கவலையே நீ வாழ்க!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 15 
வாசிப்பு நேரம்: 2 நிமிடங்கள்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

டாக்டர் தங்கையா நோயறிகருவி மார்பில் புரள, ஒரு தடவை இதமாக நாற்காலியோடு சுழன்றடி விட்டு நிமிர்ந் தமர்ந்த போது ஐம்பதாவது நோயாளியாக உள்ளே நுழைந்தாள் கோலூன்றிக் குனிந்து வந்த ஒரு குடுகுடு கிழவி! 

“வாருங்கள் பாட்டி” என்று அன்பொழுக வரவேற்று, அமர வைத்து, களிப்புங் குதூகலமுமாக அந்தத் தோல் தொங்கும் முகத்தைப் பார்த்து, பரிவாக நோய்வினாவி, நன்றாகப் பரிசோதித்து சிறந்த மருந்துச் சீட்டெழுதித்தந்து உட்கொள்ளும் விதம் கூறி ஒரு பத்து ரூபா நோட்டை அவள் கைக்குள் அவள் மறுக்க மறுக்கத் திணித்து, “மருந்து வாங்குங்கள் பாட்டி!” என்று பரிந்த போது ”தம்பீ! நீங்கள் நல்லா இருப்பீர்கள்! ராசா மாதிரி!” என்று அவன் கன்னத்தைத் தடவி விட்டு எழுந்து அவள் வெளியே செல்ல. மேனி சிலிர்த்திருந்த தங்கையாவின் கண்கள் கலங்கலாயின. 

பெற்றார் கொழும்பில் இனக்கலவரத்துக் கிரையாகிவிட, எட்டு வயதிலிருந்து யாழ்ப்பாணத்தில் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தவன் அவன். பாட்டி அப்பம் சுட்டு விற்றும், கிராமத்து வீடுகளில் கூலிக்கு மாவிடித்தும், உழுந்தரைத்தும், வீட்டில் ஆடு மாடு கோழி வளர்த்தும், அவனை மானமாக வளர்த்து பள்ளிக்கும் அனுப்பி வந்தாள்.

தினமும் தோட்ட வெளிக்குச் சென்று அவள் பிடுங்கி வரும் கீரையும் கூப்பனரிசிச்சோறும் அவ்வப்போது மலியும் ஒரு காய்பிஞ்சு வகையுமாக அவனுக்கு மதிய உணவு அளித்து தன் பொழுதைக் கந்தலும் கஞ்சியுமாகக் கழித்துவந்த பாட்டி, தங்கையா பெயரில் யார்க்கும் தெரியாமல் வங்கியில் பணம் கட்டி வந்தாள்.

முதுமையின் தளர்ச்சியிலும் அவள் கடினமாக உழைக்கக் காரணமாயிருந்த பேரனின் படிப்புத் திறமையும் முன்னேற்றமும் அவனை மருத்துவக் கல்லூரிக்குத் தெரிபடவைத்து விட்டது, பாட்டி வங்கியில் வைத்த நாலாயிரம் ரூபாவும் வட்டியும் தங்கையாவின் சிக்கனமும் மருத்துவப் படிப்பில் அவனை உயர்த்திச் சென்றபொழுது பாட்டி நோய்வாய்ப்பட்டாள்.

விடுமுறை பெற்று ஓடோடி வந்தவனைப் பாட்டி ஓட ஓட விரட்டி விட்டாள் படிப்பு என்ன ஆவதென்று! தங்கையா கல்லூரியில் ஏங்கி இருக்க பாட்டி அனாதையாகக் கிடந்து கண்களை மூடிவிட்டாள்.

தன் கண்கண்ட தெய்வத்துக்குக் கடைசிக் காலத்தில் என்றாலும் உதவமுடியாமற் போன மனத்துயரத்தோடு டாக்டராக வெளிவந்து அவள் பெயரால் ஒரு மருத்துவ நிலையத்தை நிறுவி முதியவர்களுக்கு இலவச வைத்தியம் செய்வதோடு மிகுதி வருவாயைக் கொண்டு ஒரு வயோதிபர் நிலையத்தையும் ஊருக்குள் நடத்தி வருகிறான் அவன்.

என்னதான் தன் சுகங்களைத் தியாகம் செய்து, முதியவர் தொண்டில் ஈடுபட்ட போதிலும் தன் பாட்டிக்குதவாத மனக்குறை அவனை வாட்டாமல் வாட்டும். அப்பொழுதெல்லாம் “இந்தக் கவலை வாழ்ந்தால் தான் என் தொண்டும் தொடரும்!” என்று தன்னைத் தானே தேற்றிவிடுவான் தங்கையா! 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *