கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 3, 2026
பார்வையிட்டோர்:
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒரு காட்டிலே ஒரு முனிவர் தவஞ்செய்து கொண் டிருந்தார். அவர் மிகுந்த மனவுறுதி படைத்தவர். அளவற்ற பெருமையுடையவர். சீரிய நூல்களைக் கற்று மெய்யறிவு கைவரப் பெற்றவர். அவர் ஆண்டுக் கணக் காகத் தவஞ்செய்து கொண்டிருப்பார். பல ஆண்டுக்கு ஒருமுறை எப்பொழுதாவது தவத்தில் இருந்து எழு வார். அப்பொழுது அவருக்குப் பசியெழும். எங்காவது சென்று ஒருவேளை சாப்பிட்டுவிட்டு மீண்டும் வந்து தவத்தில் அமர்ந்து விடுவார். 

ஓராண்டில் முனிவர் தவத்தைவிட்டு எழுந்தார். வயிற்றுப்பசி மிகுதியாக இருந்தது. உணவுக்காக வெளியே புறப்பட்டார். அப்பொழுது மழையில்லாமல் எங்கும் கொடிய பஞ்சம் ஏற்பட்டிருந்தது. அதனால் முனிவருக்குச் சாப்பாடு எங்கும் அகப்படவில்லை. பல விடங்களினுஞ் சுற்றிப்பார்த்தார்; ஓரிடத்தில் ஒரு நாய் செத்துக்கிடந்தது. பசிக் கொடுமையால் கலங்கிய முனிவர் அந்த நாயின் ஊனை உண்ணத் துணிந்தார். 

முனிவருடைய தவப் பெருமை, குலப்பெருமை, ஞானப் பெருமை முதலிய எல்லாப் பெருமைகளும் வயிற்றுப் பசிக்குமுன் பறந்துபோய்விட்டன. முனிவ ருடைய செய்கையைப் பார்த்து இந்திரன் மழை பொழியச் செய்தான். பிறகு மழை பொழிந்து நாடு செழித்தது. வயிற்றுப்பசியின் கொடுமை இத்தகைய தென்பதை உலகம் இம் முனிவரிடமிருந்து நன்கு உணர்ந்து கொண்டது. 

“மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை 
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை – தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.” 

(உரை) பசிவந்திட – பசிநோய் வந்தால், மானம் – மானமும், குலம் – குடிப்பிறப்பும், கல்வி – கல்வியறிவும், வண்மை – ஈகையும், அறிவுடைமை – அறிவுடைமையும், தானம்- தானமும், தவம் – தவமும், உயர்ச்சி – உயர்வும், தாளாண்மை தொழின்முயற்சியும், தேனின் கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் – தேன்போலும் இனீமை பொருந்திய சொல்லை யுடைய மங்கையர்மேல் காதல் கொள்ளுதலும், (ஆகிய) பத்தும் பறந்து போம்-பத்தும் விரைவாக நீங்கிப்போகும். 

(கருத்து.) வயிற்றுப் பசிக்குமுன் எல்லாப் பெருமைகளும் அழிந்து ஒழியும். 

– நல்வழி விளக்கக் கதைகள், முதற் பதிப்பு: நவம்பர் 1956, திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *