ல வீடு, தோட்டம், கார் வசதிகளுடன் கூடிய ஒரு வசதியான வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டான் குருநாதன்.

சிங்காரவேலன் அறிமுகம் குருநாதனுக்கு அவன் நண்பர்கள் வழியே ஏற்பட்டது. அவனுடைய நடவடிக்கைகள், வாழ்வு முறை குருநாதனுக்கு மிகவும் பிடித்துப் போகவே, வள்ளியை பெண் பார்க்க சொல்லி நல்லவிதமாக இருவருக்கும் மணமுடித்து வைத்தான். நன்றாகப் போய்க் கொண்டிருந்த உறவில் திடீரென இரண்டு வருடங்கள் முன்பு ஒரு சில வாக்குவாதங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விரிசல் விழுந்தது.குருநாதனுக்கு மிகவும் வேண்டிய நபர்களிடம் பழவகைகள் கொள்முதல் செய்யுமாறு சிங்காரவேலனுக்கு சிலரை சிபாரிசு செய்ய, அந்த நபர்களிடம் சிங்காரவேலன் வாங்கியபோது தரம் சரியில்லாமல், மேற்கொண்டு அவர்களிடம் வியாபாரம் செய்யாமல் நிறுத்தி விட்டான். அதை குருநாதனிடமும் கூறியதில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிதாகப் போய், இருவரும் பேச்சு வார்த்தைகள் இல்லாத அளவுக்கு ஆகிவிட்டது.

வள்ளியைத் திருமணம் செய்தபின் வாழ்க்கை நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அவளுக்கு பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க ஆசைப்பட்டதை அறிந்து, அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை அன்போடு செய்தான். அவளும் அவனை மிகவும் நேசித்து, அவனுடைய வணிக விஷயங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தாள்.

இருபது மாதங்கள் முன்பு வள்ளியும், சிங்காரவேலனும் இரு சக்கர வாகனத்தில், ஒரு நண்பர் வீட்டில் அழைப்பின் பேரில் மதிய உணவுக்குச் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, கார் ஒன்று இவர்கள் வண்டியைத் தட்டிவிட, இருவரும் வண்டியோடு பக்கத்தில் உள்ள பள்ளமான இடத்தில் விழுந்தனர். அவர்களின் நல்ல நேரம், இருவரும் தலைக்கவசம் அணிந்திருந்தது மட்டுமல்லாமல், விழுந்த இடத்தில் வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், காயங்களுடன் தப்பினர். வள்ளிக்கு இடக்கை பக்கம் சிறிய எலும்பு முறிவுபோல் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமாகி விட்டாள்.சிங்காரவேலனுக்கு உடல் முழுவதும் சிராய்ப்புகள், இருகைகளிலும், வலதுகால், தொடைப்பக்கத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். ஒரு மாதத்தில் இருவரும் நலமானார்கள்.

அந்த கார் ஓட்டியவர் சற்று தூரம் சென்று விட்டு திரும்பி பார்த்து பிறகு நிற்காமல் நேராக ஓட்டிச் சென்று விட்டார். இதைக் கண்ட அங்கிருந்த ஒரு கடைக்காரர் காரின் நம்பரை குறித்து வைத்துக் கொண்டு சிங்காரவேலனிடம் கொடுத்து வழக்கு பதியச் சொன்னார். அவனும் சிகிச்சை பெற்று வரும்போதே

அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்தான். இன்று வரை ஒரு பயனும் இல்லை. ஒரே ஒரு விசாரணை மட்டுமே நடைபெற்றது. சிங்காரவேலனின் நண்பனின் இன்னொரு நண்பர் வழக்கறிஞர் ரவி.அவரிடம் இதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி ஒப்படைத்து விட்டான் சிங்காரவேலன். இச்சமயத்தில் இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட குருநாதன் ‘ஏதேனும் உதவி வேண்டுமா, நான் செய்கிறேன் ‘ எனக்கூறி இவர்களைப் பார்க்க வந்தபோது, ‘ நன்றி மச்சான், எதுவும் வேண்டாம் ‘ என்று கறாராக சொல்லி விட்டான் சிங்காரவேலன்.

வாழ்க்கையும், வியாபாரமும் சிங்காரவேலனுக்கு எதிர்பார்த்தபடி போகவில்லை என்றாலும் ஓரளவிற்கு கஷ்டங்கள் அதிகம் இல்லாமல் நகர்ந்தது. சென்ற ஆறு மாதங்களாக வள்ளிக்கு மருத்துவச் செலவுகள் அதிகரித்த வண்ணம் இருந்தன. அவளுக்கு திடீரென ஒரு நாள் தண்ணீர் குடத்தை எடுக்கும்போது முதுகின் அடிப்பகுதியில் தாங்க முடியாத வலி ஏற்பட, அப்படியே உட்கார்ந்து விட்டாள். நல்ல வேளையாக சிங்காரவேலன் அப்போது வீட்டில் இருந்ததால் இதைப் பார்த்து ஓடி வந்து அவளை கைத்தாங்கலாக பிடித்து அழைத்து வந்து உட்காரச் செய்து விட்டு வீட்டு வேலைகளைச் செய்தான். பிறகு அவளுக்கு சுளுக்கு தைலங்கள் தடவிவிட்டு ‘எதுவும் செய்ய வேண்டாம், பேசாமல் படுத்திரு’ என்று சொல்லி விட்டு உணவு வகைகளை அவளருகே எடுத்து வைத்து விட்டு கடைக்குப் போனான். அங்கிருந்து ஒவ்வொரு அரைமணிக்கும் கைபேசி மூலம் அவள் நலத்தைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தான். இரண்டு நாட்கள் சரியாக இருப்பது போல் தோன்றிய முதுகு வலி மீண்டும் வந்து வள்ளியை துன்பப் படுத்தியது. இதற்காக அவளை சிங்காரவேலன் சிறந்த மருத்துவர்களிடம் காண்பித்து மருந்துகள் வாங்கிக் கொடுத்து வந்தான்.

அதன் தாக்கம் தொடர்ந்து இருந்ததால், சித்தர்குடிலூரில் உள்ள பெரிய மருத்துவ மனையான ‘ புஷ்பம் மருத்துவ மனை’ யில் எலும்பு சிகிச்சை நிபுணர் ராஜன் அவர்களிடம் வள்ளியை சிங்காரவேலன் அழைத்துச் சென்று எல்லாத் தகவல்களையும் கூறி அவளுக்கு இருக்கும் அந்த உடல் உபாதைக்கு நிரந்தர தீர்வாக வைத்தியம் செய்ய வேண்டினான். பல்வேறு பரிசோதனைகளைச் செய்த பின் ராஜன் சொன்னார். ” மிஸ்டர் சிங்காரவேலன், உங்க வைஃப் வள்ளிக்கு முதுகெலும்பின் அடிப்பகுதியில் உள்ள ஜவ்வு அகன்று நரம்புகளை அழுத்துவதால் ஏற்படுகிறது. இதை ‘ஹெர்னியேடட் டிஸ்க் ஆர் பல்ஜிங் டிஸ்க் என்று சொல்வோம். இதை சிறிய ஆப்பரேஷன் மூலம் நிச்சயம் சரி செய்ய முடியும். அதற்கு ட்யூபுலர் ரீட்ராக்ட் என்று பெயர். முதுகெலும்பின் கீழ்ப்பகுதியில் சிறிய துளையிட்டு எலும்புகளுக்கு பாதிப்பில்லாத மாதிரி செய்திடலாம். அவங்க இரண்டு அல்லது மூன்று

நாட்களுக்குள்ள டிஸ்சார்ஜ் செய்யற அளவிற்கு குணமாகிடுவாங்க.. அடுத்த பத்து நாளுக்கப்புறம் அவங்க நார்மலாக எல்லா வேலைகளையும் செய்ய முடியும்” என்றார். தொடர்ந்து ” அதுக்கு ஆப்பரேஷன் காஸ்ட் மட்டும் ஒண்ணேகால் லட்சம் ஆகும். அதுக்கப்புறம் ஆஸ்பத்திரி ரூம், மெடிசின்ஸ் சார்ஜ் எல்லாம் அனதர் இருபத்தைந்தாயிரம் அதிக பட்சமாக வச்சுக்கோங்க.ஒண்ணரை லட்சம் அளவில் மொத்த செலவு ஆகும். நீங்க என்னிக்கு சொல்றீங்களோ அப்போ ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிடலாம் ” என்றார்.

“ஓகே டாக்டர், அவளுக்கு குணமானா சரி. வரும் மாசம் முதல் வாரத்தில் வந்து உங்களைப் பார்த்து டேட் சொல்றேன். அன்னிக்கு அட்மிட் செஞ்சுடலாம் டாக்டர். தேங்க்ஸ் டாக்டர் ” என்று கூறி விட்டு வந்தான் சிங்காரவேலன்.

அவனுக்கு தெரியும், ஒண்ணரை லட்சம் என்றால் மற்ற பரிசோதனை செலவுகளைச் சேர்த்து இரண்டு லட்சத்துக்கு பில் வந்து விடும் என்று. அதனால் முதலில் பணத்துக்கு ஏற்பாடு செய்து விட்டு உடனே வள்ளியை மருத்துவ மனையில் சேர்த்து விடலாம் என முடிவு செய்தான்.

அடுத்த வாரம் முதல் பணத்தை எப்படி தயார் செய்வது என்பது பற்றி ஒவ்வொரு நிமிடமும் யோசனை செய்து கொண்டிருந்தான். வள்ளியிடம் இருந்த நகைகள் ஏற்கனவே அடகில் உள்ளன. கையில் அதிக பட்சமாக எல்லாவற்றையும் சேர்த்து ஒரு லட்சம்தான் தேறும். அதிலும் வியாபாரம் செய்வதற்கு வைத்திருக்கும் சுழற்சி பணத்தை எடுத்தால்தான் அது முடியும். அப்போது வியாபாரம் அடி வாங்கும். சென்ற வருடம் தனிநபர் கடன் வங்கியில் வாங்கி அவன் வசித்து வந்த பழைய வீட்டின் பராமரிப்பு, சில இடங்களில் பழுதுபார்த்தல் இச்செலவுகளுக்கு உபயோகித்துக் கொண்டான். அதனுடைய மாதத்தவணை, வண்டியின் மாதாந்திர தவணை, இதர வட்டிகள் இவைகளுக்கு கொடுத்தது போக மீதி இருப்பதில் சிங்காரவேலனும் வள்ளியும் குடும்பம் நடத்தி வந்தார்கள். ஆனால் இப்போது வந்திருப்பது போல் ஒரு பெரிய மருத்துவச் செலவு அதுவும் வள்ளிக்கு ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைக்காததால், என்ன செய்வதென்று புரியாமல் கவலையில் இருந்தார்கள்.

மறுநாள் வள்ளி சிங்காரவேலனிடம் “எனக்கு இப்போ இந்த ஆப்பரேஷன் செய்யணும்னு அர்ஜென்ட் இல்லீங்க, நம்ம நிலைமை இன்னும் ஒரு வருஷத்தில் நல்லா ஆயிடும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. பக்கத்து வீட்டு வேலம்மா பாட்டி சொன்னாங்க, மகிழங்குடி ஊர்ல ஒரு தைலம் கிடைக்குதாம். அதை வாங்கி அவங்க சொல்றபடி தேச்சு வந்தா மூணிலேர்ந்து நாலு மாசத்துக்குள்ள சரியாயிடுமாம்.செலவும் அதிகம் ஆகாது. அதை செஞ்சு பாத்தா என்னங்க சிங்கம்?” என்று கேட்டாள். அவனைச் செல்லமாக ‘சிங்கம்’ என்று அழைப்பாள் அவள்.

“வள்ளி, அதையும் செய்யலாம். அதுல தப்பு இல்லை. ஆனால் உடனடியா இந்த முதுகு வலித் தொல்லைலேர்ந்து நீ விடுபடணும்னா ஆப்பரேஷன்தான் முதல் வேலை. அதுக்கப்புறம் நீ அந்த எண்ணெய் எல்லாம் தடவிட்டு வேலைகளைப் பாக்கலாம். கவலைப்படாதே. பணம் எப்படியோ தயார் பண்ணிடறேன். இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு” என்று அவளுக்கு பதில் சொன்னான் சிங்காரவேலன்.

அடுத்த ஒரு வாரம் அல்ல பத்து நாட்கள் விரைந்து சென்றது மிக அவசர கதியில். சிங்காரவேலன் தன் நண்பர்கள் மூலமாகவும், அவனுக்கு கீரை, பழங்கள் இவைகளை மொத்த விலைக்கு விற்று வரும் ஒரு விவசாயி மூலமாகவும் தனியாக ஒரு லட்சம் தயார் செய்து விட்டு, மருத்துவர் ராஜனிடம் பேசினான். அவர் முன் பணமாக ஒரு லட்சம் கட்டினால் போதும் என்றும் மீதமுள்ள அத்தனை தொகையையும், மருத்துவ மனை விட்டு வீட்டுக்கு செல்லும் தினம் கட்டலாம் என்றும் மறுநாளே வள்ளியை சிகிச்சைக்காக சேர்த்திடலாம் என்றும் கூறினார்.

வள்ளி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை நல்லபடியாக நடந்து இன்று மூன்று நாட்கள் ஆகின்றன. மருத்துவர் ராஜன் அறிவுறுத்தல் பேரில் இன்னும் இரண்டு நாட்கள் அவர்கள் கவனிப்பில் இருந்து விட்டுப் போனால் விரைவில் பூரண குணம் ஆகிடுவாள் என்றதால் வள்ளி இன்னும் மருத்துவ மனையில் இருக்கிறாள்.

இதனிடையே வள்ளிக்கு இப்படி ஒரு மருத்துவ சிகிச்சை நடக்கிறது என்று அறிந்த குருநாதன் வந்து சிங்காரவேலன், வள்ளி இவர்களைப் பார்த்து விட்டு ” பணம் வேண்டும்னா என்னைக் கேள், சிங்காரவேல்!” என்று கூறினான்.

அவன் சென்றவுடன் “ஏங்க, அண்ணன்தான் தரேங்கறாரே, இந்த சமயத்தில் வாங்கிட்டா என்ன?” என்று கேட்க, “அந்த ஆள் கிட்டேருந்து ஒரு உதவியும் எனக்கு வேண்டாம். அதைத் தவிர வேறு ஏதாவது பேசு வள்ளி” என்று கோபத்துடன் சொன்னான் சிங்காரவேலன்.

அதன் பின்னர் மீதிப் பணத்திற்கு எப்படி, என்ன செய்யலாம் என்று தேநீர் குடித்துக் கொண்டே, நாளிதழைப் பார்த்தபடி இருந்தபோது ஒரு ஓரத்தில் வந்திருந்த செய்தி அவனை ஈர்த்தது. ‘ஏ டி எம் கொள்ளையடிக்கப்பட்டது. கருவேலனூர் நகரத்தின் ஏ.டி.எம் ஒன்றிலிருந்து பணம் முழுவதையும் எடுத்துச் சென்றனர். இயந்திரத்தின் பின்புறம் அறுத்து எடுத்துள்ளனர். சிசிடிவி கேமராவை மறைத்து விட்டனர்.’ இப்படி அந்த செய்தியை படித்தவுடன்,

சிங்காரவேலன் மனதில் விபரீத எண்ணம் தோன்றியது. ஏனெனில் இந்த ஒரு வாரத்தில் அவனுக்கு வேண்டிய பணத்தை சேர்க்கவோ அல்லது கடன் வாங்கவோ பெரும் முயற்சி செய்து வந்தது அத்தனையும் தோல்வியிலேயே முடிந்தன.

‘ எப்படியாவது ஒரு லட்சம் இல்லை அட்லீஸ்ட் எழுபத்தஞ்சாயிரம் கிடைச்சுதுன்னா கூட போதும். மேனேஜ் பண்ணிக்கலாம்னு நினைச்சா ஒண்ணுமே நடக்க மாட்டேங்குது. இந்த நேரத்தில வியாபாரமும் டல்லடிக்குது.பேசாமல் இதைச் செஞ்சா என்ன? நம்ப ஊர்ல இருக்கற குறிஞ்சி தெரு பக்கம் உள்ள ஏடிஎம்மை டார்கெட் பண்ணிடலாம். அந்த இடத்தில ஒன்பது மணிக்கு மேல ஒரு நாதியும் வர்றது இல்லை. செக்யூரிட்டியும் அங்கே சரியில்லை. இன்னிக்கு, நாளைக்கு ரெண்டு நாள் முழுசா நேரம் கிடைக்கும்போதெல்லாம் போய் சர்வே பண்ணிட்டு, நாளைக்கு விடிகாலையில் உடைச்சு பணத்தை எடுத்துடலாம். நம்ம கிட்ட எல்லா டூல்ஸும்தான் இருக்கே. தப்புதான். ஆனால் எல்லா பணத்தையும் எடுக்க வேண்டாம். நமக்கு வேண்டியதை விட கொஞ்சம் அதிகமா எடுத்துடுவோம். கடவுள் மன்னிப்பாரு நிச்சயம். ‘ என்று தனக்குத் தானே பேசிக் கொண்டான்.

பிறகு அவன் இலக்கு வைத்த தானியங்கி இயந்திரத்தை அடுத்த இரண்டு நாட்களில் அவ்வப்போது நோட்டம் விட்டு வந்தான். இரவு பனிரெண்டு மணிக்கு மேலாகவும் போய் இரண்டு, மூன்று மணி வரையிலும் இருந்தும் நோட்டமிட்டு அங்கு சந்தடியே இல்லை என்பதையும், காவலாளி அருகில் தூங்குவதில்லை வேறு பக்கம் உள்ள கடையின் வண்டிகள் நிறுத்தும் இடத்தில் உள்ள கட்டிலில் உறங்கி வருவதையும் அறிந்து கொண்டான்.

மறுநாள் தனக்கு கடையில் உதவியாக இருக்கும் கைலாசத்திடம் சிங்காரவேலன் “கைலாசம் , நாளைக்கு முழுக்க எனக்கு வேற வேலைகள் இருக்கறதால நீ கவனமா வியாபாரத்தை பாத்துக்க. கீரை கொள்முதலுக்கு அதிகாலைல நீயே போய்ட்டு வா.” என்று கூறினான். நம்பிக்கையான உதவியாளரான கைலாசம் உடனே ” சரி அண்ணா” என்றான். அவனுக்கு சிங்காரவேலன் நிலைமை தெரியும்.

பிறகு மருத்துவ மனைக்கு சென்று வள்ளிக்கு வேண்டிய உதவிகள் செய்து விட்டு, உணவு பொட்டலத்தை கொடுத்து விட்டு, வேலைகள் இருப்பதாகவும் மறுநாள் வருவதாகவும் வள்ளியிடமும், செவிலியரிடமும் கூறிவிட்டு வந்தான். வீட்டுக்கு வந்து சிங்காரவேலன் தானியங்கி இயந்திரத்தை உடைப்பதற்கோ அல்லது அறுப்பதற்கோ என்ன தேவைகள் என்பதை நன்கு திட்டமிட்டு சிந்தித்து, வேண்டிய கருவிகளை சேகரித்து வைத்தான். இருட்டும் வரை காத்திருந்து பத்து மணி வாக்கிலேயே போய் அந்த தானியங்கி இயந்திரம் இருக்கும் இடத்தின் அருகில் உள்ள பெரிய மரத்து இருட்டில் உட்கார்ந்து கொண்டு, அங்கே நடக்கும் நடவடிக்கைகள், மக்கள் நடமாட்டம் இவைகளைக் கண்காணிக்க தொடங்கினான். அப்போது மனதிற்குள் பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள்தான் இக்கதையின் தொடக்கத்தில் எழுதப்பட்டவை. மணி பதினொன்று ஆனது. காவலாளி சுற்றும்முற்றும் பார்த்து விட்டு பக்கத்து கடை கட்டிலில் தூங்கப் போய் விட்டான். சிங்காரவேலன் ‘ பரவாயில்லை.இன்னிக்கு நடமாட்டம் ரொம்பவே குறைஞ்சா இருக்கு.சீக்கிரமே வேலையை முடிச்சுடலாம்.அதுக்குள்ள கர்சீப்ல லேசா தடவி வச்சிருக்கற தூக்க தைலத்தை வாட்ச்மேன் மூக்கு கிட்ட வச்சு அவரை இன்னும் அசந்து தூங்கப் பண்ணிடலாம் ‘ என்று சொல்லிக் கொண்டே காவலாளி படுத்திருந்த கட்டிலுக்கு அருகில் சத்தமில்லாமல் சென்றான். அவர் நேர் முகத்தோடு அண்ணாந்து படுத்திருந்ததால் சிங்காரவேலனுக்கு வேலை எளிதாகி விட்டது. அவன் அவருடைய சுவாசத்துவாரங்களின் மிக நெருக்கமாக கைக்குட்டை மருந்தை, மூச்சு உள்ளிழுக்கும் போது வைத்தான். ஒரு நெடிய மூச்சிழுப்பில் அது போதுமானதாக இருந்தது அவரை அசந்து தூங்க வைக்க. பின்னர் சிங்காரவேலன் இயந்திரத்திற்கு பின்புறம் இருளாக இருந்த இடத்தில் மறைந்து உட்கார்ந்து நேரத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தான்.

மணி பதினொன்று முப்பத்தைந்து ஆன போது திடீரென தானியங்கி இயந்திரம் முன்புறம் யாரோ வருவதை உணர்ந்து சிங்காரவேலன் கிடைத்த இடைவெளியில் யார் என்று பார்த்தான். வந்தவர் நின்று தான் மடியில் கொண்டு வந்திருந்த பணத்தை எண்ணிக் கொண்டிருந்தார். கலைந்த நரைத்த தலைமுடிகள், பத்து நாட்கள் வளர்ந்த தாடி, கையில் ஒரு சாக்கு மூட்டைக்கட்டு, இன்னொரு கையில் கட்டைப்பை, இந்த கோலத்தில் இருந்தவரை சிங்காரவேலனுக்கு எங்கோ பார்த்தது போல் இருந்தது. இதைத் தொடர்ந்து ஒரு நிமிடம் சென்றபின் ஒரு பெண்மணி வந்தாள். அவள் அம்மன் கோவில் அருகே பூ விற்கும் பொன்னம்மாள் என்பதை அறிந்து கொண்டான் சிங்காரவேலன். அவர்கள் இருவரும் பேசத் தொடங்கினர்.

“என்னாது, சுப்பையா தாத்தா, இந்நேரத்தில இங்க வந்து நிக்கறீங்க? பணம் எடுத்துட்டு போகவா? கார்டு கையில இருக்குல்ல?” என்று அந்த வயதானவரைப் பார்த்து கேட்டாள் பொன்னம்மாள்.

“இல்லை புள்ள, பணம் இருவத்து நாலாயிரம் டெபாசிட் செய்ய வந்தேன். எல்லாம் நான் பிளாஸ்டிக் பை, குப்பைல மக்கள் வீசிட்டுப் போன பிளாஸ்டிக் டப்பா, பாட்டிலு, இரும்பு சாமானுங்க எல்லாத்தையும் வித்து இந்த நாப்பது நாள்ல சேத்தது, அதுக்கு முன்னாடி கொஞ்சம் சேத்து வச்சிருந்தது

பொன்னம்மா. உனக்குதான் தெரியுமே, என் பேரன் சேகரு ஆறு வயசுலேர்ந்து, அவனைப் பெத்தவங்க போனதிலேர்ந்து, அவன் இப்ப பெரிய காலேஜ் படிப்பு படிச்சு முடிச்சுட்டான் புள்ள. இன்னும் நாலு நாள்ல பட்டம் எல்லாம் தரப்போறாங்க. அவன் அங்க அல்லிக்கண்ணூர் டவுன்ல இருந்து நல்ல வேலை தேடிட்டு இருக்கான் புள்ள.இப்பத்திக்கு ஏதோ இஸ்டோர்ல பார்ட் டைமா வேலை பாக்குறான்.அவன் ரெண்டு வேளை சாப்பிட வழி தேடி வச்சிருக்கான்.

பட்டம் வாங்கறதுக்கு போகலேன்னாலும் பரவாயில்லை தாத்தா. வீட்டுக்கு வந்துடும் அதெல்லாம்னான். நாந்தான் சொன்னேன். நாங்க எல்லாரும்தான் படிக்காம இருக்கும்படியா ஆயிடுச்சு. உங்கப்பனும் இஸ்கூல் படிச்சு மெக்கானிக் தொழில்ல போனான். உங்கம்மாளும் பத்தாம் கிளாஸுக்கு மேல படிக்கலை. நீ பெரிய படிப்பு படிச்சிருக்கே.கவுர்னரு கையால பட்டம் வாங்குறதை போட்டோ புடிச்சு வச்சு நான் பாக்கணும்டா இவ்வளவு தூரம் உன்னை நல்லா வளத்து இந்த அளவுக்கு நல்ல பையானா பாக்குற சந்தோஷத்தோட அந்த படத்தை பாத்து இன்னும் ஆனந்தப்படுவேண்டா ராசான்னு சொன்னேன்.

அவன் சொன்னான், தாத்தா அங்க போறதுக்கு நல்ல ட்ரஸ் இல்லை தாத்தா. அதோட நான் இங்க பார்ட் டைம்ல வேலை செய்ற இடத்தில, கட்டட வேலை நடக்கறதால பத்து நாளைக்கு மேல வேலை தரவை.இந்த மாசம் சம்பளமும் கொஞ்சமாத்தான் கெடைக்கும். இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறம்தான் தொடர்ந்து வேலை தருவாங்கன்னான். அது வரைக்கும் மாசத்துல பதினஞ்சு நாள்தான் வேலை இருக்கும்னான்.நீங்க கஷ்டப்பட்டு ஏதும் பணம் அனுப்ப வேண்டாம். நான் பாத்துக்கறேன் அப்டின்னான்.அவன் சொல்லி ஒண்ணரை மாசம் ஆயிடுச்சு. எனக்கு மனசு கேக்கலை புள்ள.

அன்னிக்கு சபதம் எடுத்துகிட்ட மாதிரி நான் தினமும் சேகரிக்கறதை விட டபுள் பங்கா பிளாஸ்டிக் பொருளையும், இரும்பு சாமான்களையும் சேகரிக்க ஆரம்பிச்சேன் புள்ள.

வெறி புடிச்ச மாதிரி நம்ம ஊர்லேர்ந்து ரோடு வழியா சுமாரா இருவது, இருவத்தஞ்சு கிலோமீட்டர் தொலைவு நடந்து சேத்தேன். சாப்பாடெல்லாம் ஒரு வேளைதான். நான் போற வழில ஒரு அம்மணி மெஸ் இருக்கு. மத்தியானம் ஃபுல்லா சாப்ட்டுக்குவேன். மத்த நேரம் பன்னு, இல்லேன்னா வடை டீ இது மட்டுந்தான் புள்ள. எப்படியோ சேத்ததை எல்லாத்தையும் கடையங்காட்டுல இருக்கற பெரிய இஸ்க்ராப் கடேல கொண்டு போட்டேன். மூணு நாளுக்கு ஒரு மொறை நடந்து போய்க் கொடுத்து எடை போட்டு எவ்ளோ ஆவுதுன்னு கணக்கு பண்ணிட்டு கடேசில வாங்கிக்கறேன்னு அந்த முதலாளி மனோகரு கிட்ட சொல்லி இன்னி வரை சேந்த இருபதாயிரம் ரூபாய வாங்கிட்டு, எங்கிட்ட முந்தி வச்சிருந்த பணம் நாலாயிரத்தையும் சேத்து கொண்டாந்து மெஷின்ல சேகரு அக்கவுண்ட்ல போட்டுடலாம்னு வந்தேன்.

சேகருக்கு போனைப்போட்டு சொல்றப்போ இருவதாயிரம் போதும் தாத்தான்னான். பாவம் வயசுப் பையன், வேற ஏதாவது செலவு இருந்தா கஷ்டப்படுவான்னு சேத்து அனுப்பறேண்டா, நீ கையில வச்சுக்கோன்னு சொல்லிட்டேன் பொன்னம்மா.”

“நல்லா செஞ்சீங்க சுப்பையா தாத்தா, சேகரு நல்ல பையன். அவனைப் பெத்தவங்க அந்த ரோடு விபத்துல செத்தது வயத்தெரிச்சல்.என்னால அதை மறக்கவே முடியாது. சேகர் தம்பிய நல்ல பையனா வளத்து கொண்டு வந்த நீங்க கடவுள் மாதிரி சுப்பையா தாத்தா. அது சரி, இந்நேரத்துக்கு ஏன் வந்திருக்கீங்க தாத்தா?” என்று பொன்னம்மாள் கேட்டாள்.

“அதுவா பொன்னம்மா, கடையங்காட்டுக்கு மனோகர் கிட்ட பணம் வாங்கப் போகும் போது லேட் ஆயிடுச்சு. அவரு எங்கயோ வெளியே போய்ட்டு வரதுக்கு டைம் ஆகிடுச்சு. அப்பறம் பணம் வாங்கிட்டு இருட்டுல நடந்து வரவேண்டாம்னுட்டு நம்ம ஊருக்கு வர்ற கடைசி பஸ்ல வந்தேன் புள்ள. அதான் லேட்டு .அது சரி, நீ இந்த ஊர்லயே இருந்துட்டு ஏன் இருட்டுல இந்நேரத்துக்கு வந்திருக்கே? உன் பொண்ணு எப்டி இருக்கு புள்ள? இஸ்கூல் படிப்பு முடிஞ்சுடுச்சா? எங்க இருக்கா?” என்று சுப்பையா கேட்டார்.

“தாத்தா, இன்னிக்கு அம்மன் கோவில் திருவிழால்ல, கூட்டம் நிறைய வந்துச்சா, எனக்கும் வியாபாரம் நல்லா இருந்துச்சு. எஸ்ட்ரா பூவெல்லாம் வாங்கி கட்டி வச்சிருந்தேன். அத்தனையும் வித்துட்டு அந்த பணம், வூட்ல இருந்த பணம் எல்லாம் சேத்து பன்னண்டாயிரத்தையும் எம் பொண்ணு மேகலையும் நானும் வச்சிருக்ற அக்கவுண்ட்ல போட்டா நாளைக்கு அவ எடுத்துப்பா.

மேகலை நல்லா இருக்கா தாத்தா. பள்ளிக்கூடம் படிப்பு முடிஞ்சு கடையங்காடு காலேஜ்லதான் சேந்திருக்கா. நல்ல மார்க் வாங்கிருந்தா. புஸ்தகம், ட்ரஸ், நல்ல செருப்பு எல்லாம் வாங்க பணம் வேணும்னா. அவகிட்டயும் புது ட்ரஸ் எதுவும் இல்லே. இந்த திருவிழா வியாபாரம் முடிஞ்சதும் பணம் அனுப்பறேன்னு சொல்லிருந்தேன்.

ஆஸ்டல் எல்லாம் நமக்கு கட்டுப்படி ஆகாதுன்னு கடையங்காட்டுல இருக்கற என் வீட்டுக்காரருக்கு பெரியப்பா பையன், இவருக்கு மூத்தவரு, அவரு கிட்ட கேட்டப்போ, தாராளமா நம்ம வீட்டுலேர்ந்து காலேஜ்

போவட்டும்னு சந்தோஷமா சொல்லிட்டாரு. ஏதோ என்னால முடிஞ்சதை அவ தங்கறதுக்கு பணம் தரேன்னு இவரு சொன்னப்ப, அதெல்லாம் வேணாம். சும்மா இருடா நீ. என் பொண்ணு பெரியவ அந்த காலேஜ் தான் போறா. அவளுக்கு இன்னும் ரெண்டு வருஷம் இருக்கு படிப்பு. அவளுக்கும் துணையா இருக்கும். பணம்னு ஏதாவது பேசி கோபத்தை கிளறாதேன்னுட்டாரு.

அதை டெபாசிட் செய்யத்தான் வந்தேன் தாத்தா. ஏன்னா இன்னும் ரெண்டு நாளில காலேஜ் போவணும். நாளைக்கு அவ போய் ஏதாவது புது ட்ரஸ் வாங்கிக்க வசதியா இருக்கும்னு தாத்தா” என்றாள் பொன்னம்மாள்.

“சரியா சொன்னே புள்ள. என் காலம் இன்னும் கொஞ்ச நாளு தான். இந்த பயலுக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சுன்னா போதும்.அது போலத்தான் உனக்கும். மேகலைக்கு நல்லா அமைஞ்சிடும் எல்லாம். கவலைப்படாதே. அந்த அம்மன்தான் நமக்கு துணையா இருந்து வரா.” என்றார் சுப்பையா.

“ஆமாம் தாத்தா. சரி உங்க பணத்தை கொடுங்க நான் டெபாசிட் பண்ணித்தரேன் அப்பறமா என்னோடத போடறேன்.” என்ற பொன்னம்மாளிடம் சுப்பையா இருபத்தி நாலாயிரம் ரூபாயைக் கொடுத்து அக்கவுண்ட் நம்பரையும் கொடுத்து, வங்கி அட்டையை தந்தார்.

பொன்னம்மாள் அதைப் பிரித்து மூன்று தடவையாக கணக்கில் வைப்பு செய்து சுப்பையாவிடம் காண்பித்து விவரம் சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பணத்தையும் இயந்திரம் மூலம் கணக்கில் வைப்பு செய்தாள். பிறகு இருவரும் வீடு நோக்கி நடந்தார்கள்.

இவை அனைத்தையும் மறைந்து நின்றிருந்த சிங்காரவேலன் கவனித்துக் கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவர்களது உரையாடல்கள் அவன் மனதில் பதிந்ததை புரிந்து கொண்டான். தனக்குள் ஆனால் சற்று சத்தமாக சிங்காரவேலன் பேசிக் கொண்டான்.” சின்ன வயசுலயே அப்பா அம்மாவை இழந்த தன்னோடு பேரனை நல்லா வளத்து படிக்க வச்சு ஒரு லெவலுக்கு கொண்டு வந்திருக்காரு ஒரு கிழவர், அதுவும் ரோடு ரோடா அலைஞ்சு திரிஞ்சு பிளாஸ்டிக், இரும்பு குப்பையெல்லாம் சேகரித்து வித்து, பூ கட்டி வித்து அதுல வர்ற பணத்தில தன் பொண்ணை நல்லா படிக்க வைக்க தினமும் பாடுபடற தாய் இவங்க எல்லாரும் தான் கஷ்டப்பட்டு சேத்த பணத்தை இந்த எந்திரத்தை நம்பி டெபாசிட் பண்றாங்க. இன்னும் இவங்களைப் போல நமக்கு தெரியாத எத்தனையோ கஷ்டப்பட்டு உழைக்கிற ஆளுங்க எல்லாம் ஏதோ ஒரு அவசிய அவசரத்துக்காக இதுல பணத்தை போட்டிருப்பாங்க. சேச்சே..மனசாட்சியே இல்லாமல் அதைப் போய் உடைச்சு எடுத்து நம்ம கஷ்டத்தை தீர்க்கணுமா? ரொம்ப கேவலமான இந்த புத்தியை

நான் மாத்திக்கணும். நடக்கிறது நடக்கட்டும். நாளைக்கு போய் இன்னும் ரெண்டு பேர் கிட்ட பணம் கடன் கேக்கலாம். இல்லாம போனா குருநாதன் கிட்டயே கடனா வாங்கிக்கலாம். இதைவிட அது ஒண்ணும் மோசமில்ல.” என்று எழுந்து விறுவிறுவென வீட்டுக்கு சென்று நிம்மதியாக உறங்கினான்.

மறுநாள் காலை சிங்காரவேலன் தாமதமாகத்தான் எழுந்தான். காஃபியை குடித்து விட்டு மருத்துவ மனைக்கு போவதற்கு தயாரானான். மணி பத்தாகி விட்டது. அப்போது வங்கி மேலாளர் அவனை கைபேசி மூலம் அழைத்தார். ‘ இவர் எதுக்கு கூப்டறார், நாமதான் வட்டி இ எம் ஐ கரெக்டா கட்டிட்டமே’ என்று நினைத்து” ஹலோ சார்” என்றான். மறுமுனையில் இருந்து அவர் ” மிஸ்டர் சிங்காரவேலன், நீங்க ஒரு வருஷம் முன்னாடி உங்களோட சிறுதொழில் விரிவு படுத்த லோன் கேட்டு அப்ளை பண்ணிருந்தீங்க, நீங்க இ எம் ஐ இந்த பதினஞ்சு மாசமா கரெக்டா பே பண்றதைப் பாத்து உங்களுக்கு பத்து லட்சம் வரைக்கும் லோனுக்கு அப்ரூவல் வந்திருக்கு. இன்னிக்கு வந்து டாக்குமெண்ட்ல சைன் பண்ணீங்கன்னா நாளை அல்லது மறுநாள் உங்க கடை பேர்ல பணம் கிரெடிட் பண்ணிடுவோம். முதல் மூணு மாசத்துக்கு பின்னால் நீங்க கட்ட ஆரம்பிக்கலாம். ஒரு பதினோரு மணிக்கு வர்றீங்களா?” என்று கேட்டார்.

சிங்காரவேலன் சந்தோஷத்துடன் ” நிச்சயம் வரேன் சார்! ” என்று ஃபோனை வைத்து விட்டு, தெளிவான நிறைவான மனதோடு மருத்துவ மனைக்கு கிளம்பினான். இவனைப் பார்த்து வள்ளி ” இன்னிக்கே போகலாம். எனக்கு அல்மோஸ்ட் சரியாயிடுச்சு.” என்றாள். ” இன்னும் ஒரே ஒரு நாள் வள்ளி.அவ்வளவுதான். நம்ம கஷ்டத்துக்கு விடிவு வந்தாச்சு” என்று கூறி வங்கி விஷயத்தை சொன்னான். வள்ளி சந்தோஷத்துடன் அவன் கையை அழுத்தி பிடித்தாள்.

அதற்குள் குருநாதன் மீண்டும் தன் சகோதரியைப் பார்க்க வந்தபோது, சிங்காரவேலன் ‘ நாம் இனிமேல் இந்த வெட்டி வீராப்பு வச்சுக்கக் கூடாது ‘ என்று மனதில் கூறியபடி ” மச்சான், இன்னிக்கு வங்கி என் லோன் அப்ரூவல் பத்தி கன்ஃபர்ம் பண்ணாங்க. பதினோரு மணிக்கு போகணும். இன்னும் ரெண்டு நாள்ல கிரெடிட் பண்ணிடுவாங்க.”‘என்று சொல்ல குருநாதன் “எனக்கு தெரியும் மாப்ள,நீ கரெக்டா பணம் மாசா மாசம் கட்டிட்டு வரதை அவங்களும் நோட் பண்ணி தருவாங்கன்னு நம்பிக்கை இருந்தது. ரொம்ப நல்ல விஷயம் இது சிங்காரம்.வாழ்த்துகள் உனக்கு” என்றான் குருநாதன்.

“தேங்க்ஸ் மச்சான்.பணம் வந்தப்பறம்தான் ஹாஸ்பிடல் பில் செட்டில் பண்ண முடியும். இன்னும் ரெண்டு நாள் வள்ளி இங்கதான் இருக்கணும் மச்சான் ” என்றான் சிங்காரவேலன்.

“நீ வேண்டாம்னு சொல்லுவே மாப்ள, உனக்கு அப்ஜெக்சன் இல்லேன்னா நான் இன்னிக்கு ஈவினிங் பில் செட்டில் செஞ்சுட்டு வள்ளிய வீட்டுக்கு கூட்டிப்போயிடறேன். நீ பணம் வந்தவுடனே எனக்கு திருப்பி கொடு. இல்லே, ரெண்டு மாசம் கழிச்சு வேணாலும் கொடு.நீ என்ன சொல்ற?” என்று கேட்டான் குருநாதன்.

சிறிது யோசித்த சிங்காரவேலன் “சரி மச்சான், அதுவும் நல்லதுதான். நீ அப்படியே செய். நான் போய் பேங்குல மேனேஜரை மீட் பண்ணி டாக்குமெண்ட் எல்லாம் சைன் போட்டுட்டு வரேன். உனக்கு ஒரு மாசத்துல பணத்தை திருப்பி தந்துடறேன் ” என்று சொன்னான். குருநாதனுக்குஒரே ஆச்சரியம். ‘ ஒரே நாள்ல இவன் ஆட்டிட்யூட் மாறிடுச்சே, எல்லாம் நல்லதுக்குதான் ‘ என்று சொல்லிக் கொண்டு” சரிப்பா, நீ போ, நான் பாத்துக்கிறேன் ” என்றான்.

சிங்காரவேலன் வங்கிக்கு சென்று அவர்கள் கேட்ட ஆவணங்களைக் கொடுத்து விட்டு, அவர்கள் கூறிய ஆவணங்களில் கையெழுத்திட்டான். வங்கி மேலாளர் அதிக பட்சமாக நாளை மறுநாள் பணம் கிடைக்கும் என்றார். அவருக்கு நன்றி கூறி சிங்காரவேலன் வெளியே வந்தபோது மணி இரண்டாகி விட்டது. அப்போது வழக்கறிஞர் ரவி கூப்பிட்டார். “ஹலோ சிங்காரவேலன், குட் நியூஸ். கோர்ட் தீர்ப்பு இப்பதான் வந்தது. உங்க மேல மோதின கார் ஓனர் உங்களுக்கு நஷ்ட ஈடாக அஞ்சு லட்சம் ரூபாயும், வழக்கு செலவுகளுக்கு இருபதாயிரமும், ஏற்பட்ட மனக்கஷ்டம், வைத்திய செலவுகளுக்கு அறுபதாயிரம் ரூபாயும் நாளை மறுநாளுக்குள்ள கட்டணும்னு சொல்லிட்டாங்க. வாழ்த்துகள். நீங்க இன்னைக்கு ஈவினிங் இல்லை நாளை மார்னிங் வந்து சில ஃபைல்ல சைன் பண்ணனும். நீங்க வரும்போது என்னை கூப்டுங்க. உங்க வைஃப் இப்ப எப்படி இருக்காங்க?” என்றார்.

சிங்காரவேலனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.அவன் கடவுளை அழைத்து பேசினான். ‘ஆண்டவனே, நல்லதை நினைச்சு செஞ்சா நல்லது வர மாதிரி இந்த வாழ்க்கையையும், மனசையும் தானியங்கி எந்திரமாத்தான் படைச்சிருக்கீங்களோ நீங்க. நன்றி கடவுளே நன்றி.சுப்பையா தாத்தாவையும், பொன்னம்மாள் அக்காவையும் அங்கே அனுப்பி வச்சதுக்கு நன்றி’ என்று கரம் கூப்பினான்.

ரா.நீலமேகம் பெயர்: நீலமேகம். வயது 71. பூர்வீகம்: திருவாரூர் மாவட்டம், கீழமணலி என்ற கிராமம். தந்தை: ராமஸ்வாமி அய்யங்கார். கிராமத்து கணக்கராக இருந்தவர். தாயார்: ஜானகி படிப்பு: பி.எஸ்சி (இயற்பியல்), திருச்சி தேசியக் கல்லூரி. வேலை தேடி மும்பைக்கு சென்று இருபத்தைந்து ஆண்டுகள் பல தனியார் கப்பல் துறை அலுவலகங்களில் பணிசெய்து கோயம்புத்தூர் இடமாற்றம். உலகின் முதல் பெரிய கப்பல் பணியகமான, 'மெர்ஸ்க் லைன்' (Maersk Line) கோவை அலுவலகத்தில் பொது மேலாளராக…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *