ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே…

0
கதையாசிரியர்: அல்போன்ஸ் மோசஸ்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
முதல் வெளியீடு: 2026
இணைய வெளியீடு: November 23, 2026
பார்வைகள்: 24
வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்

என் பெயர் தமிழ்ச்செல்வன் நான் ஒரு தமிழாசிரியன். பல ஆண்டுகளுக்கு முன்பு… என் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்… இன்று வரை என் மனதை விட்டு அகலவில்லை. அந்தச் சம்பவம் எனக்கு ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது.அந்தப் பாடத்தை… எனக்கு கற்றுக் கொடுத்தவர்…ஒரு பெரிய அறிஞர் அல்ல…ஒரு பேராசிரியர் அல்ல…என் மாணவி… மலர்க்கொடி.

ஒரு மேல்நிலைப் பள்ளிக்கு நான் தமிழாசிரியராக பணிமாற்றம் செய்யப்பட்டு வந்திருந்தேன்.அப்போது… எனக்கு அங்கே பணியில் சேர்ந்தது மூன்று நாட்கள்தான். என் உயரமான தோற்றம்…சுருட்டை முடி…கருத்த உடல்வாகு…முறுக்கு மீசை…கடுகடுப்பான முகம்…காதிலும் முடிகள்…இடது கன்னத்தில் துருத்திக் கொண்டிருந்த ஒரு மரு…இவை எல்லாவற்றையும் பார்த்த மாணவர்கள்…என் குரல் வளமும் வகுப்பறையைத் தாண்டி பக்கத்து வகுப்பறை வரை கேட்பதை வைத்து…எனக்கு ஒரு பெயர் வைத்து விட்டார்கள். “சவுண்டையா!” என்று என்னைக் கேலி செய்வார்கள்.

ஒருநாள்… நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன். என்னைக் கண்டதும்… வகுப்பறை முழுவதும்…மயான அமைதியாகிவிட்டது. “வீட்டுப்பாடம் எழுதாதவர்கள்… எழுந்து நில்லுங்கள்!”என்று கம்பீரமாகச் சொன்னேன்.ஒரே ஒரு மாணவி மட்டும் எழுந்தாள். அவள்…மலர்க்கொடி. “ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை?” என்று கேட்டேன். அவள் வாயைத் திறக்கவில்லை. தலை குனிந்தபடியே நின்றாள். “உன்னைத்தான் கேட்கிறேன்… ஏன் எழுதவில்லை?”மீண்டும் கேட்டேன்.அப்போதும்…மௌனம். வாயில் என்ன பொழுக்கட்டையா வைத்திருக்கிறாய்?”என்று சத்தமாகக் கேட்டேன். அவள் கையை நீட்டினாள். நான் ஸ்கேலை எடுத்தேன். அவளது இரண்டு உள்ளங்கைகளிலும்…அடித்தேன்.அவளது கைகள்…சிவந்து போயின.அந்தக் காட்சியைப் பார்த்ததும்… எனக்குள்ளேயே ஏதோ ஒன்று உடைந்தது.

“இப்படிப் படிக்காமல் இருந்தால் எப்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறுவாய்?தமிழ்த் தேர்விலேயே தோல்வியாகி…பள்ளியில் என் மானத்தை வாங்கப் போகிறாயா?”என்று சொல்லிவிட்டு…மற்ற மாணவர்களின் நோட்டுப் புத்தகங்களை வாங்கி திருத்தத் தொடங்கினேன்.வகுப்பு முடிந்தது.மாணவர்கள் அனைவரும் வெளியே சென்றார்கள்.ஆனால்…மலர்க்கொடியை நான் அடித்த காட்சி மட்டும்…என் மனக்கண்ணில் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டிருந்தது.

“பகைவனையும் அன்பு செய்…”என்ற இறைச்செய்திகளை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். ஆனால்… ஒரு சிறுமியிடம்… அன்பைக் காட்டுவதற்குப் பதிலாக… கோபத்தைக் காட்டிவிட்டேனே…என்ற குற்ற உணர்வு…என் மனதில் மெதுவாகத் தலைதூக்க ஆரம்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு…

விநாயகர் சதுர்த்தி விடுமுறை.ஊரே விழாக்கோலம் பூண்டிருந்தது.மளிகைப் பொருட்கள் வாங்குவதற்காக…நான் கடைத்தெருவுக்குச் சென்றேன்.எங்குப் பார்த்தாலும்…வண்ண வண்ண விநாயகர் சிலைகள்.மக்கள் கூட்டம்.பூக்கடைகள்.பூக்களின்மணம்.மல்லிகை…ரோஜா…சாமந்தி…கனகாம்பரம் என்று பலவிதமான பூக்கள்…கட்டப்பட்டுக் கொண்டிருந்தன.நான் நடந்துகொண்டே இருந்தேன்.

திடீரென்று…என் கால்கள் நின்றுவிட்டன.என் கண்களுக்கு முன்னால்…ஒரு சிறுமி. அவள்…என் மாணவி…மலர்க்கொடி!அவள் தரையில் அமர்ந்திருந்தாள்.ஒரு கையில் பூக்கள்…மற்றொரு கையில் நூல்…பூக்களைக் கட்ட முயற்சி செய்துகொண்டிருந்தாள்.ஆனால்…அவளது உள்ளங்கைகள் இன்னும் சிவந்திருந்தன.

அந்தக் காட்சியைப் பார்த்தபோது…என் இதயம் வலித்தது.“இந்தக் கைகளில்தானே…நான் அடித்தேன்…”என்று என் மனம் கதறியது.அவள் பூக்களைக் கட்டினாள்.வந்தவர்களுக்கு பூக்களை விற்றாள்.சிறிது நேரம் வாடிக்கையாளர்கள் இல்லாதபோது…அருகில் வைத்திருந்த நோட்டைப் பார்த்து…வீட்டுப்பாடம் எழுதினாள்.அப்போது எனக்குப் புரிந்தது…அவள் வீட்டுப்பாடம் எழுதாதவள் அல்ல.அவளுக்கு…வீட்டுப்பாடம் எழுத நேரம் கிடைக்காதவள்.

நான் அவளை நோக்கி நடந்தேன்.யாரோ பூ வாங்க வருகிறார்கள் என்று நினைத்து…அவள் ஆவலோடு நிமிர்ந்து பார்த்தாள்.என்னைப் பார்த்ததும்…அவளது முகத்தில் அதிர்ச்சி.“ஐயா!”என்று சொல்லியபடி எழுந்து நின்றாள் குரல் தழுதழுத்து]

“மலர்க்கொடி…நான் உன்னை ரொம்ப அடித்துவிட்டேனே…”என்றேன்.அவள் அமைதியாகப் பார்த்தாள்“அதெல்லாம் ஒன்றுமில்லை ஐயா.என் மேலேயும் தவறு இருந்ததால்தானே…நீங்கள் என்னை அடித்தீர்கள்…”என்றாள்.அவளது அந்த வார்த்தைகள்…என் மனதை இன்னும் அதிகமாகக் காயப்படுத்தின.“

அது சரி…பக்கத்தில் என்ன நோட்டு… பேனா?”என்று கேட்டேன்.“பூ விற்காத நேரத்தில்…வீட்டுப்பாடம் எழுதுகிறேன் ஐயா…”என்றாள்.மீண்டும் என் கண்கள் கலங்கின.“அப்பா… அம்மா?”என்று கேட்டேன்.அவள் சில நொடிகள் அமைதியாக இருந்தாள்.பிறகு…“அப்பா இல்லைங்க ஐயா…”என்றாள்.“என் அம்மாவுக்குக் கண் பார்வையும் சரியாகத் தெரியாது.அரசாங்கம் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகையும்…ரேஷன் கடையில் கிடைக்கும் அரிசியும்…அதில்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது.கூடுதல் செலவுக்காக…பூக்கள் கட்டி விற்கிறோம் ஐயா…”என்றாள்.அந்தக் குழந்தையின் வார்த்தைகள்…என் நெஞ்சை நொறுக்கின.

“மலர்க்கொடி…நீ எழுந்திரு.உன் நோட்டு… பேனாவை எடுத்துக்கொண்டு…அங்கே போய் உட்கார்ந்து வீட்டுப்பாடத்தை எழுதி முடி.”என்றேன்.அவள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள்.“ஐயா… அப்போ பூக்களை யார் விற்பது?”“நான் விற்கிறேன்.”என்றேன்.“நீங்களா ஐயா?”“ஆமாம்… நான் தான்.”மலர்க்கொடி ஓரமாகச் சென்று அமர்ந்தாள்.நான்…அவள் இடத்தில் அமர்ந்தேன்.பூக்களை எடுத்தேன். முழம் கட்டினேன். வாடிக்கையாளர்களை அழைத்தேன். அப்போதுதான்…பூ விற்பது எவ்வளவு கடினம் என்று எனக்குப் புரிந்தது!

“பூ சரியில்லை…”என்றார் ஒருவர்.“இன்னும் கொஞ்சம் அதிகமாக அளந்து கொடுங்கள்…” என்றார் இன்னொருவர். “விலையைக் குறைத்துக் கொடுங்கள்…” என்று ஒருவர் கேட்டார்.சிலர்…சொல்லக்கூடாத வார்த்தைகளையும் சொன்னார்கள்.

நான் அமைதியாக இருந்தேன்.அந்த நேரத்தில்…என் காதுகளில் ஒரு பாடல் வரி ஒலிப்பது போல இருந்தது…“ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… வாழ்வென்றால் போராடும் போர்க்களமே…”

ஆம்…அந்த நாள்தான் எனக்குப் புரிந்தது.ஒரு பூவைப் போலத் தோன்றும் வாழ்க்கைக்குள்…எத்தனை முட்கள் இருக்கின்றன என்று!மலர்க்கொடி…ஒரு மாணவி மட்டுமல்ல.அவள்…தன் குடும்பத்திற்காகப் போராடும் ஒரு சிறிய போராளி.சில மணி நேரங்களில்…பூக்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

நான் மலர்க்கொடியை அழைத்தேன்.“வீட்டுப்பாடம் முடித்துவிட்டாயா?” “முடித்துவிட்டேன் ஐயா!” என்றாள். நான் பூ விற்ற பணத்தை எண்ணிப் பார்த்தேன்.பின்னர்…என்னிடம் இருந்த பணத்தையும் சேர்த்து…அவளிடம் கொடுக்க முயன்றேன்.“இந்தா… பூ விற்ற பணம்.வாங்கிக்கொள்.”என்றேன்.அவள் பணத்தைப் பார்த்தாள்.பின்னர் என்னைப் பார்த்தாள்.

“ஐயா…என் பூ எவ்வளவுக்கு விற்றது என்பது எனக்குத் தெரியும்.நீங்கள் உங்களுடைய பணத்தைச் சேர்த்து கொடுக்காதீங்க.அப்படி செய்தால்…நாளைக்கு மற்றவர்களிடமும் அதிகமாக எதிர்பார்க்கும் பழக்கம்…எனக்கும் பணத்தாசையும் வந்துவிடும்.நான் பூ விற்ற பணத்தை மட்டும் கொடுங்கள் ஐயா…”என்றாள்.அந்த நொடியில்…நான் ஒரு ஆசிரியன் என்ற பெருமை…என் மனதில் இருந்து மறைந்துவிட்டது.ஏனென்றால்…அந்தச் சிறுமி…எனக்கு ஆசிரியையாக மாறியிருந்தாள். அவளது நேர்மை… எனக்கு பாடமாகியது. அவளது உழைப்பு… எனக்கு பாடமாகியது. அவளது பொறுமை…எனக்கு பாடமாகியது. அவளது வாழ்க்கை…எனக்கு பாடமாகியது. அன்றே நான் ஒரு முடிவு எடுத்தேன். 

இனி…என் வகுப்பறையில் எந்த மாணவனையும்…எந்த மாணவியையும்… அடிக்கக் கூடாது. அன்பால் திருத்த வேண்டும். புரிதலால் வழிநடத்த வேண்டும்.அவர்களின் தவறுக்குப் பின்னால் இருக்கும்வாழ்க்கையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு…மலர்க்கொடியிடம் விடைபெற்றேன். ஆனால்…என் மனம் மட்டும்…அவளை விட்டு வரவில்லை.அருகிலிருந்த துணிக்கடைக்குச் சென்றேன்.மலர்க்கொடிக்கும்…அவளது அம்மாவுக்கும்…அழகான துணிகளை வாங்கினேன்.அவற்றை மலர்க்கொடியிடம் கொடுத்தேன்.அவளது கண்களில் தெரிந்த அந்தச் சிறிய மகிழ்ச்சி…இன்றும் என் மனக்கண்ணில் தெரிகிறது.

அன்று…நான் ஒரு மாணவியைத் திருத்தச் சென்றேன். ஆனால்…அவள்தான்…என்னைத் திருத்தினாள்.நான் அவளுக்கு ஆசிரியன் என்று நினைத்தேன். ஆனால்…அவள்தான் எனக்கு வாழ்க்கையின் ஆசிரியையானாள்.

அந்த நாளிலிருந்து… என் வகுப்பறையில்… ஸ்கேலின் சத்தம் கேட்கவில்லை. அதற்குப் பதிலாக…அன்பின் குரல் கேட்டது. இன்றும்…எங்காவது பூக்களைப் பார்க்கும்போது…எனக்கு மலர்க்கொடியின் முகம்தான் நினைவுக்கு வருகிறது. மல்லிகையின் மணத்திலும்…ரோஜாவின் அழகிலும்…சாமந்தியின் நிறத்திலும்…அவளது உழைப்பைக் காண்கிறேன்.

ஒவ்வொரு பூவும்…என்னிடம் ஒன்று சொல்வது போல இருக்கிறது, “வாழ்க்கை என்பது…வசதியாக வாழ்வது அல்ல…விழுந்தாலும் எழுந்து போராடி… மலர்வதுதான் வாழ்க்கை!” ஆம்…ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… வாழ்வென்றால்… போராடும் போர்க்களமே!

அல்போன்ஸ் மோசஸ்

வாசிப்பு நேரம்: 3 நிமிடங்கள்நான் ராணிப்பேட்டையைச் சேர்ந்த அல்போன்ஸ் மோசஸ். பல்வேறு உற்பத்தி பிரிவுகளில் மனிதவளத் துறையில் மேலாளராகப் பணியாற்றினேன். கடந்த 3 ஆண்டுகளாக...

மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *