வெளிச்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2026
பார்வையிட்டோர்: 157 
வாசிப்பு நேரம்: 11 நிமிடங்கள்

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“எங்களுக்கு நேர்ந்த இந்தக் கேடுகள் வேறயாருக்குஞ்சரி நேரக்கூடாதண்ண. 

பிரபா எண்டவள் இப்படித் தன்ர கதையைத் தொடங்கி வாய மூடாமப் பேசிக் கொண்டிருக்கிறாள். 

அவள் தன் கதையைச் சொல்லும் போது பழைய துக்கத்தின் புதிய வேகம் அவளிடமாய்த் தென்படுகிறது. 

நான் அவளுக்கு முன்னாலுள்ள கதிரையில் இருந்து கொண்டு அவள் சொல்லுறது வெறும் கதை தானே எண்டமட்டில் கேட்டுக் கொண்டிருக்கேல்ல. அவள் சொல்லுற கதயளக் கேக்கக் கேக்க – என்ர மனசில துக்கங் கட்டிப்போய்ப் பிறகு அது பந்தல் கொடிபோல உள்ளுக்கப் படந்து கொண்டேயிருக்கு. அவள் தான் அங்கயாப் பார்த்த சம்பவங்களில், எனக்குச் சொல்ல முடியாதவற்றையும் தன் பேச்சிலே முடிந்த அளவுக்கு எனக்குச் சொல்லிக் கொண்டுதான் வருறாள். அந்தக் கதைகளை அவள் சொல்ல சொல்லகேக்க எனக்குத் தல கிடந்து சுத்துது. நெஞ்சு விண்விண் எண்டதாக் கொதிக்கிது. கோபத்தில மாரடைச்சுப் போய் வெடிக்கிறமாதிரியிருக்கு. நெஞ்சும் சகிக்க முடியாத கவலேல் பாறையாக் கனக்குது. சூரிய அஸ்தமனம் பார்த்த பிறகு இந்த வாழ்க்கையில ஒரு மனுசனுக்கு என்னதான் இருக்குது என்ற நினைப்பில தவிக்கிற மாதிரி பிறகு நான் பெருமூச்சு விடுறன். நான் விட்ட அந்தப் பெருமூச்சு எல்லா ஓசையளையும் அடக்கிய பெருமூச்சாக எனக்குக்கேக்கவா இருந்தது. அவள் நெஞ்சில ஏக்கத்தையும் பயத்தையும் உள்ள வைச்சுக் கொண்டு தன்ர நெஞ்சில ஏர் பிடித்து உழுகிறமாதிரியா அங்கத்தையிடத்தில் அவ்வப்போதையா நடந்த பயங்கரச் சம்பவங்கள் நீழல்களாய் இப்ப எனக்குச் சொல்லிக் கொள்ளவாத் துடங்கீட்டாள். 

எத்தின சாவுகள்? எத்தினை துன்பங்கள்? எத்தினை கஷ்டங்கள்? எத்தினைத் துயரங்கள்? அம்மா! மரக்கிளையள வெட்டிக் கொண்டு போற ஷெல் – உடலைச் சீவுறதுக்கு என்ன கஷ்டமா? மனுசர் அங்க னேக்க சாகச் சாக மேலயும் மேலயும் அங்க புதுப்பிச்சுக் கொண்டிருந்தது அந்தச் சாவுகள் தான். வெட்டி விறகாயடுக்கின மாதிரி செத்தபிணங்களும் போட்டு ஒரு இடத்தில எரிக்கப்பட்டுது. குழப்பம் -கலக்கம் – பீதி – பிறகு அப்பட்ட பயம். அவள் இதையெல்லாம் சொல்லும் வேளை குரலின் தொனி நடுங்கிற்று. ஒரு இருமல் அவள் இருமினாள். எனக்குத் தந்திநாதம் போல அவள் இருமல் சத்தம் கேக்கவா இருந்தது. இருமலின் பிறகு அந்த வேதனையில் சிறகுகளை விரித்துக் கொண்டு ஒரு பறவை இருக்கிறது போல் அவள் பார்க்கவும் இருந்தாள். 

நான் அந்த நேரம் கிரகணம் மறைத்ததைப் போல இருந்த அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படி அவளைப்பார்த்துக் கொண்டிருந்த போது – என்ன? எப்படி? எங்கே? என்கிற கேள்வியெல்லாம் அவளைக் கேட்க வேண்டுமென்று என்மனசிலே அவைகள் உதிக்க ஆரம்பித்து விட்டன. ஆனாலும் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டு நான் மெளனம் காத்தேன். என் மனம் மரத்திலிருந்து கல்லடித்து வீழ்த்தப்பட்ட ஒரு பால் மாங்காயைப் போல கவலைப் பாலைக் கசிந்து கொண்டிருந்தது.எச்சில் துப்புவது போன்ற கோபத்தில் இருந்து கொண்டு பிரபா பிறகு தன் கதையைத் தொடர்ந்தாள். “உடைஞ்சு உருமாறிப் போன மாதிரித்தானண்ண அங்க இருந்து வந்தாப் பிறகு இந்த அகதி முகாமுக்கிளயும் நாங்க இருந்து போட்டு இப்ப வெளியாலயா வந்திருக்கிறம்… அதுக்குள்ள நாங்கப்பட்ட பாடுகளெல்லாம் ஒரு ஈனப்பட்டபாடுகள் தான். சொல்லவெண்டு இதெல்லாத்தையும் நெக்கவே இருதயம் எனக்கு வெடிக்குது… நாங்க இருந்த முகாமுக்க தண்ணியள்ள தண்ணிக் கிணறில்ல – குழாய்கிணறில அடிச்சுத்தான் எல்லாரும் அதுக்கவா தண்ணி எடுக்கவேணும்… அதுக்கவா இரவு பத்து மணி போல் அதுக்குள்ள ரியூப் கானுகளோட நாங்க கியூவில தான் ஆளுக்குப் பின்னால் ஆளா நிக்க வேணும். 

அதுக்கயெண்டா ஒரு மைல் துாரமளவுக்கு அப்பிடியா எல்லாரும் போலினில நிண்டு அரக்கி அரக்கிப் போய்த்தான் விடிய நாலு மணி அளவிலயா நாங்க அந்த ரியூப் வெல் அடியில போய் தண்ணி அடிச்சு எடுத்துக் கொள்ளலாம்… இதுக்குள்ளயா இடை நடுவில உள்ள ஆள் களைப்பில நித்திர கொண்டமாதிரி உறங்கீட்டா பின்னால கியூவில நிண்டு கொண்டிருக்கிற ஆள் முன்னால் அப்பிடியே முன்னேறிப் போயிடும். 

தலையப் புடுங்கிற அந்த வெய்யிலுக்க பத்தடித் தறப்பாழ்க் கூட்டுக்குள்ள எட்டுப்பேர் எப்பிடியா இருக்கிறது? எங்களுக்கு ஓராளிண்ட மூச்சுப்பட்டாலே கூச்சம்… ஆனா இதுக்க இடிபட்டுக் கொண்டு ஐயோ…. வெந்து வேர்த்து அப்படியே சீவன் போற அளவுக்கு வெக்கைச் சூடு மனுசனின்ட உடம்ப ரெத்தச்சத்துக்கெட்டுப்போற அளவுக்குக் காச்சித்திண்டிருமே…? 

அப்பிடி அதுக்க ரத்தம் செத்துப்போக மனுசக்கூட டங்கள் வைச்சுக் கொண்டு தின்னக் குடுக்கவெண்டு நிவாரணம் தருவினம்… கிழமைக்கு ஓராளுக்கு ஒரு யொக்கு அரிசி (1 கிலோ) ஒரு கிலோ மா… நூறு கிராம் சீனி… காக்கிலோ பருப்பு. தேங்காயெண்ண காப்போத்தல்… 

ஆனாப் பதினைஞ்சு நாளுக்கொருக்கா தேங்காய் முட்டை -உருளைக்கிழங்கு – சோயாமீற் -உப்பு தூள் புளி அப்பிடியெல்லாம் தந்திச்சினம். 

மறுமாற்றமில்லாம அவயள்குடுத்தது எங்களுக்கு இப்படியாத்தான் ஒரு கணக்கு… இதில தான் நாங்க சோறாக்கிக் குழம்பாக்கிச் சாப்பிடவேணும். 

இதெல்லாம் அதுக்க பிறகு நடந்த சம்பவங்கள் தான் எங்களுக்கு… ஆனா அதுக்க முந்தி முதக் கொண்டு நாங்க வந்த நேரம் நடந்ததுகளப் பார்த்தா ஒரு நாள் கூட அதுக்க சுகம் கிடையாது. 

அந்த முள்ளுக் கம்பியடிச்ச இரும்புக் கூடுமாதிரியான இடத்தில இருந்து முன்னமெல்லாம் எங்களுக்கு வெளியால வெளிக்கிட்டுப் போறதுக்கு அனுமதியேயில்ல… பச்சத் தளிர உடைச்சு நெருப்பில போட்ட மாதிரி இப்படியா இதுக்க வந்தும் எங்கட பாடுகள் கஷ்டங்கள் கூடிக்கூடிக் கொண்டரத் துடங்கீற்று… அங்க கம்பி வேலிக்கு வெளியால நிக்கிற சொந்தக்காரரை இந்தக் கண்ணால காண எங்களுக் கெண்டா அழுகை அழுகையா வந்திட்டுது…எப்பிடி இருக்கிறியள் எண்டு அதுகளும் எங்களக் கண்டு அழுகிறது மாதிரிக் கேக்க நாங்களும் சதுரம் நடுங்கித் தவிச்சுப் போய் விக்கி விக்கி அழுறம்… 

என்னத்தைத்தான் நாங்கள் அதுகளுக்குச் சொல்லுறது – நல்லதகவலெண்டு எங்களிட்ட என்னதான் ஒரு விஷயம் இருக்கு? எண்டாலும் இப்பிடி வருற இனம் சனத்தக் கண்டு நெஞ்சிண்ட பாரத்தயாயிலும் கொஞ்சம் குறைச்சுக் கொள்ளுவமெண்டு பார்த்தா காவலுக்கு நிக்கிற ஆமிக்காரர் அங்க வந்து நிக்கிற ஆக்களத் துரத்தத் துவங்கீடுவான்கள். 

பத்து நிமிசத்துக்கு மேல அதில நிண்டு ஆரும் காம்புக்குள்ள வுள்ள ஆக்களோட பேசக்கூடாது…. போங்க போங்க எண்டு அவன் அதாலயா அதுகளக் கலைச்சுவிட ஓரமாப் பாத்துப் பாத்து அதுகளும் அங்கால ஒதுங்கிப் போய்ப் போயிருங்கள். 

நாங்கள் அதுகளப் பார்த்து கண்ணத்துடைச்சுக் கொண்டு பெருமூச்சு விட வேண்டியதுதான்……. வேற என்ன செய்ய…? 

இப்பிடித்தான் நெஞ்சில சதை உரிச்சமாதிரித்தான் நாங்க உள்ள வேதனைகளெல்லாம் பட்டது. எதுக்கும் நாங்க அதுக்குள்ள கியூவிலதான் நிக்கவேணும்.. போலிங்கில நிக்காட்டி அடிதான் அங்ககிடைக்கும். 

எனக்கெண்டா பயப்பிட்டுப் பயப்பிட்டுப் போய் இப்ப மூளையே சரியில்ல… நடந்த சம்பவங்கள சிந்திச்சு சிந்திச்சு நேர்த்தியாயும் உங்களுக்கு சொல்லேலாம இருக்கு… 

அவள் இவ்வாறு முணுமுணுத்துக் கொண்டாள். 

நான் கண்களை அசைக்காமல் அவள் முகத்தையே பரிதாபமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன். 

அவள் கசப்புடன் சிரித்துக்கொண்டாள். 

அங்க ஓடியாடி அலைஞ்சு அலுத்ததிலும் பிறகு சனங்கள் செத்ததுகள்தான்… சாவே வா 

சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்று அவள் என்னையும் கேட்டுக் கொண்டாள். 

பக்கத்து வீட்டுக்காரன் குப்பை கூட்டி வைத்து எரித்து விட்டதில் நாங்கள் இருந்து கொண்டிருந்த பக்கமும் புகையோடு அலைந்து வந்தது மணம். 

யோசனைக்கும்கவலைக்கும் அந்த வேப்பம் இலைச்சருகின் எரிப்புப் புகை சுவாசிப்பதற்கு நன்றாகத்தான் இருந்தது. நான் மூச்சில் இழுத்து அதைக் கொஞ்ச நேரம் அடக்கி வைத்துக் கொண்டிருந்து விட்டு பிறகு வெளிவிட்டேன். 

அங்கேயும் நாங்கள் வன்னிப்பக்கம் உள்ள பங்கர் வழியில இருக்கேக்கையும் அவயள் வந்து சின்னப் பெடியள் தரவளியையும் பிடிச்சுக்கொண்டு போன வயள்தான்… அந்த நேரம் புள்ளயளிண்டதாய் தேப்பன்கள் பகிரங்கத்தகறாரில் அவங்களோட சண்டை பிடிக்க சிலதுகளை எரிச்சல் நொடியில ஆவிபறத்தி விட்டவங்கள்தான்… தாய் தகப்பனெண்டா பிறகு கோபத்திலயும் கவலேலயும் அங்கின தங்களிட்ட உள்ள சாமிப் படங்களையெல்லாம் அடிச்சு நொறுக்கினதுகள்தான்… பிடிச்சுக் கொண்டுபோனதுகள் சிலதுகள் செத்து பிணமாயும் பிறகு கொண்டந்து குடுக்கப்பட்டதுதான். 

எல்லாத்துக்கும் எரிஞ்சு கொண்டிருந்த சிம்மினி விளக்குத்தான் சாட்சி அப்பிடியாத்தான் நெஞ்சில எங்களுக்கு சம்பவங்கள் நெருப்பவைச்ச மாதிரி இருந்திச்சு அங்கத்தையில் நடந்த இப்ப அத நான் நினைச்சாலும் உடல் எனக்குச் சிலிர்க்குது. சிலதாய்மார் அங்க தங்கட பிள்ளயளப் பிடிக்கத் தங்கட தலவழிய உடனேயே மண்ணெணய் ஊத்தி நெருப்பு வைச்சுக் கொண்டும் செத்துதுகள். அவள் சொல்லச் சொல்ல என் மனத்தில் தெள்ளுப்பூச்சிகள் ஊர ஆரம்பித்துக் கொண்டிருந்தன. பொறிவிட்டுப் புறப்பட்ட அவள் குரலோடு வேப்ப மரத்திலிருந்து எங்கோ கத்திக் கொண்டு பறந்ததுகிளி. அடுத்தவீட்டுப் பூனை குசினிவாசலடியில் நின்று எங்கள் இருவரையும் கண் உருட்டிப் பார்த்தது. 

“கள்ளப்பூனை…சூ” என்று அவள் கையை ஒரு முறை தூக்கி விசுக்கினாள். 

சிர்க்… என்றதாயிருந்தது அது நின்ற சுவடே பிறகு தெரியவில்லை. 

“இருபத்தி நாலு- ரெண்டாயிரத்தி ஒன்பதில் எங்களுக்கு நடந்தது.. ” 

என்றாள் அவள். 

என் கடமையைச் செய்யும் எண்ணத்திலே ஒரு கொப்பியையும் பென்சிலையும் அவளிடம் நான் கேட்டு வாங்கி, கையின் விரல்களால் பேனையை வருடியபடி இப்ப சொல்லுத்துவங்குங்கோ – என்றேன். 

நான் சொல்லவும் கொஞ்சம் கூட மெளனமாக நேரம் பிடிக்காமல் அவள் தான் சொல்லும் அந்தக் கதைக்குள் நெருங்கினாள். அண்டைய நாளண்ண நாங்கள் மாத்தளனுக்குக் கிட்டவாயுள்ள ‘பொக்கணை’ இடக்காடு எண்ட இடத்தில் ஒரு அறிஞ்ச தெரிஞ்சாள் ஒருவரிண்ட வீட்டில இருந்தம். 

அண்டைக்கெண்டாச் சரியான செல்லடி.. ஆமி அப்ப முன்னேறிக் கொண்டு வருகுதெண்டு அதால நாங்க நினச்சம்.. எண்டாலும் நாங்களெல்லாம் பங்கருக்குள்ளதான் இருந்தம். அங்கால யெண்டா சனங்களெல்லாம் முள்ளிவாய்க்கால் பக்கமாவும் அதே நேரம் அங்காலிப்பக்கமிருக்கிற கடற்கரையப் பாத்தும் ஓடிக்கொண்டி ருந்ததுகள். 

நாங்கள் இருந்த பங்கரில ஏழுபேர் இருந்தம். அங்கின உள்ள சின்னத்துண்டுக் காணிக்கிளயே சனம் இருக்கிறதுக்கெண்டு பத்து பங்கராவது இருக்கும். இவளவு சனம் இப்பிடி ஒரு காணிக்கிள இருந்ததுக்குக் காரணமென்னவெண்டா அங்கால இங்கால உள்ள இடத்துச் சனங்களெல்லாம் இடம்பெயர்ந்து இந்த வீட்டுக்காரரிண்ட வீட்டுக்கு தஞ்சமா வந்ததுதான். 

அடே அம்மாடி…. அந்த பங்கரில இருந்தாலும் ஒரு பங்கரில் இருந்து அடுத்த பங்கரில உள்ள ஆக்களிட்ட கதைச்சுக் கொள்ளவும் ஏதும் பிரச்சினை யெண்டும் போகவேபோகேலாது. 

இப்பிடியா சனங்களிண்ட பங்கருக்கு மேலயும் செல்லுகள் விழுந்து உள்ளுக்கிள்ள இருந்த அந்தக் குடும்பம் முழுக்கலுமா செத்துப்போயும் இருக்கு. 

நல்லா எனக்கு அண்டையத்தினம் ஞாபகம் வருகுது. இருபதாந் தேதி நாலாம் மாசத்தில தான் இது நடந்தது. அண்டைக்கு எங்கட பக்கத்தில் உள்ளபங்கரில் தான் செல் விழுந்தது. ஆனா அது வெடிக்கேல்ல… அதோட அந்த பங்கர்வழிய இருந்த நாங்களும் வேற உள்ள ஆக்களெல்லாம் அந்த இடத்தவிட்டு ஓடிப்போயிட்டு திரும்பவும் நாங்கள் அவ்விடத்தையா வந்து பங்கர் வழியையே இருந்தம். 

அந்த நேரம் அந்த இடத்த விட்டு வெளிக்கிட்டு ஆமியிட்டப் போகவெண்டு வெளிக்கிட்டவயளெல்லாம் இங்காலிப் பக்கத்தில் உள்ள வயளிட்டயிருந்து சூடுவாங்கிச் செத்திச்சினம்…… அதால நாங்கள் சரியாப் பயத்தில அவங்களிட்டப் போகாம் இருந்தம். இதுக்குப்பிறகு அவயளெல்லாம் வெளிக்கிட்டு பொக்கணைக் கடற்கரைப் பக்கம் போயிட்டினம். 

இடைக்காடு பொக்கணைப்பக்கமிருந்த நாங்கள் இதுக்குப்பிறகு இருநூறுமீட்டர் அளவு தூரத்தில நிண்டு கொண்டிருந்த ஆமிக் காரரிட்டப் போய்த் தஞ்சம்புகுந்திட்டம். 

அங்கால – பண்ட் – இருந்த பக்கம் ஆமிக்காரனுகள் நிண்டாங்கள். அவங்கள் நிண்ட இடத்தடிக்குப் போனாப் பிறகு அதத் தாண்டி நாங்கள் இறங்கின இடத்தில.. எங்கட கழுத்தளவுக்கு இருக்கும் தண்ணீர்… ரெண்டு கிலோமீட்டர் அளவுக்கு அப்புடியாத்தண்ணீர்… 

இந்தக் கடல் தான் நந்திக் கடல் தண்ணீர்… நந்திக்கடல் தண்ணீர் இரட்டை வாய்க்காலுக்கு வந்து விழுகுது.. இந்தத் தண்ணீர் மாரியில யெண்டா கூடுதலாப் பாயும்.. அந்த நேரம் போட் வழிய தான் இதால போவலாம். 

நாங்கள் இந்த இடத்தால் தான் இறங்கி நடந்து அந்தளவு தூரம் கடந்தம். பச்சைப்புல் மோட்டையால இருந்து இரணப்பாலவருமட்டும் தண்ணீக்காலதான் நடை.. அது மட்டும் தண்ணீர் தான். 

இந்த இரணப்பாலையில் வைச்சுத்தான் எங்களப் பஸ்வழிய இராணுவம் ஏற்றி விஸ்வமடுப் பக்கத்தில் உள்ள வல்லிபுனம் இடத்துக்குக்கொண்டு வந்திச்சு. 

பிறகு அங்கின இருந்துதான் எங்கள ஓமந்தைக்குக் கொண்டு வந்திச்சினம். இந்த நேரம் நிறையச் சனங்களெல்லாம் ஒண்டடி மண்டடியாத் திரண்டு வந்ததால இராணுவத்தாலயும் வந்த சனங்களக் கட்டுப்படுத்த முடியாமப் போச்சுது.. சாப்பாடு தண்ணியில்லாம சனங்கள் மயக்கம் போட்டும் விழுந்ததுகள்…. அப்படியா விழுந்ததுகளில் வயசுபோனதுகள் செத்ததுகள் தான்… 

சொல்லிவிட்டு பிரபா களைத்துப் போனமாதிரியாக இருந்தாள். என்னைப் பார்த்தபடி தன்னிடம் மரியாதைக்குரிய முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள். 

“அங்க நடந்ததுகள் எல்லாத்தையும் வடிவாச் சொல்ல என்னால் ஏலாது.. அண்ணருக்கெண்டா அப்பிடிவடிவாச் சொல்லத்தெரியும்.”

என்று சோர்வானகரகரத்த குரலில் அவள் முணுமுணுத்தாள்.

இமைகள் அவளுக்கு நனைந்திருந்தன. 

நான் ஒரு கேள்விக் குறியைப் போல வடிவமைக்கப்பட்ட விதத்தில் உடம்பை நெளித்து வைத்துக்கொண்டு புரியாத ஒரு மனோ வேதனையுடன் அவளைப் பார்த்தபடி இருந்தேன். 

“என்னால இப்ப ன அவரக்கண்டு பிடிக்க முடியுமோ…?” கேட்டேன். 

“இப்ப அவர் இங்க சாப்பிடுறத்துக்கு வருவார்” 

அவள் சொல்லவும், கேற்பக்கம் நான் பார்த்தேன். வீதியிலே சென்று கொண்டிருப்பவர்களின் தலைகள் வேலிக்கு அப்பால் மறைந்து கொண்டிருந்தன. 

‘பிரபா அங்கு நடந்த ரகசிய விஷயங்களைச் சொல்லி கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிற மாதிரியான ஒரு நிலைமைக்குச்செல்ல விரும்பவில்லை’ என்பதுபோல் என் மனதுக்கு நினைக்கவும் பதிந்தது. எனக்கு முக்கியமாக சொல்லவேண்டியவையெல்லாம் பயத்தில் அவளுக்கு சொல்ல முடியாமல் தொண்டையிலே மரித்துப் போய் விட்டதாக்கும். என்றும் நான் எண்ணினேன். நான் அப்பிடி நினைத்துக் கொண்டிருந்த சில நிமிடங்களுக்குள்ளாக பிரபாவின் தமையனும் அவ்விடம் வந்து விட்டான். 

நான் வீட்டுப் படியில் அவன் கால் வைத்து ஏறுகையில் அவன் கால் நகங்களைப் பார்த்தேன். நீண்ட நாளாக வெட்டாது புறக் கணிக்கப்பட்ட நகங்களாக அவைகள் எனக்குத்தெரிந்தன. 

நான் தூய்மையான வெள்ளைத்தாமரை போன்ற என் உள்ளங்கையை விரல்களை நீட்டி வைத்தப்படி பார்த்துக் கொண்டேன். 

அண்ணா என்ற அவளின் குரலுடன் -அவன் அவளருகில் வந்து நின்றான். 

அவன் எங்கோ கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து விட்டு வருகிறான் என்பது எனக்கு வெளிப்படையாகத்தெரிந்தது. 

நான் அவனைப்பார்த்தபோது அவன் தன்கண்களில் என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தான். 

“இவர் எங்கட அம்மா அப்பா ஆக்களுக்கு நல்லாத் தெரிஞ்சவர்..” 

என்று அவள் சொல்ல, பார்வையை அவள் பக்கம் அவன் திருப்பினான். 

“வன்னீக்கிள்ள என்ன நடந்ததெண்டு கேக்கிறார்.. கடைசியா அங்க இருந்து வந்த ஆக்களாவும் நீங்க இருக்கிறீங்க… நடந்ததென்ன வெண்டு உங்களுக்குத் தெரிஞ்சதச் சொல்லுங்கோவன்..?” 

அவள் சொல்ல – நான் தேவை இருப்பது போல ஒரு பார்வை அவனைப் பார்த்தேன். அவன் ஏதோ தொலைந்து போனவனான ஒரு நிலையில் ஓர் நிமிடம் நின்றான். 

அடுத்தநிமிடம் அவன் நம்பிக்கையோடு எனக்கு முன்னால் உள்ள கதிரையில் வந்து இருந்தான். 

“இலை பழுத்து உதிருறமாதிரித்தான் மனுசரிண்ட வாழ்க்கை…” 

நான்முன்னம் அவன் பார்வையில் பார்த்தபோது பொருந்தியதை இப்போது அவன் வார்த்தையிலே கண்டது போல இருந்தது. உடனே நான்: 

“நீங்கள் இப்ப சொன்னது கவிதை மாதிரி இருக்குது..” என்றேன். 

“ஆனா எனக்கு அப்படித்தெரியேல்ல” 

என்று அவன் சொன்னான். அப்படி சொல்லும்போது மூழ்கி மறைவதற்கு முன்னால் பாய்ச்சும் ஒரு விதமான வெறுப்பான பார்வை அவனிடமிருந்தது. 

“எண்டாலும் உண்மையைக் கண்டுபிடிக்க அது கன காலம் போகும்… நீங்க எழுதுங்கோ சொல்லுறன்….” 

என்று சொல்லிவிட்டு தனக்கு நடந்ததையும் தான் கண்டதையும் சொல்லத் தொடங்கினான் அவன். 

நான் அவனோடு இணைந்து இயங்குகிற அளவுக்கு பேனாவுடன் எழுதத் தயாரானேன். 

நாங்க அப்ப குமுழ முனை வீதி முறிப்பு – முள்ளிய வளை எண்ட இடத்தில தான் இருந்தம். அங்க ரெண்டு பகுதிக்கும் நடந்த மோதலில அங்க இருக்க ஏலாமல் எங்கட வீட்டுச் சாமான்களயெல்லாம் றைக்டரிலயும் மாட்டு வண்டில்களிலயும் ஏத்திக் கொண்டு நாலுமைல் தூரத்தில் உள்ள நீராவிப் பிட்டி எண்ட இடத்துக்கு வந்து அங்கயும் எங்கட ஒரு சொந்தக்காரரிண்ட வீட்டில தங்கி -அந்த இடத்திலயும் எங்களுக்கெண்டு ஒரு பதுங்கு குழியும் வெட்டிக்கொண்டு இருந்தம். 

அங்கயெல்லாம் இந்த கிபீர், பைட்டர் -மிக், எண்ட குண்டுபோடுற பிளேனுகள் எல்லாம் வந்து கொத்துக்கொத்தாக் குண்டுகளெல்லாம் போட்டுக்கொண்டிருந்துது.. படபட வெண்டு எல்லா இடத்திலயும் இந்தக் குண்டுகள் விழுந்து வெடிக்கும்.. இதால அயல்சனங்களெல்லாம் அந்தப் பகுதிகளில் இருந்து வெளிக்கிடத்து வங்கீட்டுது.. நாங்களெண்டா அதுகள் அப்பிடி வெளிக்கிட்டுப் போகத்துவங்கினாப் பிறகும் ஒரு மாதகாலம் அந்த இடத்த விட்டு வெளிக்கிடாம அங்கயே இருந்தம். 

அதுக்குப்பிறகு அவ்விடத்தையில எல்லாம் மோசமான நிலைமையா வர அங்கயிருந்து வெளிக்கிட்டு எங்கட சாமான்கள றைக்டரிலயும் வண்டில்களிலயும் ஏத்திக்கொண்டு புதுக்குடி யிருப்புக்கு நாங்கள் வந்தம். எங்கள மாதிரி கனக்கச்சனம் அங்கயிருந்து விஸ்வமடுவுக்கும், வல்லிபுனம் – இரணைப் பாலை – மாத்தளன் பகுதிக்குமாப் போய்க்கொண்டிருந்ததுகள். 

றோட்டில எண்டா சனங்கள் அந்த நேரம் விலத்தி முன்னால் லேயாப் போகவே ஏலாது.. மெல்ல மெல்ல மாத்தான் சனம் அதால போகலாம்.. அந்த நேரம் அவ்விடம் வழிய செல் விழுந்து போய்க் கொண்டிருந்த சனங்களும் செத்ததுகள்தான். 

சின்னக் குழந்தப்பிள்ளயள் கூட மழைக்குள்ளயா நனைஞ்சு நனைஞ்சு தாய் தகப்பனோட அழுதழுது அப்ப நடந்து வந்துதுகள்.. அந்தப் பிள்ளயளெல்லாம், தங்களால ஏலுமான கேத்தில்கள், பானையளக் கைவழிய தூக்கிக் கொண்டு நடந்து வந்ததுகள்தான். 

இப்பிடி சனங்களெல்லாம்போய்ப் பள்ளிக் கூடங்கள் கோயில் வழியையும் இருந்ததுகள். 

நாங்கள் அப்பிடியே புதுக்குடியிருப்புக்கும் போய் அங்க எங்கட சொந்தக்காரர் ஒருவரிண்ட காணிக்கிளயா கொட்டில் போட்டுக் கொண்டு இருந்தம்… அந்த நேரம் சரியா அடிச்சுப் பெஞ்ச மழைக்கிள நாங்களும் அதுக்க கிடந்து படாத பாடெல்லாம்பட்டம். 

செல்லடி கிபீர் அடியில இரவில சனங்களும் ஆமி வந்திட்டாங்கள் எண்டு சொல்ல சந்தைக்குப்போன சனம் கடைத் தெருவில் இருந்த சனம் அங்க நிண்ட சனம் இங்க நிண்ட சனமெல்லாம் விழுந்தடிச்சு ஓடிக்கால்கைகளையும் உடைச்சுக்கொண்ட அளவுக்குப் பதட்டப் பட்டதுகள்தான். 

பேந்து பதினொராம் திகதி அங்க நடந்த செல்லடி கிபீர் தாக்குதலில நிறையச்சனம் செத்துப்போக நாங்கள்அந்த இடத்தை விட்டு திரும்பியும் எங்கட சாமான்களை அங்க கொண்டு வந்த மாதிரி ஏத்திக்கொண்டு இரணப்பாலேல இருக்கிற எங்கட சொந்தக்கார ஆள் வீட்டயாப்போனம். 

அங்க நாங்க இருக்கேக்கிள செல்லடியில கனக்கச் சனம் செத்துப்போச்சுதுகள்…. அதால அங்கயும்சனம் றோட்டால் திரண்டு கொண்டு மாத்தளனுக்கும் பொக்கணைக்கும் போய்க் கொண்டிருந்ததுகள். சனம் வலய மட்டத்துக்கும் போய் கொண்டிருந்ததுகள். 

இந்த இடத்திலதான் பிறகு செல்லடி சரியான மோசமா நடந்து கொண்டிருந்தது. இந்த இடத்தில் தான் அவயள் வந்து ஆக்களையும் பிடிக்கத் துடங்கீட்டினம்.. வீட்டுக்கு ஒண்டு எண்ட அளவில் அது நடந்தது.. இப்பிடி ஒரு பக்கத்தால் கரைச்சல். 

வன்னியில் இருந்த எங்களிண்ட சனங்களிண்ட காசே பங்கர் வெட்டிக் செலவழிச்சதால தான் முடிஞ்சுது… அப்பிடித்தான் சொல்ல வேண்டியும் இருக்கு. 

கொஞ்சக்காலம் பங்கருக்கிள்ளதான் எந்த நேரமும் எங்களுக்கு வாழ்க்கைச் சீவியமாயிருந்தது… குழந்தைப் பிள்ளயள் கூட வெளியபோய் விளையாட ஏலாது… அங்க இரணப்பாலை எண்டுற இடத்தில் வெறும் உப்புத்தண்ணிதான்.. அதால வேற இடங்களுக்குப்போய் லைனில் நிண்டு போய்த்தான் தண்ணி எடுத்துக் கொண்டர வேணும். 

இந்தக் கஷ்டத்தால் உப்புத்தண்ணியிலதான் நாங்கள் சமையல் எல்லாம்… குடிக்கிறதுக்கெண்டு மட்டும் தான் எங்கயேனும் போய் நாங்க தண்ணீர் கொண்டருவம், அங்கினயா இப்பிடி தண்ணீ அள்ளிக்கொண்டரப்போன சனங்களும் தங்கட இருப்பிடத்துக்கு தண்ணியோட வந்து சேராம செல்லடிபட்டுச் செத்தும் இருக்கு. 

அங்கயெல்லாம் கோயிலிலயும் பள்ளிக் கூடத்திலயும்தான் ஒண்டடி மண்டடியாச்சனம். 

அங்க வன்னியில வசதியாருந்த சனங்களும் சாப்பாடு தாங்கோ பசிக்குது எண்டு கேட்டு பிச்சையும் எடுத்ததுகள்… ஓம்.. நாங்கள் அறிய ஒரு கிழவி மனுசி கழுத்திலதான் போட்டிருந்த தாலிக் கொடிய ஒரு ஆளிட்டயாக் கழட்டிக்குடுத்திட்டு இதுக்குத் தனக்கு ஒரு சாப்பாட்டுப் பார்சல் தாருங்கோ எண்டு அதக்குடுத்த பிறகு நம்பிக்கொண்டு அவ்விடதையாநிண்டுது. ஆனா தாலிக்கொடிய வாங்கிக்கொண்டு போனவன் சாப்பாட்டுப் பார்சலோட அவ்விடத்தையாப் பிறகு வரவே வரேல்ல.. இது மாதிரித்தான் சிலதுகள் காதுத்தோட்டக் கழட்டிக் குடுத்திட்டுத் தேத்தண்ணி ஒரு கோப்பை வாங்கிக் குடிச்சும் இருக்குதுகள். 

அங்கினயெண்டா பங்கர் இல்லாம சொந்தக்காரரிண்ட உதவியில்லாம அங்கின இங்கின இருந்த சனம் கனக்க செல்லடி பட்டும் செத்ததுகள். 

நாங்களெண்டா இரணைப் பாலயில இருந்து பேந்து பொக்கனைக்கு எங்கட எல்லா சாமான்களையும் வாகனம் பிடிச்சு ஏத்திக்கொண்டு போனம்… இதையெல்லாம் கொண்டுபோற் செலவுகளுக்கு உள்ள நகைகளையும் கூட நாங்கள் வித்ததுதான். 

சொல்லிவிட்டு ஏதோ அடுத்த சிந்தனை போல பிரபாவின் அண்ணன் தலையைக் கீழே தொங்கப்போட்டுக் கொண்டி ருந்தான். 

நான், அப்போது எழுதிய ஒற்றைகளின் எண்ணிக்கையிலே கவனத்தை விழுத்தினேன். 

“தேத்தண்ணி ஊத்தியரவே… குடிக்கிறீங்களே” பிரபா கேட்டாள். 

“வேண்டாம்… நீங்க சொல்லுங்கோ” என்று முதலில் அவளுக்கு நான் சொல்லி விட்டு பிறகு பிரபாவின் தமயனைப் பார்த்தேன். 

அவன் புதைந்த ஆழங்களிலிருந்து மீண்டும்எழத்தொடங்கியது போல மிகுதியை சொல்லத் தொடங்கினான். 

“பொக்கணைக்கு நாங்க போன கதையிலயெல்லே அப்பவாவிடு பட்டது… அப்பபொக்கணைக்கு நாங்க போய்ச் சேந்தா அங்க நோய்…..அதாலயும் சனங்கள் வருத்தம் வந்து செத்துக் கொண்டிருந்ததுகள்…” 

அங்க செல்லடியில் கனக்கச் சனம் அடிபட்டு ஆஸ்பத்தரிக்கும் போக ஏலாமச் செத்துதுகள். றோட்டு முழுக்க ரெத்த ஆறுதான்… தாய இழந்த பிள்ள எண்டும் மனுசிய சாகக் குடுத்திட்டுத் திரியிற புருஷன்மாரெண்டும் புருசனைச்சாகக் குடுத்திட்டு அழுது கொண்டு திரியிற பொம்புளயளெண்டும் கனக்க. 

நாங்கள் பொக்கணையிலயும் தெரிஞ்ச ஓராளின்ட வீட்டு பங்கரில் இருந்தம்… எங்கட வீட்டுச் சாமானெல்லாத்தையும் பங்கருக்கு மேலயா வைச்சிருந்தம். 

இந்த பொக்கணை எண்ட இடத்தில பங்கர் வெட்டிறதெண்டா மண் இடிஞ்சு கொண்டே இருக்கும்… வீட்டுச்சீற் தகரம் நிறுத்தித் தான் பங்கர் செய்யவேணும்.. 

இங்க நிவாரணம் காக்கிலோ சீனி சங்கக்கடையில குடுக்கினம் எண்டுநிண்ட சனம் நூறுக்கு மேல் செத்தது. 

ஆரம்ப சுகாதார நிலயத்தில குழந்தப் பிள்ளயளுக்கு மாப்பெட்டி வாங்க கியூவில நிண்ட சனம் அறுபத்தைஞ்சு க்குக்கிட்ட செத்ததுகள்… 

விறகுக்கு வீட்டுக் கதவுகள் வெட்டி எடுத்து பங்கர் வாசலில் அடுப்பு வைச்சுத்தான் நாங்கள் தின்ன ஏதும் சமைச்சனாங்கள்… செல்லடிச்சசத்தம் அங்கயிருந்து கேட்டவுடன் நாங்க பங்கருக்குள்ள புகுந்திடுவம். 

அப்ப செத்தல் ஒரு கிலோ அங்க ஐய்யாயிரம் ரூபா, 

 உலக உணவுத் திட்டம் (W.H.O) வெள்ளயங்கள் அங்க கப்பலில் கொண்டு வந்து பூசணிக்காய் ஒரு சின்னத்துண்டும் – ஒரு உருளைக்கிழங்கும் குடுத்திச்சினம். 

பொக்கணைக்கிள்ள நாங்க இருக்கேக்கிள்ள பிள்ளையளப் பிடிக்கிறாங்கள் எண்ட பயத்தில் சாமிப்படத்தடியில வைச்சு சாப்பாடு குடுத்துப் போட்டு – கையப் பிடிச்சுக் குடுக்கிற கலியாணங்களும் நடந்தது- கலியாணம்முடிச்ச மாப்பிள்ளை பொம்புளயளை பொம்பு ளையாக்கள் வீட்டு பங்கருக்கு அனுப்பிச்சினம். வேறபாதுகாப்பான பங்கருக்கும் அனுப்பிச்சினம். அங்க அவயளத்தனியா இருக்கவிட்டு அந்தப் பங்கரில் உள்ளவள் வேற பங்கர் வழிய போய் அவயளோட இருந்திச்சினம். இந்தத்தப்புற அலுவலில் தமையன் தங்கச்சியையும் கலியாணம் முடிச்சதா எல்லாம் செய்து அவங்களுக்குப் பேய்க்காட்டிப்போட்டு தங்கட பிள்ளயளதப்ப வைச்சதாய் தேப்பனும் இருக்குதுகள். 

இப்பிடியே தான் சனங்கள் பட்டுக்கொண்டிருகிற பாட்டோட நாங்களெல்லாம் அந்த இடத்தாலயிருந்து இங்காலயா வரேக்கிள்ள.. கஷ்டப்பட்டு கடைசிவரைக்கும் கட்டிக்காத்துக் கொண்டு போன எங்கட சாமான்களையெல்லாம் அப்புடியே பங்கருக்கு மேல தான் விட்டுப்போட்டு வந்தனாங்கள். 

அங்கயெல்லாம் ஆள் இல்லாத பிளேன் வந்து சுத்திப்போட்டுப் போக பிறகு கிபீர்வந்து குண்டுகளப்போடும். கடல் பக்கமாவும் பீரங்கிப்படகுகள் இருந்து குண்டுகளக்கக்கும். அங்கயெல்லாம் கதிரவழிய வெளிய ஆள் இருந்தா தலைபோயிடும்.. முண்டம்தான் பேந்து நிக்கும். இதால ஒரே படுக்கை தான் நாங்கள். 

எங்கப்பார்த்தாலும் அங்க ஒரே அழுக்குரல்தான்.. காயம்பட்ட ஆக்களயும் ஆஸ்பத்திரி வழியவும் கொண்டு போய்ப்போட ஒரு இடமில்ல.. அங்க மருந்து கட்ட வெண்டு போனாலும் அது வழிய அதுக்கெண்டு காத்துக்கிடந்து மூண்டாம் நாள் தான் மருந்தும் கட்டலாம்… இப்பிடித்தான் செத்தவனையும் அங்கபாக்கேலாது காயக்காரனையும் பாக்கேலாது எண்ட மாதிரியான ஒரு நில 

செல்விழுந்தா அங்கின அது வழிய ஐநூறு அல்லது ஆயிரம் சனம் சாகும். – இரண்டாயிரம் காயப்படும். 

அங்க அடுத்தடுத்து சனங்களுக்கு சாப்பாடில்லாத பிரச்சினையும் பெரிய பிரச்சினை.. அந்த நேரம் அரிசியின்ர விலை அங்க 2500/= அல்லது மூவாயிரம் ரூபா.. சீனி ஒரு மூடை 1, 1 /2 லட்சம் ரூபா பிறகு சீனியின்ட விலை மூண்டுலட்சம் ரூபாவுமா விலை வந்தது. ஒரு முழுப்போயிலை 1500/= அந்த நேரம் 3 தேங்காயக் குடுத்து ஒரு ஆட்டோ வாங்கலாம். 

2 தேங்காய்க்கு 1 டிவி டெக் எண்டு வாங்கினாங்கள். அப்பிடி வாங்கின எல்லாச்சாமான்களையும் அவயளும் பிறகு அங்கின அங்கின விட்டிட்டு வந்ததுதான். 

ஒரு கொட்டைப் பாக்கின்ர விலை அப்ப 150 ரூபா இந்த விலை குடுத்து வாங்கேலாத ஆக்கள் ஆலம்பட்டையை காயப்போட்டு அதைச் சப்பிச்சினம் -வெத்திலைக்குப் பதிலாய் நாயுண்ணி இலையையும் சீதுளாய் இலையையும் சாப்பிட்டிச்சினம். 

1 வெத்திலையின்ர விலை கொஞ்ச நஞ்சக் காசோ 500ரூவா வெத்திலை. 

அங்க அப்ப -ஐ.சி.ஆர்.சி கப்பலில தான் இந்த வெத்திலையும் வந்திச்சு… அதில சாமான் இறக்கவெண்டு வந்த கூலியாக்கள் இதைக் கொண்டு வந்து வித்திச்சினம். 

1 சுருட்டு 125 ரூவா எண்டும் வித்தவங்கள். 

லக்ஸ்பிறே ஒண்டு அப்பவா மூவாயிரம் ரூவாய்க்கு வித்துது. 

இந்தக்காலம் போலத்தான் – அங்க சங்கத்து வாச்சரை அடிச்சுச் சாக்காட்டிப்போட்டு அம்பது மூடை சீனியைச் சனம் களவெடுத்துக் கொண்டு போயிற்றுது. 

இந்த நேரம் பெடியள் சனம் சாப்பாடில்லாமக் கிடக்குதுகள் எண்டு கண்டு ஒருவடை – ஒரு மோதகம் – ஒரு தேத்தண்ணி 50 ரூவாக்குக்குடுத்திச்சினம். 

இங்கயெல்லாம் டிரைக்டர் மெசின் இருபத்தையாயிரம் ரூவாய்க்கு புத்தகத்தோடயா வாங்கக் கூடியதாயிருந்தது. 

வாகனங்களெல்லாம் செல்விழ எரிஞ்சு எரிஞ்சு உள்ள இட மெல்லாம் ஒரே கரிப்புகைதான் – அதுக்குள்ளாலயா வேற சரியான மழையும். 

காயக்காரர் செத்த ஆக்களத் தூக்கிறதுக்கு ஆக்களில்ல… அதுகள விட்டிட்டு மற்ற ஆக்கள் வந்தது தான் – என்ன செய்யிறது… கையில காயம் காலில் காயம்பட்டதுகளெல்லாம் அரக்கி அரக்கிப் போனதுதான். 

கடைசியா வந்திருந்த இடத்தில ஒரு சின்னத்துண்டுக் காணிக்கிள்ள பக்கத்தில பக்கத்தில் பங்கர் வெட்டி ஒவ்வொரு பங்கருக்குள்ளயும் பத்துப் பதினைஞ்சு பேர் எண்டு குடும்பம் குடும்பமா அதில சனங்கள் இருந்திச்சிதுகள்…. ஆனாலும் பங்கரில் இருக்கிற ஆக்கள் அதுக்குள்ளயே இருக்க வேண்டியதுதான்… அவயள் பக்கத்து பக்கத்து பங்கருக்குப் போகவே ஏலாது… பக்கத்துப் பங்கர் வழிய உள்ள ஆக்கள் காயப்பட்டாலென்ன இவயள் அவயளப் பாக்கவெண்டு கடைசி மட்டும் போகேலாது… அந்த அளவுக்கு செல்லடி… றவுன்சும் வரும். 

பங்கருக்குள்ள அப்படியா இருக்கேக்கிள்ள மேல செல்வந்து விழுந்து அப்பிடியே குடும்பத்தோட ஒண்டடியா அதிலயே செத்தாக்களும் இருக்கினம். 

இப்பிடியெல்லாம் அங்கின ஒரு வீட்டிலயா மூண்டு நாலுபேர் எண்டு அங்க நடந்த சண்டைக்குள்ள செத்த ஆக்களும் இருக்கினம்… பத்துப் பதினைஞ்சு பேர் எண்டும் செத்துப் போயும் இருக்குதுகள். 

இந்த அவதிக்குள்ள நிறைமாத பிள்ளைத்தாச்சியா இருந்த பெண்டுகளிண்ட பாடுகள் பெரிய பாடுகள்… பாவங்கள் அதுகள் பிள்ள பெத்ததெல்லாம் அதுகள் அதுகளிண்ட இருந்த அந்த இடத்திலதான்… அதுகள ஆஸபத்திரிக்கு கொண்டு போக முடியாது… அங்க ஆஸபத்திரியில காயம் பட்டுவாற ஆக்களப் பாக்கிறது எங்க – இதுகள மாதிரி பிள்ளைத்தாச்சியள பிள்ளப் பெறப் பாக்கிறது எங்க… இதால தாயும் பிள்ளையுமா அங்க இங்க கனக்கச் செத்ததும் நடந்தது. 

ஒரு நாளைக்கு ஒரு வேளையெண்டாலும் கிடக்கிற பருப்பையும் அரிசியையும் வைச்சு எங்களுக்கு அங்க சமைச்சுச் சாப்பிடுறதுக்குக் கூட ஏலாது… அப்பிடி எவ்வளவு எவளவு பிரச்சினையள். 

இதுக்கெல்லாம் பிறகு நாங்கள் பச்சைப்புல்லு மோட்ட யிலயிருந்து தண்ணீருக்குள்ளால தண்ணீருக்கால தாண்டு தாண்டு வரேக்க ஆமி எங்களுக்கு கை தந்து தூக்கிவிட்டுது. 

அவங்கள் ஓப்பின் பங்கரில எங்களையெல்லாம் அதுக்குள்ள பாதுகாப்பா இருக்க விட்டிட்டு அவங்க அதுக்கு மேலயா நிண்டு கொண்டு இருந்தாங்கள். 

அங்க கடைசி நேரம் நிமிர்ந்தா எங்களுக்குத் தலை பறந்திடும் -நாங்கள் குனிஞ்சும் தவண்டும் பங்கர் வழிய வந்து விழுந்து கிடந்தும் தான் வந்து சேந்தம். 

ஆத்துக்குள்ளால வரேக்க (நந்திக்கடல்) பிள்ளையளத் தூக்கிவர முடியாது தானே… அந்தத் தண்ணிக்குள்ளால எத்தினையோ மைல் நடந்தும் வரவேணுமே… அதால் வாகனங்களிண்ட ரியூப் வழியதான் காத்தடிச்சு அதுக்கு மேலயா பலக போட்டு பிள்ளைகளை அதில் இருக்க வைச்சுத்தான் இழுத்துவாறது. 

இந்த நந்திக்கடலில எண்டா-எல்லாச் சாதி இனத்து மீனும் இருக்கும்… கெழுத்தி மீன் கூட இருக்கும்… வருறவயள் ஏதும் சாப்பாடு சாப்பிட்டு அது தண்ணியிலயும் விழேக்கிள்ள, அதைச்சாப்பிட உடன அடிச்சுக்கொண்டு இந்த மீனெல்லாம் மேலே வருங்கள்… அப்பிடியா வருற அந்த மீன்களிண்ட முள்ளு ரியூப்பில் குத்த பிள்ளையள ஆக்கள் ஆக்கள் இழுத்து வாற அந்தரியூப்காத்துப் போயிடும். 

பெரிய அந்த மிசின் ரியூப் மீன் முள்ளுக்குத்தி காத்துப் போக பிள்ளையளெல்லாம் தண்ணிக்கிள்ள விழுந்து மூழ்கீடுங்கள்… இருட்டுக்கிள்ள பிறகு என்னதான் செய்யிறது…? அதுகள அதுக்குள்ள எப்பிடித்தான் பிறகு நிண்டு தேடுறது… விட்டிட்டு வரவேண்டியது தான்… இந்த இடத்தால் பகலில் கடல் தண்ணிக்காலயா வரஏலாது… ஏனெண்டா அதில ஆக்களக் கண்டா செல் அடிப்பாங்கள். 

இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டு இவள் தங்கச்சி சொன்ன மாதிரித்தான் கடைசியில நாங்க இங்க வந்து சேந்தம். 

இங்கவந்தா முகாமுக்கு உள்ள எங்களுக்கு சாப்பாடு வருகு தெண்டுட்டு ஐநூறு ஆயிரம் பேர் அதை வாங்கிறதுக்குப் பாயிறது… லைன் பிடிச்சு நிண்டால்தானே இங்கேயும் முகாமுக்குள்ள சாப்பாடு கிடைக்கும். 

இங்க காம்பில உள்ளவயளுக்கெண்டு அவங்கள் இருநூறு, இருநூற்றம்பது சாப்பாட்டுப் பாசல்களைத்தான் அவங்கள் கொண்டருவாங்கள்… அவளவு பாசல்களையும் நாய்க்குத்தூக்கி எறிஞ்சது போல எங்களுக்குப் போட்டுட்டுப் போவாங்கள். 

அதால மிச்சம் பேர்சாப்பாட்டுப் பாசல் கிடைக்காம இருக்க வேண்டியது தான்… இதுக்குப் பிறகு இன்னொரு வாகனம் வரும் -அதிலயும் அப்பிடியாக் கொண்டாந்தே சாப்பாட்டுப் பாசல் குடுப்பினம்.. அதால சாப்பாடு அங்க எல்லாருக்கும் சாப்பிடவெண்டு கிடைக்காது. 

தண்ணீரும் இதே மாதிரித்தான் குடிக்கக் கிடையாது. 

தண்ணியக் கொண்டந்து அவங்கள் குடுத்தாலும் அந்தத் தண்ணியவாங்கிக் கொள்ளுறதுக்கு யத்து ஏதனம் ஒண்டும் கையிலயா இல்லாத நிலை. 

ஒரு குடும்பத்துக்கு ஒரு சாப்பாட்டுப்பாசலெண்டு இங்க முகாமில் வந்து சேந்தாப் பிறகு அப்பிடியாக்கிடைச்சாலும்.. அந்தப் பாசலையே அந்தக் குடும்பத்தில் தங்களுக்க பிரிச்சுச்சாப்பிட ஏலாத பரிதாபமான நில. 

ஏனெண்டா -நாலு நாளெண்டாலும் அவங்களோட சேந்திருந்த தெண்டு போட்டு, இங்க அந்தப்பிள்ளயள இவங்கள் வந்து பிடிச்சுக் கொண்டு போயிருவாங்கள். 

நாங்களெல்லாம் இங்க காம்புக்கு வந்து சேந்து ரெண்டாம் மூண்டாம் நாள் யூனியன் கோப்பிறட்டி லொறி இங்கயா வந்திச்சு.. அவங்கள் வந்து சீனி தேயிலை – டேட் போன சாமான்களும் கொண்டு வந்து தந்திட்டுஅதுக்கு -வில ஆயிரத்து ஐநூறு ரூபா-ரெண்டாயிரம் ரூபா-எண்டு சொல்லுவாங்கள். 

என்ன செய்யிறது நாங்கள் அதையும் ஒண்டுமில்லாத அங்கினையா எங்கட தேவைக்கு வாங்கத்தானே வேணும்…? 

என்று பிரபாவின் தமையன் என்னைப் பார்த்துக் கேட்ட இந்தக் கேள்வியோடு – தான் சொல்லி வந்ததை நிறுத்திய பிறகு – நான் ஏதும் பேசாமல் சில நிமிடங்கள் இருந்தேன். அப்படியாய் இருந்து கொண்டிருந்த நேரத்திலே என் மனதில் விழும் சாட்டையடிகளை நான் வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு இத்தருணத்தில் இந்த உலகத்தையே வெறுத்தமாதிரி இருந்தது. இருதய அடைப்பிலிருந்து இரத்தம் உருவிக்கொண்டு சீறி று எழுந்தது மாதிரி – பக் பக் என்று எனக்கு நெஞ்சு அடித்துக் கொண்டிருந்தது. 

நோகாமல் புண்ணியம் சம்பாதிப்பவர்களெல்லாம் பக்தி சுபாவத்தோட இராமாயணம் – பாரதம் – கதைகளைவைத்துப்படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

நியாத்திற்காக கொல்வதும் கொல்வதும் – கொல்வதும் தான் தர்மம் – என்று சொல்லிச் சொல்லி அதர்மமான நியாயமற்ற வழிகளை யெல்லாம் கடைப்பிடித்துப் போர் நடத்தி பின்பு அமைதியுடன் அயர்ந்து தூங்குகிற அந்தக் கதாபாத்திரங்களின் கதைதான் இன்றைய இந்த உலக வாழ்விலும் நடந்து கொண்டிருக்கிறதோ..? 

லேசில் இனி எப்படித்தான் இந்தத் துன்பத்தையெல்லாம் மனதிலிருந்து விடுவித்துக் கொள்வது 

ஐயோ இந்தக் கதைகளையெல்லாம் நான் இவர்களி டமிருந்து கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாமே…? 

எனக்கு படிப்படியாக உடல் இயக்கமெல்லாம்தணிந்து கொண்டு வருவது மாதிரியாக இருந்தது. 

சருகுகள் கிணற்றிற்குள் உதிர்ந்து விழுவதைப் பார்ப்பது போல தலையைக் குனிந்து கொண்டு நான் கீழே பார்த்தபடி அந்த விதமான யோசனைகளோடிருந்தேன். அந்த மூன்று பேருமாக வுள்ள நாங்கள் மிச்சம் இருக்கும் மீதி இது தான் எங்களிடத்தி லென்று எப்படி ஒரே நேரத்தில் பெருமூச்சு விட்டுக் கொள்வது 

நான் அவர்களை விட்டு அந்தக்காரியத்தில் அவ்வே ளையில் முந்திக் கொண்டவனாகிவிட்டேன். 

(மார்ச் 2010)

– வெளிச்சம் சிறுகதைகள், முதற் பதிப்பு: டிசம்பர் 2010, திருமகள் பதிப்பகம், கொழும்பு.

நீ.பி.அருளானந்தம் நீ. பி. அருளானந்தம் இலங்கையின் இலக்கியத் தளத்தில் நாவல், சிறுகதை, கவிதை எனப் பல்துறைகளிலும் பங்களிப்பு வழங்கி வரும் ஒரு முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஆவார். பிறப்பும் பின்னணியும் இவர் 1947 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் தேதி இலங்கையின் வவுனியாவில் உள்ள சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் பிறந்தார். யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து மற்றும் சில்லாலையைச் சேர்ந்த லூர்தம்மா தம்பதியினரின் மகனாவார். வவுனியா இறம்பைக்குளம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *