தெரிந்தும் தெரியாமலும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: October 11, 2026
பார்வையிட்டோர்: 40 
வாசிப்பு நேரம்: < 1 நிமிடம்

(1969ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதோ! கீதா. மழைப்போர்வைக்குள் தன்னெழில் மேனியைப் பதுக்கிக் கொண்டு, பஸ்ஸிலிருந்து இறங்கி, அலுவலகம் நோக்கி நடந்துகொண்டிருக்கிறாள்.

விழிகள் பட படக்க சற்றுத் தள்ளிப் பின்னால் வந்துகொண்டிருந்த ரவி யின் கால்களில் திடீரென்றொரு வேகம், பரபரப்பு! குழம்பிய உறக்கமும், கசந்த உணவும், தவிக்கும் நெஞ்சமுமாக அவனை ஆண்டாண்டாக வதைத்து வரும் கீதா அவன் மனதில் குளிர் நிலவாய் நிறைந்து நின்றாலும், பணிமனையிலோ நெருப்புப் போன்றிருப்பாள்.

பேச்சில், செயல்களில் எல்லாம் ஆண்மையே அணுக முடியாச் சுவாலைவீச்சு! அவளிடம் போய் நேருக்கு நேர் நின்று ‘நான் உன்னைக் காதலிக்கிறேன் கண்ணே கீதா!’ என்று கூறுவதற்கு ரவி மட்டுமல்ல எவனுமே துணியமாட்டான். ஆகவேதான் அந்த அரிய திட்டத்தை அவன் தீட்டீயுள்ளான். அதற்காக அவன் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் வெகு அழகாக வாய்த்திருக்கிறது.

ஓசைப்படாமல் வேகமாக நடந்து அவளை நெருங்க நெருங்க நெஞ்சில் ஒருவித பயம் பதைபதைப்பு இதோ அவளுக்கு இடப்பக்கமாக அருகில் வந்தும் விட்டான். “ஹல் குமார்” என்று கூவிக்கொண்டு சட்டென்று ஒருகையால் அவளை இறுக அணைத்துக் கொள்கிறான், அவளென்று தெரியாதவன் போல!

“யூ டாம் பூல்!” என்று திடுக்கிட்டுப் பதறுகிறாள் கீதா. மறுகணம் “பளார்!” ரவியின் இடக்கன்னத்தில் மழைநீர் தெறித்துப் பறக்கிறது. அடியின் வலி பொறுக்க முடியாமல் கன்னத்தைத் தடவிக்கொண்டு அதிர்ந்து மனமழிந்து நின்றவன் செவிகளில் “ஆ! நீங்களா…. ஐ ஆம் எக்ஸ்ரீம்லி சொரி!”

அவனால் வாய்திறக்க முடியவில்லை.தெரிந்தும் தெரியாமலும் செய்த குற்றத்துக்கு தெரிந்தும் தெரியாமலும் தண்டனையுமா?

”என்னை மன்னிப்பீர்களா?” என்ற கெஞ்சலால் அலைப்புண்டு அவள் முகத்தை நிமிர்ந்து பார்க்கிறான் ரவி! அங்கே… அவனது மௌனத்தைத் தாங்க முடியாமல் கலங்கும் விழிகளில் அவள் இதயம் அவனுக்கு எழுதிய அடிமைச்சீட்டு கண்ணீராகப் பொங்கி நிற்கிறது. 

”என் கன்னம் மட்டுமல்ல, உடம்பு, இதயம், எல்லாமே இனிக்கின்றனவே கீதா!” என்று ரவி சிரித்த போது கீதா கன்னஞ் சிவக்க முறுவலித்து நிலம் பார்த்து நிற்கிறாள். 

– சின்னஞ்சிறு கதைகள் (முதலாம் தொகுதி), முதற் பதிப்பு: 1969, தமிழருவிப்பதிப்பகம், சுன்னாகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *