கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 21, 2026
பார்வையிட்டோர்: 91 
வாசிப்பு நேரம்: 9 நிமிடங்கள்

(1924ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அதிகாரம் 1-3 | அதிகாரம் 4-6

முதல் அதிகாரம்

உலகிலுள்ள உயிர்களெல்லாங் களிக்கும் படியாகக் கடலின் அலைகள் ஓம் ஓமென்று இடையறாது முழங்கிக் கொண்டிருக்கின்றன. விரிந்த ஆகாயப்பரப்பில் நக்ஷத்திரங்கள் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றன. மாப்பொந்துகளிலும் இடிந்த மண்டபங்களிலுமிருந்து வெளிப்போந்து ஆந்தைகள் இரைதேடுவதும் கிளைகூட்டுவதுமான சந்தடிகள் மிகுந்திருக்கின்றன. கட்குடியர்கள் மயங்கிவிழுந்து ஆடைசோர்ந்து போனதுந்தெரியாமல் நடுத்தெருக்களில் பிரேதம்போல கிடக்கிறார்கள். சிலகுடியர்கள் வம்புந் தும்பும் பேசிக் கொண்டு அங்குமிங்கும் அல்லாடுகிறார்கள். சத்திரவாசல்களிலும் சாப்பாட்டுக் கடைப்பக்கங்களிலும் நாய்களது குரைப்பும் பிணக்கும் பலிந்திருக்கின்றன.சாவடிகளிலும் வெளித்திண்ணைகளிலும் ஏழை ஜனங்கள் நிர்விசாரமாய்க் குறட்டையிட்டுத் தூங்குகிறார்கள். இளஞ் சங்கீத வித்வான்கள் பாடல்வேறு பக்கவாத்தியம் வேறாக உழறி வழிகிறார்கள். திரண்டவியாபாரம் நடக்கும் பெரிய பெரியமளிகைகளும் கடைகளும் தடால் தடாலென்று கதவுகளால் மூடப்படுகின்றன. கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளில் அவிந்தவைபோக இரண்டொரு தெருலாந்தர்கள் மட்டும் மினுக்கு மினுக்கென்று எரிந்து கொண்டிருக்கின்றன. தாலூகாக் கச்சேரிமணியும் டக்குடக்கென்று பன்னிரண்டடித்து விட்டது. இந்தச்சமையம் மணிமங்கலத்திற்கு மேற்கே அரைமைல் தூரத்திலுள்ள லக்ஷமிமால் என்ற நாலுகாற் கூரைச் சாவடியில் ஒரு சிறுவெளிச்சம் அடிக்கடி மறைந்து தோன்றிக் கொண்டிருந்தது. மேல்மாடியில் படுத்திருந்த அவ்வூர்த் தாசில்தார் நெல்லையப்பபிள்ளை அந்த வெளிச்சத்தைக்கண்டு அதனை இன்னதென்றறியப் புறப்பட்டுச் சந்தடி இல்லாமல் நடந்து சாவடிக்கற்றூண் மறைவிற்போய் நின்றுகொண்டு வெளிச்சம் வருகிற இடத்தைக் கவனித்துப் பார்த்துக்கொண்டு நின்றார். கூடச்சென்ற வேலைக்காரன் மாசிலாமணி மற்றொரு தூண்மறைவில் நின்றுகொண்டு எஜமானுடைய நோக்கத்தை யெதிர்பார்த்திருந்தான். 

சாவடியின் மையத்திலிருக்கிற சதுரத்திண்ணைமீது கைலாந்தர் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. வெளிச்சத்தின் எதிர்ப்பார்வையில் இரண்டுமனிதர்கள் இடைக்கும் தலைக்கும் கறுப்புச்சாய வேஷ்டி கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் சரீரப் பருமையும், கருமையும், ஆட்டுக்கிடாய்க் கொம்பைப்போல திருக்கி முருக்கிய மீசையும், இருளோங்கிய அக்காட்டில் நெல்லையப்பபிள்ளையைத் தவிர வேறு எவரையானாலும் நடுநடுங்கச்செய்திருக்கும். அவர்களில் வடக்கு முகமாகத் திரும்பியிருந்தவனுடைய வலக்கைப் பக்கத்தில் தலைவெட்டியரிவாள் ஒன்று பளபளவென்று மின்னிக் கொண்டு கிடக்கிறது. இருவருக்கும் இடையில் ஒரு மண் தாழி வைக்கப்பட்டிருக்கிறது. அதனோரமாக நாலு புட்டிகள் இருக்கின்றன. தாழியிலிருக்கிற எதையோ தின்று கொண்டும், தலைக்கொரு புட்டியாகக் கையில் வைத்துக் குடித்துக் கொண்டும், அவ்விருவரும் சம்பாஷிக்கத்தலைப்பட்டார்கள். அவர்களில் ஒருவன், 

ஒச்சன்:- மருளாடியன்னே! இன்னைக்கு வெகுதூரம் நடந்திருப்பம் போளே இருக்குதே? 

மற்றொருவனான மருளாடி:- தம்பி ஒச்சா! அருகாத மள்ள பதிங்காதமிண்டாலும் நடக்கத்தக்க நான் சளிக்கிறவனின்ளே; எடுத்த காரியத்தை முடிச்சண்ணைக்கள்ளோ எடுத்தது சடளம். 

ஒச்:- நீ அண்ணைக்குச் சொண்ணது போளே சாமான் வந்திருச்சு அப்பரமெண்ணா? 

மரு:- இந்தப்பெய தலைப்பிள்ளைதானா? இவன் ஆத்தாளும் தலைச்சனா இருக்கோணும் ஏண்டாப்பா அப்படித்தாணா? 

ஒச்:- ஆமன்னே அதெள்ளாஞ்சரியா அமைஞ்சு போச்சு. 

மரு:- ரெண்டு வயசிருக்கும் போளே தெரியிது எங்கிட்டுக் கிடைச்சது? 

ஒச்:- அன்னே அதெள்ளாஞ் சொள்ளக்கூடிய சங்கதி யிள்ளை ஆணாளும் ஒங்கிட்ட சொள்ளாமே எண்ணா; சுருக்கமாச் சொள்றேன்; இது ஒரு சவியகாரவீட்டுப்பய; இவன் அப்பேன் பத்துக் கிராமத்துக்கு ஒரு அதிகாரி. 

மரு:- எந்தவூர்? 

ஒச்:- நள்ளபேரு வாய்க்கிளே இருக்கிது நெணவில்லை.

இப்படி ஒச்சன் பேசிக்கொண்டு வரும் பொழுது திண்ணை மறைவிலே ஒரு சிறுபழந்துணியிலே கிடத்தியிருந்த குழந்தை அழ ஆரம்பித்தது. அழுகைச் சத்தங் காதிலே கேட்டவுடனே மருளாடி எதையோ குழந்தை வாயில் வைத்தான். அழுகை நின்று விட்டது. மாசிலாமணி தாசில்தார் முகத்தைப்பார்த்தான். அவர் சுழல் துப்பாக்கியைச் சரி பண்ணிக்கொண்டு மிகுந்த படபடப்புடன் நிற்கிறார். 

மருளஈடி ஒச்சனைப்பார்த்து டே தம்பி ஒச்சா! தளச்சன் பிள்ளை மண்டையோட்டிலே மறவுமை சேத்துக்குடுத்திட்டேனிண்டா பணக்கோட்டை தான் ஒணக்கு. எனக்குப் பேச்சுப்போளே நடந்திரனும். 

சரியென்று ஒச்சன் ஒப்புக்கொண்டவுடனே தாழிமுதலிய வைகளெல்லாம் அப்புறப்படுத்தப்பட்டன. படுக்கையிலிருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வா என்று ஒச்சனுக்கு மருளாடி சொன்னான். 

சுருண்டு சுருண்டு நெறிந்த நரியகுஞ்சிவாய்ந்த தலையும், பாலொழுகும் ரோஜாப்பூ நிறமுள்ள வதனமண்டலமும், கருங்குவளை மலரை நிகர்த்த மைதோய்ந்த கண்களும், வளைந்த விற்போன்ற புருவங்களும், கோவையிட்ட முத்துச்சாமனைய பல்வரிசைகளும், நுனியில் வைரச்சன்னமிழைத்த சிறிய பவளத்துண்டை யொத்த கை விரல்களும், வாழைக்குருத்துக் கிணையான சரீரகாந்தியும், பூவரசம் பூவின் உள்வர்ணத்தை நிகர்த்த உபயபாதங்களும், அமைந்த ஓர் இளங் குழவியை உயிருருக்கிக் குடிக்கும் ஒரு பெரும்பேயே கண்டாலும் கண்கலங்கிக் கழியுமன்றோ? அந்தோ! கொஞ்சமேனும் இரக்கமில்லாமல் கொல்லத் துணிந்த மருளாடியின் மனமானது கல்லோ? இரும்போ? வேறியாதோ? யாம் அறிகிலேம். சாண்வயிற்றை வளர்ப்பதற்குக் கிடைக்கப் போகும் அற்பப் பொருள் வருவாயை முன்னிட்டு இரத்தந்திரளாத இளங்குழவியைக் கொல்லத்துணிந்த இத்தகைய கொடிப்பாவிகள் பின்னையெந்தக் கொடுஞ் செயல்தான் செய்யத்துணியார்கள். அம்மம்ம! இந்நீசர்களை நினைத்த நெஞ்சமும் பேசியவாயும் வேகுமே. இப்பெரிய பூமண்டலத்தில் எத்தனையோ தொழில்கள் இருக்கின்றனவே; அவற்றினொன்றால் ஜீவிக்கக்கூடாதா? நாதன் அற்றுத்திரிகிற நாய்களும் வயிறு வளர்க்கவில்லையா? சிசுஹத்தி முதலிய கொடிய கிர்த்தியங்களைச் செய்து சம்பாதிப்பதைப் பார்க்கிலும் பிச்சையெடுத்துப் பிழைக்கலாமே. மாமிஸம் புகிப்பதை ஜாதித்தொழிலென்று சொல்லும் புத்திசிகாமணிகளும், ஆடு,கோழி முதலிய ஜந்துக்களைக் கொலை செய்யக்கூசி, அந்நியரைக் கொண்டு கொல்வித் துப்புசிக்கின்றனரே. விலங்கினங்களை வதைத்துத்தின்கிற மிருகங்களும் அவைகளுக்குப் பசியில்லாத போது ஒருயிரையுங் கொல்லத் துணியாவே. மனிதர்களுக்கு ஜென்மசத்துருவாயிருக்கிற நல்லபாம்பும் குதலைமொழிக்குழவிகட்குக் குடையாகப் படத்தை விரித்துப் பகல் வெயிலை மறைத்ததாகப் பகர்கின்றார்களே. கடல்போன்ற பெருந்துயரில் அகப்பட்டுக் கரைகாணாது தத்தளிக்கும் கவலையாளரும் சிசுக்களைக் கண்டால் சிந்தை மகிழாமலிராரே. இமயகிரிதொடங்கிக் கன்னியாகுமரி வரை உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்றத் தீர்த்த யாத்திரை செய்வதும், பட்டினியாயிருந்து நோன்பு நோற்பதும், அரிய பெரியவேள்விகள் இயற்றுவதும், மகவை விரும்பியன்றோ! எத்துணைப் பெருந்தவமியற்றி எம்மேம்பாட்டினை வாய்ந்த எப்பிரபு வினாற் பெறப்பட்ட இளம்பலனோ கொல்லத்துணிந்த மருளாடி கட்கத்தை எடுக்கும் போது முன் ஆபத்தமாயிருந்த தாசில்தார் கொஞ்ச முந்தாமதியாது பிரயோகித்த குண்டு போய் மருளாடியின் கையைக் கத்தியுடன் கீழே விழப்பண்ணி விலாவில் ஊடுருவிற்று. 

ஆபத்து வந்துவிட்டடுதன்றறிந்த ஒச்சன் திடீரென்று கீழே குதித்து அடுத்துள்ள நரணற்புதரி லொளித்துக் கொண்டான். பேச்சு மூச்சற்று வயலைக் கொடி போற்றுவண்டு கீழே கிடக்கும் குழந்தையை ஆவலாகப்போய்த் தூக்கினார் தாசில்தார். வாய்நிறையத்துணியைத் திணித்து வைக்கப்பட்டிருந்தது. அதைக்கண்ட அவருக்குக் கைகால் நடுங்கிப் போய்விட்டது; மெய்மறந்து நின்றார். மாசிலாமணி சட்டென்று வந்து வாயிலிருந்த துணியை மெதுவாக எடுத்தான்; சற்று நேரங்கழித்துக் குழந்தை புரண்டது. உடனே ஓடைத்தண்ணீரைக் கொண்டு வந்து வஸ்திரத்தில் நனைத்துக் கொஞ்சங் கொஞ்சமாக வாயிற்பிழிந்தார்கள். தெய்வகிருபையால் பிள்ளை பிழைத்துக் கொண்டது. பின்பு தாசில்தாரும் மாசிலாமணியும் அக்கூரைச்சாவடியைச் சுற்றிப் பார்த்து விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மணிமங்கலம் போய்ச் சேர்ந்தார்கள். அச்சாவடித் திண்ணையில் கொலையாளிகளால் போட்டு விட்டுப் போயிருந்த வெற்றிலைபாக்குப் பையில் இருந்த கடிதத்தை மாசிலாமணி யெடுத்துக் கொடுத்தான். அதனை லாந்தர் வெளிச்சத்தில் படித்துப் பார்த்துத் தமது சட்டப்பையில் வைத்துக் கொண்டார் தாசில்தார். 

இரண்டாமதிகாரம்

“பாப்பையாபுரம் பண்ணைச் சோமசுந்தரம்பிள்ளையினுடைய இரண்டு வயதுள்ள ஆண் குழந்தையொன்று திருச்செந்தூரில் விசாகத்திருகாட் கூட்டத்தில் காணாமற் போய்விட்டது. அதைக் கண்டு பிடித்து உடையவர்கள் வசம் ஒப்பிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் அப்போது அக்குழந்தைக்குப் போட்டிருந்த ஆபரணங்களும் சன்மானிக்கப்படும். இந்த வைகாசி மாதம் முடிவிற்குள்ளானால் திருச்செந்தூர் மேலமாடவீதிச் சிவபிரகாசக்குருக்களையா வீட்டிற்கொண்டு வந்து ஒப்பித்தல் வேண்டும். அதற்குமேலானால் பாப்பையா புரத்திற் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இனாம் ரூபாயும் நகையும் உடனே கொடுக்கப்படும். நிறம் செவப்பு, வலதுமணிக்கை உட்புறத்தில், “தெ” என்னும், எழுத்துப்பச்சை குத்தியிருக்கும்” என்ற விவரமாக அப்பட்டினத்திலும் அதைச்சேர்ந்த நாட்டுப்புரங்களிலும் விளம்பரப்படுத்தியும் அக்காலத்தில் நடைபெற்று வந்த தமிழகம் பரதகண்டம் முதலிய வர்த்தமானப்பத்திரிகைகளிற் பிரசுரித்தும் பதினைந்து நாள் வரை திருச்செந்தூரிலிருந்து பார்த்துவிட்டு யாதொரு விஷயமும் புலப்படாமல் பாப்பையாபுரம் போய்ச் சேர்ந்தார் நிர்ப்பாக்கியரான சோமசுந்தரம்பிள்ளை. திருவிழாவிற்குப் போன பண்ணைப்பிள்ளை ஊர் வந்து சேர்ந்தவுடனே உள்ளூர் ஜனங்களும் பக்கத்து மனிதர்களும் திரள்திரளாக வந்து குழந்தையைப் பற்றிக் கேட்பதும் துக்கங் கொண்டாடுவதுமாக இருந்தார்கள். வந்தவர்களிடத்திலெல்லாம் அழுவதைத் தவிர வேறொரு செயலுமற்றிருந்தார் பிள்ளை. அவர் மனைவி மீனாட்சியம்மாள் தான் குழந்தையில்லா திருந்ததும், விரதாதிகளிருந்து ஆலயங்கட்கு நடந்ததும், மாதாந்த வெள்ளிக்குத் திருச்செந்தூருக்குப் போய் வந்ததும், குழந்தைக்கு வியாதி நேரிட்டிருந்த காலத்தில், தான் பத்தியமிருந்ததும்,பையன் யோகசாலி யென்று சாஸ்திரி யொருவர் சொன்ன போது சந்சோஷப்பட்டதும், சண்முகநாதன் என்று பெயரிட வேண்டுமெனத் தான் சொன்னதற்குத் தன் கணவன் தெய்வசிகாமணி யென்ற பெயரும் முருகக் கடவுளுக்கே உரியதென்று நிலைநாட்டிப் பெயரிட்டதும் ஆகிய ஒவ்வொரு விஷபத்தையும், ஒன்றன்பின் னொன்றாகச் சொல்லிச் சொல்லிக் கதறினாள். மிராசுதார் தம்பி தங்கச்சாமிபிள்ளை தமக்கும் தமையனாருக்கும் இதுவே பிள்ளையென்று நம்பியிருந்த இந்த ஒரு சந்ததியும் தவறிவிட்டதினாலே தான் உயிரோடிருப்பதில் யாதொருபயனு மில்லையென்றும், பிராணத்தியாகஞ் செய்து கொள்ளப் போவதாயும், வந்தவர்களிட மெல்லாஞ் சொல்லித் துக்கித்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி ஒப்புச்சொல்லி அழுததற்கு ஒப்புச் சொல்ல முடியாது. 

சோமசுந்தரம்பிள்ளைக்கு நாட்செல்லச் செல்லப் புத்திரசோகம் அதிகரித்துப் பைத்தியம் பிடித்துவிட்டது. மஹாபுத்திசாலியாகிய அவர் மனைவி தன் மனோ துக்கத்தை யடக்கிக் கொண்டு தன் கணவனுடைய பணிவிடையில் வழுவாது நடந்து வந்தாள். மீனாட்சியம்மாளுக்குப் பெரியபிதாவின் புத்திரரும் கல்விகேள்விகளிற் சிறந்தவரும் ஒழுக்கத்திற்கு உரையாணி போன்றவரும், பாப்பையாபுரம் சைவ சித்தாந்த சபையின் அக்கிராசனருமான சாமிநாதபிள்ளை மட்டும் குழந்தை தவறிப்போனதைப் பற்றித் தமக்குச் சந்தேகந் தோன்றுவதாகச் சோமசுந்தரம்பிள்ளையிடம் சொல்லிக் கொண்டு வந்தார். அதைக் கவனிப்பதற்குப் போதுமான ஸ்திரபுத்தியில்லாமை யினாலும் குழந்தையினது நகைக் காசைப்பட்டுத் திருடர்கள் கொண்டு போய்க் கொன்றிருப்பார்கள் என்று தங்கச்சாமிபிள்ளை அடுத்தடுத்துச்சொல்லி வந்தமையாலும் பிள்ளையைத் தேடும் பிரயத்தனம் நின்று போய் விட்டது. திருவிழாவிற்குப் போன காலத்தில் தமது மிராசைத் தம்பி பார்த்து வரும்படி செய்து கொண்ட நியதியின்படியே இப்போதும் அவரே பார்த்து வருகிறார். தமையனார் வசம் ஒப்பிக்க அவர் நினைக்கவே இல்லை. சோமசுந்தரம்பிள்ளையும் மிராசைத் தம்மிடம் ஒப்பிக்கும்படி கேட்கவுமில்லை. 

உயர்ந்தோர் தாழ்ந்தோர், அந்நியர் பகைஞர், நேயர் என்னும் தாரதம்மியங்களை எல்லா விஷயங்களிலும் சிலர் பாராட்டுவதுண்டு; சிலர் சில காரியங்களில் மட்டும் பாராட்டுவார்கள். சோமசுந்தரம்பிள்ளையோ நியாய விஷயத்தில் இதைக் கிஞ்சித்தும் எண்ணக் கூடியவரல்லர். பெற்ற பிள்ளையாயிருந்தும் ஒரு குற்றமியற்றி யிருக்குமாயின் அதற்குத் தக்கபடி தண்டிக்க வேண்டுமென்றே சொல்லுவர். நிஷ்பக்ஷபாதகமாக வழக்குத் தீர்க்கிறவரென்று, அந்தப் பிராந்தியத்தி லுள்ளவர்களெல்லாம், அவரைக் கொண்டாடுவார்கள். பிறருக்குச் துன்பஞ் செய்கிறவன் துஷ்டமிருகமென்றும், உதவி செய்யாதவன் பாதிரி மரமென்றும், இதஞ் செய்பவனே மனிதனென்றும், அடிக்கடி அவர் சொல்லிக் கொள்வார். எந்த வேளையும் ஏழைகளுக்கு உதவி செய்வதிலேயே நோக்கமாயிருப்பார். சத் விஷயங்களிற் பிரவர்த்திக்காத பெரும் பணக்காரர்களைக் கண்டால், அற்பத் துரும்புக்குச் சமானமாக எண்ணிக் கொண்டு போய் விடுவார். கல்வி, அறிவு ஒழுக்கங்களால் மேம்பட்டுயர்ந்த ஆன்றோர்களுக்கு மட்டும் பணிந்துரையாடுவரே யன்றி வெளிவேஷ ஆஷாட பூதிகளது முகாலோபனமுஞ் செய்யார். ஒருவரைக் காப்பாற்றுகிறே னென்று வாக்குக் கொடுத்து விட்டால், பிறகு அது விஷயமாகத் தலை போகிறதாயிருந்தாலும் பின்னிடையார். லக்ஷக்கணக்கான பணம் கையிருப்பிலிருந்தும் வட்டிக்குக் கொடுத்து வாங்கியறியார். இப்படிப் பற்பல சுகுணங்களும் வாய்ந்தவர். 

இரண்டு வருஷத்திற்கு முன், தங்கச்சாமிபிள்ளைக்குக் கல்யாணஞ் செய்து வைக்க முயற்சித்ததில், பெண் தீர்மானிக்கும் விஷயத்தில் தமையனாருக்கும், தம்பிக்கும் அபிப்பிராய பேதம் ஏற்பட்டு விட்டது. எங்ஙனமெனில் மீனாட்சியம்மாளுடைய தங்கை குழல் வாய்மொழியம்மாளை, நிச்சயிப்பதாகச் சோமசுந்தரம்பிள்ளை சொன்னார். தங்கச்சாமிபிள்ளையோ, ‘அவள் ஏழை வீட்டுப் பெண் ணென்றும், ரூபவதியல்லவென்றும் படித்திருப்பதினால் அந்நியருக்குக் கடிதம் எழுதத்துணிவளென்றும்’ தப்பான அபிப்பிராயங் கொண்டு அவளை விவாகஞ் செய்ய மறுத்துவிட்டதோடு, புத்தூர்ப் பூமிநாதபிள்ளை மகள் காமாட்சி பென்பவளையே, தாம் காதலித்திருப்பதாகவும் வெளியிட்டார். புத்தூர்பபிள்ளையைப் பற்றி, நல்லபிப் பிராயம் சோமசுந்தரம்பிள்ளைக்குக் கிடையாது. அவன் துஷ்டர்கள் சகவாஸமே கொண்டவன்; ஸரத்துக்கள் சம்பாவுனை சற்றேனுங் கொண்டவனல்லன்; பத்து வருஷத்திற்கு முந்திப்பரம ஏழையாயிருந்தான். ஆடு மாடுகள் கொள்ளல், விற்றல் செய்பவரிடமிருந்து தரகு பெற்று அதனால் ஜீவித்து வந்தான். வாசாலகமாகப் பேசி வாங்கித் தருவதும், விற்றுக் கொடுப்பதுமான கெட்டிக்காரத்தனம் அவனிடத்தி லிருந்தபடியால், வடக்கே தெற்கே இருந்து வருகிற மாட்டு வியாபாரிகள் அவனையே தேடுவார்கள். மாடு மாற்றிப் பூமிநாதனென்றே சாதாரணமாக எல்லா ஊர்களிலும் சொல்வதுண்டு. புத்தூர்ப் பேட்டையில், ஒரு பெரிய மாட்டு வியாபாரி வந்து ஆறுமாஸமாக இருப்பாயிருந்து கொண்டு வியாபாரஞ் செய்து வந்தான். அவனுக்கு ஒருநாள் விஷபேதி கண்டிருந்த சமையம் தன்னிடமிருந்த பணத்தைக் கொடுத்து வைக்கத் தகுதியான மனுஷாள் பழக்கமில்லா திருந்தபடியால், தரகன் பூமிநாதன் வசம், தன் பணத்தை ஒப்பித்துத் தான் இறந்துபோம் பக்ஷத்தில் தன் மகனிடம் கொடுக்க வேண்டு மென்றும், அவன் வரத்தாமிதப்பட்டால் தபால் மூலமாக அனுப்பிவிட வேண்டுமென்றும், கேட்டுக்கொண்டான். பூமிநாதபிள்ளையும், அவன் சொல்லிய சங்கதிகளில் ஒன்றும் தவறாது முடிப்பதாக வெகு ஸொந்தமாகப் பதில் கூறினான். கடைசி வார்த்தை முடிவதற்குள் காலகதியால் வியாபாரி விண்ணுலகடைந்தான். பூமிநாதன் தன் சிநேகிதர்களிற் சிலரை உதவிக்கு வைத்துக்கொண்டு, அவனை நல்லடக்கம் பண்ணிவிட்டுட்களிப்புற்றிருந்தான். சிலதினங்கழித்து அவ்வியாபாரியின் மகன் பல பெரிய மனிதர்களுடன் வந்து பூமிநாதபிள்ளையைக் கண்டு, தன் தகப்பனுடைய ஸ்திதியைப்பற்றி விசாரித்தான். அதற்குப் பூமிநாதன் அவனிடத்திற் காசு பணம் யாதொன்றும் இருந்திருப்பதில்லை யென்றும், இருந்தால் தன்னிடம் ஒப்பித்திருக்கக் கூடுமென்றும் வியாபாரத்தில் பெரு நஷ்டம் அடைந்திருந்தான் என்றும் அவனை யெடுத்தடக்கம் பண்ண ரூ 20-14-7 தனக்குச் செலவாயிருக்கிற தென்றும், அதைத்தனக்குக். கட்டாயம் கொடுத்துவிட வேண்டுமென்றும், சொல்லி உண்மையை ஒரேயடியாக விழுங்கிவிட்டான். அதுமுதற் பூமிநாதன் பூமிநாதராய்ப் பணக்காரர் வகுப்பிற் சேர்ந்து விட்டார். 

அநியாய வட்டி வாங்கல், பொய்ப்பத்திரம் பிறப்பித்தல் பொய்ச்சாக்ஷியங் கூறல் முதலிய துர்க்கிருத்தியங்களில் அவருக்கு மேற்பட்டவர்கள் இல்லையென்று மற்றையோர் சொல்லும்படிக்கு வந்துவிட்டார். தம் பெயரைச் செவ்வையாக எழுத்த் தெரியாவிட்டாலும், பத்திர வக்கணைகள் எழுதச் சொல்வதில் மகா சமர்த்தராய் விட்டார். அவரிடம் கடன் வாங்கினவர்கள் பணத்தைச் செலுத்தும் போதே தாங்களெழுதிக் கொடுத்திருக்கிற ஆதரவுகளைச் செல்லெழுதி வாங்கிக் கொள்ள வேண்டும். நாளைக்கு வாங்கிக் கொள்ளலா மொன்று போய்விட்டால் மறுபடியும் பத்திரத்திற்கண்ட தொகையை வட்டியுடன் செலுத்தியே தீரவேண்டும். “அற்பரானவர்க்குச்செல்வம் அல்லது பகைவேறுண்டோ” மேன்மக்களது சிறந்த நடையில் ஒரு சிறிதும் தன்னிடத்திலில்லை யென்றாலும், வாதனவஸ்திக ஆபரண போக போக்கியங்களை அம் மேன்மக்கட்குக் குறையாமலே ஆநுபவித்து வந்தார். 

இந்த விதமாக வெளிக்குப் பகட்டும் உள்ளே தீங்கு விளைவிப்பதாயுமிருக்கிற, மேல் நாட்டுச் சாறாயச் சீசாவையொத்த பூமிநாதபிள்ளையினுடைய இருதயக் கோணலைக் கவனியாது வெளிவேஷ நடையுடையைக் கண்டு மயங்கித் தங்கச்சாமிபிள்ளை சம்பந்தஞ் செய்து கொள்ள நினைத்ததைச் சோமசுந்தரம் பிள்ளை தடுத்துப் பல நீதிகளை எடுத்துப் போதித்தார். 

பெண்கொள்ள நினைக்கிறவன் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவைகள் பல. பெண்ணைப் பெற்றோருக்கும் தனக்கும் சாதி சமய ஒற்றுமை இருக்கிறதா? மாமன் மாமி நன்னடக்கை யுடையவர்களா? பெண்னுடன் பிறந்தவர்கள் தங்கள் தகுதிக்குத்தக்க இடங்களில் வாழ்க்கைப்பட்டு நிறை தவறா திருக்கின்றார்களா? பெண் சுகுணவதியா? கல்வியுடையவளா? சௌந்தரவதியா? தனவந்தன் மகளா? என்பன முதலியவைகளேயாம். இவற்றுட் கடைசியாகக் குறிக்கப்பட்ட அம்ஸங்கள் இரண்டே, பூமிநாதபிள்ளை மகளுக்கு ஒரு வாறு அமைந்துள்ளன வென்று சொல்லலாம். இவ்விரண்டு லக்ஷணமாத்திரமுள்ள பெண்களையடைய அநேகமாகப் பிரயாசைப்பட வேண்டியதிராது. இவ்விதப் பொருத்தத்தை முன்னிட்டு விவாக விஷயத்தில் மனந்துணிவது மதியீனர் செய்கையாம். ஒரு சிறு காரியத்தையும் தீர்க்காலோசனை பண்ணாமல் முடிவுக்குக் கொண்டுவரக் கூடாது. மனைவி மனிதனுக்கு உயிர்த்துணையும், வாழ்க்கைத் துணையுமாதலால், பெண் கொள்ளல் மிகவும் நுட்பமாக ஆலோசிக்கத் தக்கதொரு பெரிய விஷயம். ஒருவன் தனக்குத் தாழ்ந்த விடத்தில் பெண் கொண்டு விட்டானேயாகில் அவன் பந்துவர்க்கத்தாரால் எவ்வித சுபாசுபங்களுக்கும் அநர்ஹனாக நீக்கி வைக்கப்படுகிறான். அவன் உயிரோடிருந்தும், அவன் கிளைஞரால் இறந்தவனாக எண்ணப்படுகிறான். அவனுக்கு உற்பவித்த குழந்தைகளும், இழிவாக நினைக்கப்படுகிறார்கள். இத்துணைப் பெரிய விபரீதங்களும், கோத்திரமறிந்து பெண் கொள்ளாமை யினாலேயே நேர்கின்றன. ஒருவன் மனைவி, கடுகளவு தோஷத்திற் குட்படுவாளாயினும் அவள் பிறந்த கோத்திரத்திற்கும் கணவனது கோத்திரத்திற்கும், அவள் சந்ததிகளுக்கும் தீராத வசையே செய்தவளாகிறாள். ஒரு பிரமாண்டமான கோத்திரத்தில் ஒருத்தி கூடா ஒழுக்கமுடையவளாயிருப்பின் அக்குலமுழுவதும் நிந்தைக்குள்ளாகிறது. பாபாத்மாக்களுக்கு நேரிடுந் துன்பங்கள் ஆரம்பத்திற் சிறிதாய்த் தோன்றினாலும் முடிவில பேராபத்துக் கிடமாவது போல் பெண்கள் செய்யுங் குற்றம் சிறிதாயிருந்தாலும், அது ஒன்று பத்து நூறாய்க் கிளைத்து வளர்ந்து கொண்டிருக்கும். இதிலணுத்துணையும் ஐயமே இன்று. மானத்தை உயிரென நினைக்கிற மாசற்ற மரபில் மணம் புரிவார்க்கு அத்தகைய குற்றங்கள் உண்டாகா. “இடுக்கண் வந்துயிர்க்கும் ஊற்றமெய்தினும் வடுக்களைக் தொழுகும் தூயமால் வந்த வஞ்சியர்” கோடி மன்மதரூபளிட புருடரைக் காணினும், தங்கள் மனவலி இழந்து மானத்தைக் கை விட நினைப்பரோ? ஒருக்காலும் நினையார். எத்துணைப் பெருஞ்செல்வரே யெனினும் திகாந்தம் வரை வீசும் புகழ் கொண்ட வீரரேயெனினும் துர்க்குணப்பெண்டிரைக் கொள்வராயின் அவர் செல்வமெல்லாம் அவரை விட்டுச் சென்றே தீரும். கீர்த்திபெல்லாம் அபகீர்த்தியாய் மாறியே நிற்கும். “புகழ் புரிந்தில்லிலோர்க்கில்லை இகழ்வார் முன் ஏறுபோற் பீடு நடை”. அது நிற்க பூமிநாதபிள்ளை யிப்போது நம்மிடத்தில் வைத்திருக்கிற மதிப்பும், அச்சமும் சம்பந்தம் பண்ணின பிற்பாடு வைத்திருக்கக் கூடியவனா? இல்லவே இல்லை. நம்மிருவருக்கும் இருக்கிற சகோத்ர ஒருமையை விவாகமான மறு தினமே கெடுத்தே விடுவான். பால்போன்ற சுத்த இருதயத்தைக் கீழ்மக்கள் தங்கள் துர்ப்போதனை யென்னும், விஷத்துளியாற் கெடுத்து விடுவார்கள். அன்றியும் “தெருண்ட மேலவர் சிறியவர்ச்சேரினும் அவர் தம்மருண்ட புன்மையுமாற்றுவர் எனுமிதுவழக்கே” என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து அவனை நாம் திருத்தி விடலாமென்று நினைப்போமாகில் அது முடியக்கூடிய காரியமன்று அவன் திருந்தவே மாட்டான். “எவவுஞ் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர் போடுமளவும் ஓர் நோய்” என்ற பெரியார் மொழியைப் பிசகற மெய்ப்பிப்பான். சில அறிவிலிகள் தங்கள் பெண்ணை ஒருவனுக்குக் கொடுத்து விட்டவுடனே மருமகனைத் தன் வீட்டு மாடு மேய்க்கிறவனாக எண்ணிக் கொள்வார்கள். அம்மட்டுமோ, அவன் குடும்பத்திலிருந்து அவனுக்குரிய பாகத்தை யொதுக்கிக்கொண்டு தம்மிடம் வரும்படிக்கும் போதிப்பார்கள். தலையணை மந்திரம் ஓதும்படிக்குக் தங்கச்சிக்குக் கற்பித்து விடுவார்கள். பேதைத் தம்பினார் ‘பெண்டாட்டியாத்தா பெரியாத்தா பிழைக்கும் புத்தியைச் சொல்லாத்தா’ என்று கைதட்டிக்கொண்டு புறப்பட்டுவிடுவார்கள். அந்தோ! பெற்று வளர்த்துப் பெயரிட்டுப் பெரும்பொருள் செலவிட்டுப் படிக்க வைத்துக் காப்பாற்றிய தாய் தந்தைகளையும் நகமும் சதையும் போல் ஒற்றுமையாயிருந்த சகோதரர்களையும் வெறுத்து நேற்று வந்து புகுந்த பெண்சாதியைப் பெரிதென்று நினைத்துப் பின் பற்றிப் போன பித்தருக்கு மாமன் வீட்டிலாவது மதிப்புளதா? “தையலார் மயலிற்பட்டார் தமக்கொரு மதிப்புமுண்டோ” தகப்பன் பக்கத்திலிருக்கிறானென்ற தைரியத்தை வைத்துக் கொண்டு புருஷன் வார்த்தையை உல்லங்கனம் பண்ணுவாள். மாமி தன்மருமகனுக்கு ஏகவசனப் பிரயோகத்துடன் புத்தி சொல்ல ஆரம்பிப்பாள், மச்சினமார்களும் லக்ஷியம் வையார். 

சோமசுந்தரம் பிள்ளை உலக வியவகாரத்தில் தமக்குள்ள அனுபவத்தை யொட்டி எத்தனையோ விதங்களில் தமது தம்பி நல்ல சம்பந்தஞ் செய்து கொள்ள வேண்டு மென்று விரும்பிப் பேசியும் அது பிரயோசனப் படாமற் போய் விட்டது. தங்கச்சாமிப்பிள்ளை தம் தமையனார் கருத்திற்கு விரோதமாகத் தமக்குப் பெண் பேசி வரும்படி தமது சிநேகிதர்களிற் சிலரைப் புத்தூருக் கனுப்பியிருப்பதாகச் சோமசுந்தரம்பிள்ளை கேள்விப்பட்டுத் தம்பியினது அவசரப் புத்திக்காக மனஸ்தாபப்பட்டு மறுபடியும் தம்பிகோரின் பூமிநாத பிள்ளை மகள் காமாட்சியம்மாளையே தகுந்த சிறப்புடன் விவாஹஞ் செய்து வைத்தார். தங்கச் சாமிப்பிள்ளை பூமிநாதபிள்ளைக்கு மருமகனாகும் பக்ஷத்தில் அந்த விசேஷத்திற்கு ஒருவரும் போகக்கூடா தென்று கட்டுப்பாடு பண்ணிக் கொண்டிருந்த பந்துக்களெல்லோரும் மிராசுப்பிள்ளை தாக்ஷண்யத்திற்காகக் கல்யாணத்திற்கு முதல் நாளே வந்திருந்து சிறப்புச் செய்வித்துச் சென்றார்கள். 

தங்கச்சாமிப்பிள்ளை குறித்த பெண்விஷபத்தில் சோமசுந்தரம்பிள்ளை பிரதமத்தில் மனமில்லாதவராயிருந்ததும், அதுசம்பாதமாகச் சில பொதுவான நியாயங்களை யெடுத்துச் சொன்னதும், பூமிநாதப்பிள்ளைக்கு இதுவரையில் தெரியாதிருக்குமா! எத்தனையோ திண்ணை தூங்கிச் சோம்பேறி மடையர்கள் இருப்பார்களே? கோள்வி தை விதைக்க இடம் பார்ப்பார்கள் அல்லவா? விதைத்துவிட்டார்கள் பூமிநாதன் செவிவயலில். அது மனத்திடை வேரூன்றி முளைத்துக் கிளைத்துப் பகையென்னும் பழம் பழுத்துவிட்டது. இவனுடைய நிலைமை இப்படியிருந்தால் இவனுடைய மகளாகிய காமாட்சியைப் பற்றிக் கேட்கவும் வேண்டுமா? கல்யாண நடந்த சில மாஸங்களுக் கெல்லாம் தங்கச்சாமிபிள்ளை தம் மனைவியின் மனவழி நடப்பவராயினர். பூமிநாதபிள்ளையும் புத்தூரிலிருந்து அடிக்கடி மகள் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இதனிடையிலே தான் சோமசுந்தரம்பிள்ளை திருச்செந்தூருக்குப் போனதும் பிள்ளையை இழந்து விட்டுத் திரும்பினதும். 

மூன்றாம் அதிகாரம்

சோமசுந்தரம்பிள்ளை புத்திரசோகத்தால் பைத்தியங்கொண்டிருந் தாரென்று முன் கூறினோ மன்றோ. அவ்வியாதி நாட்கு நாளதிகப்பட்டுக் கொண்டே வந்தது. தங்கச்சாமிபிள்ளைக்குத் தமையனார் பேரில் கொஞ்சமும் ஆசா பாசம் இல்லாமற் போய்விட்டது. சோமசுந்தரம்பிள்ளைக்கு அவர் தம்பி கொஞ்ச நாளைக்குப் பின்னிட்டுப் படியளந்து கொடுத்து அவரைப் பிரத்தியேகப் படுத்தி வைத்தார். கடைசியாய்ப் படி கொடுப்பதையும் நிறுத்தி விட்டார். தரும சீலரான மஹா ப்ரபு சோமசுந்தரம்பிள்ளையும் அவர் மனையாளும் வயிற்றுச் சோற்றுக்கும் திண்டாடும்படி வந்துவிட்டதே, அடடா! என்ன செல்வம்! என்னவா வாழ்வு! மிராசுப்பிள்ளை உணவுக்குக் கஷ்டப்படுவதைச் சாமிநாதபிள்ளை யறிந்து சில பெரிய மனுஷர்களைக் கொண்டு தங்கச்சாமிபிள்ளைக்குச் சொல்வித்துத் தமையனாருக்குப் படி கொடுக்கும்படி செய்தார். மிராசுப்பிள்ளையின் வியாதியைச் சொஸ்தம் பண்ணி வைத்து விட வேண்டுமென்று சாமிநாதபிள்ளை வேண்டிய பிரயத்தனங்களுஞ் செய்து கொண்டு வந்தார். 

ஒரு நாள் ஒரு பிரபலமான வைத்தியர் கொடுத்தமருந்தைப் பண்ணைப்பிள்ளையின் கண்களிற் பிழிவதற்காக அவருடைய படுக்கை வறைக்குப் போயிருந்தார். அப்பொழுது இரவு 11-மணி யிருக்கும். அப்படுக்கை யறையின் மேல்பக்கத்துச் சுவரையொட்டிக் கட்டப் பட்டிருக்கும் ஒட்டுத்திண்ணையிலிருந்து சில மனிதர்கள் பேசிக் கொண்டிருக்கிற அரவங்கேட்டது. அவ்வறையின் ஜன்னல் வழியாகப் பார்த்தால் வெளியில் நடக்கிற காரியங்களெல்லாம் தெரியக் கூடியதாயிருந்தது. உள்ளே யிருந்த சாமிநாதபிள்ளை சம்பாஷணையின் சாராம்ஸங்களைக் கவினித்துக் கொண்டிருந்தார். மிராசுப் பிள்ளை புத்திஸ்வாதீனமில்லா திருந்ததாலும் வேறொருவரும் அங்கு வந்திருக்க மாட்டார்களென்று தெரிந்ததாலும் திண்ணையிலிருக்கிற மனிதர்கள் சற்று உரத்த குரலோடு பேச ஆரம்பித்தார்கள். 

தாங்களும் புத்தார் ஐயா அவர்களும் கட்டளையிட்ட பிரகாரம் சாமி மச்சவேடிக்கைக்குப் புறப்படுகிற சமயத்திலேயே “வேலையை முடித்துப் போட்டேன்” ஒச்சனுக்கு என் கையிலிருந்து அஞ்சு ரூபாய் குடுத்திருக்கிறேன். செலவுக்கு இல்லையென்றான். என்னமோ நம்முடைய பிரயாசத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள் என்று நின்று கொண்டிருந்தவன் சொன்னான். 

பொடி டப்பியைத் திறந்து பொடியை யெடுத்து நாசியில் வைத்துச் சரட்டென்று ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு உருப்படி பைசலாகி யிருக்குமா? என்றான் மற்றொருவன் நிச்சயமாய்ச் சொல்ல முடியாதென்றான் முற் கூறப்பட்டான். 

அப்படியானால் மணிகொடுக்க முடியாதென்றான் வெண் சட்டை தரித்துட் காந்திருந்தவன். 

“அது கழுத்திலே கிடந்தது ஒரு தலைமுறைக்குக் காணுமே! இதுக்கிண்ணு வேறே பணமுங் குடுக்கணுமோ! எங்கே திண்ணு வளந்தே. ஒனக்குக் கூட்டுததுக்குக் குடுத்தது யார் கொஞ்சம், மனசுலே எண்ணிக் கேளு” என்றாள் ஒரு பெண். 

மறுபடியும் நின்று கொண்டிருந்தவன் “அம்மா அவர்கள் இந்த வீட்டுக்கு வந்த பிறகு தான் எனக்குக் கலியாணஞ் செய்யப் பணங் கொடுத்தார்கள். புத்தூரிலிருந்து கொணர்ந்தீர்களோ? என்னத்துக்கம்மா அதிகப் பேச்சு? காதிலே கழுத்திலே கிடந்ததைக் கழற்ற நோமும் இருந்துதே” என்றான். 

இதற்குள்ளே வெள்ளைச்சட்டைக் காரனுக்குக் கோபம் வந்துவிட்டது. ஏது கறிச்சட்டி சுறண்டுகிற புத்தியைக் காண்பிக்கிறாயே. என்னா! உனக்குத் தொகை கிடையாதுபோ செய்கிறதைச் செய்? என்று கடினமாப் பேசினான். 

நின்றிருந்தவன் திண்ணையிலிருக்கிற மற்றொருவனைப் பார்த்து ஐயா! என் பேரிலே ஒரு தோஷமுமில்லை. செய்கிறதைச் செய் என்று சின்னப் பண்ணையில் உத்திரவாகி விட்டது. நான யாரிடத்திலே சொல்லி என்ன செய்யப் போகிறேன். எனக்கு யாருதவி உண்டும். சந்தையும் உங்கள் சந்தை எடுப்பும் உங்கள் எடுப்பு ஆகிலும். சாமிநாதபிள்ளையவர் சாக இல்லை” என்றான். 

சாமிநாதபிள்ளையை யென்ற வார்த்தையைக் கேட்டவுடனே கோபதாப மெல்லாம் பறந்துவிட்டது. நின்று கொண்டிருந்தவன் கை யைப் பற்றித் திண்ணையிலிருக்க வைத்து இதை வெளிப்படுத்தினால் எல்லாருக்கும் ஆபத்துக் கிடமென்றும் பணத்தைப் பற்றி யாதொரு ஆக்ஷேபனையும் சொல்ல வரவில்லையென்றும், மனம் சோதிப்பதற்காக விளையாட்டாகப் பேசினதென்றும் அம்மூவரும் சமாதானஞ் சொன்னார்கள். இதற்கிடையில் வெண்சட்டையன் தன் கையிலிருந்த ஒரு துணி முடிப்பைக் கொடுத்துப் பின்னும் ஏதாவது வேண்டியிருந்தால் தன்னிடம் தெரியப்படுத்தும் படிக்கும், சாமிநாத பிள்ளைக்கு இது சங்கதியை எந்தக் காரணத்தை யிட்டும் அறிவிக்கக் கூடாதென்றும், சில நாளைக்கு இரகசியமாயிருக்க வேண்டும் என்றும் மிகவும் கேட்டுக் கொண்டான். 

துணி முடிப்பைப் பெற்றுக்கொண்டவன் அதிலுள்ளதொகை எவ்வளவென்று கேட்டுக் கொண்டே ஐயா, அதெல்லாம் எனக்குச் சொல்ல வேண்டாம் தெரியும். அதிலே சாப்பாட்டுக்குக் கொஞ்சம் கஷ்டமா இருக்கிறதென்று அவன் சொன்னான். அநேகம் வேண்டாம். எல்லாம் நாலுகோட்டை ஆனைக்கொம்பனுக்கு உத்தரவானால் போதும் என்றான். 

சரியென்றான் பண முடிப்புத்தந்தவன். உடனே, அந்தக் அந்தக் கூட்டங் கலைந்தது. 

அடடா! இப்படிப்பட்ட கொடிய கொலைபாதகரும் உலகத்திலுண்டா, முடிவில் இவர்கள் என்னகதி அடைவார்களோ? சிவ சிவா “நான் அன்றைக்கே சந்தேகப்பட்டேன். அப்படியே முடிந்தது பாரம்பரியமாய் வந்த மிராசுக்கிருந்த ஒரு குழந்தையையும் தொலைத்து விட்டார்களே பாபிகள். ‘கனிக்காக மரத்தை வெட்டிச் சாய்த்தது’ போல தங்களுக்குக் கிடைக்குமென்கிற மிராசு லாபத்துக்காக பெரும் பாதகத்திலிறங்கி விட்டார்களே. ஐயோ பாபம்! குழந்தை கொல்லப்பட்டே இருக்குமோ யாதோ, பைஸலாகிவிட்டதா வென்று கேட்டானே, அந்த மாடுமாற்றிப்பயல், அதற்கு நிச்சயமாச்சொல்ல முடியா தென்றானே சட்டி சுறண்டிப்பயல். அதை யோசிக்கும் போது தெய்வா நுகூலமாதக் குழந்தை உயிரோடிருந்தாலும் இருக்கலாம். பிள்ளை மட்டும் பிழைத்திருந்தால், பயல்களை யெல்லாம் ஒரு கை பார்ப்பேன். இருக்கட்டும் வெள்ளாளனென்று பிறந்தவன் இத்தீய தொழிலை மனத்தாலும் நினைக்கலாமா? இவன்தானா தொண்ணூற்றாறு சற்கீர்த்தி வாய்ந்த கங்கா குலத்திற் பிறந்தவன். ஒரு தலைக்கும் எழுபது தலைகொடுத்த பழையனூர்ப் பாக்கியவான்கள் மரபிலுதித்தவனா இவன், பூர்வத்தில் தேவேந்திரனுக்காக மதுரைப் பாண்டியராஜனிடத்தில் மேகத்திற்குப்பிணை நின்று, காராளன், கார்காத்தான். என்று பெயர் பெற்ற சுனதையான குலத்தினனா இக்கடையன், தயாஸிந்து வாகிய சோாசுந்தரம் பிள்ளைக்குத் தம்பி யென்று இந்தத்தரிதலையைச் சொல்லவுங் கூடுமா? தொன்று தொட்ட பெரிய சந்ததியான இவனுக்கே இப்புத்தி வருமானால் நேற்று வரை பாட்டுக்காலிலே திரிந்த புத்துரானையும் அவன் மகளையும், மற்றொருமடையனையும் பற்றிப் பேசுவானேன்.“ என்று பலவாறு தங்கச்சாமியிள்ளையையும், அவன் கூட்டாளிகளையும் நிந்தித்து விட்டு சோமசுந்தரம்பிள்ளைக்கு மருந்து போட்டானதும், தமதகம் போய்ச் சேர்ந்து ஆழ்ந்த யோசனையில் மூழ்கியிருந்தார் சாமினாத பிள்ளை.

– தொடரும்…

– தெய்வசிகாமணி (ஒரு நவீனகம்), முதற் பதிப்பு: 1924, லெக்ஷிமி விலாசம் பிரஸ், சாத்தூர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *