காயமே இது பொய்யடா!
கதையாசிரியர்: சிங்கை மா.இளங்கண்ணன்
தின/வார இதழ்: தமிழ் முரசு
கதைத்தொகுப்பு:
குடும்பம்
இணைய வெளியீடு: November 16, 2026 முதற்பதிப்பு: 2001
பார்வைகள்: 46
(2001ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நெஞ்சு எரிகிறது. கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
‘ஆ’ வென்று கத்திவிடுகிறேன்! மருத்துவர் ஒடி வருகின்றார். அவர் தம் திறமையைக் காட்டி உடனுதவி செய்கிறார்;
உயிர்வளி செலுத்துகிறார். ஆனால் அவரால் உயிராகிய என்னைப் பிடித்து நிறுத்தமுடிய வில்லையே! விதியை வெல்ல முடியுமா?
பொன்னம்பலத்தின் உடம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த உயிராகிய நான் அந்த உடலை விட்டுப் பிரிந்துவிடுகிறேன். அவர் உடலில் எந்தப் பகுதியில் நான் இருந்தேன்? அது எனக்குத் தெரியாது!
“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக்
கொண்டுவந்தான் ஒரு தோண்டி அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி.”
ஆம்! நான் கொண்டு வந்த தோண்டியை உடைத்துவிடுகிறேன்! பொன்னம்பலத்தின் உடலில் இருந்து காற்றில் பறந்துவிடுகிறேன்! இப்போது யார் கண்ணுக்கும் புலப்படாமல் உலகை வலம் வருகிறேன்.
நான் குடியிருந்த உடல் இப்போது “பிணம்” என்ற பெயர் பெறுகிறது. அந்தச் சடலத்திற்கு இப்போது கவலை இல்லை. துன்பம் இல்லை! துயரமில்லை! முதுமையுற்ற உடலில் எத்தனை நோய்கள், எவ்வளவு துன்பம். அப்பப்பா சொல்லி முடியாது!
அத்தனையும் தாங்கிக் கொண்டு அந்த உடலின் நெஞ்சுக் கூட்டிலிருந்து நான் வெளியேறி வந்ததும் அந்தக் கூடு குளிர்ந்து விடுகிறது! குளிர்ந்த கூட்டைக் கட்டிப் பிடித்துக் கொண்டு உற்றார் உறவினர் கதறி அழுகின்றனர்.
“உங்களுக்கு முன்னால் பொட்டோடும் பூவோடும் போய்ச் சேர்ந்திடணும்னு ஆசைப்பட்டேனே! எனக்கு முன்னால் நீங்கள் போய்ச் சேந்திட்டீங்களே!” என்று மனைவி மார்பில் அடித்துக்கொண்டு கதறி அழுகிறாள்.
அவளுடன் நாற்பது ஆண்டு வாழ்ந்த கட்டையாச்சே!
மகனும், மகளும் கால் மாட்டில் உட்கார்ந்து கண்ணீர் வடிக்கின்றனர். பெற்றுப் பேணிக் காத்து, கல்வி கொடுத்தவனாச்சே! இரத்தத்தின் இரத்தமாச்சே! இரத்தக் கண்ணீர் சிந்துகின்றனர். கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவுகூர்ந்துத் தேம்பித்தேம்பி அழுகின்றனர்.
துக்கம் கண்டுகொள்ள வந்தவர்கள் நெஞ்சமும் நெகிழ்கிறது. சிலர் ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டோர் வருவாரோ” என்று தத்துவம் பேசி பிள்ளைகளுக்கு ஆறுதல் கூறுகின்றனர்.
உறவினர் முகத்திலும், நெருங்கிய நண்பர்கள் முகத்திலும் ஈயே ஆடவில்லை. பழைய நினைவுகள் அவர்கள் உள்ளத்தில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன!.
“பொன்னம்பலத்தைப் போல் ஒரு ஆளைப் பார்க்கவே முடியாதுங்க! நேர்மையானவர்! நாணயமானவர்! நல்லதையே செய்வார். நல்லதையே நினைப்பார். யாரையும் வாய்த் துடுக்காகப் பேசமாட்டார். அதேபோல் இவர் யார் பல்லிலேயும் இருக்க மாட்டார்.” என்றெல்லாம் சிலர் நற்சான்றிதழ் வழங்குகின்றனர். பாராட்டிப் புகழ்கின்றனர்.
“என்னங்க வாழ்க்கை? நேத்து இருந்தவர் இன்னிக்கு இல்லை. இரண்டு நாளைக்கு முன்னாள் என் கூட நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தார். இதோ இன்னிக்குக் கண்ணை மூடிட்டாரு. எல்லாம் காத்து உடம்பில் ஒட்டிக்கிட்டு இருக்கிற வரைக்கும் தான் ஆட்டமெல்லாம். காத்துப் போயிட்டா எல்லாம் போயிடும்” என்று ஒருவர் தத்துவமொழிகள் உதிர்க்கின்றார்.
எனக்குச் சிரிப்பு வருகிறது! சிரித்தபடி அங்குமிங்குமாக வலசை வருகிறேன்.
எரியூட்டுவதற்கு நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.
“ஐந்து மணிக்கெல்லாம் சுடலையில் இருக்கணும்; மணியாச்சு” என்று ஒருவர் விரைவுபடுத்துகிறார். அவர் தூண்டியதும் நாலு பேர் வருகின்றனர்.
‘எதற்கும் நாலுபேர் வேண்டும்’ என்று இதற்குத்தான் சொல்கின்றனரோ! சடலத்தின் தலையில் எண்ணெய் தொட்டு வைப்போர் வைத்ததும் அதை நீராட்டிப் பிணப்பெட்டியில் கிடத்திப் புத்தாடை புனைகின்றனர்! பூமாலை அணிவிக்கின்றனர்!
‘காற்றோட்டமாகவும், அமைதியாகவும் இருக்கணும்’ என்று பார்த்து வாங்கிய வீட்டிற்குள் இருந்து சடலத்தை நாலு பேர் வெளியே கொண்டு வருகின்றனர்.
சடலம் வெளியே கொண்டுவரப்பட்டதும், “என்னை விட்டுப்போறீங்களே!” என்று மனைவி மார்பில் அடித்துக் கொண்டு அழுது புரளுகிறாள்! ஒப்பாரி வைத்து ஓலமிடுகிறாள்.
“அப்பா… எங்களை விட்டுவிட்டுப் போறீங்களே அப்பா!” என்று பிள்ளைகள் புலம்புகின்றனர். கத்திக் கரைகின்றனர். பார்த்துக் கொண்டு நின்றோர் மனம் நெகிழ்கிறது.
பிணப் பெட்டியைப் பிண வண்டியில் ஏற்றியதும் பேரப்பிள்ளைகள் நெய் பந்தம் பிடிக்க மனைவி மக்கள் உடன் பிறப்புக்கள் எல்லாரும் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதபடி பிண வண்டியை வலம் வருகின்றனர்! மனைவிக்கு மயக்கமே வந்துவிடுகிறது.
அவளுடன் உடலும் உயிருமாக வாழ்ந்த கட்டையை கைப்பிடித்த கணவனை எரியூட்டுவதற்காகச் சுடலைக்கு எடுத்துச் செல்வதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நெஞ்சு பொறுக்கவில்லை. அழுகிறாள்.
பிணவண்டி நகர்கிறது! வண்டியைப் போக விடாமல் எதிரே நின்று மனைவி மறிக்கிறாள். சிலர் அவளைப் பிடித்துக் கொள்கின்றனர்.
பிணவண்டிக்குக் கொஞ்சம கூட இரக்கமில்லை! இரக்கமற்ற இயந்திரம் விரைகிறது.
எல்லாரும் சுடலைக் கூடத்தை அடைகின்றனர். தேவாரப்பாடல் மெய்யை உருக்குகிறது. உற்றார் உறவினர்களுள் யாரும் பாடவில்லை. ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்திருந்ததைத்தான் வானொலி பாடுகிறது!
மகன் குளித்துவிட்டு ஈர வேட்டியுடன் வருகிறான். குடம் உடைத்துக் கொள்ளி வைத்ததும் திரும்பிப் பார்க்காமல் நடக்கிறான். சுடலைக்கூடத் திரை விலகுகிறது. பிணப் பெட்டியை உள்ளே கொண்டு செல்கின்றனர். எரியூட்டுக்கலன் வாயைத் திறக்கிறது! தீ, நாக்கைச் சுழற்றிச் சடலத்தைச் சுவைக்கிறது. பலரைத் தின்றும் அதன் பசி அடங்கவில்லை!
இனி நான் குடியிருந்த. அந்த உடம்பு கனன்று கொண்டிருக்கும் தீயில் எரிந்து பிடி சாம்பலாகிவிடும்.
எல்லாரும் துக்கத்தோடு வெளியே வருகின்றனர். அண்ணாந்து புகைபோக்கியைப் பார்க்கின்றனர். புகை மேலெழுந்து செல்கிறது.
“என்றைக்காகிலும் ஒரு நாள் எல்லாரும் இங்கு வந்துதானே ஆக வேண்டும்!”
“ஆமாங்க” என்கிறார் இன்னொருவர்.
அவர்களுள் ஒருவர், “மனிதவாழ்க்கையே அற்பந்தாங்க!” என்கிறார்.
“அதுக்குத்தாங்க இருக்கும்போதே நல்லதை நினைக்கணும்; நல்லதைச் செய்யணுங்கிறது!” என்கிறார் இன்னொருவர்.
எனக்குச் சிரிப்பு வருகிறது! இது எத்தனை நாளைக்கு? இன்னும் சிறிது நேரத்தில் மறந்துவிடுவார்களே!
இனி மறுநாள் உறவினர் வந்து சாம்பலை எடுத்துச் சாங்கிக் கடலில் கரைத்துவிட்டுத் தலை முழுகிவிடுவர்! ஆனால் என்னிலை அப்படியில்லையே! எனக்குச் சிவ பதம் கிடைக்கவில்லையே!
மனித உடம்பில் குடியிருந்ததாலோ என்னவோ ஆசை என்னையும் விடவில்லை! பற்றற்று இருக்கவும் முடியவில்லை! அதே குடும்பத்தில். மீண்டும் பிறக்க வேண்டும் என்ற ஆசை என்னை ஆட்கொள்கிறது. அந்த ஆசையால் சிவபதத்தை இழந்துவிடுகிறேன்.
அந்த வீட்டையே சுற்றிச்சுற்றி உலாவிக் கொண்டிருக்கிறேன். நாள் நகர்கிறது. இரண்டு மூன்று நாள் கழிகிறது.
என் மகனும், என் மருமகளும் அறையில் தனித்து இருக்கின்றனர். சின்னஞ்சிறுகள் திருமணம் ஆகிக் கொஞ்ச நாள்தானே ஆகிறது!
‘மறு பிறவி எடுக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது! மீண்டும் மறுபிறவி எடுக்கப் போகிறேன்’ என்று நினைக்கும் போது ஒரே மகிழ்ச்சியாக இருக்கிறது. தலைகால் புரியாத மகிழ்ச்சி! ஆர்வத்தோடு இருக்கிறேன். அப்போது,
“ஏன் அப்படிப்பார்க்கிறே?” என்று என் மகன் என் மருமகளைக் கேட்கிறான்.
“நீங்கள் நடந்துக்கிறது சரியில்லை” என்று மருமகள் எரிந்து விழுகிறாள்.
“என்ன சரியில்லேங்கிறே! நீ என் மனைவி” என்று உரிமை கொண்டாடுகிறான்.
“அது எனக்கும் தெரியும்! ஆனா உங்களுக்குத்தான் ஒண்ணுமே புரியலே. மாமா இறந்து இரண்டு மூன்று நாள்தான் ஆகிறது!” என்கிறாள் என் மருமகள்.
எனக்கு இருந்த ஆர்வம் பறக்கிறது. என் மருமகளை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறாளே! நான் பொன்னம்பலம் உடம்பில் இருக்கும்போது இது தெரியாமல் போய்விட்டதே! என்று அந்தப் பெண் தெய்வத்தைப் பார்க்கிறேன்.
“என் மேல் கோபமா?” என்று என் மருமகள் அவனைக் கேட்கிறாள்.
“இல்லை. நீ சொல்லுறது சரிதான்!” என்கிறான் என் மகன்.
“மாமா இப்போ தெய்வமா இருக்கிறாங்க. அது மட்டுமில்லை; அவங்க ஒரு நாள் நம்ம வீட்டில் வந்து பிறக்கத்தான் போறாங்க! அதுவரைக்கும் பொறுமையாக இருங்க!” என்று என் மருமகள் புன்னகை பூக்கிறாள்.
அவனும் சிரிக்கிறான்.
ஒரு வகையில் நான் மகிழ்ச்சி அடைந்தாலும் ஒருவகையில் கவலைப்படுகிறேன். ம்… என்ன செய்ய முடியும்? நல்ல நேரம் நழுவிவிட்டதே! இனி அடுத்து வரவிருக்கும் காலத்தையும் நேரத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். ஒரு மாதம் உருண்டோடுகிறது.
‘ஆத்ம சாந்தி பூசை’ என்று ஒன்று இருக்கிறதே! எல்லாரும் அருள்மிகு சிவன் கோவிலுக்குச் சென்று பயபக்தியோடு வழிபடுகின்றனர், என் ஆன்மா சாந்தியடைய!
நான் எப்படி ஆத்ம சாந்தி அடையமுடியும்? அமைதி எப்படிக் கிடைக்கும்? என்னைத்தான் ஆசை பற்றிக் கொண்டிருக்கிறதே!
பூசை முடிந்ததும் முறைகாரர்கள் என் மகனுக்கு உருமால் கட்டுகின்றனர். ஆத்ம சாந்திப் பூசையால் எனக்கு அமைதி கிடைக்கவில்லை என்றாலும் உறவினர்க்கு அமைதி கிடைக்கிறது. மனநிறைவு அடைகின்றனர். ஆமாம், ஆத்ம சாந்தி பூசை யாருக்கு? அவர்களுக்கு நடக்கும் சாந்தி பூசையை அவரவர் பார்க்கவா போகிறார்கள்? சிரித்து விடுகிறேன்! இனிக் கொஞ்சநாள் போனால் என்னை மறந்தும் விடுவர்!
ஆனால் என் மனைவி மட்டும் மறக்கமாட்டாள். என் பிரிவை அவளால் தாங்கிக்கொள்ள முடியாது! நானில்லாத வெறுமையை உணருவாள்; கண்ணீர் மல்க காலத்தைக் கழிப்பாள். சேர்ந்து வாழ்ந்த காலங்களை நினைத்து வெந்து புழுங்குவாள்! உள்ளம் உருகுவாள்! உடல் இளைப்பாள்!
எனக்கு அந்த நிலை இல்லையென்றாலும் எவ்வளவு நாளைக்குத் தான் நான் காற்றில் உலாவிக் கொண்டிருப்பேன்? அதை நினைக்கும்போது எனக்கும் கவலையாக இருக்கிறது. ஆடாகவோ மாடாகவோ பிறந்துவிட்டால் என்ன செய்வது? எனக்குப் பயமாக இருக்கிறது. தட்ப வெப்பத்தைத் தாக்கும் பிடித்துக்கொண்டும், எனக்கொரு தோண்டி வேண்டும் என்றும் வேண்டுகிறேன்! காற்றில் அலைகிறேன். தக்க தருணத்தை எதிர்நோக்கி ஏங்குகிறேன்.
சமையம் அமைவதுபோல் தோன்றுகிறது!
சுதாரித்துக் கொள்கிறேன். என் மருமகளுக்கும் என் மகனுக்கும் நெருக்கம் ஏற்படுகிறது. வாய்ப்புக் கிடைக்கிறது! குடிகொள்கிறேன்!.
எனக்கு அமைதி கிடைக்கிறது! மகிழ்ச்சி அடைகிறேன்! இன்னும் நாலாறு மாதத்தில் எனக்கொரு தோண்டி கிடைத்துவிடும்!
சீரான வெப்பத்தால், நான் குடிகொண்ட ஊனுடம்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளரத் தொடங்குகிறது.
நான் கருவறையில் இருந்தாலும் வெளியில் என்னென்ன நடக்கிறது என்று எனக்குத் தெரிகிறது! வெளியில் நிகழும் நிகழ்ச்சிகளைக் காண முடிகிறது; கேட்க முடிகிறது. என் மனைவியின் குரலும் கேட்கிறது.
“எனக்குப் பேரன்தான் பிறப்பான்! உன் மாமாதான் இந்த வீட்டில் வந்து மறுபடியும் பிறக்கப் போகிறார்! அவர் பெயரைத்தான் என் பேரனுக்கு வைக்கணும்” என்று அவள் சொல்லியபடி சிரிக்கிறாள்.
அவளுக்கு ஒரே மகிழ்ச்சி. அவளுக்குப் பேரனைக் கணவன் முகச்சாடையில் காண வேண்டும் என்ற ஆசை.
“மாமா பேர் வைத்தால் என்னால் பேர்சொல்லிக் கூப்பிட முடியாதே அத்தே!” என்று என் மருமகள் புன்னகை பூக்கிறாள். ‘நீ செல்லமா ஒரு பேர் வைச்சுக்க” என்கிறாள்.
நான் இருக்கும் பன்னீர் குடம் தேன் குடமாக மாறி விடுகிறது. உரையாடல் என் காதில் விழுந்து தேனாக இனிக்கிறது.
எண்ணி எண்ணி இன்புறுகிறேன்; இறும்பூதெய்துகிறேன்! என் மருமகள் மகிழ்ச்சியடையும் போது என் உடலும் உள்ளமும் இன்பத்தில் திளைக்கிறது! மெய் சிலிர்க்கிறது. என் மருமகள் வயிற்றைத் தடவிக் கொடுக்கும் போது உன் ஊனும் உருகுகிறது! உள்ளம் குளிர்கிறது.
இப்போது இரண்டு மூன்று மாதம் ஓடிவிடுகிறது. நான் மகிழ்ச்சியால் துள்ளிக் கொண்டிருக்கிறேன்.
இருந்தாற்போல் என் உடம்பில் மின்சாரம் பாய்கிறது. “சுறீர்” வலி! குருதி பீறிட்டுப் பாய்கிறது.
என் மருமகளின் குருதிநாளங்களும் நரம்புகளும் துடிக்கின்றன. வயிற்றுக்குள் பன்னீர்க் குடத்திற்குள் இருந்த என்னால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் மருமகள் தரையில் சரிந்து விழுகிறாள்.
சமையற்கட்டில் வேலை செய்து கொண்டிருக்கும்போது வழுக்கிவிட்டு அவள் வயிறு அருகில் கிடந்த மேசை விளிம்பில் இடித்துவிடுகிறது.
மாமியார் பதறிப்போய் ஓடி வருகிறாள்.
“எப்படி விழுந்தே? எண்ணெய் வேறு கீழே சிந்திக்கிடக்கே! பேசாமல் இருன்னு சொன்னால் கேட்கிறீயா?” என்று சொல்லிக் கொண்டே மருமகளை தாங்கிப் பிடித்து, சுவரை ஓட்டி சாய்ந்த நிலையில் இருக்கச் செய்கிறாள்.
“அத்தே! என்னால் தாங்க முடியலே அத்தே!” என்கிறாள்.
மாமியாருக்குப் பயம் வந்துவிடுகிறது! விழுந்தடித்துக் கொண்டு ஓடுகிறாள்!
டாக்சியை அமர்த்திக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்து செல்கிறாள்.
விரைந்து சென்று என்ன செய்ய? மருத்துவர் கையை விரித்துவிடுகிறார். நான் துடியாய்த் துடித்துக் கொண்டு வெளியே வந்துவிடுகிறேன்.
மீண்டும் நான் காற்றில் கலந்து விடுகிறேன்.
மருமகள் மயக்கம் தெளிந்து கண் விழிக்கிறாள். உறங்கிக் கொண்டிருந்த கவலையும விழித்துக் கொள்கிறது.
“என் ஆசையில் மண் விழுந்து விட்டதே!” என்று அழுகிறாள். நான் மூன்று மாதம் குடியிருந்த அந்தத் தாய் உள்ளம் துடிப்பதை என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. உதவவும் முடியவில்லை! சுற்றிச் சுற்றி வருகிறேன்.
மருமகளுக்கு மாமியார் ஆறுதல் கூறுகிறாள்.
நாள் ஓடுகிறது. அமைதி நிலவுகிறது. ஆனால் அதுவும் நீடிக்கவில்லை! என்னையே நினைத்துக்கொண்டிருந்த என் மனைவியும் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகி விடுகிறாள்.
இனிமேல் அவள் உடல்நிலை தேறாது!
“இனிமேல் நான் பிழைக்கமாட்டேன்! என்று அவளும் மருமகளிடம் சொல்கிறாள். தெய்வமாகிவிட்ட அவருகூடப் போய்ச் சேர்ந்துடுறேன்” என்று அவள் சொல்லும்போது பிள்ளைகளும், மருமகளும் அழுகின்றனர்.
“நீங்க ஏன் அழறீங்க? அழாதீங்க” என்கிறாள்.
அவள் பார்வை மகன் மேல் பதிகிறது. கூர்ந்து பார்க்கிறாள். கூர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறாள். கண்கள் நிலைகுத்தி விடுகின்றன.
உடல் குளிர்ந்துவிடுகிறது. அவள் இறந்துவிடுகிறாள்.
“இனி அவள் உடம்பு ஒரு பிடி சாம்பலாகிவிடும்! இனி அவள் உடம்பு ஒரு பிடி சாம்பலாகி விடும்” என்று பிதற்றுகிறேன்.
எடையற்ற நிலையிலிருந்த என் உடலில் பளு ஏறுகிறது! உணர்வு திரும்புவதுபோல் இருக்கிறது. நான் மெல்லக் கண் விழித்துப் பார்க்கிறேன். மூக்கில் உயிர்வளி ஓடிக்கொண்டிருக்கிறது!
நான் இன்னும் மருத்துவமனையில்தானே இருக்கிறேன்! இன்னும் சாகவில்லையே! செத்த பின் இப்படி நிகழுமோ! எழ முயல்கிறேன். முடியவில்லை! எதிரே நிற்பவர்களைப் பார்க்கிறேன். என் மனைவி, என் மகன், என் மகள், மருமகள். ‘மருத்துவமனையில் படுத்த படுக்கையாகக் கிடக்கும் என்னைப் பார்க்கத்தான் அவர்கள் வந்திருக்கின்றனர்” என்று நினைத்துக் கொண்டு பார்க்கிறேன். அவர்கள் அவர்கள் கண் கலங்கியபடி நிற்கின்றனர்.
“ஏன் அழறீங்க? இனி நான் சாகமாட்டேன்!” என்று சொல்ல முயல்கிறேன். ஆனால் நா எழவில்லை. சொல்லவும் முடியவில்லை. என் உடல் உணர்வை இழப்பதைப் போல் தோன்றுகிறது. கண்ணைக் கொண்டுபோய் செருகுகிறது! நெஞ்சை அடைக்கிறது! ஆ….!
– தூண்டில் மீன், முதல் பதிப்பு: சூலை 2001, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
![]() |
1938இல் சிங்கப்பூரில் பிறந்தார். இவருடைய தாயார் சிங்கப்பூரில் பிறந்தவர். தந்தை தமிழ் நாட்டில் பிறந்தவர். கலைமகள் தொடக்கப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய இவர் இண்டர்மீடியட் வரை படித்தார். பின்னர் தகவல் கலை அமைச்சில் தமிழ்ச் தட்டச்சராக அரசுப் பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு ஓய்வு பெற்றார். இவருக்குப் பெற்றோர் சூட்டிய பெயர் பாலகிருட்டிணன். பரிதிமாற்கலைஞர் (சூரியநாராயண சாஸ்திரி) மறைமலையடிகளைப் பின்பற்றி இளங்கண்ணன் என்று பெயரை தமிழ்ப் படுத்தி…மேலும் படிக்க... |
தொடர்புள்ள சிறுகதைகள்
வாசல் தேடி வந்த வசந்தம்
கல்பனா ராஜகோபால்
November 16, 2026
தெய்வசிகாமணி
மு.வீ.சங்கமுத்துப்பிள்ளை
November 16, 2026
மிஸ்டர் எஸ்.கே.முத்து
நாஞ்சில்நாடன்
November 13, 2026
